பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 23, 2012

ஷிட்! - பேஸ்வதா வில்சன் மற்றும் பாஷா சிங்

முழுமனதோடு தாழ்ந்த குரலில், இதுவொரு தேசிய அவமானம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். மன்மோகன் சிங், பிரதீபா பாட்டீல் முதல் முகேஷ் அம்பானி மற்றும் இப்போது புதிதாக தலித்களுக்காக பேச வந்திருக்கும் அமீர் கான் என்று, எண்ணிக்கைக்குக் குறைவில்லாமல் இந்தத் துன்பக் கடலில் திருமுழுக்குப் போட வந்துகொண்டேயிருக்கிறார்கள். என்னதான் இது அவமானம் என்று பெரிதாக உணரப்பட்டாலும், துப்பரவுத் தொழிலாளர்கள் தலையில் எடுத்துச் செல்லும் குப்பைக் கூடையின் எடை குறையவேயில்லை.

தேசிய அவமானம்

தேசிய அவமானத்திற்கு தேசம் முழுதுமே பொறுப்பு; ஆனால் இதற்கு யாரும் பொறுப்பெடுத்துக் கொள்ள தயாராயில்லை. முப்பது வருடங்களுக்கு முன், எங்கள் கண்ணியத்தைக் காக்க நாங்கள் போராடத்தொடங்கிய போது, இப்படியொரு மனிதத் தன்மையற்ற வழக்கம் இருப்பதும் அதன் வீச்சும் பல மக்களுக்குத் தெரியாது என்று நினைத்திருந்தோம். தங்களது கொல்லையில் தினமும் காலையில் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்கள் கையால் மனித மலத்தை அகற்றி அதை தலையில் ஏந்திக் கொண்டுபோய் அப்புறப்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது என்று நினைத்திருந்தோம். இந்த காட்டுமிராண்டித்தனமான வழக்கத்தை அவர்களுக்கு உணர்த்த முடியும் என்று நாங்கள் நினைத்தோம். அதுவே எங்கள் பிரசாரங்களில் மையப் புள்ளியாக இருந்தது. ஆனால், அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள், சட்ட வல்லுநர்கள், அறிவுஜீவிகள் என்று பல தரப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகும் கூட ஒன்றும் மாறவில்லை. மனிதர்கள் துப்பரவுச் செயலில் ஈடுபடுவதை துடைத்தெறிய வேண்டும் என்ற எங்கள் இலக்கு இன்னும் அப்படியே தான் இருக்கிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின் மூலம், எத்தனை உலர் கழிவறைகள் இருக்கின்றன என்ற புள்ளிவிபரம் நம்மிடம் இருக்கிறது. ஆனால், தங்களுடைய ஆரோக்கியம், மானம் மரியாதை எல்லாவற்றிலும் சமரசம் செய்து கொண்டு மற்ற மனிதர்களின் மலத்தைச் சுமப்பவர்களுக்காக, மாற்றத்தின் சக்கரம் கொஞ்சம் கூடத் நகரவில்லை. இன்றைக்கு இது அறியாமை இல்லை; இதைப் பற்றிய விழிப்புணர்வு என்பது நம்மிடையே பல காலமாக வேருன்றியிருக்கும் சாதிய மனப்பான்மையால் தோற்கடிக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் வேலைகள் சுத்தமானவை அசுத்தமானவை என்று பிரிக்கப்பட்டு, சாதிய நிலைகளில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு அசுத்தமான வேலைகளே விதிக்கப்படுகிறது.

எப்போது நம்முடையை மனநிலையை மாற்றிக் கொள்கிறோமோ அப்போது தான் நம்முடைய கழிப்பறைகளையும் மற்ற முடியும். இந்த காரணத்தால் தான், அடுத்தடுத்து வந்த ஜனாதிபதிகளும் பிரதம மந்திரிகளும் உறுதியளித்த பின்னும் கூட இந்த விஷயத்தில் எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று கூட, என்றைக்கு மனிதர் கழிவுகளை மனிதர் சுத்தப்படுத்தும் என்றைக்கு ஒழியும் என்று எதிர்பார்க்கலாம் என்பதை இந்திய அரசாங்கம் சொல்லவில்லை. கொஞ்சம் கூட வெட்கப்படாமல் காலக்கெடுக்களை தொடர்ந்து மீறிக் கொண்டேயிருக்கிறோம். தன்னுடைய லட்சக்கணக்கான குடிமக்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்வை வழங்க வேண்டிய கடமையில் இந்நாடு தோல்வியடைந்திருக்கிறது.

இன்றைக்கும் அன்றைக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம், அன்றைக்கு நாம் இதைப் பற்றிப் பேசவில்லை என்பது மட்டுமே. இன்றைக்கு மனிதர்கள் மலம் அள்ளுவது செய்தியில் வருகிறது, தொலைக்காட்சிகளில் விவாதிக்கப்படுகிறது. அரசாங்கங்கள் கூட இதில் தீவிரம் காட்டுகிறார்கள். ஆனால், இது எல்லாமுமே வாய்ப்பாயாசம் வைப்பதோடு நின்றுவிடுகிறது. கைகளால் துப்பரவு செய்வதை ஒழிக்கவும் அதைச் செய்யும் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் 2011-12க்கான நிதியாண்டில் மத்திய அரசாங்கம் ரூ.100 கோடி ஒதுக்கியிருந்தும், அதிலிருந்து ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யப்படவில்லை என்பதை வேறு எப்படிச் சொல்வது? துப்பரவுத் தொழிலாளர்கள் மற்றும் அசுத்தமான பணிகளில் ஈடுபடுபவர்களின் குழந்தைகளின் மெட்ரிக் படிப்புக்கு முந்தைய வகுப்புகளுக்கான உதவித்தொகை பயன்படுத்தப்படாமல் இருப்பதும், வேறு திட்டங்களுக்கு திருப்பிவிடப்படுவதும் இன்னும் மோசம். கோரிக்கை அதிகம் இல்லாததைக் காரணம் காட்டி திட்டக்கமிஷன் இத்திட்டங்களுக்கான தொகையை உயர்த்த மறுத்துவிட்டது. ஒரு அதிர்வு கூட இல்லை; ஒரு கேள்வி கூட எழுப்பப்படவில்லை. இருக்கும் நிலையை அப்படியே தொடரவும் சாதிய வரிசையை அப்படியே வைத்திருக்கவும் அமைப்பு எவ்வளவு அழகாக செயல்படுகிறது?

1993ல் இயற்றப்பட்ட சட்டம்

மலம் அள்ள தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக 1993லேயே ஒரு பொதுச் சட்டம் இருக்கிறது. பத்தொன்பது வருடங்களுக்கு பின் இன்றைக்கு, ஒரு புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்திருக்கிறோம். இந்த பத்தொன்பது வருடங்களில் என்ன நடந்தது? ஒருவர் கூட அந்தச் சட்டத்தில் கீழ் தண்டிக்கப்படவில்லை. அந்த சட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருந்தது உண்மை. ஆனால் ஒருவர் கூட அச்சட்டத்தின் கூட தண்டிக்கப்படவில்லை என்பதற்கு அவ்வோட்டைகள் காரணம் இல்லை. துப்பரவுத் தொழிலாளர்களுக்கு ஏன் எந்த மறுவாழ்வும் அமைத்துக் கொடுக்கப்படவில்லை? சட்டமியற்றுபவர்களுக்கு உறுதியும் நம்பிக்கையும் இல்லை என்பதே உண்மை.

மனிதர்களை மிகவும் கேவலமாக நடத்தும் இத்தகைய வழக்கத்திற்கு எதிராக ஒரு உறுதியான தடுப்பு வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. மக்களுக்கு ஆதரவாக இயற்றப்படும் உறுதியான ஒரு சட்டம் மற்றங்கள் ஏற்படுத்துவதற்கு உதவும். ஆனால், முதலில் நமது அரசாங்கங்கள் உண்மையை மறுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மத்திய மாநில அரசாங்கங்கள் இணைந்து காலக்கெடுவுடன் கூடிய ஒரு திட்டத்தைக் அறிவிக்க வேண்டும். சஃபாய் கர்மாசாரி அந்தோலன் 2003ல் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்த பெட்டிஷனுக்கு பல மாநில அரசுகள், தங்களுடைய மாநிலத்தில் இது மாதிரி ஒரு துப்பரவுத் தொழிலாளியோ ஒரு உலர் கழிவறையோ இல்லை என்று பதில் சொல்லியிருந்தார்கள். இதுவொரு பச்சைப் பொய். 2010ல் எங்கள் அமைப்பு, இந்த கேவலமான வழக்கம் இன்னும் 252 மாவட்டங்களில் இருக்கிறது ஆதாரப்பூர்வமாக நீருப்பிக்கும் அவரை அவர்கள் அந்தப் பொய்யை விடாமல் படித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போதைய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுக்கான அமைச்சகம், இந்தத் அவமானகரமான வேலை எந்தளவுக்கு நாட்டில் இருக்கிறது என்பதை அறிய ஒரு கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தது. கணக்கெடுப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க ஒரு செயற்குழுவையும் நியமித்தது. ஆனால், இதிலிருந்து அரசாங்கம் இந்தப் பிரச்சனையை தீவிரமாக அணுகியது என்று புரிந்துகொண்டுவிடக் கூடாது. செயற்குழுவில் நான்கு அமைச்சகங்கள் இடம்பெற்றன. அவர்கள் அறிக்கை சமர்ப்பித்தபின் நாடெங்கிலும் உள்ல துப்பரவுத் தொழிலாளர்களை அடையாளம் காண, நிதி அமைச்சகம் ரூ.35 கோடி ஒதுக்கியது. இதுவரை எல்லாம் நன்றாக நடந்தது, அதன் பின் பதிமூன்று மாதங்கள் கழிந்தும் ஒரு பேப்பர் கூட நகரவில்லை. இறுதியில், கணக்கெடுப்பைச் செய்ய தகுதியான அமைப்பு எதுவும் சிக்கவில்லை என்பதால் கணக்கெடுப்பை கைவிடுவதாக அறிவித்தது அரசு. நாட்டிலிருக்கும் துப்பரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கண்டுபிடிக்கும் முதல் மற்றும் முக்கியமான செயலை அரசாங்கம் கைவிட்டது.

இப்போது, திடீரென்று அரசாங்கம் சென்சஸ் தரவுகளை கண்டுபிடித்திருக்கிறது. இது இன்னும் ஆச்சரியம், ஏனென்றால் சென்சஸ் தரவுகள் சுகாதாரமற்ற கழிப்பறைகளுக்கு மட்டுமே: நாட்டிலிருக்கும் 7,94,390 உலர் கழிப்பறைகளில் மனிதர்களே மனிதர்களின் மலத்தை சுத்தம் செய்கிறார்கள். இதில் 73 சதவிகிதம் கிராமங்களிலும் 27 சதவிகிதம் நகரங்களிலும் இருக்கின்றன. மேலும் 13,14,652 கழிப்பறைகளிலிருந்து மலம் திறந்தவெளி சாக்கடைகளில் தள்ளிவிடப்படுகிறது. ஆச்சரியப்படும் விதமாக, 4,97,236 கழிப்பறைகளில் மலத்தை சுத்தம் செய்யும் பணியை மிருகங்கள் செய்வதாக சென்சஸ் சொல்கிறது.

இந்த தரவுகளில் இருந்து எத்தனைபேர் கையால் மலம் அள்ளுகிறார்கள் என்பதை எப்படி கணக்கிடுவது? இந்தக் குழப்பம் போதாதென்று, பீகார், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகள், இந்த தரவு எல்லாம் தவறு (அதாவது அம்மாநிலகங்களில் அத்தனை உலர் கழிப்பறைகள் இல்லையாம்) என்று சுப்ரீம் கோர்ட்டில் 2012 அக்டோபர்-நவம்பரில் ஒரு புதிய சான்றை அளித்திருக்கின்றன. எங்கள் அமைப்பு 2010ல் கொடுத்ததும் சரி, இப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்பட்டதும் சரி, எந்தத் தரவுமே சரியாக இல்லையாம். இந்த மாநில அரசுகளிடமும் சரியாண எண் இல்லையென்றால், பிறகு எது தான் சரியான எண்ணிக்கை? சரியான தரவுகளை எப்படித்தான் பெறுவது? புனர்வாழ்வுக்கு எதை அடிப்படையாக எடுத்துக் கொள்வது? இவையெல்லாம் எங்களைப் போன்ற அமைப்புகளை, தங்கள் மாநிலத்திலும் கைகளால் மலம் அள்ளுபவர்கள் இருக்கிறார்கள் என்று அந்த அந்த அரசாங்கங்களை ஏற்றுக் கொள்ளவைக்க தொடர் சட்டப் போராட்டங்களை நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

பாலினம் பற்றிப் பிரக்ஞையில்லாத சட்டம்

விஷயம் இப்படியிருக்க இப்போது நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. பழைய சட்டத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? இது உதவுமா? சொல்ல முடியாது. இந்தச் சட்டத்தில் பாலினம் பற்றிய பிரக்ஞையே இல்லை. எல்லா துப்பரவுத் தொழிலாளர்களும், அரசு அதிகாரிகளும் ஆண்களே என்று கருதுகிறது இச்சட்டம். பெரும்பான்மையான துப்பரவுத் தொழிலாளர்கள் பெண்களாக இருக்கும் நிலையில், இது அபத்தம். புனர்வாழ்வுத் திட்டங்கள், சஃபாய் கர்மாசாரி சமூகத்தில் உள்ள பெண்களுடைய தேவைகள், பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களுக்கு பதில் சொல்லயான வேண்டும்.

அடுத்தது, இந்தச் சட்டம் துப்பரவுத் தொழிலாளர்களை அடையாளம் காண்பது அல்லது ஒரு புதிய கணக்கெடுப்பை நடத்தும் பொறுப்பை உள்ளாட்சி அமைப்புகளிடம் விட்டுவிடுகிறது. இந்த உள்ளாட்சி அமைப்புகள் எப்போதும் மறுப்பு நிலைப்பாட்டிலேயே இருந்ததோடு தவறான வாக்குமூலங்களையும் சுப்ரீம் கோர்ட்டில் வழங்கியிருக்கின்றன. கையால் மலம் அள்ளுபவர்களோ சுகாதாரமற்ற கழிப்பறைகளோ இல்லவே இல்லை என்ற வாதிட்ட மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடமே அந்தக் கணக்கெடுப்பைச் செய்யச் சொல்வது என்ன நியாயம்? இந்த வேலையை, சமூக நீதி அமைச்சகத்துடனும் சமூக குழுக்களின் அங்கத்தவர்களுடனும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடனும் நெருக்கமாக வேலை செய்யும் அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் வடிவமும் செயல்முறையும் எப்படியிருக்க வேண்டும் என்பதை இந்த அமைச்சகம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுவிட்டது.

இந்த சட்டத்தின் நோக்கம் கைகளால் மலம் அள்ளுபவர்களை அக்கொடுமையிலிருந்து விடுவிப்பதாக இருக்க வேண்டும். இந்த கண்ணோட்டத்திலேயே ஆரோக்கியமற்ற கழிப்பறைகளை அடையாளம் கண்டு, அவற்றை அழித்து மாற்றும் வேலையும் செய்யப்பட வேண்டும். சஃபாய் கர்மாசாரி சமூகத்துக்கு பல நூற்றாண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்த தேசம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இது நடக்கவில்லையென்றால் நீதி கிடைத்துவிட்டதாகச் சொல்லவே முடியாது. எந்த ஒரு சட்டமும் முறையான ஆழமான கணக்கெடுப்பு இல்லாமல் செயல்படவே முடியாது. இதை முடித்தபின், சாதிரீதியாகச் செய்யப்படும் இந்த அவமானகரமான செயலை இந்த நாட்டிலிருந்து நீக்க அரசாங்கம் காலக்கெடுவுடன் கூடிய ஒரு செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

“.... எங்களுடைய போராட்டம் அதிகாரத்திற்காகவோ செல்வத்திற்காகவோ இல்லை. இது சுதந்திரத்திற்கான போர். இது மனிதனை பண்படுத்துவதற்கான போராட்டம்” என்ற அம்பேத்காரின் வார்த்தைகளை மனத்தில் ஏற்றிக் கொண்டு, இம்மக்களை இந்த அநியாயத்திலிருந்து விடுவிக்கும் வேலையைத் தொடங்க வேண்டும்.

http://www.thehindu.com/opinion/lead/sht-caste-and-the-holy-dip/article4116247.ece

தமிழில் - நந்தி ( இட்லிவடைக்கு புதிய வரவு )

6 Comments:

Anonymous said...

Sivanesa Chelvan , Pune Writes,

This is what our minister Jayram told , "The brides hereafterwards should not allow men to Thali if there is no
" TOILET " in their houses (i.e. bridegroom's )

poornam said...

டாய்லெட் இல்லாத இடங்களை விட டாய்லெட் இருக்கும் இடங்களிலேயே துப்புரவுத்தொழிலாளர்களின் நிலைமை 1000 மடங்கு மோசம். திறந்த வெளிக் கழிப்பறைகளையாவது பன்றிகள் உதவியுடன் சுத்தம் செய்ய இயன்றது. (எங்கள் ஊரில் பார்த்திருக்கிறேன்.) நவீனக் கழிப்பறைகளில் அடைப்பு ஏற்பட்டாலோ ஸெப்டிக் டேங்குகள் நிரம்பினாலோ இறங்கிச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் சொல்லொணாத துயரம்..... நரகம் ஒன்றிருந்தால் இது தானோ என்று தோன்றும்.
நவீனக் கழிப்பறைகள் ஏற்படுத்தினாலும் போதாது, கையோடு அவற்றைத் தூய்மை செய்யும் பணியை இயந்திர மயமாக்குவதும் அவசியம். துப்புரவுத் தொழிலாளர்களை இந்த பூலோக நரகத்திலிருந்து மீட்காத வரை இந்தியா வல்லரசு ஆகப் போகிறது என்று கனவு காண்பது கூட வெட்கக் கேடு. செயற்கைக் கோள்களுக்கும் ஏவுகணைகளுக்கும் கோடிக்கணக்கில் செலவழிக்கும் தேசம் மனிதனை மனிதனாக வாழ வைக்க வகையற்றிருப்பதற்காக நாம் ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும்.
இரண்டாவது, நவீனக் கழிப்பறைகள் உபயோகப் படுத்துபவர்கள் சிந்திக்க வேண்டியது. நம் நாட்டில் படித்தவர்களுக்கே பொது சுகாதார அறிவு 000000. பொதுக் கழிப்பிடங்களை உபயோகிப்பவர்கள் அதை சுத்தம் செய்பவர்கள் மனிதர்கள் தானே என்று ஒரு நிமிடமாவது எண்ணுகிறார்களா? பஸ் ஸ்டாண்டிலோ, ரயில் நிலையத்திலோ தியேட்டரிலோ இப்படி இருந்தால் கூடப் பரவாயில்லை. கல்விக் கூடங்களிலேயே இதுதான் நிலை. படிக்கிறவர்களுக்கே இந்த அறிவில்லை என்றால் மற்றவர்களை நொந்து என்ன பயன்?
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உள்ள கழிப்பறைகளைப் பார்த்தால் நாளைய சமுதாயத்தின் ஒழுங்கு எந்த லட்சணத்தில் இருக்கிறதென்று தெரியும். கல்விக்கூடங்களில் இந்த அடிப்படை நாகரிகத்தைக் கற்றுத் தராமல் என்ன கிழிக்கிறார்களோ, கம்ப்யூட்டாராவது, புண்ணாக்காவது.... என்று பற்றிக் கொண்டு வரும்.

சிந்திப்பவன் said...

ஒரு நாள் நரகலுக்கும் ஒரு தேவை வந்து அதுவும் விலைபோகலாம்.அன்றுதான் இந்தியர்கள் அவரவர் நரகலை அவர்களே எடுப்பர்.
மற்றபடி பூர்ணம் சொல்வது மிகவும் உண்மை.வெட்ககேடு.
நந்தியின் மொழிபெயர்ப்பு அருமை.
வாழ்த்துக்கள்.

ஜெ. said...

நவீனக் கழிப்பறைகள் எல்லா வீடுகளுக்கும் கட்டாயமாக்கப் படவேண்டும். கிராமங்களில் / இடம் இல்லாதவர்களுக்கு பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டு இலவசமாக உபயோகப் படுத்தவும், பராமரிக்கவும் மாநில அரசுகள் பொறுப்பேற்கவேண்டும்.

என்னால் முடிந்தது - இன்னும் கொஞ்ஜம் ‘வாய்ப் பாயாசம்’ தான்.

-ஜெ.

s suresh said...

மிகவும் வேதனையான விசயம்தான்! அரசாங்கத்தை குறை சொல்வதை விட நாம் இது மாதிரி துணைபோவதை கைவிடலாம். நம் வீட்டு கழிவுகளை அள்ள இயந்திரம் பயன்படுத்த முன்வரலாம்!

மார்கண்டேயன் said...

நான் துப்பிய வாய்ப்பாயாசம் பின் வரும் வலைத்தொடர்பில்: http://markandaysureshkumar.blogspot.in/2010/10/blog-post_24.html