பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 05, 2012

திருட்டு டிவிடி பார்க்கலாமா ?

ஐகாரஸ் பிரகாஷ் ஃபேஸ் புக்கில் எழுதியது...


திரு. மனுஷ்யபுத்திரன், இது சரி அல்ல.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து நடத்தும் ஏழுநாள் சொற்பொழிவின் முதல் நாள் நிகழ்வு பற்றி, அதில் பங்கேற்ற சுரேஷ் கண்ணன், தன் வலைப்பதிவில் எழுதி இருந்தார். அதில் இருந்து ஒரு பகுதி இங்கே. ( http://pitchaipathiram.blogspot.in/2012/12/blog-post_5.html )

********
தனஞ்செயன் அத்தோடு மேடை இறங்கியிருந்தால் நல்லதாகப் போயிருக்கும். அரங்கின் வெளியில் உலக சினிமாக்களின் டிவிடிகள் ரூ.50·-விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. "உயிர்மை நடத்தும் விழாவில் எப்படி இவ்வாறு Pirated டிவிடிக்களை அனுமதிக்கலாம்?..உயிர்மை பதிப்பக நூற்களை எவரேனும் நகல் செய்து விற்றால் எப்படியிருக்கும்?" என்று பொறிந்து தள்ளி விட்டார். அவர் மேடையிறங்கின பிறகு மனுஷ்யபுத்திரன் இதற்கு அமைதியாக ஆனால் சரியான பதிலடி தந்தார். "தமிழ்த் திரை இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்கள் எந்தெந்த உலக சினிமாக்களிலிருந்து நகல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும். கோடிகளில் இயங்கும் தமிழ்த் திரை இந்த அறத்தை காப்பாற்றுவது முக்கியமானது." என்கிற ரீதியில் பேச அரங்கில் ஓரே ஆரவாரம்.

எஸ்.ராவும் தனது உரையில் இந்த விஷயத்தை தொட்டுச் சென்றார். "நானும் அப்படியாக குறைந்தவிலையில் டிவிடி பார்த்தவன்தான். துரதிர்ஷ்டவசமாக இங்கு உலக சினிமாவை அரங்கில் அனுமதிச் சீட்டு பெற்று பார்க்கும் சூழலே இல்லை. அதற்கான அரங்குகளும் இல்லை. உலக சினிமா குறுந்தகடுகளும் நியாயமான விலையில் கிடைக்கும்படியாகவும் இல்லை. இவையெல்லாம் முறைப்படுத்தப்பட்டால் கள்ள நகல்களின் அவசியமிருக்காது. அது தவறுதான், நியாயப்படுத்த முயலவில்லை."

***********

பைரேட்டட் டிவிடி விற்கக் கூடாது என்று சொன்ன தனஞ்செயனுக்கு, மனுஷ்யபுத்திரன், 'நீங்க கதையைச் சுடலாம்... நாங்க திருட்டு டிவிடி விற்கக் கூடாதா?' என்று 'counter' குடுத்தாராம். கூட்டத்தில் செம்ம க்ளாப்ஸாம்.

மனுஷ்யபுத்திரன் கோபத்துக்கான லாஜிக்கே எனக்குப் பிடிபடவில்லை. ஒருத்தன் உங்களைப் பப்ளிக்ல பளார்னு ஒரு அறை விட்டான்னா, அந்த அவமானத்துல, அவனைக் குத்திக் கொலை செய்துவிடணும் போல வெறி வரலாம். ஆனா, அப்படிச் செஞ்சிட்டீங்கன்னா, , அந்த ரெண்டுமே சம அளவிலான குற்றங்கள் ஆகிடாது. இதுக்கு அது சரியாப் போச்சு என்றும் சொல்ல முடியாது

கள்ள டிவிடி விற்பது தவறு என்றே பலருக்குப் புரியவில்லை.

எல்லாரும் என்ன கேக்கறாங்ன்னா,

1. எல்லா பொது இடத்திலும் விற்கிறது. நாங்க வித்தா மட்டும் தப்பா?

பொது இடங்களில் நடக்கும் தவறுகளைக் காவல்துறை பார்த்துக் கொள்ளும். நீங்க காசு குடுத்து ஏற்பாடு செய்யும், நிகழ்வுகளில் நடக்கும் தவறுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு.

2. தனஞ்செயன் மட்டும் கதையைச் சுட்டு படம் எடுத்துக் காசைக் கொள்ளையடிக்கிறாரே, அது மட்டும் தவறு இல்லையா?

அவர் செய்வது தவறு தான். அதற்கு என்ன தண்டனையோ அதைக் கொடுப்பதற்கு பதில், அவர் கொள்ளையடித்துச் சம்பாதித்ததாகச் சொல்லப்படும் பணத்தை பதிலுக்கு நீங்கள் கொள்ளையடிக்க முடியாது.

3. உலகப்படங்களைப் பார்ப்பதற்கு வேறு என்னதான் வழி?

நியாயமான வழிமுறை என்ன உண்டோ அதைச் செய்யுங்கள். அல்லது திருட்டு டிவிடியை விட்டால் வேறு வழியில்லை என்றால், நாம் கள்ளத்தனம் செய்கிறோம் என்ற பிரக்ஞையாவது இருக்கட்டும்.

4. உங்களைப் போன்ற ஆசாமிகளால் தான் நம் ரசனை லெவல் ஏறவே மாட்டேன் என்கிறது. எவ்வளவு உயர்ந்த விஷயம் இது? இதுல கொள்ளையடிச்சு நாங்க கோட்டையா கட்டப் போறோம்?

சும்மா சீன் போடாதீங்க. பிறருடைய, அறிவு, பொருள், காப்பிரைட்டட் மெடீரியல் எதுவாக இருந்தாலும், அதற்குரிய விலையைக் கொடுக்காமல் எடுத்துக்கொண்டால் அது திருட்டுதான். தண்ணியடிப்பதற்காக நூறு ரூபாய் ஆட்டையைப் போடுகிறவனை விட, அறிவுப் பசிக்காக திருட்டுத்தனம் செய்யும் ஒருவன் எந்தவிதத்திலும் தாழ்ந்தவன் அல்ல.

தியேட்டரில் இருந்து ஓடியே போய்விட்டதால், 'அம்மாவின் கைப்பேசி' என்கிற அதி அற்புதமான மாற்றுச் சினிமாவை நிறையப் பேர் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையாம். அந்த அற்புதமான காவியத்தை நான் நெட்டில் இருந்து டவுன்லொட் செய்து, குறுந்தகடுகளாக ஆக்கிக் குடுக்கிறேன். அதையும் விற்றுத் தரமுடியுமா? சரி, அது வேண்டாம்... என் நண்பர்கள் அனேகம் பேருக்கு உயிர்மை பதிப்பகம் போடும் புஸ்தகங்களை வாங்கும் வசதி இல்லை. நான் அவற்றை வாங்கி, பிடிஃப் கோப்பாக்கி, இலவசமாக - அனைவருக்கும் கூட அல்ல - அந்த நண்பர்களுக்கு மட்டும் விநியோகம் செய்யட்டுமா?

திரு. மனுஷ்யபுத்திரன், நான் கூட இணையத்தில் இருந்து, திருட்டுத்தனமான படங்களை இறக்கிப் பார்த்திருக்கிறேன். ஆனால், குற்ற உணர்ச்சியுடன், மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்ற அச்சத்துடன், பார்த்ததுடன் டெலிட் செய்யவேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வுடன், வெளியே தெரிந்தால் அசிங்கம் என்ற வெட்கத்துடன் இக்காரியத்தைச் செய்திருக்கிறேன்.

ஆனால்,

ஆமா, பாத்தேன்.. அப்படித்தான் பாப்பேன்...பாக்கறது மட்டுமில்லே, பப்ளிக்கா விக்கவும் செய்வேன் என்கிற உங்களது தெனாவட்டு, ஆச்சர்யமாக இருக்கிறது.

நன்றி: இது கூட திருட்டு பதிவு தான், மன்னிக்கவும்

15 Comments:

Anonymous said...

உலகப்படங்களின் திருட்டு டிவிடியை விற்பது, அதற்கு துணை போவது சட்டப்படி குற்றம்.மனுஷ்யபுத்திரன் சட்டத்தை மீற உதவி செய்கிறார்.அதற்காக அவர் மீது வழக்கு தொடர்ந்து தண்டிக்கப்பட்டால் என்ன செய்வார்.
விலை அதிகம் என்பதற்காக அவ்வாறு செய்வதை சட்டம் அனுமதிக்காது.இவர் வெளியிடும் புத்தகங்களை யாரும் ஜெராக்ஸ் செய்து விற்றாலும் வாங்க ஆளில்லை என்பதுதான் உண்மை.

poornam said...

தண்ணியடிப்பதற்காக நூறு ரூபாய் ஆட்டையைப் போடுகிறவனை விட, அறிவுப் பசிக்காக திருட்டுத்தனம் செய்யும் ஒருவன் எந்தவிதத்திலும் தாழ்ந்தவன் அல்ல. அர்த்தம் சரியா இல்லியே? மாறி இருக்கணுமோ?

மோகன் குமார் said...

Good to read both sides version.

Loved the yellow comment this time :)

poovannan said...

இதே மாதிரி மாத்திரையிலும் (பல ஆயிரம் ரூபாய் விற்கிற மாத்திரை எல்லாம் இப்போது பெருகி விட்டன )மருந்து கம்பனிகள் நகல் எடுத்து விற்பது தவறு என்று பேசலாமா
அரசுகளே இப்போது மாத்திரையில் மருந்து கம்பனிகள் நகல் எடுத்து மிக குறைந்த விலையில் விற்பதை ஆதரிக்கின்றன
அதற்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றுகின்றன
சினிமா துறையில் ஈடுபடுவோர் நூறு கோடி ,அம்பது கோடி என்று சம்பளம் வாங்குவதால் தான் அதில் நட்டம்.திருட்டு DVDயால் அல்ல
குழந்தைகளுக்கு சைனாவில் தயாரான போலி பார்பி பொம்மைகள் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும்.சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்ற பார்பி ,டோரா பொம்மைகள் ஆயிரக்கணக்கில்
ஆயிரக்கணக்கில் கொடுத்து வாங்குபவர்களுக்கு அங்கீகாரம் பெற்ற கடைகள்.இல்லாதவர்களுக்கு திருட்டு பார்பி பொம்மைகள்
அதே தானே திருட்டு DVDயும்
திருட்டு பார்பி பொம்மைகள்/DVD விற்பதும் மக்களுக்கு பயனுள்ள ஒன்று தான்
உயர் கல்விக்கான புத்தகங்கள் எல்லாம் பல ஆயிரம் ரூபாய்.xerox வந்த பிறகு தான் பல புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு பெரும்பான்மையானோருக்கு கிட்டியது .நூலகத்தில் இருக்கும் ஒரு சட்டபூர்வ copy துறைத்தலைவரிடம் இருக்கும் .அதை உடைத்தது திருட்டு xerox தான்
காப்புரிமை ,பயங்கரமாக காசு அடிப்பதற்கு அல்ல

ரிஷபன்Meena said...

//poovannan
காப்புரிமை ,பயங்கரமாக காசு அடிப்பதற்கு அல்ல //

சரியாக சொன்னீர்கள். அளவுக்கதிகமாக லாபம் வைத்து கொள்ளை அடிப்பதை எப்படியேனும் தடுத்தால் நல்லது.

Anonymous said...

இது எல்லாம் அரசியல் வாதிகள் உபயோகிக்கும் அபத்தமான ’பதிலடிகள்’.
‘ஏண்டா பிக் பாக்கெட் அடிச்சே’ என்றால். நான் மட்டுமா பண்ணேன், ஊர்லெ எத்தனை பேர் பண்றங்க , அவங்களைக் கேளுங்க முதலில்.”என்று அரசியல் மேடைகளில் கேட்பது போல் இருக்கிறது. -மணா

Ratan said...

Nowa days, Manushya Puthiran is interested only in tit-for-tat. He must learn the patience from S.Ra, whose reply was very much acceptable.

poovannan said...

இது பிக் பாக்கெட் இல்லங்க

ராமானுஜர் கோவில் மேலே ஏறி எல்லாருக்கும் தெரியட்டும் என்று கத்தியது மாதிரி பெரும்பான்மை மக்களுக்கு நன்மை பயக்கும் வழி

விஞ்ஞான வளர்ச்சியில் குறைந்த விலையில் பொருள் கிடைக்க உதவும் எதுவும் தவறின் கீழ் வராது.
அதற்கு ஏற்ப மாற வேண்டுமே தவிர அதை சட்டத்தின் துணை கொண்டு அடக்கி ஒடுக்க வேண்டும் எனபது சரியான தீர்வு அல்ல
விண்டோஸ் 300 ரூபாய்க்கு ஒருவர் தருகிறார் என்றால் அதை ஏற்று கொள்ளாதே என்று யாரும் தடுக்க முடியாது.அதை கெடுக்க உள்ளுக்குள் ஏதாவது செய்யும் வழிமுறைகளும் தவறு தான்
மைக்ரோசாப்ட் நிர்ணயித்த விலையில் வாங்குபவர்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்,
மற்றவர்கள் குற்றவாளிகள் எனபது சரியான தீர்வு அல்ல.அவர்கள் வைக்கும் கட்டணம் அதிகமாக இருந்தால்,சில நாடுகளுக்கு அனுமதி தராமல் இருந்தால் இது தான் வழி
27000 ரூபாய் கொடுத்து ஒரு மேற்படிப்பு புத்தகம் வாங்குவதை விட 700 ரூபாய் கொடுத்து xerox எடுக்க முடியும் என்றால் xerox தான் பெரும்பான்மையானோர் எடுப்போம்.அப்படி xerox எடுத்து கொடுப்பவர் குற்றவாளியல்ல
இதுவரை xerox எடுத்ததற்காக யாரும் கைது செய்யப்பட்டது கிடையாது.ஆனால் சினிமா என்று வந்து விட்டால் சட்டம் அவர்களுக்கு ஆதரவாக ,அவர்கள் கோடி கோடியாக சம்பாதிக்க கைதுகளை நடத்தும் நாடகம் நடக்கிறது

dr_senthil said...

Plagiarism in any form is intellectual offense.. Morality compromised.. Nothing more to add.

poovannan said...

low cost editions/duplications/xerox are not plagiarism.
stealing the story and presenting it as their own is plagiarism and not the person who uploads a movie or sells a DVD
I dont see any logic in supportingjk rowling making billions but denying it to the one who invented kidney or heart transplant
Will we support a US company move to sell tablets curing dengue for thousands each or a advanced solar battery making power generation easy and environment friendly for millions.
Various govts bribe to get the technology/duplicate weapons made by scientists of enemy armies.
End justify the means if it benefits the majority who cannot afford

Anonymous said...

டிஜிட்டல் காமிராக்கள் மார்கெட்டில் வந்த போது யானை விலை குதிரை விலை விற்றது. RD செலவை எடுக்கவேண்டும் ஒத்துக் கொள்ளலாம். இப்போது சாதாரனமா எல்லாரும் வாங்கும் விலைக்கு வந்து விட்டது.

சில பொருட்கள் எப்பவுமே அளவுக்கு அதிக லாபத்தில் விற்கப்படுகின்றனவே அது ஏன்?
உதாரணத்துக்கு Gillette razor blade -கள், பிரிண்டர் இங்க் ரொம்ப நல்ல தரத்தில் கிடைக்குது தான் ஆனா ஏன் இவ்வளவு விலை விற்கிறார்கள் ? உற்பத்தி செலவுடன் ஒப்பிட்டால் இந்த விலையை அவர்களால் நியாயப் படுத்த முடியுமா ?

Vishweshwaran R said...

There is no right price for any product/service. It is the price the consumer is willing to pay.

There are super premium products available which will never justify the input cost. (Eg. Louis Vuitton, 5 star hotel meals)

Still people buy because it satisfies the ego.

Moser Baer wanted to kill the pirated DVD industry by offering original, legitimate products at affordable prices.Unfortunately, they don't have the latest titles.

btw, Whoever buys pirated stuff, do it with full conscience and the buyer/viewer have their own logic to justify their act.

சிந்திப்பவன் said...

திருடுவதில் இந்தியர்களும்,நைஜீரியர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை.

ஒரே வித்தியாசம்..

பின்னவர்களுக்கு இதில் குற்ற உணர்வு எதுவும் இருக்காது.

நம்மவர்களோ செய்வதையும் செய்து விட்டு அதை நியாயப்படுத்தவும் முயல்வார்கள்.

இங்கு பலவிதமான பின்னூட்டங்கள் என்னை வியக்கவைக்கின்றன.

ஒருவர் சொல்கிறார்..

"சில பொருட்கள் எப்பவுமே அளவுக்கு அதிக லாபத்தில் விற்கப்படுகின்றனவே அது ஏன்?
உதாரணத்துக்கு Gillette razor blade -கள், பிரிண்டர் இங்க் ரொம்ப நல்ல தரத்தில் கிடைக்குது தான் ஆனா ஏன் இவ்வளவு விலை விற்கிறார்கள் ?"

உண்மைதான் ஸார்..ஒன்று நீங்க அதை வாங்காம இருங்க ..இல்ல முயற்சி செய்து அந்த தரத்திற்கு பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு வியாபாரம் செய்ங்க!

அப்புறம் உயிர்காக்கும் மருந்துகளோட திருட்டு vcd களை ஒருத்தர் ஒப்பிடறார்.

ஊரில ஒரு நல்ல எளிய மனிதருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஒரு லட்ச ரூபா செலவழித்து அறுவை சிகிச்சை செய்தால்தான் அவர் பிழைப்பார் எனும் நிலை.ஊரில் ஒரே ஒரு கோடீஸ்வரர்.அவரிடம் போய் எல்லோரும் கெஞ்சி கேட்கிறார்கள்.ஆனால் அவர் உதவ மறுத்து விடுகிறார்.

அதைப்போலத்தான் அமெரிக்காவில் ஒரு நிறுவனம் ஒரு மருந்தை ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப்பிறகு தயாரித்து அதற்கு அதிக விலை வைத்தல்.

அரேபியர்கள் மனது வைத்தால் கச்சா எண்ணையை எழைநாடுகளுக்கு இலவசமாக தரலாமே.

ஒரு உண்மை தெரிகிறது..
நாம் சோனியாக்களையும்,கருணாக்களையும்,ஜெயாக்களையும்,முலாயம்களையும் உதட்டளவில் வெறுத்து உள்ளத்தளவில் பூஜிக்கிறோம்.

Anonymous said...

/உண்மைதான் ஸார்..ஒன்று நீங்க அதை வாங்காம இருங்க ..இல்ல முயற்சி செய்து அந்த தரத்திற்கு பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு வியாபாரம் செய்ங்க!//

சிந்திக்கிற சிங்காரக்குட்டி,

சாதாரண நுகர்வோரை பணக்கார முதலைக் கம்பெனியோட ஒத்தைக்கு ஒத்தை போட்டு ஜெயிக்க சொல்றீங்க பலே.

அந்நிய கோலா கம்பெனிகள் உள்ளே வந்தப்புறம் நம்ம ஊரில் உள்ள பழைய இந்திய கம்பெனிகள் எப்படி அழிந்தன? மக்கள் அவற்றை ஓட ஒட விரட்டியா அவை அழிந்தது.

சில பல பெரிய இந்திய பிராண்டுகள் இவர்களால் வாங்கி முடக்கப்பட்டது. பாட்டில் தயாரிக்கும் நிறுவணங்களுடன் ஒப்பந்தம் போட்டு சின்னஞ்சிறு கம்பெனிகளுக்கு பாட்டில் கிடைக்காமல் பார்த்துக் கொண்டார்கள்.

இவற்றின் வியாபரம் நேர்வழியில் இருப்பதில்லை. கேட்டா வியாபார தந்திரம் சார் ...இந்திய கம்பெனிக்காரங்க ஏன் விக்கனும் ? நிங்க வேனா பெப்சிக்கு போட்டியா ஒரு கம்பெனி வைங்கன்னுவீங்க.. என்ன மாதிரி சாமான்ய அதைப் படிச்சிட்டு என்னா செய்ய முடியும் பே!பே!ன்னு பேய் முழி முழிக்க வேண்டியது தான்.

பல போட்டிகளே இல்லாத தொழில்களில் monopoly யா இருந்து கொண்டு கொள்ளை அடிப்பதை தடுக்கவேண்டாமா ? எலக்டிரிசிட்டி பில் ஒரு யூனிட் ரூ 1000-ன்னு வித்தா என்ன பன்னுவீங்க சொந்தமா தயாரிச்சுக்கோன்னுவீங்களா

(ஏனுங்க நான் சரியாத்தானே பேசிட்டு இருக்கேன்.....)

Anonymous said...


//அரேபியர்கள் மனது வைத்தால் கச்சா எண்ணையை எழைநாடுகளுக்கு இலவசமாக தரலாமே.

ஒரு உண்மை தெரிகிறது..
நாம் சோனியாக்களையும்,கருணாக்களையும்,ஜெயாக்களையும்,முலாயம்களையும் உதட்டளவில் வெறுத்து உள்ளத்தளவில் பூஜிக்கிறோம்.//

யாரு இலவசமா கேட்டா ... மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீங்க....

நைஜீரியரை இந்தியார்களும் ஒன்றா என்ன சரியான ஆர்வக்குட்டித் தனமா இருக்கே. அவனுக பன்னுவதெல்லாம் மோசடி ...இந்தியர்கள் சட்டத்தை மீற தயங்காதவங்கன்னு வேனா சொல்லுங்க.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல் மைசூர்பா சாதா ஸ்வீட் கடைய விட அதிகம்.அதுபோல வீட்டில் நமக்கு செய்யவும் வராது ஆனா சாதாக் கடைக்கும் கிருஷனா ஸ்வீட்ஸ் விலைக்கு உள்ள வித்தியாசத்தை கிருஷனாவின் தரத்துடன் ஒப்பிடும் போது அதை நியாயப்படுத்திக் கொள்ளலாம்.

எனக்கு கோர்வையா எதையும் எழுத வரமாட்டேங்குது போங்க.....அதுக்காக நீங்க ரைட்னு அர்த்தம் இல்லை.