
ஒண்ணுக்கு இரண்டா இருந்தா ரிலீஃப் தான். ஒண்ணா 'இருக்க' கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Thursday, September 29, 2011
நோ கமெண்ட்ஸ் !
Posted by IdlyVadai at 9/29/2011 07:58:00 PM 5 comments Links to this post
தமிழ் நாட்டில் பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்தது
தமிழ் நாட்டில் நமக்கு ஒரு பிரச்சனை என்றால், போலீஸ் ஸ்டேஷன் ஸ்டேஷனாக அலைய வேண்டும், ஆனால் சினிமாக்காரர்கள் என்றால் நினைத்த நேரத்துக்கு போலீஸ் நிலையம், உயர் அதிகாரிகள் என்று யாரை வேண்டும் என்றாலும் சந்திக்கலாம் போல. மன்னிப்பு எனக்கு பிடிக்காத வார்த்தை என்றாலும், மன்னிக்க பரந்த மனசு வேண்டும்!
Posted by IdlyVadai at 9/29/2011 07:51:00 AM 6 comments Links to this post
Wednesday, September 28, 2011
மினி முனி - 28-09-2011
அன்புள்ள மினி முனிக்கு வணக்கம்,
கடந்த சில மாதங்களாக இட்லிவடைக்கு விநோத வியாதி பிடித்திருக்கிறது, அதனால் அடிக்கடி அப்டேட் செய்ய முடிவதில்லை. அதனால் முனியை சுறுக்கி மினி முனி...எனக்கு பிடித்திருக்கும் வியாதி போல இப்ப காங்கிரஸாரை கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஒரு வியாதி தாக்கியுள்ளது. அதென்னவென்றால், தற்செயலாக ஏதேனும் கேமராவையோ, அல்லது மைக்கையோ கண்டால் தாமாகவே, எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, இல்லை என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். தூக்கத்திலும் இதையே ஜெபித்தபடிதான் உள்ளனர். பிரதமர் முதல் காங்கிரஸின் கடைநிலை தொண்டர் வரை இந்நோய் பீடித்துள்ளது. காரணம், சிதம்பர ரகசியம் வெளிப்பட்டதுதான்.
மத்திய உள்துறை அமைச்சகம் பொழுது போகாமல், பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதாவது, அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நடவடிக்கை எடுத்திருந்தால், 2G ஊழல் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என்பதே அக்கடிதத்தின் சாராம்சம். இக்கடிதத்தை உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலை அதிகாரி ஒருவர் எழுதியிருந்தாலும், அது அப்போதைய உள்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜியின் பார்வை/அனுமதிக்குப் பிறகே அனுப்பபட்டுள்ளது. இதில் இன்னொரு விஷயம், ஒரு அமைச்சகத்தின் அதிகாரியொருவர், அத்துறை அமைச்சரின் ஆட்சேபணையையும் மீறி, பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்ப முடியாது என்பது நடைமுறை விஷயம். இது சாதாரண பாமரனுக்குக் கூட எளிதில் விளங்கும். ஆனால் இந்த முழு பூசணிக்காயைத்தான் சோற்றில் மறைக்க காங்கிரஸ், சிபிஐ துணையுடன் படாத பாடு பட்டு வருகிறது. சல்மான் குர்ஷித் என்ற மகான் சட்ட அமைச்சராக இருக்கிறாராம். அவர் "அமைச்சர் பார்த்தார்" என்றால் அதனை அனுமதித்தார் என்று சொல்ல முடியாது என்கிறார். சரியான "காமெடி பீஸ்"
இஞ்சி சாப்பிட்ட .... போல இருந்த ப்ரணாப் முன்பு இது தொடர்பாக பேசவே மறுத்தவர் இப்போது தினம் ஒன்றாகக் கூறி வருகிறார். லேட்டஸ்டாக, ஒரு வல்லுனரின் கருத்தை அறிந்த பிறகே, இக்கடிதம் தொடர்பாக பேச முடியும் என்றிருக்கிறார். சொன்னதோடு நில்லாமல், அன்றிரவே சோனியாவைச் சந்தித்துப் பேசியும் இருக்கிறார். சோனியாதான் அவர் கூறிய வல்லுனர் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு விஷயத்தைச் செய்யுமுன்பு, அது சரியா தவறா என வல்லுனர் அபிப்ராயத்தை அறிவது முறையா, அல்லது செய்த பிறகு அத்தவறை எப்படி சரி செய்வது என்று வல்லுனர் கருத்தை அறிவது முறையா?
ப்ரணாப் தவிர, தற்போதைய உள்துறையமைச்சர் சிதம்பரமும் சோனியாவை தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். வேடிக்கை என்னவெனில், இருவரும் ஒருவர் பின் ஒருவராகப் போய் சோனியாவிடம் பேசியுள்ளனர். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை என்று கூறும் காங்கிரஸாரிடம், ஏன் இவ்விருவரும் ஒன்றாக சோனியாவைப் பார்க்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலில்லை. வெளியே வந்த ப்ரணாப் யாரும் கேட்காமல் "சிதம்பரம் நல்லவர், வல்லவர் அவர் பெரிய தூண், நல்லவர்" என்று பிதற்றுகிறார். இப்பொழுது கடைசியாக பிரதமர்தான் முடிவெடுக்க வேண்டும், அதுவரை இதில் எதுவும் சொல்வதற்கில்லை என்று ப்ரணாப் சொல்லி விட்டார், என்னவோ அமைச்சரவை முடிவுகளை பிரதமரே எடுப்பது போல.
இக்கடித விவகாரத்தை மையமாகக் கொண்டு, சிதம்பரத்தை விசாரிக்க வேண்டுமென சுப்ரமணிய சாமி கோர்ட்டில் வாதாடி வருகிறார். ஆனால் வேடிக்கையாக சிபிஐ, சிதம்பரத்தை விசாரிக்கவே முடியாது; எங்களுக்கு யாரை விசாரிக்க வேண்டுமென யாரும் உத்தரவிட முடியாது; சிபிஐ ஒரு தன்னிச்சையான அமைப்பு என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி வருகிறது. அதாவது சிதம்பரத்தை விசாரிப்பது இவ்வழக்கை தாமதப் படுத்துமாம்! முன்பு போஃபர்ஸ் விவகாரத்தில், க்வாட்ரோக்கியை இந்தியா கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, அவ்வழக்கிற்கு சிபிஐ சமாதி கட்டியது. இப்போது சிதம்பரத்தை விசாரிப்பதால் ஏற்படப்போகும் தாமதத்தை கணக்கில் கொண்டு, இவ்விவகாரத்திற்கு சமாதி கட்ட சிபிஐ எத்தனிக்கிறது. சுப்ரீம் கோர்ட் இவ்விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறதென்பது இன்று தெரியும்.
இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய பிரதமர், சிதம்பரத்தின் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் (இவர் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்று யாராவது சொன்னால் நல்லது) இதனைக் கேட்டு சிதம்பரம் கலக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஏனெனில், பிரதமரிடமிருந்து ஏற்கனவே இவ்வாறு சான்றிதழ் பெற்ற ராசா இன்று என்ன கதியிலிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
நேற்றைய முன்தினம் கூகிளுக்குப் பிறந்த தினமாம். அதில் தேடிக் கண்டுபிடிக்க இயலாத விஷயம் ஒன்று உண்டு என ட்விட்டரில் பேசிக் கொள்கிறார்கள். அது மன்மோகன் சிங்கின் முதுகெலும்பாம்.முதுகு பற்றி பேசிய பிறகு ... அதை பற்றி பேசவில்லை என்றால் சிலர் கோபித்துக்கொள்ளுவார்கள். நல்லி குப்பு சாமிக்கும் இலக்கிய மேடைக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவர் இலக்கியவதிகளுக்கு பின்னாடி பிடிக்காத மதிரி அதாவது அவர்கள் போட்டுக்கொள்ளுவதற்கு ஏற்றவாறு ஜூன்ஸ் தயாரித்துள்ளார். முதல் கஸ்டமர் பா.ரா தான்!. தற்போது Flying Machine கம்பெனி கொடுத்த விளம்பரத்தால் சோனாவிற்கு ஆதரவு தெரிவித்த மகளீர் அமைப்புக்கள் இந்த விளம்பரத்துக்கு எதிரிப்பு தெரிவித்து போராட போகிறார்களாம். FM ஜூன்ஸ் கம்பெனி பா.ராவை அனுக போவதாக பேசிக்கொள்கிறார்கள்.
சோனியா காந்தியை டி.ஆர்.பாலு ஏன் சந்தித்தார் என்று கலைஞர் விளக்கம் அளித்துள்ளார் "சோனியா காந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தோழமைக் கட்சி என்ற முறையில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி தந்தி கொடுத்தேன். பின்னர் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோதும் வாழ்த்து தெரிவித்தேன். இப்போது நலம்பெற்று திரும்பியிருக்கிறார்.
எனவே, தமிழன் என்ற முறையில் அந்தப் பண்பாட்டோடு அவர் உடல் நலம் பற்றி விசாரிக்க டி.ஆர்.பாலுவை அனுப்பியிருந்தேன்"
என்ன தான் பெரிய ஆளாக இருந்தாலும், கபடி விளையாட போனால் யார் காலையாவது பிடிக்க வேண்டும். அது தான் வீரம் !
இப்படிக்கு,
மினி இட்லி
Posted by IdlyVadai at 9/28/2011 12:04:00 PM 11 comments Links to this post
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்
Friday, September 23, 2011
ஒரு சந்தேகம்

சோனியாவின் உடல் நிலை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பில் நலம் விசாரித்தார் டி.ஆர்.பாலு
சமாதனத்துக்கு வெள்ளை துண்டு என்று நினைக்கிறேன்! பாடரில் கலைஞர், சாரி மஞ்சள்
Posted by IdlyVadai at 9/23/2011 08:41:00 PM 10 comments Links to this post
Labels: செய்தி
Thursday, September 22, 2011
சிதம்பர ரகசியம்
எல்லாம், எல்லாருக்கும் தெரியும்! என்ன ஏதேனும் பகவத் கீதை வ்யாக்யானம் போல் தெரிகிறதா? இல்லை, ஸ்பெக்ட்ரம் ராசா, இப்பிரச்சனையில் சிக்கிய நாள் முதலாகக் கதறும் மூன்று வார்த்தைகள் இவை. இதன் அர்த்தம் சமீபமாக இரண்டு நாட்களாகத்தான் முழுமையாக வெளி வரத் துவங்கியுள்ளன. இம்முறை சிக்குபவர் முன்னாள் நிதியமைச்சரும், இந்நாள் உள்துறை அமைச்சருமான, சிவகங்கைச் சீமான், ப.சிதம்பரம்.
நமத்துப் போன பட்டாசு திடீரென பெரும் சத்தத்துடன் வெடிப்பது போல இப்பிரச்சினை வெடித்துள்ளது. கடந்த மார்ச் மாதம், நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு எழுதியுள்ள பதிநான்கு பக்கக் கடிதத்தில், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் நினைத்திருந்தால், இரண்டாம் அலைக்கற்றை ஊழல் நடைபெறாமல் தடுத்திருக்க முடியும் என்று எழுதியிருக்கிறது, எழுதியவர் ஒரு மூத்த அதிகாரி; இக்கடிதம் தற்போதைய நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகுதான் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். அதாவது ப்ரணாப் எழுத சொல்லி அதிகாரி எழுதினார் என்று கூட வைத்துக்கொள்ளலாம்.
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் ஸ்வாமி, உச்சநீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதாவது, 2G அலைக்கற்றை விவகாரத்தில் விலை நிர்ணயம் செய்வது தொடர்பான பிரச்சனையில், ராசா, மற்றும் சிதம்பரம் ஆகிய இருவரும் சேர்ந்தே செயல்பட்டுள்ளனர். விலை நிர்ணயம் ராசாவால் மட்டும் தனித்து எடுக்கப்படட் முடிவு அல்ல, எனவே சிதம்பரத்தையும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும் என்பதே சாமியின் மனுவினுடைய நோக்கம்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு இதனைக் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், இது உச்ச நீதிமன்றத்தின் வரையறைக்குள்ளேயே வராது, ஆதலால் இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று ஒரு போடு போட்டது. தவிர, சாமி இதே போன்றதொரு மனுவை கீழ் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்துள்ள படியால், இவ்விஷயம் முற்றிலும் சிபிஐயின் சிறப்பு நீதிமன்றத்தாலேயே முடிவெடுக்கப் பட வேண்டிய ஒன்று; இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்பது சிபிஐ தரப்பு வாதம். மத்திய அரசின் அணுகு முறையும் அதுவே.
சாமியின் வாதப்படி, கீழ் நீதிமன்றத்தில் தாம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கும், தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கும் மனுவிற்கும் யாதொரு தொடர்பும் அல்ல; கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2G அலைக்கற்றை வழக்கில் சிதம்பரத்தையும் ஒரு கூட்டு சதியாளராகச் சேர்க்க வேண்டும் என்றே கோரியுள்ளேன், அவர் மீது சிபிஐ விசாரணை கோரவில்லை. அதனால் அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று வாதாடினார். எதிர்பார்த்தவாரே, உச்ச நீதிமன்றம் சிபிஐ யின் வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் கீழ் நீதிமன்றத்தில், தாம் தாக்கல் செய்துள்ள மனுவிற்கு வலு சேர்க்கும் விதமாக ஸ்வாமி, மார்ச் மாதத்தில் நிதியமைச்சகத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒரு கடிதப் போக்குவரத்தைத் தாக்கல் செய்தார். அதுதான் மேற்கூறிய கடிதம். இக்கடிதம் பற்றி சிதம்பரம் கருத்தேதும் தெரிவிக்க மறுத்து விட்டார். ப்ரணாப் நேரடியாக கருத்தேதும் தெரிவிக்காவிடினும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகத்தான் அக்குறிப்ப்ட்ட கடிதம் வெளியாகியுள்ளது: ஊழல்வாதிகளைத் தோலுரிக்க இச்சட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று அர்த்தம் தொனிக்கும்படியாக ஒரு கருத்தைப் ப்ரணாப் வெளியுட்டுள்ளது இன்னமும் வேடிக்கை. சில மாதங்களுக்கு முன்னர் நிதியமைச்சகத்தை, உள்துறை அமைச்சகம் கண்காணிப்புக் கேமராக்கள் வாயிலாக வேவு பார்க்கிறது என்ற பிரச்சனை வெடித்தது. அதன்பிறகு பிரணாப் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று மறுத்த பிறகு அமுங்கிப் போனது. இப்போது அது எதற்காக என்பது தெளிவாகிறது. ப்ரணாப் - சிதம்பரம் இடையிலான இதுகாறும் இருந்த பனிப் போர், இப்போது முற்றி சந்தைக்கு வந்து விட்டது என்றே கொள்ளலாம்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்; இங்கு கூத்தாடி யாரென்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. சந்தேகமே இல்லாமல் திமுகதான். ஏற்கனவே திமுகவின் ராசாவும், கனிமொழியும் இவ்விவகாரத்தால் சிறையிலிருக்கும் நிலையில், மூன்றாவதாக தயாநிதி மாறன் பதவியிழந்தார். இந்நிலையில் திமுக தரப்பு சிதம்பரத்திற்கெதிரான இக்கடிதத்தை, ராசாவிற்கும், கனிமொழிக்கும் சாதகமாக எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என யோசிக்கத் துவங்கியிருக்கிறது. அதாவது சிதம்பரத்தின் அனுமதியுடன்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனை செய்யப்பட்டுள்ளது; இதில் ராசாவின் தவறு ஏதுமில்லை என்று நீதிமன்றத்தில் ராசாவின் சார்பாக வாதாட இது வழி வகுக்கும். ஆனால் கனிமொழிக்கு இது எவ்வகையில் உதவுமென்பது தெரியவில்லை. கலைஞர் டிவிக்கு 216 கோடி ரூபாய் லஞ்சப்பணம் வந்த வழக்கில்தான் கனிமொழி முக்கியக் குற்றவாளி. அது ஸ்வான் டெலிகாம் மூலமாகப் பெறப்பட்ட பணம்; ஸ்வான் டெலிகாம் 2G ஒதுக்கீட்டின் மூலம் லாபமடைந்த நிறுவனங்களில் ஒன்று. சிதம்பரம் மீதான இந்தக் கடிதம், அதற்குத் தொடர்பில்லாத கனிமொழி விவகாரத்தில் எப்படி உதவ முடியும் என்பது போகப் போகத்தான் தெரியும்.
பிரதமரையும், சிதம்பரத்தையும் நீதிமன்றத்திற்கு சாட்சியாக அழைப்பேன் என்று சில வாரங்கள் முன்பு ராசா நீதிமன்றத்தில் முழங்கியது; 2G வழக்கில் தயாநிதி மாறன் பெயர் இடம் பெறக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிற மூன்றாவது குற்றப் பத்திரிக்கை தாக்கலாவதில் ஏற்படுகிற தாமதம்; ஏர்செல் சிவசங்கரன் விவகாரத்தில் சிபிஐ தாம் முன்பு கோர்ட்டில் கூறியதற்கு முற்றிலும் மாறாக தயாநிதி மாறனுக்கு நற்சான்றிதழ் வழங்கியது போன்றவை அனைத்திற்கும் முழுமுதற் காரணம் ஏன் என்ற கேள்விக்கு இந்த நிதியமைச்சகத்தின் கடிதப் பரிமாற்றம்தான் பதிலாக இருக்க முடியும். அதனால்தான் சிதம்பரத்தைக் காப்பாற்ற மத்திய சர்க்காரும், சிபிஐயும் இவ்வளவு மெனக்கெடுகின்றன. சிதம்பரம் சிக்கினால், வேறொருவரும் சிக்குவார் என்பதே அதற்குக் காரணம்!
ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதென தி.மு.க., காங்கிரஸ் எடுத்துள்ள முடிவுக்கு பிறகும், திருச்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஆதரிக்குமா என்று கலைஞரிடம் கேட்டதற்கு "எனக்கு தெரியாது" என்ற கலைஞர் பதில் எல்லாம் வைத்து பார்க்கும் போது 2G வழக்கில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்.
Closed Chapter என்று சிதம்பரம் எழுதிய கடித்தை பார்த்தும் கண்டுக்கொள்ளாமல், மன்மோகன் சிங் எப்படி பிரதமராக நிடிக்கிறார் என்பது பெரிய ஆச்சரியம்.
சிபிஐக்கு முன்பு இருந்த வேகம் இப்போது குறைந்துவிட்டது. இன்னும் கொஞ்ச நாளில் ராசாவும் க்வாட்ரோச்சி போல அன்னையின் ஆசியுடன் வெளியே வந்துவிடுவார் என்று தோன்றுகிறது. அவர் ஜெயிலில் இருந்த நாட்களுக்கு அவருக்கு நஷ்ட ஈடாக அரசு பணம் கொடுத்தாலும் ஆச்சரியப்பட கூடாது.
Posted by IdlyVadai at 9/22/2011 04:55:00 PM 16 comments Links to this post
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
ஏர்டெல் சூப்பர் சிங்கர் - 3 யாரு ?
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்-3 நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று வரும் செப்.23ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. இதை நேரடி நிகழ்ச்சியாகவும் ஒளிப்ரப்ப விஜய் டிவி முடிவு செய்துள்ளது. சத்யபிரகாஷ், பூஜா, சாய்சரன், சந்தோஷ் ஆகிய நான்கு பேரும் இறுதிச்சுற்றில் மோத இருக்கிறார்கள்.
உங்கள் ஓட்டு யாருக்கு அல்லது யார் சூப்பர் சிங்கர் என்ற பட்டத்தை வெல்ல போகிறார்கள் ?
சைடில் ஓட்டு பெட்டி !
எனக்கு தெரிந்து ஏர்டெல் சூப்பர் சிங்கர் - திவ்யா தான் :-)
Posted by IdlyVadai at 9/22/2011 11:53:00 AM 12 comments Links to this post
Labels: டிவி்
Tuesday, September 20, 2011
குல்லா போட மறுத்த மோடி
மோடி உண்ணாவிரத பந்தலில் இஸ்லாமிய மக்கள் வந்ததை பெரிய நியூஸாக போட காங்கிரஸுக்கும் ராகுலுக்கும் கொஞ்சம் பயம் வந்துவிட்டது என்பது உண்மை. ராகுல் குடிசைகளுக்கு போய் டீ குடித்தது வீணாகிவிடுமோ என்று பயப்படுகிறார்கள்.
நேற்று சொல்லி வைத்தது போல் குஜராத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த தர்கா ஒன்றின் இஸ்லாமிய மத குருவான செய்யத் இமாம் என்பவர் நேற்று உண்ணாவிரத மேடையில் ஏறினார். தமது ஆதரவாளர்களுடன் சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இஸ்லாமியர்கள் தலையில் அணியும் "குல்லா" ஒன்றை அவரிடம் அளித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த மோடி, தாம் அதை அணிய மாட்டேன் என்றும், அதற்கு பதிலாக சால்வை ஒன்றை அணிவிக்குமாறும் கேட்டார்.அதன்படியே அவரும் சால்வையை அளிக்க,அதனை மோடி பெற்றுக்கொண்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் கூறிய இமாம் "குல்லாவை மோடி ஏற்க மறுத்தது எனக்கு அவமானமல்ல; அது இஸ்லாத்திற்குதான் அவமானம்!"
இது எப்படி இஸ்லாத்துக்கு அவமானம் ? முஸ்லீம்கள் குல்லா அணிவது அவர்கள் மத சம்பந்தப்பட்டது. தமிழகத்தில் குல்லா அணிந்து கஞ்சி குடித்து நியூஸ் பேப்பருக்கு போஸ் கொடுக்கும் திராவிட மதசார்பற்ற போர்வையை போர்த்திக்கொள்ளும் நடிகர்களை பார்க்கலாம். இதே குல்லா வழங்கிய நபருக்கு யாராவது திருநீர் அல்லது குங்குமம் கொடுத்தால் அணிந்துக்கொள்ளுவாரா ? அப்படி மறுத்தால் அது மதசார்பின்மை ஆகிவிடுமா ? மோடி மறுத்ததை ஏதோ தீவிரவாதிகள் குண்டு வைத்து நாசம் செய்ததை காட்டிலும் பெரிய குற்றம் போல மீடியாக்கள் செய்தி போடுவதில் உள்நோக்கம் உள்ளது. அவர்களுக்கு ராகுல் காந்தி தான் பிரதமாராக வர வேண்டும் என்று விருப்பம்.
ஜின்னா ஒரு மதசார்பற்ற தலைவர் என்று பிதற்ற மோடி ஒன்றும் அத்வானி இல்லை. இஸ்லாத்தின் அடையாளமான குல்லாவை மறுத்து மத அடையாளம் இல்லத சால்வையை பெற்றக் கொண்ட மோடியின் செயலை இட்லிவடை பாராட்டுகிறது.
Posted by IdlyVadai at 9/20/2011 12:58:00 PM 44 comments Links to this post
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Saturday, September 17, 2011
மோடி அடுத்த பிரதமர் ?
குஜ்ராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று காங்கிரஸ் கூறினாலும், அவர்களுக்கு இவர் எங்கே அடுத்த பிரதமாராக வந்துவிடுவாரோ என்ற பயம் இருக்கிறது.
மோடி இந்தியாவின் பிரதமராக வருவதை நீங்கள் ஏற்கிறீர்களா ? ஓட்டு பெட்டி வழக்கம் போல சைடில்...
Posted by IdlyVadai at 9/17/2011 02:55:00 PM 26 comments Links to this post
Labels: செய்தி
Wednesday, September 07, 2011
எனக்கு மாமனாராகவும் இருந்த க.நா.சு. - பாரதி மணி
ஐம்பதுகளில் நான் கல்கண்டு, கண்ணன், ஜில்ஜில், அணில் போன்ற சிறுவர் பத்திரிகைகள் படித்துக்கொண்டிருந்தபோது, எங்களூர் பார்வதிபுரத்தில் நடராஜன் என்ற அறிவுஜீவி -- ஹிந்தியில் Ghar Jamai என்று அறியப்படும், பணக்கார மாமனாருக்கு ‘வாழ்க்கைப்பட்ட’ வீட்டோடு மாப்பிள்ளையாக -- இருந்தார். ஊரே அவரை ‘மாப்பிள்ளை’யென்று தான் கூப்பிடும். எங்களுக்கு அவர் ‘மாப்ளை மாமா’. எதைப்பற்றியும் விரிவாக, மிகவும் சுவாரசியமாக, பேசத்தெரிந்தவர். அவருக்கு தேவையெல்லாம் லீவுநாட்களில் எங்களைப்போன்ற பதின்மவயது ‘ஆடியன்ஸ்’ தான். மணிக்கணக்கில் வாயைப்பிளந்து கேட்டுக்கொண்டிருப்போம். பலநாட்கள் என் அம்மா திண்ணைக்கு வந்து, அவரிடம் ‘ஓய்! மணி ரெண்டாகப்போறது. இன்னும் குளிக்காமெ, சாப்பிடாமெ, உம்ம பேச்சைக்கேட்டுண்டு ஒக்காந்திருக்கான். எல்லாம் ஆறிப்போயாச்சு. அப்பறமா சாப்டுட்டு பேசலாமே!’ என்று எங்கள் ‘இலக்கிய விசாரத்துக்கு’ ஒரு முற்றுப்புள்ளி வைப்பாள்! நான் தில்லி வந்து, பிறகு லீவில் ஊருக்குப்போயிருந்தபோது, தில்லியில் நான் கேட்ட படே குலாம் அலிகான், பேகம் அக்தர் இசை பற்றியும், பால சரஸ்வதி அபிநயம் குறித்தும் நான் சொல்ல, அவர் கேட்டுக்கொண்டிருப்பார். அவரிடம் தான் முதன்முதலாக சாணிப்பேப்பரில் அச்சிடப்பட்ட எழுத்து பத்திரிகையைப்பார்த்தேன். பழைய பிரதிகளை பைண்ட் போட்டு வைத்திருப்பார். தான் ஒரு வரி கூட எழுதாமல், நல்ல எழுத்தை ரசிக்கத்தெரிந்த ‘இலக்கியவாதி’! இளவயதிலேயே நல்ல எழுத்தை இனம் கண்டு, தேடித்தேடி வாசிக்கும் பழக்கத்தை எனக்குள் வித்திட்ட ஆசான். விகடன், கல்கி கதைகளைப்படிக்கும் என்னிடம், கிருஷ்ணன் நம்பியின் கதை வந்திருக்கும் சரஸ்வதி யைக்கொடுத்து படிக்கச்சொல்லுவார். பாவம்…..அறுபது வருடங்கள் கழித்து எழுத ஆரம்பித்த ஒரு ‘நல்ல எழுத்தாளரை’ப் படிக்காமலே போய்விட்டார்!
எந்த பிரபல எழுத்தாளர்கள் நாகர்கோவிலுக்கு / கன்யாகுமரிக்கு வந்தாலும், நடராஜனுக்கு தகவல் வந்துவிடும். அவருடன் நான் போய் சந்தித்த மூத்த எழுத்தாளர்கள் அனேகம். எனக்கு அவர்களைப்பார்க்க தணியாத ஆவல் இருந்ததோ இல்லையோ, பார்வதிபுரத்திலிருந்து தெற்கு ரோடு -– இப்போது காலச்சுவடு விலாசமிருக்கும் K.P. Road –- வழியாக நடந்துபோகும்போது, பேச்சுத்துணைக்காகவாவது என்னையும் வற்புறுத்தி இழுத்துக்கொண்டு போய்விடுவார். அவர் மூலமாகத்தான் ‘மணிமேடை சுதர்ஸன் ஸ்டோர்ஸ் சுந்தரமையர் பையன் நம்ம வேப்பமூடு ஜங்ஷனை வெச்சு ஒரு நாவல் எழுதியிருக்கான்’ என்று ஒரு புளியமரத்தின் கதை கையெழுத்துப்பிரதியைப் படித்துப்பார்த்தேன். பிறகுதான் அது சரஸ்வதியில் தொடராக வந்தது. நாஞ்சில்நாட்டு எழுத்தாளர்களிடம் அவருக்கு தனிப்பிரியம். கிருஷ்ணன் நம்பிக்கும், சு.ரா.வுக்கும் நெருங்கிய நண்பர்.
ஒருநாள் மாலை என்னிடம் ‘நாறோலுக்கு’ வரியா? க.நா.சு. வந்திருக்காராம். சென்ட்ரல் லாட்ஜிலே தங்கியிருக்கார். பாத்துட்டு வருவோம்’ என்றார். ’வரியா?’ என்பதெல்லாம் ஒரு மரியாதைக்குத்தான். எப்படியும் இழுத்துக்கொண்டு போய்விடுவார். எனக்கு அப்போது தன் இனிஷியலை K.N.S. என்று ஆங்கிலத்தில் சுருக்காமல், தமிழில் க.நா.சு. என்று வைத்துக்கொண்டிருப்பவரை பார்த்துவிட்டு வரலாமேயென்று தோன்றியது. லாட்ஜில் சின்ன அறையில் நம்பியும், சு.ரா.வும் அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள். சட்டையில்லாத, பூணூல் இல்லாத உடம்பு, இன்னும் மறையாத அம்மைத்தழும்பு, பூ விழுந்த கண், சீப்பையே கண்டிராத தலை. பிற்காலத்தில் தன் ஒரே மகளை எனக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்போகும் மனிதரை நான் முதன்முதலில் சந்தித்தேன். ஆனால் தன் ’வருங்கால மாப்பிள்ளை’க்கான எந்த மரியாதையையும் எனக்குத்தரவில்லை! படுக்கையின் ஒரு மூலையில் நானும் ஒண்டி உட்கார்ந்து, பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பேச்சு நடுவில், ‘காப்பி சாப்பிடலாமே…….. கோல்டன் லாட்ஜில சொல்லுவோம். கிச்சாமணி குண்டுப்போத்தி ஹோட்டல்லேருந்து ரசவடை வாங்கிண்டு வருவன்.’ என்று நடராஜன் சொல்ல, ராமசாமி கொடுத்த பத்து ரூபாய் நோட்டுடன் கீழே வந்தேன். ‘கெட்டிச்சட்னி நெறைய வைக்கச்சொல்லுங்க’ என்று க.நா.சு சொன்னதும், மணிமேடையிலிருந்து ரெண்டணா வாடகை சைக்கிள் எடுத்து வடசேரி இறக்கத்துக்குப்போனதும் நினைவிருக்கிறது.
நான் தில்லி போனபிறகு, அறுபதுகளின் இறுதியில் க.நா.சு. சென்னையிலிருந்து தில்லி வந்துவிட்டதாக அறிந்தேன். அவ்வப்போது ரஃபி மார்க் I.E.N.S. ஹாலில் கஸ்தூரி ரங்கன் நடத்தும் கணையாழி மாதாந்திரக் கூட்டங்களிலும், கர்ஸன் ரோடு மலையாளி மெஸ்ஸிலும், நான் மெம்பராக இருந்த தில்லி ஃபிலிம் ஸொசைட்டி திரையிடல்களிலும் அவரைப்பார்த்திருக்கிறேன். சர்வதேச திரைப்படவிழாவில் நான் போகும் நாலு தியேட்டர்களில் ஒரு தியேட்டருக்கு மகளுடன் வந்திருப்பார். ஒரு வணக்கத்தோடு சரி. என்னை சுத்தமாக மறந்திருந்த அவரிடம், ‘நிறைய கெட்டிச்சட்னியோடு ரசவடை வாங்கித்தந்தேனே!’யென்று பழங்கதையால் துன்புறுத்தியதில்லை. பிறகு முளைத்த UNI கான்டீனுக்கும் அடிக்கடி வருவார். அவர் தோற்றமோ என்னவோ இணக்கமாக பேசத்தோன்றவில்லை.
1970-ல் என் வற்புறுத்தலுக்காக இ.பா. மழை நாடகம் எழுதியதும், அதில் கதாநாயகியாக நடித்த ஜமுனாவுக்கு, எனக்கே தெரியாமல் என்மேல் ’பற்று’ ஏற்பட்டதையும் சொல்லியிருக்கிறேன். மாமிகளின் மத்தியில் எப்போதும் எனக்கு ஒரு நல்ல பெயர் உண்டு. ‘மணிக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பாக்கணும். ஆண் காரியம் பெண் காரியம் தெரிந்த சூட்டிகை. கைநிறைய சம்பளம் வாங்கறான். எந்த மகராஜிக்கு குடுத்து வச்சிருக்கோ?’ என்று பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். இ.பா.வின் மாமியார் மூலமாக எனக்கு வேறு இடத்தில் பெண் பார்ப்பதை அறிந்து, மகள் தந்தையிடம் தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அடுத்தநாள் காலை க.நா.சு. நான் அப்போது வேலை பார்த்த பிர்லா ஆபீசுக்கு வந்து என்னிடம் பேசினார். அப்போது தான் எனக்கே அந்த எண்ணம் இருந்ததை உணரமுடிந்தது. என் அக்காவிடம் க.நா.சு. வந்த விஷயத்தை சொன்னபோது, ‘ஆமாண்டா… ரொம்ப நல்ல பொண்ணு….நமக்கு ஏன் இந்த ஐடியா முன்னாடி தோணலே?’ என்று என் திருமணத்துக்கு முதல் அட்சதை போட்டார். காதல் திருமணங்களில் ஏற்படும் எந்த பிரச்னையும் இல்லாமல் இரு குடும்பத்தினரின் ஒத்த கருத்தோடு ஜமுனாவின் கைத்தலம் பற்றினேன்.. திருமணம் ஒரு கனமழைநாளில், போட்ட பெரிய பந்தலெல்லாம் தண்ணீரில் முழுகி, அங்கிருந்த ஒரு நாடக மேடையில் இனிதே நடந்தேறியது. எனக்கு நாடகமே உலகம் அல்லவா! இ.பா.வின் மழை நாடகத்தில் தொடங்கிய காதல், அவரது இரண்டாவது படைப்பான போர்வை போர்த்திய உடல்கள் நாடகத்தில் நடிக்கும்போது கல்யாணத்தில் முடிந்தது. திருமணத்தன்று, தாரை வார்த்து கொடுக்குமுன் நடக்கும் விரதத்தின்போது க.நா.சு. பூணூல் அணிந்திருந்தார். பலவருடங்கள் கழித்து, அவரிடம் ‘உங்களுக்கு நம்பிக்கையில்லாத விஷயத்தை ஏன் செய்தீர்கள்?’ என்று கேட்டதற்கு, ‘உங்கள் வீட்டாருக்கு அதில் நம்பிக்கையிருந்தது. அந்த நல்ல நாளில் அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை!’யென்று பதிலளித்தார். தில்லியில் நடந்த என் திருமண நாளன்று, பார்வதிபுரத்தில் முதல் பாராவில் குறிப்பிட்டிருந்த நடராஜன் தன் வீட்டில் ஒரு விருந்தே ஏற்பாடு செய்திருந்தாராம். அவருக்குப்பிடித்த எழுத்தாளர் க.நா.சு.வின் மகளை நம்ம ஊர் கிச்சாமணி கல்யாணம் செய்துகொள்கிறான் என்றால் சும்மாவா?
என் திருமணத்திற்குப்பிறகு, தனியாகப்போக நினைத்த அவரை வற்புறுத்தி என்னோடு இருக்கும்படி சொன்னேன். ஒருவரையொருவர் புரிந்து கொண்டதால், பத்துவருடங்களுக்கும் மேலாக ஒரே கூரையின் கீழ் எந்த உரசலுமில்லாமல், மற்றவர் கருத்துக்கு மரியாதையோடு இருக்கமுடிந்தது. அடுத்தநாளைப் பற்றிய கவலையே இல்லாதவர். எனக்கு அவரிடமிருந்த ஒரே வருத்தம் பத்திரிகைகளுக்கு எழுதி, வரும் பணத்தை இருக்கும்போது தாராளமாக ஹோட்டலுக்கு செலவழித்துவிட்டு, பணம் இல்லாத நாளில், ‘ராஜி! போஸ்ட்மேன் வந்தாரா?’ என்று மணியார்டருக்கு காத்திருப்பது தான். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் சமைக்கும் சமையலை ரசித்து, சப்புக்கொட்டி சாப்பிடுவார். சும்மா சொல்லக்கூடாது….. நான் நன்றாகவே சமைப்பேன். என் அம்மாவின் சீடன். என் நண்பர்கள் வட்டத்தில் நான் செய்யும் மொருமொருவேன்றிருக்கும் மசால் வடையும் தூள் பக்கோடாவும் பிரசித்தம். அவை தான் மாலைவேளைகளில் எனது ‘சோமபான’ விருந்துகளுக்கு ஸைட் டிஷ்! (சிறு வயதிலிருந்தே நான் ஒரு மசால்வடைப்ரியன். ‘சுண்டெலியா பொறந்திருக்க வேண்டியவன்டா நீ’ என்று அலுத்துக்கொண்டே, என் அம்மா எண்ணெய்ச்சட்டியை வைப்பாள்!) க.நா.சு. பத்து வடைகள் சாப்பிட்டபின்னும், ‘ராஜி! மணி பண்ணின வடை இருக்கா? இருந்தா….இன்னும் ரெண்டு கொண்டுவாயேன்!’ என்று கேட்டு வாங்கிச்சாப்பிடுவார். என் எழுத்தைப் பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷம் அப்போது வரும். என் குழந்தைகளுக்கு பிரியமான தாத்தா. என் குழந்தைகளுக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் செய்தவர். மாலை நேரங்களில் ஒருநாள் கூட நண்பர்களுடன் ‘Bar’ திறந்திருக்கும் என் ‘தாகசாந்தி கேந்திர’த்துக்கு அவர் வந்ததேயில்லை. வருடாவருடம் டிசம்பர் 31 இரவு நடக்கும் புத்தாண்டு பார்ட்டியில் ஒரு பெக் ’ராயல் ஸல்யூட்’ ஊற்றி அவர் ரூமுக்குச்சென்று, அவரை வற்புறுத்தி குடிக்கச்சொல்லுவேன். மரியாதை நிமித்தம் அதை வாங்கி வைத்துக்கொள்வார். அடுத்தநாள் காலையில் அது அப்படியே இருக்கும்!
தம்பதி சமேதராக நாங்கள் எப்போது தமிழ்நாட்டுக்கு வந்தாலும், வருமுன் ‘மெட்ராசிலே செல்லப்பா, முத்துசாமியைப்பாருங்கோ. சிதம்பரத்துக்குப்போனா மெளனியைப்பாத்துட்டு வாங்கோ. உங்க ஊருக்குப்போனா நம்பியையும், சுந்தரராமசாமியையும், திருவனந்தபுரத்தில் டி.கே. துரைசாமியையும் ஒரு நடை பாத்துட்டுவாங்கோ’ என்று அவர் சொல்ல மறப்பதேயில்லை.
சென்னையில் க.நா.சு. நடத்திய இலக்கியவட்டம், ராமபாணம், சந்திரோதயம், சூறாவளி க்குப்பிறகு, தில்லிக்கு வந்தபின்னும் அவருக்கு இலக்கியப்பத்திரிகை நடத்தும் ஆவல் தணியவில்லை. சமயம் நேரும்போதெல்லாம், என் மாமியார் ராஜி, ‘எங்காத்திலெ ஒட்டியாணம், வங்கி, காசுமாலை, புல்லாக்கு உட்பட ரெண்டு தடவை செட் நகை பண்ணிப்போட்டா. எல்லாத்தையும் பத்திரிகை நடத்தி சூறாவளி பண்ணிட்டார்’ என்று புலம்புவார். தில்லியில் Lipi Literary Syndicate என்ற அமைப்பைத்தொடங்கினார். இந்தத்தடவை நிறுத்தாமல் தொடர்ந்து Lipi லிபி என்ற ஆங்கில இலக்கியப்பத்திரிகை நடத்தவேண்டுமென்று விரும்பினார். அப்போது நான் HDPE Woven Sacks தயாரிப்பாளர்களின் அகில இந்திய சங்கத்துக்கு தில்லியில் பிரதிநிதியாக இருந்தேன். எழுபதுகளில் உரத்தட்டுப்பாடிருந்தது. துறைமுகங்களில் வெளிநாட்டிலிருந்து வந்திறங்கும் Bulk Urea/DAP/MOP உரங்களுக்கு 15 கோடி காலி சாக்குமூட்டைகள் தேவைப்பட்டன. இந்திய அரசின் விவசாயத்துறையிடம் அந்த பெரிய ஆர்டரை வாங்கிக்கொடுத்து, அதை சரியாக நிறைவேற்றும் பொறுப்பு என்னுடையது. அவர்களை சும்மா விடலாமா? வசதியுள்ள 70 அங்கத்தினர்/தொழிலதிபர்களிடம் Lipi Literary Syndicate-க்கு விளம்பரத்திற்காக, தலா ஆயிரம் ரூபாய்க்கு அவர்கள் தலையில் கை வைத்தேன். இதற்கெல்லாம் C.A.G. Report / Lok Ayukta Report வராது! என்னிடம் அவர்களுக்கு காரியம் ஆகவேண்டியிருந்ததால், க.நா.சு.வுக்கு ரூ.70,000 வந்தது. அப்போது இது ஒரு நல்ல தொகை. அந்தப்பணம் தீரும் வரை லிபி நான்கு இதழ்கள் வெளிவந்தன! அவரது ஆசையும் தீர்ந்தது!
உங்களில் பலருக்குத்தெரியாத விஷயம் சரண்சிங் சிலமாதங்களுக்கு இந்தியப்பிரதமராக இருந்தபோது, அவர் நடத்தி வந்த Rural India என்ற பத்திரிகைக்கு க.நா.சு.வை ஆசிரியராக இருக்கும்படி வேண்டிக்கொண்டார். தினமும் வீட்டுக்கு கார் வந்து அழைத்துப்போகும். அந்தக்கட்சியிலிருந்த எம்.பி., ராம் விலாஸ் பாஸ்வானிடம் ஏற்பட்ட கருத்துவேற்றுமையால், இரண்டே மாதத்தில் கால் கடுதாசி கொடுத்துவிட்டார். சரண்சிங் எத்தனையோ வற்புறுத்தியும், போகவேயில்லை.
1982 வாக்கில் மைசூரில் யூ.ஆர். அனந்தமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த இந்திய எழுத்தாளர் பட்டறை முடிந்தபின் இருமாதங்கள் சென்னையில் இருந்துவிட்டு வருகிறேனென்று தில்லியிலிருந்து புறப்பட்டார். பல வருடங்களாக மறுபதிப்பு வராமலிருந்த அவரது எல்லா மொழிபெயர்ப்புகளும், படைப்புகளும் அப்போது புற்றீசல் போல புது பதிப்புகள் வர ஆரம்பித்தன. க.நா.சு.வின் பெயரைக்கூட கேள்விப்பட்டிராத இளம் தலைமுறையினர் அவரைப்படிக்கத்தொடங்கினர். ‘தமிழ்நாட்டிலே புதுசா என்னை கவனிக்க ஆரம்பிச்சுருக்கா. குங்குமத்திலும், துக்ளக்கிலும் தொடர்ந்து எழுதச்சொல்றா. சந்தோஷமா இருக்கு. கொஞ்சநாள் சென்னையிலெ இருக்கேன்’ என்று இன்லாண்ட் கடிதமெழுதிவிட்டு, என் ’சித்தன் போக்கு சிவன் போக்கு’ மாமனார் மைலாப்பூர் TSV கோவில் தெருவில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்தார். குங்குமம் பத்திரிகையில் அவர் எழுதிய ‘க.நா.சு. பக்கத்தில்’ கருணாநிதிக்கெதிரான விமர்சனங்களையும் பதிவுசெய்ய முரசொலி மாறன் அனுமதித்திருந்தார். சொந்த மகளுக்கும் மேலாக சென்னையில் எல்லா உதவிகளையும் செய்ய, லதா ராமகிருஷ்ணன், மற்றும் மஹாதேவன் போன்றோர் பக்கத்தில் இருந்தனர். இரண்டு மாதம் சென்னை வாசம் என்பது நான்கு வருடங்கள் நீடித்தது. க.நா.சு வாழ்க்கையில் அவை மகிழ்ச்சிகரமானவை. ஒரு பிரபல வார இதழின் நிருபர் இடக்காக ‘ரொம்பநாள் கழிச்சு சென்னைக்கு ஏன் வந்திருக்கீங்க? என்று கேட்டதற்கு, ‘கடைசிக்காலத்திலே இங்கே சாகலாம்னு வந்திருக்கேன்!’ என்று பதிலளித்தாராம். இந்த வார்த்தையை அவர் காப்பாற்றவில்லை. 1988-ல் தன் கடைசி நாட்களைக்கழிக்க அவருக்குப்பிடித்த தில்லியில் என் வீட்டுக்கு வந்துவிட்டார். இதைப்பற்றி விரிவாக இன்னொரு கட்டுரையில் எழுதியிருக்கிறேன்.
எண்பதுகளில் ஒரு தடவை நாகர்கோவில் போனபோது, பார்வதிபுரத்திலிருந்த என் அம்மாவைப் பார்க்க சுந்தர ராமசாமியுடன் போயிருந்தார். ‘அன்னிக்கு உங்காத்திலெ சாப்பிட்ட பூப்போல, வாயில் கரையும் இட்லியும், சாம்பாரும், அந்த தேங்காய் சட்னியும் போல நான் வேற எங்கெயும் சாப்பிட்டதில்லே. நானும் பல இடங்களில் கை நனைத்தவன்’ என்று பலநாள் சொல்லிக்கொண்டிருந்தார். ஆம்… என் தாயின் இட்லியும் சட்னியும் உலகப்பிரசித்தம்! அதனால் தான் எனக்கு ‘முருகன் இட்லிக்கடை’யெல்லாம் சாதாரணமாகப்படுகிறது. எனக்கு நாக்கு நாலேகால் முழம். காளியாக்குடி அல்வாவில் தொடங்கி, எந்த ஊரிலும், சிற்றூரிலும் எந்தெந்த ஹோட்டல்களில் எதெது விசேஷம் என்பதற்கு அவர் ஒரு ரெடி ரெக்கனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல…… சிம்லாவில் எந்த மூலையில் ராத்திரி பத்து மணிக்கு மேல் சிறந்த ‘கடக் சாய்’, சமோஸா கிடைக்குமென்பது அவருக்கு அத்துப்படி.
2003-ல் தமிழக அரசு க.நா.சு.வின் படைப்புக்களை நாட்டுடமையாக்கி, அவரது வாரிசுகளுக்கு ரூ.3.00 லட்சம் கொடுப்பதாக அறிவித்தது. இதற்கு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் தலைவராக இருந்த டாக்டர். மா. ராஜேந்திரன் எடுத்துக்கொண்ட முயற்சி தான் முழுமுதற்காரணம். ஒரு மாதம் முன்பே, க.நா.சு.வின் பெயரை பரிந்துரைத்ததாகவும், அமைச்சர் விரைவில் அதை சட்டசபையில் அறிவிப்பாரென்றும் மா.ரா. தகவல் சொன்னார். அதற்கான அறிவிப்பு பத்திரிகைகளில் வந்த தினம், ஐந்தாறு பிரபல எழுத்தாளர்கள் என்னை தனித்தனியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாம் எடுத்த முயற்சியால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்ற ‘உண்மை’யை எனக்கு விளக்கமாக எடுத்துச்சொல்லி, கட்டாயமாக என் ‘நன்றி’யையும் பிடுங்கி வாங்கிக்கொண்டார்கள்! க.நா.சு.வின் மற்றொரு வாரிசான என் மனைவி, தனக்கு இதில் எந்தப்பங்கும் தேவையில்லையென்று எழுதிக்கொடுத்துவிட்டதால், மொத்தப்பணமும் க.நா.சு.வின் மனைவி ராஜிக்கே வழங்கப்பட்டது. அதே வருடம் நாட்டுடமையாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரின் பணத்துக்கு, சுமார் 25 வாரிசுகள் போட்டி போட்டதும், அதற்கான விழா நடந்த கோட்டை முதலமைச்சர் அலுவலகம் வந்தபிறகும், ஒரு ’வாரிசு’ இறந்த எழுத்தாளரை கடைசிக்காலத்தில் கவனித்துக்கொண்டதால், தனக்கு அதிகப்பங்கு வேண்டுமென்று ’தெருச்சண்டை’யாக்கியதும் பார்க்க வேடிக்கையாக இருந்தது. கடைசியில் ரூ. 3 லட்சத்தை 26 காசோலைகளாக பிரித்து பங்கு போட்டுக்கொண்டு, சந்தோஷமாக வீடு திரும்பினார்கள்!
தஞ்சாவூரில் பிறந்திருந்தாலும், க.நா.சு.வுக்கு கெட்ட வார்த்தைகள் பாடமாகவில்லை. அவர் திட்டி நான் கேட்டதேயில்லை. இ.பா.வும் அப்படித்தான். ஆனால் தி. ஜானகிராமன் இதிலும் வல்லவர்! சிலசமயம் க.நா.சு.வுடன் பேசிக்கொண்டிருக்கும் எழுத்தாள நண்பர் சக எழுத்தாளரை ‘பச்சைத்தெறியில்’ திட்டும்போது, இவர் நெளிவதை பலமுறை ரசித்திருக்கிறேன். ‘விடுய்யா’ என்று அவரை சமாதானப்படுத்துவார். தினமும் வெளியில் போய்விட்டு, வீடு திரும்பும்போது வாசலில் பேசியதற்கதிகமாக கேட்கும் தமிழ் தெரியாத ஆட்டோக்காரிடமும், என் குழந்தைகளை அவர் கண் முன்னால் அடிக்கும் என் மனைவியிடமும், அவரது அதிகபட்ச கோபத்தில் வரும் கெட்டவார்த்தை ‘Bloody Fool’ என்பது தான். வயதில் சின்னவர்களையும் அவர்கள் இல்லாதபோதும் கூட மரியாதையோடு தான் குறிப்பிடுவார். ’ராஜி! ஆதவன் வந்தாரா?’ பலதடவை அவரை மடக்கி, ‘எனக்கு ஒங்க மகன் வயசு தான் இருக்கும். ஏன் வாங்கோ….போங்கோனு படுத்தறீங்க!’ என்று கடிந்துகொண்டாலும் அவர் தன்னை மாற்றிக்கொண்டதில்லை.
எனக்கு அவரிடம் பிடித்த இன்னொரு விஷயம் அவரது அநாயாச மரணம். எல்லோருக்கும் அந்த பாக்யம் கிட்டுவதில்லை. லேசாக ஜுரம் என்று படுத்தவர் அடுத்தநாள் அதிகாலையில் சிரமப்படாமல், மற்றவர்களை சிரமப்படுத்தாமல் போய்விட்டார். எனக்கும் அதுபோல நடக்கவேண்டுமென்று தினமும் வேண்டிக்கொள்கிறேன். அவன் சித்தம் எப்படியோ?
-----ooooo00000ooooo-----
bharatimani@hotmail.com
காலச்சுவடு செப்டம்பர் 2011 க.நா.சு. நூற்றாண்டுவிழா மலரில் வெளிவந்தது.
- பாரதி மணி
படங்கள் 
என் திருமணத்தின்போது க.நா.சு. தம்பதியர்
சாகித்ய அகாதெமி விருதன்று, கமானி அரங்கில் கநாசு தன் பேத்தி, நா.பா., இ.பா.வுடன் நான் - 1986 
நாட்டுடமைக்கான காசோலையை முதலமைச்சர் ஜெயலலிதா திருமதி கநாசுவுக்கு வழங்குகிறார் - 2003
Posted by IdlyVadai at 9/07/2011 12:55:00 PM 18 comments Links to this post












