பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 17, 2012

(ஓசி)முனிமலர் 17-2-2012

முன்குறிப்பு:
"சடைத்தனமாக இருப்பதால் இது அநங்கன் எழுதியது என்று நினைக்கிறேன்" என்ற கமெண்ட் வந்தவுடன் அநங்கன் டென்ஷன் ஆகி இவ்வாறு எழுதியிருந்தார்...

அடப்பாவி அநானி. இதை நான் எழுதவில்லை. நான் எழுதியதை தூக்கக் கலக்கமாக இருந்ததால் இட்லி வடை போடவில்லை. இனிமேல் போடுவாரா என்றும் தெரியாது. இட்லிவடை ஏரியாவில் அடிக்கடி ஃபீஸைப் பிடுங்கி விடுகிறார்களாம், பாவம். :-(

அது சரி, எழுத்தின் ஸ்டைலை வைத்து அதை யார் எழுதியிருப்பார்கள் என்று கூட உங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் நான் என்னத்தச் சொல்ல?

அவர் எழுதிய முனி மலர் ( சில வாரங்களுக்கு முன் எனக்கு அனுப்பியிருந்தார் கொஞ்சம் எடிட் செய்து, சில இடங்களில் மாற்றம் செய்து இங்கே... )

நிச்சயம் நான் எழுதிய முனி மலரைக் காட்டிலும் நன்றாக இருக்கும். திட்டுவதாக இருந்தால் என்னை திட்டவும்
நன்றி
இட்லிவடைமுனிமலர் ஆசிரியர் : முனி - பொறுப்பாசிரியர், வெளியீட்டாளர் : இட்லிவடை
சிறப்புச் செய்தியாளர்: அநங்கன்


செய்திகளில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே அல்ல; இறந்தோர் இருப்போர் என எவரையும் குறிப்பன ஆகா ஆகும்.

ஸ்டாலின் திமுக தலைவராகிறார்!
சென்னை: பிப்ரவரி 3 அன்று திமுகவின் பொதுக் குழு கூட இருக்கிறது. அன்று என்ன நடக்கும் என நாடே எதிர்பார்த்திருக்கும் சூழலில் பொதுக்குழுவில் எடுக்கப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. பெயர் வெளியிட விரும்பாத கலக முன்னணித் தலைவர் ஒருவர் மூலம் கசிந்துள்ள இத்தகவல்கள் உறுதியானதுதான் என்கிறது நம்பத்தகாத வட்டாரம். இதன்படி ஸ்டாலின் திமுக தலைவர் ஆகிறார். இதுவரை தலைவராக இருந்த கருணாநிதி ஓய்வு பெற இருக்கிறார்.

அழகிரி பொதுச் செயலாளர் - உதய நிதி இளைஞர் அணித் தலைவர்
அழகிரி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். உதய நிதிக்கு இளைஞர் அணித் தலைவர் பதவி வழங்கப்பட இருக்கிறது.
குஷ்பு கொபசெ
கட்சி வளர்ச்சிக்கு தீவிரமாக உழைத்து வரும் குஷ்புவின் “பணிகளை”ப் பாராட்டும் வகையில் அவருக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட இருக்கிறது.

கனிமொழிக்குக் கல்தா
கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்பட வேண்டும் என கருணாநிதி நினைத்தாலும் குடும்ப எதிர்ப்பால் தற்போது அதைக் கைவிடும் நிலையில் இருக்கிறார். இதற்குப் பதிலாக மத்திய அமைச்சர் பதவி அல்லது ஊழல் ஒழிப்புத் துறையின் தலைவர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தோழிகள் சந்திப்பு?
பிரிந்தது பிரிந்தது தானா, மீண்டும் இணைய மாட்டார்களா, நாம் எப்படிப் பிழைப்பு நடத்துவது என்றெல்லாம் பல குப்பாச்சு-குழப்பாச்சுக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்த வேலையில் உடன்பிறவா தோழிகள் சந்திப்பு இன்று அதிகாலை நிகழ்ந்ததாக தோட்டத்து வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை ரகசியமாக நடந்த சத்ரு-சம்ஹார யாகத்தில் ரகசியமாக முக்காடு போட்டுக் கொண்டு ஒருவர் வந்து கலந்து கொண்டதாக நம்பத்தகாத வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அது யார் என்ற ஆர்வத்தால் ஐந்து வயது பையன் முக்காடை எடுக்க எல்லோருக்கும் அச்‘சோ’ என்று ஆகிவிட்டது. சென்னையில் அதிக பனி பெய்ததால் அவர் அப்படி முக்காடு போட்டுக் கொண்டு வந்து கலந்து கொண்டார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.


இந்தியா முழுவதும் அணு உலைகளை மூட வேண்டும் - வைகோ போராட்டம்
கல்பாக்கம்: கூடங்குளத்தைத் தொடர்ந்து கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தையும் மூட வேண்டும் என வைகோ போராட்டம் நடத்தினார். இந்தியா முழுவதும் உள்ள அணுமின் உலைகள் பாதுகாப்பாற்றவை. அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர் கூறினார். உடன் இருந்த ராமதாஸூம் அதனை வரவேற்றுப் பேசினார். அப்படியானால் ஏற்கனவே இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழகம் முற்றிலும் இருளில் ஆழ்ந்து விடுமே என்று நிருபர்கள் கேட்டதற்கு ராமதாஸ், “ ரொம்ப நல்லது. டி.வி. இண்டர்நெட், ஃபேஸ் புக், ஈமெயில் எதையும் பார்க்க முடியாது. மக்கள் ரொம்ப நிம்மதியா இருக்கலாம். இனி எல்லோரும் ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுவிட்டுப் படுத்து விட வேண்டும். எட்டு மணிக்கு மேல் யாராவது வெளியே தலைகாட்டினால் அவர்களை சவுக்கால் அடிக்க வேண்டும். எட்டு மணிக்கு மேல் வீட்டிற்கு வருபவர்கள், ஒவ்வொரு தெரு முனையிலும் நின்று கொண்டிருக்கும் பாமக தொண்டர்களிடம் வாயை ஊதிக் காண்பித்து, ’குடிக்கவில்லை’ என்று உறுதிப்படுத்தப் பட்ட பிறகுதான் வீட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

“உங்கள் இயக்கத்தைச் சேர்ந்த சில பெண்களே குடிப்பதாக பேப்பரில் புகைப்படத்துடன் செய்தி வந்ததே என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, ராமதாஸ் ஆத்திரத்துடன் “அது விஷமிகளின் சதி. குடிப்பது மாதிரி அந்தப் பெண் சாராயத்தை வாயில் ஊற்றிக் காண்பித்தார். அவர் துப்புவதற்குள் புகைப்படக்காரர் படம் எடுத்து விட்டார்” என்றார். ராஜ்யசபாவிற்கு அன்புமணி போன்றவர்களை அனுப்பினால் தமிழர்களின் அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கி விடும்” என்றார் அவர் உறுதியுடன்.

நித்யானந்தா ஆசிரமத்தில் திவாகரன்?
நாடெங்கும் வலைவீசித் தேடப்பட்டு வரும் திவாகரன் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பதுங்கி உள்ளதாகத தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் போலீஸ் படை அங்கு விரைந்துள்ளது. அதே சமயம் அவர் ரகசியமாகக் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது என்றும் கூறப்படுகிறது.போலீஸ் தேடும் வேட்டையில் ஈடுப்படுத்தப்பட்ட போது அங்கே கர்நாடகாவை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் பதுங்கி இருந்ததாக தெரிகிறது.

நானும் எம்பி ஆக வேண்டும் - செந்தில் கோரிக்கை
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் அதிமுக தலைவர் ஒருவருக்கு கோரிக்கைக் கடிதம் எழுதியுள்ளார்.

“தங்கத்தாரகை, பாரதத்தின் வருங்காலப் பிரதமர் அம்மாவுக்கு என் அன்பு கலந்த நன்றி கலந்த மரியாதை கலந்த வணக்கங்கள். அண்ணன் எஸ்.எஸ். சந்திரனை எம்பி ஆக்கினீங்க. அவரு போய் ’எல்லாத்தையும்’ ’பாத்துட்டு’ வந்ததாச் சொன்னார். அண்ணன் ராமராஜனை எம்பி ஆக்கினீங்க. அவரு நான் வாஜ்பாயைப் பாத்தேன்; சோனியா காந்தி அம்மாவைப் பார்த்தேன். லல்லு பிரசாத் யாதவ் வீட்டுல விருந்து சாப்பிட்டேன்னுல்லாம் சொல்றாரு. எனக்கும் அவங்களை எல்லாம் பக்கத்துல இருந்து பாக்கணும்னு ஆசையா இருக்கு. நானும் டெல்லி, ஆக்ரா, தாஜ்மகாலை எல்லாம் பாக்கணும்னு ஆசைப்படறேன். என்னையும் எம்பி ஆக்குங்க” என்று அதில் கோரிக்கை வைத்துள்ளார்.
இது பற்றி நடிகர் கவுண்டமணியிடம் கேட்டதற்கு “அட்ரா சக்கை அட்ரா சக்கை.. ஊஊ.. ஊ... ஊ...” என்றவர், “பார்லிமெண்ட் மண்டையனே பார்லிமெண்ட் போனா வெளங்குமா?” என்று சொல்லி விட்டு போனை கட் செய்து விட்டார்.

மக்கள் பிரச்சனைகளுக்காக மொட்டை அடித்துக் கொள்ள நடிகர்கள் தயாரா? - ராமதாஸ் சவால்
சினிமாவில் நடிப்பதற்காக மொட்டை அடித்துக் கொள்ளும் நடிகர்கள் மக்கள் பிரச்சனைகளுக்காக மொட்டை அடித்துக் கொள்ளத் தயாரா? என்று ராமதாஸ் சவால் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் போதிதர்மன் மக்கள் பேரவை சார்பாக அன்புமணி ராமதாஸூக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட ராமதாஸ், “நாம்தான் போதி தர்மரின் உண்மையான வாரிசுகள் என்பது சீனாக்காரனுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இங்குள்ள மடத்தமிழர்களுக்கு அது தெரியவில்லை. நாம் அதைத் தெரியப்படுத்த உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் போதிதர்மனின் ஆட்சி மலரப் பாடுபட வேண்டும். சினிமாவில் துட்டு வாங்கிக் கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு நடிக்கும் நடிகர்கள் நிஜவாழ்வில் முல்லை பெரியாறு, கூடங்குளம் அணுமின் பிரச்சனை, கச்சத் தீவுப் பிரச்சனை போன்றவற்றிற்காக போராடத் தயாரா? நாம் நேற்று இங்கே அந்தப் பிரச்சனைகளை வலியுறுத்தி கோவண ஊர்வலம் நடத்தினோம். தைரியமிருந்தால் நடிகர்கள் இந்தப் பிரச்சனையை வலியுறுத்தி மொட்டை அடித்துக் கொண்டு கோவண ஊர்வலம் போகத் தயாரா?” என்று சவால் விட்டார். மேடையில் இருந்த கோ.க. மணி, காடு வேட்டி குரு, சோடா புட்டி ரவி ஆகியோர் ராமதாஸின் இந்தக் கேள்வியை கை தட்டி ஆரவாரித்தனர்.

ரஜினி ”நச்” பேட்டி
சென்னை விமான நிலையத்தில் நேற்று திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. நிருபர்களின் கேள்விகளும் அவரது பதில்களும்

கே: கோச்சடையான் எப்போது?

ப: விரைவில்

கே: உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது?

ப: ஹா.ஹ்ஹா.. ஹா.. நன்றாக இருப்பதால் தானே உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.

கே: தனுஷை உலக நாயகன் என்று சிலர் சொல்கிறார்களே!

ப: தனுஷ் நல்ல நடிகர். சிறந்த பாடகர் என்பதை நிரூபித்திருக்கிறார். உலகம் முழுவதும் அவர் புகழ் பரவியிருப்பது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது.

நிரு 1: நீங்கள் ரசிகர்களைச் சந்திப்பது எப்போது...
நிரு 2: தனுஷுக்கும்....

(கேள்வியை முடிக்கும் முன்பே) ஹே.. ஹே.. அவர் நல்ல நடிகை. நன்றாகப் பாடுகிறார். என் இனிய நண்பரின் மகள். புலிக்குப் பிறந்தது பூனையில்லை என்று நிரூபித்திருக்கிறார்.அவர்களுக்கு என் வாழ்த்துகள். நிச்சயம் 3 படம் வெற்றி அடையும். ரசிகர்களை விரைவில் நேரில் சந்திப்பேன். எல்லோருக்கும் நன்றி. வணக்கம் என்று சொல்லி விட்டு வேகமாக விமான நிலையத்தினுள் சென்று விட்டார். அடுத்த பிளைட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருகிறார் என்ற பலர் பேசிக்கொண்டார்கள்

எழுத்தாளர்கள் சந்திப்பில் அடிதடி - பிரபல எழுத்தாளர்கள் கட்டிப் புரண்டு சண்டை
சென்னை: சமீபத்தில் பிரபல எழுத்தாளருக்கு வழங்கப்பட்ட விருதை ஒட்டி அவருக்கு பிரபலங்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது திடீரென மேடை ஏறிய ”குட்டி” எழுத்தாளர் ஒருவர் ”இந்த எழுத்தாளர், விருது பெறுவதற்குத் தகுதியானவர் இல்லை; என்னுடைய ஒன்று விட்ட சித்தப்பாவின் தாத்தாவினுடைய ஆவணங்களைக் காப்பி அடித்து புத்தகமாக எழுதி விட்டார்” என்று குறை கூறியதுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைத் தூக்கித் தாறுமாறாக வீசினார். அது சில வாசகர்கள் தலையில் விழுந்து பலத்த காயத்தை ஏற்படுத்தியதால் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர். இதனால் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த மற்றொரு பிரபல எழுத்தாளருக்கும் ’குட்டி’ எழுத்தாளருக்கும் சண்டை மூண்டது. கட்டிப் புரண்டு இருவரும் போட்ட சண்டையில் பிரபல எழுத்தாளரின் முட்டி உடைந்தது. ’குட்டி’ எழுத்தாளரின் சட்டை கிழிந்தது. ஆத்திரத்தில் பிரபல எழுத்தாளர் குட்டி எழுத்தாளரின் காதைக் கடித்து விட்டதால், குட்டி எழுத்தாளர் ”அய்யோ.. அன்னா.. அயல்... இயல்... கயல்.. காவல்..” என அலறிக் கொண்டே வெளியே ஓடித் தப்பித்தார். இதனால் சில மணி நேரம் நிகழ்ச்சி தடைப்பட்டுப் பின் தொடர்ந்தது. இதை எல்லாம் தன் ஐ.போனில் படம் பிடித்துக்கொண்டு இருந்த மற்றொரு எழுத்தாளர் கூடிய சீக்கிரம் இந்த காட்சிகளை தன்னுடைய சீரியலில் சேர்ப்பார் என்று தெரிகிறது.

”மேதை” டிக்கெட் இலவசம்
தான் நடித்த ”மேதை” படத்தின் டிக்கெட்டுகளை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க இருப்பதாக நடிகர் ராமராஜன் தெரிவித்தார். நேற்று சேலத்தில் இலவச ஆடு, மாடு வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாடுகளை வழங்கிய ராமராஜன், பள்ளி மாணவர்கள் மாடு மேய்க்கப் போகக் கூடாது என்று தான் மிகவும் விரும்புவதாகவும், அதற்காக அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தான் நடித்த ”மேதை” படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார். அதனைக் கேட்ட மாணவர்கள் சிலர், “ அந்தப் படத்தைப் பாக்கறதுக்கு பதிலா மாடு மேய்க்கவே நாங்க போயிடறோம். எங்களை விட்டுடுங்க..” என்று கதறிக் கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினர்.

வள்ளுவர் கோட்டம் இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
இன்றைக்கு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்படுவதாவது... ”தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகியவற்றை இணைக்கும் மையப்பகுதியாக வள்ளுவர் கோட்டம் இருக்கிறது. ஆனால் அது அங்கு இருப்பதால் பேருந்துகள் சுற்றிச் செல்ல நேரிடுகிறது. சிக்னலுக்காக பேருந்துகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு வள்ளுவர் கோட்டம் இடிக்கப்பட்டு அங்கே புதிய நான்கு வழி மேம்பாலம் அமைய இருக்கிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது. வள்ளூவர் கோட்டம் இடிப்பு பற்றி துக்ளக் சோவிடம் கேட்டதற்கு ஆண்டு விழா நடந்துவிட்டது அதனால் எனக்கு கவலை இல்லை. அடுத்த வருடம் இதை பற்றி கவலைப்படுகிறேன் என்று நக்கலாக பதில் அளித்தார்.

சாலை வரி!? - நமது நிருபர்
தமிழக அரசு தற்போது பெரும் வருமானப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கிறது. சமாதிகளைச் சீர் செய்வது, எம்.எல்.ஏக்களுக்கு லேப்-டாப், மக்களுக்கு ஆடு, மாடு, கோழி, மிக்சி, கிரைண்டர் வழங்குதல் போன்ற திட்டங்களை அறிவித்தபடி செயல்படுத்த போதிய பணம் இல்லை. பேருந்து, மின் கட்டணத்தை உயர்த்தினாலும் வரும் வருவாய் இருக்கும் நிலைமையைச் சீர் செய்யவே போதாது என்பதால் அரசு வருமானத்தைப் பெருக்க அதிரடியாகச் சில திட்டங்களை அறிவிக்க இருக்கிறது. சமீபத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் என அறிவிப்பு வந்ததைப் போலவே சாலை விதிகளிலும் மாற்றம் செய்யப்பட இருக்கிறதாம். எப்படி முக்கிய இணைப்புச் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் ”சுங்க வரி” செலுத்துகிறார்களோ அதுபோல இனி முக்கியச் சாலைகளில் நடப்பதற்கும் வரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதன்படி இனி ரங்கநாதன் சாலை, உஸ்மான் சாலை, அண்ணா சாலை, பாண்டி பஜார், மெரீனா போன்ற இடங்களுக்குச் செல்பவர்களில் குழந்தைகள் ரூ 1/, பெண்கள், ரூ. 3/- ஆண்கள் ரூ. 5/- செலுத்த வேண்டி வரலாம் எனத் தெரிகிறது. ”இது மிகவும் அநியாயம். 3/- ரூபாய் என்றால் பரவாயில்லை” என சில பொதுமக்கள் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வள்ளுவர் கோட்டம் இடிப்பு பற்றி கருணாநிதி
வள்ளுவர் கோட்டம் இடிப்பு பற்றிய அரசின் அறிவிப்பு குறித்து கருணாநிதியை நிருபர்கள் இன்று சந்தித்தனர். நிருபர்களின் கேள்விகளும் அவரது பதில்களும்

நிரு : வள்ளுவர் கோட்டத்தை இடிக்கப் போவதாக ஜெ. கூறியுள்ளாரே!

கரு: தமிழனுக்கு சுரணை என்ற ஒன்று இருந்தால், அவன் உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுவதாக இருந்தால் இந்தச் செய்தியைக் கேட்டுக் கொண்டு அவன் சும்மா இருக்கலாமா? போயஸ் கார்டன் என்ன அமெரிக்காவிலா இருக்கிறது?

நிரு : நீங்கள் செய்த ஒவ்வொரு சிறப்பான பணியையும் ஜெயலலிதா கிடப்பில் போடுவது ஏன்?

கரு: [edited] அடையாளமே தமிழ் மண்ணில் இருக்கவே கூடாது என்பதற்காக சில ஆரியர்கள், தீய சக்திகள், பார்ப்பனப் பதர்கள், கோமாளித் தலையர்கள், ஆரியப் புல்லுருவிகள், சொட்டை மண்டையர்கள் சேர்ந்து சதி செய்கின்றனர். தமிழ் உணர்வுள்ளோர் இவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடாக உள்ளது.

நிரு : தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எதிர்பார்த்தபடி மத்திய அரசு உதவவில்லையே!

கரு: நான் நேற்றுக் கூட கடிதம் எழுதியிருக்கிறேன்.

நிரு : பரிதி இளம் வழுதிக்கு மீண்டும் திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுப்பீர்களா?

கரு : தம்பி வித்தகக் கவிஞர் பா. விஜய் நடிக்கும் படத்திற்கு வசனம் எழுத இருக்கிறேன்.

(காதில் விழவில்லையோ என நினைத்த நிருபர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறார்.)

நிரு : பரிதி இளம் வழுதிக்கு மீண்டும் திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுப்பீர்களா?

கரு : வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அந்தப் படத்தில் தம்பி வைரமுத்துவை பாடல்கள் எழுதச் சொல்லியிருக்கிறேன்.

நிருபர்கள் ஒட்டு மொத்தமாக : பரிதி இளம் வழுதிக்கு மீண்டும் திமுகவில் முக்கிய பொறுப்பு கொடுப்பீர்களா?

கரு: பொறுப்பு என்றாலே அது முக்கியம் தானே ?

மேற்கொண்டு நிருபர்கள் பொதுக்குழு, ஸ்டாலின், கனிமொழி, பதவி என்று கேட்க முனையும் போதே கையாட்டி விட்டு காரில் சென்று விட்டார் கருணாநிதி.


பாராட்டு அநங்கனுக்கு, திட்டு இட்லிவடைக்கு :-)

9 Comments:

D. Chandramouli said...

Laughter unlimited !!

பெசொவி said...

@ idlyvadai
//நிச்சயம் நான் எழுதிய முனி மலரைக் காட்டிலும் நன்றாக இருக்கும்//

Yes, Really it is!

பாராட்டு அநங்கனுக்கு, இட்லிவடைக்கும்
:))

Anonymous said...

ரெண்டுமே மொக்கையாய் தான் சாரே இருக்குது. வேணாம் விட்ருங்க வலிக்குது.

Anonymous said...

அந்த முனி மலர் மொக்கைன்னா இது படு மொக்கை. இ.வ. இதை வெளியிடாமலே இருந்திருக்கலாம். அநங்கனின் கட்டுரைகள் எல்லாம் எப்பவும் அரை வேக்காடு என்பது அனைவருக்கும் தெரியுமே!

Anonymous said...

//அநங்கனின் கட்டுரைகள் எல்லாம் எப்பவும் அரை வேக்காடு என்பது அனைவருக்கும் தெரியுமே!//

அநங்கன் எப்போது கட்டுரையாளர் ஆனார்? ஏதாவது அறுவையாக அவ்வப்போது எழுதிக் கொண்டிருப்பது தானே அவர் வேலை.

அதுசரி, அநங்கன் மீதான இவ்வளவு வெறுப்புக்குக் காரணம் அவர் திகுகவை சாரி திமுகவை குறை சொல்வதினால் தானோ?

Anonymous said...

// வள்ளுவர் கோட்டம் இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு //

http://siliconshelf.wordpress.com/2012/01/24/ஒண்ணரை-பக்க-நாளேடு-வள்ளு/

ரிஷபன்Meena said...

அநங்கன் சீரியஸான கட்டுரை எழுதுறேன் என்று உட்கார்ந்தால் வேண்டுமானால், நகைச்சுவை கட்டுரை/துனுக்கு எழுத வருமாயிருக்கும்.

அநங்கன் இந்த விமர்சனத்தை எல்லாம் கண்டுக்காம நீங்க பாட்டுக்கு எழுதிக்கிட்டே இருங்க. இட்லி தான் எதை எழுதினாலும் போடறாரே !

Anonymous said...

//அநங்கன் இந்த விமர்சனத்தை எல்லாம் கண்டுக்காம நீங்க பாட்டுக்கு எழுதிக்கிட்டே இருங்க. இட்லி தான் எதை எழுதினாலும் போடறாரே !//

அப்படிங்களா? அப்போ பெரிய்ய எழுத்தாளரான நீங்க கூட எதுனா ட்ரை செய்யலாமே! இட்லி போட மாட்டாரா என்ன?

Nara said...

நியாயமா பார்த்தா அநங்கனுக்கு தான் கோபம் வரனும் அனானிக்கு ஏன் கோபம் கண்ணை மறைக்குதுன்னு புரியலை.

எழுதலாம் தான் ஆனா எனக்கு இவ்வளவு மட்டமா எழுத வராதே.