பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 06, 2012

இராக்கில் ஒரு பயணம் - ஜெயக்குமார்ஜெயகுமாரிடம் சாட் செய்த போது "இந்தியனாக மிகப் பெருமையுடன் உணர்ந்த தருணங்களிள் இராக்கில் இருந்த தருணங்களும் ஒன்று." என்றார். சரி இராக் பற்றி ஒரு கட்டுரை எழுதி தாங்க என்று கேட்டவுடன் எனக்கு அனுப்பினார்.
அது இங்கே.


சென்ற மாதம் 6 ம் தேதி முதல் 20 ம் தேதிவரை அலுவலக பணியாக இராக் சென்று வந்தேன். பாக்தாத், மற்றும் , பாஸ்ரா தான் எங்கள் பயண இலக்கு.

பாக்தாத் விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்தே ஆச்சரியங்கள் காத்து கிடந்தது. அன்பான இமிக்ரேஷன் அதிகாரிகள். வெளியே வந்ததும் விமான நிலைய வாடகைக் கரை எடுத்துக் கொண்டு ஓட்டலுக்குச் செல்லும் வழியெங்கும் பல சோதனைச்சாவடிகள். ஒவ்வொன்றிலும் இருக்கும் காவலர்கள் மற்றும் இராணுவத்தினர் கடவுச்சீட்டைக் கண்டதும் ஒரு மகிழ்ச்சியான பார்வை. கைகுலுக்கல்கள் எல்லாம்

சுத்த சாகபட்சிநியான எனக்கு உணவு கிடைப்பதுமட்டும்தான் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. அதிலும் ஒரு சில ஓட்டல்காரர்கள், நான் உணவு அருந்தாமல் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களது சமையலறை வரை அனுமதித்து எப்படிச் செய்தால் எனக்குப் பிடிக்கும் என கேட்டு செய்து கொடுத்தனர்.இராக்கியர்கள்

அபுதாபியில் இருந்து கிளம்பும்போதே ஒருவித படபடப்பு இருக்கத்தான் செய்தது. தொடர் குண்டுவெடிப்புகள், ஆள்கடத்தல்கள் எல்லாம் இருக்கும் ஒரு இடத்திற்குப் போகிறோம். செலவுக்கு நிறையப் பணம் வேறு வைத்திருக்கிறோம். எப்படி சமாளிப்பது, திருட்டுப்போகாமல் எப்படி காப்பாற்றுவது என ஒரு வித பதட்டம். ஒரு வேலை என்னைக் கடத்தினால் எனது கம்பெனி உனக்குப் பணம் தராது என்னை விட்டுவிடுங்கள் என அரபியில் சொல்ல பயிற்சி எடுத்து கொண்டிருந்தேன்.

ஆனால் இறங்கியது முதல் அதாவது அக்டோபர் 6ம் தேதிமுதல் 25ம் தேதி காலை மீண்டும் விமானம் ஏறும்வரை என்னை அன்பினால் திக்கு முக்காடச்க் செய்துவிட்டனர் இராக்கிய மக்கள். எங்கு சென்றாலும் இந்தியன் என அறிந்ததும் ஒரு தனி மரியாதை. முன் அனுமதி இன்றி பெரிய பெரிய அதிகாரிகளை சந்திக்க அனுமதி. கம்பெனி விஷயமாக கேட்ட கேள்விகளுக்கு அன்புடனும், புன்னகையுடனும் பதில்கள். தேவைப்பட்ட சட்ட சம்பந்தமான காகிதங்களை தருதல் என அசத்தி விட்டனர்.

டெல்லியின் பாபுக்கள் மனோபாவம் ஏதுமின்றி எல்லோருடனும் சகஜமாய்ப் பழகும் அதிகாரிகள். தண்ணீரும், குளிர்பானமும் வழங்காமல் எந்த அதிகாரியும் என்னை வெளியே விடவில்லை.

இராக்கியர்களை பொறுத்தவரை அமிதாப்பும், கரீனா கபூரும்தான் இந்தியாவில் தெரிந்த ஆட்கள். வேறு யாரையும் தெரியவில்லை. இந்திப்பட சி.டிக்கள் நம்மூரில்கூட இவ்வளவு கிடைக்குமா எனத் தெரியாது. அவ்வளவு கலெக்ஷன்கள் 150 டாலர் கொடுத்தால் 500 ஜி.பி முழுக்க இந்திப்படங்கள் மற்றும் வீடியோ பாடல்களை பதிந்து தருகின்றனர். எல்லாம் திருட்டு விசிடி போலத்தான்.

ஊர் சுற்றுதல்

முன்னாளைய மெசபடோமியாதான் இன்றைய இராக். டைகிரிஸ் நதி ஓடும் பாக்தாத்தில் 10 நாட்கள் தங்கி இருந்தேன். அலாவுதின் மற்றும் அற்புத விளக்கு, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ரொம்ப பிரசித்தம் போல. இரண்டு, மூன்று ரவுண்டானாக்களில் பெரிய அளவில் அந்த சிலைகளை வைத்திருந்தனர். டைகிரிஸ் நதி அசுத்தங்கள் ஏதுமின்றி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது. டைகிரிஸ் நதியின் மேற்புறம் கிரின் சோன் என அழைக்கப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதி. கிழக்குப் பக்கம் சாதாரண இடம். அதாவது எப்போது வேண்டுமானாலும் குண்டு வெடிக்கலாம் என இருக்கும் இடம். இந்தப் பகுதியில்தான ஓட்டல் எடுத்து தங்கி இருந்தேன். ஆனால் இருந்த நாட்களில் ஒருமுறை கூட சப்தங்கள் எதுவும் கேட்கவில்லை


பாக்தாத்தில் பாதுகாப்பு எப்படி என்பது குறித்து ஓட்டலில் கேட்டேன். 24 மணி நேரமும் எந்த பயமும் இன்றி சுற்றலாம் என சொல்லி இருந்தனர். பரிசோதனைக்காக முதல் இரு தினங்கள் ஊர் சுற்ற சென்று வந்தேன். சொல்லி வைத்தார்போல எல்லா பாதுகாப்பு சோதனைச் சாவடிகளிலும் மகிழ்ச்சியுடன் கூடிய முகமன், அன்பான வழிகாட்டல்.

சைவ சாப்பாடு என்ற ஒரு விஷயமே அவர்கள் அகராதியில் இல்லை. அவர்களிடம் எனது உடைந்த அரபியில் சொல்லி விளங்க வைத்தபின்னர் அவர்களே கடைக்கு அழைத்துச் சென்று பிலாபில் என்றழைக்கப்படும் வடைபோல ஒரு வஸ்துவை ( மத்திய கிழக்கில் நிறைய கிடைக்கும்) ஈராக்கிய ரொட்டியில் சுருட்டி சில தக்காளி துண்டுகளும் வெள்ளரிக்காயும் இட்டு தந்தனர். ஈராக்கிய தேனீர் முதல் சுவைத்தலிலேயே பிடித்துப் போயிற்று. எனவே எப்போது வெளியே கிளம்பினாலும் ஒரு கடையில் அடுத்தடுத்து இரு தேநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

சைவ சாப்பாடு வேண்டும் எனக் கேட்க வேண்டுமெனில் சில வழிகள் உள்ளன.

மாஃபி சிக்கன்
மாஃபி மட்டன்
மாஃபி பிஷ்
இதெல்லாம் கேட்டபின்னர் ஏதேனும் ஒன்று கொடுப்பார் அதற்க்கு முதலில் இருந்து அந்த மூன்று கேள்விகளையும் கேட்க வேண்டும்.. அவரும் மாஃபி..மாஃபி என்பார். அதன்பின்னர் குறைந்த பட்ச நம்பிக்கையுடன் சாப்பிடலாம்.

சமீபத்தில் குஷாரி என்றழைக்கப்படும் எகிப்திய சைவ உணவைக் கண்டுபிடித்திருக்கிறேன் அடுத்தமுறை இராக் செல்லும்போது அதைச் சாப்பிட்டாலே போதும் .

சீஷா என்றழைக்கப்படும் புகைப்பிடித்தல் அங்கு பிரசித்தம் குடும்பத்துடன் வந்து தேநீருடன் சீஷா வை புகைத்துவிட்டு அங்கேயே சாப்பாடும் சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள்.

நானும் சுவைத்து வைத்தேன். டபுள் ஆப்பிள் மற்றும் மின்ட் எனக்குப் பிடித்தது. எலைச்சியை ( ஏலக்காய் சுவை ) சுவைக்க முடியவில்லை.

மாலை நேரத்தில் புல்வெளியில் மூன்று நான்கு பேர்களாக அமர்ந்து கொண்டு சீஷாவைப் புகைப்பதே ஒரு அலாதியான அனுபவம். கத்தாரிலும் அபுதாபியிலும் பார்த்திருக்கிறேன் ஆனால் அவையனைத்தும் குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து புகைப்பதாக இருக்கும். சூக்குகள் எனப்படும் உள்ளூர் சந்தைகளில் கிடைக்கும். ஆனால் நாமெல்லாம் சென்று அமர்ந்து சாப்பிட நமக்கு பிடிக்காது.

உணவு

இராக்கிய ரொட்டிதான் எல்லாவற்றிற்ற்கும் அடிப்படை. சுட்ட மாமிசம் தான் இவர்களுக்குப் பிடித்த உணவு. மீனைப் பிடித்து அதை நடுவில் கீறி புத்தகத்தைப் பிரிப்பது போல பிரித்து விடுகிறார்கள் அதை தீயில் வாட்டி சாப்பிடுவது, பர்பெக்யு, கபாப் இவைகள்தான் பெரும்பாலும் கிடைக்கிறது.

காப்பி என்றாலே கடும் காபிதான். பால் ஊற்றி, சர்க்கரை பொதுக் கொண்டுவா என்றால் அதை எவ்வளவு மோசமாகச் செய்ய முடியுமோ அவ்வளவு மோசமாக செய்து தருகிறார்கள். கடும் காப்பியைக் குடிக்கும் தைரியம் புறப்படும் வரை வரவில்லை. ஒரே ஒருமுறை ஷெராட்டன் லாபியில் இராக்கிய பாரம்பரிய காப்பியைக் குடித்தேன். வேப்பங்கோட்டையை அரைத்து அதை டிகாக்ஷன் செய்தது குடித்தால் எவ்வளவு சுவையாக இருக்குமோ அவ்வளவு கசப்பு சுவை. 5 டாலரை அன்பளிப்பாக வாங்க கொண்டனர்.

சமோசா கிடைக்கிறது. அனால் அவைகள் அனைத்தும் மீன் அல்லது கோழியை பூரணமாக வைத்துச் செய்கிறார்கள். மாடு, ஆடு பூரணமாக வைத்த சமூசாக்களும் உண்டு.

இதுதவிர மாட்டுக்கறியை அல்லது ஆட்டுக்கறியை நைசாக அரைத்து அதை கம்பியில் கோர்த்து அனலில் வாட்டி செய்யப்படும் கபாப்கள் பிரசித்தம். தொட்டுக்கொள்ள வெள்ளரிக்காய், எலுமிச்சம்பழம், கபாப்ப் செய்த தக்காளி, உப்பு தரப்படும். அதை பக்குவமாக சேர்த்து நாம் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியது. எனது நண்பரும் கம்பெனியில் சகாவுமான ஒருவரும், பஸ்ராவில் அறிமுகமான திருச்சியைச் சேர்ந்த நண்பர் ஒருவரும் சாப்பிட்டுவிட்டு அருமை என்றனர். இந்தக் கடையில் சாப்பிட்டு முடித்ததும் நீங்கள் இந்தியர்கள் உங்களிடம் பணம் வாங்க மாட்டேன் என அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் வற்புறுத்தி பணம் கொடுத்து வந்தோம்.


இந்திய தூதரகம்.

பாக்தாதின் ஒதுக்குப் புறத்தில் ஒரு பிரம்மாண்டமான பழைய மாளிகையில் இந்திய தூதரகம் இயங்குகிறது. உள்ளே சென்றுபார்த்தால் ஒரே அதிர்ச்சி. ஒரு இந்தியர் கூட இல்லாத முதல் இந்திய தூதரகத்தை அப்போதுதான் பார்கிறேன். மொத்தம் ஆறுபேர், தூதரையும் சேர்த்து. தூதுவர் இந்தியாவில் விடுமுறையில். இன்னொருவர் வெளியூர் பயணம். இன்னும் இருவர்வரவில்லை. மற்ற இருவர் இராக்கியர்கள். அவர்கள்தான் தூதரகத்தை நடத்துகின்றனர். இந்தியன் என்றதும் அவர்களுக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் இந்திய கம்பெனிகள் குறித்த தகவல்களையும் தந்தனர்.

இந்திய தூதரகத்தின் மதிப்பின்படி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இந்தியர்கள் இருக்கலாம். முறையாக சரிபார்க்கப்படாத தகவல். தூதரகத்தின் முக்கிய பனி என்பது மருத்துவத்திற்க்காக இந்தியா செல்லும் இராக்கியர்களுக்கு விசா வழங்குவது. எப்போதாவது வரும் இந்தியர்களின் கடவு சீட்டை புதுப்பித்தல் இதுதான். நான் சென்றிருந்தபொழுது நமது தேசியக்கொடி கிழிந்திருந்தது. நான் அதை மாற்றும்படி வேண்டினேன். நான் கிளம்பும் முன்னரே புதுக்கொடி மாட்டப்பட்டு விட்டது.

நான் ஊரில் இருந்து கிளம்பி நாலாவது நாள் இந்திய தூதரகம் சென்றேன். அவர்கள் கொடுத்த தகவல்படி ஒரு இந்திய கம்பெனியின் மேலாளருக்கு போனில் நான் பாக்த்தாத்ன் வந்திருப்பதையும் , நானும் ஒரு இந்தியகம்பெனியைச் சேர்ந்தவன்தான் என்றதும் மதிய உணவுக்கும் சந்திப்புக்கும் அழைத்தார். கிட்டத்தட்ட நான்கு நாட்களில் நான் பார்த்த முதல் இந்தியர் அவர். மலையாளி. நல்ல சாப்பாடு உங்களுக்கு கிடைத்திருக்காது. இருங்கள் சமைக்கிறேன் என சமைத்து உணவு பரிமாறினார். அருமையான உணவு. அவர் சில தகவல்களை தந்தார்

இந்திய தூதரின் வீட்டிலேதான் இதர அலுவலர்களும் தங்கி இருக்கின்றனர். ஒரு ஆடிட்டர் கம்பெனியை பார்க்கச் செல்லும்போது ராணுவத்தினர் அழைத்து, உங்க நாட்டு தூதுவர் வீடு இதுதான் என தகவல் தந்தனர். அதனால் அங்கிருந்த அலுவலர்களைப் பார்க்க முடிந்தது. இந்திய அரசின் கட்டளைப்படி அவர்கள் தேவையின்றி வெளியே நடமாடக்கூடாது என உத்தரவிருப்பதாலும் இராக்கிய அரசாங்கம் அவர்களை பாதுகாப்பு வண்டிகள் இன்றி வெளியே செல்லக்கூடாது என சொல்லி இருப்பதாலும் அவர்கள் வேலை மற்றும் தங்கல் எல்லாம் அந்த வீட்டுக்கு உள்ளேதான். கிட்டத்தட்ட அறிவிக்கபடாத சிறை வாசம்.

அரசு அலுவலகங்கள்.

மத்திய கிழக்கில் எல்லா அரசு அலுவலகங்களும் கிட்டத்தட்ட ஐந்து நட்சத்திர விடுதிகள் போலிருக்கும். ஆனால் பாக்தாத்தில் மிகப் பழைய கட்டிடங்கள். நம்மூரில் ஒருகாலத்தில் இருந்த கதவு போல திறந்து வெளியே வரும் லிஃப்டுகள்.

எல்லோரும் மிக அன்புடனும், பொறுமையுடனும் பதில் அளித்தனர் ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒருவராவது ஆங்கிலம் தெரிந்தவராக இருப்பார் அவர்தான் நமக்கு அறிவிக்கபடாத மொழிபெயர்ப்பாளர். நமக்கு வேண்டிய தகவல்கள் யாரிடம் இருக்கும் என அவரே அழைத்துச் சென்று அவருக்கு அரபியில் விளக்கி நமக்கு தேவையானதை செய்து தருகிறார்


லஞ்சம்

இராக்கில் கதவை திறந்து விடுவதில் தொடங்கி, காண்ட்ராக்ட் வரை பணம் இல்லையெனில் எதுவும் நடப்பதில்லை. கம்பெனி ஆரம்பிக்க எல்லா தாஸ்தாவேசுகளும் இருந்தாலும் போதாது. சரியான ஏஜெண்டும் பணமும் முக்கியம். எங்கள் கம்பெனியின் கிளையை பதிவு செய்ய ஒரு எஜெண்டைப் பிடித்திருந்தோம் நான் அங்கு செல்வதற்குள் எங்கள் கம்பெனியின் பதிவு எங்கள் கம்பெனியின் ஆட்கள் இன்றியே நடந்து முடிந்துவிட்டது. எல்லாம் பணம் செய்யும் மாயம்

காண்ட்ராக்ட் வேணுமா என கூவி விற்காத குறைதான். அவ்வளவுதூரம் ஊழல் புரையோடிப்போயிருக்கிறது. ஆனால் அதெல்லாம் தவறே இல்லை என நம்பவைக்கப்பட்டிருக்கிறது.. அல்லது வாழ்க்கை முறையை மாறிப் போயிருக்கிறது. டாக்சியில் சென்றால் பில் தரும்போது அவரது கையொப்பம் மட்டும் இட்டு சீட்டை உங்களிடமே தந்துவிடுவார். நீங்கள விரும்பிய தொகையை பூர்த்தி செய்து கொள்ளலாம். பெரும்பான்மையான கடைகளில் டாக்சிக்களில் பில் தரும் பழக்கமே இல்லை.

இராக்கின் பாக்தாத மற்றும் பஸ்ரா நகரங்கள்

கிட்டத்தட்ட காலத்தால் உறைந்துபோன நகரங்களாக இருக்கின்றன. புதிய பெயின்ட் அடித்த ஒரு கட்டிடம் கூட காணக் கிடைக்கவில்லை, அரசு அலுவலகம், ஹோட்டல், தியேட்டர், தனியார் கட்டிடங்கள் எல்லாம் ஒரே மாதிரி அழுக்கடைந்து இருக்கின்றது. புதிய மால்கள் கட்டப்பட்டு வருகிறது. தற்போதைக்கு பெரிய மால் எனில் மேக்சிமால் எனப்படும் துனிக்கடைதான்.

கிட்டத்தட்ட எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றது இந்திய பாஸ்மதி அரிசியிலிருந்து உப்பு, புளி, மிளகாய் என எல்லாம். சமைக்க தெரிந்துவிட்டால் ஹோட்டலில் சாப்பிடுவதில் 10ல் ஒரு பங்குகூட செலவாகாது.

குடிதண்ணிர் எனில் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர்தான். 500 மில்லி லிட்டர் ஹோட்டலில் ஒரு டாலர். 12 பாட்டில்கள் வெளியில் கடைகளில் 2 டாலருக்கு கிடைக்கிறது. இது தவிர 20 லிட்டர் கேனிலும் கிடைக்கிறது. ஆனால் அதன் தரம்தான் சந்தேகமாக இருக்கிறது.

மின்சாரம் என்பது ஒரு நாளைக்கு 2 மணி நேரம்தான். அதனால் பெரும்பாலும் எல்லாருடைய வீடுகளிலும் ஜெனரேட்டர் வசதியும் இன்வேர்த்டார் வசதியும் உண்டு . இதுதவிர தெருவுக்கு ஒருவர் பெரிய ஜெனரேட்டர் வாங்கி விட்டிற்கு 10 ஆம்பியர் என சப்ளை செய்து சம்பாதிப்பவர்களும் உண்டு. 10 ஆம்பியர் ஒரு நாளைக்கு 10 டாலர். மாதம் 300 டாலர். 22 மணி நேரம் சப்ளை கிடைக்கும் 2 மணி நேரம் அரசாங்கத்தின் சப்ளை.

பாக்த்தாதிலும் பாஸ்ராவிலும் கிடைக்கும் தண்ணீரில் குளிக்க முடியாது அவ்வளவு உப்பு. ஆனால் அதில்தான் குளித்தோம். இவ்வளவு வசதிகள் இருந்தும் எண்ணெய்வளம் இருந்தும் மக்கள் தண்ணிருக்கு பெரும் பணம் செலவு செய்ய நேரிடுகிறது.

சாலைகள் எல்லாம் எந்த விதிமுறைக்கும் அடங்காத வாகன ஓட்டுனர்களால் ஆளப்படுகிறது. போக்குவரத்து காவலர் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.பெரும்பாலும் சீனாவில் மற்றும், இரானில் தயாரிக்கப்பட கார்கள் டாக்சிகளாக ஓடுகின்றன. டாக்சிக்காரர்கள் நீங்கள் பெசும்விதததி வைத்து உங்களுக்கு விலை சொல்வார்கள். பக்கத்து தெருவுக்கு 50 டாலர்கள் வாங்குபவர்களும் உண்டு ஒரு நாள் முழுக்க வாடகையாக 50 டாலரில் வருபவர்களும் உண்டு.

கம்பெனிகள்.

உலகின் எண்ணெய் கம்பெனிகள் அனைத்தும் இராக்கில் உள்ளன. இனி, டோட்டல், காஸ்ப்ரோம், எக்சான் மொபில், சி.என்.பி.சி., மற்றும் அதன் குட்டிக் கம்பெனிகள், பெட்ரோனாஸ், ஷெல் எல்லாம். அவர்களது இராக் அலுவலகம் துபாயில் இருக்கும். சிறு, சிறு அலுவலகங்களை மட்டும் அமைத்துக் கொண்டு இராக்கில் செயல்படுகின்றனர். எண்ணெய் துரப்பனப் பணிகள் மற்றும் அதன் சற்று வேலைகள் அனைத்தும் அவர்களால் செய்யப்படுகிறது. அவர்களுக்குக் கீழே வேலைசெய்பவர்களுடந்தான் எங்கள் வேலை.


இது தவிர, மொகமது என்ற இராக்கிய நண்பரும், கந்த ராஜ் என்ற திருச்சிக்கார நண்பரும் இராக்கில் கிடைத்தனர் இதுதவிர எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்புகொள் என நம்பரும் இமெயிலும் அளித்த நண்பர்கள் அதிகம்.

பயத்துடன் புறப்பட்டு மிக்க மகிழ்வுடன் திரும்பி வந்தேன், இராக்கிலிருந்து. வந்தவுடன் இராக் தூதரகம் சென்று புது விசாவுக்கு பாஸ்போர்ட்டைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். 04.11.2012 காலையில் எனது இறக்கிய அனுபவங்களை மகிழ்வை தூதருக்கு கடிதமாய் எழுதித்தந்தேன். 3 மாதத்திற்கு பலமுறை சென்று வருவதற்க்கான விசாவை வழங்கியுள்ளார். இராக் சென்ற பின்னர் மேலும் மூன்று மாதம் நீட்டித்துக்கொள்ளவும் தகவல் அனுப்பி விடுவதாக சொல்லி இருக்கிறார்.

மீண்டும் நவம்பர் மாத இறுதிக்குள் இராக்கில் வீடு எடுத்து தங்க ஆரம்பிப்பேன் என நினைக்கிறேன். இராக் வந்தா அவசியம் எங்க வீட்டுக்கு வரணும்.

ஜெயக்குமார்
மற்ற படங்கள் இங்கே பார்க்கலாம் :

நிச்சயம் வருகிறேன், அங்கே இட்லிவடை கிடைக்குமா ?


21 Comments:

Anonymous said...

நன்றாக இருக்கிறது ஜெயக்குமார். கொஞ்சம் ஹரன் பிரசன்னா பாணி நடையைத் தவிர்ப்பது நல்லது. எனெக்கென்னவோ ரெண்டு பெரும் ஒரே நடையில் எழுதுற மாதிரி தோணுது. :-)


-ந.

Sadagopan said...

ஈராக் பற்றிய கட்டுரை மிக அருமையாக உள்ளது. அமெரிக்கப் பிடியில் இருந்து முழுமையாக விடுதலைப் பெற்ற பிறகு என்னவாகும் ஈராக்?

Anonymous said...

/ அமெரிக்கப் பிடியில் இருந்து முழுமையாக விடுதலை...*/

முதலில், அமெரிக்கப் பிடியிலிருந்து இராக் விடுதலையாகி விடுமா?

ராஜனுக்கு கனவு கொஞ்சம் கூடுதல்தான். :-)

அது கிடக்கட்டும். ஒட்டு போட்டாச்சா இல்லையா? மறந்து கிறந்து ராம்னிக்கு போட்டுடாதிங்க.

-ந.

Anonymous said...

அமெரிக்க தேர்தல்...

எளவெடுத்த ராம்னியைக் காட்டிலும் என்னறிவில்
ஓரளவுக்கு உயர்ந்தவன் ஒபாமன்.

என்பது "கிள்ளுவன்" வாக்கு. போட்டி மிகவும் கடுமையாகத்தான் இருக்கிறது.

அனேகமாக லம்பாடி லுங்கி கிழியவும் வாய்ப்பிருக்கிறது! எப்படியோ, இன்னும் ஏழெட்டு மணி நேரத்தில் தெரிந்துவிடும். பார்க்கலாம்.

அர அல said...

Very nice

Shankari said...

Iraq - never imagined that people over there would smile!! :)
Well written expecting more of your experiances. Wishing you safe n happy time in Iraq!

Shankari said...

Iraq - never imagined that people over there would smile!! :)
Well written expecting more of your experiances. Wishing you safe n happy time in Iraq!

ரிஷபன்Meena said...

அருமையான நடையில் பயணக் கட்டுரை வந்திருக்கிறது.

ஆமை நுழைந்த வீடு போலத்தான் அமெரிக்கா நுழைந்த நாடும்.

வெள்ளைக்காரர்கள் இருந்த நாடுகளில் கொள்ளை அடித்திருந்தாலும் கூட கொஞ்சமாவது அவற்றை மேம்படுத்தி விட்டுச் சென்றார்கள். அமெரிக்கர்கள் நுழைந்தால் உள்ளதையும் சீரழித்துவிடுகிறார்கள்.

poovannan said...

சுத்த சாகபட்சிநியான எனக்கு

எந்த பாலூட்டும் விலங்கினமும் (mammals )பாலை தன குட்டிகளுக்காக தான் தருகிறது .குட்டி போடாமல் பால் கிடையாது. ஆண் கன்றாக இருந்தால் குட்டியை விற்று விட்டு,வைக்கோல் பொம்மை செய்து ,பெண் கன்றாக இருந்தால் சில நொடிகள் பால் சுரப்பதற்காக கன்றை மடியை சப்ப விட்டு பின் வலுக்கட்டாயமாக பிரித்து கறக்கப்படும் பாலை குடித்து விட்டு சைவம் என்று சொல்லி கொள்வது நகைச்சுவை தான்

கானகம் said...

ந - ஹரன்பிரசன்னா பாணியா ? :-))

சடகோபன் : இராக்கிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டுவிட்டது. நான் சென்றுவந்தது அமெரிக்கர்கள் இல்லாத இராக்.

ரிஷபன் : ஆமை புகுந்த உவமை சரிதான். இராக் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது, எந்த வளர்ச்சியும் இன்றி.

பூவண்ணன் :- :-) நன்றி. நான் பால் சாப்பிடும் அசைவமாக இருந்துவிட்டுப் போகிறேன்.

Anonymous said...

ஜெயகுமார் ”சுவையான” பதிவு. ஈராக் நமக்கு அவ்வளவாகத் தெரியாத பிரதேசம். நன்றி

அனானி: சடகோபன் என்ற பெயரில் எழுதியிருப்பது நான் அல்ல ஆகவே எனக்கு கனவுகள் ஏதும் இல்லை என்பதை அறிக :) இருந்தாலும் அமெரிக்க சோல்ஜர்கள் அங்கிருந்து வெளியேறி விட்டார்கள் என்பது உண்மையே.

ஓட்டுப் போட்டு விட்டேன். நான் ஓட்டுப் போட்ட ஆள் ஜெயித்து 44வது பிரசிடென்ட்டாகவும் ஆகி நேற்று எனக்கு நன்றி வேறு சொன்னார் (ஹி ஹி டி வியிலதான் :)

ச.திருமலைராஜன்

Anonymous said...

/ ந - ஹரன்பிரசன்னா பாணியா ? :-)) */

கொழ்ழம் மழக்கமா இருக்கிழப்போ எழதிழ்ழேன்....மழ்ழிச்சுக்கோ...இழ்ழா?...

-ழ.

cho visiri said...

Kanagam said....

//பூவண்ணன் :- :-) நன்றி. நான் பால் சாப்பிடும் அசைவமாக இருந்துவிட்டுப் போகிறேன்.//

First class comment, sir/madam. Congratulation. I could not control laughing aloud on seeing this very lovely comment.

cho visiri said...

Kanagam said....

//பூவண்ணன் :- :-) நன்றி. நான் பால் சாப்பிடும் அசைவமாக இருந்துவிட்டுப் போகிறேன்.//

First class comment, sir/madam. Congratulation. I could not control laughing aloud on seeing this very lovely comment.

ஹரன்பிரசன்னா said...

கட்டுரையை படித்துவிட்டு திட்டலாம் என்று வந்தால், ஒருவர் என் பாணி என்று சொல்லி என்னை மூட் அவுட் ஆக்கிவிட்டார். ந - உங்க தலைல இடி விழ.

R. J. said...

I have heard my colleague's experience when he visited the country immediately after the war, when our company also tried to get a share (read 'loot') in the rehabilitation of the country. There were oil spills all over and even the 5-star hotel was under the army. (We didn't get any project as the bribe amount would have equalled the contract value and paid in advance!)

On reading the article fully, I guess there are two good reasons for the Iraqis to welcome Indians.- 1. Indians won't shy from paying or receiving bribes and they are used to real big scandals, 2. They won't complain about lack of electricity (Particularly they would have realised Mr. Jeyakumar hails from TN!).

By the way, is the person 'tightly arrested' by two army / police / security personnel in the last photo Mr. Jeyakumar?!

-- R. J.

poovannan said...

நண்பர் வினோதகன் முகநூலில் ஹிந்தி படிக்காததால் வெளி மாநிலங்களில் சென்று கஷ்டபடுவதை பற்றிய பதிவில் எழுதிய சிந்தனை நாம் அனைவரும் நினைத்து பார்க்க வேண்டிய ஒன்று
மொழியை கூட ஓரிரு மாதங்களில் கற்று கொள்ளலாம்.ஆனால் இந்த உணவு பழக்கம் தரும் தொல்லை மாற்றமுடியாத குறையாக மாறி விடுகிறது.அதனால் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஆடு,மாடு ,கோழி,பாம்பு என அனைத்தையும் உண்ணும் பழக்கத்தை கற்று தர வேண்டும் என்று
கறி சாபிடாதவர்களின் பயண கதைகளில்,கட்டுரைகளில் பெரும்பகுதி அவர்களின் உணவை தேடி அலைந்த கதையாக தான் இருக்கும்.ஒருவரின் தனி நம்பிக்கையான விமானத்தில் ஏற மாட்டேன்,கடலை தாண்ட மாட்டேன் என்ற பழக்கத்தினால் அவர் எப்படி முப்பத்திநாலு பேருந்து,கார் ,நடை மூலம் தான் சென்று அடைய வேண்டிய இடத்தை கடலை தாண்டாமல்,விமானத்தில் ஏறாமல் அடைந்தார் என்பதை படிக்கும் விமானத்தில் பயணம் செய்பவர்கள்,கடல் தாண்டுபவர்களுக்கு அது எவ்வளவு ஆச்சரியத்தை கொடுக்கும் என்பதை அவர்கள் பக்கம் இருந்து பார்த்தால் புரியும்

Anonymous said...

/ ந - உங்க தலைல இடி விழ.*/

படித்தாயா உடன்பிறப்பே
பார்ப்பனர் சொல்லுவதை?
என் தலையில்
இடி விழ வேண்டுமாம்!

கைபர் கணவாய் வழியாக
களவாணித்தனமாய் வந்தவர்கள்
பச்சைத் தமிழனைப் பார்த்து
இதுவும் கூறுவார்கள்
இன்னமும் ஏசுவார்கள்!

இதைக் கண்டு,
கோபம் கொண்டு,
உடன்பிறப்பே நீ,
ஆட்டோ பிடிக்காதே.
பேட்டை பேட்டையாய்
பிரசன்னாவைத் தேடாதே.

அண்ணா காட்டிய அறவழியில்
அகப்படும்போது அடி கொடுப்போம்.
இப்போதைக்கு
எச்சரிப்போம்.
"மவனே டாஆஆஆஆஅய்....!"

இப்படிக்கு,
'உன் பேச்சு கா' என்கிற உ.கா.

Arun Ambie said...

இராக்கில் இவ்வளவு நல்ல விஷயங்களா? பேஷ் பேஷ்.... RJவின் sarcasm மிக அருமை. அதோடு உண்மையும்.
// முப்பத்திநாலு பேருந்து,கார் ,நடை மூலம் தான் சென்று அடைய வேண்டிய இடத்தை கடலை தாண்டாமல்,விமானத்தில் ஏறாமல் அடைந்தார் என்பதை படிக்கும் விமானத்தில் பயணம் செய்பவர்கள்,கடல் தாண்டுபவர்களுக்கு அது எவ்வளவு ஆச்சரியத்தை கொடுக்கும் என்பதை அவர்கள் பக்கம் இருந்து பார்த்தால் புரியும் //
அந்தமான் காட்டுப் பக்கம் சில மனிதர்கள் மனிதக்கறி சாப்பிடாதவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம்....
@பூவண்ணன்: ஆடு மாடு கோழி பாம்பு இவை சாப்பிடக் கற்றுத்தர வேண்டும் என்கிறீர்கள். பன்றியை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள்?

Anonymous said...

நல்ல பதிவு..ஈராக் தமிழில் அதிகம் பேர் எழுதாத நாடு

ச.சங்கர்

Rathnavel Natarajan said...

Arumai