பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 22, 2013

புத்தகக் காட்சியில் ஒரு பூம் பூம் மாடு - அநங்கன்


36வது புத்தகக் காட்சிக்குப் போக வேண்டுமென அது ஆரம்பித்தபோதே முடிவு செய்து விட்டாலும் சமீபத்தில்தான் செல்ல வாய்ப்புக் கிடைத்தது. வீட்டை விட்டுக் கிளம்பும் போதே வெயில் கொளுத்தியது. புக்ஃபேர் நடந்த YMCA வளாகத்தை அடைந்த போது பயங்கரக் கூட்டமாக இருந்தது. ரொம்ப்ப்ப தூரம் நடந்ததில் வேர்த்து விறுவிறுத்து விட்டது. என்னை மாதிரி வயசான ஆட்கள் ரொம்பவே பாவம் என்று நினைத்துக் கொண்டேன். நீண்ட க்யூவில் நின்று டிக்கெட் வாங்கி உள்ளே செல்லும் போது மணி 1ஐக் கடந்திருந்தது. நிறைய பேர் குழந்தைகளை எல்லாம் அழைத்து வந்திருந்தனர். அவை அங்கும் இங்கும் அழுது கொண்டே ஓடிக் கொண்டிருந்தன. எந்த வழியாக நுழையலாம் என யோசித்தபோது முதலில் கண்ணில் பட்டது ’நிவேதிதா’ என்ற பெயர். உடனே அங்கே சென்று வெளியில் நின்றவாறே பார்வையிட்டேன். நண்பர் சொல்லியிருந்த புத்தகத்தைக் காணோம்.

அங்கிருந்தவரிடம் ”ஸ்ரீவில்லிபுத்தூர்’ வந்திருச்சா?” என்றேன்.

அவர், ”ஆன்?” என்றார்.

”ஸ்ரீ வில்லிபுத்தூர் சார், சாருநிவேதிதாவோடது”

”சாரு நிவேதிதாவா? அது யாரு?”“இது அவரோட பப்ளிகேஷன் இல்லையா? இங்க்லீஷ், தமிழ்ல நிறைய அவரோட புக் வந்திருக்குன்னும், ஸ்ரீ வில்லிபுத்தூர்னு ஆண்டாள் கதையை எழுதியிருக்கிறார்னும் சொன்னாங்களே?”

இப்படிச் சொன்னதும் மிகக் கடுமையாக என்னை முறைத்தவர், ““இங்க அப்படி எதுவும் இல்லீங்க. இது எங்களோடது. நீங்க வேற எங்கயாவது போய் கேட்டுப் பாருங்க” என்று விட்டு, “சார், புக்கை எடுத்தீங்கன்னா அதே இடத்துல வைங்க சார். மாறி மாறி வக்காதீங்க” என்று யாரையோ கடுப்படித்தார்.

என்னிடம் தகவல் சொன்ன நண்பர் வகையாக என்னை கலாய்த்திருக்கிறார் அல்லது அவர் யாரிடமோ ஏமாந்திருக்கிறார் என்பது புரிந்தது. இனியும் இங்கிருந்தால் நம்மையும் ஏதாவது சொல்லி திட்டக் கூடும் என எண்ணியவாறே நகர்ந்தேன். அடுத்து எப்படிப் போவது என்று தெரியாமல் சற்று நேரம் நின்று குழம்பி, பின் இடப்புறம் கடைசியிலிருந்து தொடங்குவோம் என்று அந்தப் பகுதியை நோக்கிச் சென்றேன்.

அதற்குள் வேர்த்து விறுவிறுக்க ஆரம்பித்தது. கண்ணாடியில் வழிந்த வியர்வையைத் துடைத்து மாட்டினேன். தண்ணீர் குடிக்கலாம் என்று பார்த்தால் வெறும் கேன் மட்டும் தான் இருந்தது. கொசுறாக சங்கிலி கட்டி ஒரு டம்ளர். ”சே” என்று கடுப்பாகி, பையில் கொண்டு வந்திருந்த நீரை எடுத்துக் குடித்தேன். வழியெல்லாம் மக்கள் உட்கார்ந்திருந்தார்கள். சின்னக் குழந்தைகள் வேறு கையில் பலூனுடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தன. பெண்கள் வழக்கம் போல் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். நான் நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு ஸ்டாலில் கொஞ்சம் பளபளப்பாகப் புத்தகங்கள் தெரிந்தன. சரி என்று உள்ளே போய்ப் பார்த்தேன். ”சிலம்பில் மக்கள் வாழ்வியல்”, ”எனக்கான ஆகாயம்”, ”காற்றில் மிதக்கும் நீலம்”, ”குடுகுடுப்பைக்காரர்களின் வாழ்வியல்”, ”கூப்பிடுவது எமனாக இருக்கலாம்” போன்ற தலைப்புகளைப் பார்த்ததும் பிடரி பின்னங்காலில் படும்படி ஓட ஆரம்பித்தேன். என்னிடம் யாராவது புஸ்தகம் எழுதச் சொன்னால் “பென்ஷன்காரர்களின் வாழ்வியல்” என்று அற்புதமானதொரு காவியத்தை என்னால் படைக்க முடியும். பட், யாரும் வாய்ப்புத் தரதே இல்லை.

என் ஓட்டம் ”நாயக்கர்” என்ற தலைப்பிலான கடையைப் பார்த்ததும் நின்றது. பெரியார் பெண்கள் பற்றி எழுதியிருக்கும் நூல் ஏதாவது இருக்குமா என்று உள்ளே சென்று பார்த்தேன். இல்லை, “மாந்த்ரீக மர்மம்”, “மரணச் சுவடி”, ”ஜாதக பூர்வம்”, “காலக் கண்ணாடி” போன்ற தலைப்புகள் என்னை மிரண்டு ஓட வைத்தன. பின்னர் கடைப் பெயரை முழுமையாகப் பார்த்தபோதுதான் தெரிந்தது, இது ராமசாமி நாயக்கர் கடை இல்லை; ரத்தினநாயக்கர் கடை என்பது.

அடுத்து அங்கும் இங்குமாகச் சுற்றினேன்.

ஓரிடத்தில் வற்றல், வடகம், ஊறுகாய் எல்லாம் பாக்கெட் பாக்கெட்டாக விற்றுக் கொண்டிருந்தார்கள். ரொம்ப சல்லிசு. 25 ரூதான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொன்றாக 5, 6 வாங்கிப் போட்டேன். மனைவியிடம் நல்ல பேர் வாங்கலாம் என்ற நப்பாசை தான். ஒருவேளை சரக்கு சரியில்லை என்றால் வசவு விழுமே என்ற கவலையும் ஏற்பட்டது.

வெளியே சேர், டேபிள் போட்டு உட்கார்ந்திருந்த பெண்ணிடம் ”காய்கறி எல்லாம் எங்கே கிடைக்கும்?” என்றேன்.

“என்ன, காய்கறிகள் பத்தின புக்ஸா?”

“இல்லை. அப்பளம், வற்றல், ஊறுகாய் எல்லாம் விக்குறாங்களே, அதான் காய்கறிக்கடை, பழக்கட்டை எல்லாம் இருக்குதா, எங்க இருக்குதுன்னு கேட்கறேன்”

எரித்து விடுவது போல் பார்த்த அந்தப் பெண் ”நீங்க ஆபிஸ்ல போய் கேளுங்க சார்” என்று சொல்லி எதிரே ஓரிடத்தைக் கை காட்டினார்.

சரி, இந்த தடவை இல்லாவிட்டாலும் அடுத்த தடவையாவது பபாஸிக்காரர்கள் கீரைக் கடை, காய்கறிக்கடை, பழக்கடை வைக்க ஏற்பாடு செய்யலாம். ஒருவேளை நான்-வெஜ் ப்ரியர்கள் சண்டைக்கு வருவார்கள் என்றால், அதையும் விற்பனை செய்ய ஒரு ஸ்டால் அமைக்கலாம் என்று நான்-வெஜ் ப்ரியர்கள் சார்பாக பபாஸிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அடுத்து நான் ஆய்ந்து ஓய்ந்து நடந்து சென்றபோது “டயல் ஃபார் புக்ஸ்” என்ற ஸ்டால் கண்ணில் பட்டது. அங்கே ஆஜானுபாகுவாக அமர்ந்திருந்தவர், வரும் ஒவ்வொருவரிடமும் ஒரு பேப்பரைக் கொடுத்து, ”இந்தியாவில் எங்கிருந்தாலும் போன் மூலமே புக்ஸை வாங்கலாம்” என்று சொல்லிக் கொண்டே வேறு ஒரு ”முக்கியமான பணி”யையும் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ஏனோ “இட்லிவடை” ஞாபகம் வந்தது. நீங்கள் தானே ”இட்லிவடை” என்று கேட்க நினைத்து, “இ” என்றேன்.

“ஆமா. ஈஸியா போன் பண்ணி புக்ஸ் வாங்கலாம்” என்று என்னிடமும் சொல்லி, நோட்டீஸ் கொடுத்து விட்டு அவர் தன் “பணி”யைத் தொடர்ந்தார்.

”நந்தி மாதிரி நாம் ஏன் இருப்பானேன்” என்று நினைத்து அவ்விடம் விட்டு அகன்றேன்.

பக்கத்தில் இருந்த ஸ்டாலில் பேய், பிசாசு, பூதம், ”மோகினி”, புத்தகங்கள் இருந்தன. எதிரே ஒரு ஜப்பான் ஸ்டால் இருந்தது.

இவர்கள் இங்கு வந்து என்ன செய்கிறார்கள் என்ற எண்ணத்துடன் அங்கே போய் ”ஹலோ” என்றேன்.

உடனே அங்கிருந்த ஒரு பெண், “சயே ஷிகே உதானோ..” என்று ஆரம்பிக்க எஸ்கேப்.

விகடன், உயிர்மை, காலச்சுவடு, கிழக்கு, தமிழினி, வானதி, பழனியப்பா என மாறி மாறி பல ஸ்டால்களைக் கடந்தேன். நிறைய சாமியார் ஸ்டால்கள். சி.டி. ஏதாவது வாங்கலாம் என்று நித்தியானந்தா ஸ்டாலை தேடிப் பார்த்தேன். காணோம். அதனால் மனம் நொந்து ரொம்பவே களைப்பாகி விட்டது. ஒரு ஸ்டாலில் “யாளி”, “டினோசர்” என்ற தலைப்பில் ஏதோ சுவாரஸியமாக எழுதியிருந்தார்கள். வாங்கலாம் என்று பார்த்தேன். விலையைப் பார்த்ததும் மூடி வைத்து விட்டேன். இந்த புத்தகச் சந்தையில் பல நூல்களின் விலை ரொம்பவே அதிகம். விலைவாசி ஏறியிருக்கறதைக் காரணமாச் சொல்கிறார்கள். ”கூட்டம் கூட்டமா மக்கள் வராங்க. ஆனா விற்பனை டல் தான்” என்று ஒருவர் இன்னொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ”கூட்டம் கூட்டமா மக்கள் வர்றது பொழுது போக்க, வேடிக்கை பார்க்கவும், காபி, டிபன் சாப்பிடவும் தானே, புக் வாங்கவா வராங்க?” என்று நான் நினைத்துக் கொண்டேன்.

மற்றபடி இந்த அருமையான, சுகமான, குளுகுளுவான, ஜிலுஜிலுவான புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புக் லிஸ்ட் கீழே:

கேட்டவரம் - அநுத்தமா - அல்லயன்ஸ்

மோர்க்குழம்பு வைப்பது எப்படி? - மோகனா சின்னச்சாமி - அம்புஜா பதிப்பகம்

சுப்ரமண்ய அய்யர் சரித்திரம் - பாவை பப்ளிகேஷன்ஸ்

ஒரு போகியின் சரித்திரம் - அரூப குரூப அவதூதன் - அவதூதா பப்ளிகேஷன்ஸ்

ராஜாம்பாள் - ஜே.எஸ். ரங்கராஜூ - அல்லயன்ஸ்

கடல் பறவைகளின் கள்ள மவுனம் - கலேஷியஸ் மிருகா - மேற்கு பதிப்பகம்

Make hay while sunset - James zhon caliper - baico publications

குஞ்ஞாலி - சாணன் - சணல் பதிப்பகம்

உடைக்கப்படும் இந்தியா - மணி சுப்ர மௌன காதலன் - ஜீரா பப்ளிகேஷன்ஸ்

நான் ஏன் போகியானேன் - ஆங்கில மூலம் : மகேஷ் வாசுதேவ். தமிழில் : மன்னார்சாமி மடேஸ்வரன்

குழந்தைகளைக் கிள்ளுங்கள் - வடக்கு பதிப்பகம்

ஒரு கட்டில் கால் உடைந்த போது (கவிதைகள்) - அசுர குமாரன் - ஒற்றளபெடை பதிப்பகம்.

- இவற்றை எல்லாம் படிக்க பொறுமையையும், நிரந்தரமான மின்சாரத்தையும் அளிக்குமாறு எல்லாம் வல்ல மகர நெடுங்குழைக் காதரை வேண்டி வணங்கி, வெளியே வந்தேன்.

ஸ்டிக்கர் விற்பவர்கள், பபிள்ஸ் பாக்ஸ் விற்பவர்கள், சாணைக் கத்தி மிஷன் விற்பவர்கள், சுண்டல் விற்பவர்கள் என்று பலரும் சூழ ஆரம்பித்தனர். ”வேண்டாம் வேண்டாம்” என்று பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டி , எப்படியோ தப்பி வெளியே வந்து ஆட்டோ பிடித்தேன்.

இவர் இட்லிவடையாக இருக்க நிறைய சான்ஸ் இருக்கு !

13 Comments:

s suresh said...

நகைச்சுவையாக ஒரு அனுபவ பகிர்வு! நன்றி!

ஒரிஜினல் இட்லி வடை said...

//இவர் இட்லிவடையாக இருக்க நிறைய சான்ஸ் இருக்கு !//

ஊஹூம் சான்சே இல்லை!

Anonymous said...

நாளை தானே கடைசி நாள் புத்தகக் கண்காட்சிக்கு ? முழு நாளும் திறந்திருக்குமா நாளைக்கு ? -ஸ்ரீனி

Anonymous said...

-//மகர நெடுங்குழைக் காதரை வேண்டி வணங்கி,//- Dondu sir than idly vadai ownera?

dr_senthil said...

Good one.

Anonymous said...

அடேங்கப்பா செம உள்குத்து.

நன்றி பத்ரி

R. J. said...

ஒரு வழியாக திங்கள் அன்று நானும், தம்பியும் தம்பதி சமேதராக புத்தகச் சந்தைக்குப் போய் வந்தோம். (சனி, ஞாயிறில் கூட்டம் அதிகம் இருக்கும் என்பது தெரிந்ததே!). ஓசி காரில் போனதால் entrance பக்கத்தில் இறங்கிக்கொண்டோம். 4 மணி நேரம் இருந்ததில் முக்கால் மணி நேரம் வாங்கி சாப்பிட்டோம். 2, 3 பெரியோர் பாதைகளை புறக்கணித்து, சில பாதைகளை இடம் வலம் திரும்பாமல் கடந்து கிட்டத்தட்ட 20 புத்தகங்கள் 2000 ரூ செலவழித்து வாங்கினோம்.

திருவாளர்கள் பாலகுமாரன், பழ. நெடுமாறன், ஞாநி , வாலி, பழனி பாரதி, ஹரன் பிரசன்னா ஆகியோரைப் பார்த்து வணக்கம் செய்துகொண்டோம். வாலி அவர்களைத் தவிர மற்றோரிடம் 2 வார்த்தை பேசவும் செய்தோம், புத்தகத்தில் ஆட்டோக்ராப் வாங்கிக்கொண்டோம்; சந்தோஷமாக இருந்தது. கேபிள் சங்கரை பார்க்க முடியவில்லை! இட்லி வடையையும்! (அவர் யாரென்று எப்படித் தெரியுமா; நான் சொன்னது restaurant -ல்!)

வாங்கிய புத்தக லிஸ்ட் யாராவது கேட்டால் இங்கு எழுதுகிறேன்! கேளுங்கப்பு, கேளுங்க!

-ஜெ .

டூப்ளிகேட் இட்லிவடை said...

// ஒரிஜினல் இட்லி வடை said...

//இவர் இட்லிவடையாக இருக்க நிறைய சான்ஸ் இருக்கு !//

ஊஹூம் சான்சே இல்லை!//

ஒரிஜினல் இட்லி வடை சொல்வது பொய்.

இவந்தாண்டா இ வ said...

ஒரிஜினல் இட்லிவடை டூப்ளிகேட் இட்லிவடை எல்லோரும் சத்தம் போடாம போயி ஓரமா ஒக்காருங்க!

Anonymous said...

//“டயல் ஃபார் புக்ஸ்” என்ற ஸ்டால் கண்ணில் பட்டது. அங்கே ஆஜானுபாகுவாக அமர்ந்திருந்தவர்,...//

ஹபி சார் உங்களையே கலாய்க்கிறார்.. யாரென்று கண்டுபிடித்து ஒரு குத்து விடுங்க :-)

அ. சரவணன்.

Anonymous said...

Anonymous said...
-//மகர நெடுங்குழைக் காதரை வேண்டி வணங்கி,//- Dondu sir than idly vadai ownera?

January 23, 2013 3:18 AM


MAGARA NEDUNKULAI "KHADER"(WATCH THIS WORD ABOVE) ???

ANY Musalman BHAI Padivara?? IDLY VADAI????

NAANGALUM YOSIPPOM-ILLAEY!!!

Subramanian said...

A Nice post after a long time

Anonymous said...

////“டயல் ஃபார் புக்ஸ்” என்ற ஸ்டால் கண்ணில் பட்டது. அங்கே ஆஜானுபாகுவாக அமர்ந்திருந்தவர்,...//

ஹபி சார் உங்களையே கலாய்க்கிறார்.. யாரென்று கண்டுபிடித்து ஒரு குத்து விடுங்க :-)

அ. சரவணன்.//


நான் பார்த்தது ஹரிஹரன் பிரசன்னா அவர்களை அல்ல. அவரை ஏன் தேவையில்லாமல் இங்கே வம்புக்கிழுக்கிறீர்கள்?

- அநங்கன்