பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, July 18, 2012

'கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்! – எஸ்.குருமூர்த்தி

‘கடவுள் அணு’ என்று விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட, எல்லா அணுக்களிலும் நுண்ணியதும், ஆதாரமானதுமான நுண்மையான அணுவை, சுமார் 14 ஆண்டுகள் முயற்சி செய்து, ஏறக்குறைய ரூ.20,000 கோடி செலவு செய்து, ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் உருவாக்கப்பட்ட ‘செர்ன்’ என்கிற விஞ்ஞான ஆராய்ச்சி சாலை, அடையாளம் கண்டு விட்டதாக ஜூலை 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டபோது உலகமே வியந்தது. இந்த ‘கடவுள் அணு’ என்று அழைக்கப்படும் துண்டு அணுவுக்கு உண்மையான பெயர் ‘ஹிக்ஸ்-போசான்’ என்பது. இது இரண்டு விஞ்ஞானிகளுடைய பெயர்களின் இணைப்பு. இதில் ஹிக்ஸ் என்பது இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியின் பெயர். இவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.

1998-ல் துவங்கிய இந்த விஞ்ஞான முயற்சி எல்லாவற்றுக்கும், 74 ஆண்டுகளுக்கு முன், 1924-ஆம் ஆண்டு பிள்ளையார் சுழி இட்டவர், நம் நாட்டு விஞ்ஞானியான கல்கத்தாவைச் சேர்ந்த சத்யேந்திரநாத் போஸ் என்கிற இளைஞர். 1894-ல் பிறந்த இவர், 1924-ஆம் ஆண்டு அணுவையும் அணுசக்தியையும் கண்டுபிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை அனுப்பினார். அப்போது அவருக்கு 30 வயது. அவரும் ஐன்ஸ்டீனும் சேர்ந்து செய்த ‘ஐன்ஸ்டீன் - போஸ் கண்டேன்செட்’ என்கிற கண்டுபிடிப்புதான், செர்ன் விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கும் நுண் அணுவைத் தேடுவதன் துவக்கம். அணுக்களுக்கு உப அணுக்கள் உண்டு என்பதற்கு போஸின் சிந்தனைதான் துவக்கமாக இருந்தது.

அவருடைய பெயரில் ஒரு அங்கமான ‘போஸ்’தான் ஹிக்ஸ்-போசான்’ என்கிற இரட்டைப் பெயரில் இரண்டாவது அங்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வுதான் இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் பிரம்மாண்டமான முயற்சியாக மாறி, ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. செர்ன் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறியிருப்பது இதுதான்: ‘இதுவரை ஹிக்ஸ்-போசான் என்கிற நுண்ணணு இருக்கிறது என்று நினைத்தது சரி என்று தோன்றுகிறது. நாங்கள் கண்டுபிடித்திருப்பது 99.999 சதவிகிதம் அதுதான். இந்த அணுதான் பிரபஞ்சத்தில் இருக்கும் தோற்றம், பரிமாணம், உருவமைப்பு சம்பந்தப்பட்ட எல்லா ரகசியத்திற்கும், கேள்விகளுக்கும் விடையாக இருக்கும். இதன் மூலம் தெளிவு கிடைக்கிற வாய்ப்பு இருப்பதால், இந்த அணுவை ‘கடவுள் அணு’ என்று ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூற, எல்லோரும் அப்படியே இந்த அணுவை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘ஹிக்ஸ்-போசான்’ அணுவுக்கும், பாரத நாட்டுக்கும் தொடர்புண்டு. இதை சத்யேந்திரநாத் போஸ் மட்டுமல்ல, செர்ன் விஞ்ஞானிகளின் அமைப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பாளரான பாவ்லோ குபிலினோ, இந்தக் கண்டுபிடிப்பு வெளிவருவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே, அக்டோபர் 2011-ல், ‘பாரத நாடுதான் இந்தக் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்குத் தாய்’ என்று பட்டவர்த்தனமாகக் கூறினார். எங்கோ ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் செய்யும் இந்த முயற்சிக்கு, எப்படி பாரதம்தான் தாய் என்று அவர் கூறினார்?

பாரத நாட்டுக்கும், இந்த கடவுள் அணு என்று நம்பப்படும் ‘ஹிக்ஸ்-போசான்’ அணுவுக்கும் வேறு என்ன தொடர்பு? அந்தத் தொடர்பை அறிய வேண்டுமென்றால், 2004-ஆம் ஆண்டு செர்ன் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த ஓர் அதிசயமான நிகழ்ச்சி பற்றித் தெரிய வேண்டும்.

2004 ஜூன் 18 அன்று செர்ன் ஆய்வுக் கூடத்தின் அரங்கத்தில், 6 அடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை நிர்மாணம் செய்யப்படுகிறது. சரி, செர்ன் ஆராய்ச்சி சாலையில் நடனம் ஆடும் சிவனுக்கும் – அதாவது, நடராஜருக்கும், செர்ன் அமைப்பில் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்கும் என்ன சம்பந்தம்? யாரோ ஒரு சிவ பக்தர் இதைச் செய்தார் என்று நினைக்க வேண்டாம். நமது மதச் சார்பற்ற அரசாங்கம்தான் இந்தச் சிலையை அனுப்பி, அங்கு அமைத்தது. அழகாக இருக்கிறது என்பதற்காக நடனமாடும் நடராஜரின் சிலை அங்கு அனுப்பப்படவில்லை. அப்படி, ஒரு மதம் சம்பந்தப்பட்ட ஒரு தெய்வத்தின் சிலையை அமைக்க விஞ்ஞானிகள் அனுமதிக்கவும் மாட்டார்கள்.

ஏன், நம் சமயச் சார்பற்ற அரசாங்கம், செர்ன் விஞ்ஞான கூடத்தில் ஹிந்துக்கள் வணங்கும் நடராஜர் சிலையை அமைத்தது? அந்த விஞ்ஞானிகளின் அமைப்பு அதை ஏன் அனுமதித்தது? 1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க பௌதிக விஞ்ஞானி 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்கிற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.

1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை ’The Tao of Physics' என்கிற தலைப்பில் ஒரு பெரிய புஸ்தகமாக அவர் எழுதினார். அது உலகிலேயே அதிகம் விற்ற புஸ்தங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.

செர்ன் ஆய்வு கூடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிவனின் சிலையின் பீடத்திற்கு அருகிலுள்ள ஒரு பலகையில், ப்ரிட்ஜாப் காப்ரா தன்னுடைய ’The Tao of Physics'புஸ்தகத்தில் எழுதிய சில வரிகள் இது:

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியக் கலைஞர்கள், உலோகங்களில் நடராஜரின் நடனத்தை அழகாகச் சித்திரித்தனர். நம் நவீன காலத்தில் பௌதிக விஞ்ஞானிகள், மிகவும் நுண்ணிய தொழில் நுட்பத்தின் மூலமாக இசைவுடன் கூடிய பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடன வகைகளைச் சித்திரிக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடனம், நவீன பௌதிகத்தையும், ஹிந்து சமயக் கலைகளையும், பண்டைய புராணங்களையும் இணைக்கிறது... நவீன விஞ்ஞானம், சீராக இணைந்து செயல்படும் படைப்பு மற்றும் அழிப்பு இரண்டும் (தோன்றி மாறும் பருவ காலங்கள், பிறந்து இறக்கும் ஜீவராசிகள் மட்டுமல்லாமல்) உயிரில்லாத வஸ்துகளுக்கும் பொருந்தும். உயிரில்லாத ஜட வஸ்துகளும் தோன்றி மறைகின்றன என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. ஆகவே, நவீன பௌதிக விஞ்ஞானிகளுக்கு சிவனுடைய நடனமே உப அணுக்களின் நடனம்”.

காப்ராவுக்கு பசிபிக் கடல் கரையில் ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாகத்தான் அவர் நடராஜரின் நடனத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார். கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு கடல் அலைகள், சூரிய கிரணங்களின் அலைகள், சிந்தனை அலைகள் எல்லாமே ஒரே சீரான (அணு விஞ்ஞான) நடனத்தின் பிரதிபலிப்பாகப் பட்டது. ‘எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியேதான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது’ என்று கூறினார் காப்ரா.

பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம் என்கிறார் காப்ரா. கோடானுகோடி அணுக்களை ஆட்டிப் படைக்கும் அவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் உப அணுவைத்தான், இப்போது கண்டுபிடித்துள்ளதாக செர்ன் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ‘நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றே’ என்று கூறும் அளவுக்கு, விஞ்ஞானமும் ஹிந்து ஆன்மிகமும் நெருங்கி விட்டிருக்கிறது. அதனால்தான் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆய்வு கூடத்தில், தில்லை நடராஜர் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.

ஹிந்து ஆன்மிகமும் விஞ்ஞானமும், அணு விஞ்ஞானத்தின் அடிப்படையில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை, காஞ்சி மஹா ஸ்வாமிகள், ‘தெய்வத்தின் குரல்’ நூலில் விளக்குகிறார். இந்த விளக்கத்தை அவர் 1960-களில் கொடுத்திருக்க வேண்டும். அணு விஞ்ஞானம், அதுவரை ஜடமாக இருந்த விஞ்ஞானத்தை ஆன்மிகத்துடன் எப்படி இணைத்தது என்பதை, அவர் இப்படி விளக்குகிறார்:

“காண்கிற உலகம் பலவிதமாக இருந்தாலும், ஒன்றேதான் இத்தனையும் ஆகி இருக்கிறது என்பதை நவீன சையன்ஸ் தெளிவாக ஒப்புக் கொண்டு நிலைநாட்டுகிறது. 50 வருஷங்களுக்கு முன், உலக வஸ்துக்கள் எல்லாம் 72 மூலப் பொருள்களுக்குள் அடங்குவதாக சையன்ஸ் சொல்லி வந்தது. இந்த (ஜட) மூலப் பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை (அதாவது ஒன்றுடன் ஒன்று சேராதது) என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (atom) பற்றிய அறிவு விருத்தியான பின், இந்த மூலப் பொருட்கள் எல்லாமும் கூட வேறான பொருள்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (energy)தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் சையன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். பொருள் (matter), சக்தி (energy) – இவையும் வேறானவை அல்ல என்று சையன்ஸ் சொல்கிறது.

“ஐன்ஸ்டீன், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல சயன்ஸ் நிபுணர்கள், அத்வைத சித்தாந்தத்திற்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள். பிரம்மம்தான் பரமார்த்திக சத்தியம். உலகம் விவகார (நடைமுறை) சத்தியம் என்று அத்வைதம் சொல்வதைத்தான், இவர்கள் (விஞ்ஞானிகள்) ‘உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான்; முழு உண்மை (absolute) அல்ல’ என்கிறார்கள்”. (இப்படி உலகம் ‘ஏதோ ஒன்றைச் சார்ந்தது’ என்கிற விஞ்ஞான தத்துவம்தான் ஐன்ஸ்டீனின்relativity theory!

ஆனால் விளைவுகளை வைத்துப் பார்த்தால், விஞ்ஞானத்துக்கும் அத்வைதத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அது என்ன? மகா ஸ்வாமிகள், ‘சக்தியும் பொருளும் ஒன்று என்கிற பெரிய உண்மையைக் கண்ட அணு விஞ்ஞானிகள், அந்த அறிவைக் கொண்டே அணுகுண்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து சையன்ஸால் நிலைநாட்டப்படும் அத்வைத தத்துவம், புத்திமட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது. சையன்ஸின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் மட்டும் நிற்காமல், வெளி உலகத்துக்குக் காரணமான உள் உலக உண்மையை ஆராய்ந்து, புத்தியோடு நிற்காமல் மக்களுடைய பாவனையிலும் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் சையன்ஸ் வழியாக ஏற்பட்டால், அணு குண்டைத் தயாரித்த சையன்ஸே ஆத்மஹானிக்குப் பதிலாக, மகத்தான ஆத்மக்ஷேமம் செய்ததாகவும் ஏற்படும்” என்கிறார்கள்.

‘கடவுள் அணு’ கண்டுபிடிப்பு, ஜீவ குலம் எல்லாம் ஒன்று என்கிற ஆன்மிக உண்மையைப் பரப்புமா? அல்லது அணுகுண்டைப் போல் பல மடங்கு நாசத்தை விளைவிக்கும் அனர்த்தத்தைச் செய்யுமா என்பது எதிர்காலத்தில்தான் விளங்கும்.

இவ்வளவு சூட்சுமமான உண்மையைத் தேட முதலில் வழி கோலிய சத்யேந்திரநாத் போஸுக்கு நம்முடைய அரசாங்கம் என்ன செய்தது? அவர் 1974 வரை வாழ்ந்தார். அவர் தன்னுடைய 80-ஆவது வயதில் இறந்தபோது, அவர் யார் என்று கூட நம் நாட்டில் யாருக்கும் தெரியாது. உப அணுக்கள் பற்றி அவருக்குக் கிடைக்க வேண்டிய நோபல் பரிசு, என்ரிகோ பெர்மி என்கிற இத்தாலிய நாட்டுக்காரருக்கு கிடைத்தது. 1954-ஆம் ஆண்டு போனால் போகிறது என்று அரசியல்வாதிகளிலிருந்து வணிகர்கள், நடிகர்கள், நடிகைகள் வரை எல்லோருக்கும் அளிக்கும் பத்மபூஷண் விருதை அவருக்கு அளித்தது அரசு.

அணு என்றால் என்ன?

அணு என்பதை கண்ணால் காண முடியாது, தொட்டு உணர முடியாது, நுகரவும் முடியாது. அப்படிப் பார்க்க முடியாத, உணர முடியாத, நுகர முடியாத அணுக்களால்தான், நம்முடைய உடல், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, குடிக்கும் நீர், நம்மைத் தாங்கும் நிலம், நாம் பார்க்கும் மரம், செடி, கொடி மற்றும் ஜடப் பொருள்கள் எல்லாமாக உருவாகியிருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் அணு. விஞ்ஞானப்படியும் நம்முடைய மெய்ஞானப்படியும் உண்மை. அந்த அணுக்களுக்குள் உப அணுக்கள் மறைந்திருக்கின்றன. அந்த அணுக்களை நிர்வகிக்கும் ‘கடவுள் அணு’ என்ற ஒன்று இருக்கிறது என்றால், எந்த அளவுக்கு சூட்சுமமானது அந்த அணு!

- நன்றி துக்ளக்

இட்லிக்குள் மாவு, சட்னிக்குள் தேங்காய் என்று பல விஷயங்கள் இருக்கு :-)

27 Comments:

s suresh said...

சுவாரஸ்யமான தகவல்கள்!

Kadavul said...

Thanks a lot. After reading this in Thuglak, I came to idlyvadai immediately to request you to post this. But you already posted this. Thanks a lot for spreading this profound and amazing information

ஜெ. said...

//இவ்வளவு சூட்சுமமான உண்மையைத் தேட முதலில் வழி கோலிய சத்யேந்திரநாத் போஸுக்கு நம்முடைய அரசாங்கம் என்ன செய்தது?.... 1954-ஆம் ஆண்டு போனால் போகிறது என்று அரசியல்வாதிகளிலிருந்து வணிகர்கள், நடிகர்கள், நடிகைகள் வரை எல்லோருக்கும் அளிக்கும் பத்மபூஷண் விருதை அவருக்கு அளித்தது அரசு.//

அந்த சமயத்தில் வேறு என்ன செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அன்று போஸும் ஐன்ஸ்டீனும் ஊகித்ததை இத்தனை வருஷங்கள், மற்ற விஞ்ஞான முன்னேறங்களுக்குப் பிறகுதான் நிரூபிக்க முடிந்திருக்கிறது. அதுவரை, அது ஒரு விஞ்ஞான கற்பனையாகக் கூட இருந்திருக்க சாத்தியங்கள் உண்டு. இந்த சோதனையை எந்த ஒரு நாடும் தனியே செய்திருக்க முடியாது, இந்தியாவும் (அரசு செலவில்) பங்கு பெற்றுள்ளது. அரசை இங்கு குறை சொல்வது அனாவசியம் என்றே எனக்குப் படுகிறது. இப்போது posthumous ஆக பாரத ரத்னா தரப்படலாம்! - ஜெ.

R. J. said...

You know that Sardar Patel, Morarjee, Maulana Abul Kalam Azad, JRD Tata, Gulzarilal Nanda, JP Narain - all got the Bharatha Ratna award AFTER MGR was awarded the title? And Dr Rajendra Prasad (First President) got it after Dr. Radhakrishnan (Second President) got it! So, in my opinion, even a Bharatha Ratna by GoI has no value and meaning. Now, what do you expect our Govt to do - to honour Satyendra Bose! - R. J.

Anonymous said...

We only eat, talk and shit.
That's how our genes are made. Anything that happens will be forgotten in 5 days.

பகலவன் said...

Lot of Rubbish ! Please understand it was originally named as "Goddamn Particle" and teh publisher changed it to "God Particle". This article is very shallow - far from truth and baseless rants. Please do not degrade Idlyvadai by publishing such idiotic articles.

|Eswar〉 said...

போசானெல்லாம் விஞ்ஞானக் கற்பனை இல்லை என முன்னமேத் தெரியும், ஜெ! ஹிக்ஸ் போஸானைப் பற்றி நிரூபிக்கத்தான் இவ்வளவுக் காலம் ஆகிவிட்டது. 60களில் நிறுவப்பட்ட ஹிக்ஸ் புலம், போஸின் புள்ளியியற் கொள்கையைக் கொண்டு இருப்பதாக அறியப்பட்டது.

அரசு செய்திருக்க வேண்டும், எப்பொழுதும் போல் ஒழுங்காக செய்யவில்லை, அவ்வளவுதான். குறைந்தபட்சம், போஸின் பெயரில் அறிவியற் கழகத்தையாவது நிறுவ வழிசெய்தார்கள்.

ஈஸ்வர்.

மற்றுமொறு சுயசொறிதல் கட்டுரையா...நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத பல தகவல்கள்...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

Anonymous said...

Bose did not invent Boson, it was named after his. The work he did with Eisenstein was about of Bose-Eisenstein statics, which these particles exibit. So it was named after him. This article is just a metaphysics junk, just like other leftist junk written to establish their propaganda using the same discovery.

Shan said...

Idlyvadai,
I thought you should re-post this nice article in your blog and create awareness among people. http://www.cablesankaronline.com/2012/07/blog-post_18.html

Thanks,
Shan

Anonymous said...

enakku onnumae puriyala ..

Gnanam Sekar said...

நல்ல பகிர்வு , உபயோகமான தகவல் . நன்றி

thirunageswaram said...

அவர்கள் 99.999 சதவீதம் கண்டுபிடித்து விட்டதாக கூறுவது சரியாக படவில்லை.

கண்டுபிடிப்பு என்பது முழுமை அடைந்தால் மாத்திரமே அர்த்தமுள்ளதாகிறது.

பிரபஞ்சம் எதனால், யாருக்காக, எப்படி என்ற மூன்று கேள்விகள் நம் முன் உள்ளது.

Lakshmi Ramani said...

simple explanation very nice
my husband is taking tuitions for 10th and12th std students cbse icse,IGCSE Maths Physics and chemistr I skipped the news in the paper regarding Gods particle because i have very little knowledge of PhysicsThe same day in the tuition severyone said sir please explain Boson TheoryThe teachers did their best still we r not very clear about it.The class was in our drawing room and i was in the kitchen.When my husband explained it all were very happyI also understood it This is even simpler Thanks alot Our students will never forget it

Anonymous said...

avan indri oru ""ANUVUM"" asiathu

I am right?.

Anonymous said...

We need to ask kalaignar's opinion on the discovery of god particle! :P

Vaz said...

"Anu" means atom , god particle should be "kadavul thugal", anu is not the correct term to use.
since atom has protons, electrons and neutrons and god particle cant be called "anu"

bala said...

திருமூலர் திருமந்திரம்
திருச்சிற்றம்பலம்

அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை,

அணுவில் அணுவினை,
ஆயிரம் கூறிட்டு,

அணுவில் அணுவை, அணுக வல்லார்க்கு,

அணுவில் அணுவை, அணுகலுமாமே.

THIRUCHITRAMBALAM.

அணுவில் அணுவினை[இறைவன் அணுவில் அணுவாக உள்ளான்]
ஆதிப் பிரானை[அவனே ஆதியில் இருந்து உள்ளான்]அணுவில்[ஒரு அணு: மிகவும் சிறிய பொருள்.]அணுவினை[அதனுள் இருக்கும் சிறுபொருளை]
ஆயிரம் கூறிட்டு[அந்த சிறு பொருளை ஆயிரம் கூறுகளாகப் பிரித்து ]
அணுவில் அணுவை[பிரித்த ஆயிரம் கூறுகளில் ஒரு சிறிய கூறு அளவு]
அணுக வல்லார்க்கு[பிரித்த அந்த சிறிய கூறு அளவு நாம் இறைவனை நாடினால் போதும் ]
அணுவில் அணுவை[அணுக்களின் மூலமாக உள்ள இறைவனை] அணுகலுமாமே[அணுக முடியும்].திருச்சிற்றம்பலம்

networld said...

good !!!

Shiva Bakthan said...

Har Har Mahadev

செழியன் said...

வணக்கம்
தெளிவாக சொல்லிவிட்டீர்களே
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....

சித்தி யியல் said...

http://tamilsiththiyal5.blogspot.in/2012/09/1_3116.html

raj palani said...

பிரபஞ்சத்தின் இயக்கம், இலக்கு:-

பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறது. அதற்கான விதி முறை என்ன என்பதை மனிதன் தெரிந்துகொண்டு செயல்பட்டால்தான் அவன் மூலம் நடக்கும் தவறான செயல்களையும், அதனால் பாதிக்கப்படும் சுற்றுப்புறச்சூழலையும் சரி செய்து ஒட்டுமொத்த நாடுகளையும் ஒன்று சேர்க்க முடியும் என்கிறது விதி.

பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு சக்தியும் பல நிலைகளாக மாறிகொண்டிருக்கிறது. அந்த ஒவ்வொரு நிலையிலும் அதற்கு ஆயுள் என்பது உண்டு அந்த ஆயுளுள் அதன் செயல்பாடுகள் என்பது உழைப்பு என்ற செயலைத்தான் எல்லா சக்திகளும் எல்லா நிலையிலும் செய்துகொண்டிருக்கிறது. காரணம் அந்த உழைப்பின் மூலம்தான் ஒட்டுமொத்த சக்திகளும் தன்னுடைய அடுத்தடுத்த நிலையை நோக்கி பயணிக்க முடியும் என்கிறது விதி. அதாவது, அடிப்படை சக்திகளில் இருந்து பரிணாமித்தவைதான் அணு முதல் இயந்திரம் வரை. அது தன்னுடைய அடுத்தடுத்த நிலையை நோக்கி படி படியாக (பரிணாமம்) மாறுகிறது. அதற்காக அது பல வேறுப்பட்ட சக்திளாவும், அதில் பல விதமான சக்திகளாகவும் பரிணாமித்திருக்கிறது. அந்த பல வேறுப்பட்ட சக்திகளின் உழைப்பு ஒன்று சேரும்போதுதான் அது தன்னுடைய அடுத்தடுத்த தலைமுறையை நோக்கி பயணிக்க முடியும் என்கிறது.

இயக்கம் : மைய ஈர்ப்பு விசையின் மூலம் செயல்படுதல். அதாவது, பிரபஞ்ச சக்திகள் அனைத்தும் அதனதன் மைய சக்தியின் ஈர்ப்பு விசையின் மூலம் ஒரு வலைப்பின்னலைப்போல பின்னனிபினைக்கப்பட்டுள்ளது. அதனால், அதனுடைய புற சக்திகள் அனைத்தும் அதனதன் மைய சக்தியின் ஈர்ப்பு விசையின் மூலம் செயல்பட்டால்தான் அது தன்னுடைய இயக்கத்தையும், தன்னுடைய மற்ற சக்திகளின் இயக்கத்தையும் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு செயல்பட முடியும் என்கிறது விதி.

இலக்கு : முழுமையடைவதற்கான முயற்சி. அதாவது, ஒரு அடிப்படை சக்திக்குள் நான்கு சக்தி செயல்படுகிறது. அதில் உள்ள மைய சக்தியானது முழுமைக்காக தன்னுடைய ஈர்ப்பு விசையின் மூலம் தன்னுடைய புற சக்திகளை தன்னோடு ஒன்று சேர்க்கும்போது அது தன்னுடைய அடுத்த பரிணாமத்தை அடைகிறது. காலம் நீல்வட்டப்பாதையில் சுற்றுவதால், அந்த முழுமைக்கான பரிணாமம் செயல்-மறுசுழற்சி-செயல் என்ற அமைப்பின் மூலம் முடிவற்ற அடுத்தடுத்த தலைமுறையை உருவாக்கிகொண்டிருக்கிறது.

அடிப்படை சக்தி-அணு-அண்டங்கள்-சூரியன்-பூமி-மனிதன்-ரோபோ-?

இயக்கத்திற்கான விதி : முதலில் செயலை தீர்மானித்து, அந்த செயலுக்கு ஏற்றவாறு சக்தியை உருவாக்கி அந்த செயலை செய்ய தூண்டப்படுகிறது. அதனால், ஒவ்வொரு பரிணாம சக்தியின் இயக்கத்திற்கான பாதையும், அதற்கான காலமும் அதன் உருவாக்கத்திற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. அப்படி தீர்மானிக்கப்பட்ட காலத்திற்குள் அது அதனுடைய பாதையில் தொடர்ந்து பயணித்து, அதனுடைய அடுத்த பரிணாமத்தை உருவாக்க அதனுடைய மைய சக்தியின் கவர்ச்சியால் மட்டுமே தொடர்ந்து இயங்க வேண்டும் என்கிறது விதி.

மனிதன், தன்னுடைய உழைப்பின் அடையாளத்தை தெரிந்துகொள்வதற்கும், தீர்மானிக்கப்பட்ட காலத்திற்குள் அவன் அவனுடைய அடையாத்தின் பாதையில் தொடர்ந்து பயணித்து, அவனுடைய அடுத்த பரிணாமத்தை உருவாக்குவதற்கும் அவரவர் சுய அறிவு என்னும் மைய சக்தியிடமிருந்து மட்டுமே அதற்கான அன்பையும், அறிவையும் தொடர்ந்து பெறவேண்டும் என்கிறது விதி.

Ex- அறிவியல் அறிஞர்கள் தன்னுடைய செயலுக்கான ஈடுபாட்டையும், செயலுக்கா அறிவையும் தன்னுடைய சுய அறிவு என்னும் மைய சக்தியிடமிருந்து மட்டடுமே பெருவார்கள்.

ஒரு புள்ளியில் இருந்து தொடங்கப்படும் பரிணாம சுழற்சி அதே புள்ளியை வந்தடைவதற்கான காலத்தை தொடங்குவதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. அதனால், ஒவ்வொரு சக்தியின் உழைப்பு, உழைப்பிற்கான பரிணாமம் காலத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அதில் உழைப்பை நிறுத்தினால் பரிணாமம் நின்றுபோகும் ஆனால், காலத்தை நிறுத்த முடியாது. அதனால் தன்னுடைய பரிணாமமும், தன்னுடைய அடுத்த தலைமுறைக்கான பரிணாமமும் தீர்மானிக்கப்பட்ட காலத்திற்குள் சரியாக நடைபெறாவிட்டால் அந்த செயல் இது வரை நடந்த அடிப்படை சக்தி முதல் இயந்திரம் வரையிளான ஒட்டுமொத்தம் பரிணாமத்தையும் பயணற்றதாக்கிவிடும் என்கிறது விதி. Shift from Earth to Mars (End of Atmosphere in the Earth, start at mars)

மனித சமுதாயத்தில் உள்ள ஒட்டுமொத்த பிரச்சனைகளையும், அதனால் பாதிக்கப்படும் சுற்றுப்புறச்சூழலையும் சரி செய்ய பல வழி முறைகளை எனது சுய அறிவு என்னும் மைய சக்தியின் மூலம் கண்டறிந்து உள்ளேன். அதனை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த நாடுகளையும் ஒன்று சேர்க்க உதவுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு : கிருஷ்ணசாமி பழனிவேல், மருதத்தூர், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம். தொலைபேசி எண் : 9543676757

raj palani said...
This comment has been removed by the author.