ரூபிக் க்யூப் பற்றி ஒரு முறை விகடனில் மிகக்குறைந்த நேரத்தில் சால்வ் செய்பவர்கள் பற்றி கட்டுரை வந்த சமயம். அதைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் வாங்கித் தருமாறு கேட்டேன். அங்கே இங்கே விசாரித்து விட்டு நம் ஊரில் கிடைப்பதில்லைன்னு சொல்லிவிட்டார். ஆனால் என் நச்சரிப்பு தொடர்ந்தது.
ஒரு முறை அப்பா டெல்லிக்கு போய்விட்டு வரும்போது க்யூப் வாங்கி வந்தார். அதை வைத்துக்கொண்டு விதவிதமாக முயற்சி செய்து பார்த்தேன். ம்ஹூம்... ஒரு சைடு போட முடிந்தது, ரெண்டு சைடு போட முடிந்தது. அவ்வளவுதான். ஏமாற்றமாகப் போய்விட்டது.
வீட்டுக்கு வருபவர்களிடம் கேட்பது, பள்ளியில் தோழிகளிடம் அப்பப்போ இதைப் பற்றி கேட்டு பார்ப்பது. யாருக்கும் தெரியவில்லை. ஒருத்தி மட்டும் அது ரொம்ப சுலபம் என்று சொல்ல, ஏய் எனக்கும் சொல்லிக்கொடு ன்னு கெஞ்ச, அவள், அதை ஃபுல்லா கழட்டி உள்ளே ஸ்க்ரூ இருக்கும், அதை அட்ஜெஸ்ட் செய்தால், நமக்கு வேண்டிய மாதிரி ஒரே கலர் கொண்டு வந்து விடலாம் என்றாள்.. சப்பென்று ஆகிவிட்டது.
ஆனாலும் வீட்டுக்கு வந்து அவள் சொன்ன மாதிரி கழட்டப்பார்த்தால் , முடியவே இல்லை தம்பி அதை உடைக்க ரெடி ஆகிவிட்டான். ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும் போது குறி பார்த்து வீட்டு ஜன்னல்களை பல முறை உடைத்து அனுபவம் பெற்றவன். உடைத்து விட்டு திரும்ப சேர்க்க முடியலைன்னா அப்பா கிட்டே வாங்கி கட்டிக்கணுமே என்ற பயத்தில் அவனை அடக்கி அதை பத்திரமாக ஷோ கேஸில் வைத்துப் பூட்டி விட்டேன். இனி நானும் எடுக்க மாட்டேன், நீயும் எடுக்கக் கூடாது என்ற ஒப்பநதம் செய்து கொண்டோம். கண்ணில் படும் போதெல்லாம் நமக்கு சால்வ் பண்ண வரவில்லையே என்று ஏக்கமாக இருக்கும்.
ஒரு லீவு நாள் மதியம் ரொம்ப சுவாரசியமா தம்பியுடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தேன். வாய் சண்டை முற்றி அடுத்த கட்டத்துக்கு தயாரான போது அப்பா எங்கள் இருவரையும வெளியே கூட்டிக் கொண்டு போகிறேன் என்று கிளப்பினார். கூட்டிக்கொண்டு போன இடம் காய்தே மில்லத் கல்லூரியில் நடந்த புத்தகக் கண்காட்சி.
ஏற்கனவே படிக்கிறதுன்னா ( அதாவது கதை புத்தகம் !!) பசி தாகம் எடுக்காது. புது புத்தகத்தின் வாசனை அவ்வளவு பிடிக்கும். கையில் ஒரு புத்தகம் கிடைத்தால், முதலில் வாசனையை மோப்பம் பிடித்து விட்டு தான் படிக்கவே ஆரம்பிப்பேன். சண்டையை ஒத்திப் போட்டு விட்டு உடனே கிளம்பினோம்.
வீட்டிலிருந்து அண்ணாசாலை வழியாக போகும் பேருந்தில் ஏறி .( "அண்ணா சாலை மட்டும், சொன்னால் அழகு சொட்டும்" என்று பக்கத்து வீட்டு குழந்தை தமிழ் ரைம்ஸ் ஒன்றை கத்திக் கொண்டே இருக்கும் !! ) வழியெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே போய்ச் சேர்ந்தோம்.
வரிசையாய் பல ஸ்டால், அதில் பலப்பல புத்தகங்கள். அடேயப்பா...
வியந்து கொண்டே போன போது ஒரு ஸ்டால் வாசலில் நாங்கள் வாங்கிய அளவு பெரிய க்யூப் படம் போட்ட சிவப்பு அட்டை புத்தகம் கண்ணில் பட்டது. அவ்வளவுதான் அங்கேயே நின்று விட்டோம். க்யூப் சல்யூஷன்ஸ் என்று போட்டிருக்க, அப்பாவிடம் அதை வாங்கித் தரச் சொன்னோம்.
அப்பாவுக்கோ அதில் ஹிந்தி யில் எழுதி இருந்ததை பார்த்து அது ஹிந்தி, வேண்டாம் என்று அந்த ஸ்டாலை தாண்டிப் போக முயல, தம்பி எங்களுக்குத்தான் ஹிந்தி தெரியுமே ன்னு சொல்ல. ( என்ன தைரியம் !!! எழுதியது ஒரே ஒரு பரீட்சை அதிலும் ஒரு எழுத்துக்கு ஐந்து எழுத்து என்பது மிகவும் அநியாயமா பட்டதால், பல எழுத்தை அவுட் ஒப் போர்ஷன் பண்ணி எதையோ எழுதி விட்டு வந்து இப்போது ஹிந்தி தெரியும் என்றால்) அப்பா காதில் போட்டுக்கொள்ளாமல் போய்க் கொண்டே இருக்க, ஸ்டாலில் இருப்பவர் எட்டிப் பார்த்து அது இங்கிலீஷ் தான் என்று சொன்னார்.
அதை வாங்கியவுடன் பெரிய சாதனை செய்து விட்ட சந்தோஷம் ; அப்பவே அதை முழுவதும படித்து புரிந்து ஆறு பக்கமும் போட்டு விட்ட மாதிரி பெருமை. அந்த நொடியே புத்தகக் கண்காட்சியை நேசிக்கத் தொடங்கி விட்டேன்.
அடுத்தடுத்த ஸ்டாலை இன்னும் உற்சாகமாக பார்த்து சுஜாதா புத்தகம் இரண்டு வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.
அப்புறம் அந்தப் புத்தகத்தில் இருந்த ,ஃபார்முலா, ஈக்வேஷன் எல்லாம் படித்து கான்செப்ட் புரிந்து ஒரு நிமிஷத்துக்குள் போட வந்து விட்டதும் , பின்னர் வேலைக்காக வெளியூர் சென்று தங்கியிருந்த காலகட்டத்தில் அக்கம்பக்க குட்டீசிடம கொடுத்து கலைக்கச் சொல்லி, நிமிஷத்தில் போட்டு " ஹை சூப்பர் " என்று அவர்கள் வியந்ததும் .... உறைந்த நிரந்தரமாய் (சுஜாதா :-) ) நெஞ்சில் தங்கி விட்ட தருணங்கள்.
நமக்கு பிடித்த ஒருவர் வருகையை எவ்வளவு ஆவலாக எதிர்பார்ப்போமோ அந்த அளவு புத்தகக் கண்காட்சியை எதிர்பார்ப்பதும் வருடா வருடம் புத்தகக் கண்காட்சிக்கு போவதும் வழக்கமாகி விட்டது.
சுமதி
இதுக்கு தான் கண்காட்சியில் ஹிந்தி/ஆங்கில புத்தகம் வாங்க வேண்டும் :-)



நன்றி: தினமணி










8 Comments:
நான் ரசித்துப் படித்த அழகான, நகைச்சுவை மிளிரும் பதிவு.
என்னிடமும் போடாத ரூபிக் க்யூப் ஒன்று இருக்கிறது.
:-)
புத்தகம் டாரண்ட்டில் தேடிப்பார்க்கிறேன். ;-)
I expect this book will be included in the list of 10 books to be recommended by IV later! I have also wondered how people set the cube in a minute. I tried for hours and thought I was near it - but never could complete it - hi..hi..- R. J.
சரியான கொசுவத்திச் சுருள் பதிவு :)
(அதாங்க மலரும் நினைவுகள் )
நல்ல நடை.நன்று.
இப்போதெல்லாம் ரூபிக் க்யூப் புதிரை அவிழ்க்க நிறைய வலைத்தளங்களில் விடை தரப் பட்டிருக்கிறது. புத்தகமெல்லாம் தேடிப் போக வேண்டாம்
ச.சங்கர்
என்னுடைய பேத்தி (9த் ஸ்டான்டர்டு படிப்பவள். தோஹாவில் )ஒரு ஸைடில் நாலு ரோ இருக்கும் க்யூபை
நாலு சைடுமே ஒன்னே முக்கால் நிமிடத்திலே போட்டு விட்டாள். அவள்
படிக்கும் பிர்லா பப்ளிக் ஸ்கூலிலே ஒரு நிமிடத்திலே போடும் மாணவிகள்
இருக்கிறார்களாம்.
சுப்பு ரத்தினம்.
Expressed in a Natural WYSIWYG manner.
அன்புள்ள இ.வ.,
சுமதி அவர்கள் வாங்கி இருப்பது ஹிந்திப் புத்தகம் அல்ல! பெங்காலி!
நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in
கலக்கல்.........
யதார்த்தமாக, ஜாலியாக படிக்கும் வண்ணம் இருந்த நடைக்கு ஒரு சப்பாஷ்..
ஹல்லோ... இ.வ.... மஞ்சள் கமெண்ட்டுல கலக்கிட்டீர்யா....
Ithu enna, vara vara I.V. romba kuzapputhu! Naarathar kaiyil Veenaiyaa, yaazaa, thamburaavaa. Ippo, athu hindiyaa, bengaaliyaa! - R. J.
Post a Comment