பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 31, 2012

தி.மு.க.4 பெட்டிக் கடைகளாக...

தி.மு.க.4 பெட்டிக் கடைகளாக...சிதறுண்டு போகும் - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன் (தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்)

தி.மு.க.வின் கொள்கைகளையும் லட்சியங்களையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ‘தம் குடும்பம் மட்டுமே கழகக் குடும்பம்’ என்று கலைஞர் செயல்படுவதால் எதிர்காலத்தில் கட்சி நான்கு பெட்டிக் கடைகளாகச் சிதறுண்டு போகும்," என்று எச்சரிக்கிறார் பெரம்பூர் கந்தன். இவர் கலைஞர் பாசறையின் அமைப்பாளர். தவிர, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர். தி.மு.க. பொதுக்குழு கூடும் சமயம் கந்தன் வீசுவது சாதாரண குண்டல்ல; கந்தக குண்டு...

அண்ணா கழகக் குடும்பத்தை எப்படிப் பார்த்தார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். 1962 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 50 இடங்களில் கழகம் வென்றது. அதே சமயம் தில்லியில் மக்களவைக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமிழகத்தில் சட்டமன்றக் கட்சிக்கு நெடுஞ்செழியனும், பாராளுமன்ற கட்சிக்கு இரா.செழியனும் தலைவர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பேச்சு இருந்தது. அண்ணா, நெடுஞ்செழியன் மற்றும் செழியனைக் கூப்பிட்டார். ‘சகோதரர்களான நீங்கள் இருவரும் இந்த இரு அமைப்புகளிலும் தலைவர்களாக இருப்பது என்பது, கழகம் ஒரே குடும்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது போலத் தோற்றம் கொடுக்கும். எனவே உங்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்புக் கொடுக்க முடியும். அது யார் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்,’ என்று சொல்லிவிட்டார். கடைசியில் செழியன் பாராளுமன்றக் கட்சித் தலைவராகப் போடப்படாமல் நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் அண்ணா கழகக் குடும்பத்தை நடத்திய முறை.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது? மகன் துணை முதல்வர். அவரைவிடத் தகுதியானவர்கள் கழகக் குடும்பத்தில் இல்லையா? மற்றொரு மகன் மத்திய அமைச்சர். மகள் தில்லி மேலவை உறுப்பினர். பேரன் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போது கலைஞரின் சிந்தனைகள் கழகத்தின் எதிர்காலம் குறித்து இல்லை. எந்தெந்தப் பதவிகளை யார், யாருக்குப் பங்கு போட்டுக் கொடுத்தால் குடும்பத்தில் பிரச்னை வராது என்பதே அவரது 24 மணி நேர யோசனையாக இருக்கிறது. எந்த வகையில் கழகச் சட்ட திட்டங்களைத் திருத்தினால், வாரிசுகளின் வாரிசுகளுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று ஆராய்கிறார்கள். இந்த நிலை உருவாவதற்கு, பேராசிரியர் அன்பழகனும் ஒரு காரணமாகிப் போனார். மூத்த தலைவர் என்ற முறையில் நடக்கின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், தமக்கு இரண்டாவது இடம் சாஸ்வதமாக இருந்தால் சரி என்று சுயநலத்துடன் செயல்பட்ட பேராசிரியர், இந்த இயக்கம் இப்படித் தறிகெட்டுப் போவதற்குக் காரணமாக அமைந்தவர்களில் ஒருவராகி விட்டார். இந்த வகையில் வரலாறு அவரது நிலைப்பாட்டை விமர்சனப் பார்வையோடு தான் அணுகும்.

மொழி, இனம், பொருளாதாரம், சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயம் ஆகியவை குறித்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்ட கொள்கைகள் கலைஞர் காலத்தில் நீர்த்துப் போய்விட்டன. உயர்மட்டத்திலேயே சுய நலம் குடிகொண்டதால், கட்சியிலிருக்கும் இளைய தலைமுறையும், பதவி, பணம் என்று அலைபாய்கிறது. யாருக்கும் கொள்கைத் தெளிவு இல்லை. ஒரு உதாரணம். ஜனவரி 25ம் தேதி என்பது தமிழுக்காக உயிர்விட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுகின்ற தினம். ஆனால் இதையே ஒரு கொண்டாட்டமாக சித்திரிக்கிறார்கள். பேச வரும் தலைவருக்கு எப்படி வரவேற்பு கொடுப்பது என்று கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள். இதன் மூலம் சிலரது பிழைப்பு ஓடுகிறது. இன்று இயக்கத்தில் வியாபாரிகள் அதிகமாகி விட்டார்கள். பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல் ஆகிவிட்டது கட்சி.

கழகத்துக்கு உண்மையாகப் பாடுபட்டவர்களுக்கு மதிப்பில்லை. 1991 - 96ல் சட்டமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்து கட்சியின் கௌரவத்தைக் காப்பாற்றி, ஜனநாயகத்துக்குப் போராடிய பரிதி இளம்வழுதி, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப, கருவேப்பிலையாக ஓரம் கட்டப்படுகிறார். ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்ற கோஷத்தை வெற்று கோஷமாக்கிவிட்டு, அயராது உழைத்த கலைஞரின் குடும்பம் இன்று இந்தியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒன்றாகிவிட்டது. கட்சிப் பத்திரிகையான முரசொலி, தொண்டர்கள் உழைத்துக் கொடுத்த பணத்தில் வளர்ந்தது. ஆனால் அதன் நிர்வாகம் கலைஞர் குடும்பத்தின் கையில். அண்ணா அவர்கள் கழக ஏடான ‘நம் நாடு’ பத்திரிகையை, கழக நிர்வாகிகளிடம் அல்லவா ஒப்படைத்திருந்தார்?

இப்போது சொன்னவற்றைவிட மிகப் பெரிய கொடுமை 2009ல் முள்ளிவாய்க்காலில், கொத்துக் கொத்தாக ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது மத்திய அரசில் பதவிதான் முக்கியம் என்று நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தமிழினத்துக்கே துரோகம் செய்தாரே... இதை மன்னிக்கவே முடியாது. ‘இன துரோகி’ பட்டத்துக்குப் பொருத்தமானவர் கலைஞரே. இந்த உச்சபட்ச துரோகம்தான் எனக்குத் தீராத மனக்கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.

இனியும் என்னால் கழகத்தில் நீடிக்க முடியாது. எனவே நான் என்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வின் ‘கொள்கை’ ஊழல் புகாரில் மாட்டிக் கொண்டு ஒரு வருடமாக திகாரில் இருக்கிறது. எனவே வெட்கப்பட்டு வேதனைப்பட்டு என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஊழல் புகாரில் ஜெயிலில் இருந்தவருக்கு, பட்டுக் கம்பள வரவேற்பு! ஊழலுக்குத் தாலாட்டுப் பாடும் கட்சியில் எப்படி இருக்க முடியும்?" என்றுகேட்கிறார் கந்தன். இவர் வீசும் ஏவுகணைகளால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்படும்" என்கிறார்கள் சில மூத்த பிரமுகர்கள். பொதுக்குழுவில் இதைவிட இன்னும் பூதாகரமான வெடிகள் வெடித்தாலும் ஆச்சரியமில்லை.

நன்றி - கல்கி
படம் நன்றி - Times of India.


நோ கமெண்ட்ஸ்!

11 Comments:

kothandapani said...

கந்தன் சொல்லும் அனைத்தும் எதோ நேற்று நடந்து , இவர் மனம் மாறியது போல பேசுகின்றார்........ தோத்த கட்சியை விட்டு பலர் விலகுவதும் , அதற்கு அவர்கள் கூறும் காரணங்களும் ஒரே மாதிரிதான்....... அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.............................. அம்மா கேம்பில் அதிர்வேட்டு
முழங்கிறதே அதை பற்றி பேச்சே காணோம்.......

Avinash Srinivasan said...

start music...

யதிராஜ சம்பத் குமார் said...

கந்தன் ஏதாவது துருவக் கரடி போல நீண்ட குளிர்கால உறக்கத்திலிருந்து மீண்டெழுந்திருக்கிறாரா? கழகத்தின் "கொள்கை" திஹாருக்குப் போனதும், ஏனைய குடும்ப உறுப்பினர்கள் பதவியிலிருப்பதும் ஏதோ நேற்றுதான் தமக்குத் தெரிந்ததுபோலும், அதனால் கட்சியிலிருந்து விலகுவது போலவும் தெரிவிக்கிறாரே?

pudukai selva said...

திராவிட முன்னேற்ற கழகம்
திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின்
சொத்தாகி நாற்பதாண்டுகளுக்கு மேலான பின்னர்
இன்றென்ன ஞானோதயம்?!

ConverZ stupidity said...

உடன்பிறப்பே கந்தா, எளவு வீடாக இருந்தாலும் அங்கும் மாலை மரியாதை தனக்கே வேண்டும் என ஆசைபடுபவன்தான் உன் அண்ணன் மு.க என்பதை நீ அறியாதவனா? அவ்வாறு இருக்க தி.மு.க-வை அழித்த பெருமையும் தன்னையே சார வேண்டும் என நான் பேரவா கொண்டிருப்பதை நீ அறியாமல் போனதெங்கனம்

ஆற்காட்டன் said...

இதில் ஒன்றும் தவறில்லை . பல வருடங்களாக அவரும் நம்பிக்கையுடன் பொருத்து பார்த்து மனம் வெறுத்து இப்படி சொல்லி இருக்கிறார்.

பெற்றோர் பிள்ளைகளின் மீது வைக்கும் நம்பிக்கை போல தான் இதுவும்.

பொன்.முத்துக்குமார் said...

"இப்போது சொன்னவற்றைவிட மிகப் பெரிய கொடுமை 2009ல் முள்ளிவாய்க்காலில், கொத்துக் கொத்தாக ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது மத்திய அரசில் பதவிதான் முக்கியம் என்று நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தமிழினத்துக்கே துரோகம் செய்தாரே... இதை மன்னிக்கவே முடியாது. ‘இன துரோகி’ பட்டத்துக்குப் பொருத்தமானவர் கலைஞரே. இந்த உச்சபட்ச துரோகம்தான் எனக்குத் தீராத மனக்கொதிப்பை ஏற்படுத்திவிட்டது"

2009-ல ஆரம்பிச்சு மூஊஊஊஊஊஊணு வருஷமா கொதியோ கொதியோ-ன்னு கொதிச்சி போச்சாமா அவரு மனசு ? பாஆஆஆஆஆஆஆவம் என்ன ஆவுறது அந்த மனசு ? உச்சு உச்சு உச்சு .....

Anonymous said...

அடியாத்தி! குசுபு போட்டோ கூடல்லா போட்டருக்காக!!! வருங்கால மொதலமைச்சர் குசுபுதான் கேட்டியளா?

The Chennai Pages said...

http://faceofchennai.blogspot.in/2012/02/walk-in-call-center-executives.html

Anonymous said...

தி.மு.க.4 பெட்டிக் கடைகளாக....

பேஷ் பேஷ்
பெரம்பூர் கந்தன் ,பெட்டி வாங்கிட்டார்!!

venkatramanan said...

Thanks buddy!