பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 12, 2012

எழுத்து அரசியல்! - ஞாநி

அண்மைக்காலமாகக் கடுமையாகத் தாக்கிப் பேசுவது, நையாண்டி செய்வது, போட்டி விளம்பர உத்திகளைக் கையாள்வது என்று சில எழுத்தாளர்களும் அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுப்பது வியாபாரத்துக்கு உதவும் என்று கருதும் சில பதிப்பாளர்களும் களமிறங்கியிருக்கிறார்கள். இந்தச் சர்ச்சைகளில் இப்போது அடிபடும் பெயர்கள் எஸ்.ராம கிருஷ்ணன், சாரு நிவேதிதா, சு.வெங்கடேசன், மனுஷ்ய புத்திரன், பத்ரி சேஷாத்ரி (ஜெயமோகன் சமண தலயாத்திரை போய் விட்டதால், அவர் தொடர்பான சர்ச்சை எதுவும் இந்த சீசனில் எழவில்லை).

இந்த சீசனில் அதிக சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கக்கூடியவர் இதுவரை சர்ச்சைகளில் சிக்காத எஸ்.ராமகிருஷ்ணன்தான் (எஸ்ரா). சங்கீத சீசனுக்கு முன்பாக இலக்கிய சீசன் ஒன்றைச் சென்னையில் ஸ்தாபிக்க வேண்டும் என்ற கருத்தில் அவர் உலகப் புகழ்பெற்ற சில படைப்புகள் பற்றிய இலக்கியப் பேருரையை ஒரு வாரம் தொடர்ந்து நடத்தினார். அதில் அவர் காந்தி- டால்ஸ்டாய் பற்றிச் சொன்னதில் சர்ச்சை ஏற்பட்டது. டால்ஸ்டாய், காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறளையும் வள்ளுவரையும் குறிப்பிட்டிருப்பதாகவும் அதிலிருந்து தான் காந்திக்கு குறள் மீது கவனம் ஏற்பட்டதாகவும் எஸ்ரா பேசியிருந்தார். அடுத்து காந்திக்கு கணிதத்தில் பேரார்வம் இருந்ததாகச் சொல்லியிருந்தார். தன் வாழ்நாளில் காந்தி சத்திய சோதனை, ஹிந்த் ஸ்வராஜ் இரு நூல்கள் மட்டுமே எழுதியதாகவும் தெரிவித்தார்.இந்த மூன்று கருத்துக்களுக்கும் கடுமையான மறுப்புகள் வந்தன. ஆனால் எஸ்ரா பல வாரம் பதில் சொல்லவே இல்லை.

கடைசியாக தம் இணைய தளத்தில், “பொதுவாக நான் அவதூறுகள், அருவருப்பான கேலிகளுக்குப் பதில் சொல்வதே கிடையாது, ஒரு நண்பர் தினமணியில் காந்தி பற்றிய எனது உரை தவறானது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இது போன்ற அவதூறுகள் எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கப்படுவது என்று பதில் சொல்லத் தயங்கி விட்டு விட்டேன். அதே அவதூறு தற்போது மறுபடியும் கிளம்பும்போது பதில் சொல்லியாக வேண்டிய அவசியமிருக்கிறது,” என்று எழுதி பதில் சொன்னார். தான் வாசித்த ஒரு கட்டுரையில் இருந்துதான் டால்ஸ்டாய் திருக்குறளை வாசித்த தகவலைத் தெரிவித்ததாகச் சொன்னவர், அது என்ன கட்டுரை, யார் எழுதியது, எப்போது எழுதியது என்பதையெல்லாம் சொல்லவில்லை.

ஆனால் தம் மீதான அவதூறுகள் “எதையும் ஆழ்ந்து படிக்காதவர்களால் உருவாக்கப்படுவது என்று பதில் சொல்லத் தயங்கி விட்டுவிட்டேன்” என்று எஸ்ரா சொன்னது மிகவும் தவறானது. ஏனென்றால் தினமணியில் எஸ்ராவை மறுத்து விவரமாக எழுதியவர் காந்தியின் எழுத்துகள் அனைத்தையும் தொகுக்கும் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய ஆசிரியர் குழு உறுப்பினர் லா.சு.ரங்க ராஜன். காந்தியும் டால்ஸ்டாயும் பரிமாறிக் கொண்ட கடிதங்கள் எத்தனை, ஒவ்வொன்றிலும் என்ன எழுதப்பட்டிருந்தது என்ற விவரங்களுடன், ஒரு இடத்தில் கூட டால்ஸ்டாய் வள்ளுவரையோ, குறளையோ சொல்லவில்லை என்பதை நிறுவியிருந்தார் லா.சு.ரா. காந்தியின் கணித ஆர்வத்துக்கு ஆதாரமாக எஸ்ரா காட்டிய ஒரே சான்று 1944ல் வீட்டுச் சிறையில் இருந்தபோது மனு காந்திக்குக் கற்பிப்பதற்காக காந்தி வரைந்த ஜியாமெட்ரி படம். இந்த லாஜிக்படி ஒவ்வொரு நடுத்தர வர்க்கக் குடும் பத்திலும் கணிதத்தில் பேரார்வம் உடையவர்கள் நிறைந்திருப்பதாகச் சொல்லி விடலாம்.

எஸ்.ராமகிருஷ்ணன் தன் எழுத்திலும் பேச்சிலும் உலகின் பல மூலைகளிலும் இருக்கக்கூடிய நூல்கள், சினிமாக்கள் ஆகியவற்றில் இருந்து மேற்கோள்களை அள்ளிக் குவிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். அது அவர் எழுத்துக்கு மெருகூட்டுபவை. எனவே அதில் ஒரு சிலவற்றில் கடும் தவறுகள் ஏற்படும்போது, அவர் எழுத்தின் முழு நம்பகத்தன்மையே குலைந்து போய்விடுகிறது. இந்த ஆபத்தை அவர் சரியாக உணரவில்லை என்பதையே காந்திடால்ஸ்டாய் சர்ச்சையில் அவர் எதிர்வினை காட்டுகிறது.

இலக்கியப் பேருரை சீசன் முடிந்து சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கிய சமயத்தில் சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.

தம் முதல் நாவலான காவல் கோட்டத்துக்காகப் பரிசைப் பெற்ற சு.வெங்கடேசன், எஸ்ராவின் பழைய நண்பர். நாவல் வெளியான சமயத்தில் அதைக் குப்பை என்று கடுமையாக விமர்சித்தார் எஸ்ரா. இல்லை, அது ஒரு முக்கியமான படைப்பு என்று பதில் கட்டுரை எழுதினார் ஜெயமோகன். அது ஒரு திருட்டுப் படைப்பு என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடன் சுற்றிக் கொண்டிருந்த நண்பனும் எழுத்தாளனாக மாறி பெரிய நாவல் எழுதிவிட்டான் என்பதைத் தாங்கமுடியாத உளவியல் சிக்கலில் எஸ்ரா இருப்பதாக வெங்கடேசன் சொன்னார்.

உளவியல் சிக்கலில் எழுத்தாளர்கள் இருப்பது உண்மைதான். பல எழுத்தாளர்கள் இப்போது பாராட்டு விழாக்கள், வெளியீட்டு விழாக்களை பிரம்மாண்டமாகவும் கட் அவுட், ப்ளெக்ஸ் பலகைகளோடும், சினிமா மீடியா பிரபலங்களின் ஆசியோடும் நடத்துவது என்பது வாடிக்கையாகிவிட்டது. மதுரையில் வெங்கடேசனுக்கு நடத்திய பாராட்டில் மலர் கிரீடம் சூட்டப்பட்டு கையில் வீரவாள் தரப்பட்டதாக அதைக் கண்டித்து பெத்தானியாபுரம் முருகானந்தம் என்பவர் இணையதளத்தில் எழுதியிருக்கிறார். ஒரு மார்க்சிஸ்ட் இப்படியெல்லாம் செய்யலாமா என்பது அவர் கேள்வி.

இன்னொரு பக்கம் சென்னையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து முதலிய பிரபலங்கள் இயல் விருது பெற்றதற்காக எஸ்ராவைப் பாராட்ட அழைக்கப்பட்டனர். எஸ்ராவைப் பாராட்ட ரஜினி அழைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை இணையதளத்தில் ஏற்படுத்தியது. ரஜினியை அழைப்பதில் எனக்கு எந்த எதிர்ப்புமில்லை. ஒரு எழுத்தாளனை சமூகத்தில் யார் வேண்டுமானாலும் பாராட்டலாம். ரஜினியும் பாராட்டலாம். ஆனால் அழைப்பிதழில் ரஜினி படத்தைப் பெரிதாகப் போட்டு எஸ்ரா படத்தைச் சிறியதாக அச்சடித்தது எழுத்தாளனைச் செருப்பாலடிப்பது போல அவமானப்படுத்துவதாகும் என்று நான் எழுதியிருந்தேன்.

ரஜினியை அழைத்து எஸ்ராவைப் பாராட்டியதை சாரு நிவேதிதாவால் தாங்கவே முடியவில்லை. நான் கலந்து கொண்ட அவருடைய எக்ஸைல் புத்தக விமர்சனக் கூட்டத்தில் அவர் தன் நாவல் பற்றிப் பேசாமல் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். இணையதளத்திலும் எழுதித் தள்ளினார். “ரஜினி... இயல் விருதை சர்வதேச விருது என்கிறார்களே, இதைப் பற்றி விசாரித்து அறிந்தீர்களா? கனடாவில் உள்ள ஒரு தமிழ் அமைப்பு, தமிழ் எழுத்தாளருக்கு ஒரு விருது கொடுத்தால் அதற்குப் பெயர் சர்வதேச விருதா?

மெல்பேர்ன் நகரில் (ஆஸ்திரேலியா) உள்ள தமிழர்கள் ஒரு ரெக்ரியேஷன் கிளப் வைத்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் என்னுடைய நண்பர்கள். என்னை அங்கே அழைத்து ஒரு பொங்கல் தினத்தில் முயல் படம் ஸாரி... கங்காரு படம் போட்ட ஒரு மெமண்டோவைக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே நான் சர்வதேச விருது கொடுத்து விட்டதாகச் சொல்லிக் கொள்ளலாமா? கொண்டு, பாராட்டு விழா நடத்திக் கொள்ளும் அளவுக்கு, தமிழ் இலக்கியவாதிகள் தரம் தாழ்ந்து வருகிறார்கள். இலக்கியம் சார்ந்த அறம் வீழ்ச்சியடைந்துவிட் டது.”

பதிலுக்கு மனுஷ்யபுத்திரன் எழுதினார், “ஜோதிர்மயி என்று ஒரு கவிஞர் ஒரு முறை சாருவின் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு இலக்கியச் சொற்பொழிவாற்றினார். குஷ்பு என்ற ஒரு நாவலாசிரியர் சாருவின் ஒரு புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஊரெல்லாம் பத்திரிகை வைத்து, கடைசி நிமிடத்தில் வராமல் போனார். சாரு நிவேதிதா என்ற நடிகர் ஒரு படத்தில் தனது விரல்கள் பத்து செகண்டுகள் நடித்ததற்காக அந்த இயக்குனரைப் புகழ்ந்து பத்துப் பதிவுகள் எழுதினார்...அதிகப்படியான குடி மட்டுமல்ல, அதிகப்படியான வயிற்றெரிச்சலும் கடும் memory loss ஏற்படுத்தும்...”

சர்ச்சைகளும் விழாக்களும் எழுத்தாளர்கள் திட்டமிட்டே விளம்பரம் தேடுகிறார்கள் என்பதன் அடையாளம்தான். ஏன் இப்படி? இது பற்றிப் பதிப்பாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். கவிஞர் அய்யனார் கேட்டார்: “கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது மதுரையில் ரகசியமாகக் கொடுக்கப்பட உள்ளது. கவிஞர் தேவதச்சன் நூல்களை வெளியிட்டு வருவது மனுஷ்யபுத்திரனின் வெளியீட்டு நிறுவனம்தான். அவருக்கும் ஒரு பிரபல சினிமா நடிகரின் தலைமையில் பாராட்டு விழா நடத்தலாமே.” எஸ்ராவின் பதிப்பாளர் உயிர்மை மனுஷ்யபுத்திரன் பதில்: “இதுவும் வெளி நாட்டு விருதுதான். ஆனால் அதைக் கொடுப்பவர்கள் பிரபலமில்லாதவர்கள். தேவதச்சனும் பிரபலமில்லாதவர். அவருக்கு எந்த சினிமா நடிகரையும் தெரியாது. கூட்டம் போட்டால் 50 பேருக்குமேல் வரமாட்டார்கள். என் பதிப்பக நூல்களை விற்க முடியாது. ராமகிருஷ்ணன் ஸ்டார் எழுத்தாளர். அவர் புத்தகம் மட்டுமல்லாது, என் பதிப்பக நூல்கள் எல்லாவற்றையும் விற்க ஒரு வாய்ப்பு.”

சாருவின் பதிப்பாளர் கிழக்கு பத்ரி சேஷாத்ரி எழுதிய ஒரு கட்டுரையில் அப்பட்டமாகவே சொல்கிறார்: “நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத் தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. புத்தகம் உருவாக்கி விற்பது எனக்கு ஒரு தொழில் மட்டுமே. நான் ஒரு வணிகன். எல்லாவிதமான புத்தகங்களையும் பதிப்பிக்க விரும்புகிறேன். அவை நன்றாக விற்கும் என்றால். காசு கொடுத்துப் பெரும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது ஒரு பதிப்பாளனுக்கு இயலாத காரியம். அப்படிச் செய்யும் செலவை, விற்பனையால் ஈடுகட்டவே முடியாது. எனவே வேறு வழிகளையே ஒரு பதிப்பாளனும் எழுத்தாளனும் கையாள வேண்டியுள்ளது.அங்குதான் இணையம் வருகிறது. தமிழின் சில எழுத்தாளர்களே இதனை ஒழுங்காகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஜெயமோகன், சாரு நிவேதிதா, எஸ்.ராம கிருஷ்ணன் ஆகியோரைச் சொல்வேன். அதிலும் சாரு நிவேதிதா, ஃபேஸ்புக் தளத்தை மிக அற்புதமாகப் பயன்படுத்திவருகிறார். அவருடைய வாசகர்கள் தம் சொந்த செலவில் சமீபத்தில் அவருடைய எக்ஸைல் நாவல் வெளியீட்டை காமராஜர் அரங்கத்தில் வைத்துக்கொண்டாடினார்கள். அதேபோல ஜெயமோகன் வாசகர்கள் தீவிரமான ஒரு குழுவாக இயங்குகிறார்கள். இலக்கியக் கூட்டங்கள், விருது வழங்கும் விழா என்று அமர்க்களப்படுத்துகிறார்கள். இம்மாதிரியான நிகழ்வுகளே நாற்பது, ஐம்பது என்பதிலிருந்து நானூறு, ஐந்நூறு என்று வாசகர் வட்டத்தை விரிவாக்குபவை. நான் பதிப்பிக்கும் சில எழுத்தாளர்களை (சேத்தன் பகத் போன்ற) பிராண்டுகளாக ஆக்குவதற்கு எந்த வகையில் பங்களிக்கலாம் என்று முயற்சி செய்வதே என் வேலை. அப்போதுதான் தமிழில் 25,000 அல்லது 50,000 என்று புத்தகங்களை விற்க வைக்க முடியும். நானும் பணம் பண்ணமுடியும்.”

நாற்பது வருடங்களுக்கு முன்பு இந்தச் சிக்கல்கள் இல்லை. சர்ச்சைகள் இருந்தன. ஜெயகாந்தன் கதையையும் இந்திரா பார்த்த சாரதி கதையையும் பத்திரிகைகள் பாதியில் நிறுத்தியபோது நடந்த சமரசங்கள் பற்றி வெங்கட் சாமிநாதன் “யாருக்காக அழுவது ?” என்று எழுதினார். அதற்கு அசோகமித்திரன் “யாருக்காகவும் அழவேண்டாம். வாயை மூடிக்கொண்டு இருந்தால் போதும்” என்று பதில் எழுதினார். பிரமிளும், செல்லப்பாவும், வெ.சாவும் க.நா.சு.வும் ஜெய காந்தனும் நிறைய சர்ச்சித்திருக்கிறார்கள். அவையெல்லாம் கோட்பாடு, மதிப்பீடு, ரசனை பற்றிய விவாதங்கள்.

இப்போது நடப்பவை முழுக்க முழுக்க வணிக நோக்கம் சார்ந்தவை. ஏனென்றால் இப்போது எந்தக் கோட்பாடு, கொள்கை பிரச்னைகளும் எழுத்தாளர்களுக்கு முக்கியமாக இல்லை. உலகமயமாக்கலும் தாராளப் பொருளாதார அமைப்பும் சினிமா உலகப் பிரவேசமும்தான் இந்தச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றின் அரசியல் கலாசாரம் எழுத்துலகின் அரசியலைப் பாதித்திருக்கிறது.

ஞாநி
நன்றி: கல்கி, ஓ-பக்கங்கள்

தமிழ் எழுத்தாளர்களுக்கு சட்டசபை மாதிரி ஒரு அரங்கத்தை யாராவது கட்டிதந்தால் நம்மக்கு பொழுதுபோகும் :-)

17 Comments:

kg gouthaman said...

In facebook, 'ரணகளம்' என்ற தலைப்பில் ஒரு குழு ஏற்படுத்தி, எழுத்தாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் - வார்த்தைகளால் பரஸ்பரம் அர்ச்சனை செய்து கொள்ளலாம். வேறு சட்டசபை அமைப்புகள் தேவை இல்லை.

பா குரு பிரசாத் said...

ஒரு அயல் நாட்டு விருது பெற்ற படைப்பாளியாகவோ, அல்லது அந்த படைப்பினை பதிப்பித்த ஒரு பதிப்பாளராகவோ இவர் இல்லாதபடியால், இதை ஒரு நடுநிலையான விமர்சனம் என்பேன்.

thirunageswaram said...

எழுத்தாளர்களின் படைப்புக்கள் சமூகத்தில் ஒரு தாக்கத்தை அல்லது சலனத்தை ஏற்படுத்தும் போது அது சரியாக எழுதப்பட்டதாக உணரப்பட்டது.

தற்போது தங்கள் படைப்புக்கள் எந்தவித சலனத்தையும் வாசகர்களிடத்தில் ஏற்படுத்தாத காரணத்தால் எழுத்தாளர்கலே அதை ஏற்படுத்துவதாக நினைத்து

தங்கள் குட்டையை குழப்பி அழுக்குகளை காட்டிக்கொள்கிறார்கள்.

சந்திரமௌளீஸ்வரன் said...

Complete works of Mahatma Gandhi இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அதைக் கொண்டு காந்தியாரின் மொத்த எழுத்துகளையும் அறியலாம்.

அதை வைத்து எஸ் ரா அடிப்பது ஜல்லி என்பதையும் தெரிந்து கொள்ளலாம்

இலக்கியப் பேருரை எனும் பெயரில் எஸ் ரா ஷேக்ஸியரை கொலை செய்தார்

R. Jagannathan said...

After Manushaputhran and Badri's confessions of their business interests, these writers shall know they are not respected even by their publishers for what they write but for the controversies they create by their inept writings and soft porns. SR has also proved that it is advisable to keep mum rather than trying to answer a criticism. I really see that most blog writers are better than these narcissistics.

dr suneel krishnan said...

தால்ஸ்தாய் அவர்களுக்கு காந்தி எழுதிய கடிதங்களில் நேரடியாக திருக்குறள் பற்றி எந்த உரையாடலும் இல்லை.ஆனால் காந்தி தால்ச்தாயிடம் -அவர் தாசுக்கு எழுதிய a letter to hindu என்கின்ற கட்டுரையை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும்,மறுபிரசுரம் செய்யவுமே அனுமதி கோருகிறார்.தால்ஸ்தாய் -எழுதிய அக்கட்டுரையில் குறளின் ஆங்கில மொழியாக்க மேற்கோள்கள் உள்ளன,ஆகையால் தால்ஸ்தாய்க்கு திருக்குறள் பரிச்சயம் தான், அந்த கட்டுரையின் வழியாக காந்திக்கும் திருக்குறள் பரிச்சயம் ஏற்பட்டிருக்கலாம் .
The aim of the sinless One consists in acting without causing sorrow to others, although he could attain to great power by ignoring their feelings.

The aim of the sinless One lies in not doing evil unto those who have done evil unto him.

If a man causes suffering even to those who hate him without any reason, he will ultimately have grief not to be overcome.

The punishment of evil doers consists in making them feel ashamed of themselves by doing them a great kindness.

Of what use is superior knowledge in the one, if he does not endeavour to relieve his neighbour's want as much as his own?

If, in the morning, a man wishes to do evil unto another, in the evening the evil will return to him.

~THE HINDU KURAL.


http://www.online-literature.com/tolstoy/2733/

suppamani said...

There is no evidence is required to proove BADRI as a "pakka" bsinessman; I would like to know wheher he himself read the BOOk Excile before he published it; as "Saturn" is reading Bible he is writing so many articles about education and on other heads;can he touch his haeart and tell,
by publising the rash Excile he has done an right thing?
Suppamani

suppamani said...

There is no evidence is required to proove BADRI as a "pakka" bsinessman; I would like to know wheher he himself read the BOOk Excile before he published it; as "Saturn" is reading Bible he is writing so many articles about education and on other heads;can he touch his haeart and tell,
by publising the rash Excile he has done an right thing?
Suppamani

Thobey srinivasan said...

என்னைப் பொறுத்தவரை த்மிழ் இலக்கியவாதிகளில் பெரும்பான்மையோர் தலைக்கனம் பிடித்து அலைபவர்கள். இடது சாரி சிந்தனாவாதிகளாக தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில் இக பர சுகம் காண்பவர்கள். சரியான விலை கிடைத்தால் தம்முடைய கொள்கைகளை காற்றில் பறக்க விடுவதோடு எவற்றை எல்லாம் தங்கள் எழுத்துக்களால் சாடினார்களோ அதையே தயக்கமில்லாமல் சுவீகரித்துக் கொள்வதில் கை தேர்ந்தவர்கள். இதில் பிரச்சினை என்னவென்றால் வாசகர்கள் நல்ல எழுத்தாளர்களாக இருப்பவர்கள் நல்ல மனிதர்களாக, அவர்களது எழுத்துக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதுதான்!எழுதுபவர்கள் அதிகம் பேசாது அவர்களுடைய எழுத்தை பேச விட்டாலே தமிழ் இலக்கியம் உருப்பட்டுவிடும்

வழிப்போக்கன் said...

இது மாதிரி "அடேய் பக்கெட் சாம்பார்" என்ற வம்புகளில் சிக்காமல் சுலபமாக இலக்கிய ரசனை ஏற்படுத்திப் போனவர் சுஜாதா.

venkatramanan said...

From Chenthil's blogpost

//...So I did a datewise search and the results were hardly surprising. Till 2005 there is no mention in Google about Tolstoy telling Gandhi about Kural. In 2005, there was a Valluvam conference on Thirukkural, where in a research paper was submitted saying that Valluvam inspired Mahatma Gandhi. (PDF link). The author gives references of Gandhi praising Kural (which is entirely possible) and drops in a line "Gandhi was inspired by Ruskin, Thoreau and Tolstoy".

From 2008 onwards links start sprouting claiming that Tolstoy told Gandhi about being inspired by Kural. I can't pinpoint who started this, but a reasonable guess is Prof. Aranga Nedumaran whose speech is quoted by many. So from there, SRa seems to have derived his fact.

I had sent a couple of mails with these facts to Maamallan, but then found the topic juicy enough for me to revive my blog.//

Regards
Venkatramanan

Kannan said...

அரசியல் ஞானிகள் ,..........


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

Anonymous said...

முக்கால் வாசி தமிழ் இலக்கியவாதிகள் தலைக்கனம் பிடித்தவர்கள் மட்டும் அல்ல, இங்கிதம் தெரியாதவர்களும் கூட! ஒரு பத்து வருடம் இருக்கும் திரைப்பட இணை இயக்குனர் ஒருவர் எழுதிய கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவுக்கு தமிழக திரை மற்றும் இலக்கிய வட்டங்களில் இருந்து பல பிரபலங்கள் அழைக்கப் பட்டிருந்தனர்- மனுஷ்ய புத்திரன், பாரதி ராஜா, ஈரோட்டு தமிழன்பன் இப்படிப் பலர்! வாழ்த்துரை வழங்க மேடைக்கு அழைக்கப் பட்ட பெரும்பான்மை சிறப்பு விருந்தினர்கள் மரியாதை நிமித்தம் ஓரிரண்டு வார்த்தைகள் பேசி விட்டு அமர்ந்து விட்டனர். இந்த மனுஷ்ய புத்திரன் என்கிற வியாபாரி பேசினார் பாருங்கள், நூல் வெளியீட்டுக்கு அழைத்த அந்தக் கவிஞர் உயிர்மையே போக்க அடிக்கும் அளவு கடுமையான சாடல்! சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது என்பது என்ன வென்று அந்தக் கவிஞர் அன்று நிச்சயம் உணர்ந்திருக்ககூடும்! விழா முடிந்ததும் கவிஞரை தனியே சந்தித்து கேட்டபோது கவிதை தொகுப்பை விழாவுக்கு முன்பே சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பிதழோடு அனுப்பியதை தெரிவித்தார். கவிதை நன்றாக இல்லை என்று தெரியும் பட்சத்தில் விழாவுக்கு வருவதற்கில்லை என்பதை தெரிவித்து விட்டு கழற்றிக் கொண்டிருக்கலாம், பிடிக்காத ஒரு விஷயத்தை வானாளவ புகழ்வது தனது கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதை கவிஞரிடமே போட்டு உடைத்தாற்போல் சொல்லி இருக்கலாம்- இப்படி எவ்வளவோ சாத்தியங்கள் இருந்த போதிலும் மெனக்கட்டு மேடை ஏறி வந்து பார்வையாளர்களும், விழா நாயகரும், இதர விருந்தினர்களும் நெளிகிற மாதிரி கவிஞரை ஒரு பிடி பிடித்து விட்டு தன் மேதா விலாசத்தை காட்டியே தீரவேண்டுமா, என்ன? பெயரில் இருக்கிற மனுஷ்யம் செயலில் இல்லையே? எழுத்தாளர்களிடம் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கிறதாக நாமே கற்பனை செய்துகொள்வதில் இதுதான் சங்கடம்!

Madhavan Srinivasagopalan said...

அந்த பாடாவதி கமெண்டுக்கு நீங்கள் அனுப்புறதா சொன்ன பரிசு மாயமாயிடிச்சே (இன்னும் எங்கிட்ட வந்து சேரலியே) !!!! அனுப்புறதுக்கு தேர்தல் கமிஷன் ஏதாவது தடை போட்ருச்சோ ?

எலக்ஷன்லாம் முடிஞ்ச ஒடனே சமத்தா அனுப்பிடணும்.... ஆமா சொல்லிப்புட்டேன்....
-----

உடான்ஸ் கவிஞன் said...

If you use wikipedia articles as reference for patent it will be rejected but britannia encyclopedia article will be accepted.Its because wikipedia is edited by many and accuracy is questioned.This was said some years back itself.So i laughed when writer s ramakrishnan quoted a blog .Some good writers in foreign countries spend so much of time and money from their purse to visit many labs,libraries,study the authenticated and write in a simple form . Here S Ramakrishnan without even spending time in libraries ,jus gave a lecture(How dare and guts he have) in a hall...S Ramakrishnan could better sit in Libraries or Labs instead of visiting Briyani in Mongolia or writing about '100 Movies of all time'....S Ramakrishnan kinda writers just write what was already written..Difference is his writing is in Tamil.He is an example of Plagiarism

IdlyVadai said...

Madhavan Srinivasagopalan புத்தகம் இரண்டு வாரத்துக்கு முன் அனுப்பபட்டது. உங்கள் முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணை கொடுங்கள். திரும்ப அனுப்ப முடியுமா என்று பார்க்கிறேன்.
நன்றி

Kamesh said...

Hi all,

Reading a few (almost all) books of Kalki, Jeyakanthan, Akilan,Sandilyan, Aru Ramanathan,
Sujatha, Kannadasan,Balakumaran and some other writers alone does not evoke literary interest in u nor qualifies you to participate in literary debates.. lesson learnt today by me.