பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 24, 2012

நிதின் கட்கரி - யதிராஜன்


நிதின் கட்கரி, கடந்த சில நாட்களில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்குப் போட்டியாக மீடியாவில் அடிபடும் பெயர், பாஜகவின் அகில இந்தியத் தலைவர். பாஜகவின் தலைவராக இவரை அறிந்தவர்களை விட, இப்போது சமூக ஆர்வலர் (?) அர்விந்த் கெஜரிவால் இவர் மீது அடுக்கியிருக்கும் குற்றச்சாட்டுகளால் இவரை அறிந்து கொண்டிருப்பவர்கள் அநேகம். இவர் மீது கேஜரிவால் வைத்திருக்கும் பிரதானக் குற்றச்சாட்டு, இவர் நிர்வாகத் தலைவராக இருக்கும் பூர்த்தி பவர் & ஷுகர் நிறுவனத்திற்கு முறைகேடாக வந்துள்ள முதலீடுகள் பற்றியது. 2001 இல் துவங்கப்பட்ட பூர்த்தி க்ரூப் நிறுவனங்களில் சுமார் பத்தாயிரம் பங்கு முதலீட்டாளர்கள். இவற்றில் 19 நிறுவன்ங்கள் பூர்த்தி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்திருப்பதன் மூலம் இயக்குனர்களாக இருக்கின்றன (Share Directors). சிக்கல் துவங்குவது இங்கிருந்துதான்; இந்த பத்தொன்பது கம்பெனிகளில் சுமார் 16 கம்பெனிகள் “ஷெல் கம்பெனிகள்” என்பது கெஜரிவாலின் குற்றச்சாட்டு; அதாவது அந்நிறுவனங்களுக்கு வேறு எவ்விதமான வர்த்தகப் பரிவர்த்தனைகளோ, நடவடிக்கைகளோ கிடையாது, பெயருக்கு ஒரு நிறுவனம், அதன் பெயரில் முதலீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த 16 நிறுவன்ங்களில் பெரும்பான்மையானவை கல்கத்தாவிலும், பம்பாயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள முகவரியில் அம்மாதிரியான நிறுவன்ங்கள் செயல்படுவதற்கான சுவடே தெரியாத வகையில், பம்பாயின் சேரிகளிலும், கல்கத்தாவின் பின்தங்கிய பகுதிகளிலும் அம்முகவரிகள் இருக்கின்றன. அம்முகவரியில் பல்லாண்டுகளாக வசிப்பவர்களுக்கு அது போன்ற ஒரு நிறுவனம் அம்முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதே புதிய தகவலாக இருக்கிறது (இவ்விவரங்கள் NDTV மற்றும் Times Of India போன்றவற்றில் வெளியாயின). தவிர இந்நிறுவன இயக்குனர்களில் கட்கரியின் கார் ஓட்டுனர் மற்றும் தனிச் செயலர் ஆகியோரும் அடங்குவர்.இதற்கெல்லாம் மேலாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, நிதின் கட்கரி மராட்டிய மாநில பொதுத் துறை அமைச்சராக 1995 முதல் 99 வரை பணியாற்றிய காலத்தில், ஐடியல் ரோட் பில்டர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சாலை போடும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்கரி மற்றும் ஏழு பேர் இணைந்து 2001 இல் பூர்த்தி நிறுவன்ங்களைத் துவங்கும்போது, அந்நிறுவனத்தில், ஐடியல் ரோட் பில்டர்ஸ் நிறுவனம் 2 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்குகிறது; அடுத்த ஆண்டே மேலும் 1.98 கோடி மதிப்பிலான பங்குகளையும் வாங்கி, மொத்தம் 6% பங்குகளைப் பெற்று ஒரு இயக்குனராக இணைகிறது. ஆக, பொதுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் வழங்கிய ஒப்பந்தங்களுக்கு, நன்றி தெரிவிக்கும் விதமாகவே IRB நிறுவனம் பூர்த்தியில் முதலீடு செய்துள்ளது என்பது ஒரு குற்றச்சாட்டு; தவிர, IRB யின் சேர்மன் கட்கரிக்கு நெருங்கிய நண்பர், இதை NDTV பேட்டியில் கட்கரியே ஒப்புக்கொண்டுள்ளார். ஆக நெருங்கிய நண்பருக்கு அமைச்சராக சகாயம் செய்ததால், நண்பர் திருப்பிச் செய்யும் ப்ராயச்சித்தம் என்ற வகையில் இப்படி குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பூர்த்தி நிறுவனங்களில் சேர்மனாக இருந்த நிதின் கட்கரி, பூர்த்தி நிறுவனங்களில் வைத்திருக்கும் மொத்தப் பங்குகளின் மதிப்பே வெறும் ரூபாய் 3100 தான். அடுத்ததாக பூர்த்தி நிறுவனங்களுக்கு வேறு நிறுவனங்கள் அளித்துள்ள கடன் தொகைகள், அவை சுமார் 164 கோடிகள், அவற்றில் 62 கோடி ரூபாய் அளவிலான கடன் தொகை திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டதாக்க் கூறப்படுகிறது. இது போன்ற குற்றச்சாட்டுகள் நிதின் கட்கரி முன்பாக வைக்கப்படுகின்றன.

, குற்றச்சாட்டு வெளியான நாள்முதலாகக் கூறி வருகிறார். மேலும், பூர்த்தி நிறுவனங்களின் சேர்மன் பதவியிலிருந்து தான் 14 முன்பாகவே விலகிவிட்டதாகவும், விலகியதன் பொருட்டு, அளிக்கப்பட்ட ராஜிநாமா கடிதம், செபிக்கு அனுப்பப்பட்டுள்ள நகல், முறைகேடுகள் தொடர்பான சில விளக்க ஆவணங்கள், தனது சொத்து தொடர்பான ஆவணம் ஆகியவற்றையும் தனது NDTV பேட்டியின்போது நிதின் கட்கரி காண்பித்து விளக்கமளித்தாராயினும், சில நெருடலான கேள்விகள்..முதலீடு செய்துள்ள 16 ஷெல் நிறுவனங்கள் போலியான முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பது தொடர்பான கேள்விக்கு, நிறுவனங்களின் முகவரி மாறியிருக்கலாம் என்ற பதில் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. தவிர 10000 முதலீட்டாளர்களின் முகவரியும் தான் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றார். முற்றிலும் வாஸ்தவம், ஒரு நிறுவனத்தின் சேர்மன், தனது நிறுவனத்தின் அனைத்து சிறு, குறு முதலீட்டாளர்களையும் தனிப்பட்ட முறையில் அறிந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அது சாத்தியமும் அல்ல. ஆனால், நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை தன்னகத்தே வைத்து, நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் முதலீட்டாளர்களை நிறுவனத்தின் (முன்னாள்) சேர்மன் என்ற முறையில் அறிந்து வைத்திருப்பது அவசியமல்லவா?நிறுவனத்தின் (முன்னாள்) சேர்மனே வெறும் 100 பங்குகள்தான் வைத்திருக்கிறாரென்ற நிலையில், அவருடைய கார் ஓட்டுனரும், செயலரும் எவ்வாறு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருக்க முடிகிறது? தவிர, இவருடைய ஓட்டுனர் 2010-11 ஆம் காலகட்டத்தில் வேறு ஆறு நிறுவனங்களிலும் இயக்குனராக இருந்திருக்கிறார் என டைம்ஸ் இந்தியா தெரிவிக்கிறது.இவர்கள் தவிர, வேறு நான்கு பெரும் முதலீட்டாளர்களும் சந்தேகத்திற்கிடமானவர்களாக மீடியா செய்திகள் தெரிவிக்கின்றன. ஒருவர் கட்கரியின் கல்லூரித் தோழர், இன்னொருவர் நிதின் கட்கரியின் வீடு அமைந்துள்ள பகுதியில் கடை வைத்திருப்பவர்; இன்னொருவர் நிதின் கட்கரியின் மகனின் பள்ளித் தோழர்; மற்றொருவர் நிதின் கட்கரியின் தனிச் செயலராக இருந்தவர், கட்கரி அமைச்சராகப் பதவி வகித்த காலகட்டத்தில்.மேலே குறிப்பிட்டுள்ளவை சில நெருடலான விஷயங்கள். ஆயினும், நிதின் கட்கரியின் விளக்கம்/சமாதானங்களும் ஏற்கக் கூடியதேயாயினும், முழுமையான விசாரணைக்குப்பின், முறைகேடுகள் ஏதுமல்ல என்று நிரூபணம் செய்ய வேண்டியது ஒரு தேசியக் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவருக்கு தார்மீக்க் கடமையுண்டு. எந்த நிறுவனத்திலும், யார் வேண்டுமாயினும் பங்குதாரராக முடியும் என்ற அவரது வாதமும் சரியானதே. இவர் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் IRB நிறுவனம் ஒப்பந்தங்களைப் பெற்றிருக்கிறது; இவர் பிறகு நிறுவனம் துவங்கும்போது அதில் முதலீடு செய்வதால், இவரால் அந்நிறுவனம் ஆதாயமடைந்திருக்கலாம் என்று எழுப்பக் கூடிய சந்தேகங்களை ஒதுக்கித் தள்ளுவதற்கில்லை. அதற்கு முறையான விசாரணை அவசியம், அதற்கும் கட்கரி தயாரென்றே தெரிவித்துள்ளார்.இவையனைத்தும் ஒருபுறமிருக்க, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, நிதின் கட்கரி எங்கும் ஓடி ஒளியாமல், தானாகவே அனைத்து மீடியாக்களுக்கும் நேரடியாக, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, எவ்விதமான விசாரணைக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவே காங்கிரஸ் தரப்பில், சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, வாத்ராவோ, அல்லது சோனியாவோ, ப்ரியங்காவோ யாரும் நேரடியாக எவ்வித பதிலையும் அளிக்க முன்வரவில்லை. அதற்கு பதிலாக காங்கிரஸின் மத்திய அமைச்சர்கள், கபில் சிபல், சிதம்பரம், அம்பிகா சோனி, கூட்டணித் தலைவர்கள் ஷரத் பவார் போன்றோர் வாத்ராவின் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசி வருகின்றனர். வாத்ரா சோனியாவின் மருமகன் என்ற அந்தஸ்தைத் தவிர, மத்திய அரசில் எவ்விதமான பங்கும் “நேரடியாக” இல்லாதவர் என்ற நிலையில் அவரை ஆதரிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கும், மந்திரி ப்ரதானிகளுக்கும் எங்கிருந்து வந்தது?இதில் பெரிய வேடிக்கை என்னவெனில், சிதம்பரம் கூறும்போது, வாத்ரா ஒரு ப்ரைவேட் சிட்டிஸன் என்றார். ப்ரைவேட் சிட்டிஸனுக்கு ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன? பாரதத் திருநாட்டின் ஒவ்வொரு தனிநபர் மீதான புகார்களுக்கும், இதுவரை ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவையும் சேர்ந்து வக்காலத்துக் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லையே?வாத்ரா மீதான விசாரணைக்கே அவசியமில்லை என ப.சிதம்பரம் அடித்துக் கூறுமளவிற்கு, வாத்ரா அப்படியென்ன முக்கியத்துவம் வாய்ந்தவர், சோனியாவின் மருமகன் என்ற காரணத்தைத் தவிர? சோனியாவின் மருமகன் என்பதால் அவர் இந்திய சட்ட்திட்டங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று காங்கிரஸும், மத்திய அரசும் நிறுவ முனைகிறதா? இந்தியாவின் ஜனாதிபதி ஒருவர்தான் எவ்விதமான குற்ற விசாரணைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டவர். மற்ற அனைவரும் சட்டத்திற்கு முன் சமமே எனும் நிலையில் வாத்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு, விசாரணை ஏதுமில்லாமலேயே அவர் பரிசுத்தர் என சான்றளிக்கும் அவசியம் காங்கிரஸ் அமைச்சர்களுக்கு எங்கிருந்து வந்தது?நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கார்பொரேட் விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, கட்கரி நிறுவனத்தின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நட்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் வாத்ரா விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “நோ காமெண்ட்ஸ்” என்று பதிலளித்தார். இது எவ்வாறு பதிலாகும்? எதிர்கட்சித் தலைவருக்கு ஒரு நியாயம், சோனியாவின் மருமகனுக்கு ஒரு நியாயமா?கட்கரி மீதான புகார்கள் விசாரணைக்குரியவை. தவறுகள் நிரூபிக்கப்பட்டால், அதில் தொடர்புடைய நபர்களும், நிறுவனங்களும் சட்டத்திற்குட்பட்டு தண்டனைக்குரியவை; அதே சமயம் வாத்ராவும் அவருடைய DLF நிறுவனத்துடனான பரிவர்த்தனைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் விசாரணைக்குரியவை. வேடிக்கையாக, கட்கரி மீதான குற்றச்சாட்டுகளை விட, வாத்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்களும், குற்றச்சாட்டின் தன்மையும் மிகுந்த வலுவுடையவை. இதற்கு ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கெம்கா அளித்துள்ள அறிக்கைகள், வாக்குமூலங்கள் அதிகம் வலுசேர்ப்பவை. விசாரணைக்கு உத்தரவிட்ட அடுத்த இருதினங்களில் பணியிடமாற்ற உத்தரவு கிடைத்த்தும் வெளிப்படையான ஒன்று. இவ்வாறு தன் முதுகில் அப்பியிருக்கும் சாக்கடைச் சகதியை கழுவ வக்கற்ற காங்கிரஸ் அரசாங்கம், ஊழல் ஒழிப்பு பற்றி பேசுவது விந்தையிலும் விந்தை.

NDTV யின் கட்கரி தொடர்பான உண்மை கண்டறியும் முனைப்பு காங்கிரஸிற்கு அதன் மீதான அளவுகடந்த விசுவாசத்தைக் காட்டுகிறது. கட்கரியை சரமாரியாக கேள்விகேட்ட NDTV, இதுவரை வாத்ராவை ஏன் தனது ஸ்டூடியோவிற்கு அழைத்து எவ்விதமான கேள்வியும் கேட்கவில்லை. குறைந்தபட்சம், தொலைபேசியில் கூட அழைத்து, புகார் தொடர்பான விளக்கங்கள் பெற முயற்சிக்கவில்லையே? இது தொடர்பாக ட்விட்டரில், கட்கரியைப் பேட்டி கண்ட ஸ்ரீநிவாஸன் ஜெயினைக் கேட்டதற்கு, வாத்ரா எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை பதிலை பொதுவாகச் சொன்னார். காற்று புக முடியாத இடத்திலும் புகுந்து புறப்படும் இந்த சேனலுக்கு வாத்ராவின் இருப்பிடம் பற்றி தெரியாத்தை நம்ப வேண்டிய கட்டாயம் நமக்கு! இவ்வளவு சர்ச்சையிலும் குற்றச்சாட்டுகளிலிக்கும் வாத்ரா நேரடியாக எவ்வித பதிலையும் அளிக்காமல் ஓடி ஒளிந்து கொள்வார், அவரை உத்தமன் என்று காங்கிரஸ் அமைச்சர்கள் கூறுவதை மீடியாக்களும் வெட்கமின்றி திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றன.

திக்விஜய் சிங், வீரப்ப மொய்லி போன்றவர்கள் தொடர்ந்து கட்கரி தொடர்பான முறைகேடுகள் விசாரணை செய்யப்படும் என்று சொல்லியும், விசாரணைக்கான உத்தரவை இந்த நிமிடம் வரை மத்திய அரசு வழங்கியதாகத் தெரியவில்லை; வழங்குமெனவும் நம்ப முடியவில்லை. ஏனெனில் கட்கரியை விசாரித்தால், வாத்ரா விவகாரத்தையும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்படும். குஜராத் மற்றும் ஹரியாணா தேர்தல்கள், எதிர்வரவிருக்கும் 2014 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை சந்திக்க வேண்டிய சூழலில், ஏற்கனவே பாழ்பட்டுக் கிடக்கும் பெயரை, வாத்ரா விசாரணையின் மூலம் இன்னமும் பாழ்படுத்திக் கொள்ள காங்கிரஸ் நிச்சயம் விரும்பாது. அப்படியே வாத்ரா விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டாலும், அதன் முடிவு என்னவாக இருக்குமென்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. இதற்கு மேல் என்ன சொல்வது?


இந்த கட்கரி, வாத்ரா அமளிகளுக்கு நடுவில் இன்னொரு வேடிக்கை. சமூக ஆர்வலரும், புதிய அரசியல்வாதியுமான கேஜரிவால், அனுதினமும் யாராவது ஒருவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியபடியே சென்று கொண்டிருக்கிறார். முதலில் வாத்ரா, பிறகு சல்மான் குர்ஷித், அவ்வரிசையில் கட்கரி. ஒருவர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துவிட்டு, அடுத்த நபரைத் தேடிப் போய்விடுகிறார். இதனால் முந்தைய விஷயங்கள் மறக்கப்படுகின்றன, அல்லது மறக்கடிக்கப்படுகின்றன. மீடியாக்கள் வாத்ராவையும், குர்ஷித்தையும் விட்டுவிட்டு இப்பொழுது பிரதானமாக கட்கரியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது. வேடிக்கையாக, கெஜரிவாலின் இன்னும் பெயர்வைக்கப்படாத கட்சியின் பெரும்தலைகளான பிரபல வக்கீல் ப்ரசாந்த் பூஷன் மற்றும் சமூக ஆர்வலர் (?) அஞ்சலி தமானியா மீதே நில மோசடிப் புகார்கள் எழுந்துள்ளன. அவை தொடர்பாகக் கூறிய கேஜரிவால், ஒரு “Internal Lokpal” அமைத்து விசாரணை நடத்தப் போவதாகவும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் இன்னும் பெயரே வைக்கப்படாத கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஹஸாரேவும், கேஜரிவாலும் இப்பொழுது தனித்தனியாக ஊழலுக்கெதிரான அமைப்புகள் தொடங்கிய நிலையில், எதிர்காலத்தில் அஞ்சலி தமானியாவும், ப்ரசாந்த் பூஷணும் ஊழலுக்கெதிராகவும், கேஜரிவாலுக்கெதிராகவும் அமைப்புகள் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

பேசாமல் எடியூரப்பா, கட்கரியும் பிஜேபியை விட்டு வெளியே போய் தனி கட்சி தொடங்கலாம் அல்லது காங்கிரஸில் சேரலாம். இந்த முன்னாள் ஆர்.எஸ்.எஸ் வீரர்களை நித்தியானந்தாவை தூக்கி போட்ட மாதிரி போட்டால் பிஜேபி பிழைக்கும்!

8 Comments:

kg gouthaman said...

நல்ல ஆய்வுக் கட்டுரை. தீபாவளி சமயத்தில், கையில் வெடி வத்தி வைத்துக் கொண்டு ஆங்காங்கே வெடிகளைக் கொளுத்திப் போட்டுக் கொண்டே (அது வெடித்ததா அல்லது வெடிக்கவில்லையா என்று கூடப் பாராமல்)செல்லும் விளையாட்டுப் பிள்ளை போல கேஜ்ரிவால் செல்கிறார் என்று தோன்றுகிறது!

kg gouthaman said...

:))

Anonymous said...

ஆமா, தெரியாமல்தான் கேட்கிறேன், இந்த சமூக ஆர்வலர் அப்படின்னா என்ன? கேஜரிவால் சமூக ஆர்வலர்; நீயா நானாவில் வரும் விருந்தினர்கள் எல்லோரும் சமூக ஆர்வலர்கள்; புதிய தலைமுறை 'நேர்படப் பேசு', சத்தியம் டிவி 'சத்தியம் சாத்தியமே' போன்ற நிகழ்ச்சிகளில் பேச வருபவர்கள் எல்லோரும் சமூக ஆர்வலர்கள்... அப்படிப் பார்த்தா சின்மயியும், அவரால் இப்ப களி தின்பவர்களும் கூட சமூக ஆர்வலர்கள்தானே! இட்லிவடை 'சிறந்த சமூக ஆர்வலர் - 2012' அப்படின்னு ஒரு விருது கொடுக்கலாம்!

சரவணன்

Balaji Palamadai said...

அர்விந்த் கேரிஜ்வல் Thiru Salman Khurshid மற்றும் Nitin Katkari மேல் உழல் புகார்கள் எழுப்பினார் நான் இருவரையுமே நல்லவர் என்று கூரவில்லை ஆனால் திரு Salman Khurshid மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது ஆனால் Nitin Katkari மிது நடவடிக்கை எடுக்க பாய்கிறது இப்போது மட்டும் இவர்கள் கூறுவது போல அர்விந்த் கேரிஜ்வல் உளறவில்லையா தம் கட்சிக்கு ஒரு நிதி எதிர் கட்சிக்கு ஒரு நிதி ya.... வாழ்க ஜனநாயகம் ...

jaisankar jaganathan said...

// பிஜேபி பிழைக்கும்! //

பிஜேபி பொழைக்க சான்ஸே இல்லை

Anonymous said...

This article is biased towards Nitin Katkari...He contributions (?) are as equal as spectrum scam, following similar formula, though he did in smaller level. Still, it is wrong and he is currupt. The article is targeting கேஜரிவால், I don't know why?. Is there any rule if you are currupt, u should not talk about other's curruption and go with them? There is no matter who blows the whistle. I don't like this kind of articles in this blog, since I am one of the fans who really enjoy reading good stuff

Anonymous said...

This article is biased towards Nitin Katkari...He contributions (?) are as equal as spectrum scam, following similar formula, though he did in smaller level. Still, it is wrong and he is currupt. The article is targeting கேஜரிவால், I don't know why?. Is there any rule if you are currupt, u should not talk about other's curruption and go with them? There is no matter who blows the whistle. I don't like this kind of articles in this blog, since I am one of the fans who really enjoy reading good stuff

Kannan said...

இதுக்குதான் நான் சொன்னேன், கலைஞ்சரை (எப்படிப்பா இத kalaizhar - ஆ மாத்துறது!) பகைச்சுக்காதீங்கடா, விஞ்ஞான முறையிலே கொள்ளை அடிக்கறது தெரியாம போயிடும்-ன்னு. சொன்னா எங்கங்க கேட்குறான்.