பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 19, 2012

வடையும் நானும் - சி.சரவணகார்த்திகேயன்

(ஆனந்த) விகடனும் நானும் என பிரபலங்கள் எழுதியது போல் (இட்லி) வடையும் நானும் என நான் எழுதுவதே கட்டுரைத் தலைப்பின் உள்ளுறை உவம விளக்கம் (இட்லியை விட எனக்கு வடை தான் பிடிக்கும் என்பதால் செய்யப்பட்டிருக்கும் ஓரவஞ்சனை என யாரும் எண்ணி விடலாகா என்பதற்காகவே இந்த விளக்கம்).

இட்லி வடை என்கிற வர்ச்சுவல் பண்டத்தின் தொடர் அல்லது தீவிர நுகர்வோன் அல்லாத ஒருவனின் அனுபவம் மற்றும் பார்வை இப்பதிவு எனக் கொள்ளலாம்.

நான் இணையத்தில் எழுத வந்த புதிதில் (2007ம் ஆண்டின் இறுதி) இட்லி வடை வலையுலகில் பிரபலமாக இருந்தது என்றாலும் ஏனோ அதைப் படிக்கவில்லை. பின் குமுதம் இதழ் சிறந்த 10 வலைப்பூக்கள் எனப் பட்டியலிட்டு, அதில் இட்லி வடை முதலிடம் வந்த போதுதான் சுதாரித்து அதைக் கவனிக்கத்தொடங்கினேன்.


இட்லி வடை தளம் பற்றிய என் ஆரம்பகால அபிப்பிராயம் அது பத்திரிக்கைகளில் வரும் சில "குறிப்பிட்ட" செய்திகளை அப்படியே தரவிறக்கிக் தரும் ஒரு வலைப்பூ என்பது தான். எனது கூகுள் ரீடரில் கூட "CopyPaste" என்ற ஃபோல்டரில்தான் இதை வைத்தேன். பிற்பாடு அவ்வப்போது வாசிக்க நேர்ந்த போது தான் சில அங்கதமான கமெண்ட்களுடன் (அவற்றில் ஆங்காங்கே ஒருபக்க சார்பு இருந்தாலும்) சமகால நிகழ்வுகளை ரசனையாய் ஆவணப்படுத்தும் பணியைச் செய்து வருவது புரிந்தது.

பிற்பாடு இதே விஷயத்தை பலர் தம் வலைப்பூக்களில் செய்தாலும், இப்போது ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மைய நாடியே இது போன்ற அரசியல் செய்திகளைப் பகடி செய்வது தான் என்றாகி விட்டாலும் இவற்றுக்கெல்லாம் இணைய முன்னோடி சந்தேகமின்றி இட்லி வடை தான்.

யோசித்துப் பார்க்கும் போது இட்லி வடையை மேலோட்டமாகக் காப்பி பேஸ்ட் வேலை என அலட்சியமோ உதாசீனமோ செய்ய வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. எல்லோருக்கும் எல்லா இதழ்களும் பத்திரிக்கைகளும் வாசிக்க வாய்ப்பதில்லை. இட்லி வடை அவற்றில் வந்த சில முக்கிய செய்திகளை தன் பாணியில் கோடிட்டுக் காட்டும் ஒரு customised mashup-ஆக செயல்பட்டு வருகிறது.

இட்லி வடைக்கு எவை முக்கியமான செய்திகளாகப் படுகிறது என்பதோடு அவரவர்க்கு முரண் இருக்கலாம். ஆனால் சேவையை மறுதலிப்பதற்கில்லை.

இப்போதும் இட்லி வடையில் வரும் அத்தனை பதிவுகளையும் வாசிப்பதில்லை. விஷயம் எதைப் பற்றியது என்பது பொறுத்துத் தான் படிப்பது; மற்றபடி ரீடரில் மேலோட்டமாக ஸ்க்ரோலி விடுவதே வழக்கம் (பெரும்பாலான வலைப்பூக்களை இப்படித் தான் 'வாசிக்கிறேன்'. தினசரி கிடைக்கும் 15 நிமிடங்களில் சப்ஸ்க்ரைப் செய்து வைத்திருக்கும் 500 வலைப்பதிவுகளின் அத்தனை புதிய இடுகைகளையும் பார்வையிட வேண்டும் என்கிற அழுத்தத்தின் நீட்சியான வாசக பாவமே இது).

ஆனால் அத்தனை அவசரத்திலும் இட்லி வடையின் எந்தக் கடைசி வரி மஞ்சள் கமெண்ட்டையும் மிஸ் பண்ணுவதேயில்லை. ஒருவகையில் இட்லி வடையின் பிரதான அடையாளமே அது தான். புதிய படங்களின் FIR விமர்சனங்களையும் விடுவதில்லை. சென்னைப் புத்தகக் கண்காட்சி குறித்து ஒவ்வொரு வருடமும் இட்லி வடையில் வெளியாகும் தொடர் பதிவுகளையும் வாசித்து விடுவேன்.

விருந்தினர் பக்கத்தை இட்லி வடையின் முக்கிய USPஆகப் பார்க்கிறேன். ஒரு குறிப்பிட்ட எல்லை வரை இட்லி வடைக்கு பன்முகத்தன்மையை அளித்ததில் இதற்கு முக்கியப்பங்குண்டு. சமீப முதலிரவுக்கதை வரை அதைத்தொடர்கிறேன். ச.சங்கர் என்பவர் எழுதிய மண்டே மர்மங்கள் தொடரும் ஒரு நல்ல முயற்சி.

ஹரன் பிரசன்னாவுக்கு இட்லி வடையுடன் என்ன தொடர்போ யான் அறிந்திலன். ஆனால் அவர் பெயரை அடிக்கடி இதில் பார்க்கிறேன். நானும் அவரும் பேசியதில் இட்லி வடை இதுவரை வந்ததில்லை. போலவே கிழக்கு பதிப்பகமும் அதன் முன்னாள் இந்நாள் அங்கத்தினர்களான பா.ராகவன், பத்ரி சேஷாத்ரி போன்ற பெயர்களும் அவ்வப்போது வருகின்றன. ஓ பக்கங்கள் ஞாநியும் ஆங்காங்கே!

இட்லி வடையின் கவர்ச்சி என்பது அது யாரென்றே தெரியாத anonymityயில் இருக்கிறது. பேயோனின் ஆரம்பக் கவர்ச்சி கூட இந்த அடிப்படையிலானதே. ஒருமுறை நண்பர் ஒருவர் "இட்லி வடை யூஎஸ்ஸில் இருக்கிறார்" என்று சொல்ல, சாட்டில் பேசிய போது அதை விசாரித்தேன். "இருக்கலாம்" என்றார்.

புன்னகைத்துக் கொண்டேன்.

யாராயிருந்தால் என்ன! இட்லிக்கும் வடைக்கும் நதிமூலம் ரிஷிமூலம் எதற்கு? வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு சொகுசாகவும் இருந்தால் போதாதா, என்ன!

*

“இட்லி வடை பற்றிய ஒரு கட்டுரை எழுதித் தர முடியுமா?" என்று அவர் கேட்ட போதே “திட்டி எழுதினாலும் போடுவேன்” என்றும் சொல்லி இருப்பதால் அவரது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் பொருட்டு சில விஷயங்கள் பேச விரும்புகிறேன்.

என் வரையில் இட்லி வடையின் அரசியல் நிலைப்பாடு குறித்த பிம்பம் அது ஒரு பிராமணிய, இந்துத்துவ தளம் என்பதே. ஒரு காலத்தில் திராவிட, பின் கம்யூனிஸ அனுதாபியாக இருந்து மீண்ட பின்புலத்தில் இது எனக்கு உவப்பளிக்காத விஷயம்.

நரேந்திரமோடி, ஜெயலலிதா, சுப்ரமணியம்சுவாமி, சோ, என்.ராம், இராமகோபாலன் போன்றவர்களையும், அவர்களைப் பற்றி (மட்டும்) அதிகம் பேசுபவர்களையும் இந்த லேபிள் ஒட்டிப்பார்க்கும் என் புரிதல் தூரத்துக் காட்சிப்பிழையாகவும் இருக்கலாம்.

எழுத்தாளர் என்றாலே அசோகமித்திரன், தினசரி என்றாலே தி ஹிந்து, மேகஸின் என்றாலே துக்ளக், வலைதளம் என்றாலே தமிழ் ஹிந்து, கட்சி என்றாலே இந்து முன்னணி என்று இட்லி வடை முன்வைக்கும் பெயர்கள் இதை மீண்டு மீண்டும்
செய்கின்றன. இட்லி வடை பற்றிய சுய அறிமுகத்தில் "பிடித்த புத்தகம்: சமைத்து பார் (அல்லையன்ஸ் பதிப்பகம்)" என்று தன் அரசியல் நிலைப்பாட்டின் சுயபகடி போன்ற பாவனையில் அந்தப் பதிப்பகத்தை முன் நிறுத்துவது ஓர் உதாரணம். இட்லி வடை தளத்தின் Custom Google Searchல் ‘இந்து’ என்ற வார்த்தையை இட்டுத் தேடினால் வரும் பதிவுப் பட்டியல் மட்டும் 10 பக்கங்களைத் தொட்டு நிற்கின்றன!

இதனால் இட்லி வடையில் சில விஷயங்கள் monotonous-ஆகத் தோன்றுகின்றன. இட்லி வடை இதைத் திட்டமிட்டு செய்யவில்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட இந்த நிலைப்பாட்டை விரும்புபவர்கள் இட்லி வடையை இந்தப் பிரத்யேக அடையளத்தின் காரணமாக தமக்குப் பிடித்த வாசிப்பாகக் கொள்வது நடக்கிறது.

*

என் முதல் புத்தகம் சந்திரயான் விளம்பரமும், என் முதல் கவிதைத்தொகுதியான பரத்தை கூற்று நூல் வெளியீட்டு நிகழ்வின் அழைப்பிதழும் என் வேண்டுகோளின் படி இட்லி வடையில் வெளியானது. இப்படி ஆர்வமுள்ளோரை என் எழுத்துக்கள் பரவலாய்ச் சென்றடைய ஒரு பாலமாக இட்லி வடை இருந்திருக்கிறது. அதற்கு என் ப்ரியத்தையும் நன்றியையும் இங்கே பதிவு செய்கிறேன். பின் கொஞ்சம் தினங்கள் முன் குங்குமம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் எனது ச்சீய் பக்கங்கள் தொடர் தொடர்பான ஒரு பத்தி கருத்து இட்லி வடையில் வெளியானது.

இது வலைப்பூக்களுக்கான காலமில்லை. சமூக வலைதளங்கள் அவ்விடத்தை அராஜகமாய் ஆக்ரமித்துக் கொண்டு வருகின்றன. ட்வெண்டி-20யால் ஒன்-டே பிரபலம் இழந்து வருவதைப் போன்றது தான் இதுவும். இந்த அவசரங்களுக்குப் பிறந்த தலைமுறையினர் நிறைந்திருக்கும் சூழலிலும் ஒன்பது ஆண்டுகளைக் கடந்து இன்னமும் கம்பீரமாய் நின்று கொண்டிருப்பதும் தனக்கான வாசகர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதும் வெகுநிச்சயமாய் சாதனை தான்.

இட்லி வடை தளத்தை இணையம் உள்ளளவும் நீடித்து இயங்க வாழ்த்துக்கிறேன்!

- சி.சரவணகார்த்திகேயன்
http://www.writercsk.com/

‘இந்து’ என்ற வார்த்தையை இட்டுத் தேடினால் வரும் பதிவுப் பட்டியல் மட்டும் 10 பக்கங்களைத் தொட்டு நிற்கின்றன!.... கலைஞர் என்று தேடி பாருங்க இன்னும் அதிகமாக வரும் :-)

16 Comments:

dr_senthil said...

இட்லி வடை ஒன்றும் ப்ராமின/இந்துத்துவ உணவு இல்லையே.. திராவிட/ இடது சாரிகள் இட்லி வடை உண்பதில்லையா? பிடிச்சா சாப்பிடுங்க.. இதுக்கு எதுக்கு மத /சாதி/ கட்சி சாயம் பூசுகின்றனர்? வேணா "புளிகரசல்" என்று புது பெயர் இடுங்கள் தளத்திற்கு

சிந்திப்பவன் said...

"வலையுலகின் வைரமுத்து" CSK எழுதிய இந்தப் பதிவை சாதாரண தமிழில் யாராவது மொழிபெயர்த்தால் என்னைப்போல பலர் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

Anonymous said...

என்னது

இந்தக் கட்டுரையை எழுதியவர் எழுத்தாளரா?

தமிழர்களின் தலைவிதியை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

Anonymous said...

நேத்து நான் ஐயரு வீட்டு பத்திரிக்கை தான் இட்லிவடைன்னு சொன்னப்ப நக்கல் பண்ணீங்களே

இன்னிக்கு சரவணாவே என்ன எழுதியிருக்கார் பாருங்க

//நரேந்திரமோடி, ஜெயலலிதா, சுப்ரமணியம்சுவாமி, சோ, என்.ராம், இராமகோபாலன் போன்றவர்களையும், அவர்களைப் பற்றி (மட்டும்) அதிகம் பேசுபவர்களையும் இந்த லேபிள் ஒட்டிப்பார்க்கும் ....................

எழுத்தாளர் என்றாலே அசோகமித்திரன், தினசரி என்றாலே தி ஹிந்து, மேகஸின் என்றாலே துக்ளக், வலைதளம் என்றாலே தமிழ் ஹிந்து, கட்சி என்றாலே இந்து முன்னணி என்று இட்லி வடை முன்வைக்கும் பெயர்கள் இதை மீண்டும் மீண்டும் செய்கின்றன. //

இது தான் இட்லி வடையின் அடையாளம் ! ஐயராக இருந்தது போதும். தமிழனாக, இந்தியனாகவும் இருக்க பாருங்கள் !

kg gouthaman said...

//யாராயிருந்தால் என்ன! இட்லிக்கும் வடைக்கும் நதிமூலம் ரிஷிமூலம் எதற்கு? வாய்க்கு ருசியாகவும் வயிற்றுக்கு சொகுசாகவும் இருந்தால் போதாதா, என்ன!//
same pinch.

Anonymous said...

உமக்குத் திராணி இருந்தால் நீரும் ஜெயாவைப் பற்றி எழுதி இட்லிவடைக்கு அனுப்பி வையுமேன் ஐயா...இட்லிவடை அதைப் போடாவிட்டால் நானும் உங்களுடன் சேர்ந்து சாத்துவேன்.//


சுத்தம். ஜியன் ஸ்கூல் மேலாளர தூக்கி உள்ள போட்டாங்களே அங்க ஒரு குழந்தை இறந்த பொது அது மாதிரி padmaseshadri ஸ்கூல் correspondenta ஏன் போடலன்னு ஒரு கமெண்ட் போட்டேன். இவா அதை பப்ளிஷ் பண்ணலை. இந்த அழகுல செயாவ பத்தி பதிவு போட்டுட கீட்டுட போறாங்க.

ஏன் தமிழ்நாடே கஷ்டபடர கேவலபடர மின் வெட்ட பத்தியே எதுவும் பதிவு போட்ட மாதிரி தெரியல. அவா ஆளுக்குனா ஒரு ஞாயம். மத்தவாக்குணா ஒரு ஞாயம்.

IdlyVadai said...

//ஜியன் ஸ்கூல் மேலாளர தூக்கி உள்ள போட்டாங்களே அங்க ஒரு குழந்தை இறந்த பொது அது மாதிரி padmaseshadri ஸ்கூல் correspondenta ஏன் போடலன்னு ஒரு கமெண்ட் போட்டேன். இவா அதை பப்ளிஷ் பண்ணலை. இந்த அழகுல செயாவ பத்தி பதிவு போட்டுட கீட்டுட போறாங்க.//

எனக்கு நினைவு இல்லை. ஆனால் அதில் ஏதாவது கேட்ட வார்த்தை அல்லது பொதுவாக ஒரு குறிப்பிட்ட ஜாதியை பற்றி திட்டியிருந்தால் பிரசுரம் ஆகியிருக்காது.

Anonymous said...

//எனக்கு நினைவு இல்லை!//

அங்க நிக்குதுடா இட்லி, வடை

Anonymous said...

//எனக்கு நினைவு இல்லை. ஆனால் அதில் ஏதாவது கேட்ட வார்த்தை அல்லது பொதுவாக ஒரு குறிப்பிட்ட ஜாதியை பற்றி திட்டியிருந்தால் பிரசுரம் ஆகியிருக்காது.//


கேட்ட வார்த்தை ஏதும் இல்லை. எந்த ஜாதியையும் திட்டவும் இல்லை. அதுல iyengaar நு ஒரு வார்த்தை வந்தது. அதனால் தான் அது reject ஆனதா? ஏன் இதுக்கு முன்னாடி விஸ்வாமித்ரர் என்ற பெயரில் ஒருத்தர் முஸ்லிம்களை போட்டு கிழி கிழின்னு கிழிசாரே இட்லி வடைல. அதெல்லாம் மட்டும் எப்படி பப்ளிஷ் ஆச்சு?

Anonymous said...

//என் வரையில் இட்லி வடையின் அரசியல் நிலைப்பாடு குறித்த பிம்பம் அது ஒரு பிராமணிய, இந்துத்துவ தளம் என்பதே.//

க க க போ

geeyar said...

//இந்து’ என்ற வார்த்தையை இட்டுத் தேடினால் வரும் பதிவுப் பட்டியல் மட்டும் 10 பக்கங்களைத் தொட்டு நிற்கின்றன!.... கலைஞர் என்று தேடி பாருங்க இன்னும் அதிகமாக வரும்//

கலைஞரைப் பற்றி தாக்கி எழுதியதும் உங்கள் இந்துத்துவா கொள்கைதானே. மின்வெட்டை பற்றி ... கலைஞர் ஆட்சியில் 2 மணி நேர மின்வெட்டு இருந்த போது அனைத்து ஊடகங்களும் தலைகீழாக நின்றன. தினமணி அடடே மதி கார்டூனில் முழுவதும் கருப்பு கட்டம் போட்டு மின்வெட்டை பற்றி தன் எதிர்ப்பை காட்டினார். அப்படி என்றால் இப்பொழுது தினமணி முழு பேப்பரையும் கருப்பாகத்தான் அச்சிட வேண்டும். மதி இப்போ எங்க இருக்காரோ?

geeyar said...

//இந்து’ என்ற வார்த்தையை இட்டுத் தேடினால் வரும் பதிவுப் பட்டியல் மட்டும் 10 பக்கங்களைத் தொட்டு நிற்கின்றன!.... கலைஞர் என்று தேடி பாருங்க இன்னும் அதிகமாக வரும்//

கலைஞரைப் பற்றி தாக்கி எழுதியதும் உங்கள் இந்துத்துவா கொள்கைதானே. மின்வெட்டை பற்றி ... கலைஞர் ஆட்சியில் 2 மணி நேர மின்வெட்டு இருந்த போது அனைத்து ஊடகங்களும் தலைகீழாக நின்றன. தினமணி அடடே மதி கார்டூனில் முழுவதும் கருப்பு கட்டம் போட்டு மின்வெட்டை பற்றி தன் எதிர்ப்பை காட்டினார். அப்படி என்றால் இப்பொழுது தினமணி முழு பேப்பரையும் கருப்பாகத்தான் அச்சிட வேண்டும். மதி இப்போ எங்க இருக்காரோ?

Anonymous said...

சமகாலத் தமிழ் புரிய மாட்டேங்கிறதே!

சுபத்ரா கவிதைகள் அப்படி இப்படி இருந்தாலும், புரிந்தாவது தொல்லைக்கும்.

Anonymous said...

///ச.சங்கர் என்பவர் எழுதிய மண்டே மர்மங்கள் தொடரும் ஒரு நல்ல முயற்சி.///

Thanks...Sa.Sankar

Anonymous said...

99% bloggers are criticizing paapans only. for every problems they are blaming paapans only.
ananymous wants idly vadai to join that chorus.
gopalasamy

Anonymous said...

கோபால் கண்ணா என் அண்ணா,

வாழ்க நின் கொற்றம் வாழ்க உன் கொடை. (கேப்ஸ்-ல் அடிச்சிவிடாம இருந்ததுக்கு தான்)