பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 08, 2012

குருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா


குருபீடம் – ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் ஒன்பது கதைகள். ஒவ்வொரு சிறுகதையும் எவ்வித ஜிகினாத்தனமும் இல்லாத எளிமையான எழுத்துக்களாலான பிரம்மாண்டம். தாயின் மடியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கேளிக்கை செய்துகொண்டிருக்கும் ஒரு சிறுமியின் கண்களில் வீதியில் ஊர்வலம் போகும் ஒரு கோவில் யானை ஏற்படுத்திய மனக்கலவரம். தான் பார்த்த தன்னைப் பாதித்த அக்காட்சி ஏற்படுத்திய திகிலைக் குறைக்கும் பொருட்டு எதிர்ப்படும் எல்லோரிடமும் அதனை விவரிக்க முயன்று தோற்றுப்போகும் சிறு குழந்தையாய் இந்தச் சிறுகதைகளைப் பற்றி சில வார்த்தைகள் விளம்ப விழைகிறேன்.


முதல் சிறுகதை தான் “குருபீடம்”. ஒரு பிச்சைக்காரன். பிச்சைக்காரனுக்குரிய எந்தவொரு அம்சத்தையும் விட்டுவைக்காத ஒரு அக்மார்க் சோம்பேறி அழுக்குப் பிச்சைக்காரன். திடீரென ஒருநாள் பவ்யமான இளைஞன் ஒருவன் அவனிடம் வந்து தன்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படிக் கேட்கிறான். குழப்பமடைந்த பிச்சைக்காரன் ஏதேதோ பேசியும் அந்த இளைஞன் அங்கிருந்து நகருவதாகத் தெரியவில்லை. ஒரு ‘டீ’யும் ‘பீடி’யும் வாங்கிவரச் சொல்கிறான். வந்ததும் டீயைக் குடித்துக்கொண்டே அந்த இளைஞனிடம் பேச்சு கொடுக்கிறான். இவன் சும்மா ஏதேதோ சொல்லப்போக அதையெல்லாம் மகா ஞான வாசகங்களைப் போல எண்ணி வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருக்கிறான் அவன் (படிக்கிறவங்களும் தான்).

“அப்போது குரு சொன்னான் : “பேரு என்னான்னு ஒரு கேள்வி கேட்டா – ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு பதில் சொல்றான் பாத்தியா? ஒரு கேள்விக்கு எம்மாம் பதில்!” “

அதுமுதல் ஒரு குருவுக்குச் செய்யவேண்டிய அத்தனை உபச்சாரங்களையும் செய்து இறுதியில் அந்தப் பிச்சைக்காரனை அங்கிருக்கும் அனைவரும் மதிக்கும் ஒரு ‘சாமியா’ராக மாற்றிவிடுகிறான்.

ஒர் இரவு தூக்கம் வராமல் யோசித்துக்கொண்டிருந்த குருவிற்குக் கனவு போல் ஒரு காட்சி தோன்றுகிறது. ஏதோ உண்மையை அறிந்து கொண்டவனாய் அடுத்த நாள் காலையில் தனது சீடனை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறான். ஆனால் சீடன் வரவேயில்லை. உடனே அவனைத் தேடிக்கொண்டு அவனது மடப்பள்ளிக்குச் சென்று அங்கேயும் காணாமல் இறுதியில் அனைவருக்கும் ஒரு செய்தியைக் கூறுகிறான். அதாவது தனக்குச் சீடனாக இருந்தானே, அவன் தான் எல்லாருக்கும் ‘குரு’ என்று.

“...சிஷ்யனாக வந்து உனக்குக் கற்றுத் தந்திருக்கிறான்...அப்போதுதான் நீ வசப்படுவாய் என்று தெரிந்து சிஷ்யனாய் வந்திருக்கிறான். எந்தப் பீடத்தில் இருந்தால் என்ன? எவன் கற்றுத் தருகிறானோ அவன் குரு. கற்றுக் கொள்கிறவன் சீடன். பரமசிவனின் மடி மீது உட்கார்ந்துகொண்டு முருகன் அவனுக்குக் கற்றுத் தரவில்லையா? அங்கே சீடனின் மடியே குருபீடம். அவனை வணங்கு...” எனத் தொடரும் வார்த்தைகள் இக்கதையின் சிறப்புக்கூறு.

இரண்டாவதாக “டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்”. பட்டணத்தில் நல்ல வருமானத்துக்கு வேலை பார்த்துப் பிள்ளைகள் அனைவரையும் கரைசேர்த்துவிட்ட வேதகிரி முதலியார் திடீரென ஒரு மாதம் தங்கியிருக்கப் போவதாகச் சொல்லிக் கிராமத்திலிருக்கும் தன் தாயிடம் வருகிறார். முதலியாரின் பையன் நாள்தோறும் அவருக்குத் தபால் அனுப்புகிறான். (அந்தக் காலத்தில் தபால் அடுத்த நாளே சென்று சேர்ந்துவிடும் எனத் திரு.கடுகு-அகத்தியன் அவர்களும் எழுதியிருந்ததாக ஞாபகம். எப்படி என்று தான் தெரியவில்லை?)

பேரூந்தில் வரும் தபாலுக்காக ஒரு மைல் தூரம் நடந்துவந்து ‘டீக்கடைச் சாமியா’ரின் கடையில் அமர்ந்து பத்திரிகை படித்துக்கொண்டும் அரட்டையடித்துக்கொண்டும் இருப்பார்.

“மொதலியாருக்குப் பட்டணத்திலே என்னாங்க உத்தியோகம்?”
ஒரு வெள்ளைக்கார கம்பெனியிலே மானேஜர் உத்தியோகம்”
“இப்பவும் வெள்ளைக்காரங்க இருக்காங்களா?”
“கம்பெனிங்க இருக்குது”


ஒரு மாதம் கழித்துப் பட்டணத்துக்குப் போவார் என எதிர்பார்க்கப்படும் முதலியார் திடீரென சுப்பராம ஐயரிடம் இருபதினாயிரம் ரூபாய்க்கு விவசாய நிலங்களை விலைபேசுவதைக் கண்டு அதிசயிக்கின்றனர் டீக்கடை நண்பர்கள். தனக்கு வேலை போய்விட்டது என்ற செய்தியை யாருக்கும் தெரிவிக்காமல் மனதுக்குள் புழுங்கிச் சங்கடப்பட்டுக்கொண்டிருக்கும் அவருக்குத் தன் மகனின் முயற்சியால் அதே வேலை கொஞ்ச நாட்களில் திரும்பக் கிடைத்துவிடுகிறது. ஆனால் முதலியாரோ,

“நான் இனிமே இங்கேதான் இருக்கப் போறேன். கண்டவன் காலிலேயும் விழற மாதிரி பல்லிளிச்சி நிக்கிற உத்யோகப் பெரும போதும் – எனக்கு அது வேணாம். அந்த ஆயிரம் ரூபாய்க்கு இங்கே சம்பாதிக்கிற நூறு ரூபாய் சமம். ஐயரே, இன்னிக்கே ரூபாய் இருபதினாயிரம் தர்றேன்...உம்ம கோரைவாய்க்கால்வரை நஞ்சையையும் நல்லாந்தோப்பையும் என் பேருக்குக் கிரயம் பண்ணி வச்சிடும்.. இனிமே எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கு.”

இவ்வாறு வேதகிரி முதலியார் ‘ட்ராக்டர் சாமியா’ராக அவதாரம் எடுக்கிறார்.

மூன்றாவது கதையைக் கடைசியாகக் கதைக்கிறேன் :-)

நான்காவது சிறுகதை “ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது”. பூட்டிக் கிடக்கும் ஒரு வீட்டை நோக்கிப் பயில்வான் போல ஒருவன் வருகிறான். அவர்களைப் பழிதீர்த்துக் கொள்வதற்காகத் திருப்பி அடிப்பதற்காக அங்கே வந்திருக்கிறான் என முதலில் அவன் வருகையைக் கண்டு தாறுமாறாக அச்சம்கொள்கின்றனர் அக்கம்பக்கத்தினர். அங்கிருந்த குழாயடியில் குளித்துவிட்டு பக்கத்தில் இருந்த ஒரு பூட்டிய வீட்டைச் சாவி போட்டுத் திறந்து உள்ளே செல்கிறான் அவன். சிறிது நேரத்தில் பக்கத்து ‘ஆ’த்துச் சிறுமி யாருக்கும் தெரியாதவாறு அவனிடம் வந்து பேச்சு கொடுக்கிறாள்.

“நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா?... உன்னைப் பார்க்கக்கூடாதுன்னு அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா...அம்மா கூடத்திலே படுத்துத் தூங்கிண்டிருக்கறச்சே நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா? திருடிண்டு வந்துடு... அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு...”


அவன் கை நிறைய சாக்லெட்டை வாங்கிவந்து அவளுக்குக் கொடுக்கிறான். அவள் கொஞ்சம் தின்றுவிட்டு மீதியை அப்புறம் வந்து எடுத்துக்கொள்வதாகச் சொல்லி மாடத்திலே பத்திரமாக வைத்துச் செல்கிறாள். இது ஒருபுறமிருக்க, விசாரித்ததில் அவன் அங்கே வாடகைக்குக் குடிவந்திருப்பது தெரிகிறது. அதையறிந்து அங்கிருப்போர் ஆத்திரம் கொள்கின்றனர். ஏனென்றால் அவன் ஒரு திருடன். திருடிவிட்டு அவர்கள் கையாலேயே அடிவாங்கியவன். ஆனால் சற்று நேரத்தில் அங்கு ஆஜராகும் அந்தக்காலனியின் சொந்தக்காரரோ மற்ற எல்லோரையும்போல் அவன் அங்கேதான் இருக்கப்போவதாகச் சொல்லிக் கூட்டத்தைக் கலைக்கிறார்.

எனினும் இந்நிகழ்ச்சியால் அவமானப்பட்ட திருடன் அடுத்தடுத்த நாட்களில் அந்த வீட்டுப் பக்கமே வரவில்லை. காலனிக்காரர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் அவ்வேளையில் அந்த நான்கு வயதுச் சிறுமி பூட்டியிருக்கும் அந்த வீட்டின் திண்ணை மீது ஏறித் திறந்திருக்கும் ஜன்னல் வழியே உள்ளே பார்க்கிறாள்.

“மாடம் நிறைய இருந்த சாக்லெட்டுகளைக் கலங்குகிற கண்களோடு பார்த்தது.
“ஏ, மிட்டாய் மாமா! நீ வரவே மாட்டியா?” என்று கண்களைக் கசக்கிக் கொண்டு தனிமையில் அழுதது குழந்தை”.


ஐந்தாவது சிறுகதை “தவறுகள், குற்றங்கள் அல்ல”. நாகராஜன் ஐம்பது வயது மதிக்கத்தக்க அதிகாரம், அந்தஸ்து மற்றும் செல்வாக்கு பொருந்திய ஒருவர். அவருக்குக் கீழ் ஸ்டெனோவாக வேலை பார்ப்பவள் தெரஸா. நோய்வாய்பட்ட மனைவியையுடைய நாகராஜன் தன்னிடம் சிரித்துப் பேசும் தெரஸாவைத் தவறாகப் புரிந்துகொண்டு ஒரு நாள் அவளுக்கு காமயிச்சையால் முத்தம் கொடுத்துவிடுகிறார். அதற்குத் தூண்டிவிட்டவனாக இருக்கிறான் நாகராஜனின் அத்தைமகனான கன்னையா என்பவன். இவருக்கு எடுபிடி வேலைகள் செய்பவன்.

தந்தை ஸ்தானத்தில் வைத்திருந்த ஒருவர் அவ்வாறு செய்ததையெண்ணி மனமுடைந்து அழுகிறாள் தெரஸா. எல்லாவற்றையும் ‘உணர்ந்து’ மனம் வருந்தும் அவர் அவளை அழைத்துத் தான் சொல்ல நினைப்பதை ஒரு கடிதமாகத் தட்டச்சு செய்ய அவளையே குறிப்பெடுக்கச் சொல்கிறார். குறிப்பு எடுத்துக்கொண்ட அவள் சற்று நேரத்தில் அந்தக் கடிதத்தைத் தயார்செய்து தருகிறாள். பார்த்தால் அது தன் தவறை உணர்ந்து வெளிப்படையாக மன்னிப்பு கோரிய நாகராஜனுக்கு அவள் எழுதிய பதில் கடிதமாக இருக்கிறது.

“ஜஸ்ட் எ ஸ்லிப், நாட் எ ஃபால்... நீங்கள் கூறுகிற மாதிரி அது ஒரு வியாதியெனில் அதற்குத் தண்டனையல்ல, சிகிச்சையே தேவை. அப்படிப்பட்ட முறைகேடான நடத்தைகள் தவறுகள் தான்; ஆனால் குற்றங்கள் அல்ல. குற்றங்கள்தான் தண்டிக்கப்படுவன. தவறுகள் திருத்தப்படுவன; மன்னிக்கப்படுவன...”

இந்நிலையில் வீட்டிலிருந்து ஐநூறு ரூபாயைத் திருடிவிட்டு ஓடிய தனது அத்தைமகன் கன்னையா திருந்திவந்து நாகராஜனிடம் தனது தவறுக்குத் தண்டனையளிக்கக் கோருகிறான்.

“வியாதிக்குச் சிகிச்சைதான் தேவை, தண்டனை இல்லே”... “உன் வியாதி நீங்கிப் போச்சு...மனப்பூர்வமா மன்னிக்கிறதுதான் இதுக்குச் சிகிச்சை. இந்தச் சிகிச்சையை உனக்கு யாருமே இதுவரை செய்ததில்லே. இனிமே சரியாயிடும்...” என்று அவர் சொல்வதைக் கேட்டுக் கூடத்தில் உட்கார்ந்திருந்த அவரது மகளும் மனைவியும் ‘எவ்வளவு பெருந்தன்மை மிக்க மனிதர் இவர்!’ என்று நாகராஜனைப் பற்றி எண்ணிப் பெருமிதம் கொண்டனர்.
அவர்களுக்கு என்ன தெரியும்?
மன்னிக்கப்பட்டவர்களே மன்னிக்கிறார்கள் என்பது”
என முடிகிறது கதை.


அன்புடன்,
சுபத்ரா
@ subadhraspeaks.blogspot.in


மீதி பகுதி அடுத்த பதிவில்...

9 Comments:

சிந்திப்பவன் said...

சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்று திரு.ஜெயகாந்தன்.
தமிழர்களின் பேறு.அவரது எழுத்துக்களை காலப்பெட்டகத்தில்
வைத்து புதைத்து பின்னர் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு அதை பார்க்கும் மனிதர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த நாகரீகம் நிலவியது, என்ற இயல்பான முடிவிற்கு வருவர்.
அவருடைய நீண்ட நாள் வாசகி ஒருவர், தனது மகன் இளம் வயதில் இறந்துவிட,அவன் மனைவியை கட்டாயப்படுத்தி மறுமணம் செய்துவைத்தார் என்று கேள்விப்பட்ட திரு.ஜெயகாந்தன்,அவ்வாசகியை பாராட்ட,அவரும் "நான் உங்கள் வாசகி.வேறு என்ன செய்திருக்க முடியும்!"என்று அடக்கமாக பதிலளித்தாராம்.இதுவல்லவோ எழுத்து!அவரின் சமகாலத்தவராகவும்,தமிழனாகவும்,எனக்கு பிறப்பளித்த இறைவனுக்கு நன்றி.

jaisankar jaganathan said...

//சிந்திப்பவன் said...//

ஐயா சிந்திப்பவன் ரொம்ப உருகாதீங்க. நீங்க அப்புறம் ஒரு ஐஸ்கிரீமாத்தான் வாழ வேண்டியிருக்கும்

சிந்திப்பவன் said...

நன்றி ஜெய்சங்கர் ஜெகநாதன்ஜி.
உங்கள் அறிவுரை,என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது!

கானகம் said...

//ஒரு சிறுமியின் கண்களில் வீதியில் ஊர்வலம் போகும் ஒரு கோவில் யானை ஏற்படுத்திய மனக்கலவரம். தான் பார்த்த தன்னைப் பாதித்த அக்காட்சி ஏற்படுத்திய திகிலைக் குறைக்கும் பொருட்டு எதிர்ப்படும் எல்லோரிடமும் அதனை விவரிக்க முயன்று தோற்றுப்போகும் சிறு குழந்தையாய் இந்தச் சிறுகதைகளைப் பற்றி சில வார்த்தைகள் விளம்ப விழைகிறேன்.
//

இந்த ஒரு காரனத்துக்காகத்தான் ஜெயகாந்தன் அவர்களின் புத்தகங்கள் குறித்து எதுவும் எழுதுவதில்லை. என்ன எழுத முயன்றாலும் ஆச்சரியத்தில் வார்த்தைகள் வருவதில்லை.

நீங்கள் நன்றாகவே முயன்றிருக்கிறீர்கள். அடுத்தபகுதியையும் எழுதுங்கள்.

kg gouthaman said...

நல்ல விமரிசனம்.

சுபத்ரா said...

@ கானகம்
நன்றி!

Anonymous said...

No clearcut views.. what to say?

http://dailythanthi.com/thalaiyangam
நவம்பர் 09 | 10:19 pm
சோனியாகாந்தியிடம் கற்றுக்கொள்ளுங்கள்
10.11.2012 (சனிக்கிழமை)

சட்டமன்ற தேர்தல் என்றாலும் சரி, பாராளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, நிறைய எதிர்பார்ப்புகளுடன்தான் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களிடம், தமிழக அரசின் நலத்திட்டங்களை கொண்டுவருவார்கள், தொகுதியை மேம்படுத்துவார்கள் என்று எண்ணுகிறார்கள். பாராளுமன்ற தொகுதி என்றால், நமது தொகுதியின் பிரதிநிதியாக டெல்லியில் வலம் வருவார், பிரதமர் தொடங்கி, மத்திய மந்திரிகள் அனைவரையும் பார்த்து தொகுதிக்கு நலம்பயக்கும் புதிய புதிய திட்டங்களை கொண்டுவருவார், பாராளுமன்றத்தில் இவர் எழுந்து பேசத்தொடங்கினாலே, நமது ஊர் பொதுக்கூட்டங்களில் பேசுவாரே அதுபோல கர்ஜிப்பார். புதிய புதிய தொழிற்சாலைகளை கொண்டுவருவார், ஒவ்வொரு துறைக்கும் மத்திய அரசாங்கம் மானிய கோரிக்கையின்போது ஒதுக்கும் ஒரு தொகையில் ஒரு சிறிய பங்கையாவது நமது தொகுதிக்கு கொண்டுவந்துவிடுவார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பல நேரங்களில் அவர்கள் நம்பிக்கை பொய்த்துவிடுகிறது.

எம்.பி.க்களுக்கெல்லாம் ஒரு பாடமாக சோனியாகாந்தி விளங்குகிறார். நடையில், உருவத்தில், வேகத்தில், அவரது மாமியார் இந்திராகாந்திபோல செயல்படுகிறார். உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி நேரு குடும்பத்துக்கே சொந்தமானது. அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அங்கு போட்டியிட்டு எம்.பி.க்களாகவார்கள். எல்லோருமே அந்த தொகுதியை மேம்படுத்தினாலும், சோனியாகாந்தி மேற்கொண்டுள்ள அக்கறை மிகவும் பாராட்டுக்குரியதாகும். இந்தியாவிலேயே ரெயில் பெட்டி தொழிற்சாலை என்றால், ஐ.சி.எப். என்று அழைக்கப்படும் சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலைதான். அந்த அளவுக்கு பெயர் இருந்தது. இரண்டாவது பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் ஒரு ரெயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இப்போது மூன்றாவது ரெயில் பெட்டி தொழிற்சாலை ரேபரேலி தொகுதியில் உள்ள லால்கஞ்ச் என்ற இடத்தில் ரூ.2,500 கோடி செலவில் திட்டமிடப்பட்டு, முதல் பிரிவு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. எவ்வளவோ தடைகள் இருந்தும், அதையெல்லாம் தாண்டி இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டது. 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த தொழிற்சாலை, 2008-ல் மாயாவதி ஆட்சியில் நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, இந்த திட்டத்தையே கைவிடும் நிலை உருவாகியது. ஆனால், அதற்குப்பிறகு உயர்நீதிமன்ற ஆணையால் 2009 ஜனவரி மாதம் பணிகள் தொடங்கி, தற்போது உற்பத்தியை தொடங்கிவிட்டது. இதில், எல்லோருக்கும் ஒரு பாடம் என்னவென்றால், திட்டமிட்டு ஒரு காரியத்தை தொடங்கி, அது நிறைவேறும்வரை அதிலேயே கவனமாக இருக்கவேண்டும்.

அதுமட்டுமல்லாமல், ரெயில் பெட்டி தொழிற்சாலைக்காக நிலம் கொடுத்தவர்கள்- அந்த நிலத்துக்காக அவர்கள் இழப்பீடு வாங்கியிருந்தாலும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்று உறுதி அளித்து, இந்த விழாவிலேயே 14 பேருக்கு வேலைக்கான ஆணையை வழங்கினார். இந்த தொழிற்சாலைக்காக நிலம் கொடுத்த 1,434 விவசாய குடும்பத்திலும், ஒரு குடும்பத்துக்கு ஒருவருக்கு ரெயில்வே வேலை நிச்சயமாகிவிட்டது. இது, எல்லா திட்டங்களிலும் பின்பற்றப்படவேண்டிய ஒரு நடைமுறையாகும். பொதுவாக மத்திய-மாநில அரசுகள் ஏதாவது திட்டத்தை செயல்படுத்த முனைந்தால், நஷ்டஈடு கொடுப்பார்கள். அது சாலைக்காக ஆர்ஜிதம் செய்தாலும் சரி, தொழிற்சாலைகள் அமைப்பதற்காக ஆர்ஜிதம் செய்தாலும் சரி, சந்தை விலையில் பணம் தருகிறோம் என்றுதான் சொல்வார்கள். விவசாயி எதை வேண்டுமானாலும் பொறுத்துக்கொள்வான். ஆனால், தனக்கு படிஅளக்கும் விவசாய நிலத்தை மட்டும் விட்டுத்தரவே மாட்டான். அவனிடம் உன் நிலத்துக்கு பணம் தருகிறேன் என்று ஆசைவார்த்தை காட்டினால், அவனது மனம் அதை ஏற்க மறுக்கும். இன்று நிலத்தை கொடுத்துவிட்டால், காலாகாலமாக நான் பிழைப்புக்கு எங்கே போவேன்? என்னை விடுங்கள், என் மகன், என் மகள் சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? என்று நினைப்பார்கள். ரேபரேலி பாணியில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று சொன்னால், அவனது முகம் நிச்சயமாக மலரும். இப்படி அரசு பணிகள் கொடுக்கும்போது, கடைநிலை ஊழியர் பணி, அதற்குமேலே உள்ள எழுத்தர் பணிதான் கொடுக்கிறார்கள். இந்த நிலையை தவிர்த்து, குடும்பத்தில் ஒருவர் என்ன படித்திருக்கிறாரோ, அந்த படிப்புக்கு இணையான வேலையை அவர்களுக்கு கொடுத்தால், எல்லோரும் மகிழ்வோடு நிலங்களை அவர்களே முன்வந்து தருவார்கள். எல்லா வீடுகளிலும் இப்போது உள்ள தலைமுறை படித்துவிட்டது. எனவே, படிப்புக்கேற்ற குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 பணிகளை கொடுப்பதே சாலச்சிறந்தது

Anonymous said...

நல்ல முயற்சி.

விமரிசித்திருக்கும் முறை கதை படிக்கும் ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது.

ச.சங்கர்

Anonymous said...

Buy Tamil Books Online @ http://www.myangadi.com/