பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 21, 2013

இராக்கில் ஒரு இந்தியரின் மரணம் - ஜெயக்குமார்

கடந்த மாதம் 29ம் தேதி இரவு எனது கம்பெனியில் இருந்து தொலைபேசி.. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் மேலாளர் ஒருவர் இராக்கிற்கு வேலை விஷயமாய் வந்ததாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து கடந்த 4 நாட்களாக தொலைபேசியோ, ஈமெயிலோ இல்லை எனவும், அவரது தொலைபேசி தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் அவரைக் குறித்து ஏதும் தகவல் சேகரிக்க முடியுமா எனவும் கேட்டு வந்தது. நான் இருப்பது பாஸ்ரா எனும் இடத்தில். அவர் இருப்பதோ தலைநகரான பாக்தாதில்.

மறுநாள் காலை கிளம்பி பாக்தாதை 30ம் தேதி இரவு அடைந்தேன். நான் அங்கு செல்வதற்குள் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறை கண்டுபிடிக்கப்பட்டு உடைத்து திறந்து பார்த்ததில் இறந்து கிடந்திருக்கிறார்.


அவர் ஹோட்டல் காரர்களுடன் இறுதியாகப் பேசியது 25ம் தேதி மாலை. அடுத்த ஒரு வாரத்திற்கான பணம் கொடுத்துவிட்டு அறைக்குள் சென்றவர். நான்கு நாட்களாக அறையில் தங்கி இருப்பவர் தண்ணீரோ, உணவோ கேட்கவில்லையே எனக்கூட ஹோட்டல்காரர்கள் சிந்திக்கவில்லை. அறையில் மேஜையில் அமர்ந்து கம்யூட்டரில் வேலை செய்துகொண்டிருந்துகொண்டு உட்கார்ந்திருந்த தோரணையில் இறந்து கிடந்திருக்கிறார். மாரடைப்புதான் காரணமாக இருக்க முடியும்.


வெளிநாட்டில் குறிப்பாய் இதுபோன்ற குழப்பங்கள் நிறைந்த நாட்டிற்கு வரும்போது தொடர்ந்து அலுவலகத்திடமும், குடும்பத்திடமும் தொடர்பில் இருப்பது எவ்வளவு அவசியம் என இந்த சம்பவம் உணர்த்துகிறது.


அதன் பின்னர் நடந்ததுதான் கொடுமை. கிட்டத்தட்ட 26ம் தேதி இறந்திருக்கிறார். 30ம் தேதி காலை 11 மணிக்கு போலிஸ் உடலை வெளியே எடுத்திருக்கின்றனர். தற்சமயம் இராக்கில் குளிர்காலம் என்பதால் ஹோட்டல் அறைகளின் குளிர்பதன சாதனம் சுடுகாற்றை அனுப்பிக்கொண்டிருக்கும். இறந்த உடனே ஐஸ் பெட்டியில்வைத்தாலே இரு தினங்களில் வாடை வர ஆரம்பித்து விடுகிறது. இவரது அறையில் 30 டிகிரி காற்றில் உடல் நான்கு நாட்களாக இருந்துள்ளது. உடலெல்லாம் ஊதி, தோல்கள் எல்லாம் உரிந்து, கருத்துப்போய்தான் அவரை பிணக்கிடங்கில் பார்க்க முடிந்தது.


அவரது குடும்பத்திற்கு அவரது கம்பெனி ஆட்கள் தகவல் சொல்லிவிட்டு என்னால் ஆன உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

சட்ட ரீதியாக அடுத்து ஆகவேண்டிய காரியங்களை செய்ய ஆரம்பித்தபோதுதான் எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன என்பது புரிந்தது.

முதலில் போலிஸ் தரவேண்டிய அறிக்கை.

உடலை முதலில் பார்த்தவர் மற்றும் ஹோட்டல் மேலாளரின் அறிக்கை

மருத்துவமனையின் முதல் தகவல் அறிக்கை

போஸ்ட்மார்ட்டம் எனப்படும் உடல்கூறு சோதனை

தடயவியல் சோதனை..

இவைகள் எல்லாம் முடிந்த பின்னர் இந்த அறிக்கைகளைக் கொண்டு முதலில் மருத்துவமனை ஒரு இறப்புச் சான்றிதழ் வழங்கும். அந்த சான்றிதழில் மருத்துவத் துறை கையொப்பமிடும்.

அதனைக் கொண்டுபோய் இராக்கின் வெளியுறவுத்துறையில் கொடுத்தால் ஒரு சர்வதேச இறப்புச் சான்றிதழும், உடலை நம் நாட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதியும் வழங்கும்.


அதனை எடுத்துக்கொண்டு இந்திய தூதரகம் சென்றால் அவர்கள் வெளியுறவுத்துறை வழங்கிய சான்றிதழை அடிப்படையாக வைத்து இன்னொரு இறப்புச் சான்றிதழை இந்தியாவில் செல்லத்தக்கதாக வழங்குவர்.


அதன் பின்னர் உடலை இந்தியா எடுத்துச் செல்லவேண்டிய வேலைகளை விமானக் கம்பெனியுடன் இணைந்து செய்யவேண்டும். இது பெரிய விஷயமில்லை.


இராக்கில் இறந்தவர் விஷயத்தில் உடலை இந்தியா கொண்டு செல்லும் அளவில் உடல்நிலை இல்லாத காரணத்தால் நஜஃப் என்றழைக்கப்படும் ஷியா முஸ்லிம்களின் புனித நகரில் அடக்கம் செய்தோம். நஜஃப் நகரம் ஒரு கல்லறை நகரம். அந்த ஊரின் பொருளாதாரமே கல்லறைக்கும், இமாம் அலியின் மசூதிக்கு வருபவர்களாலும்தான். உலகின் மிகப்பெரிய கல்லறைத்தோட்டமாக நஜஃப் நகரம் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் உள்ள பணக்கார ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் நஜஃபில் தங்களது உடலைப் புதைக்க சொல்கிறார்கள். இறந்தவரும் ஷியா பிரிவு இஸ்லாமியர். எனவே கெட்டதிலும் ஒரு நல்லதாக அவரது உடல் அவரது மதப்பிரிவினரின் கடைசி ஆசையான நஜஃபில் புதைக்கப்படுதல் நடந்துள்ளது. அவரது குடும்பத்தினரும் இதை சொல்லிக்கொண்டே இருந்தனர். கர்பெலாவில் உள்ள இமாம் ஹுசைனின் 40வது நாள் எனும் திருவிழாவும் அந்த சமயத்தில் நடந்துகொண்டிருந்தது. அந்த சமயத்தில் இறந்ததையும் குடும்பத்தினர் அதிருஷ்டவசமாக கருதினர். உள்ளூர் நபர் ஒருவர் உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை வழங்கினார்.

இறந்தவர் விஷயத்தில் கிட்டத்தட்ட இராக்கின் முக்கிய புள்ளிகள் பலரும், என்னைப்போன்றவர்களும் இடைவிடாமல் செய்த முயற்சியின் பலனாக இந்த மாதம் 7ம் தேதி உடல் கையில் கிடைத்தது. அதுவும் இராக்கிலேயே அடக்கம் செய்வதாக திட்டமிட்டதால். இல்லையெனில் தடயவியல் சோதனைகள் முடிந்த பின்னரே உடல் வழங்கப்படும். இந்த கேஸ் விஷயத்தில் போன வியாழக்கிழமைதான் தடயவியல் சோதனை முடிவுகள் கிடைத்தன.

இவ்வளவு ஆள், அம்பு, சேனையுடன் நாங்கள் தொடர்ச்சியாக முயன்றதில் கிட்டத்தட்ட 9 நாட்களுக்குப் பின்னர் சோதனை முடிவுகள் வரும் முன்னரே உடலைப்பெற முடிந்தது. ( தடயவியல் சோதனை முடிவுகள் எப்படி இருந்தாலும் நாங்கள் எதுவும் கோரப்போவதில்லை என எழுதிக்கொடுத்திருந்தோம்)


ஒரு சாதாரண இந்தியன் இப்படி ஒரு சூழ்நிலையில் இறந்தால் என்ன ஆகும் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.

இந்தியத் தூதரகத்தைப் பொருத்தவரை ஒரு சாதாரண மத்திய அரசு அலுவலகம் மட்டுமே. நாங்கள் காட்டிய முயற்சியில், ஒரு சதவீதம்கூட அவர்கள் முயலவில்லை. முயலவில்லை என்பதைவிட அவர்களுக்கு உள்ளூர் சட்டம் குறித்த எந்தப் புரிதலும் இல்லை. மேலும் புரிந்துகொள்ள முயலவே இல்லை.

ப்ரொசிஜர் அல்லது புரோட்டோக்கால் எனப்படும் எதுவும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்கள் முழுக்க முழுக்க உள்ளூர் மொழிபெயர்ப்பாளரின் தயவில் வாழ்ந்து வருகின்றனர். மொழிபெயர்ப்பாளர் இவ்வளவு சீக்கிரம் நடக்காது என்று சொன்னால் அதை நமக்கு திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளை மட்டுமே அவர்கள்.

ஒரு இந்தியத் தூதரகம் நமக்கு என்னென்ன செய்ய முடியும்?


முதலில் இறந்தவரின் குடும்பத்திற்கு தகவல் சொல்ல முடியும். ( காவல்துறை முதலில் இந்திய தூதரகத்திற்கே தகவல் தெரிவிக்கிறது)


இறந்தவர்களின் குடும்பத்தினர் இராக் வருவதற்கான வழிமுறைகளை சொல்லித் தருதல். சிக்கல் இருப்பின் தனது பலத்தை உபயோகித்து, அவர்களுக்கு விசா வாங்கித் தருதல்.


அடுத்து செய்ய வேண்டிய வழிமுறைகளை குடும்பத்தினருக்கு சொல்லித் தருதல். உள்ளூரிலேயே புதைப்பதற்கும், அல்லது நம் நாட்டிற்கு உடலை எடுத்துச் செல்வதற்கும்.

சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள உதவுதல்.

இதில் இந்தியாவிற்கு தகவல் சொன்னது தவிர வேறு எந்த விதமான உதவியையும் எங்களால் தூதரகத்திலிருந்து பெற முடியவில்லை.


இறந்தவரின் கம்பெனி இந்தியாவில் பெரிய கம்பெனி என்பதாலும், இறந்தவரின் உறவினர் ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாலும் துணை ஜனாதிபதி, இரு மத்திய அமைச்சர்கள், 4 எம்.பிக்கள் என அரசு எந்திரமே சுறுசுறுப்பாய் இயங்கினாலும், தூதரகத்தினர் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதைத்தவிர வேறு எதையும் செய்யவில்லை.

இந்த சூழ்நிலையில் சாதாரண இந்தியனின் கதி என்னவாய் இருக்கும் என்பதை உங்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

வெளிநாட்டில், அதிலும் குறிப்பாய் அலுவல் விஷயமாக தனியாக பயணம் செய்யும்போது மறக்காமல் குடும்பத்துடனும், அலுவலகத்துடனும் தொடர்பில் இருங்கள்.


தங்கி இருக்கும் ஹோட்டலின் பெயர், அமைந்திருக்கும் இடம், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை குடும்பத்திற்கும், அலுவலகத்திற்கும் தெரியப்படுத்துங்கள்.


எந்தப் பிரயோசனமும் இல்லையெனினும், இந்தியத் தூதரகத்தில் உங்கள் வருகையினை பதிவு செய்யுங்கள். குறைந்தபட்சம் உங்களைப் பற்றிய தகவலாவது தெரியலாம்.


உங்களின் மருத்துவ சம்பந்தமான விஷயங்களையும், மருந்துகளையும் கையில் எடுத்துச் செல்லுங்கள். இராக்கில் பாரசிட்டமாலில் ஆரம்பித்து விக்ஸ் வரை எல்லாமே போலிகள். தேடித்தேடி வாங்க வேண்டும்.

என்ன நடக்கிறது நம்மைச் சுற்றி என்பதைப் பதிவு செய்யவே இந்தப் பதிவு.

இந்த சோகத்திலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவெனில் இராக்கியர்களின் அன்பு. தங்கள் கைக்காசை செலவழித்து ஒவ்வொரு இடமாக எங்களுடன் அலைந்தது. தொடர்ச்சியாக விடுமுறையாக இருந்தாலும் அலுவலர்களுக்கு நிலைமையைச் சொல்லி வேண்டிய இடத்தில் கையெழுத்து வாங்கிக் கொடுத்தது. உடலைப் புதைக்கத் தேவையான எல்லா உதவிகளையும் செய்தது. அவர்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்திருந்தால் எப்படி வேலை செய்வார்களோ அப்படி வேலை செய்தது. இறுதிவரை உடனிருந்தது என இராக்கின் மக்கள்,தங்கள் உதவியால் திக்குமுக்காடச் செய்துவிட்டனர்.


புதைக்க இடம் ஒருவர் இலவசமாய் தந்தது, மௌல்வி இறந்த சடங்குகள் செய்ததற்கு பணம் வாங்காமல் செய்தது, சில டாக்சிகள் விஷயத்தைக் கேள்விப்பட்டு பணம் வாங்காமல் மருத்துவமனைக்கும், ஹோட்டலுக்கும் அழைத்துச் சென்றது என இறந்த சோகம் தவிர வேறு எதுவும் இல்லாமல் பார்த்துக்கொண்டனர்.


12 Comments:

pvr said...

Thank you for sharing. Felt very sad.

Anonymous said...

IN FACT THIS WILL BE THE EXPERIENCE OF MOST PEOPLE IN MANY OTHER COUNTRIES.
IHAVE PERSONALLY EXPERIENCED GREAT WARMTH AND AFFECTION BOTH IN CHINA AND SRILANKA. IN SRILANKA THEY SHOWERED WARMTH EVEN THOGH I WAS A TAMILIAN. PRABHAKARAN WAS VERY POWERFUL THEN WITH LTTE IN FULL COMMAND.THEN ALSO THEY WERE VERY KIND AND WARM.
IN INDIA ALSO IN MANY STATES THEY TREAT PEOPLE WITH WARMTH AND AFFECTION PARTICULARLY ASSAMM AND NORTHERN STATES. MY JOB TOOK ME EVERY WHERE. IAM NOT A GOVT.EMPLOYEE.
ONLY IN TAMIL NADU PEOPLE ARE RUDE AND DISCOURTEOUS. UNLESS YOU KNOW SOMEBODY NOTHING MOVES.EVEN IN THEATRES WHRERE YOU PAY THROUGH YOUR NOSE YOU GET A VERY ROUGH TREATMENT. IN PARKING LOTS AND AUTOS YOU HAVE TO BE A MAHATMA TO SWALLOW THE INSULTS.
THIS NOT PECULIAR TO CHENNAI. BARRING KANYAKUMARI DT. IT IS THE SAME EVERYWHERE. DONT MISTAKE ME IBELONG TO TRICHY DISTRICT.
WITHOUT GETTING EMOTIONAL AND CALLING ME NAMES, LET US INTROSPECT, DEBATE AND FIND A WAYOUT.

Vijay Ganesh Subramanian said...

Very Touching post. Thank you for sharing.

Anonymous said...

Sivanesa chelvan from Pune Writes,

WONDERFUL LETTER FROM Anonymous . PEOPLE OF TAMILNADU MUST INTROSPECT AS TO WHY ARE THEY SO.IF ANYTHING IS GIVEN FREE ,THEY OPEN THEIR MOUTH VERY WIDELY AND KEEP IT SHUT WHEN A SMALL HELP IS REQD BY OTHERS . NO, No THEY ALSO OPEN THEIRS FOR TAASMAC TOO !

நாகு said...

ஈராக்கியர்களின் மனிதநேயம் மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. ஆனால் அதே நேரத்தில் தூதரத்தில் பணியாற்றும் இந்தியர்களின் பணிநடைமுறை மிகவும் வருத்தத்திற்குரியதாக உள்ளது. நம்மிள் யாராவது மத்திய அரசிற்கு தகுந்த முறையில் கோரிக்கை வைத்து நடைமுறைக்கேற்றவாறு பணியாளர்களின் செயல்முறைகளை மாற்ற முயலாமே

​நாகு
www.tngovernmentjobs.in

Anonymous said...

RIP.
Nice to know that still there are some good people left in this world.

Ganpat said...

What Mr.Jayakumar has done is an extremely noble act and I salute him for the same.I am also glad that the blog is used the way it should be viz conveying useful information and educating others.So by spending his valuable time and sharing this with us,Mr,Jayakumar has done a splendid job.
God Bless you Sir with all that is best in life.

Kind regards,
Ganpat

Anonymous said...

@anonymous from Trichy, @Ganpat, I really appreciate your feedback and heartfelt contributions.

@Jayakumar, I salute you for what you have done in trying circumstances

எனி சந்தேகம்... நோ ப்ராப்ளம் said...

ம்.... மனதை உலுக்கிய பதிவு. நன்றி இவ...

இது போல, அனுபவத்தை துபாயிலேயே உணர்ந்திருக்கிறேன்.

அங்கு இங்கனம் வாடும் ஏழைகளுக்காக உதவிட ஒரு சமூக சேவை அமைப்பு உள்ளது...

அதன் பெயர்.... Valley of Love...

http://thevalleyoflove.blogspot.in/2012/12/paralysed-al-nahda-accident-victim.html

துபாயில் இது போன்ற உதவிகளுக்கு தயங்காமல் இவர்களை அணுகலாம்...

மிக நல்ல அமைப்பு. இதில் தன்னார்வ தொண்டனாக பணி புரிந்த அனுபவத்தில் சொல்கிறேன்....

பணம், மொழி, மதம் இவைகளை கடந்து, மனித நேயத்துடன் உழைத்திட இந்த உலகம் இருக்கத்தான் செய்கிறது...

......
......

நண்பர் ஜெயக்குமார் போல... அவருக்கு உதவிய அத்தனை நல்ல இதயங்கள் போல.......

R. J. said...

இறந்த மனிதரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். இராக்கிலோ இங்கோ பக்கத்தில் ஆள் இல்லாமல் தனிமையில் இறந்து போவது கொடுமை. திரு ஜெயகுமாரின் சேவைகளுக்கும், இங்கு பகிர்ததற்கும் பாராட்டுக்கள்.

ஒரே ஒரு சந்தேகம் - அந்த மனிதருக்கு ஹோட்டல் முன்பே புக் செய்யப்பட்டிருக்கும், அவர் வேலை சம்பந்தமாக அங்கு அவர் பார்க்க வேண்டிய மனிதர்களுக்கு அது தெரிந்து இருக்கும், அவர் வேலை பார்க்கும் பெரிய கம்பெனியின் ஊழியர் யாராவது அங்கிருந்தால் அவர்களுக்கும் அது தெரிந்திருக்கும் - அப்படியிருக்க ஏன் 2-ம் நாளே யாராவது ஹோட்டலுக்கு போன் செய்தோ, நேரில் போய் பார்த்தோ செக் செய்யவில்லை என்பது கொஞ்சம் புதிராக இருக்கிறது. மற்றபடி இந்திய தூதரங்களின் பொறுப்பின்மை பற்றி நிறைய படித்தாகிவிட்டது.

-ஜெ .

Manion said...

மனிதம் வாழ்கிறது!

பழனி. கந்தசாமி said...

வருத்தப்படுகிறேன்.