பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 02, 2013

உணராதபோதும்... கவிதை - ஈரோடு நாகராஜ்

கொய்யா மரத்தின் பூக்களுக்காய்
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன

பிரயாணிகள் விமானங்களுக்கிடையில்
தலைவர்களை சபித்தபடி சுமக்கும்
உலங்கு ஊர்திகளைப் போல்
ஓரிரு தும்பிகள்,
முதல் மாடியின் ஜன்னல்களை
முயன்று பார்க்கின்றன.

குவிக் குவிக்கெனக் குரலெழுப்பி
ஒன்றையொன்று துரத்தியபடி
கூடடைகின்றன தையல்சிட்டுகள்

யாரறிவர், ஹரி ஹரி என்னுமொரு
நாமஸ்மரணமாக இருக்கலாம்
அஃதினிய ஓசை.

தட்டில் வைத்த
அரிசியும் பருப்பும் தீராதிருக்க,
துளசிச் செடியின் வேரருகில்
கள்ளிப்பூச்சி தேடுகின்றாள்
தையலாள்.

காதோரம் இதழ் பட்டுக்
காதலி படபடப்பது போல்
வந்தமரும் கிளையெல்லாம்
வடிவமைக்கின்றன இலைகளின் சிலிர்ப்பை;
மயிர்க்கூச்செறிகின்றன மரங்கள்.

கூட்டம்போட்டும் கரைந்தும்
கடந்து போன சுயம்வரம் ஒன்றினால்
மேடான வயிற்றைச் சுமந்தபடி
தத்தித் தத்தி நடக்கிறாள்
வேப்பமரக் கிளையொன்றில்,

இரவோ நாளையோ
இன்னும் சில நாட்களிலோ
பொன் குஞ்சுகள் குரலெழுப்பும்.

பட்டாம்பூச்சிகள்,
தையல் சிட்டுகள்,
எப்போதாவது எட்டிப்பார்க்கும்
வர்ணபஞ்சக் கிளிகள்,
தும்பிகள், காகங்கள்...

வெயிலையே உணராமல்
வெளியிலேயே அமர்ந்திருந்தேன்
கவிதையை உணராதும்
கலையாய் வாழும்
பறவைகள் போல.

- ஈரோடு நாகராஜ்


quick-hurry-hari

9 Comments:

பாலகிருஷ்ணன் said...

அழகிய போட்டோ அருமையான கவிதை

Erode Nagaraj... said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு இட்லிவடையுடன் என்னைப் பார்ப்பதில் எனக்கே மிகுந்த மகிழ்ச்சி. போன வாரமெல்லாம் நிஜமாகவே வயிற்று வலி. எட்டிப் பார்த்ததும் தட்டிக்கொடுத்தமைக்கு நன்றி :)

Anonymous said...

Five lines two space three lines,can not understand head or tail of it....lt has to be a kavidai that too ilakkiyam genre.

pvr said...

மிக அருமையாக இருக்கிறது. :)

R. J. said...

இனிய கவிதைக்கு நாகராஜ் அவர்களுக்கு நன்றி!

'போன வாரம் வாயிற்று வலி' - எதனால்? நிறைய இட்லி சாப்பிட முடியாமல் (அவர் பதிவிடாததால்) பட்டினி வயிறு கடமுடா செய்திருக்கும்!

ஒரு சந்தேகம் - பஞ்சவர்ணக் கிளி தெரியும்; அது என்ன 'வர்ண பஞ்சக் கிளி'? வர்ணத்துக்குப் பஞ்சம் வந்து ஒரே ஒரு வர்ணத்தில் இருந்த பச்சைக் கிளியைக் குறிப்பிடுகிறீரோ? !

-ஜெ.

jaisankar jaganathan said...

//யாரறிவர், ஹரி ஹரி என்னுமொரு
நாமஸ்மரணமாக இருக்கலாம்
அஃதினிய ஓசை.//

இந்துத்துவா. தூக்குல போடுங்க இவரை

Erode Nagaraj... said...

ஜெ,

ஆமாம். ஒரே வர்ணமாக இருப்பதால் அல்லது வெள்ளைக்கிளியாக இருந்தால். 90-களின் ஆரம்பத்தில் என் பாட்டி லோகாம்பாள், கொள்ளுப்பேரனைக் கொஞ்சுவதற்காக பஞ்சவர்ணக்கிளி என்ற பெயரை மிகவும் யோசித்தும் நினைவுக்கு வராமல், ‘அஞ்சு கிளி’ என்றார் :)

ஜெஜெ: இந்த புடிச்சு உள்ள போடறது, கொ.பா. எரிக்கிறது இப்படி எதுவும் இல்லையா? டைரக்டா தூக்கு தானா?

Roaming Raman said...

நன்றாக உள்ளதே!!

அவருக்கு வாத்தியமும் வாசிக்கத் தெரியும்.. நமக்கு அவர் எழுதி இருக்கிறதைத்தான் வாசிக்கத் தெரியறது!!

Geetha Sambasivam said...

அருமை!