பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 02, 2011

யாரும் இல்லாத கடையில் டீ ஆத்தின அத்வானி

தமிழகத்தில் வெடிகுண்டும், கேரளத்தில் வெட்டரிவாளும் தராத அதிர்ச்சியை அத்வானிக்கு கர்நாடகத்தில் எதியூரப்பா ஆதர்வாளர்களின் தந்துவிட்டார்கள். எடியூரப்பாவின் வாலை முன்பே வெட்டியிருந்தால் இந்த நிலமை அவருக்கும் பாஜகவிற்கும் வந்திருக்காது.

2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் காங்கிரஸை வெற்றி பெறச் செய்து, ஆட்சியில் அமரச் செய்வதே எங்கள் லட்சியம் என்ற அளவில் பாஜகவினரின் செயல்பாடுகள் இருக்கின்றன. கடந்த எட்டாண்டு கால காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஊழல்கள் மற்றும் அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பண விவகாரம் இரண்டையும் மையமாக வைத்து, மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக "ஜன்சேத்னா" யாத்திரையை டிசல் வண்டியை கொண்டு ஓட்டிவருகிறார்.

சொந்தக் கட்சியிலேயே ஊழல் முதல்வர் இருக்கும்போது, அத்வானி எப்படி ஊழலுக்கெதிராக யாத்திரை நடத்தலாம் என ஊழல் வாசனை அறவே அற்ற கட்சிகளும் அதன் அடிப்பொடி மீடியாக்களும் முதலில் கேள்வியெழுப்பின. அத்வானி அன்னா ஹசாரே போல சில நாட்கள் மீடியாவை சந்திக்காமல் இருந்தார். பின்பு அத்வானியின் யாத்திரையில் பெங்களூர் இடம்பெறப் போவதில்லை எனவும் கசிய தொடங்கியது. உடனே அவர் நான் பெங்களூர் போவேன் என்று அழையா விருந்தாளியாக சென்றார். மீடியாவிற்கும், எடியூரப்பாவிற்கும் பதிலடியாக, பெங்களூர் கூட்டத்தில் உரையாற்றிய அத்வானி, கட்சித் தலைவர்களின் மீதான ஊழல் புகார்கள் குறித்தும், கட்டுப்பாடின்மை குறித்தும் வெளிப்படையாகவே விமர்சித்தார். இதை முன்னமே எதிர்பார்த்தது போன்று, எதியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் 12 பேர் இக்கூட்டத்தைப் புறக்கணித்தனர். கூடுதலாக, அன்றிரவு தற்போதைய கர்நாடக முதல்வர் சதானந்த கெளடா அத்வானி அவர்களுக்கு அளித்த இரவு விருந்தின் போதும், எதியூரப்பா ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம் எல் ஏக்கள் மிஸ்ஸிங். மொத்தமுள்ள 122 எம் எல் ஏக்களில் 20 பேர் மட்டுமே வந்திருந்தனர். யாருமே இல்லாத கடையில டீ ஆத்துன சிங் மாதிரி இவர் நிலமை ஆகிவிட்டது என்பதை நினைக்கும் போது பாவமாக இருக்கிறது. இவர் மன்மோகன் சிங்கை பார்த்து வீக் என்கிறார் அது தான் வேடிக்கை!

இவ்வாறு எதியூரப்பா கம்பிகளுக்குப் பின்னாலிருந்து நடத்தும் உள்ளடி வேலைகளால், மத்திய பாஜக மேலிடம் அதிருப்தியும், மாநில பாஜக தலைமை குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளது. தன்னை விட்டால் கர்நாடக பாஜகவில் தனித்துவம் மிக்க தலைவர் எவரும் இல்லை என்பதாக நிரூபிக்க எதியூரப்பா நிகழ்த்தியிருக்கும் முன்னோட்டம்தான் இது என்று பாஜக கருதுகிறது. அத்வானி என்ன பிஜேபி தலைவரா ? அவர் சும்மா நடத்தும் யாத்திரைக்கு எதற்கு நாங்கள் போக வேண்டும் என்று வெளிப்படையாகவே விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள். அத்வானியின் யாத்திரையில் தலைவர்கள் அனைவரும் பிஸியாக இருப்பதால், யாத்திரை முடிந்த பின்பு அவர்கள் மீதான நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டாலும், பெருமளவில் லிங்காயத்து சமூகத்தினரின் வாக்கு வங்கியையும், கர்நாடக மடாதிபதிகளின் ஆதரவைத் தன்னகத்தே வைத்திருக்கும் எதியூரப்பாவை பகைத்துக் கொள்ள பாஜக விரும்பாது என்றே தெரிகிறது. அத்வானிக்கு மரியாதை கொடுக்க முடியாத கர்நாடகா பிஜேபி தலைவர்களை அந்த கட்சி தயவு தாட்சண்யமின்றி நீக்க வேண்டும். இதை செய்தாலே ரதயாத்திரை பயணம் வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம்.

யாத்திரையின் மூலம் அணுகுண்டாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு, பாஜகவின் கட்சி நிர்பந்தங்களால் புஸ்வாணமாகும் சூழல்தான் ஏற்பட்டிருக்கிறது. இவர்களுக்கு காங்கிரஸ் கட்சி எவ்வளவோ மேல் என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிடும்.

பலரும் கூறுவதைப் போல, பாஜக ஒரு வித்யாசமான கட்சிதான்.

3 Comments:

jaisankar jaganathan said...

// அத்வானிக்கு மரியாதை கொடுக்க முடியாத கர்நாடகா பிஜேபி தலைவர்களை அந்த கட்சி தயவு தாட்சண்யமின்றி நீக்க வேண்டும்//

இத பண்ணினா கர்னாடகாவுல பிஜெபி காணாம போயிடும்

சனிப்பெயர்ச்சி said...

தற்போதைய இந்திய ஜாதகத்தைப் பார்க்கும் போது, ஊழலிற்கு எதிரான முழக்கம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு இன்னமும் அதிகமாக இருக்கும். 21.12.2011 அன்று சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது. அதற்குப் பிறகு இதன் தாக்கம் இன்னும் அதிகமாகும். ஏனென்றால் இந்திய ஜாதகம் கடக ராசிக்கு 4வது வீட்டிற்கு சனி வருகிறார். அதனால், யாராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு உள்ளவர்களாக இருந்தாலும்சரி, தப்பு செய்தால் தண்டனையை அதிகரித்தே தீரவேண்டும் என்ற அமைப்புகள் இனிமேல் அதிகரிக்கத் தொடங்கிவிடும்.

சனிப்பெயர்ச்சி said...

தற்போது கேள்வி கேட்கும் வீடான புதனில்தான் சனி உட்கார்ந்திருக்கிறார். அதனால்தான், யாராக இருந்தாலும் கேட்டுவிடுவது என்ற நிலை வந்தது. அதன்பிறகு, கன்னிக்கு சனி வந்த பிறகுதான் தகவல் அறியும் சட்டம் என்ற சட்டம் வந்தது. சாதாரணமானவர்கள் கூட ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் அஞ்சல் தலை ஒட்டி அனுப்பினால், 10 நாள், 15 நா‌ள் ஒரு அலுவலகத்திற்குச் சென்று சேகரிக்க முடியாத தகவல்களைக் கூட பெறக்கூடிய தகவல் அறியும் சட்டம் என்பது வந்தது. யார் யார் என்ன செய்கிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள், எந்தப் பதவிக்கு எந்தப் பணிக்கு யார் யார் வருகிறார்கள் என்பதை சாதாரண, எளிய மக்களும் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் சட்டம் வந்துள்ளது.

அந்த சட்டத்தின் மூலமாகத் தெரிந்த விஷயங்களைத் தண்டிக்கக்கூடிய வீடுதான் துலாம். இந்த துலாத்துக்குதான் சனி வருகிறார். துலாம் என்பது நீதிக்கோள், நீதிபதிக்கு மேல் நீதி தேவை தராசுடன் இருப்பார்களே அதுதான் நடக்கும். டிசம்பரில் இருந்து நிறைய பேர், பெரிய பெரிய ஆட்களெல்லாம் தண்டனையை அனுபவிக்கக் கூடிய நிகழ்வுகள், தப்பித்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தப்பிக்கவே முடியாது என்கின்ற நிலை வரும்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் கன்னியில் சனி இருப்பதால்தான், உலகத்தையே ஒரு சுற்று வந்து பார்த்தால் பல நாடுகளில் ஆள்பவர்களை எதிர்த்து குரல்கள் எழுந்துள்ளது தெரியும். அதில் நியாயமான விஷயங்களும் நிறைய இருக்கிறது. இப்பொழுது துலாத்திற்கு சனி வரும்போது, தவறு செய்தவர்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கக்கூடிய காலமாக அமையும். மேலும் எளியவர்களும் பெரிய பதவியில் போய் உட்காரக்கூடிய காலமும் வரப்போகிறது.