பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 16, 2012

Dial for books - ஒரு கடிதம்

அன்புள்ள இட்லிவடை அவர்களுக்கு,
உங்களுடைய இன்றைய பதிவு படித்தேன். டயல் ஃபார் புக்ஸ் ல் என்னுடைய அனுபவம் இது :

" Poorva Magic, Miracles and Mystical Twelve " என்ற ஆங்கில புத்தகம் (East West Books (Madras) P Ltd., வெளியீடு) எனக்கு தேவைப்பட்டது. இந்த கடை எங்கே இருக்கிறது என்று தெரியாததால் & இந்த புத்தகம் தமிழில் கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடு என்று book fair போயிருந்தபோது தெரிந்திருந்ததால் அவர்களிடம் போனில் விசாரித்த போது டயல் ஃபார் புக்ஸ் நம்பர் கொடுத்து அங்கே கேட்க சொன்னார்கள்(it was in the middle of August this year )

நானும் அந்த நம்பரில் விசாரித்தேன். ஆனால் அவர்கள் தமிழ் புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும் என்று சொல்லி விட்டார்கள். :-(

( இந்த புத்தகம் பன்னிரு ஆழ்வார்கள் பற்றி தன் பேத்திக்கு தாத்தா சொல்லுகிற மாதிரி கதை. )

உங்கள் ப்ளாக்கில் இப்போதுதான் டயல் ஃபார் புக்ஸ் விளம்பரம் பார்த்து விட்டு அந்த போன் நம்பர் & எனக்கு கிழக்கு பதிப்பகம் கொடுத்த நம்பர் இரண்டும் ஒன்றுதான் என்று cross check செய்து விட்டு இதை எழுதுகிறேன்.

கண்டிப்பாக குற்றம் சொல்ல இதை எழுதவில்லை. இந்த புத்தகம் டயல் ஃபார் புக்ஸ் சிஸ்டம் மூலம் கிடைத்திருந்தால் ரொம்பவே சந்தோஷப்பட்டு இருப்பேன். இதை தமிழ் தெரியாத US குழந்தைக்கு ஒரு கிப்டாக கொடுக்க நினைத்திருந்தேன். இதையும் போனில் பேசியவரிடம் சொல்லிப்பார்த்தேன்.

உங்கள் மூலம் எல்லா மொழி புத்தகமும் கிடைக்கிற மாதிரி இதை விரிவு படுத்தினால் நன்றாக இருக்குமே என்ற ஆவலில் தான் இதை உங்களுக்கு எழுதினேன்.

உங்கள் ப்ளாக் முகப்பில் வைத்திருக்கும் கொலு மிகவும் அருமை. எங்கள் வீட்டிலும் கொலு வைத்திருக்கிறோம். அவசியம் குடும்பத்துடன் வரவும்.
நடுவில் சில நாள் கம்ப்யூட்டர் வேலை செய்யாததால், இனிமேல் தான் உங்கள் மற்ற பதிவுகள் படிக்க வேண்டும்.

நன்றி
[ ]


பத்ரி இதற்கு பதில் சொல்லுவார் என்று நினைக்கிறேன். இட்லிவடைக்கு ஒரு பதிவு எழுதி தந்தால் அந்த புத்தகம் உங்க வீடு தேடி வரும் :-)

13 Comments:

Badri Seshadri said...

இட்லிவடையின் சென்ற பதிவையும் படித்தேன். இதில் கருத்து சொல்ல நிறைய இருக்கிறது. முடிந்தால் ஒரு நீண்ட கட்டுரையாகவே எழுதி இட்லிவடைக்கு அனுப்பிவைக்கிறேன். முதலில் இந்தப் பதிவுக்கான பதில்:

இணைய வணிகம், போன் வணிகம் ஆகியவை வாடிக்கையாளருக்கு மிகச் சிறந்த சேவைகள். ஆனால் இவற்றின் பின்னால் உருவாக்கப்படும் கட்டமைப்பு பற்றி வாடிக்கையாளர் அதிகம் கண்டுகொள்வதில்லை.

இணைய-வழி-வணிகத்தைவிட போன்-வழி-வணிகம் சிக்கல் மிகுந்தது. முந்தையதில் கேடலாக் ஒன்று இருக்கும். அதில் ஏதோ ஒன்றை மட்டுமே நீங்கள் ஆர்டர் செய்யலாம். இல்லாத ஒன்றை ஆர்டர் செய்யமுடியாது. போனில் கூப்பிட்டு ஆர்டர் செய்யும்போது நீங்கள் கேட்கும் புத்தகம் கிடைக்குமா, யாரிடம் கிடைக்கும், அவர்களிடம் அது ஸ்டாக் இருக்கிறதா ஆகியவற்றை நாங்கள் பார்க்கவேண்டும். அதன்பின் பணத்தை எப்படிப் பெறப்போகிறோம் என்பதைக் கண்டறியவேண்டும். அதன்பின் புத்தகத்தை அனுப்பிவைக்கவேண்டும்.

தமிழிலேயே நாங்கள் (டயல் ஃபார் புக்ஸ்) அனைத்துப் புத்தகங்களையும் பெற்றுத்தரும் நிலையில் இன்று இல்லை. ஆங்கிலப் புத்தகங்களைப் பெற்றுத்தரக்கூடாது என்பதில்லை. ஆனால் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் இந்தத் துறையை நிர்வகிக்கப் போதுமான கட்டுமானங்களை நாங்கள் இன்னும் உருவாக்கவில்லை. அதற்கான பணிகளில் இருக்கிறோம். அது நடந்துமுடியும்வரை தேவைக்கு அதிகமான வேலைகளை எடுத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.

டயல் ஃபார் புக்ஸ் என்ற எங்கள் இந்தச் சேவைக்கு நிகராக இந்தியாவில் பிற மொழிகளுக்கு - ஆங்கிலம் சேர்த்து - எந்தச் சேவையுமே இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதனால் எல்லாத் தவறுகளையும் நாங்களே செய்துபார்த்துப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது.

விரைவில், குறைந்தபட்சம் சில பாபுலர் ஆங்கிலப் புத்தகங்கள் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வோம். அதற்குமேல் படிப்படியாக இதை விஸ்தரிக்க முடியுமா என்று பார்க்கிறோம்.

Badri Seshadri said...

போன் மூலம் ஆங்கிலப் புத்தகங்களை விற்கும் தளம் http://www.dialabook.in/index.php ஒன்று இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே நான் மேலே குறிப்பிட்டுள்ள செய்தியுடன் இதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்தத் தளம் எப்படி இயங்குகிறது என்று நாண் இன்னும் சோதித்துப் பார்க்கவில்லை.

balachandar muruganantham said...

போன் மூலம் புத்தகம் மற்றும் இணையம் மூலம் புத்தகம் ஆகியவைக்கு பின்னால் நடப்பது ஒன்றே ஒன்று தான். வாடிக்கையாளர் கேட்கும் புத்தகம் வாங்கி அனுப்புவது. பத்ரி சார் சொல்வது போல முதலில் கேடலாக் இருக்காது. பின்பு கேடலாக் இருக்கும். இதை தவிர, புத்தகத்தினை பேக் செய்து, தூதஞ்சல் அல்லது தபால் சேவை மூலம் அனுப்ப வேண்டும். இதற்கு எக்ஸ்ட்ரா பணம் செலுத்த மக்கள் தயாராக இல்லை.

தமிழ் புத்தக விற்பனை பொருத்தவரை, இணைய கேடலாக்கை உருவாக்குவது கடினம். ஏன்னென்றால் எந்த ஒரு பதிப்பாளரும் அதற்கு சரியான உதவி செய்வதில்லை. உதாரணத்துக்கு, யாரும் நல்ல HQ அட்டைபடம் கூட தருவதில்லை. நாங்களே ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பின் புத்தகம் பற்றிய தகவல்களை திரட்டி எடுத்து, ஏற்ற வேண்டும். இதற்கு பல நாட்கள் ஆகும். மேலும் விற்பணையாளர்களுக்கும் கிடைக்கும் கழிவு மிகவும் குறைவு. பிறகு எப்படி தமிழ் புத்தக விற்பனை செய்வதில் விற்பனையாளருக்கு ஈர்ப்பு இருக்கும்? ஆங்கில புத்தகத்திற்கு 40% முதல் 60% வரை கூட கிடைக்கிறது. அதனால் தான் Landmark, Higginbotthams, odyssey, crossword போன்றவை ஆங்கில புத்தகத்தினை விற்கிறது. லாபமும் பார்க்கிறது. மேலே குறிப்பிட்ட கடைக்களில் தமிழ் புத்தகங்கள் கிடைப்பது அபூர்வம்.

மேலும் ஒரு சில தமிழ் பதிப்பகங்கள் மட்டும் தான் தனது புத்தகம் பற்றிய தகவல்களை மார்கெட்டிங் செய்கிறது. மற்றவர்கள் செய்வதில்லை. இணையத்தில் போட்டு நீங்கள் விற்றுக்கொள்ளுங்கள் என்கின்றனர். ஆனால், எங்களிடம் பணம் கொடுத்து புத்தகம் பெற்றுக்கொள்ள வேண்டும் (Cash and Carry.). புத்தகம் விற்காவிட்டால் திரும்ப பெரும் பேச்சுக்கே இடமில்லை.(No returns)

இதை தவிர, பதிப்பாளர்கள் கேட்டலாக் அப்டேட் செய்து அனுப்புவது கடினம். அதிக விலை புத்தகம் கூட குறைந்த விலைக்கு நாங்கள் அனுப்பி விடுகிறோம், இணையத்தில் பணம் கொடுத்து ஆர் டர் செய்தமைக்காக.

இப்படி இருப்பதால் தான் தமிழ் புத்தக விற்பனை கீழே சென்றுள்ளது.

பி.கு: நான் சென்னைஷாப்பிங்கு.காம் நடத்தி வருகிறேன்.
- Bala
http://www.chennaishopping.com/

Anonymous said...

ஆங்கிலப் புத்தகங்களுக்கு இருக்கவே இருக்கிறதே ஃபிளிப்கார்ட்!

சரவணன்

Badri Seshadri said...

பாலசந்தர் முருகானந்தம்: போன், இணையம் இரண்டும் ஒன்றல்ல. இணையத்தில் ஆர்டர் + பேமெண்ட் எல்லாம் முடிந்தபின்னர்தான் எடுத்துக் கட்டி, பொட்டலம் போட்டு அனுப்பவேண்டும். ஆனால் போனில் நீங்கள் பேசிப் பேசி ஆர்டரை உருவாக்கவேண்டும். பணத்தை எப்படிப் பெறுவிர்கள்? இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு காரணமாக போன்மூலம் கிரெடிட் கார்ட் சார்ஜிங் செய்யமுடியாது. சம்பந்தப்பட்ட நபர் இணைய வங்கிக் கணக்கு வைத்திருந்தால் பணத்தை நம் வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம். ஆனால் பெரும்பாலானோர் இணைய இணைப்பே வைத்திருப்பதில்லை. எனவே வி.பி.பி, சி.ஓ.டி, மணியார்டர், செக், டிராஃப்ட் ஆகியவற்றை நம்பவேண்டியுள்ளது. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் நடக்கும் நிலை வரும்போது மாற்றம் ஏற்படும்.

மற்றபடி, தமிழ்ப் புத்தக மார்ஜின், ஆங்கிலப் புத்தக மார்ஜின் பற்றி நீங்கள் எழுப்பியுள்ள கருத்து முக்கியமானது. அடுத்து இதைப்பற்றி எழுதுகிறேன்.

Badri Seshadri said...

சரவணன்: ஆங்கிலப் புத்தகம் ஒன்று உங்களுக்கு வேண்டும். பெயர் தெரியும். பதிப்பாளர் யார் என்றும் தெரியும் என்று வைத்துக்கொள்வோம். ஃப்ளிப்கார்ட் போகிறீர்கள். அங்கே அந்தப் புத்தகம் இல்லை என்று வைத்துக்கொள்வோம், அல்லது புத்தக எண்ட்ரி உள்ளது, அவுட் ஆஃப் ஸ்டாக் என்கிறார்கள். என்ன செய்வீர்கள்? அல்லது உங்களிடம் இணைய இணைப்பே இல்லை. கையில் போன் மட்டும்தான் உள்ளது. என்ன செய்வீர்கள்?

Badri Seshadri said...

புத்தக மார்ஜின் பற்றி. தமிழில் பெரும்பாலான பதிப்பாளர்கள் 30% மார்ஜின் தருவார்கள். வெகு சிலர் 35% தருவார்கள். பலர் 25% மட்டும்தான் தருவார்கள். கிட்டத்தட்ட அனைவருமே கேஷ் அண்ட் கேரிதான். பல காரணங்கள் உண்டு. பல நாட்களாக உறவு வைத்திருந்தால், சிலர் குறைந்த கால கிரெடிட் தருவதுண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தமிழ்ப் பதிப்புத் துறையில் இருக்கும் எங்களுக்கும் இதே நிலைதான். கேஷ் அண்ட் கேரி மட்டும்தான். அதிலும் சில பிரகஸ்பதிகள், பணமாகத் தந்தால்தான் வாங்குவார்கள். காசோலை, வரைவோலை ஏற்கமாட்டார்கள். பில் தர மாட்டார்கள். நல்லவேளையாக பெரும்பாலான பதிப்பாளர்கள் எங்களிடம் செக் வாங்கிக்கொள்ள ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்!

ஆங்கிலப் புத்தகங்களில் 40-60 என்பதெல்லாம் எளிதல்ல. அதிக அளவு புத்தக விற்பனை செய்வோருக்கு மட்டுமே (லாண்ட்மார்க், ஹிக்கின்பாதம்ஸ், ஃப்ளிப்கார்ட்) அதிக மார்ஜின் தருவார்கள். நாம் இப்போது பிசினஸ் ஆரம்பித்தால் நமக்கு உள்ளூர் டிஸ்ட்ரிப்யூட்டர்தான் தருவார். அவர் 35-40 கொடுத்தால் அதிகம்.

balachandar muruganantham said...

பத்ரி சார்: நாங்கள் டயல் ஃபார் புக்ஸ் மாதிரி முழு அளவு போன் ஆர்டர்கள் எடுப்பதில்லை. தொடக்கத்தில் எடுத்தோம். பின்னர் அது மிகவும் கடினமாக உள்ளது என்று என்னி வாடிக்கையாளர்களை இணைய சேவையை பயன்படுத்த ஊக்குவிப்போம். இருந்தாலும், வாடிக்கையாளர்கள் எங்களை போன் மூலமும் அனுகுகிறார்கள். இன்னமும் ஆர்டர் செய்கிறார்கள்.

ஆர்டர்களை வி.பி.பி மூலம் அனுப்புவோம். அல்லது, கேஷ் டெப்போசிட் / பேங்க் ட்ரான்ஸ்பர் செய்தால், தூதஞ்சல் மூலம் அனுப்புவோம், என்று எளிமையாக வைத்திருக்கிறோம். 5%-10% வரை மட்டுமே எங்களுக்கு போன் மூலம் ஆர்டர் வருகிறது. மேலும், அப்படி வந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவையை பற்றி விளக்கி சொல்லி, அது வழியாக ஆர்டர்கள் வந்தவாறு உள்ளன. இவ்வாறு செய்வதன் மூலமாக எங்களால் ஓரளவு சமாளிக்க முடிகிறது.

மேலும் நீங்கள் கூறிய கிரெடிட் கார்ட் சார்ஜிங் செய்யமுடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் எங்களுக்கும் ஒரே கவலை, இணைய விற்பனைக்கு பதிப்பாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் குறைவாக இருப்பதே!

- Bala
http://www.chennaishopping.com/

Anonymous said...

@ பத்ரி- ஃபிளிப்கார்ட், இன்டியா பிளாசா, லேண்ட் மார்க் ஆன் த நெட், புக் அடா போல பல தளங்களில் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை அல்லது ஸ்டாக் இல்லை என்றால் இந்தியாவில் அந்தப் புத்தகத்தை எங்குமே வாங்க முடியாது என்று துணிந்து சொல்லலாம்! அப்போது 'நோட்டிஃபை மீ' பட்டனை அழுத்திவிட்டு மறந்துவிடுவதே உத்தமம். அல்லது புத்தகமே யு.எஸ். அட்ரசில்தான் டெலிவரி ஆகவேண்டும் என்றால் (மட்டும்) முடிந்தவர்கள் அமேசானில் வாங்கலாம். எப்படிப் பார்த்தாலும் கடை கடையாக ஏறி இரங்குவதே ஃபோனில் விளக்கிக்கொண்டிருப்பதோ நேர விரயமே!

மற்றபடி ஆன் லைன் ஷாப்பிங் செய்ய நெட் இனைப்பு வேண்டும் என்று யார் சொன்னது?! இருக்கவே இருக்கின்றன பிரவுசிங் சென்டர்கள் அல்லது அலுவலகக் கணினி!

சரவணன்

Anonymous said...

ஃப்லிப் கார்ட் பற்றி: இரண்டு வருச்தத்திற்கு ஒரு புத்தகத்தை வாங்க அதில் தேடினேன். விலை ரூ 100 ஷிப்பிங் 1500 என்ற் ரேஞ்சில் இருந்தது. இருந்தது. அவர்கள் அமெரிக்காவில் உள்ள கம்பெனியுடன் தொடர்பு வைத்து சப்ளை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதே புத்தகத்தை அமேஜான், ABE BOOKS, Half Price books, Alibris மூலம் வாங்கினால் சேமிக்க முடியும்.
BETTER WORLD BOOKS- ல் INTERNATIONAL SHIPPING கூட FREE! எல்லாம் புதுப் பொலிவுடன் இருக்கும் இருக்கும் USED BOOKS! சமீபத்தில் 4 புத்தகங்கள் வாங்கினேன். 2 கிலோ எடை இருக்கும். (40% தள்ளுபடிக்குப் பிறகு) 11 டாலர் விலையில்! என்ன, புத்தகங்கள் இந்தியாவிற்கு வர 1 மாதம் ஆயிற்று. டாலரில் பணம் செலுத்த எல்லாராலும் முடியுமா என்பது ஒரு பிரச்னை.\\---மணா

பாலாஜி said...

அடப்பாவிகளா 60% மார்ஜினா, பகல் கொள்ளையால இருக்க்கு. அதனாலதான் பைரேடட் புத்தகங்கள் அதிகம் விற்க்கப்படுகிறதோ.

பாலாஜி said...

அடப்பாவிகளா 60% மார்ஜினா, பகல் கொள்ளையால இருக்க்கு. அதனாலதான் பைரேடட் புத்தகங்கள் அதிகம் விற்க்கப்படுகிறதோ.

balachandar muruganantham said...

//கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தமிழ்ப் பதிப்புத் துறையில் இருக்கும் எங்களுக்கும் இதே நிலைதான். கேஷ் அண்ட் கேரி மட்டும்தான்

ஏன் இது மாற வில்லை? என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? சொல்லமுடியுமா? இதனால்தான் தமிழ் புத்தகம் விற்பனை குறைந்துள்ளது என்று நான் கருதுகிறேன்.

மேலும், குறைந்த நாட்களாக உறவு வைத்திருந்து, லட்சகணக்கில் விற்பவர்களுக்கும் இதே நிலைமை என்றால் அது தமிழ் புத்தக விற்பனை முன்னேற்றத்திற்க்கு தடையாக இருக்காதா?

- bala