பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 30, 2012

திருமெய்யத்தில் பகவத் ராமானுஜரின் திருநட்சத்திர உத்சவம் - எ.அ.பாலா

என் தாய் வழி பாட்டனார் புதுக்கோட்டை மற்றும் காரைக்குடிக்கு நடுவில் அமைந்திருக்கும் திருமெய்யம் என்ற ஊரைச் சேர்ந்தவர். அந்த வைணவ திவ்யதேசம் பற்றி எனக்கு நிறைய சொல்லியிருக்கிறார். அவர் காலமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் தான், அக்கோயிலுக்கு சென்று பெருமாளை முதல் முறை தரிசித்தேன். அதன் பின்னர், ஒரு 3-4 முறை சென்றிருப்பேன்.

மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 8-ஆம் நூற்றாண்டு கோயிலிது. மலைக்கு மேல் கோட்டை உள்ளது. சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் கோயிலை சுற்றி மதில் சுவரை காணலாம். திருமெய்யம் பற்றி சுஜாதா தேசிகன் அவர்களின் அருமையான இடுகை இங்கே!திருமெய்யராக கிடந்த கோலத்திலும் சத்யகிரி நாதராக நின்ற கோலத்திலும் பெருமாள் அருள் பாலிக்கும் திவ்ய தேசமான திருமெய்யத்தில், சுமார் 50 ஆண்டுகளாக (7 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்ரோக்ஷணத்தின் போது கோயிலின் எல்லா உத்சவ மூர்த்திகளுக்குமான திருமஞ்சனத்தை தவிர்த்து) பகவத் இராமானுசரின் திரு அவதார திரு நட்சத்திர தினம் கூட அனுசரிக்கப்படாமலேயே இருந்து வந்தது சற்றே வேதனையான விஷயம்!

உடையவரின் உத்சவத் திருவுருவம் எழுந்தருளப் பண்ணப்படாமல் கருவூலத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. எனது உறவினர் ஒருவர் முயற்சியின் பேரில், எம்பெருமானாரின் உத்சவ மூர்த்தியை, இவ்வருடம், அவரது அவதார திருநட்சத்திர நாளில் (27 ஏப்ரல் 2012) உள் மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணவும் சிறிய அளவில் உத்சவம் நடத்தவும் உரிய அனுமதி பெறப்பட்டது.


அதன்படி, ஏப்ரல் 27 அன்று உபதேச (ஆட்காட்டி விரல் மடங்கி கட்டை விரலுடன் ஒரு வட்டம் ஏற்படுமாறு சேர்ந்து, மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கியபடி இருக்கும்) முத்திரையுடன் கூடிய ராமானுசரின் அழகிய உத்சவ மூர்த்தி, ஆழ்வார் மண்டபத்தில், உடையவரின் மூலவ மூர்த்திக்கு நேர் எதிரே எழுந்தருளினார். எம்பெருமானாருக்கு திருமஞ்சனம், முறையான நாலாயிர பிரபந்த சேவையும், சாற்றுமுறையும் நடைபெற்றன. பட்டு வஸ்திரமும், மாலைகளும் சாத்திக்கொண்டு எம்பெருமானார் தேஜஸ்வியாக அருள் பாலித்தது கண்கொள்ளா காட்சி!


இரு ஆச்சரியமான விஷயங்களை இதை வாசிப்பவரிடம் பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். பெருமாள் கிடந்த கோலத்தில் அருளும் திவ்யதேசங்களில், திருமெய்யரின் மூலவ மூர்த்தியே, நீள அளவிம், மற்ற திவ்யதேச மூலவர்களைக் காட்டிலும் பெரியவர்! மற்றொன்று, திருமெய்யத்தில் உபதேச முத்திரையுடன் கூடிய எம்பெருமானாரின் உத்சவ மூர்த்தி, விசேஷமானது, காண்பது அரிது! வைணவ சம்பிரதாயத்தில், உபதேச முத்திரையில் மேல் நோக்கி இருக்கும் மூன்று விரல்களும், சித்தம், அசித்தம் மற்றும் ஈஸ்வர தத்வங்களாகிய தத்வத்ரயத்தையும், திருமந்திரம், த்வயம் மற்றும் சரம ஸ்லோகங்களான ரகஸ்யத்ரயத்தையும் குறிப்பவை. ஆட்காட்டி மற்றும் கட்டை விரலும் சேர்வதால் ஏற்படும் வட்டம், பூர்ண சரணாகதியால் அடையவல்ல பரமபதத்தை குறிப்பதாகும். இப்படி உபதேச முத்திரையுடன் அருள் பாலிக்கும் எம்பெருமானார் திருவுருவம், திவ்யதேசங்களில், திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே காணப்படுகிறது.

பக்தர்களின் நித்ய தரிசனத்துக்காக, உடையவரின் உத்சவ விக்ரஹம், திருமெய்யரின் சன்னதியில் எழுந்தருளப் பண்ணப்பட்டு இருப்பதாலும், இதற்கு இந்து அறநிலையத்துறையின் அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாலும், திருமெய்யம் செல்லும் அன்பர்கள் இனி வருடம் முழுதும், பெருமாளோடு, எம்பெருமானாரையும் ஒரு சேர, அகம் மகிழ சேவிக்கலாம்! திருமெய்யத்தில் உடையவர் வழிபாடு மீண்டும் துவக்கப்பட்டதற்கு திருமெய்ய மக்களில் பலர் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

சாதி பேதமின்றி, ஸ்ரீமன் நாராயணனை சரணடைந்தவர்கள் அனைவரும் வைணவர்கள் என்றதோடு நில்லாமல், திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, தனது ஆச்சாரியனான திருக்கோட்டியூர் நம்பியின் கட்டளைக்கு மாறாக, அஷ்டாட்சர மந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்தவர் அண்ணல் இராமனுசன்! வைணவ சம்பிரதாயத்தை நெறிப்படுத்தி, கோயில் ஒழுக்கை ஏற்படுத்தி, வைணவம் செழித்து தழைக்க இவ்வுலகில் அவதரித்த எம்பெருமானார், வைணவ குரு பரம்பரை என்ற ஆரத்தின் நடுநாயகமாய் திகழும் மாணிக்கம் போன்றவர் என்றால் அது மிகையில்லை. உடையவர் சம்பந்தம் இருந்தால் மட்டுமே, பூரண சரணாகதி நிலையிலும், பெருமாளை பற்ற முடியும் என்பது வைணவ பெருந்தகைகள் வாக்கு. அதனால், திவ்ய தேசங்களில், ராமானுச வழிபாடு என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது.

அப்பேர்ப்பட்ட மகான் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் 2017-ஆம் வருடம் சித்திரையில் திருவாதிரை நட்சத்திர நாளன்று பூர்த்தியாவது ராமானுச அடியார்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். அதை, அவ்வாண்டும் முழுதும் ஒரு பொது நிகழ்வாக, விமரிசையாக, சொற்பொழிவு, வழிபாடு, திராவிட வேதம் என்று போற்றப்படும் நாலாயிர பாராயணம், தரும காரியங்கள் என்று பல இடங்களிலும் கொண்டாட வேண்டும். அதற்குள், வைணவர்கள் அனைவரும், பிரபன்ன காயத்ரி என்று போற்றப்படும் இராமனுச நூற்றந்தாதியை மனனம் பண்ணி, அதை பிறழாமல் பாராயணம் பண்ண கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அது போலவே, எல்லா வைணவ திவ்ய தேசங்களிலும், அபிமான ஸ்தலங்களிலும், ஏன், எல்லா விஷ்ணு கோயில்களிலும், உடையவரின் உத்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்படு, நித்ய கைங்கர்யத்துடனான ராமானுச வழிபாடு பரவலாக நடைபெற வேண்டும் என்பது பலரின் அவாவாக உள்ளது!

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே

(இராமானுச நூற்றந்தாதி 41)

இராமானுச முனியின் சீரும் சிறப்பையும் புரிந்து கொள்ள கூரத்தாழ்வானின் சீடரான திருவரங்கத்து அமுதனார் அருளிய இப்பாசுரமே போதும்! அதாவது, "பரமபத நாயகனே நேரில் வந்து காட்சி அளித்தாலும், அஞ்ஞான இருளில் அதை உணர இயலாத நிலையில் இருந்த உலக மாந்தரெல்லாம், ராமானுஜர் அவதரித்த அக்கணமே, நல்ஞானம் பெற்று, நாராயணனுக்கு உற்றவர் ஆயினர்" என்பது இப்பாசுரத்தின் உரையாம்!

உயர்ந்து மலர்ந்த திருமுடி அழகும், உறைந்து தழைந்த திருக்கேசமும், நயந்து சுற்றிய நல்ல குழலிணை நன்றாய்ச் சுற்றிய சிகாபந்தமும், பின்னெடுத்ததோர் பிடரியின் அழகும், பிரிந்து கூடிய முக்கோல் அழகும், கண்ணொடு பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும், காணக்காணத் திகட்டிடாது கவினாய்த் தோன்றும் இராமாநுஜநே!

தேனாம் உன்னடிச் சரணம் அடைந்தோம் தினமும் எம்மைக் காத்தருள் என்றே.. காத்தருள் என்றே!

எ.அ.பாலா


பல கிரிக்கெட் பதிவுக்கு பிராயச்சித்தம் இந்த பதிவு !

17 Comments:

rabiyani said...

many thanks for your wonderful post. keep going....

rabiyani said...

Many thanks for your wonderful post. keep going......

Anonymous said...

Swami Emperumanar Vaibhavam... padikka padikka divya charithiram! Thirumayam Sri Desikar sannidhi engal pattanar kaikaryam seidhargal enbadhai uvappodu solli kozhgiren!!

ConverZ stupidity said...

இந்த பதிவு நல்லா இருக்கு. ஆனா கமெண்ட்ஸ் குறைவா இருக்கும். After all count of comments doesn't gauge the quality of the post. Well done!

இராஜராஜேஸ்வரி said...

உடையவர் சம்பந்தம் இருந்தால் மட்டுமே, பூரண சரணாகதி நிலையிலும், பெருமாளை பற்ற முடியும் என்பது வைணவ பெருந்தகைகள் வாக்கு.//


சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Anonymous said...

//பல கிரிக்கெட் பதிவுக்கு பிராயச்சித்தம் இந்த பதிவு !//

Hello Dear Bala,

I prefer to post my comment as just an Anony here. Wonderful article. Thank you. This has originality. I respect your writing in this post. Please accept the heart felt wishes and congratulations from this Anony.

I still feel that your cricket posts are lacking a lot of things and not up to the mark.

Best wishes,
Anony.

ப்ரதிவாதி பயங்கரம் கிரிக்கட்டாச்சாரி said...

பாலா! அருமை. அருமை. இ.வ. சொன்னது போல ப்ராயச்சித்தம். அடுத்த பரணீதரன் நீர்தானய்யா! well done. continue on this path.கிரிக்கெட்டை விட்டுவிட்டு சமயத்துக்கு வாரும். வாசகர்களுக்கு பக்தி வளர்ச்சி! உமக்கு புண்ணியம் பல.

Madhavan Srinivasagopalan said...

// After all count of comments doesn't gauge the quality of the post. //

Very true.. I agree to this.

kothandapani said...

ப்ராமினர்களுக்கே வீடு , ஹிந்தி ஹிந்து கடவுள் போன்ற பாவப்பட்ட ப்லாகுகளை போட்டு கரை படிந்த இட்லிவடை
இந்த ப்ளாகை போட்டு புண்ணியத்தை தேடிகொண்டது.

krsvasan said...

Thanks for your article. very nice .

Anonymous said...

Dear Bala
Very nice..Sa.Sankar

Anonymous said...

It's a Googlie!!!!

பாலா
வீசும் கை
விக்கெட்டின் மேல் வர,
பிஸிபேளா முனையிலிருந்து
அழுக்குதேச அனானியை நோக்கி
வீசிய பந்தில்
விழுந்தது விக்கெட்.
அனானி கிளீன் போல்ட்!
ஹி...ஹி...

swam said...

அது திருமயம் இல்லை??

Anonymous said...

அதென்ன கிரிக்கெட் பின்னூட்டங்களுக்கு மட்டும் தானாகவும், ரஸிகர் மன்றம் மூலமாகவும் சிலுப்பிகிட்டு ஆவேசமா பதில் சொல்லும் பாலா பக்டி போஸ்டிங்கிற்கு மட்டும் அடக்கி வாசிக்கிறாரே! ஒண்ணுமே (பு)பிரியலையே!

enRenRum-anbudan.BALA said...

swam said...
அது திருமயம் இல்லை??


-----

திருமெய்யம் என்பதே மருவி திருமயம் என்று ஆனது

enRenRum-anbudan.BALA said...

//

swam said...
அது திருமயம் இல்லை??


//

திருமெய்யம் என்பதே மருவி திருமயம் என்று ஆனது

enRenRum-anbudan.BALA said...

இடுகையை வாசித்தவர்களுக்கும், பின்னூட்டம் வாயிலாக பாராட்டி ஊக்கமளித்தவர்களுக்கும், நன்றி.

அன்புடன்
பாலா