பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 19, 2011

ஊர் சுற்றிப் புராணம்! - ஞாநி

இந்த வார கல்கியில் ஞாநி எழுதிய இந்த கட்டுரை, நிச்சயம் எல்லோரும் படிக்க வேண்டிய கட்டுரை....

சென்ற வருடம் அமெரிக்காவுக்குச் சென்றபோது ஒவ்வொரு விமான நிலையத்திலும் என் பாஸ்போர்ட் பெயரில் இருக்கும் பூர்விக ஊர் பெயரை அதிகாரிகள் கஷ்டப்பட்டுப் படிக்கும்போதெல்லாம், அந்த ஊரை இதுவரை நான் பார்த்ததே இல்லையே என்ற வருத்தம் மேலெழுந்துகொண்டே இருந்தது. எங்கள் குடும்பத்தில் என் அப்பாவைத் தவிர வேறு யாரும் அந்த ஊரைப் பார்த்ததில்லை.

அண்மையில் புரிசை கிராமத்தில் நடந்த புரிசை கண்ணப்ப தம்பிரானின் நூற்றாண்டுக் கலைவிழாவில் எங்கள் பரீக்‌ஷா குழுவின் நாடகம் நடத்த அங்கே செல்லவேண்டியிருந்தபோது, பயண வசதிகளை முடிவு செய்வதற்காக கூகுள் மேப்களை அலசிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் புரிசையிலிருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் என் பூர்விக ஊர் நல்லூர் இருப்பதைக் கவனித்தேன். இரவு நாடகத்தை முடித்துவிட்டு, அதிகாலையில் நல்லூர் போகலாம் என்று முடிவு செய்தேன். எங்கள் நாடகம் முடியும்போது நள்ளிரவு ஒரு மணி. அந்த நேரத்திலும் சுமார் 100 பேர் நாடகம் பார்த்தார்கள். நாங்கள் சுமார் இரண்டு மணிக்கு புரிசை கிராமத்திலேயே ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கப் போனோம்.

நல்லூர் ஆற்காடு அருகே இருக்கும் கலவை என்ற சிறு நகரை ஒட்டிய கிராமம். நல்லூரை அடைந்ததும் எங்கே யாரிடம் என்ன சொல்லி எதை விசாரிப்பது என்று எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் அந்த ஊரில் எங்கள் குடும்பத்துக்கு நிலம், வீடு எதுவும் இல்லை. உறவினர்கள் யாரும் இல்லை. என்னிடம் இருந்த இரண்டு தகவல்களில் ஒன்றால் எந்தப் பயனும் இல்லை.

என் தாத்தா முனுசாமி அந்த ஊரின் முன்சீப்பாக இருந்தவர். அடுத்து என் அப்பாவும் அந்தப் பரம்பரை முன்சீப் வேலையை ஓரிரு வருடம் பார்த்துவிட்டு ஊரை விட்டு வந்துவிட்டார். அப்பா ஊரை விட்டு வந்த வருடம் 1927! இன்னொரு தகவல் அப்பாவின் பங்காளி சகோதர உறவினரான நல்லூர் சோமசுந்தரம் என்பவர், விடுதலைப் போராட்ட வீரர் என்பதாகும்.

முதலில் ஒரு வீட்டு வாசலில் கண்ணில் பட்டவரிடம் கேட்டேன். அவர் எல்லாத் தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருந்தார். அவர் பெயர் முனுசாமி! பஞ்சாயத்து அலுவலக ஊழியர். சோமசுந்தரத்தின் வீடு இன்னும் இருப்பதாகவும் அவரது குடும்ப வாரிசுகள், உறவினர்கள் பலர் ஊருடன் தொடர்பில் இருப்பதாகவும் சொன்னார். ஊரில் இருக்கும் பழைய சிவன் கோயிலை அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருப்பதாகவும் சொல்லி என்னை அந்த சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று காட்டினார். சோமசுந்தரத்தின் வீட்டையும் சுற்றிக் காட்டினார்.

கோயிலும் வீடும் என் ஆர்வத்துக்குரியன அல்ல. அந்த அக்ரஹாரத் தெருவின் முடிவில் மிகப் பெரிய மரம் ஒன்று. அதன் வயது சுமார் 200 வருடங்கள் என்றார்கள். அதுதான் சுவாரஸ்யமான கற்பனைகளைத் தூண்டியது. இருபது வயது வரை இங்கே இருந்த என் அப்பா, அந்த மரத்தின் கீழ் விளையாடியிருப்பாரா, நண்பர்களுடன் அரட்டை அடித்திருப்பாரா என்றெல்லாம் யோசித்தேன்.

இப்போது ஊரின் மக்கள்தொகை சுமார் இரண்டாயிரம். சரிபாதி காலனியில் தனியே வசிக்கும் தலித்துகள். அப்பா காலத்தில் இதில் சரிபாதிதான் மொத்த மக்கள்தொகையாக இருந்திருக்கலாம்.

ஊருக்குள் நுழைந்து பஞ்சாயத்து ஊழியரைச் சந்தித்தது முதல், ஊரை விட்டுத் திரும்பி கலவை, ஆற்காடு வழியே சென்னை வந்தபின்னரும் கூட, எனக்கு நிறைய செல்பேசி அழைப்புகள் வந்தபடி இருந்தன. எல்லாரும் நல்லூரிலிருந்து தொலைதூர மாநிலங்கள், வெளியூர்கள் சென்று குடியேறியவர்கள். பெரும்பாலோர் சிவன் கோயிலைப் பற்றியே என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பல நூறு வருடங்கள் முந்தைய பழைய கோயிலைப் புதுப்பித்துக் கட்டிய பெருமையும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு இருந்தது.

எனக்கு ஆர்வமில்லாத விஷயம் அது. என்னை இன்னமும் உறுத்தும் கேள்வி ஏன், தங்கள் சொந்த ஊரை விட்டு, தொழில் நிமித்தம் வெளியூர் சென்று வாழ்வோர் பலரும் (எல்லோரும் அல்ல), ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்போது, முதலில் கோயில் புனருத்தாரணத்தையே எண்ணுகிறார்கள் என்பதுதான். படிப்பு தான் அவர்களை உலகம் சுற்ற வைத்தது. அந்தப் படிப்புக்காக அடுத்த தலைமுறைக்கு ஏன் எதுவும் செய்யத் தோன்றுவதில்லை?

கலவை பகுதியில் ஆண்களை விடப் பெண்களே மக்கள் தொகையில் அதிகம். ஆனால் பெண்களின் எழுத்தறிவு 59 சதவிகிதம்தான். நல்லூர் கிராமத்தில் ஒரு நூலகத்தைப் பார்த்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஒவ்வொரு வேளையும் ஒரு உறவினர் வீட்டில் போய் சாப்பிட்டுப் படிக்க வேண்டிய வறுமையில் இருந்த என் அப்பாவையும் அடுத்து எங்களையும் வறுமையிலிருந்து விடுவித்தது படிப்புதான்.

சொந்த ஊர் என்பது சிலருக்கு நெகிழ்வான உணர்வுகளை எழுப்புகிறது. எனக்கும் செங்கற்பட்டு அப்படிப்பட்ட நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். எனக்கு அதுதான் சொந்த ஊர். ஆனால் ஒவ்வொரு முறை செங்கற்பட்டுக்குப் போகும்போதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவது பழைய நினைவுகள்தான். இப்போதைய ஊரைப் பார்க்கும்போது அதிர்ச்சியும் கோபமும் வருத்தமும்தான் வருகின்றன. ஊரே கடை வீதியாக மாறிவிட்டது. சாலைகள் எல்லாம் யுத்தம் நடந்த பூமி போல இருக்கின்றன.

நண்பர்களோடு மகிழ்ச்சியாகச் சென்று உலாவிய ரேடியோ மலை மர்ம தேசமாகி விட்டது. வேறு எந்த ஊரிலும் எனக்குத் தெரிந்து ஊருக்கு நடுவே சிறு குன்று கிடையாது. அதன் மீது ஒரு பூங்கா, நகராட்சியின் வானொலி எல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. அதனால்தான் ரேடியோ மலை என்று பெயர். அண்மை யில் சென்றபோது குன்றேறிப் பார்த்தேன். அங்கே இருந்த அச்சுறுத்தும் தோற்றத்தில் சிலர் முறைத்த முறைப்பில் திரும்பிவிட வேண்டியதாயிற்று.

நான் தவறாமல் மாலை நேரங்களில் நண்பர்களுடன் சடுகுடு விளையாடிய வேதாசலம் நகர் அழகேசனார் தெரு பூங்காவும் விளையாட்டுத் திடலும் சிதிலமடைந்து கிடந்தன. அதை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியிருந்தார்கள். வருடம் முழுவதும் விதவிதமான விளையாட்டு வீரர்களுடன் உயிர்த்துடிப்போடு காணப்பட்ட சீர்திருத்தப்பள்ளி விளையாட்டுத் திடல் பாழடைந்து ரயில்வேயின் கோடவுனாகக் கிடக்கிறது. குளவாய் ஏரியைத் தூர்த்து ப்ளாட் போடவேண்டியது மட்டும்தான் பாக்கி. அதன் ஆயக்கட்டு வயல்கள் எல்லாம் பைபாஸ் சாலையினால் ஏற்கெனவே ப்ளாட்டுகளாகிவிட்டன.

ஒரு காலத்தில் நமக்குப் பெருமகிழ்ச்சி தந்த பல விஷயங்கள் கால ஓட்டத்தில் அர்த்தமற்றவை ஆகிவிடுகின்றன. இளம் வயதில் தினசரி மணிக்கணக்கில் அரட்டை அடித்த நண்பனை முப்பது வருடம் கழித்து சந்திக்கும்போது, பழைய சந்தோஷங்களின் தொடர்ச்சியாக இப்போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், சில நிமிடங்களுக்குப் பின் இருவருக்கும் பேச எதுவுமில்லை. பகிர எதுவுமில்லை. கால ஓட்டத்தில் இருவரின் மதிப்பீடுகளும் வெவ்வேறு திசைகளில் போய்விட்டதே காரணம். மாறாக ஒரு வாரம் முன்பு அறிமுகமான ஒருவருடன் மணிக்கணக்கில் பேசுகிறோம். இருவருக்கும் இடையில் பொது அக்கறைக்குரியவை நிறையவே இருப்பதே காரணம்.

உறவுகளைச் சடங்குகளாகவோ, அல்லது வெறும் பழக்கத்தினாலோ அல்லது வேறு வழியில்லாமலோ தொடரும் போது அவை சுமையாக மாறுவதுதான் நிகழும்.

உறவாடக் கற்றுக்கொள்வோம் என்பதுதான் நான் அண்மையில் குடந்தையில் நடத்திய ஒரு பயிலரங்கத்தின் செய்தி. லயன்ஸ் க்ளப் இதை ஏற்பாடு செய்திருந்தது. லயன்ஸ் மாவட்டம் 324ஏவின் இப்போதைய ஆளுநர் ராமராஜன் இந்த வருடம் வித்தியாசமான சில பயிலரங்குகளை நான் நடத்தித் தரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். நானும் என் தோழி பத்மாவும் அவற்றைச் செய்து தரப் பொறுப்பேற்றுக் கொண்டோம்.

லயன்ஸ் உறுப்பினர்கள் தம்பதிகளாக வந்து பங்கேற்கும் பயிலரங்கம் இது. அரசியல், கல்வி, மீடியா, வணிகம் எல்லாமே கடும் சிக்கல்களுடன் இருக்கும் சூழலில், தனி வாழ்க்கையில் உறவுகளும் எவ்வளவு சிக்கலாக இருக்கின்றன என்பதை எல்லோரும் உணர்ந்து என்ன செய்யலாம் என்ற கவலையிலும் ஏக்கத்திலும் இருக்கிறார்கள். போலி கௌரவமும் அதிகாரப் பார்வையும்தான் பல உறவுகளை நாசப்படுத்துகின்றன. அன்பும் பரஸ்பர மதிப்பும் மட்டுமே நம்மை மீட்கும்.

இன்னொரு பயிலரங்கம் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் பயிலும் ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கு, பத்து வாழ்க்கைத் திறன்களை அறிமுகப்படுத்துவதற்கானது. மாணவர்கள் துடிப்பாக இருக்கிறார்கள். ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வசதிகளும் வாய்ப்புகளும் மட்டும் தான் குறைவாக இருக்கின்றன. இப்படிப்பட்ட பயிலரங்கங்கள் அவர்களுக்கு நீந்திக் கரையேறக் கிடைக்கும் இன்னொரு துரும்பு.

மயிலாடுதுறையில், நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நூறாண்டுகளுக்கு மேலாக நடக்கும் அந்தப் பள்ளியின் வரலாறு பிரமிப்பானது. எழுத்தாளர்கள் கல்கி, துமிலன், சா.கந்தசாமி, தி.மு.க. தலைவர் பேராசிரியர் அன்பழகன், இன்னும் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகள் பலர் படித்த பள்ளி இது என்று அறிந்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

அப்படிப்பட்ட பள்ளியில் ஒரு நூலகம் இல்லையென்று தெரிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இருநூறு கோடி ரூபாயில் ஒரு கனவு நூலகத்தை, சென்னையில் அமைக்கிறோம். இருநூறு ஊர்களில், இரண்டாயிரம் பள்ளிகளில் நூலகங்கள் இல்லை. அல்லது இருந்தும் இல்லாத நிலை. மயிலாடுதுறை பள்ளியில் ஆயிரக் கணக்கில் நூல்கள் உள்ளன. ஆனால் நூலகர் பதவிக்கு ஆள் நியமிக்கப்படவில்லை. பள்ளிகளில் காவலர் (வாட்ச்மேன்), துப்புரவுப் பணியாளர் பதவிகளெல்லாம் கூட அரசால் நியமிக்கப்படாத நிலைதான் பல பள்ளிகளில் இருக்கின்றன. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் தொகுப்பு ஊதியத்தில் சிலரை ஒரு சில ஊர்களில் நியமிக்கிறார்கள்.

ஒவ்வொரு பயணமும் நம் சூழல் எவ்வளவு சிக்கல் நிரம்பியதாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. கூடவே அதையெல்லாம் தாண்டி எழுந்து வருவதற்கான துடிப்போடும் ஆர்வத்தோடும் தேடலோடும் இன்னொரு தலைமுறை உருவாகிக் கொண்டே இருக்கிறது என்பதைப் பார்க்கும் வாய்ப்பையும் இந்தப் பயணங்கள் எனக்குத் தருகின்றன.

முசிறியில் மாணவர் பயிலரங்கம் முடிவில் அன்றைய அனுபவத்தைச் சொல்லுங்கள் என்று கேட்டதும் அலை அலையாக எழுந்து வந்து முதல் முறை மைக் முன்னால் பேசிய அத்தனை முகங்களும் குரல்களும் மறக்க முடியாதவை.

நன்றி: கல்கி, ஓ-பக்கங்கள்

18 Comments:

kg gouthaman said...

சொந்த ஊரில் கோவில் புனரமைப்புகளுக்கு பதிலாக, நூலகங்கள் அமைக்கலாம் என்பது நல்ல சிந்தனைதான். அந்தக் கோவிலிலேயே ஒரு நூலகம் அமைப்பது & ஊர்க்காரர்கள் தங்களிடம் உள்ள தங்கள் படித்த புத்தகங்களை அந்த நூலகத்திற்கு அளிப்பது என்பது போன்ற சில வழிமுறைகளும் சாத்தியமே. சிந்திப்போம்.

Swami said...

Thanks for posting . Why no Manjal Comment ? By the no problem for you in Copy Write ?

சுப்புரத்தினம் said...

பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வால் இருக்குமோ.!!!!!

Roaming Raman said...

//படிப்புக்காக அடுத்த தலைமுறைக்கு ஏன் எதுவும் செய்யத் தோன்றுவதில்லை// சரியான கேள்வி... நான் (அநேகமாக)ஒவ்வொரு பிறந்த நாளன்றும்- அதைச் சொல்லாமல், சிறிய பள்ளிகளில் ஒரு குயர் நோட்டுகள் (என் பாக்கெட் நிலையைப் பொறுத்து எண்ணிக்கை மாறும்) கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.. சோ கூட ராஜ்யசபா எம் பி யாக இருந்த போது அவருக்கு ஒதுக்கப் பட்ட நிதி முழுவதையும் பள்ளிக் கூடங்களுக்கே செலவிட்டார்...

’ரா’வணன் said...

ஊரில் இருக்கும் இந்துக் கோயில்களை எல்லாம் இடித்துவிட்டு, அந்த இடங்களையும் சொத்துகளையும் கிறிஸ்தவர்களிடமும், முஸ்லிம்களிடமும் கொடுத்துவிட்டால் ஞாநி போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

அப்படி வெளிப்படையாக எழுத கல்கி இடம் கொடுக்காது என்பதால் தம் இந்து வெறுப்பை மறைத்துக் கொள்ள நூலகம், படிப்பு என்று கதை சொல்கிறார்கள்.

Ramesh said...

I find nothing wrong in rebuilding the temples - its their well and wish - I see so many islamic community forms in Middle east building new mosques and doing welfares with that to their community. If thats' right, what these people are doing also right.

cho visiri said...

//முதலில் கோயில் புனருத்தாரணத்தையே எண்ணுகிறார்கள் என்பதுதான். படிப்பு தான் அவர்களை உலகம் சுற்ற வைத்தது. அந்தப் படிப்புக்காக அடுத்த தலைமுறைக்கு ஏன் எதுவும் செய்யத் தோன்றுவதில்லை?//

""Koyil illaa Vooril
Kudi irukka vaeNdaam!"
this proverb may be the reason behind renovating Temple first.

Anonymous said...

It has become a fashion for the so called rationalists to make such statements. Renovating an ancient temple is an aspect of culture.

Anonymous said...

Anna , Gnani....Very good article..What you are going to do for that town...

Its easy to speak and to comment....temple is going to stand for years.....

According to kamal hassan - NATHIGAM PESUM BRAMANAN ABATHAVANAN"..

Murali

Ganpat said...

பாவம் ஞானியும் கமல்ஹாசனும்!!
எவ்வளவோ முயன்று,விழுந்து புரண்டு, தாங்கள் பார்பன விரோதிகள் என்றும் நாத்திகர்கள் (அதாவது பெரியார் பக்தர்கள்)என்றும் நிறுவ பிரம்ம பிரயத்தனம் செய்கிறார்கள்.
ஆனால் சம்பந்தப்பட்டவர்களோ இவர்களை ஆட்டத்தில் சேரத்துக்கொள்ளவே மறுக்கிறார்கள்!
பாவம் ஞானியும் கமல்ஹாசனும்!!

Anonymous said...

இந்திய மீடியா உலகமே உதவாக்கரைகளால் ஆனது. அங்கே குப்பை கொட்டவேண்டாமானால் நானும் ரவுடி தான் என்று கத்த வேண்டி வருகிறது போலருக்கு.

இதனால் ஞாநி போன்றவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்குதோ இல்லையோ அட்லீஸ்ட் நாயே நாயே என்று ஏசாமல் இருப்பார்களாயிருக்கும்.

எவ்வளவோ பாத்துட்டோம் இது ஒரு மேட்டரா ?

இவரு நல்லா வசதியா தான் இருக்காரு... நாடகத்துக்கு செலவு பண்ணி நாசமாக்காம, பள்ளிக்கூடத்துக்கு செலவழிக்கட்டுமே யார் வேண்டாம்கிறா ? செய்வேளா ஞாநீநீ

வேளுக்குடி சிவம்.

Karthik said...

சென்னை வடபழனி கோவிலில் ஒரு இலவச நூலகம் நல்ல பராமரிப்போடு நடத்தப்பட்டு வருகிறது. அதில் பக்தி சார்ந்த நூல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன .

cho visiri said...

Murali(or some anonymous)quoted/According to kamal hassan - NATHIGAM PESUM BRAMANAN ABATHAVANAN"..//

We know Kamalhasan is a Brahmin'and we know that he is a non-believer in God. Now you decide.......

Anonymous said...

Don't know what he wants to establish?. These guys are worth for nothing, just ignore.

Anonymous said...

(பேரன்புடையீர்....இது பிழை நீக்கிய பதிப்பு)

ஐயோ பாவம்!
ஞாநி வெறும்
அஞ்ஞாநி!
பேத்தல்களின்
விஞ்ஞாநி!

பித்தம் தெளிய
பிறிதொரு மருந்து சொல்வேன்.
பிள்ளாய் கேள்!

பார்பனன் இ(ல்)லை
பாதி எடுத்து
பாகு போல் நைய அரைத்து,
அதனுடன்,
நாத்திகவாதம்
நான்கு பலம் நன்கு சேர்த்து,
நித்தம்
ஊற்றிக் குடிக்க
உண்டாகுமே போஷாக்கு!
பித்தமும் களையும்
பேதியும் பிடுங்கும்.

சுத்தமாகுமே
சூட்சும உடம்பு!

virutcham said...

http://www.virutcham.com/2011/11/ஞானியின்-ஊர்சுற்றிப்-புர/

ஞானியின் ஊர்சுற்றிப் புராணம் - எதிர்வினை

NO said...

//ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்போது, முதலில் கோயில் புனருத்தாரணத்தையே எண்ணுகிறார்கள் என்பதுதான். படிப்பு தான் அவர்களை உலகம் சுற்ற வைத்தது. அந்தப் படிப்புக்காக அடுத்த தலைமுறைக்கு ஏன் எதுவும் செய்யத் தோன்றுவதில்லை?//

நண்பர் திரு ஞானி வேண்டுமானாலும் தன் அடையாளங்களை அதாவது உலகில் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும், சரித்திரத்தால் நிருத்திவைகபட்ட பண்பாட்டு
முத்திரைகளை முற்றிலும் துறந்தவராக இருக்கலாம். அதாவது அப்படி காட்டிகொள்ள ஆசைப்படலாம்! அதனால்தான் அவருக்கு மேலே சொல்லப்பட்ட செயல்பாடுகளின் அர்த்தங்கள் புரியவில்லை அல்லது புரியாதது போல நடிக்கிறார்! சராசிரி மனிதர்கள் தங்களது பண்பாட்டினை மதிப்பவர்களே. அவர்களின் பண்பாடு
என்பது காட்டுமிராண்டித்தனம் முற்றிலும் மடமை என்று பேசபட்டால் அதை பேசுபவர்தான் அறியாமையில் இருப்பவர் என்பதையே காட்டுகிறது. மனிதன்
என்பவன் பல தளங்களில் வாழ்பவன் என்பதை மறுத்து தாங்கள் விரும்பும் பெட்டிக்குள் மட்டுமே அவனை அடைத்து அவனை ஒரு வழி சிந்தனை பொம்மையாக மாற்ற நினைப்பவர்கள் என்றுமே பல விடயங்களை புரிந்தவர்களோ கேட்பவர்களோ இருந்ததில்லை. நாத்திக வாதம் என்பது பண்பாட்டை கொச்சை படுத்துவது மட்டுமே என்ற நிலைக்கு இங்கே பலர் வந்திருக்கிறார்கள். இதன் நீட்சி நம்மின் வரலாற்றை அதன் சாதனைகளை அதன்
தன்மைகளை முற்றிலுமாக மறுப்பது மற்றும இகழ்வது. காட்டுமிராண்டிகள்,
நாகரீகமற்றவர்கள் முட்டாள்கள் என்று கால்டுவெல் போன்றவர்கள் தமிழர்களை பற்றி சொன்னதற்கு காரணம் கிருத்துவ மதமாற்று முயற்ச்சிக்கு உதவுவதற்கே.
நம்ம பகுத்தறிவு புழுக்கள் அதே ஆட்டத்தை ஆடியதன் காரணம், அதில் காசு இருப்பதால்.

அப்படி பட்ட நாத்தீகர்களின் நாத்தீகம் மற்றும் பண்பாட்டு மறுப்பு செயல்கள்
சாமானியர்களுக்கு என்றும் பெரிதாக தெரியாது. ஏனென்றால் அதன் உள்ளிருக்கும் நோக்கத்தை அறிந்தவர்களாகிவிட்டார்கள். உண்மையான பாரபட்சமற்ற நாத்தீகம் நம் தமிழகத்தில் பேசப்பட்டிருந்தால் ஒருவேளை கோவில்களுக்கு பணம் கொஞ்சம் கம்மியாக போயிருக்கும், மக்கள் இந்த அளவிற்கு கடவுள் பின்னாலும், ஜோசியம் பின்னாலும் வேறு பல மூட நம்பிக்கை பின்னாலும் போயிருக்க மாட்டார்கள். ஒரு சுமூகமான நாத்திக நிலையை மக்கள் அடைந்திருப்பார்கள், வேண்டாத நம்பிக்கைகளை குறைத்திருப்பார்கள்! அதை முற்றிலும் கெடுத்த பெருமை யாருக்கு சேரும் என்ற சொல்ல வேண்டியதில்லை. நாத்தீகம் என்றால் கடவுள் மறுப்பு என்பதற்கு பதிலாக இந்து நம்பிக்கை மறுப்பு என்று பதிவு செய்து விட்டு மேலும் மற்ற மதக்காரர்களை விட்டு இந்து மதத்தை கண்டபடி திட்டி விட்டு
இதுதான் நாத்தீகம் என்று சொன்னால் கேணயர்கள் கூட அதை ஏற்க்க மாட்டார்கள். கோபத்தால் இருக்கும் பணத்தை கோவிலுக்கு மேலும் மேலும் கொடுப்பார்கள்.
அதுதான் இங்கே நடக்கிறது.

Religion highjacking morality is a great tragedy என்று டானியல் டென்நெட் கூறினார். அதே மாதிரி, Periyarists highjacking atheism in Tamilnadu is a great tragedy என்று
கூறலாம். ஏனென்றால் இவர்கள் கூறிய நாத்தீகம் மற்றும் முற்போக்கு ஒரு கடைந்தெடுத்த வேடம் மற்றும் காசு பார்க்கும் உத்தி மட்டுமே என்று
ஏறக்குறைய எல்லா தமிழர்களும் புரிந்து கொள்ள தொடங்கி விட்டார்கள். பிரான்சு, இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள நாதீகத்தின் தார்மீக நெறி மற்றும் நம்பகத்தன்மை இங்கே ஒரு துளியும் இல்லை என்பது நிதர்சனம்.

நிலைமை அப்படி இருக்கும்பொழுது, மக்கள் ஏன் கோவிலு துட்டு கொடுக்கிறார்கள் என்று திரு ஞானி புலம்புவது, பெரியாரிய சீடர் என்று தன்னையே கூறிக்கொள்ளும் (ஏனென்றால் மற்றவர் அப்படி நினைக்கவில்லை அவர் பார்பன பின்புலம் உள்ளதால் ) ஒருவருக்கு புரியாமல் போகாதுதான்!

ஜடாயு said...

// எனக்கு ஆர்வமில்லாத விஷயம் அது. //

ஓகே. அதோடு விட்டிருக்கலாம்.

// என்னை இன்னமும் உறுத்தும் கேள்வி ஏன், தங்கள் சொந்த ஊரை விட்டு, தொழில் நிமித்தம் வெளியூர் சென்று வாழ்வோர் பலரும் (எல்லோரும் அல்ல), ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்போது, முதலில் கோயில் புனருத்தாரணத்தையே எண்ணுகிறார்கள் என்பதுதான். //

இது ஏன் உங்களுக்கு “உறுத்த” வேண்டும்? தமிழகத்தின் சமூக, கலாசார, வரலாற்று பரிச்சயம் கொஞ்சம் இருப்பவனுக்குக் கூட எளிதாக புரிந்து கொள்ளும் விஷயம் தானே சார் இது?

ஏனென்றால் அந்தக் கோயில் தான் நல்லூர் கிராமத்தின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைக்கும் பாலம். அந்த ஊருக்கு ஒரு பண்பாடும், வரலாறும் இருந்திருக்கிறது என்று பறைசாற்றிக் கொண்டு கருங்கல்லாக நின்று கொண்டிருக்கும் சாட்சியம் அது.

தமிழர்கள் தாங்கள் போகும் நாடுகளில் ஊர்களில் எல்லாம் கோயில்கள் கட்டிக் கொண்டிருப்பது ஏன் என்று யோசித்தீர்களா? மலேசியாவிலும், பர்மாவிலும், மொரீஷியல் தீவுகளிலும் அடக்குமுறைகளையும், துயரங்களையும் கடந்து வந்திருக்கும் தமிழ்ச் சமுதாயங்கள் ஒவ்வொன்றும் அதற்கு சாட்சியமாக ஒரு கோயிலைத் தான் காண்பிக்கும்.

அது ஏன் என்றால் அப்படித் தான். அது தான் நமது பண்பாடு, வரலாறு, சமூக இயக்கம். உங்கள் உளுத்துப்போன பெரியாரிய கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டுப் பார்த்தால் இது தெளிவாகத் தெரியும்.

அண்ணா ஹசாரே லாரி ஓட்டுனராக இருந்து விட்டு தனது கிராமத்தை சீர்திருத்தி முன்னேற்ற வேண்டும் என்று வருகிறார்.. அப்போது ராலேகான் சித்தியில் அவர் செய்த முதல் வேலை அங்கிருந்த யாதோபா கோயிலை சீரமைத்தது தான். பிறகு அங்கு உட்கார்ந்து கொண்டு தான் அவரது காந்திய சேவை தொடங்குகிறது. அவரது பணீகள் அனைத்திற்கும் அந்தக் கோயில் ஒரு கேந்திரமாகிறது.

எனவே கோயில் புனரமைப்பு என்பது அதோடு நின்று விடும் / விடவேண்டும் என்று ஏன் நினைக்க வேண்டும்? ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அது ஒரு அடிக்கல்லாக இருக்கலாமே.