பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 05, 2011

சில நேரங்களில் சில மனிதர்கள் - 2

அடுத்த பகுதி ...

ஏழு வருடங்களுக்கு முன்னால், ஜெர்மெனிக்கு ஒரு பயிற்சிக்காக பதினைந்து தினங்கள் சென்றிருந்த வேளையில், ஒரு வார இறுதி விடுமுறையில் பிரான்ஸில் இருக்கும் லூர்தெஸ் என்ற இடத்திற்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். அப்பிரசித்தி பெற்ற இடத்திற்குச் செல்ல, நான் இருந்த இடத்திலிருந்து இரண்டு விமானப் பயணமும், ஒரு குறுகிய தூர ரயில் பயணமும் மேற்கொண்டாக வேண்டும். செல்லும்போது பயணம் மிகவும் இனிதாக அமைந்தது. லூர்தெஸில் செலவிட்ட தருணங்களும் இதயத்தை விட்டு என்றும் அகலாத, மகிழ்ச்சிகரமான ஒன்றாகும். ஆனால் ஜெர்மெனிக்குத் திரும்பும் பொழுது, லூர்தெஸில் எனது ரயிலைத் தவற விட்டேன்; அடுத்த ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

ஒருவாறு ரயிலைப் பிடித்து, விமான நிலையத்தை அடையும்போது அங்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. அன்றைய தினத்தின் கடைசி விமானம், நான் செல்வதாக இருந்த விமானம் கிளம்பி விட்டது. அந்நிய மண்ணில், முற்றிலும் கைவிடப் பட்ட நிலையில், கண்களில் கண்ணீர் ததும்ப செய்வதறியாது நின்றிருந்தேன். அன்றைய இரவை ஒரு ஹோட்டலில் கழிக்கக் கூட கையில் போதுமான பணமில்லாத ஒரு நிலை. அப்போது, அங்கு விமான நிலையத்தின் செக்-இன் கவுண்டரில் இருந்த பிரெஞ்சுப் பெண்மணி, சற்று நேரம் காத்திருங்கள் என்று என்னைப் பணித்தார். எதற்காகக் காத்திருக்கச் சொல்கிறார் என்ற ஆச்சர்யத்துடன், அதே சமயம் வேறு வழியும் தெரியாததால், அவர் தமது வேலையை முடித்து விட்டு வரும்வரை காத்திருந்தேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் தமது வேலையை முடித்து விட்டு, வாருங்கள் என்னுடன், என் வீட்டிற்கு என்று என்னை அழைத்தார். பொதுவாகவே ஏர்லைன் செக் இன் கவுண்டர்களில் பணி புரிபவர்கள் அதிகம் மற்றவர்களோடு அநாவசியமாகப் பேச்சுக் கொடுப்பதில்லை; பழகுவதுமில்லை; தங்கள் பணியிலேயே மும்முரமாக இருப்பார்கள். இவரின் அழைப்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி பேசவொட்டாமல் அடித்து விட்டது.

அவருக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், அவருடைய பெயர் ஜேன் மேரி என்று அறிந்து கொண்டேன். அவர் நேராக என்னை தமது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருடைய இரு குழந்தைகளுடன் இரவு உணவை முடித்துக் கொண்டவுடன், நான் தூங்குவதற்கு ஏற்றவாறு வசதி செய்து தந்து விட்டு அவர் தமது பணிகளைக் கவனிக்கச் சென்று விட்டார். மறுநாள் காலை அவர் என்னை எழுப்பியதுடன், என்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். வழி நெடுகிலும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், ஊருக்குச் சென்றவுடன் அவருக்குத் தக்க சன்மானமும் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தேன்.

" தயவு செய்து எனக்கு நன்றி எதுவும் தெரிவிக்க வேண்டாம் " என்று கேட்டுக் கொண்ட ஜேன், இதே நிலை நாளை என் குழந்தைகளுக்கும் நேரலாம். இன்று நான் செய்யும் உதவி, நாளை என் குழந்தைகளுக்குத் தேவைப்படும் போது இறைவன் அவர்களுக்கும் அனுப்பி வைப்பார், என்றார்.

அன்றைய தினம் காலை முதல் விமானத்திலேயே என்னை அவர் அனுப்பி வைத்தார். அவருக்கு என்னால் முடிந்ததெல்லாம் அவருக்கான எனது ப்ரார்த்தனைகள்தான்.

(மூலம் : பமீலா பர்போஸா, ஹைதராபாத்)


என்னுடைய சிறு பிராயத்தில் நான் வளர்ந்தது முழுவதும், தமிழகத்தின் ஒரு கிராமப்புறத்திலுள்ள என்னுடைய தாத்தா வீட்டில். பள்ளியில் ஒரு சராசரிக்கும் கீழான மாணவனான நான், அங்கு பெரும்பாலும் என்னுடைய நேரத்தை பறவைகளையும், அணில்கள் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதையும் வேடிக்கை பார்ப்பதிலேயே செலவிடுவேன். 1999 ஆம் வருடம், நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது, எங்கள் பள்ளிக்குப் புதிதாக வந்திருந்த தமிழாசிரியை திலகம் அவர்கள் எனக்கு அறிமுகமானார்கள். இன்னமும் அவர்களை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சற்றே குட்டையாக, குடும்பப் பாங்கான, சிறிய கல் பதித்த மூக்குத்தியுடன், நெற்றித் திலகமிட்ட களையான முகம்.வகுப்பில் ஒருநாள், அவர் என்னிடம் அன்றைய தினம் போதித்திருந்த பாடத்தின் ஒர்பகுதியை எழுந்து வாசிக்குமாறு கூறினார். என்னுடைய மனோதிடமும், தைரியமும் பஞ்சாகப் பறந்து விட்டன. என்னுடைய கைகள் நடுங்கத் துவங்கி விட்டன; வார்த்தைகள் வெளிவர மறுத்தன; ஒரு பாராவைப் படித்து முடிப்பதற்குள் சொல்லொணாத் தடுமாற்றங்கள்; என்னுடைய வகுப்புத் தோழர்கள் எள்ளி நகையாடியது என்னை மிகுந்த வெட்கத்திற்காட்படுத்தியது.“தமிழ் உன்னுடைய தாய்மொழிதானே? அதைச் சரளமாகப் படிப்பதில் உனக்கு என்ன பிரச்சனை?” என திலகம் அவர்கள் மிகுந்த வாந்துவத்துடன் என்னை வினவினார்.நான் தலையைக் குனிந்தவாறே, படிக்கும் பொழுது தவறு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே நான் தடுமாறி விட்டேன் என என்னுடைய தவறை ஒப்புக் கொண்டேன்.அவர் என்னுடைய தோளில் தட்டிக் கொடுத்தவாறே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நீ கவலைப்படத் தேவையில்லை. உனக்குப் பிடித்த கதைப் புத்தகங்கள், மற்ற புத்தகங்கள் எதுவாக இருப்பினும் படித்து, படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள். உன்னுடைய படிக்கும் பழக்கம் வளர்வதோடு, தடுமாற்றங்களும் ஏற்படாது என தைரியமூட்டினார்.சில மாதங்களில் அவருக்கு வேறு ஒரு அரசாங்கப் பணி கிட்டியது. அவர் எங்களுடைய வகுப்பறைக்கு கடைசியாக வந்திருந்து, எங்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்தினார்.எதிர்வந்த விடுமுறை தினத்தில், எனக்கு பிரபல தமிழ் எழுத்தாளரான சுஜாதாவின் நாவல் ஒன்று கிடைத்த்து. கூடவே திலகம் அவர்களின் அறிவுரையும் நினைவிற்கு வந்தது. மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பின்பு அருகிலிருந்த சிறிய நகரத்திலுள்ள நூலகத்தில் என்னை சந்தாதாரராக இணைத்துக் கொண்டு, தொடர்ந்து படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். இப்பழக்கவழக்கம் நாளடைவில் என்னை பள்ளியிலும், அதைத் தொடர்ந்து கல்லூரியிலும் சிறந்த மாணவனாக என்னை உருவாக்கிக் கொள்ள உதவியது. தற்போது, என்னுடைய இந்த 24 வயதில், நானும் ஒரு ஆசிரியராக மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிறேன். இப்பொழுது திலகம் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நானிருக்கும் இன்றைய நிலைக்கு, அன்று திலகம் அவர்கள் எனக்கு வழங்கிய ஊக்கமும், அறிவுரைகளும் மட்டுமே காரணம்.

(மூலம் : சதீஷ் குமார், இவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஸர்வ சிக்ஷா அப்யான் திட்டத்தின் கீழுள்ள பள்ளியில் சிறப்பு பயிற்றுவிப்பாளராக பணியாற்றுகிறார்.)

[ ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ் சில கட்டுரைகளைப் பிரசுரித்திருந்தது. தலைப்பிற்கு ஏற்றவாறு இருந்ததால், அதிலிருந்து ஒரு பகுதியை இங்கே தருகிறேன். ]

நன்றி - ரீடர்ஸ் டைஜஸ்ட், தமிழில் யதிராஜ்
வாசகர்கள் இது போல அனுபவங்களை எழுதலாம்.

12 Comments:

Anonymous said...

சிக்கன் சூப் ஃபார் த சோல் - புத்தகத்தில் இது போல ஆயிரம் கதைகள் இருக்கும்! அது சரி, இந்தத் தொடருக்கு நீங்கள் என்ன பெயர் வைப்பீர்கள், சைவமாச்சே?

ரர said...

அருமையான பதிவு. எப்பவும் நெகடீவ் செய்திகளையே படிப்பதற்கு இது பெரிய ஆறுதல்.

Rajeswari said...

Nice..

Roaming Raman said...

இவ வின் ஆளில்லா நிலைமையோ? -ஜென்ட்டில் ரிக்வஸ்ட். //வாசகர்கள் இது போல அனுபவங்களை எழுதலாம்//- சரி அது போகட்டும்...இந்தக் கட்டுரையில் மிகப் பெரிய உண்மை உள்ளது... சமீபத்தில், சுமார் 60 பேரிடம் நான் செய்த அதிகாரபூர்வமற்ற ஆய்வு: தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட, தமிழ் படிக்கும் மற்றும் படித்த வர்களில்- எண்பது சதவீதம் பேர் சரளமாக தமிழ் படிக்க முடியவில்லை!! காரணம்- அதான் கட்டுரையிலேயே இருக்கே...
-ரோமிங் ராமன்

Kannan said...

மிகவும் நல்ல பதிவு.....
உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Anonymous said...

யதி
இதி
பாக உந்தி....!

cho visiri said...

Roaming RAman said,//எண்பது சதவீதம் பேர் சரளமாக தமிழ் படிக்க முடியவில்லை!! காரணம்- அதான்//

May be true. But, by the way, your name reflects the same state.

Anonymous said...

யதி
இதி
பாக உந்தி....
சால பாக உந்தி !!!...

Buddha said...

nice one

ரர said...

இந்த பதிவில் போட இன்னும்மொரு நல்ல செய்தி:

http://www.thehindu.com/life-and-style/metroplus/article2518239.ece

T. Arun Chakaravarthy said...

" இதே நிலை நாளை என் குழந்தைகளுக்கும் நேரலாம். இன்று நான் செய்யும் உதவி, நாளை என் குழந்தைகளுக்குத் தேவைப்படும் போது இறைவன் அவர்களுக்கும் அனுப்பி வைப்பார்"

-- சிறந்த வார்த்தைகள்...

Anonymous said...

நல்ல பதிவு,தொடரட்டும் வாழ்த்துக்கள்.
நன்றி,
இப்படிக்கு
செல்வம்