பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 12, 2012

ரா.கி.ரங்கராஜன் அஞ்சலி கட்டுரை - 3

சமீபத்தில் மறைந்த, எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனுடன், தான் பழகிய பசுமையான நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பாக்கியம் ராமசாமி:
குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி., ஒரு குரு; இணை ஆசிரியர் ரா.கி.ர., இன்னொரு குரு. எடிட்டர் எஸ்.ஏ.பி., மகா பெரியவாள் மாதிரி. என்னை பொறுத்தவரை ரா.கி.ர.,வும் சகல விதத்திலும் என் மதிப்புக்குரிய பெரிய குரு. அவரை வெறுமே, "பெரியவர்' என்று சொல்வது, உரிய மரியாதை கொடுத்தது ஆகாது என்று நினைப்பேன். ஆகவே, அவர் எனக்கு, "சின்ன மகாப் பெரியவர்!' ரா.கி.ர.,வோடு, நான் ஏறக்குறைய, 40 ஆண்டு ஒட்டிக் கொண்டு இருந்திருக்கிறேன்.

கலைக் களஞ்சியம் பிரியரான அவரே, ஒரு கலைக் களஞ்சியம். எடிட்டர் எஸ்.ஏ.பி., பீரோ, பீரோவாகப் புதுப் புத்தகங்கள் படிப்பார். ரா.கி.ர., அதே பீரோ புத்தகங்களை ஆசிரியர் படித்தானதும், படித்து முடிப்பார்.
எவ்வளவு பெரிய, தடித்த சிக்கலான ஆங்கில நாவலாக இருந்தாலும், ரா.கி.ர., ஒரு சவாலாக எடுத்து, மொழி பெயர்த்துத் தள்ளிவிடுவார்.
ஒரிஜினலே தமிழ்தானோ என்று எண்ணும்படி, மொழிபெயர்ப்பு சரளமாக இருக்கும்.
"எதை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டுமோ, அதில் இரண்டு பாரா ரசித்துப் படித்துவிட்டு, புத்தகத்தை மூடி விடுங்கள். இனி, அந்த இரண்டு பாரா விஷயமும், உங்கள் சொந்த சொத்து. அதை எழுதின வெள்ளைக்காரனுக்கு, அது சொந்தமில்லை. போனால் போகிறது என்று, அந்த இங்கிலீஷ்கார பாத்திரங்களின் பெயரைப் போட்டுக் கொள்ளுங்கள். மற்றப்படி, பூராப் பூரா உங்களுடைய சரளத்துக்கு ஏற்ப எழுதித் தள்ளுங்கள். அதுக்குன்னு அவன் ஒரு பாரா எழுதியதற்கு, மொழி பெயர்ப்பு செய்கிறவர். ஒரு பக்க வியாக்கியானம் பண்ணிவிடக் கூடாது. பணமும், பத்தாயிருக்கணும், பொண்ணும், முத்தாயிருக்கணும்,' என்பார்.
குமுதத்தில் பணிபுரிந்த போது, ரா.கி.ர.,வையும், அவரது பன்முக எழுத்தாற்றலையும், வியந்து கொண்டிருப்பது தான் என் முக்கிய, இனிய பொழுது போக்காக இருந்தது.

ரா.கி.ர.,வின் மொழிபெயர்ப்பைப் பற்றி, இன்னொரு உதவி ஆசிரியரான புனிதன் கிட்டே வியப்பேன். "என்னடா இது... ரங்காச்சு (ரா.கி.ர.,) என்ன ஏதாவது பசுமாடா? வைக்கோலைக் கொண்டு வந்து போட்டு, முதுகைத் தட்டினால் பாலாக் கறக்கிறாரே!' மேரி கொரல்லி பக்கத்திலே கூடப் போக முடியாது என்று ஆசிரியரே சொன்னார். ஆனால், ரா.கி.ர., பூந்து விளையாடி சபாஷும் வாங்கி விட்டார். மேரி கொரல்லி புத்தகம், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையால் வெகுவாக சிலாகித்துப் படிக்கப்பட்ட கடின நடை ஆங்கில நாவல்!

சவால் என்றால், ரா.கி.ர.,வுக்கு சர்க்கரைக் கட்டி. இலக்கியத்தில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும், எந்த சவாலுக்கும் பின்வாங்காதவர். ரா.கி.ர.,வுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது.

சைக்கிளே ஓட்டத் தெரியாது என்ற போது, மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ, லாரி பற்றி எல்லாம் தனித்தனியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஒரு மத்தியான நேரத்தில், ஆபீஸ் புறக்கடைப் பக்கம் போய், டிபன் பாக்சுகளைக் கழுவி, உதறிவிட்டு, இலாகாவுக்குள் நுழைந்து கொண்டிருந்த போது, எங்கள் கவனத்தை வராந்தாவில் நிறுத்தப்பட்டிருந்த, அரை டஜனுக்கும் மேற்பட்ட புத்தம் புது சைக்கிள்கள் கவர்ந்து இழுத்தன.

எங்கள் கோஷ்டி, புது சைக்கிள்களை வேடிக்கை பார்க்க, ஷெட்டுக்குப் போயிற்று.
ரா.கி.ர.,வின் வழக்கம் எதையும், சந்தேகத்துக்கிடமின்றிக் கேட்டு அறிந்து கொள்வார். வாழ்க்கையில் அறிஞராகவதற்கு இந்த குணம் முக்கியம் என்றும் கூறுவார்.
"என்ன திடீர்ன்னு இத்தனை புது சைக்கிள்... யாருக்கு?' என்றார்.
சைக்கிள்களின் பக்கத்திலேஇருந்த அக்கவுண்ட்ஸ் இலாகா, "அண்ணாச்சி' பதில் சொன்னார்... "ஓரொரு டிபார்ட்மென்ட்டுக்கும், ஒரு சைக்கிள்ன்னு ஒதுக்கி இருக்காங்க!'
உடனே, என் பக்கம் திரும்பி, "நம்ம டிபார்ட்மென்ட்டுக்கு எதை எடுத்துக்கலாம்?' என்றார் ரா.கி.ர., அக்கவுன்ட்ஸ், "அண்ணாச்சி' சிரித்தபடி அவசரமாக, "அதெல்லாம் சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சவங்களுக்கு தான். உங்க டிபார்ட்மென்ட்லே யாரும் சைக்கிள் ஓட்றதில்லையே...' என்றார்.
ஏதோ கிரிக்கெட் மாட்ச் விவாதம் என்று நினைச்சு, "என்னாச்சு ஸ்கோர்?' என்றார் அங்கு வந்த, குமுதம் வெளியீட்டாளர் பார்த்தசாரதி.
அக்கவுன்ட்ஸ் அண்ணாச்சி, எந்த விஷயத்தையும், வெளியீட்டாளருக்கு அழகாகப் போட்டுத் தருவார்; அதாவது, விளக்குவார்.
"ஆர்.கே.ஆர்., அண்ணனுக்கு சைக்கிள் வேணுமாம்!' வெளியீட்டாளர் சிரித்தார் குறும்பாக, "ஏன்... ஆசிரிய இலாகாவுக்கு ஒண்ணு ஒதுக்க வேண்டியது தானே?'
"அதில்லே... அங்கே யாரும் சைக்கிள் ஓட்டறதில்லையே...' என்றார் அக்கவுன்ட்ஸ் அண்ணாச்சி.

"என்ன ரங்கராஜன் சார்... சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சவங்களுக்குத்தான் சைக்கிள். நீங்கள் ஓட்டறீங்களா... சொல்லுங்கள்?' என்றார் வெளியீட்டாளர்.
ரா.கி.ர.,வும் சிரித்தார். "சைக்கிள் ஓட்டறது என்ன பெரிய வித்தையா, கம்பசூஸ்திரமா... ஒரு மணி நேரத்திலே கத்துக் கொண்டால் தீர்ந்தது...' என்றார்.
எதிர் சவால் விட்டார் வெளியீட்டாளர்... "சார்...
இன்னிக்கு சனிக்கிழமை; நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவு. உங்களுக்கு ஒரு மணி இல்லை; ஒரு நாள் தருகிறேன். நீங்கள் திங்கட்கிழமை, வந்து ஓட்டிக் காட்டினால், ஒரு சைக்கிள் இல்லே. இரண்டு சைக்கிள் உங்களுக்குக் கொடுத்துடறோம்...' என்றார்.

ரா.கி.ர., அனாயாசமாக, "சவாலுக்கு தயார்.
திங்கட்கிழமை ஓட்டிக் காண்பிக்கிறேன்...' என்றார்.
சவாலுடன் சனிக்கிழமை கழிந்தது.
ஞாயிறு தினம், காலை நேரு பார்க் மைதானத்தில், ரா.கி.ர., தனக்கு சைக்கிள் கற்றுத் தர, "அடி'யாட்களை, அதாவது, அடிபட்டுக் கொள்ளத் தயாராக உள்ள சில ஆபீஸ் நண்பர்களை வரவழைத்துக் கொண்டார். ஜாதகம் சரியில்லாத ஒரு வாடகை சைக்கிளை வரவழைத்துவிட்டார்.
மூன்று பேர் வந்தனர். கிராம தேவதை முன் பலிகடாவை, நிறுத்துவது போல சைக்கிளை கிழக்குப் பக்கமாக நிறுத்தியாயிற்று.
வேட்டியை தார்ப்பாச்சு போட்டுக் கட்டிக் கொண்டு, சைக்கிள் பெடலில் கால் வைத்தார் ரா.கி.ர.,

"பார்த்து... பார்த்து... பார்த்து...' பல குரல்கள்.
அதற்குள், ரா.கி.ர., தன் முதல், "விழுதலை' தரையில் பதிவு செய்து விட்டார்.
அடுத்து என்ன? பயிற்சிப் பட்டாளம் அவரைத் தூக்கி நிறுத்த, மீண்டும் பதவியேற்பு - சைக்கிள் ஆசனத்தில் அமர்ந்தார்.

பின்னணி வீரர்களின் சப்போர்ட்டில் ரா.கி.ர., சில அடிகள் முன்னேறினார்.
"உடம்பை வளைக்காதீங்க... நேரா பாருங்க!' சப்தங்களும், சமிக்ஞைகளும் வந்துகொண்டிருக்கும் போதே, சைக்கிள் ஒரு, திரிகோணாசனத்தை தவறாகச் செய்தவாறு, விசித்திரமாக வளைந்து திருகி ஒரு டமால்!
இந்தத் தடவை, ரா.கி.ர.,வின் சிராய்ப்புகள், ஆறுக்கும் மேலே என்று கணக்கிடப்பட்டது.

இப்படியே ஓட்டப் பழகுவது, கீழே விழுவதுமாக இருந்தது.
சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, போர் நிறுத்தப்படும் என்ற மகாபாரத கால யுத்த தர்மத்தை ஒட்டி, இருட்டிய பின், சைக்கிள் ஓட்டும் பயிற்சி நிறுத்தப்பட்டது.
அதற்குள், ரா.கி.ர., பாதி பீஷ்மர் ஆகி விட்டார். கைத்தாங்கலாக பாசறைக்கு - அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, படுக்கையில் கிடத்தப்பட்டார்.
"ஆளுங்க சுகம் இல்லை...' என்றார்.

"சில பேர் காலை வாரி விட்டுட்டாங்க...' என்று, என்னைப் பார்த்தார்.
நான் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு, அவரோடு ஓடி வரவில்லை என்பதையே அப்படிக் குறிப்பிட்டார்.

திங்கள் காலை ஆபீசுக்கு தகவல் பறந்தது.
ரா.கி.ர., ரொம்ப அடிபட்டுக் கொண்டு விட்டதாக!
எடிட்டர், வெளியீட்டாளர், ஒர்க்ஸ் மானேஜர், எடிட்டோரியல் என்று சுமார் ஒரு முக்கால் டஜன் பேர்வழிகள், ரா.கி.ர.,வை உடனடியாகப் பார்க்கப் புறப்பட்டாயிற்று.

காயம் நிறையப்பட்டிருந்தாலும், ரா.கி.ர., இந்தளவு போராடி இருக்கிறாரே என்று அவருக்கு வீரப் பதக்கம் தராத குறையாக அனைவரும் பாராட்டினோம்.
ஒருவழியாக அனைவரும் விடைபெற்றோம். அப்போது, ரா.கி.ர., இருந்த வீடு விசாலமாக இருந்தாலும், வெள்ளாளத் தெருவில் ஒரு நீண்ட குறுகிய சந்துக்குள் இருந்தது. எதிரே, ஆள் வந்தால், யாராவது ஒருத்தர் வழி விட்டால்தான், மற்றொருவர் முன்னுக்குப் போக முடியும்.

ஆசிரியரும், வெளியீட்டாளரும் ஆச்சரியப்பட்டனர். எதிரே ஆள் வருவதற்குப் பதில், ஒரு எருமை மாடு வந்து விட்டது. ஒரே கலாட்டாவாகி, எப்படியோ ஒதுங்கி, அது எங்களுக்கு வழி விட்டு, நாங்கள் அதற்கு வழிவிட்டு மெயின் தெருவுக்கு வந்து சேர்ந்தோம்.

"இத்தனை குறுகிய சந்திலா, ரா.கி.ர., இருக்கிறார்?' என்று ஆசிரியரும், வெளியீட்டாளரும் வியந்தனர். "இங்கெல்லாம் வாடகைக்கு வீடு இப்படித்தான் சந்திலும், பொந்திலும் கிடைக்கிறது...' என்று யாரோ உரக்க முணுமுணுத்தனர்.
அடுத்த வாரமே, சிப்பந்திகளின் வீடு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு விட்டது.
காரியாலயத்தின் அன்பளிப்போடு, சிப்பந்திகளின் வைப்புத் தொகை ஓரளவுடன், குடியிருப்புகள் எழுந்தன.

"ஹை வாஷ்பேசின், ஹை பால்கனி, ஹை ஷவர், ஹை மொசைக்' என்று குதூகலத்துடன் புதிய வீடுகளுக்கு (குமுதம் குவார்ட்டர்ஸ்) எல்லாரும் குடியேறினோம், ரா.கி.ர.வின் பெயரைச் சொல்லிக் கொண்டு!
***

பாக்கியம் ராமசாமி
( நன்றி: தினமலர் )
---------------------- * ------------------------ * ---------------------
‘லைட்ஸ் ஆப்’ - ரா.கி.ரங்கராஜன்
ஆறு மாதங்களுக்கு முன் ரா.கி.ரங்கராஜன் உடம்பு சுகம் இல்லாமல் இருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது சங்கடமாக இருந்தது. வருத்தத்துக்கும் சங்கடத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பல முறை அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தாலும் ஒரே ஒரு முறைதான் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்பிலேயே அவரிடம் பல நாள் பேசியது போன்ற உணர்வு. 80+ வயதிலும் மூன்று மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார். சந்தித்ததை பற்றிச் சொல்வனத்தில் அப்போது எழுதியிருந்தேன் [http://solvanam.com/?p=4323] .

இன்று அவர் ஆச்சார்யன் திருவடி அடைந்தார் என்ற செய்தி கேட்டபின் அந்தச் சந்திப்பு பற்றி கட்டுரையில் எழுதாமல் விட்ட ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அந்த மூன்று மணி நேரச் சந்திப்பில் ‘லைட்ஸ் ஆன் வினோத்’ பக்கம் பேச்சு திரும்பியது.

“லைட்ஸ் ஆன் வினோத்” என்ற பெயரில் குமுதத்தில் எழுதினேன்; பிறகு அந்தத் தலைப்பை குமுதம் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் கல்கியில் ‘சைட்ஸ் ஆன்’ என்று எழுதினேன். தற்போது துக்ளகில் ‘டெலிவிஷயம்’ என்ற தலைப்பில் எழுதுகிறேன்,” என்றார். இவர் எழுதிய எல்லாவற்றையும் பைண்ட் செய்து வைத்திருந்தார் அவர் மனைவி கமலா. அவைகளை என்னிடம் காண்பித்தார். ரஜினி இமயமலை போவது தொடங்கி சிலுக்கின் அடுத்த படம் எப்போது என்று எல்லாமே இருந்தது.

“இதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை ஒரு புத்தகமாகப் போட வேண்டும், உங்களுக்கு யாரையாவது தெரியுமா ?” என்றார். ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு தெரிந்த சில பதிப்பகங்களின் பெயர்களைச் சொன்னேன்.

“நானே அவர்களிடம் கேட்டேன்.. ஆனால் தட்டிக்கழிக்கிறார்கள்… இத்தனைக்கும் அவர்களை எனக்கு நல்லாத் தெரியும். எனக்கு அவர்களிடம் இந்த வயசில் திரும்பக் கேட்க என்னவோ போல இருக்கு,” என்றார்.

மனசுக்குள் இனம்புரியாத ஒரு வருத்தம் குடிக்கொண்டது.

“சார் நானே போடுகிறேன்” என்றேன்.

“உங்களுக்கு எதற்கு சிரமம்..”

“பரவாயில்லை சார்…”

“நீங்களே ஒரு 100 பகுதிகளை தேர்ந்தெடுத்துவிடுங்கள்,” என்றார்.

அவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. பைண்ட் செய்யப்பட்ட எல்லா ‘லைட்ஸ் ஆன்’ புத்தகங்களையும் கவர்ந்து கொண்டு பெங்களூர் வந்தேன். பல பகுதிகளை வாசிக்க முடிந்தது ஆனால் புத்தகம் சம்பந்தமாக எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு முறை அவரிடம் தொலைபேசியில் பேசியபோது இதைச் சொன்னேன். அவர், “பரவாயில்லை இங்கே நண்பர் ஒருவர் போடுகிறேன் என்று சொல்லியிருக்கார்,” என்றார். அந்தப் புத்தகங்களைத் திரும்ப அனுப்பினேன்.

ஒரு எழுத்தாள நண்பர் சில மாதங்களுக்குமுன் அவர் உடம்பு முடியாமல் இருக்கிறார் என்று சொன்ன போது ‘லைட்ஸ் ஆன்’ புத்தகம் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்தியது.

“எப்படியாவது சில காப்பிகளாவது போட்டு அவர் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று எழுத்தாளர் ‘சுபா’ முயற்சி எடுத்துள்ளார்,” என்று அவர் சொன்ன போது கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

ஆனால் இன்று தன் எழுத்தைப் புத்தக வடிவில் பார்க்காமலேயே நம்மை விட்டுப் போய்விட்டார் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.

அவர் எனக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த புத்தகத்தைப் பார்க்கும் போது… எப்படியாவது ‘லைட்ஸ் ஆன்’ புத்தகத்தை கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. மனம் மீளமுடியாத அழுத்தத்தில் கனக்கிறது.

-o00o-


ஹென்ரீ ஷாரீயரின் ‘பாப்பியான்’ என்ற புத்தகத்தை ‘பட்டாம்பூச்சி’ என்ற மொழிபெயர்ப்புப் புத்தகத்தில் ஆத்மார்த்தமாக சுஜாதா எழுதிய அணிந்துரையிலிருந்து சில பகுதிகளை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்–

“ரங்கராஜன் சுதந்திரம் வந்த புதுசிலிருந்தே எழுதி வருகிறார் என்பது என் அனுமானம். ஆரம்ப காலங்களில் அவர் கலைமகள் போன்ற பத்திரிகைகளில் எழுதினார். அவருடைய சிறுகதைகள் ‘பல்லக்கு’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. துவக்க நாட்களிலேயே குமுதம் நிறுவனத்தில் சேர்ந்து அவர்கள் ‘கல்கண்டு பத்திரிகையுடன் கூடவே வெளியிட்ட ‘ஜிங்லி’ என்ற சுவாரஸ்யமான சிறுவர் பத்திரிகைக்குத் துணை ஆசிரியராக இருந்திருக்கிறார். ‘ஜிங்லி’யின் அகால மரணத்திற்கு வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன். பிறகு குமுதம் ஆசிரியர் குழுவில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதத் துவங்கினார். அதேசமயம் குமுதத்தில் ‘சூர்யா’ என்பவர் தரமான சிறுகதைகளை எழுதிவந்தார். ‘ஹம்சா’ என்பவர் வேடிக்கை நாடங்களும் டி.துரைஸ்வாமி துப்பறியும் கதைகளும் ‘கிருஷ்ண குமார்’ திகில் கதைகளும் ‘மாலதி’ குறும்பு கதைகளும் ‘முள்றி’ மழலைக் கட்டுரைகளும் ‘அவிட்டம்’ நையாண்டிக் கவிதைகளும் எழுதி வந்தார்கள்.

பிற்காலத்தில் நான் குமுதத்தில் எழுதத் துவங்கி ஆசிரியர் குழுவுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அப்போது ‘சூர்யா’ வின் செய்தி என்கிற சிறப்பான சிறுகதைக்கு ஏதோ ஒரு நிறுவனம் பரிசளித்திருந்த செய்தியில் கதையின் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் என்று குறிப்பிட்டிருந்தது. விசாரித்ததில் நான் மேற்சொன்ன அத்தனை எழுத்தாளர்களும் ரங்கராஜன் ஒருவரே என்கிற விவரம் தெரிந்து எனக்கு அப்போது ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் விலகவில்லை.

ஓர் எழுத்தாளர் கதை, கட்டுரை, நாடகம், கவிதை எழுதுவது எல்லாம் சகஜம். என்னாலேயே முடிகிறது. ஆனால் எப்படி ஒரே எழுத்தாளரால் நடையிலேயே கருத்திலோ உருவத்திலோ எதுவும் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்கள் போல எழுத இயலும்? இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடிதான் உள்ளார்: கல்கி.

நேரில் சந்திக்கும்போது ரங்கராஜன் இத்தனை திறமைகளையும் ஒரு சின்னப் புன்னகையில் மறைத்துவிடுவார். ஒரு தபால் தலையில் அடங்கிவிடக்கூடிய திறமை உள்ள எழுத்தாளர்கள் எல்லாம் சுயவிளம்பரமும் பட்டங்களும், பரிசுகளும் ஏற்பாடு பண்ணிக்கொண்டு சொந்தப் பெருமையில் குளிர்காயும் சூழ்நிலையில், ரங்கராஜன் ஒரு கர்ம யோகி; குமுதம் ஸ்தாபன விசுவாசம்; ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி; கிடைத்தது போதும் என்கிற திருப்தி; சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு நேசம்; வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி நெற்றியில் ஸ்ரீசூர்ணம், நண்பர்களைக் கண்டால் கட்டி அணைத்து முதுகில் ஒரு ஷொட்டு; பெரிசு பெரிசாக குண்டு பேனாவில் எழுதப்பட்டச் சிறகடிக்கும் எழுத்து. ஏறக்குறைய ஒரு லைப்ரரி அளவுக்கு இவர் எழுதியிருக்கும் கதை, கட்டுரைகள் அனைத்தையும் திருமதி கமலா ரங்கராஜன் பைண்டு பண்ணி வைத்திருக்கிறார். இவரது படைப்புகள் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. சின்னத்திரையில் வந்திருக்கின்றன.

இத்தனை சாதனை படைத்தவருக்கு, குறைந்தபட்சம் ஒரு பொன்னாடை கூட போர்த்தாதது தமிழகத்தின் விசித்திரமான முரண்பாடுகளில் ஒன்று!”

-o00o-

கடைசியாக சில லைட்ஸ் ஆன் பகுதிகள்…

தளபதி என்றதும் நினைவு வருகிறது.

குட்லக் தியேட்டரில் இரண்டு பிரிவியூ தியேட்டர்கள் இருக்கின்றன. இரண்டிலும் ஒரே சமயத்தில் தளபதி படம் போட்டார்கள். அப்படியும் கூட்டம் தாங்காமல் நடுநடுவே நாற்காலிகளைப் போட்டு சமாளிக்க நேரிட்டது. ஜி.வி.தான் வரவேற்றுப் பேசினார். மணிரத்தினம்? எங்கேயும் காணோம். Two is company, three is crowd.
(குமுதம்)

‘பரவை’ பறந்தார்!

நாட்டுப்புறப் பாடல்களில் புகழ் பெற்று விளங்கும் பரவை (பறவை அல்ல) முனியம்மா, ஜெயா டி.வி.யில் தன் அனுபவங்களை விவரித்தார். இப்போது அறுபது வயதாகிறதாம். ஆறு வயது முதல் கிராமப்புறங்களில் பாடி வருவதாகச் சொன்னார். சில பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருந்தவர், விருட்டென்று நாற்காலியைவிட்டு எழுந்து விட்டார். பேட்டியாளர், ‘ஏன்? என்ன விஷயம்? நான் ஏதாவது தப்பாகப் பேசிவிட்டேனா?’ என்று பதறினார்.

‘அதெல்லாமில்லை. இந்தப் பாட்டைச் சும்மா பாடக் கூடாது. ஆடிக் கொண்டேதான் பாடணும்,’ என்று விளக்கிய பரவையம்மாள், ‘வெத்திலை பாக்கு கொழுந்து வெத்திலை’ என்ற பாட்டை ஆடிப் பாடி அமர்க்களப்படுத்தி விட்டார். ஆம். There is a story in everyone’s life.
(துக்ளக்)

சுஜாதா தேசிகன்
(நன்றி:சொல்வனம் )

4 Comments:

கடுகு said...

பாக்கியம் ராமசாமி ஒரு அஞ்சலிக் கட்டுரையிலும் இப்படி நகைச்சுவையை அள்ளித் தெளித்துச் சிரிக்க வைக்கிறாரே! சபாஷ்
சுஜாதா தேசிகன் சிலிர்க்க வைக்கிறார்.

-கடுகு

Anonymous said...

THANKS. R. K CAN ONLY BE COMPARED WITH KALKI. WE SEE THE PEOPLE WHO ARE WORKING AS UNOFFICIAL PRO FOR GRANITE MAFIA SAMELESSLY SELF BOASTING.
R.K CAN NEVER COMPLAINED ABOUT ANYTHING IN HIS ARTICLES.

GOPALASAMY SAUDI ARABIA

சிந்திப்பவன் said...

ரா.கி.ரா வின் விஸ்வரூபத்தை அழகாக எடுத்துக்காட்டியுள்ள அஞ்சலி.நன்றிகள் கோடி.

பின்குறிப்பு:
இட்லி வடையாரே!
எதற்கெல்லாமோ பரிசு போட்டி வைக்கிறீர்! "செளதி அரேபியா- கோபால்சாமி" keypad இல் இருக்கும் capslock ஐ கண்டுபிடித்து தருவோருக்கு ஏதேனும் பரிசு கொடுக்கலாமே!!

Seenu said...

Mr. Gopalaswamy

What are you attempting to say?

Rajagopalan-Dubai