பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 10, 2012

குருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )

ஜெயகாந்தன் எழுதிய குருபீடம் சிறுகதைத் தொகுப்பின் ஆறாவது கதை “அந்த உயிலின் மரணம்”. தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா? இருதய பலவீனத்தால் தான் அல்பாயுசில் போகப்போகிறோம் என்று அறிந்துகொண்ட வேணுகோபாலன் ஒருநாள் நெஞ்சு வலியோடு வலியாக ஒரு உயிலை எழுதித் தன் மனைவியிடம் கொடுக்கிறார். தான் இறந்த செய்தி அறிந்தவுடனே அந்த உயிலைப் படித்துவிட்டுத்தான் மற்ற ‘காரியங்களை’க் கவனிக்கவேண்டும் எனவும் உயிரோடு இருக்கும்வரை அதனைத் திறக்கக்கூடாது எனவும் சத்தியம் வாங்கிவிடுகிறார். வருடங்கள் ஓடிவிடத் தள்ளாடும் வயதுக்குத் தள்ளப்பட்ட வேணுகோபாலன் அந்த உயிலில் எழுதப்பட்டிருந்த மகள், மகன், மனைவி, ரகசியத் துணைவி(?) ஆகிய அத்தனைப்பேரும் தனக்கு முன்பாகப் போய்விட்ட விதியை எண்ணிச் சிரித்துக் கொள்கிறார். புதிதாக வேறு யாரையும் கூட உயிலில் மாற்றி எழுதிவிட அவர் விரும்பவில்லை. உயிலில் பெயர் வந்தாலே அவர்கள் சீக்கிரம் ‘போய்’விடுவார்களோ என வேடிக்கையாக நினைக்கிறார். எனவே எவ்விதத்திலும் யாருக்கும் தேவைப்படாத அவ்வுயிலை எழுதியவரே நெருப்புக்கு இரையாக்குகிறார்.பகுதி – 2
“யார் ஒளிந்தென்ன; யார் மறைந்தென்ன? அது வரப்போகிறது என்று தீர்மானமாய் நினைக்கையில் இந்த வீட்டின் பெரிய தூண்கள் நிறைந்த அந்த விசாலமான கூடத்தில் தன்னை ரோஜா மாலையிட்டுக் கிடத்தி வைத்திருக்கும் அந்தக் கோலத்தை ஒவ்வொரு அம்சமாய் நிதானமாகக் கண் முன்னால் கொணர்ந்து காட்சிகளாய்க் காண்பார் வேணுகோபாலன்...”

இதைப் படித்ததும் ஒரு நிமிடம் வேணுகோபாலனின் இடத்தில் என்னை வைத்துப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை.

“எந்த நிமிஷமும் இவன் கதை முடிஞ்சு போகலாம்” என்று சொல்லிவிட்டார் டாக்டர் மேனன். இதைச் சொல்ல டாக்டர் எதுக்கு? என் கதை முடியுமுன் இந்த டாக்டரின் கதைகூட முடிந்து போகலாம். மனுஷ ஜீவிதத்தின் கதையே அப்படித்தான். எவன் கதையும் எப்போதும் முடிந்து போகலாம். கதை முடிந்து போவதைப் பற்றிக் கவலை எதற்கு? கதை நடந்துகொண்டிருக்கும் போதுதான் கவலையெல்லாம்...”

அடுத்ததாக “விதியும் விபத்தும்”. ஒரு வித்தியாசமான சிறுகதை. எடுத்த எடுப்பில் ஒரு மாட்டுக்காரச் சிறுவன் நடந்துசெல்லும் எருமைமாட்டின் முதுகில் படுத்துக்கொண்டு மாம்பழம் தின்றுகொண்டே செல்லும் காட்சியைத் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர். ஒரு மாங்கொட்டையை வைத்து விதியையும் விபத்தையும் வேறுபடுத்திப் புரியவைத்த இந்தத் தத்துவக் கதை என்றும் நினைவில் நிற்கக்கூடியது.

சிறுவனால் எறியப்பட்ட மாங்கொட்டை ஒன்று சாக்கடையில் விழுகிறது. விழுந்த அதன்மேல் ஒரு புழு நெளிந்து அதனைத் துளையிட முயல்கிறது. முடியாமல் போகவே வேறு பொருளுக்குத் தாவிவிடுகிறது. அதன்பின் அந்த மாங்கொட்டை முளைவிட்டுத் தளிர்த்து மரமாக வளர்ந்து எண்ணற்ற மாம்பழங்களைத் தருவதாக விதிக்கப்படுகிறது.

அதுவே ஒரு மாம்பழத்தின் விதை அவ்வாறே எறியப்பட்டு ஒரு புழு வெற்றிகரமாக அதனைக் குடைந்து தின்று அழித்துவிட்டால் அது அந்த மாங்கொட்டையின் மரணம். அதுவே விபத்து.

“அந்த மாங்கொட்டையின் யோகம் விதி!
இந்த மாங்கொட்டையின் மரணம் விபத்து!”

“புது செருப்பு கடிக்கும்” எட்டாவது கதை. திருமணமாகிச் சில மாதங்களே ஆகியிருந்த நந்தகோபாலுக்குப் புது மனைவியுடனான அந்த வாழ்க்கை வெறுப்பாகியிருந்தது. இந்நிலையில் தான் இரண்டு மாதங்கள் ‘குடும்பம்’ நடத்திய தனது பழைய தோழி வத்சலாவின் நினைவு எழ, இரவு பதினொரு மணிக்கு அவளைத் தேடிச்செல்கிறான். தனியாக வாழும் அவளையே கல்யாணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அவளிடம் மனம் வருந்துகிறான்.

அவளோ, தான் ஏற்கனவே “ட்ரெயிண்ட்” ஆக இருந்ததால் தான் அவனோடு இரண்டு மாதங்கள் நன்றாகக் குடும்பம் நடத்தமுடிந்தது எனவும் ‘அந்த’க் காரணமே அவன் அவளைக் கல்யாணம் செய்யத் தடையாக இருந்ததாகவும் சொல்கிறாள். புதிதாக வந்திருப்பவளை இவன் தான் அவ்வாறு அக்கறையோடு பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் போகப் போகச் சரியாகிவிடும் என்றும் ‘புது செருப்பு’ உதாரணத்தை வைத்து அவனுக்குப் புரிய வைக்கிறாள்.

“அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள்; “பார்த்தீங்களாங்கோ... செருப்புக்கூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ… அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களாங்கோ?”
அவள் சிரித்துக் கொண்டுதான் சொன்னாள். அவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதுவிட்டான்.

ஒன்பவதாவது சிறுகதை “எங்கோ யாரோ யாருக்காகவோ”. ஆண்களிடம் பெண்கள் பேசுவதையே தவறாகச் சித்தரிக்கும் ஒரு கலாசாரத்தைப் பின்பற்றும் தேசத்தில் வாழும் தனிமனிதன் ஒருவனுக்கு ஏற்படும் பாலியல் தேவைகளையும் பற்றாக்குறைகளையும் சொல்லும் சிறுகதை. இரண்டு நாட்கள் சந்தோஷமாகக் கழிப்பதற்காக பாண்டிச்சேரி செல்லும் இரு நண்பர்கள் அங்கே தனியே நிற்கும் ஒரு இளம்பெண்ணை வேறொரு இடத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். அவளுக்குக் ‘கள்’ வாங்கிக் கொடுத்தும் அவளது இரண்டுநாள் பசிக்கு உணவு வாங்கிக் கொடுத்தும் அவளோடு பொழுதைக் கழிக்கின்றனர்.

சந்தித்த பொழுதிலிருந்தே தன்னை சென்னைக்கு உடன் அழைத்துப்போகச் சொல்லி முதல் நண்பனிடம் கேட்டுக்கொண்டேயிருக்கிறாள் அவள். தன்னுடைய நிலையற்ற குடும்ப வாழ்க்கையைச் சொல்லி அழுகிறாள். அவரது வீட்டில் எந்தத் தொல்லையும் தராத ஒரு வேலைக்காரியாக இருந்துவிடுவதாகச் சொல்லிக் கெஞ்சுகிறாள். தர்மசங்கடமாக உணரும் அவன் வீட்டில் எல்லா ஏற்பாடையும் செய்துவிட்டு அடுத்த திங்கட்கிழமை அவளை அழைத்துப்போய்விடுவதாக ஒரு பொய்யைச் சொல்லி அவளை ஏற்றிய அதே இடத்தில் இறக்கிவிட்டுச் செல்கிறான்.

அடுத்த திங்கட்கிழமையும் அதற்கடுத்த திங்கட்கிழமைகளிலும் அவள் அங்கே வந்து காத்திருப்பாள்! ...
அந்த மாசமே நண்பர் அமெரிக்காவுக்குப் போய்விட்டார். நான் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு தடவை அந்த ‘பா’ருக்கு அந்த இடத்துக்குப் போனேன்.
கடல் மட்டும் இரைந்து கொண்டிருக்கிறது. பீச்ரோடு ‘வெறிச்’சென்றிருக்கிறது. என் கார் வெயிலில் பழுக்கக் காய்ந்து கொண்டிருக்கிறது. நான் போய் அவள் நின்றிருந்தாளே அந்த இடத்தில் அதே மாதிரி நின்று கடலை வெறித்துப் பார்க்கிறேன்...

இடையில் சொல்லாமல் விட்ட மூன்றாவது கதை, “நிக்கி”. இந்த ஒரு கதைக்காகவே ஜெயகாந்தனின் விசிறி ஆகவிடலாம். இக்கதையை (சு)வாசித்தது மறக்கமுடியாத ஓர் அனுபவம். பிறந்து இரண்டு நாட்களேயாகித் தெருவில் தத்தளிக்கும் ஒரு நாய்க்குட்டியின் கதை. அதன் ஒவ்வொரு அசைவும் எழுத்தாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது.

தெருத் தெருவாக ‘ஊர்ந்து’ அலையும் அந்த நாய்க்குட்டி ஒரு தாயால் பள்ளி செல்ல அடம்பிடிக்கும் தன் பிள்ளைக்கு வேடிக்கைப் பொருளாகிறது. ‘நிக்கி’ என்ற பெயரையும் பெறுகிறது. அங்கிருந்து ஓடியபின் வழி தெரியாமல் எங்கெங்கோ அலைந்து ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட நிக்கி, பசியில் அலைந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் ஒரு ஜாதிநாயுடன் கலக்கிறது. பின்னர் இடம் பார்த்து அழகான ஐந்து குட்டிகளை ஈன்றெடுக்கிறது. குட்டிகளின் அழகைக் கண்டவர்கள் ஒவ்வொன்றாக எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.

காரில் போகிற, சங்கிலியால் பிணித்துக் கையில் இழுத்துக்கொண்டு போகிற ஜாதி நாய்களைப் பார்த்து இப்போது நிக்கி ஓடுகிறது. ஒரு வேளை தனது குட்டியை அது தேடுகிறதோ? நிக்கி பெற்றதாகவே இருந்தாலும் அவை நிக்கியின் ஜாதியாகிவிடுமா, என்ன?
அதோ, பங்களா நாயையோ அல்லது இன்னுமொரு குப்பத்து நாயையோ தேடித் தெரு நாயாக நிக்கி அலைந்து கொண்டிருக்கிறது. அதற்கு இப்போது ஒரு நாயின் தேவையை நாடுகிற ஸீஸன். தேவை என்று வந்துவிட்டால் ஜாதியையா பார்க்கத் தோன்றும்?

நிக்கி மறுபடியும் அனாதையாக அலைகிறது.4 Comments:

கானகம் said...

Nice Write up. Keep writing. As everyone does, you also praised JK. is there any Vimarsanam about JK's books or stories other than he got the DMK award and so on..?

kg gouthaman said...

நானும் படிச்சுட்டேன். விமரிசனத்தை.

Anonymous said...

இரண்டாம் பாகமும் நன்று.

ச.சங்கர்

Avinash Srinivasan said...

A suggestion.
The quotes in bold and explanation in normal fonts alternatively, gave the previous article a more readable and less boring outlook than the monotonous and long passage in this one.