பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 09, 2012

மண்டே மர்மங்கள் (4) - ச.சங்கர்

இன்கா தங்கம் (Inca Gold)

ஆதிகாலத்திலிருந்தே மனிதனுக்கு தங்கம் என்ற உலோகத்தின் மீதிருந்த மோகம் அலாதியானதுதான்.அதுவும் ஸ்பானியர்களுக்கு வெறி என்றே சொல்லலாம். 16 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பானியர்கள் தென்னமெரிக்க நாடுகளுக்குச் சென்றதும்,அங்குள்ள பழங்குடியினர் மீது தாக்குதல்கள் நடத்தி வெறியாட்டம் போட்டதும் நாடுகளைப் பிடிப்பதற்காக என்பதை விட, அங்கே அளவுக்கதிகமாகக் கொட்டிக்கிடப்பதாக நம்பிய தங்கத்திற்காகவும்தான்.அப்படி அவர்களால் ஆக்ரமிக்கப் பட்டதுதான் பெரு நாட்டின் இன்கா மக்களும் அதன் அரசும் .ஸ்பானியர்கள் சூறையாடியது போக மிகப் பெரும் பகுதி தங்கம் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்னும் கர்ண பரம்பரைக்கதைதான் இந்த இன்கா தங்கம் பற்றிய மர்ம முடிச்சின் அஸ்திவாரம்.

இன்கா நாகரீகம் பெரு நாட்டின் ஆண்டஸ் மலைப் பகுதியில் 13 ஆம் நூற்றாண்டுகளில் எழுச்சியுற்றது. 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்களால் கைப்பற்றப் படும் வரை , இன்கா மக்கள் இந்தப் பகுதியில், மற்றும் சுற்றியிருந்த பல தென்னமெரிக்க நிலப்பரப்புகளையும் ஆட்சி செய்து வந்தனர்.பொதுவாகவே இன்கா மக்களிடம் நிறைய தங்கம் புழக்கத்தில் இருந்ததென்று நம்பப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய தங்கச்சுரங்கங்கள் இரண்டும் இன்கா ஆட்சிக்குட்பட்ட பகுதியிலேயே இருந்ததும் இந்த நம்பிக்கைக்கு வலுச்சேர்பதாய் அமைந்து விட்டது.இப்படி ஏராளமாக இவர்களிடம் இருந்ததாக நம்பப்படும் தங்க பொக்கிஷங்களில் ஹுஅஸ்கர் சங்கிலியும் ஒன்று.கிட்டத்தட்ட 750 அடி நீளமுள்ள கனமான ஒரு சங்கிலி . சங்கிலியின் மேற்புறம் முழுவதும் பாம்பின் செதில்கள் போல தங்கத் தகடுகள் பதிக்கப் பட்டது.சுமார் 200 பேர் தூக்கக் கூடிய எடையுள்ளதென்றால் அதன் எடையை அனுமானித்துக் கொள்ளுங்கள். இன்கா மக்களின் வழிபாட்டு வைபவங்களின் போது 200 பேர் இந்தச் சங்கிலியைத் தூக்கிக் கொண்டு நடனமாடுவது ஒரு முக்கிய நிகழ்சியாக இருந்ததாம்.அப்படி ஆடும் போது இந்தச் சங்கிலியில் பதித்துள்ள தங்கச் செதில்களில் சூரிய ஒளி பட்டு கண்கள் கூச அந்தப் பிரதேசமே தங்க ஒளியில் தகதகக்குமாம்.
இந்த சங்கிலியை அதஹூல்பா என்கிற இன்கா மன்னனின் அப்பா தனது மூத்த மகனும் அரச வாரிசுமான ஹுஅஸ்கர் பிறந்ததை முன்னிட்டு செய்ததால் இது ஹுஅஸ்கர் சங்கிலி என்றே அழைக்கப் படுகிறது.


அதஹூல்பா(படம்) ஆட்சிக்கு வரும் போது தன் அண்ணன் ஹுஅஸ்கரைக் கொன்று விட்டான் என்பது தனிக்கதை. இந்த அதஹுல்பா காலத்தில், ஸ்பானியர்கள் ஃப்ரான்ஸிஸ்கோ பிஸரோ என்ற தளபதி தலைமையில் பெரு நட்டில் நுழைந்து கைப்பற்றத் தொடங்கினர்.போரில் அவர்கள் அதஹுல்பாவை சிறைப் பிடித்தவுடன்(படம்) மன்னன் அதஹுல்பா தன் விடுதலைக்காக தருவதாக பேரம் பேசியது என்ன தெரியுமா?
தன்னை சிறை வைத்திருந்த அறையைத் தங்கத்தால் நிரப்புவதாக வாக்களித்தானாம். முதலில் இந்த பேரத்தை பிஸரோ ஏற்றுக் கொண்டான். உடனே நாடெங்கிலுமிருந்து தங்கம் வந்து குவியத்தொடங்கியது.மக்கள் தங்கள் மன்னன் அதஹூல்பாவைக் காப்பாற்ற தங்கத்தை லாமா வண்டிகளில் (நம்மூர் மாட்டு வண்டி மாதிரி அந்த ஊரில் லாமா வண்டி)ஏற்றி அனுப்பத் தொடங்கினர். ஆனால் தங்கம் வரத் தொடங்கிய சிறிது காலத்திலேயே பிஸரோ மனதை மாற்றிக் கொண்டு , அதஹூல்பாவைக் கொலை செய்து விட்டான். அதஹுல்பா கொல்லப்பட்ட செய்தி பரவியதும், இன்கா படை வீரர்கள் தாங்கள் எடுத்து வந்து கொண்டிருந்த தங்கக் குவியல்களை ஆங்காங்கே ஆண்டஸ் மலை ஏரிகளில் எறிந்தும்,மலைக் குகைகளில் மறைத்தும் வைத்து விட்டனர் என்றும் அதில் இந்த ஹுஅஸ்கர் சங்கிலியும் இருந்ததென்றும் கதைகள் உலவுகின்றன.
இது நடந்து 50 வருடங்களுக்குப் பிறகு பெரு நாட்டிற்கு வந்த வால்வோர்ட் என்ற ஸ்பானியருக்கு அவரது பெரு நாட்டு சிவப்பிந்திய மனைவியின் குடும்பம் மூலமாக அந்தத் தங்கத்தின் இருப்பிடம் தெரிந்ததென்றும் அதன் மூலம் வால்வோர்ட் பெரும் பணக்காரனாகி விட்டதோடல்லாமல் அந்தப் புதையலுக்குப் போகும் வழித்தடங்களை விவரமாகக் குறித்து வைத்து விட்டுச் செத்தார் என்று ஒரு தோராயமான வால்வோர்ட் குறிப்பும் கிடைத்தது. போதாதா புதையல் வேட்டை ரசிகர்களுக்கு? இன்கா புதையலைத் தேடி ஆண்டஸ் மலைகளில் சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
1850 களில் சற்றே ஓய்ந்த இந்தத் தேடுதல் வேட்டை, ரிச்சார்ட் ஸ்புரூஸ் என்கிற ஆங்கில தாவரவியலாளர் மலேரியா நோய்த் தடுப்பிற்கான கொயினா தயாரிக்கப் பயன்படும் சின்கோனா மரத்தைத் தேடி ஆண்டஸ் காடுகளில் அலைந்த போது தனக்கு வால்வோர்டின் குறிப்பையொட்டி அடனாசியோ குஸ்மான் என்பவர் தயாரித்த வரைபடம் கிடைத்தது என்று சொன்ன பின்னர் திரும்பவும் சூடு பிடித்தது. இவரது குறிப்பைத் தொடர்ந்து பார்த் ப்ளேக் என்ற புதையல் ஆர்வலர் 1886 ல் புதையலைத் தேடப் புறப்பட்டார்.அவர்தான் புதையலைக் கடைசியாகக் கண்ணால் பார்த்தவர் என்று நம்பப் படுகிறது. அவர் புதையலிலிருந்து கண்டெடுத்ததாக முழுவதும் மரகதக் கற்கள் பதிக்கப் பட்ட தங்கக்குவளை (படம்) பற்றி தன் குறிப்புகளில் எழுதியிருக்கிறார்.
மேலும் "மிகச்சிறந்த பொற்கொல்லர்களின் கைவண்ணத்தினாலான இன்கா மற்றும் அதற்கு முந்தைய நாகரீக காலத்திற்கான தங்க,வெள்ளி பாத்திரங்களும்,ஆபரணங்களும் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கின்றன.இவற்றை என்னால் தனியாக அப்புறப் படுத்த முடியாது " என எழுதி வைத்திருக்கிறார்.முழு அளவில் மனித உருவங்கள்,பறவைகள், மிருகங்கள் ,பூக்கள் என்று அங்கிருந்த பொருட்களைப் பற்றி அவர் குறிப்பெழுதி யிருக்கிறார்.தன்னால் முடிந்த அளவு புதையலை எடுத்துக் கொண்டு கிளப்பியதாக நம்பப்படும் அவர் போன இடமே தெரியவில்லை.நியூயார்க் சென்ற பிறகு போதிய ஆட்களையும் உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு அந்தப் புதையலை எடுக்க வரலாம் என்று கப்பலில் திரும்பும் போது வழியில் கடலில் விழுந்து விட்டார் என்றும், அவரிடம் இருந்த புதையல் பொருட்களுக்காக கடலில் தள்ளி கொல்லப்பட்டார் என்றும் ஏகப்பட்ட வதந்திகள். புதையலைத் தேடி, ப்ளேக் போன பாதையைத் தொடர முயன்று ஆண்டஸ் மலைத் தொடரில் நுழைந்த பலரும் உயிரோடு திரும்பவில்லை.
இப்படியாகப் பார்த்தவர்கள் ,பார்க்காதவர்கள்,காதால் கேட்டவர்கள் என்று அத்தனை கதைகளையும் சுமந்து கொண்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது இன்கா தங்கத்தின் மர்மம்.அதஹூல்பா மன்னன் பிடிபட்டதும், காப்பாற்ற நாடெங்கிருந்தும் தங்கம் வந்ததும், எல்லா தங்கமும் வந்து சேரும் முன்னரே அதஹூல்பா கொல்லப்பட்டதும் உண்மை. ஏனெனில் இதெல்லாமே ஸ்பானியர்களால் ஆவணப் படுத்தப் பட்டிருக்கிறது.ஆனால் அதன் பின் மீதமிருந்த தங்கக் குவியல் என்று ஒன்று உண்டா என்ற மர்மத்திற்கு இன்று வரை விடையில்லை.அப்படியே புதையல் ஆண்டஸ் மலையில் இருந்தாலும் விரிந்து பரந்த ஆண்டஸின், அதுவும் பல முறை நில நடுக்கத்திற்கும் நிலச் சரிவுகளுக்கும் உள்ளானதும்,அடர்ந்த காடுகளை உள்ளடக்கியதுமான லாங்கனேடஸ் மலைத் தொடரில் இன்கா தங்கப் புதையலைத் தேடுவது வைக்கோல் போரின் நடுவில் ஊசியைத் தேடுவதற்கு ஒப்பானது என்றே சொல்லலாம்.
எது எப்படியோ இதை வைத்து நாவலாசிரியர் க்ளைவ் கஸ்லரும் INCA GOLD என்றோர் புதையல் வேட்டை நாவலை எழுதி கல்லா கட்டிவிட்டார்.அவர் எழுதிய அட்வென்சர் நாவல்களில் இது ஒரு விறுவிறுப்பான நாவல் என்று கூடச் சொல்லலாம். சந்தர்ப்பம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.
பேராசை,படையெடுப்பு,கொலைகள்,மர்மங்கள் என அனைத்தும் அடங்கிய இன்கா தங்கப் புதையல் உண்மையா, இன்னும் ஈகுவெடாரின் பனிப்புகை சூழ்ந்த ஆன்டஸ் மலைக் கூட்டத்தில் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறதா,வால்வோர்டின் புதையலுக்கான பாதைக் குறிப்புகள் உண்மையா என்ற கேள்விகளுக்கு விடையில்லாமல் இன்னும் தொடர்ந்து அனைவரையும் இழுக்கிறது இன்கா தங்கம் என்னும் மாயமான் வேட்டை.

மர்மங்கள் தொடரும்.
அன்புடன் ச.சங்கர்

மஞ்சள் கலரில் இருக்கும் தங்கம் பற்றி இந்த வாரம் நிறைய இருப்பதால் மஞ்சள் கமெண்ட் இந்த வாரம் கிடையாது :-)

7 Comments:

ஜெ. said...

இல்லை என்று சொல்லியும் இருக்கிறது - நான் பார்த்த மஞ்ஜள் கமென்ட்!

சங்கர் அவர்களுக்கு நன்றி - நல்ல ஸ்வாரசியமான சுருக்கமான கட்டுரைகளுக்கு. இதெல்லாம் இ. வ. செய்யும் புண்ணியம்! (பின்னாடி பாலா க்ரிகெட் பற்றி எழுதும் போது கை கொடுக்கும்!)(லைட்டாக எடுத்துக் கொள்ளும்படி பாலாவைக் கேட்டுக் கொள்கிறேன்.)

-ஜெ.

Anonymous said...

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் என்பது போல,

இந்தியாவின் பொருளாதாரத்தை இத்தனை சீரழித்தபோதும்

மக்கள் சோனியாவையும், மன்மோகனையும் நம்புவது மண்டே மர்மங்களை விட பெரிய மர்மம்.

s suresh said...

அறியாத தகவல்களை அறியவைத்தமைக்கு நன்றி!

siva.saravanakumar said...

விருந்தினர் என்று எண்ணி வரவேற்க வந்த மன்னர் அட்வால்பாவை ஸ்பானிய தளபதி எப்படி நய வஞ்சகம் செய்து சிறை பிடித்தான் என்பதையும் ,அவரை விடுவிக்க அவன் விதித்த நிபந்தனைகளையும் ,அதன் பிறகும் அவன் அட்வால்பாவை குரூரமாக கொன்றதையும் [ஹாய்]மதன் ஒரு கட்டுரையில் விவரித்திருப்பார்......கல் நெஞ்சையும் கரைய வைக்கும் கொடூரம் அது....செய்த அட்டூழியங்களையெல்லாம் செய்து விட்டு, அவர்களை காட்டுமிராண்டிகள் போல் சித்தரித்து ''அபோகலிப்டோ'' போன்ற படங்களை எடுப்பது வெள்ளையர்கள் மட்டுமேசெய்யும் அயோக்கியத்தனம்.....

ச.சங்கர் said...

நன்றி ஜெ,அனானி & சுரேஷ்

ச.சங்கர் said...

siva.saravanakumar
வரலாறு என்பதே எழுதுபவரது சார்பு நிலை பொருத்தே அமையும்.இந்த உலகின் பெரும்பான்மையான வரலாறு வெள்ளையர்களாலேயெ ஆவணப்படுத்தப்பட்டதால் அவர்களைத் தவிர மற்றவர் அனைவரையும் காட்டு மிராண்டிகள் போலவே சித்தரிக்கின்ற போக்கு இருந்திருக்கிறது.வரலாற்றின் தந்தை என்று போற்றப்படும் ஹெரொடொடஸ்(இவர் பெயரிலிருந்துதான் ஹிஸ்டரி என்ற வார்த்தை பிறந்தது) சிந்து நதிக்கு இந்தப் பக்கம் இருந்தவர்களைப் பற்றி என்ன குறித்து விட்டுப் போயிருக்கிறார் தெரியுமா..அங்குள்ள மக்கள் காட்டுமிராண்டிகள்,மிகவும் கறுத்த தோற்றம் உடையவர்கள்,அவர்களுடைய விந்து கூட கறுப்பு நிறமாக இருக்கும் என்று எழுதியிருக்கிறார்.வெள்ளைக்காரர்களது வரலாற்றை முழுவதும் நம்பக்கூடாது :)ஃப்ராடுத்தனம் நிறைய இருக்கும்.

ச.சங்கர் said...

சிவ.சரவணகுமார்
ஸ்பானிய தளபதி பிஸரோ அதஹுல்பாவைக் கொன்றது மட்டுமல்லாது அவனது மனைவியையும் சின்ன வீடாக செட்டப் செய்து கொண்டு விட்டான் என்பது உபரித் தகவல்.அவன் மூலம் அவளுக்கு 2 குழந்தைகள்.உலகில் ஆக்ரமிப்பு போர் செய்த ஐரோப்பியர்களிலேயே மிகவும் கொடூரமானவர்கள் ஸ்பானியர்களே என்பது என் எண்ணம் :)