பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 07, 2013

The Attacks of 26/11 (Hindi) - விமர்சனம்

மும்பை - 20 மில்லியன் மக்களுக்கு மேல் வசிக்கும் இந்தியாவின் பரபரப்பான பொருளாதாரத் தலைநகரம். எந்தவிதமான பாதிப்பிலிருந்தும் உடனே மீளக் கூடிய நகரம் எனப் புகழ் பெற்ற நகரம். இதில் விசித்திரம் என்னவென்றால் கடந்த நூற்றாண்டில் இயற்கையின் மிகப் பெரிய சீற்றங்கள் எதையும் சந்தித்திராத இந்நகரம் பல முறை மனிதர்களால் உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டியிருப்பதுதான்.

நவம்பர் 26, 2008-ல் இந்நகரம் சந்தித்த பயங்கரவாதத் தாக்குதல் முந்தையத் தாக்குதல்களை விட இந்நகரை மிக மிக பயங்கரமாக உலுக்கியெடுத்த ஒன்று.

இதைத் தாக்குதல் எனபதை விட பாகிஸ்தான் நம் மீது தொடுத்த proxy war என்றே கூறலாம். பாகிஸ்தானின் பயங்கர வாத இயக்கமான லக்ஷர் இ தொய்பா-வைச் சேர்ந்த பத்தே பத்து பயங்கரவாத இளைஞர்கள் ஒரு அணியில் வெறும் இரண்டு பேராக மும்பை நகரின் முக்கிய இடங்களான சத்ரபதி சிவாஜி பஸ் நிலையம், அயல் நாட்டினர் அதிகமாகக் கூடும் Leopold Cafe, ஐந்து நட்சத்திர ஓட்டல்களான தாஜ் மற்றும் ஓபராய், Cama Hospital மற்றும் நரிமன் ஹவுஸ் மீது நடத்திய வெறித்தனமான தாக்குதல்களில் பலியானவர்கள் மொத்தம் 166. படு காயமுற்றவர்கள் மொத்தம் 238.

ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில், நானா படேகரின் நடிப்பில் வெளி வந்திருக்கும் இந்த 'The Attacks of 26/11' ஹிந்தி திரைப்படம் அந்த பயங்கர தினத்தை மீண்டும் நம் கண் முன் கொண்டு வருகிறது.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் எந்த இனத்துக்கும், எந்த மதத்துக்கும் எதிரான படம் அல்ல என்ற Disclaimer-உடன் படம் ஆரம்பிக்கிறது. இளகிய மனம் கொண்டவர்களும், குழந்தைகளும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டிய படம் இது.

மும்பை போலீஸ் கமிஷனர் நானா படேகர் அந்த பயங்கர நாளை தான் எதிர் கொண்ட விதத்தை ஒரு மிகப் பெரிய விசாரணைக் கமிஷன் முன் விளக்கும் விதமாக படம் நம் கண் முன் விரிகிறது. ராம் கோபால் வர்மா தான் ஒரு மிகச் சிறந்த இயக்குனர் என்று மீண்டும் நிரூபிக்கிறார். சிறிது தவறினாலும் நம் அனைவருக்கும் பரிச்சயமான இந்தச் சம்பவங்கள் ஒரு டாகுமெண்டரி போல் ஆகி விடக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.

நானா படேகர் ஒரு சீனில் குறிப்பிடுவார்... "எனது 27 வருட அனுபவத்தில் இதைப் போன்ற ஒரு சம்பவத்தை சந்தித்ததே இல்லை. சாதாரணமாக போலீஸ் குற்றம் நடந்த ஒரு இடத்துக்கு செல்லும்போது அந்த குற்றம் நடந்து முடிந்திருக்கும். அனால் இங்கோ இந்த பயங்கரவாதச் செயல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தத் தாக்குதலை எதிர்கொள்ளக் கூடிய முன் அனுபவமோ, நவீன ஆயதங்களோ எங்களிடம் இல்லை." மிக மிக வருத்தமான நெஞ்சைச் சுடும் உண்மை.

அனேகமாக இந்த முழுப் படத்தையும் தன்னந்தனியாக தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் நானா படேகர் என்றே கூறலாம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் அந்தப் பிணவறையில் அவர் வெளிப்படுத்தும் தனது இயலாமை, பலவீனம், கோபம் மற்றும் பல்வேறு உணர்ச்சிகள்.

மற்றொரு மிகச் சிறந்த தேர்வு அஜ்மல் கசாபாக நடித்திருக்கும் புதுமுகம் சஞ்சீவ் ஜெய்ஸ்வால். கண்களில் சதா ஒரு குரோதத்துடனும், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கூட கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொல்லும்போதும் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறார்.


படத்தில் இடம் பெற்றுள்ள சிறு சிறு கதாபாத்திரங்களைக் கூட கவிதை போல் செதுக்கியுள்ளார் இயக்குனர். தன் உயிரைப் பணயம் வைத்து தனது Cama Hospital நோயாளிகள் மற்றும் சக டாக்டர்களைக் காப்பாற்றும் ஒரு டாக்டர் பாத்திரம், எந்தப் பாவமும் அறியாத மூளை சிதறி தாஜ் ஓட்டலில் இறக்கும் ஒரு அழகான சின்னக் குழந்தை. அரிதான ஒரு மீன் வகையைத் தேடி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று பயங்கரவாதிகளை மும்பைக்குள் கொண்டு வர உதவி கடைசியில் கழுத்து அறுபட்டு இறக்கும் ஒரு கதாபாத்திரம்.


இந்தத் தாக்குதல் நடந்து மூன்று நாட்களுக்குள் அந்த சம்பவம் நடந்த இடங்களுக்குச் சென்ற இயக்குனர் ராமு (ராம் கோபால் வர்மா) அப்போது இந்தச் சம்பவங்களை படமாகும் எண்ணம் தனக்கு இல்லவே இல்லை என்கிறார். நம்புவோம். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து விசாரணைகளும் முடிவுக்கு வந்த நிலையில் இந்தச் சம்பவங்களைத் தங்கள் கண்களால் பார்த்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தவர்கள் விவரித்த சம்பவங்களைக் கொண்டு தான் திரைக்கதையை வடிவமைத்ததாகக் கூறுகிறார். தாக்குதலுக்கு உள்ளான முக்கிய இடமான Leopold Cafe சொந்தக்காரரான ஃபர்சாத் ஜெஹானியை அதே பாத்திரத்தில் நடிக்கவும் வைத்திருக்கிறார். எனக்கு மிகப் பெரிய சவாலே பல்வேறு இடங்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடைபெற்ற தாக்குதல்களை கோர்வையாக சுவாரஸ்யம் கெடாமல் இரண்டே மணி நேரத்தில் படமாக உருவாக்குவதுதான் என்கிறார். அந்த சவாலில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும்.


நவம்பர், 2012-ல் கசாபை தூக்கில் போடுவதுடன் படம் முடிகிறது. நீங்கள் தவற விடக் கூடாத படம் இது.

- பால் ஹனுமான்

தூக்கு போடுவது தப்பு, என்கவுண்டர் தான் சரி !

4 Comments:

Anonymous said...

Thanks for the review. i'll see the movie..

ஜெ. said...

விமரிசனம் சிறப்பாக இருக்கிறது. பால்ஹனுமான் அவர்களுக்குப் பாராட்டுக்கள். - ஜெ.

அசட்டு அம்மாஞ்சி பக்கங்கள் said...

பாகிஸ்தானை சாடும் விதமாகவோ, சிறுபான்மை பயங்கரவாதத்தை சித்தரிக்கும் விதமாகவோ சினிமா எடுக்கக் கூடாதே! அது "மதச் சார்பின்மை" அல்லவே! ஓஹோ , மும்பை தமிழ்நாட்டில் இல்லை போலே! அதான் பகுத்தறிவு பிரகாசமாக ஒளிர்ந்து வழி காட்ட வில்லை ! இப்போது புரிகிறது !

dr_senthil said...

Learn Encounter from Amma.