பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, August 27, 2011

அன்னா - சோ கருத்து


இந்த வாரம் துக்ளக் தலையங்கம்....

இது டெலிவிஷன் நாயகம்!

ஒரு பிரச்சனையைப் போட்டுக் குழப்பி, ஊதி ஊதி எதிர்ப்பைப் பூதாகாரமாக்கி, தாங்களாகவே சிக்கலை உண்டாக்கி; அதிலிருந்து எப்படி மீள்வது என்று புரியாமல் விழித்து; பிடிவாதம், வரட்டுத்தனம், கவலை, பயம், பல்டி என்று மாறி மாறி நின்று; திக்கித் திணறுவது எப்படி என்று தெரிந்து கொள்ள யாராவது விரும்பினால், மத்திய அரசிடம் பாடம் கற்றுக் கொள்ளலாம்.

‘அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரத உற்சவத்தை அவர் நடத்திவிட்டுப் போகட்டும்; அது போகிற போக்கை வைத்து அடுத்த நடவடிக்கையை முடிவு செய்யலாம்’ – என்று முதலில் முடிவெடுத்திருக்கலாம். இந்த நாடு பார்க்காத உண்ணாவிரதமா? காந்திஜி, மொரார்ஜி போன்றவர்களின் நீண்ட நாள் உண்ணாவிரதங்களிலிருந்து, கலைஞர் போன்றவர்களின் ‘பிட்வீன் நாஸ்தா அண்ட் லஞ்ச் உண்ணாவிரதம்’ வரை பலவகைப்பட்ட உண்ணாவிரதங்களையும் பார்த்தாகி விட்டது.

காந்திஜி, மொரார்ஜி போன்றவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள் என்றால் அது சீரியஸ் விஷயம். இப்போது நடக்கிற உண்ணாவிரதங்கள் அப்படிப்பட்டவை அல்ல. அது தொடங்கிய பிறகு, ‘உடல் நலத்திற்குக் கேடு’ என்று கூறி, அந்தப் போராட்டக்காரரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதுதான் – நமது ‘ஜனநாயக மரபு’. அல்லது, உண்ணாவிரதம் இருப்பவர்களின் ஆதரவுத் தலைவர் ஓரிருவர் ‘வேண்டாம், வேண்டாம்’ என்று கெஞ்ச, ஆரஞ்சு ஜூஸ் நைவேத்யம் நடைபெறும்.

அன்னா ஹஸாரேவின் முந்தைய லோக்பால் உண்ணாவிரதம் ஒரு சில நாட்களில் ‘வெற்றி, வெற்றி’ என்ற அறிவிப்புடன் முடிந்தது. அந்த மாதிரி வெற்றியை, இந்த உண்ணாவிரதத்திற்கும் மத்திய அரசினால் கொடுத்திருக்க முடியாதா, என்ன?

சரி. நிபந்தனைகள் விதிக்கப்பட்டன; அன்னா ஹஸாரே அவற்றில் சிலவற்றை ஏற்கவில்லை; சட்டப்படியான உத்திரவை அவர் மீறுகிற வரையில் கூடக் காத்திராமல், ‘என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. ‘பேசாமல் இருந்து விடுவேன்’ என்றா, அவரால் சொல்ல முடியும்? ‘உத்திரவை மீறுவேன்’ என்றார். கைது! எத்தனையோ சட்ட மீறல் ஆர்ப்பாட்டங்கள், பெரிய ஊர்வலங்கள் நடந்தபடி இருக்கின்றன. அவற்றில் சட்டத்தை மீறுபவர்கள், ‘கைது’ ஆகி, அங்கேயே எங்காவது வைக்கப்பட்டு, சில மணி நேரங்களில் ‘விடுதலை’ ஆவார்கள். இது வழக்கம்.

ஆனால், மத்திய அரசு என்ன செய்தது? அன்னா ஹஸாரே கைது; மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்; ஒரு வாரம் சிறை என்று, போலீஸ் கேட்காமலேயே மாஜிஸ்ட்ரேட் உத்திரவு பிறப்பித்தார்; திஹார் ஜெயிலுக்கு அன்னா ஹஸாரேவை அழைத்துப் போனார்கள்.

வேறு இடமா இல்லை? திஹார் என்றாலே, இன்று கேவலமான நினைப்புகள்தானே வருகின்றன! எத்தனையோ மைதானங்கள். அவற்றில் ஒன்றில் அவரை உட்கார வைத்து, உபசாரம் செய்து, மாலை நேரம் வந்தவுடன் விட்டிருக்க வேண்டியதுதானே?

திஹார் ஜெயில் வரை தம் பிடித்த மத்திய அரசு, இந்த நிலையில் நடுங்க ஆரம்பித்தது. அன்னா ஹஸாரேவிடம் பேரம் நடத்தியது. ‘மூன்று நாள் உண்ணாவிரதம்’ என்று அரசு ஆரம்பிக்க, அன்னா ஹஸாரே ‘முப்பது நாளுக்கு ஒரு நிமிடம் குறையாது’ என்று தொடங்க, கடைசியில், 15 நாள் உண்ணாவிரதம் என்று பேரம் படிந்தது.

வாடகை சைக்கிள் எடுக்கிறபோது, ‘நாள் முழுவதும் கொடு’ என்று வாடிக்கையாளரும், ‘அதெல்லாம் முடியாது; ஒரு மணிநேரம்தான்’ என்று கடைக்காரரும் ஆரம்பித்து, பேரம் பேசி, கடைசியில் ‘அரை நாள்’ என்று முடித்துக் கொள்கிற மாதிரி – அரசும், அன்னா ஹஸாரேவும் பேரம் பேசி, ‘அரை மாதம்’ என்று பேரத்தை முடித்துக் கொண்டார்கள். இது என்ன போராட்டமோ, என்ன உண்ணாவிரதமோ, என்ன அரசோ!

சரி; இருக்கட்டும். சாகும் வரை உண்ணாவிரதம், காலவரையற்ற உண்ணாவிரதம், ஒருநாள் உண்ணாவிரதம், அடையாள உண்ணாவிரதம் என்று பார்த்து விட்ட நமக்கு இப்போது, அன்னா ஹஸாரேவும் அரசும் சேர்ந்து ‘பேர நேர உண்ணாவிரதம்’ என்ற புதிய வகை உண்ணாவிரதத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது, ஒரு புரட்சிதான்.

அரசு ஏன் இப்படி நடந்து கொண்டதோ, தெரியவில்லை. அன்னா ஹஸாரே, ஜெயிலை விட்டு வெளியே போக மறுத்தார். ஜெயில் கைதியாகவோ, ஜெயில் அதிகாரியாகவோ இல்லாமல், அனுமதியின்றி ஜெயிலில் எப்படி இருக்க முடியும்? அது என்ன ஹோட்டலா, இல்லை சத்திரமா அல்லது எவரெஸ்ட் லாட்ஜா?

பேசாமல், அவரை மரியாதையுடன் ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, சாமி பல்லக்குத் தூக்குகிற மாதிரி நாற்காலியோடு தூக்கிக் கொண்டு வந்து, ஜெயில் கதவிற்கு வெளியே மதிப்புடன் விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவருடைய ஆதரவாளர்கள், ‘அன்னா ஹஸாரேவை உள்ளே தள்ளு’ என்று போராடியிருக்க முடியுமா? அல்லது அவர்தான் ‘என்னை உள்ளே விடு’ என்று கூச்சல் கிளப்பி, ஜெயில் கதவுகளை மடால் மடால் என்று தட்டியிருக்க முடியுமா? ‘ஜெயிலில் என்னை போடுகிற வரை உண்ணாவிரதம்’ என்று அவர் கூறியிருந்தால், அவருடைய ஆதரவாளர்களுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டிருக்குமே!

அரசு, நிபந்தனைகளை விதிக்காமலே இருந்திருக்க வேண்டும். சரி, விதித்ததுதான் விதித்தார்கள்; அதற்குப் பிறகு ஏன் பதட்டம்? பாராளுமன்றத்தில் பிரதமர்தான் தெளிவில்லாமல் பேசினாரே தவிர, சிதம்பரம் தெளிவாகவே விளக்கினார். அவர் கூறியபடி, அரசு நிபந்தனைகளை விதித்தபோது, ஒரு ‘காந்தியவாதி’ என்கிற முறையில் அன்னா ஹஸாரேவுக்கு மூன்று வழிகள் இருந்தன. ஒன்று – நிபந்தனைகளை ஏற்பது; இரண்டு – நிபந்தனைகளை எதிர்த்து நீதிமன்றம் செல்வது; மூன்று – நிபந்தனைகளை மறுத்து, சட்டத்தை மீறி, அதன் விளைவுகளை ஏற்பது.

இதில் முதல் இரண்டு நடக்கவில்லை. மூன்றாவது? அன்னா ஹஸாரேவின் ஆதரவாளர்கள், சட்டத்தின் விளைவை அவர் சந்திப்பதை விரும்பவில்லை. அரசை எதிர்த்தார்கள். இது சாதாரணமாக நடப்பதுதான். ஆனால், மத்திய அரசு பயந்து விட்டது; பேரம் பேச முனைந்தது.

மத்திய அரசின் பயத்திற்கு அன்னா ஹஸாரே காரணம் அல்ல; அவருக்குக் கூடிய கூட்டமும் காரணம் அல்ல. அன்னா ஹஸாரேவுக்கு, டெலிவிஷன் சேனல்கள், ஒன்றுக்கு ஒன்று பரஸ்பரப் போட்டா போட்டியில் இறங்கி, வரிந்து கட்டிக் கொண்டு கூட்டம் சேர்க்கத் தொடங்கி விட்டன.

நேரில் வராதவர்களும் இன்புறும் வண்ணம், அவர்களுடைய மெஸேஜ்கள் கோரப்பட்டன. கிரிக்கெட் மேட்ச்களில் நடக்கிற மாதிரி, கூட்டத்தில் போஸ்டர்கள் பிடித்தவர்களைக் கேமிராக்கள் நன்கு கவனித்தன. குழந்தைகள் கூட, ஊழலுக்கு எதிராகப் பேசி, டெலிவிஷனில் தோன்றி, பெற்றோரைப் பெருமைப்படுத்தின. ஊழல், என்ன பெரிய ஊழல்! மழலைக்கு எதிரே ஊழல் எம்மாத்திரம்? சிதம்பரம் இனிது, கபில் சிபல் இனிது என் போர், டெலிவிஷனில் தம் குழந்தை மழலைச் சொல் கேளாதோர்!



நல்லவேளை. அரசு பிழைத்தது. டெலிவிஷன் சேனல்கள் ‘மெஸேஜ் அனுப்புங்கள், ஆதரவு தெரிவியுங்கள், உங்கள் பெயரைக் காட்டுகிறோம்’ என்று அறிவித்தனவே தவிர, ‘முதல் ஐந்து மெஸேஜ்களுக்கு மாருதி கார் பரிசு!’, ‘ஒரு வாக்கியம் முழுமையாகப் பேசுகிற குழந்தைக்கு ஒரு தங்க நகை இனாம்!’... என்றெல்லாம் அறிவிக்கவில்லை. அப்படி மட்டும், டெலிவிஷன் சேனல்கள் முனைந்திருந்தால், ஊழல் எதிர்ப்புப் போர், மேலும் உக்கிரம் அடைந்திருக்கும்.

இப்போதே, இந்த டெலிவிஷன் போரின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. ‘15 நாள்’ என்ற பேரத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அன்னா ஹஸாரே, வெளியில் வந்து கூட்டத்தைப் பார்த்தபின், ‘எங்களுடைய லோக்பால் மசோதாவைத்தான் பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும். அதற்கு 10 நாள் டைம் தருகிறேன். அப்படி நிறைவேற்றாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம்’ என்று அறிவித்திருக்கிறார். இது என்ன காந்திய வழியோ! ‘ஜெயிலில் அரசிடம் பேசியது ஒன்று; வெளியே வந்து பேசுவது வேறொன்று – என்பதுதான் காந்தியம்’ என்று சொல்பவர்கள், காந்தியத்திற்குப் பெருமை சேர்ப்பவர்கள் அல்ல.

இது சரியான வழிதான் என்றால், நாளையே ஒரு ஷாருக்கானோ, ஒரு அமிதாப்பச்சனோ, பெரும் கூட்டத்தைக் கூட்டி, ‘இந்திய கிரிமினல் சட்டம் சரியில்லை; நாங்கள் ஒரு கிரிமினல் சட்டம் தயாரித்திருக்கிறோம்; ஜன் கிரிமினல் சட்டம்! இதை பாராளுமன்றம் பத்து நாட்களில் நிறைவேற்றா விட்டால், சாகும் வரை உண்ணாவிரதம்’ என்று அறிவித்தால் – ஜன் கிரிமினல் சட்டம் வர வேண்டியதுதானா? கூட்டம்தானே கணக்கு? ஷாருக்கானுக்கும், அமிதாப் பச்சனுக்கும், அன்னா ஹஸாரேவுக்கு வருவது போல நூறு மடங்கு அதிக கூட்டம் வருமே! டெலிவிஷன் சேனல்களுக்கு அது லட்டு அல்லவா! வேறு நிகழ்ச்சியே டெலிவிஷனில் வராதே! குழந்தைகளுக்கும் ஜோர்! மெஸேஜ்களுக்கும் கன ஜோர்! அப்புறம் என்ன, வெற்றிதானே? இதுதான் ஒரு பாராளுமன்ற ஜனநாயகத்தை நடத்திச் செல்கிற வழியா? இது, ஜனநாயகம் அல்ல; டெலிவிஷன் நாயகம்.

இப்படியாகத்தானே, இந்த சேனல்கள் கொடுத்த ‘கீ’ நன்றாகவே வேலை செய்திருக்கிறது. அன்னா ஹஸாரேவே இதில் மயங்கிப் போய், தன்னுடைய இயக்கத்தை, ‘இது இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று வர்ணித்துக் கொண்டு விட்டார். மற்றவர்கள் ஜெயப்ரகாஷ் நாராயண் இயக்கத்தை மறந்து இருக்கலாம். இவர் மறக்கலாமா? ஊழலுக்கு எதிராக, ஜெ.பி. நடத்திய இயக்கத்திற்குக் கிட்டிய ஆதரவைக் கண்டு, அன்று பிரமித்தது – இன்றைய பிரதமரைப் போன்ற பலவீனமான ஆட்சியாளர் அல்ல – பலம் மிக்கவராகத் திகழ்ந்த இந்திரா காந்தி! மற்ற கட்சிகளை நம்பி நடத்தப்பட்டது அல்ல அவருடைய அரசு. அசுர பலம் பெற்றிருந்த அவரே திகைத்துப் போய், அரசுக்கு ஆபத்து என்று பயந்து, (ஒரு நீதிமன்ற உத்திரவும் சேர) எமர்ஜென்ஸியைக் கொண்டு வந்தார். பல தலைவர்கள், பத்தொன்பது மாதம் தனிமைச் சிறையில் இருந்தனர். ஜெ.பி. யின் அந்தப் போராட்டம் ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று பின்னர் பாராட்டப்பட்டது. ஆனால், அன்னா ஹஸாரே அதை அமுக்கி விட்டு, தன் இயக்கத்திற்கு ‘இரண்டாவது சுதந்திரப் போர்’ என்று, தானே பட்டம் சூட்டுகிறார்!



சரி, மக்கள்? அன்னா ஹஸாரேவிடம் மன உறுதி இருந்தால், அவருடைய இயக்கத்தை நம்பலாம். ஆனால், தன்னுடைய உறுதியின்மையை, அவரே பிரகடனப்படுத்திக் கொண்டதை எப்படி மறப்பது?

குஜராத் அரசைப் பாராட்டி விட்டு – தன்னுடைய மதச்சார்பின்மை சகாக்கள் முணுமுணுத்த உடனே பயந்துபோய், ‘நான் அங்குள்ள முன்னேற்றத்தைத்தான் பாராட்டினேன். வேறு ஒன்றுமில்லை...’ என்று மழுப்பி – அப்போதும் மதச்சார்பின்மை கூட்டத்தின் முனகல்கள் ஓயாததால், ‘குஜராத்தில் மகா ஊழல். எதற்கெடுத்தாலும் லஞ்சம். எனக்கு இப்போதுதான், இங்கு வந்த பிறகுதான் இது தெரிந்தது’ என்று ஒரு குட்டிக் கரணம் அடித்து, கன்னத்தில் போட்டு கொண்டார் இவர்.

ஒன்று – காங்கிரஸ்காரர்கள் மாதிரி ‘குஜராத்தில் எல்லாமே அநீதி’ என்று கூறுகிற பிடிவாதமாவது இருக்க வேண்டும். அல்லது ‘இந்தியாவிற்கே முன் மாதிரி குஜராத்’ என்று கூறுகிற நேர்மைத் துணிவாவது வேண்டும். அதுவுமில்லாமல், இதுவுமில்லாமல், அப்படி ஒருநாள், இப்படி ஒருநாள் என்று பேசி, தன் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள முனைகிற இவரிடம், எப்படி மன உறுதியை எதிர்பார்ப்பது?

மத்திய அரசு, முதலிலேயே இவருடன் பேச முனைந்தபோது, அதை சர்வ கட்சி முயற்சியாக மாற்றியிருந்தால், எல்லா கட்சியினருமே ‘லோக்பாலின் கீழ் பிரதமர் கிடையாது; நீதித்துறை கிடையாது’ என்ற நிலையை எடுத்திருப்பார்கள். அப்போது அன்னா ஹஸாரே பாடுதான் திண்டாட்டமாகி இருக்கும். ஆனால், ஆட்சியாளர்கள் ஆரம்பத்தில் தாங்களே பேசி, தாங்களே தீர்மானித்து, தாங்களே ஒரு சாதனை புரிந்துவிட்ட மாதிரி, காட்டிக் கொள்ள முனைந்தார்கள்.

அந்தத் தவறிலிருந்து, தொடர்ந்து தவறாகவே இந்த விவகாரத்தை அணுகி வருகிறது மத்திய அரசு. இறுதியில், அன்னா ஹஸாரே மீது அவதூறு பிரச்சாரத்தைக் கொட்டுவது என்று அரசு தரப்பு கேவலமாக முனைந்தபோது, அவர்களுடைய வீழ்ச்சி முழுமை பெற்றது.

லோக்பால் வந்து எதையாவது புதிதாகச் சாதிக்கப் போகிறதா? சட்டங்களா இல்லை? ஊழல் தடுப்புச்சட்டம், இந்திய கிரிமினல் சட்டம் போன்றவற்றின் கீழ், இப்போது யாரும் போராடாமலேயே பிரதமரும் வருகிறாரே? இன்று 2-ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல் போன்றவை விசாரிக்கப்பட யார் காரணம்? லோக்பாலா? அன்னா ஹஸாரேவா? சுப்ரீம் கோர்ட் முனைந்தது; தணிக்கை அதிகாரி முனைந்தார்; விசாரணைகள் நடக்கின்றன.

ஆக, சட்டம் மட்டும் ஊழலை ஒழிக்காது; அதை நிர்வகிப்பவர்கள் நேர்மையாளர்களாக இருக்க வேண்டும்; இன்றைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, மத்திய தணிக்கை அதிகாரியைப் போல, தேர்தல் கமிஷன் என்றும்தான் இருக்கிறது. ஆனால், அது இருப்பதே டி.என். சேஷன் வந்தபின்புதானே தெரிந்தது? அதுவரை தேர்தல் கமிஷன், அரசின் ஒரு இலாகா போல் அல்லவா செயல்பட்டது? பாட்டு முக்கியம்தான் – ஆனால் பாடகர் மிக முக்கியம்; இல்லாவிட்டால் பாட்டு கெடும்.

ஒவ்வொரு முக்கியப் பதவியிலும் நேர்மையாளர்கள் அமைவதற்கு, மக்கள்தான் வழி செய்ய வேண்டும். தமக்குரிய வாக்கை, இதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மக்கள் முனைகிறபோதுதான், ஊழல் ஒழிப்புக்கு வழி பிறக்கும்.

அதுவரை, டெலிவிஷன் மெகா சீரியல் நடக்கும். வில்லனாக அரசும், ஹீரோவாக அன்னா ஹஸாரேவும், காமெடியனாக கிரண் பேடி போன்றவர்களும் நடிக்கிறார்கள். பார்த்தால் பொழுது போகும்.

அன்னாவிற்கு டில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் நன்றி கூற வேண்டும். கடந்த 11 நாட்களாக அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை !

38 Comments:

Roaming Raman said...

சோ அவர்கள் சொல்வதில் பல ஒப்புக் கொள்ளக் கூடிய உண்மைகள் இருந்தாலும்,அவர் ஹசாரே அவரகளைத் தொடர்ந்து இந்த அளவுக்கு தாக்கி எழுதத் தேவை இல்லை.ஹசாரேவை விளம்பர மாடல் மாதிரி டிவி சேனல்கள் ஆக்கி விட்டது உண்மை. ஆனாலும் இன்றைய தேதியில் ஊழலுக்கு எதிரான ஒரு புரட்சி/ ஒரு அவேர்நஸ்- இந்த அளவுக்கு நாடு முழுதும் ஏற்படுத்தப் பட வேண்டிய தேவை இருந்ததை ஒப்புக்கொள்ள வேண்டாமா? இல்லையென்றால் இந்த "சோனியாயாவும் நானூறு திருடர்களும்" கொஞ்சம் கூட அஞ்சாமல் வெட்கம் இன்றி சுரண்டிக் கொண்டே இருந்திருக்க மாட்டார்களா? சோ வின் கருத்தில் இருப்பது இரண்டே: ஒன்று ஜேபி இன செயல்களுக்கு முன் இது ஒன்றும் பெரிதில்லை என்பது- அது உண்மையேயானும்- அன்றில்லாத மீடியா பலம் இன்று பயன் படுகிறது! இரண்டாவது இப்போதிருக்கும் சட்டங்கள் போதாதா என்ற கேள்வி- இந்த சட்டங்களின் துணையோடுதான் இவ்வளவு கறுப்புப் பணம் நாடு கடத்தப் பட்டிருக்கிறது! இன்றைய தேவையின் மாற்றத்தை சோ அவர்கள் உணர வேண்டாமா??
-ரோமிங் ராமன்

R. Jagannathan said...

சோ பலப் பல வருஷங்களாக எழுதுகிறார், பேசுகிறார் - அதனால் எழுத்து நடை சீராக இருப்பதில் ஆச்சரியமில்லை. மேலும் வக்கில் வேறு. எந்த வாதத்தையும் சரி போல வைக்கும் சாமர்த்தியம் ஒன்று. நிச்சயம் சில விஷயங்களில் அவர் நிலைப்பாடு சரியானதே. இதற்கு மேல் அவை எழுதுவது / பேசுவது எல்லாமே சரி என்று நினைப்பவர்கள் சுயமாக சிந்திக்க முடியாத அல்லது சோவின் பரம ரசிகராக மட்டுமே இருக்க வேண்டும்.
மீடியாக்கள் கவரேஜ் இருக்கட்டும். டைம்ஸ் கணிப்புக்கு வந்த மெஸேஜ்கள் 27 லக்‌ஷத்தை தாண்டிவிட்டன. இது ஒரு முதல்.
அன்னாவின் மேல் என்ன ஆக்‌ஷேபங்கள் இருந்தாலும், அவரின் போராட்டம் நேர்மையானது, அவசியமானது என்பதில் கருத்து வேறுபாடு கூடாது. அன்னா கைது, விடுதலை ஆகியவற்றில், அரசு மிக மோசமான முடிவுகள் எடுத்தது என்று சோ எழுதியிருப்பதில் தவறே காணமுடியாது. அதேபோல் ஜெ.பி.யின் போராட்டம் தான் 2-ஆம் சுதந்திரப் போர் என்பதும் சரியே. அதன் பின் எமெர்ஜென்சி வந்தாற்போல் இப்போது வராமல் தடுக்க, அன்னாவுக்கு எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம், காலத்தின் கட்டாயம். சோ அவர்கள் இந்த உண்ணாவிரதம் போகும் பாதையையும் மக்களின் மீடியா மோகத்தையும் ’ப்ளோ அப்’ செய்யாமல், நோக்கத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
-ஜெ.

kothandapani said...

16 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி போல, 20 ஆண்டுக்கு ஒரு முறை இந்திய அரசியலில் ஏற்படும் எழுச்சி (கூத்து) இது. இதற்க்கு முன்னர் ஜேபி ஒரு எழுச்சியை தந்தார். விளைவு... ஊழலுக்கு புது பரிமாணங்கள் தந்த லாலு, முலாயம் போன்றோரின் ஜனனம். எதாவது நல்லது நடக்காதா
என்று எங்கும் இந்திய மக்களுக்கு தற்போதைய வடிகால் ஹசாரே. இதில் மக்களை குறை கூற ஒன்றும் இல்லை. ஆட்சியை விட்டு ஜயாவை வீடிற்கு அனுப்பிய அதே சோ தானே தற்போது அவரை ஆட்சியில் அமர வைக்க பாடு பட்டார். டிவி மீடியாக்களை சோ சாடுவது, கருணாநிதி தனது
தோல்விக்கு மீடியாக்கள் தான் காரணம் என்று சொல்வதை ஏற்பதுக்கு சமமாகும். ஆமாம், 2G ஊழலில் ஏதே நடப்பது போல எல்லாரும் பீற்றிகொல்வது புரியாத புதிர். என்ன இன்னும் ஒரு மாதம் உள்ளே இருப்பர்கள ராசாவும், கனியும்.. அப்புறம் .... சுதந்திர பறவைகள்தான். 1500 கோடிக்கு ஒரு ஆறு மாசம் தான் தண்டனை என்றால் கசக்கிறதா . எப்பொழுது அதிமுக ஆட்சியை பிடித்ததோ அப்போதோ 2G ஊழல் விவகாரத்தின் பயன் அடைந்தாகிவிட்டது. இனி அந்த வழக்கு உப்பு சப்பில்லாத யாருக்கும் பயனற்றது. ஹசாரே போராட்டத்தால் மத்திய ஆட்சி மாறும் என்ற நிலை இருந்தால்
பிஜய்பி , சோ போன்றோரின் கூப்பாடு வேறு மாதிரி இருந்திருக்கும்

middleclassmadhavi said...

இப்படியும் ஒருவர் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் தான்!
இருந்தாலும் பிரபல சூப்பர் ஸ்டார்கள் உண்ணாவிரதம்.. சட்டதிட்டம்.... நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது!

guna said...

சோ அவர்கள் சொல்வதில் பல ஒப்புக் கொள்ளக் கூடிய உண்மைகள் இருந்தாலும்,அவர் ஹசாரே அவரகளைத் தொடர்ந்து இந்த அளவுக்கு தாக்கி எழுதத் தேவை இல்லை. please read jeyamohan.in . thankyou

Anonymous said...

We have always been let down by these pseudo intellectuals like Cho. the core of his argument in the article is that the people are fools. let me explain. when you say Shahrukh khan or Amitabh can do the same like Anna, it is insulting the intellect of the people. we have seen in Tamilnadu again and again that it doesnt work. for example if people were fools they would have listed to Vadivelu/Kushbu during the last elections and voted for DMK . but it didnt happen. why? people are clear about what they want. But the politicians have not moved ahead with time...our political commentators have not moved ahead with time...Cho's article seems as if it was written before independence !. people have changed and matured, and are starting to understand democracy. for example sake, let us assume that the crusade against Corruption fails.. so what? this will be seed for future movements. People like Cho (Pseudo intellectuals) have not done anything for this country apart from insulting it's people again and again...we can see this in our policy making as well.. that is, the fear of making mistakes or failing..in the end, we think so much and implement poicies that eventually fail..example: Indian government's involvement in the last Eelam war. the ultimate benefactor was China, which is building their navalbase, commercial airport and supplying advanced arms...India thought it was doing something clever but we can see the results today that even a country like Srilanka has no respect for us...our inability to take bold decisions, to do things that mater to the nation is affecting us. and this is because of the stone age educated people like Cho. Arundhadhi Roy has expressed similar comments as well. it's just that they think they should be the only source for Media on critical issues, to express their thoughts. when a common man does express his thought through Media, these pseudo intellectuals slam the common man...let the common man for once in this country so something for themselves...our policies were always decided by the Elite and all they did was to take care of themselves...when the common man raises up they try to slam it, rubbish it and forcefully control it using government machinery, media, because they will loose control... but even if they suppress it now, they cannot suppress it in the future.
_Kannan

Anonymous said...

We have always been let down by these pseudo intellectuals like Cho. the core of his argument in the article is that the people are fools. let me explain. when you say Shahrukh khan or Amitabh can do the same like Anna, it is insulting the intellect of the people. we have seen in Tamilnadu again and again that it doesnt work. for example if people were fools they would have listned to Vadivelu/Kushbu during the last elections and voted for DMK . but it didnt happen. why? people are clear about what they want. But the politicians have not moved ahead with time...our political commentators have not moved ahead with time...Cho's article seems as if it was written before independence !. people have changed and matured, and are starting to understand democracy. for example sake, let us assume that the crusade against Corruption fails.. so what? this will be seed for future movements. People like Cho (Pseudo intellectuals) have not done anything for this country apart from insulting it's people again and again...we can see this in our policy making as well.. that is, the fear of making mistakes or failing..in the end, we think so much and implement poicies that eventually fail..example: Indian government's involvement in the last Eelam war. the ultimate benefactor was China, which is building their navalbase, commercial airport and supplying advanced arms...India thought it was doing something clever but we can see the results today that even a country like Srilanka has no respect for us...our inability to take bold decisions, to do things that mater to the nation is affecting us. and this is because of the stone age educated people like Cho. Arundhadhi Roy has expressed similar comments as well. it's just that they think they should be the only source for Media on critical issues, to express their thoughts. when a common man does express his thought through Media, these pseudo intellectuals slam the common man...let the common man for once in this country so something for themselves...our policies were always decided by the Elite and all they did was to take care of themselves...when the common man raises up they try to slam it, rubbish it and forcefully control it using government machinery, media, because they will loose control... but even if they suppress it now, they cannot suppress it in the future.

-KANNAN

Admin said...

அன்பான தமிழ் வலைப் பதிவர்களுக்கு வணக்கம்.

"தேன்கூடு" தமிழ் வலைப் பதிவு திரட்டி சில நண்பர்களின் உதவியுடன் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.

தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

Anonymous said...

Cho nd Idly vadai kind of people are armchair philosophers ....Though i hav many issues contradict to anna hazare , i support him cos through which politicians can understand that they no longer cheat people...Anyway, cho call himself as political kingmaker whose clients have money in swiss banks or any foreign banks...So CHO does his job in advocating for his clients..Its not a big big suprise!!!....Pity is people who worked, earned benefits under British enjoyed many benefits even after Independence...Such people always criticise other good things bcos they in their life never ever struggled to earn a single paisa..their grandfathers wud have earned by obeying british, now they earn thru obeying our politicians....

பாரதி மணி said...

மற்றவர்கள் அண்ணாவை பயன்படுத்துகிறார்களோவென ஓர் ஐயம் ஏற்படுகிறது. இன்று பிரசாந்த் பூஷண், கிரண் பேடியைத்தவிர்த்து, மேதா பட்கர் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டார்.

கிரண் பேடிக்கு ரயில்வேயில் Pointsman உத்யோகம் கொடுக்கலாம். நன்றாக கொடி ஆட்டுகிறார்! ஓ! வயதாகிவிட்டதோ? நேற்று அவர் நடத்திய ‘நாடகம்’ அவலத்தின் உச்சம்.

Anonymous said...

சிரிக்காமல் படிப்பவர்களுக்கு அன்னா ஹசாரவின் சொத்தில் பாதியும், அவர் குடிக்கும் ஜூசில் ஒரு காப்பும் கொடுக்கப்படும்........

Anonymous said...

don't agree with cho

Nilavan said...

//ஒவ்வொரு முக்கியப் பதவியிலும் நேர்மையாளர்கள் அமைவதற்கு, மக்கள்தான் வழி செய்ய வேண்டும். தமக்குரிய வாக்கை, இதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மக்கள் முனைகிறபோதுதான், ஊழல் ஒழிப்புக்கு வழி பிறக்கும்.// சோ


ஆட்சி மாறுவதால் ஊழல் ஒழிந்து விடாது என்பது சோவுக்கும் தெரியும். பின் ஏன் இப்படி எழுதுகிறார் ? லோக்பால் மாதிரி கடுமையான சட்டம் வந்தால் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் கூட நெடுநாள் தாக்கு பிடிக்க முடியாது என்று தான்.

மக்கள் ஒட்டு போட்டால் ஒரு ஊழல் கட்சி போய இன்னொரு ஊழல் கட்சி ஆட்சிக்கு வரும் அவ்வளவு தான். இந்த சட்டத்தின் மூலம் தான் ஊழலை கட்டுப்படுத்த முடியும். சட்டம் வருவதற்கு முன்பே லோக்பால் சட்டத்தைக்கண்டு பயப்படும் அரசியல்வாதிகளைப் பார்த்தாலே இது விளங்கும்.

தேர்தலில் நேர்மையானவர்கள் நின்றால் தானே மக்களால் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க முடியும்? அரசியலில் நேர்மையானவர்கள் வருவது அபூர்வம்.
அப்படியே வந்தால் கூட, ஊழலுக்கு பலிகடாவாக ஆக்கப்பட்டுவிடுவார்கள்.

பாராளுமன்றத்தின் செயல்பாட்டுமுறையும், எலெக்ஷன் கமிஷன் செயல்பாட்டு முறையும் வெவ்வேறு ஆகும்.

டி என் சேஷன் பிரதமராக வந்தால் கூட இதுபோன்ற கடுமையான சட்டம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது.

யதார்த்தத்தில் நடக்க முடியாத ஒன்றைப் பற்றி சோ எழுதியிருக்கிறார்.


இந்த சட்டம் வந்தால் பொதுமக்களுக்கு என்ன என்ன தீமைகள் ஏற்படும் என்பதை சோ விளக்குவாரா?

-நிலவன்

Nilavan said...

//இந்த சட்டங்களின் துணையோடுதான் இவ்வளவு கறுப்புப் பணம் நாடு கடத்தப் பட்டிருக்கிறது! இன்றைய தேவையின் மாற்றத்தை சோ அவர்கள் உணர வேண்டாமா??//
-ரோமிங் ராமன்

நன்றாக சொன்னீர்கள் ராமன் அவர்களே.

-நிலவன்

sheik.mukthar said...

Hi I have shared your points in FB with out yr permission, Thanks!

Shri Hari said...

பெற்ற பிள்ளையால் தவிக்கவிடப்பட்ட சோனியா... இவருக்கு அமெரிக்காவில் அறுவை சிகச்சை நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் பெற்ற பிள்ளைகளான ராகுலோ அல்லது பிரியங்காவோ அவரை அருகில் இருந்து பார்த்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. ராகுலாவது நாட்டுக்காக ஏழைகள் விட்டில் டீ குடித்து கொண்டு இருக்கிறார். பிரியங்கவுக்கு என்ன ஆயிற்று. ராகுல் காந்தி கொலை குற்றவாளி நளினியை சந்திக்க நேரம் கொடுத்தவள் தனது தாயின் அறுவை சிகச்சை பொழுது உடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.... அய்யோ பாவம்


கடைசி அய்யோ பாவம்... சோனியா அல்ல நாம் தான் :(

Shri Hari said...

சோவுக்கு மூலை மங்கி விட்டது. ஏன் இவர் எதாவது நடவடிக்கை எடுத்து லோக் பால் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து இருக்கலாம். எடியுரப்பாவை வாய்க்கு வந்த படி பேசிய இவர் அவரை விட பல மடங்கு ஊழல் செய்த ஜெயலலிதா பற்றியோ அல்லது சசிகலா பற்றியோ வாயே திறக்க மாட்டார். இவன் சொல்றதை எல்லாம் கேட்க வேண்டி இருக்கிறது... கொடுமை

govindaraj said...

நம்மை மாதிரி சாதாரண ஜனங்களுக்கு இப்போது வேண்டியது ,
யாராவது உண்மையாகவோ அல்லது போலித்தனமான
விளம்பரத்துக்காகவோ ஊழலை எதிர்த்து போராடி , ஊழல்
செய்பவர்களின் வயிற்றில் புளியை கரைக்கவேண்டும்.
இதில் சோ போன்ற குழப்பவாதிகள் மற்றும் இரட்டை வேஷம்
போடுபவர்கள் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நாட்டுக்கு சேவை
செய்வதாகும்.

thalir said...

அருமையான வாதங்கள்! ஆயிரம் ஹசாரேக்கள் வந்தாலும் ஊழல் ஒழியாது! ஹசாரே இப்போது பிளாக் மெயிலராக மாறி தினம் ஒரு நிபந்தனை விதிக்க ஆரம்பித்து விட்டார். கையாலாகாத மத்திய அரசால் தான் இந்த கேலிக் கூத்து அரங்கேறி வருகிறது.

ஷண்முகா said...

//இந்த சட்டங்களின் துணையோடுதான் இவ்வளவு கறுப்புப் பணம் நாடு கடத்தப் பட்டிருக்கிறது! இன்றைய தேவையின் மாற்றத்தை சோ அவர்கள் உணர வேண்டாமா??
-ரோமிங் ராமன்//
சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை சரியாக செயல்படவில்லை. பத்தோடு பதினொன்றாக இந்த சட்டமும் சேர்க்கப்படும் பின்னர் மீறப்படும்.
சட்டங்கள் மிகச் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அதற்குத் திறமையான அதிகாரிகளும் அரசியல் தலையீடில்லா நிலையும் வேண்டும்.

சோ சொன்னதைக் கவனியுங்கள்

//ஊழல் தடுப்புச்சட்டம், இந்திய கிரிமினல் சட்டம் போன்றவற்றின் கீழ், இப்போது யாரும் போராடாமலேயே பிரதமரும் வருகிறாரே//

வாகனத்தில் கோளாறு என்றால் புதியது வாங்கலாம். ஆனால் வாகனம் வாங்கி பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அழுக்காகத்தான் செய்யும். அதைச் சுத்தப்படுத்த வேண்டுமே தவிர புதிய வாகனம் வாங்குவதால் பயனில்லை. பிரச்சினை வாகனத்திலா இல்லை பயன்படுத்துவதிலா என்பதுதான் கேள்வி.

Jayadev Das said...

\\ஒவ்வொரு முக்கியப் பதவியிலும் நேர்மையாளர்கள் அமைவதற்கு, மக்கள்தான் வழி செய்ய வேண்டும். தமக்குரிய வாக்கை, இதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மக்கள் முனைகிறபோதுதான், ஊழல் ஒழிப்புக்கு வழி பிறக்கும்.\\ இதென்ன கேனத் தனமாக இருக்கு, மக்கள் தங்களது பிரதிநிதிகளை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும், அதுவும் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை. ஒவ்வொரு முக்கிய பிரதிநிதியையும் எங்கே போய்த் தேர்ந்தெடுக்க முடியும்? அப்படித் தேர்ந்தெடுத்த பின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவன் கொள்ளையடித்தாலும் கேட்க வழியில்லையே? தற்போது ஊழலைத் தடுக்க ஒரு அமைப்பு வேண்டும், அது வந்ததற்க்கப்புரம் அதை நடத்துபவர்கள் நேர்மையானவர்களா என்ற கேள்வி வரும். அது வருவதற்கு முன்னரே அதை நடத்துபவர்கள் நேர்மையானவர்களாக இல்லாவிட்டால் என்னாவது என்பது பிற்ப்போக்குத் தனமான கேள்வி.

Anonymous said...

என்ன ஒரு அகம்பாவமான ஆதிக்க சாதி மனோபாவக் கட்டுரை! அன்னாவின் போராட்டம் ஏதோ ஒருவகையில் வெற்றி பெற்றால் அதனால் பலனடையப்போவது தலித்துகளும் பிற சாதியினரும் என்பதை உணர்ந்து கொண்ட சோ ராமசாமி, ஞானி போன்ற பார்ப்பனர்கள் அதனை முழுமூச்சாய் எதிர்க்கிறார்கள். இப்போது இருக்கும் சட்டங்களை வைத்துக்கொண்டு எத்தனை ஊழல்வாதிகளை வழக்கறிஞர் சோ ராமசாமி சிறைக்கு அனுப்பி இருக்கிறார்? எங்கே ஒரு உதாரணம் கொடுங்கள்? நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமாம்! சோ ராமசாமி சொல்கிறார்! ஜெயலலிதா எந்தவகை தலைவர்? சோ அவரைஅல்லவே ஆதரிக்கிறார். இப்போது கூடத்தான் வாட் வரியை நீக்கியதில் கோடிக்கணக்கில் பணம் கை மாறியதாக தெரிகிறது. இப்போது இருக்கும் சட்டங்களை வைத்துக்கொண்டு சோ ராமசாமி என்ன செய்யப்போகிறார்? தி.மு.க.வினரின் கைது நாடகத்தில் நடக்கும் பின்னணி பேரங்களை அறியாதவரா சோ ராமசாமி? அடித்த கொள்ளையில் பங்கு கேட்க்கும் நாடகமல்லவா அது? சோ ராமசாமி போன்றவர்கள் எந்த வகையில் நீதிமான்கள்? அன்னா ஹசாரேவை குறை சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

பாரதி சே said...

தனிமனித மாற்றம்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியும்.
இருப்பினும் சில அமைப்புகள் தேவைப்படுகின்றது. ஏனென்றால் நாம் என்னதான் வளர்ந்துவிட்டிருந்தாலும் இன்னும் நமக்குள் சில கூறுகள் வழி நடத்தும், வழி நடத்தப்படும், எதிர்க்கும் தன்மை மற்றும் சாராத தன்மை என்று பல பரிமாணங்களில் உலவிக் கொண்டிருக்கின்றது. இப்போதுள்ள பெரும்பாலான மக்களின் எண்ணவோட்டமானது பின்வருமாறுதான் உள்ளது.," நான் சுட்டிக்காட்டுபவனாக மட்டுமேயிருக்க ஆசைப்படுகின்றேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு வெளிச்சம் கிடைத்தால் மகிழ்ச்சி. ஆனால் நான் தீக்குச்சியாகவோ, மெழுகுவர்த்தியாகவோ இருக்கமாட்டேன். வெளிச்சம் கிடைக்காத நிலையில் இருட்டிலேயே இருந்துகொள்கின்றேன், ஏனென்றால் எனக்கு அது புதிதல்ல."

Nilavan said...

ஐயா நான் சோவின் கருத்துக்கும் உங்கள் கருத்துக்கும் முரண் பட்டு எழுதியிருக்கலாம். ஆனால் அதில் என்ன தவறு கண்டீர்? ஏன் என விரிவான கடிதத்தை பிரசுரிக்கவில்லை? ரோமிங் ராமனின் கருத்தை நான் பாராட்டி எழுதியதை மட்டும் பிரசுரித்திருக்கிறீர்கள்.

அன்னா ஹசாரே சொல்லும் ஜன்லோக்பால் மசோதா நடைமுறைக்கு வந்தால் மக்களுக்கு என்ன என்ன தீமைகள் ஏற்படும் என்று சோ விளக்குவாரா என்று கேட்டு நான் எழுதிய விரிவான கடிதத்தை தயவு செய்து பிரசுரிக்கவும்.
-நிலவன்

Sakthi said...

Agree with Cho on his views.

Adien Ramanuja Dasan said...

ஐயா சோ ராமசாமி, ஊழல் பின்புலமில்லாத, உலகுத்தமரான ஒரு வேட்பாளரும் என் கண்ணில் படவில்லை அப்படியோருவரை எனக்கு தாங்கள் காட்டித்தந்தால் என் வாக்கை அவருக்கு சமர்ப்பிப்பேன். ஒன்று இறங்கி போராடு அல்லாத வாயை தற்சமயம் மூடு. லோக்பாளின் குறைகளை அது நிரைவேரியவுடம் சொல்லலாம். அதற்க்கு முன்பே அதன் காலை உடைப்பது ஊழலுக்கு ரத்னகம்பலம் விரிப்பதற்கு சமம். தன்னை ஞானி என கருதிக்கொள்ளும் சோ, ஞானி போன்றோரிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும். மேலும் சோ போன்றவர்களின் நேர்மையை அறிந்துகொள்ள சின்ன சங்கராச்சாரி யார் என்ற புத்தகத்தை பரிந்துரைக்கின்றேன். ஜெயமோகனின் வலைப்பக்கத்திருக்கு வாருங்கள். விமர்சனத்தின் காலம் உணர்ந்து விமர்சிக்கிறார்.

Sunantha said...

வெறும் அன்றாட அரசியல் நிகழ்வுகளை பகடி செய்து அறிவுஜீவி வேஷம் போட்டுக்கொண்டு அலைந்த cho-வின் தோலை அவரே உரித்துக்காட்டும் ஒரு
கேவலமான கட்டுரை..இவரைப் போன்ற இதழாளர்களுக்கு வரலாற்றுப்பார்வை, அசலான சிந்தனை , தொலைநோக்கு போன்ற எந்த இழவும் கிடையாது..சும்மா பாடப்புத்தகங்களைத் தவிர எதையுமே படித்தரிந்திராத அப்பாவி கூட்டத்தை ஏமாற்றி திரிந்த இவர் போன்ற பலபேர் அண்ணா ஹசாரே - yaal அம்பலப்பட்டிருக்கிறார்கள்..

அம்பலத்தார் said...

சோவின் வார்த்தைகளில் சில உண்மைகளும் இருக்கத்தான் செய்கிறது.

Anonymous said...

First of all, as Cho said everyone is covered in the existing law itself. There is no need for new laws. The main problem is no officials are dare enough to execute their powers. They either take sides with political parties or developed a don't care tendency and became selfish.

Even with this so called "Jan Lokpal" nothing is going to change if wrong persons sit in its chair. How can you stop this from happening?

If you really want to eradicate corruption in India, I beleive there is only one way. That is empowering the students with the knowldege of basic laws and their basic rights from the school stage itself.

How many of us know the basic rights we hold?
Most of the modern citizens really unaware of the laws of the constitution in which they Live in.

If a official ask for a bribe, how many of us questions him? a hanfull only and most of them are lawyers. Thats where the officials are getting their strength from. No one questions!!!

Create a new subject with basic laws so that a student will learn the basic rights he holds in the indian republic.

This methodolgy can be implemented in other college courses also. If he wishes to be a real professional lawyer he can do that by taking BL courese.

If this is done in a proper way, every youth in the future will know his right and will start to question the officials. The officials will have no other options otehr than to comply to the norms if every ones starts to question.



This is the only option that lies before us.

Muruks said...

Mister (Cho)Ramasamy, neenga verum raamasamya illa vellikilamai ramasamya?

ungalukku vayasagiduchu. Thats why you're never able to read the minds and moods of the Generation X today. They're far more brilliant than you, very responsible people and know what is good and what is bad for our country better than you "the negative publicity maniac". Thats why they dont buy tuglak. Loosaappa neee?

Anonymous said...

அன்னா ஹஸாரேயின் முயற்ச்சியை பாராட்டுபவர்கள் நல்லவர்களே. அவர்களில் பாப்பனரும் உண்டு;அவரைவிட உயர்ந்த பிறப்பினரும் அடக்கமே(தாழ்த்தப்பட்ட அல்லது தலித் என்று எழுதி மாட்டிக்கொள்ள விரும்பவில்லை; அதனால் இப்படி). ஏழைகள் மிக்க பயன் அடைவர் என்பது உண்மையே. ஏழைகளில் எல்லா பிறப்பினரும் உண்டு. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து, பல அப்பாக்களுக்குப் பிறந்த பல அரஸியல் வாதிகளையும், லஞ்ஜம் எனும் ”பீ”யைத் தின்னும் வெட்கங்கெட்ட பல ஆபீஸர்களையும் பலமாக கண்காணித்து, கைது செய்து 10 நாட்களுக்குள் தீர விசாரித்து, குறைந்த பக்ஷம் 25 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை அளிப்பதை லோக்பால் குழுக்கள் உறுதி செய்தால், இந்த முயற்சி பயனுள்ளது எனச்சொல்லலாம்.

Anonymous said...

நம் நாட்டுமக்களின் ஊழல் நிறைந்த வாழ்க்கைக்கு, இந்து மதம்வழி வந்த வாழ்க்கையே மூல காரணம். "தான் மட்டும்; தனக்கு மட்டும்; ஊரும் உலகமும் எக்கேடு கெட்டாலென்ன?" என்ற எண்ணங்கள் ஊடுருவிய வாழ்க்கையை இந்துமத வழிவந்த கலாச்சாரம் இந்தியர்களிடையே புகுத்து விட்டபடியால், இந்தியர் எந்த மதத்தைத் தழுவினாலும் இந்துஞானமரபு வழிவந்த மனச்சாயலோடு கலந்த வாழ்க்கைதான் வாழ்கிறார்கள்.

இந்து ஞானமரபு – அழுக்கு, அசுத்தம், முறையற்ற வாழ்க்கை (எல்லாமே சரி), ஹாயான ரிலாக்ஸான வாழ்க்கை, விதிப்படியே வாழ்க்கை, எனவே விட்டுவிடு; இன்னும் பல – இக்காலத்துக்குப் பொருந்தவில்லை. ஆனால் மற்றவர்களைக்கண்டு பொறாமைப்படுகிறோம். இந்துக் கலாச்சாரத்தினால் வரும் கேடுகளை வேண்டாம்; ஆனால் அது வரும் வழிகளை ஒன்றும் செய்ய முடியாது எனவும் ஏற்கிறோம்.

எனவேதான் ஊழல் கலாச்சாரத்தைக்கண்டு ஒன்றும் செய்வதில்லை. அதன் விளைவுகளை ஏற்றுக்கொள்கிறார்கள். சட்டங்கள் போடுகிறார்கள். ஆனால் நிறைவேற்ற முடியாமல் மக்களே தடுத்துக் கொள்கிறார்கள்.

சோ சொன்னமாதிரி ஹசாரேவின் போராட்டம் சட்டங்களின் எண்ணிக்கையைக் கூட்டும். தேர்தல் சீர்திருத்தம் வந்தால் சட்டக்குற்றவாளிகளில் மட்டுமே தடுக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் வேறுவழிகளைக் கையாளுவார்கள்.

இந்தியர்களின் வாழ்க்கைக் கலாச்சாரம் மாறாது. இப்படியே வாழ்க்கை போகும். லோக்பல் அமைப்பை ஆளப்போகிறவர்கள் இந்தியர்கள். அப்படியேதான் இருப்பார்கள். தொப்பிகள் மாறும். ஆட்கள் அதேதான்.

ஹஜாரேவின் மீது சோவின் அடிப்படை ஆதங்கம் அன்னா மோடியைப் புகழ்ந்து பின்னர் தள்ளிவிட்டதே.

vivek.dgl said...

Neenga yenna soovukku soombu adipavara. Naan pota commenta publish pannala. Appadina yethaku comment box.........Remove the comment box... (I am not anonymous).

Anonymous said...

What else to expect from CHO who supports JJ

Anonymous said...

@ vivek.dgl

may be idly vadai is expecting you to fast for your basic right like Hazare.

Let cho first try these thing before scribbling some thing

1) Try to book a successful tatkal ticket himself with out a agent

2) Go and register his propery with out paying a single penny extra or atleast take a driving license

3) feel the pain of Paying tax, including road tax from his salary and end up paying TOLL tax again when travelling in NH

more assignments if succesful in above :)
Also answer these questions

1) Explain how JJ eradicated power problem with in 2months (any one will laugh if u say you solved this in 2 months)

2) Changing of New Assembly to hospital. (the reason cited was it was not properly constructed when she moved to old one) when healthy MLAs cant escape in disaster how the hell she expects disease rodden patients to escape when some disaster is hit.

So which is true
1) she doesn care about people
2) The building is not of good quality ?

What ever it is - Cho never dared to go against corruption neither do I but i kept my mouth shut it would have been better if "cho" could have done the same :)

anand said...

everyone who wears a high powered specs on his face thinks that no one is intelligent than him.

These guys can analyze about50 books of different classes, each book having roughly 200 pages within a day's time and say that everything is wrong and waste.(samacheerukku sangu pudika muyarchi panniya buddhisaligal sanga thalavar post is waiting for these type of intelligent people)

I agree Mr CHO saying that media has bring more light to ANNA's agitation.But this brought a huge support from general pulic(oolalai olikka ninaikkum muttalgal sangam).

Finally
I have a question
Can Mr CHO make our Parliment to work on a Saturday??????
oolalai olikka ninaikkum muttalgal sangatthai cherndha ANNA HAZARE did that.This happened only because of media who brought the message to general pulic(oolalai olikka ninaikkum muttalgal sangam).

anand said...

everyone who wears a high powered specs on his face thinks that no one is intelligent than him.

These guys can analyze about50 books of different classes, each book having roughly 200 pages within a day's time and say that everything is wrong and waste.(samacheerukku sangu pudika muyarchi panniya buddhisaligal sanga thalavar post is waiting for these type of intelligent people)

I agree Mr CHO saying that media has bring more light to ANNA's agitation.But this brought a huge support from general pulic(oolalai olikka ninaikkum muttalgal sangam).

Finally
I have a question
Can Mr CHO make our Parliment to work on a Saturday??????
oolalai olikka ninaikkum muttalgal sangatthai cherndha ANNA HAZARE did that.This happened only because of media who brought the message to general pulic(oolalai olikka ninaikkum muttalgal sangam).

Anonymous said...

the nation now needs a small spark against corruption. the people will always support anti corruption by any genuine persons though it is not anna. A seed of anger is planted now. Atleast let us take the first step towards the corruption. KUMARESAN42