பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 15, 2012

ஃபிலிப்கார்ட்டின் கதை

ஏப்ரல் மாதம் தி.ஹிந்துவில் ஃபிலிப்கார்ட் பற்றி ஒரு கட்டுரை வந்தது. அன்பர் ஒருவர் எனக்கு மொழிபெயர்த்து தந்தார்(அவருக்கு நன்றி) அது கீழே.

சில வாரங்களுக்கு முன் ஃபோர்ப்ஸ் இந்தியா ஃபிலிப்கார்ட் பற்றி நெகடிவ் கட்டுரை ஒன்று எழுதியிருந்தது ( அதன் லிங்கையும் கீழே தந்துள்ளேன் )

தமிழில் இது போல கட்டுரைகள் அவ்வளவாக வருவதில்லை.

“என்னுடைய ரகசிய சாண்டாவிடமிருந்துதான் அது எனக்கு கிறிஸ்த்துமஸ் பரிசாக கிடைத்தது; அதன் மூலம் பலவற்றுள் ஒன்றை தேர்வு செய்ய முடிந்தது, சவுகரியம், ஒரு புதிய உறவு எல்லாம் கிடைத்தது”, மும்பையிலிருக்கும், 26 வயது திட்ட நிர்வாகியான நவீத் அன்சாரி, இப்படித்தான் ஃபிலிப்கார்ட்டுடனான தனது முதல் உறவைப் பற்றிக் கூறுகிறார். நகரத்தில் பெரும்பாலானவர்கள் பார்க்கும் பணியில் இருக்கும் அவருக்கு, நேரம் குறைவாகவே இருக்கிறது; அவரும் மற்றவர்களைப் போலே சவுகரியத்தை விரும்புகிறார். அதனால், ஃபிலிப்கார்ட்டின் இ-வவுச்சர் அவருக்கு வரப்பிரசாதமாகத் தோன்றியது. இந்த பரிசு தான் அவர் மின்வணிகத்தில் முதலடி எடுத்து வைக்கவைத்திருக்கிறது; அவருடைய பயணம் இப்போது தான் தொடங்கியிருக்கிறது.

இன்றைக்கு பல இந்தியர்கள் ஆர்வமுடன் மின் சில்லறை வணிகத்தை பற்றிக் கொள்கிறார்கள். c போன்ற பிரபல தளங்கள், ஆஃப்லைன் வாடிக்கையாளர்களை, இணையத்தில் நல்ல பேரங்களை வேட்டையாடுபவர்களாக மாற்றியிருக்கின்றன. “எனக்கு, ஃபிலிப்கார்ட்டில் பணம் செலுத்துவது எளிதாக இருப்பதால் அது ஒரு நல்ல தேர்வாகத் தெரிகிறது, மேலும் அத்தளத்தில் இருக்கும் பல்வகையான பொருட்கள், கூடுதல் நன்மையாக எடுத்துக் கொள்கிறேன்.” ஃபிலிப்கார்ட்டைப் பொறுத்தவரை, ஆன்லைனில் பொருள் வாங்குவதால் கிடைக்கும் மகிழ்ச்சியையும் சவுகரியத்தையும் இன்னும் பல வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்வதே. அந்நிறுவனத்தில் தலைமைச் செயல் அலுவலரும் நிறுவனர்களில் ஒருவருமான சச்சின் பன்சால் (இன்னொருவர் பின்னி பன்சால்), வாடிக்கையாளர் சேவையின் பலத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். “இந்திய வாடிக்கையாளருக்கென்றே பிரத்யேகமான தயாரிப்பை உருவாக்க வேண்டுமென்ற எங்கள் சின்ன ஆசை, இன்றைக்கு எங்களுடைய கற்பனையைத் தாண்டி வளர்ந்திருக்கிறது” என்கிறார் சச்சின். ஃபிலிப்கார்ட்டின் வரலாற்றைக் கொஞ்சம் நோக்கினால் தெரியும், முதலில் அது விலைகளை ஒப்பிட்டுப்பார்க்கும் தளமாத்தான் தொடங்கப்பட்டது, ஆனால் ஒப்பிட்டுப்பார்க்க போதிய மின்வணிகத் தளங்கள் அப்போது இல்லை. அப்போது, ஐஐடி தில்லியிலும் பின்னர் அமேசான்.காம்-லும் சகாக்களாக இருந்த இரண்டு பன்சால்களும், “ஏன் ஒரு மின்வணிகத் தளத்தை தொடங்கக் கூடாது?” என்று யோசித்தார்கள். இப்படித்தான் ஃபிலிப்கார்ட் உருவானது. எட்டாயிரம் டாலர் முதலீட்டில் தொடங்கிய இந்தச் சின்ன ஆசை, இன்றைக்கு நூறுமில்லியன் டாலர் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. நிறுவனர்களுக்கு, வாடிக்கையாளருக்கான இணைய வெளியில் இருக்கும் ஆர்வம், அந்த பிராண்டிலும் வெளிப்படுகிறது; வாடிக்கையாளர் சேவைக்கும் அவர்களுடைய திருப்திக்கும் மறுபெயராய் விளங்குகிறது ஃப்லிப்கார்ட். ‘வாடிக்கையாளர் புன்னகைப்பதற்கு முன்னரே அவர் உங்கள் வாடிக்கையாளர் ஆகிவிட்டதாய் நினைத்துவிடாதீர்கள்’ என்பதே நிறுவனத்தில் செயல் மந்திரம். அதை அவர்கள் வெற்றிகரமாக செயல்படுத்தவும் செய்கிறார்கள்.

மின்வணிகம் என்பது வாடிக்கையாளர்களின் மனதை மிக வேகமாக ஆக்கிரமித்துக் கொண்டுவருகிறது. பெருநகரங்களில் நேரமின்மையே, ஆன்லைனில் பொருள் வாங்குவதற்கான பெரிய காரணியாக இருக்கிறது. மற்றொரு பக்கத்தில், பல்வேறு வகையான பொருட்களைப் பெற முடிவதால், சிற்றூர் மற்றும் சிறுநகரங்களில் இருப்பவர்களை ஆன்லைன் பக்கம் இழுக்கிறது. தங்களுடைய கடைகளில் போதுமான சரக்கை கொள்முதல் செய்துவைப்பது பெரிய சில்லறை வணிகர்களுக்கு சவாலாகவே இருக்கிறது. பெரும்பாலும் வாடிக்கையாளர்களால் தங்களுக்கு விருப்பமான பொருளைப் வாங்க முடியாததும், அவர்களை மின் சில்லறை வணிகத்தின் பக்கம் வர வைக்கிறது. ”புத்தகங்களை நேரடியாகக் கடைகளில் போய் வாங்குவதைத் தான் நான் விரும்புவேன், ஆனால் இதுவரை, மற்ற இடங்களில் கிடைபப்தற்கு அரிதான, மங்கா எனும் ஜப்பானிய இலக்கியத்தை ஃபிலிப்கார்டால் மட்டுமே தர முடிந்திருக்கிறது. மேலும் ஆன்லைனில் வாங்குவது, மலிவாகவும் இருக்கிறது. அந்த தளத்திற்கு நான் அடிக்கடி போவேன்”, என்று ஜெய்ப்பூரைச் சேர்ந்த ரித்திம்மா தோஷின்வால் என்ற உள்ளடக்க எழுத்தாளர் கூறுகிறார்.

இதைப் போன்ற அனுபவங்கள் மூலம் பெருநகரங்களைத் தாண்டியும் ஃப்லிப்கார்ட் பிரபலமடைந்திருப்பதை புரிந்து கொள்ளலாம். “2011-2012ம் வருடத்தில் நூறுமில்லியன் டாலருக்கு மேல் வருவாயை அடைவோம். 2015ல் ஒரு பில்லியன் டாலரை அடைய விரும்புகிறோம். ஆனால் இப்போதைய போக்கைப் பார்க்கும் போது, அதை விரைவிலேயே அடைந்துவிட முடியும் என்று தோன்றுகிறது,” என்று ஃப்லிப்கார்ட்டின் தலைமை இயக்க/செயல்பாட்டு அதிகாரியான பின்னி சொல்கிறார். “சாதாரண சில்லறை வணிகத்திலும், ஆன்லைன் சில்லறை வணிகத்திலும் விழுமியங்கள் மாறுகின்றன. பொருளை தொட்டு உணர்ந்து வாங்குவதே நேரில் சென்று பொருள் வாங்க உற்சாகமூட்டுகிறது. ஆன்லைனைப் பொறுத்தவரை சவுகரியமே முன்னால் நிற்கிறது. இரண்டுமே வளர்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன,” என்கிறார் சச்சின்.

ஒரு ஆன்லைன் தொழில் பிழைக்க, உறுதியான பின்புல அமைப்பு இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு வாடிக்கையாளர் பரிமாற்றைத்த முடித்தவுடன், இந்த பின்புல அமைப்பே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறது. ஃபிலிப்கார்ட், முதலில் வலைதளத்தின் மூலம் பெறப்படும் ஆர்டர்களுக்கு, பொருட்களை சப்ளையர்களிடமிருந்து வாங்கி அதை வாடிக்கையாளருக்கு அனுப்பி வந்தது. ஆனால், காலப்போக்கில், அவர்கள் வேர்ஹவுஸ் மாதிரிக்கு மாறிவிட்டார்கள். இப்போது நிறுவனம் தனக்கென்று சொந்த வேர்ஹவுஸ்களையும் அவற்றுக்கான பொருள் இருப்புப் பட்டியலையும் வைத்திருக்கிறது. விற்பனை முன்னோட்டம் பொருள் இருப்பை தீர்மானிக்கிறது; மீதமிருக்கும் பொருள், விற்பனை நிலவரத்தைச் சொல்லிவிடுகிறது; இதுவொரு வட்டம். “சுமார் 60 முதல் 70 சதம் வரையிலான டெலிவரி எங்களுடைய சொந்த வலைப்பின்னல் மூலமே நடக்கிறது,” என்கிறார் சச்சின். இந்த அமைப்பு, ஒட்டுமொத்த பொருள் அனுப்புதலை தங்களது கைக்குள் வைத்திருக்க முடிகிறது என்று அவர் நம்புகிறார்.

பொருட்களை கொண்டு சேர்ப்பதில் ஏற்படும் தாமதமோ அல்லது தவறான பொருளைக் கொண்டு சேர்ப்பதோ தான் இந்நிறுவனத்திற்கு பிரச்சனை. வாடிக்கையாளரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் என்பதால், இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் வெகுநாள் வைத்திருக்க முடியாது. "இப்படித் தவறாக அனுப்பப்படும் பொருட்களை பிந்தொடர்வது பெரிய சவால் தான். சரியாக கொண்டு சேர்க்கப்படாத ஆர்டர்களின் சுவடுகளைத் தேடுவதே பெரிய வேலை, அவற்றுக்கான செலவும் அதிகம்”. அதனால் தான் ஃப்லிப்கார்ட் வாடிக்கையாளர் சேவையில் அதிக கவனம் செலுத்துகிறது; ’எங்களுடய் சேவையை இன்னும் சிறப்பானதாக்குக்குவோம்’ என்பதே அவர்களுடைய சித்தாந்தம். பின்னி சொல்கிறார், “எங்கள் சங்கிலித் தொடரிலும் தொழில்நுட்பத்திலும் செய்யப்படும் பெரிய முதலீடுகள் மூலம், எங்களால் பெரிய பொருள் கிடங்குகளையும் செயல்முறையை தன்னியமாக்கவும் முடியும். எங்களுடைய பெரிய நோக்கம், இந்தியா பொருள் வாங்கும் முறையை மறுவடிவம் செய்வதே.”

மாறாத வாடிக்கையாளர் சேவையே ஃபிலிப்கார்ட்டின் தனித்தன்மை. சரியான நேரத்தில் சிறந்த முறையில் செய்யப்படும் சேவையின் மூலம் அடையும் வாடிக்கையாளர் திருப்தியை தள்ளுபடிகள் மூலம் அடைந்துவிட முடியாது என்று அதன் நிறுவனர்கள் நம்புகிறார்கள். அதே போல், நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலம் ஃப்லிப்கார்ட், வாடிக்கையாளரோடு நிகழ்நேரத்தில் தொடர்பில் இருக்கிறது. மின்வணிகத்தின் முன்னோடியான இவர்களுக்கு, நேர்மையே எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்த கொள்கையாக இருக்கிறது. "அந்த இடத்திலேயே முடிவுகளை எடுக்க எங்கள் வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகளை பயிற்றுவித்திருக்கிறோம். வாடிக்கையாளரின் கவலைகளைத் தீர்ப்பதன் மூலமும், எங்களுடைய தவறுகளை ஒப்புக்கொள்வதன் மூலமும், வாடிக்கையாளர் நலனுக்கு நாங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கிறோம். எங்களுடைய தொழிலில் பொருளைக் கொண்டு சேர்க்கும் விதம் தான் மகிழ்ச்சியைத் தரமுடியும்,” என்கிறார் சச்சின்.

வாழ்வழியாக ஃபிலிப்கார்ட்டைப் பற்றிச் சொல்லப்படும் விஷயங்கள் அவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரை வாங்கித்தந்திருக்கிறது. மற்ற இடங்களிலும் அவர்கள் முன்னணியில் தான் இருக்கிறார்கள். சமீபத்தில் லெட்ஸ்பை.காம்-ஐ வாங்கியதன் மூலம் அவர்கள் வளர்ச்சிவேகம் அதிகரிக்கும். பின்னியின் நீண்ட காலத் திட்டத்தில், நிறுவனமே நடத்தும் பொருள் கொண்டு சேர்க்கும் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதும், ஒத்த கருத்துடைய தொழில் நிறுவனங்களோடு கூட்டு சேர்வதும் அடங்கும். “எங்களுடைய இலக்கை அடைய உதவும், கூட்டுக்கு நாங்கள் தயார்” என்கிறார் அவர். மின்வணிகத்தில், வென்ச்சர் முதலீடுகள் அதிகமாகி வருவது இருவருக்கும் மகிழ்ச்சியே, “ பின்புலத்தை இன்னமும் உறுதியாக்க நிறைய முதலீடுகள் வர வேண்டும்” என்கிறார் சச்சின்.

எல்லா தொழில்முனைவர்களைப் போலே இவரும், ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு புதுமை மிக முக்கியம் என்று அபிப்ராயப்படுகிறார். வாடிக்கையாளரின் சவுகரியத்திற்காகவும் அவருக்கு விருப்பமான முறையை பயன்படுத்துவதற்து உதவியாகவும், கேஷ்-ஆன் -டெலிவரி மற்றும் வாடிக்கையாளர் இடத்திலேயே கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. டிஜிட்டல் களத்திலும் நிறுவனத்தின் இடத்தை விரிவுபடுத்த flyte என்ற இசையை பணம் செலுத்தி தரவிறக்கிக் கொள்ளும் சேவையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். எழுநூறுக்கு மேற்பட்ட வகை இசையையும் 55 மொழிகளுக்கு மேலும் mp3 வடிவில் வாடிக்கையாளர் வாங்கமுடியும். DRM என்று அழைக்கப்படும் digital rights management இல்லாக இந்த கோப்புகளை, எந்த கருவிகளில் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் இசைக்க முடியும்.

புதுமை என்பது தொழில்துறையின் ஒரு அம்சம் மட்டுமே. இன்றைய தேதியில், பாரம்பரியமானதோ நவீனமானதோ, ஒரு தொழிலுடைய இடம், அது எந்தளவுக்கு திறமையாக தகவல்களைக் கையாள்கிறது என்பதில் தான் இருக்கிறது. ஃபிலிப்கார்ட் தங்களிடம் இருக்கும் தகவல்களின் மூலம் வாடிக்கையாளர் எண்ணங்களை எப்படிப் புரிந்துகொள்கிறது? மின்வணிகம் என்பது இப்போது தான் வளர்ந்து வருவதால், முந்தைய காலத்தைப் புரட்டிப் பார்த்துத் தெரிந்து கொள்ள ஒன்றுமேயில்லை. எனவே, தகவல்களைச் சேகரித்து அவற்றை அலசுவது, நிறுவனத்தின் வருங்கால செயல்பாடுகளை திட்டமிட அவசியமானது. இந்த முறை வாடிக்கையாளருக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் உண்டாக்குகிறது; ஏனென்றால், வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தேவையான பொருத்தமான பேரங்களைப் பெறுகிறார்கள். சச்சின் சொல்கிறார், ”வாடிக்கையாளரின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதில் தான் எங்களுடைய உழைப்பு முழுதும் செலவிடுகிறோம், மின்வணிகத்தை உயர்த்த எங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் செய்கிறோம்”

இந்த தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏராளம், அதே போல் தான் தோல்வியும். ஆலோசக நிறுவனமான டெக்நோபார்க் அட்வைசர்ஸ், இன்றைய தேதியில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார மதிப்பு $600 மில்லியன் என்றும், 2020 அது $70 பில்லியனாக உயர்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்கிறார்கள். மின்வணிகத்தில் அனுபவமுள்ளவரும், ஆரம்ப காலத்திலேயே தொடங்கப்பட்ட இந்தியாபிளாசா.காம் -ன் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான கே.வைத்தீஸ்வரன், இந்தத் தொழிலை ஒரு மராத்தானோடு ஒப்பிடுகிறார். “இது நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தைப் போன்றது அல்ல. உலகளவில், நாங்கள் குறைய மார்ஜின் வைத்து தான் செயல்படுகிறோம், இருந்தும் உண்மையான வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம்.” இன்றுவரை, நூறு சதம் வெற்றி என்பதற்கான ஃபார்முலா இல்லை. இந்த மாராத்தானில் ஃபிலிப்கார்ட் தனியார் பங்கு நிறுவனங்களாக அக்சல் பார்ட்னர்ஸ் மற்றும் டைகர் க்ளோபல் உதவியோடு தான் ஓடிக்கொண்டிருக்கிறது; இந்த இரண்டு நிறுவனங்களும் $150 மில்லியனை இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். வரிக்கு பிந்தைய லாபம் இல்லையென்றாலும் கூட, இந்த இரண்டு நிறுவங்களும் பங்கு கொண்ட பிறகு, ஃபிலிப்கார்ட்டின் நிதி மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. லெட்ஸ்பை.காம்-ஐ வாங்கியதன் மூலம் ஃபிலிப்கார்ட் உள்ளூர் ஆன்லைன் சந்தையை கைப்பறும் ஃபிலிப்கார்ட்டின் நோக்கம் தெளிவாகியிருக்கிறது. வளர்ந்துவரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, இணைய அறிவு கொண்ட மக்கள் மற்றும் ஆர்வத்தோடு இறங்கும் நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து ஃபிலிப்கார்ட்டை அமேசான்.காம்-ற்கான இந்தியாவின் சவாலாய் நிறுத்தக்கூடும்.

இந்தியர்களை ஆன்லைன் வணிகத்திற்கு இழுத்துவருவது ஒரு அற்புதமான வேலை. புதிய திட்டங்கள், தரமான பொருட்கள் மற்றும் கச்சிதமான வாடிக்கையாளர் சேவையை தரும் நிறுவனங்கள் மட்டுமே பிழைக்க முடியும். இந்த வருடங்களில், மின்வணிகத்தில் நாயகனாக உயர்ந்திருக்கும் ஃபிலிப்கார்ட், இந்த இடத்தை அடைந்தற்கு புத்திசாலித்தனமோ அல்லது இயல்பறிவோ காரணமாக இருக்கலாம். ஃபிலிப்கார்ட் அனுபவத்தை மொத்தமாகச் சொல்ல, பூனேவின் விற்பனையியல் மாணவரான அபிஷேக் ஆஸ்தானா ஒரு கவிதையே எழுதியிருக்கிறார். மாஸ்டர்கார்டின் பிரபல விளம்பரத்தை இவர் கொஞ்சம் மாற்றியிருக்கிறார், “சில பொருட்களை நீங்கள் ஆன்லைனில் வாங்க முடியாது.... மற்ற எல்லாவற்றுக்கும் ஃபிலிப்கார்ட் இருக்கிறது!”

தி ஹிந்து கட்டுரை - http://www.thehindu.com/arts/magazine/article3290735.ece
ஃபோர்ப்ஸ் இந்தியா கட்டுரை - http://forbesindia.com/article/boardroom/can-flipkart-deliver/33240/0


இன்று உடுமலை.காம், டயல் ஃபார் புக்ஸ், சென்னைஷாப்பிங்.காம் போன்ற நிறுவனங்களை பற்றியும் ஒரு கட்டுரை எழுதலாம்.. யாராவது முயற்சி செய்யலாம் !

10 Comments:

kg gouthaman said...

Flipkart மூலமாக வாங்கப்படுகின்ற பொருட்கள் தரமானதாகவும், விலை குறைவாகவும் உள்ளன என்பது உண்மைதான். புத்தகங்கள், டி வி டி இன்னும் சில மின்னணுப் பொருட்கள் வாங்கியிருக்கின்றேன்.

TRADUS என்ற தளத்தின் மூலம் வாங்கப்படும் பொருட்களும் நன்றாக உள்ளன. பல மின்னணுப் பொருட்கள் ட்ரேடஸ் மூலமாக வாங்கியுள்ளேன்.

இதுவரை நூறு சதவிகிதம் ஏமாந்தது 100bestbuy.com என்னும் தளம் மூலமாக வாங்கப்பட்ட Ipod - அந்த செட்டில் வந்த எந்த பொருளும் வேலை செய்யவில்லை.

உடுமலை.காம் மூலமாக சங்கதாரா புத்தகம் வாங்கினேன். புத்தகத்தின் விலை நூற்று எண்பது ரூபாய். மேற்கொண்டு பதினைந்து ரூபாய் தபால் செலவுகளுக்காக செலுத்தினேன். இங்கு அந்தப் புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்த நபர், அந்தப் பணத்தை மணி ஆர்டர் செய்வதற்கு என்று சொல்லி மேலும் ஒரு பத்து ரூபாய் என்னிடம் வாங்கிச் சென்றார்.

ஃபிலிப் கார்ட் இந்த மாதிரி பணம் பறிக்கின்ற வேலைகள் ஒன்றும் வைத்துக் கொள்வதில்லை.
நாங்கள் வாங்கிய TINTIN டி வி டிகளில் சில ப்ளேயரில் திறக்க வரவில்லை என்று மெயில் அனுப்பினோம். உடனடியாக, அந்த டி வி டி களுக்கு சரியான தகடுகளை அனுப்பி வைத்தார்கள், ஃபிலிப்கார்ட்டிலிருந்து.

Rengasubramani said...

உடுமலையில் பெரிய பிரச்சினை பணம் செலுத்துவது. க்ரெடிட் கார்டு மூலம் உங்களால் செலுத்தவே முடியாது. முதலில் அந்த வசதி இல்லை, பின்னர் ஆரம்பித்தும் ப்யனில்லை. என்னால் ஒரு தடவை கூட அதைப் பயன்படுத்த முடியவில்லை. இப்போது அது வெளிநாட்டவர்களுக்கு மட்டும் என்கின்றது. உள்ளூர்க்காரர்கள் எல்லாம் க்ரெடிட் கார்ட் பயன்படுத்துவதில்லை போல. கிழக்கின் தளத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. ஒரு முறை கொஞ்சம் தாமதமானது, நான் கொடுத்த தொல்லையில் கொரியரிலன அனுப்பிவிட்டன்ர். (தபால் மூலம் அனுப்புவதுதான் அவர்களது வழக்கம், கொரியர் என்றால் நாம் தான் பணம் தர வேண்டும்). மற்றொரு முறை ஒரு புத்தகத்தில் பாதி பக்கத்தை காணவில்லை. அதற்கும் உடனே புதுப் புத்தகத்தை அனுப்பிவிட்டனர். உடுமலையில் ஒரு புத்தகத்திற்காக மெயில் அனுப்பி மாதங்களாகியும் பதில் வரவில்லை.

நான் மாயா said...

homeshop18 , flipkart, futurebazar
sevaigal nanraga irukkinrana,
naaptol ,100letsbuy sariyana response iruppathillai.
udumalai.com book vilaikku samamaga thapal selavu seluththi irukkirean

Indian said...

Flipkart experience is great. Udumalai sucks. They take order for books not in stock and drag long to refund the money.

balachandar muruganantham said...

நல்ல பதிவு. Flipkart போன்ற தளங்கள் இன்னும் நிறைய வரவேண்டும். இந்தியாவில் வாடிக்கையாளர்கள் சேவை இன்னும் மேலே செல்ல வேண்டும்.

Badri Seshadri said...

இன்று புத்தகம் மற்றும் பிற பொருள்களின் இணைய-வணிகச் சேவையில் முதலிடத்தில் இருப்பது ஃப்ளிப்கார்ட்தான். அந்நிறுவனத்துக்கு கிழக்கு பதிப்பகப் புத்தகங்களைத் தவிர பல தமிழ்ப் பதிப்பகப் புத்தகங்களையும் நாங்கள் சப்ளை செய்கிறோம். அவர்களுடைய செயல்பாடுகள் பற்றி ஓரளவு தெரியும். எனவே சில கருத்துகளைச் சொல்லமுடியும்.

அவர்கள் பெருமளவு பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு இந்தியாவில் மின் வணிகத்தில் யாரும் முதலீடு செய்யவில்லை. பொருள்களை அவர்கள் இன்று தம்முடைய சொந்த அலுவலர்கள்மூலம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கிறார்கள். கூரியர் அல்லது தபால் சேவையை அவர்கள் பயன்படுத்துவதில்லை. இந்தியாவில் இவர்கள் ஒருவர் மட்டுமே இப்படிப்பட்ட கட்டுமானத்தை உருவாக்கியுள்ளனர். இந்தியாவின் பல நகரங்களில் அவர்கள் வேர்ஹவுஸ் வைத்து பொருள்களைச் சேகரித்து சரியான முகவரிக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

கிழக்கின் தமிழ்ப் புத்தக மின் வணிகம், உடுமலை, இன்னபிற தமிழ் வணிகர்களை இவர்களுடன் ஒப்பிடவே முடியாது. நாங்கள் யாருமே இந்த அளவு முதலீடு செய்யமுடியாத நிலையில் உள்ளோம். எங்கள் மென்பொருள் ஃப்ளிப்கார்ட்டுடன் ஒப்பிடும்போது குழந்தைத்தனமானது. எங்கள் வேர்ஹவுஸ் ஆகட்டும், நாங்கள் எத்தனை பேரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறோம் என்பதாகட்டும், மிகவும் பின்தங்கியவை.

ஆனால் இந்த நிலையிலுமே சிறப்பான சேவையைத் தர எங்கள் ஒருவராலும் முடியும்.

உதாரணமாக, கிழக்கின் சேவையில் நாங்கள் ccavenue என்ற நிறுவனம்மூலம் கிரெடிட், டெபிட் கார்டுகள், இணைய வங்கிப் பணப் பரிமாற்றம் ஆகியவற்றைச் செய்துள்ளோம். பேபால் வசதி உண்டு. விபிபி வசதியைச் செய்துகொடுக்கிறோம். சென்னைக்கு உள்ளாக COD வசதியும் உண்டு.

ஃப்ளிப்கார்ட், ஸ்டாக் இல்லாத பொருள்களை விற்பதில்லை. ஆனால் நாங்கள் பலருமே, ஸ்டாக் இருக்கிறதா, இல்லையா என்று தெரியாமலேயே அவற்றை விற்கிறோம். ஸ்டாக் இல்லை என்று தெரியவந்தால் எங்கள் சேவையில் உடனடியாக ரீஃபண்ட் செய்துவிடுகிறோம். (இதில் எங்களுக்குத்தான் நஷ்டம் - கிரெடிட் கார்ட் கமிஷன் போய்விடும். கஸ்டமருக்கு முழுப் பணமும் கிடைத்துவிடும்.)

ஸ்டாக் இல்லாத புத்தகத்தை விற்பது அவசியமான ஒரு சேவை என்பது எங்கள் கருத்து. எனெனில் தமிழில் அச்சில் உள்ள 25,000 அல்லது அதற்கு மேற்பட்ட புத்தகங்களை எந்தத் தமிழ்ப் புத்தகக் கடையிலும் ஸ்டாக் வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு ஆகும் செலவு மிக அதிகம். ஃப்ளிப்கார்ட்டில் தமிழ்ப் புத்தகங்கள் என்று 2,500-தான் இருக்கும். அதில் எப்பொதும் ஒரு 1,000 out of stock என்று இருக்கும். ஆனால் எங்கள் இணையக் கடையில் அல்லது டிஸ்கவரி புக் பேலஸ் இணையக் கடையில் அல்லது உடுமலையில் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் புத்தகங்கள் இருக்கும். அவற்றில் சில கிடைக்காமல் போகலாம். ஆனால் இந்த சாய்ஸும் முக்கியம்தானே?

தமிழ் மின் வணிகச் சந்தை பெரிதாகப் பெரிதாக, சேவையிலும் கட்டாயம் முன்னேற்றம் இருக்கும்.

Anonymous said...

Flipcart delivers via Blue Dart courier.

Indian said...

//ஸ்டாக் இல்லாத புத்தகத்தை விற்பது அவசியமான ஒரு சேவை என்பது எங்கள் கருத்து. எனெனில் தமிழில் அச்சில் உள்ள 25,000 அல்லது அதற்கு மேற்பட்ட புத்தகங்களை எந்தத் தமிழ்ப் புத்தகக் கடையிலும் ஸ்டாக் வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு ஆகும் செலவு மிக அதிகம். ஃப்ளிப்கார்ட்டில் தமிழ்ப் புத்தகங்கள் என்று 2,500-தான் இருக்கும். அதில் எப்பொதும் ஒரு 1,000 out of stock என்று இருக்கும். ஆனால் எங்கள் இணையக் கடையில் அல்லது டிஸ்கவரி புக் பேலஸ் இணையக் கடையில் அல்லது உடுமலையில் 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் புத்தகங்கள் இருக்கும். அவற்றில் சில கிடைக்காமல் போகலாம். ஆனால் இந்த சாய்ஸும் முக்கியம்தானே?//

பத்ரி,

ஸ்டாக் இல்லாத புத்தகத்த இருக்குன்னு சொல்லி பணத்த வாங்கிட்டு இதா, அதான்னு திருப்பித்தராம இழுத்தடிச்சா வாடிக்கையாளர் கடுப்பாவாரா மாட்டாரா?

அதுக்கு ஸ்டாக் இல்லைனு முதல்லயே சொல்லிடலாமே?

(disclaimer: நான் கிழக்கைச் சொல்லவில்லை. இதுவரை என் அனுபவம் நன்றாகவே உள்ளது)

Indian said...

//ஸ்டாக் இல்லாத புத்தகத்தை விற்பது அவசியமான ஒரு சேவை என்பது எங்கள் கருத்து.//

You've got email-id and mobile # in the customer profile. How about notifying customer thru mail or SMS when you get the stock. Indeed that would be value add to customer.

ramachandranusha(உஷா) said...

http://nunippul.blogspot.in/2012/10/1-shopcoin.html