பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 02, 2012

மண்டே மர்மங்கள் (3) - ச.சங்கர்

கடலுக்குள் “அட்லான்டிஸ்”

அட்லான்டிஸ் என்ற மர்மத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கிரேக்க அறிஞர் ப்ளாட்டோதான்(இவர் தத்துவ மேதை சாக்ரடிஸின் சீடர்).அட்லான்டிஸ் என்பது மிக முன்னேறிய ஒரு தீவு நாகரீகத்தைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதை. இதைப் பற்றி ப்ளாட்டோ தன்னுடைய “ தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் ” என்ற உரையாடல் தொகுப்புகளில் குறிப்பிட்டுள்ளார். அந்த உரையாடல்களில் வரும் கதாபாத்திரங்கள் , அட்லான்டிஸ் பற்றியும், அது (ப்ளாட்டோவின் காலத்துக்கு) 9000 ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பூகம்பத்தினாலோ சுனாமியினாலோ அழிந்து விட்டது என்று குறிப்பிடுகின்றன.கதையில் இந்தத் தீவு ஹெர்குலஸ் தூண்களுக்கு வெளியே எங்கோ ( இன்றைய கிப்ரால்டர் ஜலசந்தியில் ) இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.அட்லாண்டிஸ் பற்றிக் கிடைத்த எழுதப்பட்ட ஆவணக் குறிப்பு என்று பார்த்தால் அது. ப்ளாட்டோவின் தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் உரையாடல்கள் மட்டுமே.ஆனால் இது பற்றி மனிதர் கொஞ்சம் விலாவாரியாகவே எழுதி வைத்து விட்டுப் போய்விட்டார்.இவர் எழுதிய இந்த உரையாடல் சாக்ரடிஸ்,ஹெர்மோகிரெடஸ்,தைமியஸ் மற்றும் க்ரிடியஸ்ஸுக்கு நடுவில் நடக்கிறது. சாக்ரடிஸ் முன்னதாக சிறந்த சமூக அமைப்புகள் (ideal societies) பற்றிப் பேசியதற்கு பதிலளிக்கும் போது தைமியஸும் க்ரிடியஸும் அப்படிப் பட்ட சமூகத்தின் ஒரு உண்மையான கதையை சாக்ரடிசுக்கு கூற முன்வருகின்றனர். கதை 9000 வருடங்களுக்கு முன்னால் ஏதனியர்களுக்கும் அட்லாண்டியர்களுக்கும் இடையேயான முரண்பாடுகள்,போர் பற்றியது.ஏதனியர்கள் மறந்து போன இந்த அட்லாண்டிஸ் பற்றிய வரலாறு சோலோன் (ஏதனியப் பயணி மற்றும் கவிஞர்) என்பவருக்கு எகிப்திய குருமார்களால் சொல்லப்பட்டது. சோலான் இதை ட்ரோபிடஸ் என்ற தன் சொந்தக்காரருக்குச் சொல்லுகிறார். இந்த ட்ரோபிடஸின் மகன் க்ரிடியஸ். இந்தக் க்ரிடியஸின் பேரனின் பேரும் க்ரிடியஸ்தான்(ப்ளாட்டோவின் கொள்ளுத்தாத்தா).இந்தப் பேரன் க்ரிடியஸ்தான் தன் தாத்தா க்ரிடியஸ் தனக்கு அட்லான்டிஸ் பற்றி சொன்னதாக ப்ளாட்டோவின் உரையாடலில் (சாக்ரடிஸுக்கு) இந்தக் கதையைச் சொல்லும் பேர்வழி.
தைமியஸ் நீங்கலாக இந்த உரையாடலில் குறிப்பிடப் படும் அனைவரும் புராதன கிரேக்கத்தில் இருந்ததற்கான சரித்திரக் குறிப்புக்களும் ஆவணங்களும் இருந்திருக்கின்றன.மேலும் பல நூல்களில் இவர்களது வாழ்வும் செயல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.இதனால் இதை முழுவதும் கட்டுக்கதை என்றும் புறந்தள்ள முடியவில்லை.
கதையில் சொல்லப்பட்டபடி ,அட்லான்டிஸின் தலைநகர் மிகச்சிறந்த கட்டிடக்கலை மற்றும் பொறியியலுக்கு உதாரணம். பல அடுக்கு வளையமாக கட்டப்பட்ட மாளிகைகள் , பல கால்வாய்கள், அரங்கங்கள் என அனைத்தும் உண்டு அட்லாண்டிஸில் . நடுவில் உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரும்மாண்டமான கோவிலில் கடல் கடவுள் பொசைடான் இறக்கைகளுள்ள ஆறு குதிரைகள் கொண்ட ரதத்தைச் செலுத்துவது போன்ற பெரிய சிலை தங்கத்தில் வடிக்கப்பட்டிருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் பெண்களை முதன்மைப் படுத்திய மிகவும் முன்னேறிய சமுதாயமாக இருந்தனர். இப்படிப் போகிறது (பிளாடோவின்) வருணனை. இதைத் தவிர இங்கு வாழ்ந்த மக்கள், பழக்க வழக்கங்கள், ஆயுதங்கள், உலோகங்கள், சீதோஷண நிலை இப்படி A to Z எல்லாவற்றையும் பற்றி ப்ளாட்டோ விலாவாரியாக எழுதியிருக்கிறார். எவ்வளவு சிறப்பான ஒரு சமூகம் என்றால் உடோபியன் என்ற வார்த்தையே அட்லான்டிஸிலிருந்து மருவி வந்ததாகச் சொல்கிறார்கள்-அவ்வளவு உன்னதமான சமுதாயமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தது அட்லாண்டிஸ் ஒவ்வொரு விடயத்திலும்.
கதையாடலைப் பார்த்தால் இப்படியும் ஒரு சமுதாயம் இருந்திருக்குமா என்ற வியப்பும் அது எங்கிருந்தது, ஏன் மறைந்த்து,எப்படி மறைந்தது என்ற தேடல்கள் நூற்றுக்கணக்கான வருடங்களாக மக்களைத் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்து விட்டது.
ஆனால் பலர் இதனை ஒரு கட்டுக்கதை என்றும் ப்ளாட்டோ தன் உரையாடல்களை சுவாரசியமாக்குவதற்காக உருவகப் படுத்தியதென்று சொல்கிறார்கள். மறு தரப்போ சீரியசாக அப்படி ஒரு இடம் இருந்ததென நம்புகிறது. கிட்டத்தட்ட நூறு இடங்கள் வரை புராதன அட்லாண்டிஸ் இருந்த இடமாக நம்பப்பட்டு சொல்லப்பட்டுள்ளன. இதில் ஒரு சிலவே வல்லுனர்களும் அகழ்வாராய்சியாளர்களும் ஆதாரக் குறிப்புகளுடன் இவையாக இருக்கலாம் என்று சொல்லும் இடங்கள். மற்றவை கிட்டத்தட்ட காலையில் எழுந்தவுடன் ”கனவில்” அட்லான்டிஸ் இருந்த இடம் தெரிந்தது டைப். கண்டங்கள் இடம் பெயர்ந்து நகரும் தன்மைகள்(continental drift) பற்றி மேலும் பல தெளிவுகள் ஏற்பட்ட 1950 களில் அட்லான்டிஸ்-மறைந்த கண்டம் என்பது தவறானது என்றே கிட்த்தட்ட நிருபணமாகியுள்ளது.


பதினேழாம் நூற்றாண்டின் அறிஞர் அதனாசியஸ் கிர்ச்செர் அட்லாண்டிக் கடல் நடுவில் அட்லாண்டிஸ் என்று சுட்டிக்காட்டி வரைந்த வரைபடம்.

அட்லான்டிசின் புராண கதைச்சுருக்கம். கிரேக்கக் கடல் கடவுளான பொசைடான் ஒரு தீவில் க்ளெய்டோ என்ற அழகான ஒரு பெண்ணைப் பார்த்து மையல் கொள்கிறார். இருவருக்கும் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. தலைச்சன் குழந்தை பெயர் அட்லஸ். பொசைடான் ஒரு சந்தேகப் பேர்வழி. க்ளெய்டோவைக் கூட நம்பாமல் அந்த இடத்தில் யாரும் நெருங்க முடியாதபடிக்கு கடல் அகழிகள் அமைத்து ஒரு தீவு நகரமாக்கி விடுகிறார்.அதுவே அட்லஸின் பெயரால் அட்லாண்டிசாக ஆகி அட்லஸ் முதல் அனைவராலும் ஆளப் பட்டது. இது கடல் கன்னிகளால் காக்கப்படும் நகரமாக இருந்தது. அங்குள்ள உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரும்மாண்டமான கடல் கடவுள் பொசைடான் கோவில் ஒரு உலக அதிசயம். மேகங்களே கோவிலுக்குள் உலவும் அளவு பிரும்மாண்டம். இப்படிப் போகிறது அட்லான்டிஸ் புராணக் கதை
இன்றைய தேதி வரை அட்லாண்டிஸ் பற்றி ஆயிரக் கணக்கில் ஆய்வுகள் , தேடல்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், கதைகள் என்று வந்த வண்ணம் இருக்கிறது கிரீசின் அருகில் ,ஸ்பெயினின் அருகில் ,இத்தாலியின் அருகில் என்று எத்தனையோ இடங்களில் அட்லான்டிசைக் கண்டு பிடித்து விட்டதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த பூமியில் இருந்ததா, இல்லை அதீத மனித கற்பனையின் வெளிப்பாடா என்ற புதிர்களை உள்ளடக்கியவாறு இன்னும் இந்த உலகில் மர்மமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது அட்லான்டிஸ் என்னும் மாயாலோகம்.

- ச.சங்கர்

மண்டே மர்மங்கள் தொடரும்....

தமிழ் நாடா இருந்தா நில அபகரிப்பு புகார் போட்டு உள்ளே தள்ளியிருக்கலாம்!

10 Comments:

s suresh said...

அரிய தகவலுடன் அட்லாண்டிஸ் விளக்கம் அருமை!

Anonymous said...

IdlyVadai,
I sincerely request you to increase the font size and make it more readable. எறும்பு கக்கா போயி வெச்சாப்புல என்ன எழுத்து சைஸ் இது? கம்ப்யூட்டர்ல 9 மணி நேரம் ஒக்கந்து இருக்கறவங்களுக்கு இந்த இத்தினியூண்டு எழுத்துப் படிக்கவே சிரமமா இருக்கு.

Anonymous said...

மேகங்களே கோவிலுக்குள் உலவும் அளவு பிரும்மாண்டம் - ஜெயமோகன் இதுல இருந்துதான் விஷ்ணுபுரம் கட்டினாரோ?

ஸ்ரீராம். said...

முதல் இரண்டு மர்மங்களையும் விட சுவாரஸ்யம் ஒரு மாத்து கம்மி. ஆனாலும் சுவாரஸ்யம்தான். மஞ்சள் கமெண்ட்டையும் ரசிக்க முடிந்தது. அனானியின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். பஜ்ஜி மாவு மாதிரி இல்லாமல் பத்தியாவது பிரிக்கலாம்!!

Anonymous said...

srinivasan ‏@sathishvasan
IdlyVadai - இட்லிவடை: மண்டே மர்மங்கள் (3) - ச.சங்கர்

அரிய தகவல்கள் http://idlyvadai.blogspot.com/2012/07/3.html?spref=tw @ssankar1234 பெர்முடா ட்ராயாங்கில் பத்தி எழுதுங்க

Anonymous said...

Please post something about our Poombuhar also, research on which has been neglected all along for a long time. The Central Government has also failed to accord any due importance to Poombuhar , as given to Dwaraka.

Anonymous said...

Thanks to Idlyvadai & all readers who read & appriciated these posts

Sa.Sankar

Anonymous said...

//பெர்முடா ட்ராயாங்கில் பத்தி எழுதுங்க// will write within next few posts

//Please post something about our Poombuhar also//
The objective of these posts is to write about mysteries-which may are may not existed or true as they are told hence continue to remain a mystery. As for as Poompukar is concerned , it is a well established fact thro various documents -old & new that it is one of the richest cultural city of ancient tamilnadu.So this cannot be catagorised as mystery. But worth writing a seperate post on Poompukar-The lost city.
Will try to read,collect info & post seperately.Thanks.

Sa.Sankar

மோடுமுட்டி said...

எதுக்கு அப்பு, பூம்புகார் பற்றி எழுத சொல்லுறீங்க? அதான் நம்ம தலைவர் கலைஞர் எழுதி இருக்கிறதை படிங்க..அது போதும்.. அப்படியே அவரோட "மேளக்காரர் சரித்திரம்" படிங்க... நல்ல ஞானம் வளரும்.

Anonymous said...

உலாவியில் எழுத்துகளைப் பெரியதாகப் பார்க்க வேண்டுமென்றால் - firefox, chrome (அநேகமாக IE உட்பட) ஏதாவதொன்றில் இட்லிவடை பக்கத்தை திறந்து கொண்டு, விசைப்பலகையில் Ctrl++, அதாவது Ctrl விசையை அழுத்திக் கொண்டு + விசையையும் அழுத்தவும் வேண்டிய அளவு எழுத்துகள் தெரியும் வரை இதனைத் தொடரவும். மீண்டும் சிறியதாக்க Ctrl+- அழுத்தவும். இது அனைத்து இணைய பக்கங்களுக்கும் பொருந்தும்.