பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 25, 2012

மண்டே மர்மங்கள் (2) - ச.சங்கர்

டூரின் சவப்போர்வை (The Shroud of Turin )
இந்த உலகத்தில் ஒரு துணி இவ்வளவு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்குமென்றால் அது இத்தாலியில் டூரின் நகரில் புனித ஜான் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் இறந்தவர்களது உடலை அடக்கம் செய்யும் போது உடலைச் சுற்றப் பயன்படுத்தப் படும் ஒரு பழைய சவப்போர்வைதான். 1578 ஆம் ஆண்டிலிருந்து அதாவது கடந்த 450 ஆண்டுகளாக ஒரு சிவப்பு பட்டுத்துணியில் சுற்றப்பட்டு வெள்ளிப் பேழையில் வைக்கப் பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 14 அடி நீளமும் 3.5 அடி அகலமும் கொண்ட அந்தத் துணியில் அப்படி என்ன அதிசயம் என்கிறீர்களா? அதில் ஒரு மனிதனின் முன்பக்க, பின்பக்க உருவம் பதிந்திருக்கிறது.
நீளமான ஒரு துணியில், ஒரு உடலை நீட்டுவாக்கில் படுக்க வைத்து அதே துணியின் மீதப் பகுதியால் அந்த உடம்பைத் தலையிலிருந்து போர்த்தினால் அந்த உருவத்தின் பதிவு அந்தத் துணியில் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அது மாதிரியான தோற்றம் பதிந்திருக்கிறது.இதை வெறும் கண்களால் பார்க்கும் போது ஃபோட்டோ நெகடிவ் பிரதியில் எப்படித் தெரியுமோ அப்படி தெரிகிறது. ஃபோட்டோ எடுத்து அதன் நெகடிவில் பார்த்தால் நிழல் போல உருவம் துல்லியமாகத் தெரிகிறது.

இந்தத் துணிக்கும் அதில் பதிந்திருக்கும் உருவத்துக்கும் மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று இந்நேரம் ஊகித்திருப்பீர்களே!!! ஆம்.. ஏசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட பிறகு அவரது உடலை மூடப் பயன்பட்ட துணி என்றும் அதில் பதிந்துள்ள உருவம் சாட்சாத் ஏசுவினுடையதுதான் எனவும் நம்பப்படுவதால் தான் அதற்கு இத்தனை மவுசும் அது உண்மையா இல்லையா என்று தொடரும் மர்மமும்.
சரி..அது எப்படி அந்த உருவம் ஏசுவினுடையதுதான் என நம்ப என்ன ஆதாரம்? அந்த உடல் அந்தத் துணியில் சுற்றப்படுவதற்கு முன் மிகவும் சித்திரவதைக்குள்ளான அடையாளங்களும், ரத்த தடயங்களும் அதில் பதிந்துள்ள மாதிரி காட்சியளிக்கிறது. ஏசுவை யூதர்கள் சிலுவையில் அறைந்த போது என்னென்ன கொடுமைகள் செய்தார்களென்று படித்த அல்லது சினிமாவில் பார்த்த காட்சியை நினைவுக்குக் கொண்டு வந்து பாருங்கள். அவருடைய தலையில் முள் கிரீடம் வைத்தால் எப்படித் தலையில் காயம் உண்டாகுமோ அப்படிப்பட்ட காயத்தினால் ஆனது போல ரத்த அடையாளங்கள் அந்தத் துணியில் பதிந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் ஏசுவை சிலுவையில் அறைந்த போது ஆணியால் உண்டான ஓட்டைகள் காலிலும், இரண்டு கை மணிக்கட்டுக்களிலும் (பொதுவாக நம்பப்படுவது போல் சிலுவையில் அறையப்படும் போது உள்ளங்கையில் ஆணிகள் அடிக்கப்படுவதில்லையாம், ஏனென்றால் சிலுவையைத் தூக்கி நிறுத்தும் போது உடலின் பாரம் தாங்காமல் உள்ளங்கை சதையை பிய்த்துக் கொண்டு உருவம் கீழே விழுந்து விடுமாம்.அதனால் ரோமானிய காலத்தில் மணிக்கட்டில்தான் ஆணி அடிப்பார்களாம் ) இருந்ததும் அதிலிருந்து வெளிவந்த ரத்தச் சாயலும் கூட இந்தத் துணி உருவத்தில் பதிந்துள்ளதாம். இதையெல்லாம் வைத்து மத நம்பிக்கையாளர்கள் இது ஏசு நாதர் உடலை மூட பயன்பட்ட சவத்துணி என்றும் அதில் பதிந்துள்ள உருவம் அவருடையதுதான் என திடமாக நம்புகிறார்கள்.மறுதரப்போ இது மத நம்பிக்கையைத் தூண்ட ஏற்படுத்தப்பட்ட ஒரு நாடகம் என்று ஆணித்தரமாக வாதிடுகிறார்கள்.இதற்கு இவர்கள் தரப்பில் எடுத்துக் காட்டப்படும் ஆதாரங்களையும் அதற்கு நம்பிக்கையாளர்கள் தரப்பில் சொல்லும் விளக்கங்களையும் (அடைப்புக் குறிக்குள்) பார்க்கலாம். 1) இது ஏசுவினுடையதுதான் என்றால் அவர் இறந்த 1500 ஆண்டுகளாக எங்கிருந்தது? இது பற்றி ஏன் பைபிளிலோ வேறெதிலுமோ எந்தக் குறிப்பும் இல்லை.( 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டுகளில் பைசாந்தைன், கான்ஸ்டான்டிநோபில் போன்ற இடங்களில் சில குறிப்புகள் உள்ளன. மேலும் கடவுளரின் பொருட்கள் அனைத்தும் எல்லா புராணங்களிலும் மனித ரூபங்களாக சித்தரிக்கப் படுவது போல் (புரிதலுக்காக என்னுடைய லோக்கல் உதாரணம்- விஷ்ணு பகவான் கையிலுள்ள சக்கராயுதம் சக்கரத்தாழ்வார் எனும் ரூபமாக வழிபடப்படுவது போல்) இந்தத் துணியும் வெள்ளை ஏஞ்சல் என குறிக்கப்பட்டுள்ளது என்றும் மேரி மக்டலீன் ஏசு உயிர்தெழுந்த அன்று பார்த்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளை ஏஞ்சல், அவர் இந்தத் துணியை/அதில் ஏசு உருவத்தை பார்த்ததைக் குறிப்பதே என்கிறார்கள்)

2) 1998 ஆம் வருடம் உலகின் 3 வெவ்வேறு விஞ்ஞானக் கூடங்களால் கார்பன் டேட்டிங் முறைப்படி இந்தத் துணியின் காலம் ஆராயப்பட, அந்த மூன்று முடிவுகளுமே இந்தத் துணி 1350 ஆம் வருடத்துக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறியிருக்கின்றன (பரிசோதனைக்கு எடுக்கப் பட்ட சாம்பிளே தப்பு. பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் இந்தத் துணி வைக்கப் பட்டிருந்த தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தத் துணியின் சில பகுதிகள் எரிந்து ஓட்டையாகி விட்டன .இந்த சேதமடைந்த பகுதிகளை அங்கிருந்த கன்னிமார் ஒருவர் ஊசி நூல் கொண்டு தைத்திருக்கிறார் (இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. 19-ஆம் நூற்றாண்டில் அப்படித் தைக்கப்பட்ட பகுதியிலிருந்து நூல் அப்புறப்படுத்தப்பட்டு துணி அதன் பழைய நிலையிலேயே தீ பட்ட ஓட்டைகளுடன் ரெஸ்டோர் செய்யப்பட்டுள்ளது- இந்த ஓட்டைகளைப் படத்தில் காணலாம்).கார்பன் டேட்டிங்கிற்கு எடுக்கப் பட்ட மாதிரி நூல் பிற்காலத்தில் துணியைத் தைக்கப பயன்பட்ட நூலின் பகுதி, அதனால்தான் பிற்காலத்தையது போல் முடிவுகள் கிடைத்துள்ளன)

3) எந்த ஒரு உடலையும் துணியில் சுற்றினாலும் அந்தத் துணியில் அந்த உருவம் பதியாது. அதுவும் உதடு கண்கள் போன்ற உள்ளடங்கிய பகுதிகள் கூட துல்லியமாகப் பதிய வாய்ப்பே இல்லை.அப்படியானால் அந்தக் காலத்தில் எத்தனையோ உடல்கள் மீது போர்த்தப் பட்ட சவப்போர்வைகள் உள்ளன அதிலெல்லாம் எந்த உருவமும் பதியவில்லை. இது வேண்டுமென்றே ஸ்டார்ச், கெமிகல் போன்றவற்றைக் கொண்டு ஒரு உருவத்தைப் பதிய வைத்து அது ஏசுநாதர்தான் என்று நம்ப வைத்து மதத்தைப் பரப்பும் பம்மாத்து வேலை. (செயற்கையான முறையில் செய்விக்கப்பட்டதென்றால் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இன்றைய காலகட்டத்தில் கூட அது போன்று ஒரு உருவத்தைத் துணியில் பதிப்பித்துக் காட்ட முடியவில்லையே. மேலும் மூன்றாம் நாள் ஏசு உயிர்த்தெழுந்தபோது ஏற்பட்ட பிரகாசத்தின் காரணமாக உடல் பாகங்களின் மிக நுணுக்கமான பதிவுகள் துணியில் ஏற்பட்டுள்ளன- photo flash&energy theory)

4) இந்தத் துணியில் உள்ள கறைகள் மனித ரத்தம் இல்லை கெமிகல் சமாச்சாரம். (ரத்தம் தான்..ஆய்வில் ஹிமோக்ளோபின் உறுதி செய்யப்பட்டுள்ளது )
இப்படியாக முடிவில்லாத் தொடர்கதையாகப் போகிறது இந்த வாதங்கள். இதில் எந்தத் தரப்பு வாதத்தையும் புறந்தள்ளி விட முடியாதபடிக்கு இரண்டு பக்கமுமே படித்தவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் உள்ளதால் இன்னும் மெய்யா பொய்யா என்று நிரூபணமாகாமலேயே அவிழாத மர்ம முடிச்சாகவே தொடர்கிறது டூரின் சவப்போர்வை.
எது எப்படியோ 2010-ஆம் ஆண்டு பொது மக்கள் பார்வையிட 45 நாட்கள் அனுமதிக்கப் பட்ட போது, அந்த 45 நாட்களில் உலகமெங்கிலும் இருந்து வந்து இந்த டூரின் சவப்போர்வையைப் பார்த்துச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 20 லட்சம் பேர்.

அடுத்த மண்டே அன்று மர்மங்கள் தொடரும்...

-ச. சங்கர்

மினி மர்மம்: போன சனிக்கிழமை பெங்களூரில் ஒரு பூங்காவில் சில உருவங்கள் தெரிந்ததாம் :-)

6 Comments:

Madhavan Srinivasagopalan said...

// பெங்களூரில் ஒரு பூங்காவில் சில உருவங்கள் தெரிந்ததாம் :-) //

ஜோடி ஜோடியாத் தான.. !
இதென்ன அதிசயம் ?

s suresh said...

அதிசயமான தகவல்! பகிர்வுக்கு நன்றி!

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம் தொடர்கிறது. தொடர்கிறேன்.

SARAVANA KUMAR.M said...

// பெங்களூரில் ஒரு பூங்காவில் சில உருவங்கள் தெரிந்ததாம் :-) // நல்லா கிளப்புறீங்க பீதிய.....

SARAVANA KUMAR.M said...

// பெங்களூரில் ஒரு பூங்காவில் சில உருவங்கள் தெரிந்ததாம் :-) //
நல்லா கிளப்புறீங்க பீதிய......

தேவப்ரியா சாலமன் said...

அந்த உருவத்தில் இரத்தம் இருந்தால் இயேசு சுத்தப்பட்ட போது இறக்கவில்லை என ஒரு மெடிகல் குழு சொல்கிறது.

இயேசுவின் ரத்தம் எனில் அதை க்லோன் செய்து அந்த டி.என்.ஏ. வில் குழந்தை பிறக்கவைக்கலாம் என்றெல்லாம் ஓடுகிறது விஞ்ஞான உலகம்.

ஆனால் கிறிஸ்து என ஒருவர் வந்தால் என்ன ஆக வேண்டும் பைபிள் சுவிசேஷங்கள்படி.
http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html