பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 10, 2011

கல்கி, துக்ளக், தினமணி - மாறன்


கல்கி, துக்ளக், தினமணியில் வந்த கட்டுரைகள் மிக முக்கியமானவை. திமுகவினர் அனைவரும் டெல்லியில் ஒரே இடத்தில் இருப்பது போல இந்த மூன்று கட்டுரைகளும் ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று இங்கே...
குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி..? மாறன் கூற்றைப் பொய்யாக்கும் பிஎஸ்என்எல் கடிதம்! - எஸ். குருமூர்த்தி


""என்னுடைய பெயரிலோ அல்லது 3/1 போட் கிளப் அவின்யு வீட்டிலோ 24371500 என்ற எண்ணுள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி மட்டுமே உள்ளது. 323 இணைப்புகள் உள்ளன என்று "தினமணி' நாளிதழில் வந்த செய்தி தவறானது. உண்மையை ஏன் அவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து கேட்டு பெற்றிருக்கக் கூடாது ?'' என்று ஜூன் மாதம் 2ம் தேதி தயாநிதி மாறன் ஏதோ தான் தவறே செய்யாதது போலவும் தம்மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டார்.

பி.எஸ்.என்.எல். இணைய தளத்திலேயே தயாநிதி மாறன் வீட்டில், 24371500 என்ற இணைப்பு தலைமைப் பொது மேலாளர் பெயரிலும், 24371515 என்ற இணைப்பு தயாநிதி மாறன் பெயரிலும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்.லின் 2009ம் ஆண்டு, ஜூன் 6ம் தேதியிட்ட கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அளிக்கப்பட்ட 24371500 என்ற தொலைபேசி இணைப்புதான் தயாநிதி மாறன் வீட்டில் உள்ளது என்பது பொய் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து பெறப்பட்ட மேலும் சில புதிய தகவல்கள் தயாநிதி மாறனுக்கு எதிராக அமைந்துள்ளன. அரசு கணக்கில், 323 இணைப்புகளுடன் ரகசிய தொலைபேசி இணைப்பகம் அவரது வீட்டில் இயங்கியதற்கான மறுக்கமுடியாத பல புதிய ஆதாரங்கள் பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து கிடைத்துள்ளன. தயாநிதி மாறன் கூறுவது அனைத்தும் பொய் என்பதை பி.எஸ்.என்.எல் சென்னை சர்க்கிளின் 21-6-2007 தேதியிட்ட அலுவலக கடிதம் உறுதிப்படுத்துகிறது.

2007ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்தார். இரு வாரங்களுக்கு பிறகு, பி.எஸ்.என்.எல் லுக்கு மாறன் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில், அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட 24371515 மற்றும் 24371616 இணைப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதுதான், பி.எஸ்.என்.எல். உண்மையை வெளிப்படுத்த உதவியது. 323 இணைப்புகள் உள்ளது என்பதுடன், ரகசிய இணைப்பகம் செயல்பட்டதையும் அது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.

முதலாவதாக: 24371515, 24371616 ஆகிய எண்கள் குறித்த தகவல்கள், பொது குறைதீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இல்லை. இந்த எண்கள் குறித்த தகவல்களை மாம்பலம் இணைப்பகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளவும் '' என பி.எஸ்.என்.எல். அளித்த முதல் கடிதம் தெரிவித்தது.

ஏன் இந்த இரண்டு இணைப்புகளும் மாம்பலம் இணைப்பகத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன என்கிற கேள்வி எழுகிறது. இதற்குப் பதில் கிடையாது. பொது குறைதீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இந்த எண்கள் குறித்த தகவல்கள் இல்லை என்பதே மோசடி என்பதை உணர்த்துகிறது. இணைப்பக முறையில் இருந்து அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது பொருளாகிறது. 2437 என்ற பொதுவான இணைப்பக கோடு கொண்ட அவை ரகசிய இணைப்பகத்தில் இடம் பெற்றன.

இதே போல, தொலைபேசி வாடிக்கையாளருக்குஏதாவது தகவல் தேவைப்பட்டால், அவர், ""1191'' என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்வார். ஆனால், தயாநிதி மாறனின் இணைப்பகத்தில், 234711911க்கு வரும் அனைத்து அழைப்புகளும் 24311191 க்கு தானாகவே மாற்றப்பட்டு விடும். இது 2437 என்ற ரகசிய இணைப்பகம் செயல்படுவதை பாதுகாக்க செய்யப்பட்ட ஏற்பாடுதான்.

இரண்டாவதாக : பி.எஸ்.என்.எல்லின் அந்தக் கடிதம், 300 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் உள்ளதை ஒத்துகொண்டு,மாறனின் பொய்யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 24371515 மற்றும் 24371616 (அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டவை) ஆகிய இரண்டும், 300 எக்ஸ்டென்ஷன்கள் உள்ள 24371500 என்ற முக்கிய எண்ணின் துணை எண்கள் ஆகும் என்பது தெரிய வருவதாக அக்கடிதம் கூறுகிறது. அந்த முக்கிய எண் 24371500 இணைப்பு, 3/1 போட் கிளப் சாலையில், தலைமைப் பொது மேலாளர் என்ற பெயரில் உள்ளதாகவும் அது மேலும் தெரிவிக்கிறது. தயாநிதி மாறன், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி 5 வாரங்களுக்கு மேல் இந்த மோசடி தொடர்ந்துள்ளது என்றும் அக்கடிதம் உணர்த்துகிறது. இக்கடிதம் நான்கு முக்கிய உண்மைகளை உறுதிப்படுத்துகிறது.

ஒன்று, 24371500 என்ற எண்ணுக்குள் 300 இணைப்புகள் கொண்ட சட்ட விரோத இணைப்பகம் மறைக்கப்பட்டிருந்ததையும், அதில் 24371515, 24371616 எண்கள் சேர்ந்திருந்ததையும் அது உறுதிப்படுத்துகிறது. இரண்டாவது, அந்த மோசடி இணைப்பகம், தலைமைப் பொது மேலாளர் பெயரில் செயல்பட்டது. அது மாறனின் பெயரில் இல்லை. மூன்றாவது, அந்த மோசடி இணைப்பகம், 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி வரை செயல்பட்டுள்ளது. நான்காவது, இந்த இணைப்பகத்திற்கான செலவுகளை அரசே ஏற்றுள்ளது - அதாவது ""டிடிஐஎஸ்டி (துறை) பிரிவில் '' என்ற கடிதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் உண்மையை ஒப்புக் கொள்கின்றன.

323 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் திருட்டுத்தனமாக மாறன் வீட்டில் இருந்தன என்ற உண்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அந்த இரு எண்களையும், கேட்டு கொண்டபடி, இலவச இணைப்புகளிலிருந்து, கட்டண முறையிலான நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டுக்கு மாற்ற, "" 24371500 '' என்ற முக்கிய எண் மறைக்கப்பட்டு, 24341515, 24371616 சாதாரண இணைப்புகளாக, எஸ்டிடி வசதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டில் அளிக்கப்படும் என்று அக்கடிதம் தெரிவிக்கிறது. ஏன் 24371500 ஐ மறைக்க வேண்டும் ?

இது கூடவா தெரியவில்லை? 24371500 முதல் 24371799 வரை உள்ள 300 துணை இணைப்புகளைக் கொண்ட 24371500 முக்கிய எண் தெரியக்கூடாது என்பதற்காகத்தான்.

இரண்டாவதாக அக்கடிதம் மாறனின் வீட்டில் மேலும் 23 இணைப்புகள் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மற்ற இணைப்புகள், தொழில்நுட்ப வார்த்தையில் கூறினால், "பிரா' இணைப்புகள் ஆகும். ""7 "பிரா' இணைப்புகளும், போட் கிளப்பில், சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் பெயரில் 2 சாதாரண இணைப்புகளும் இருந்ததை அந்தக் கடிதம் கூறுகிறது''.

ஒவ்வொரு "பிரா' லைனும் ஒரே சமயத்தில், குரல், ஆவணங்கள்,விடியோவை அனுப்பும் திறன் கொண்டவை. எனவே, 7 "பிரா' இணைப்புகள் என்பது, 21 இணைப்புகள் ஆகும். 21 இணைப்புகளுடன், 2 சாதாரண இணைப்புகள், 24371500 எண்ணில் உள்ள 300 இணைப்புகள் ஆக மொத்தம் 323 இணைப்புகள் (ஐஎஸ்டிஎன்) திருட்டுத்தனமாக மாறனின் வீட்டில் செயல்பட்டுள்ளன. இதைதான், சிபிஐ தனது அறிக்கையில் வெளிக்கொணர்ந்துள்ளது. 323 இணைப்புகள் கொண்ட இணைப்பகத்தையே மாறன் மறைத்து விட்டார் என்பதை "தினமணி' நாளிதழ் அம்பலப்படுத்தியது. அவ்வளவே!

பி.எஸ்.என்.எல்.லின் கடிதத்தின் மூலம்,மாறன் தவறு செய்துள்ளார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெளிவாகி விட்டதே, இனிமேலாவது தயாநிதி மாறன், தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு தலைகுனிவை ஏற்றுக் கொள்வாரா? இல்லை, வலுக்கட்டாயமாகப் பதவி பறிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவமானங்களுக்குப் பிறகுதான் ஏற்றுக் கொள்வாரா?

உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீர வேண்டும். அவரவர் பாவம் அவரவருக்குத்தான் என்றெல்லாம் தமிழில் பல பழமொழிகள் உண்டு. தயாநிதி மாறன் என்பதால் இவையெல்லாம் மாறிவிடுமா என்ன?

அடுத்தது தயாநிதி? - ஞாநி

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு முன்பு டெலிகாம் அமைச்சராக இருந்த தயாநிதிக்கும் தொடர்பும் பங்கும் இருக்கிறதா என்பது தான் இனி அடுத்த கட்ட விசாரணை. எந்த அடிப்படையில் ராசாவும் கனிமொழியும் சரத் ரெட்டியும் பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ, அதே அடிப்படையில் தயாநிதி மாறனும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்கிறது தெஹல்கா இதழ்.

தெஹல்காவின் பல முக்கியமான புலனாய்வுக் கட்டுரைகளை எழுதியவரான அஷிஷ் கேத்தனும் ராமன் கிர்பாலும் இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதி மாறன் தொடர்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தெஹல்கா சொல்வது என்ன என்று பார்ப்போம்.

தயாநிதி மாறன் மே 2004 முதல் மே 2007 வரை டெலிகாம் அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரன் நடத்தும் ஏர்செல் கம்பெனி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த தொடர்பு சேவை லைசன்சுகளுக்கு விண்ணப்பித்தது. ஆனால் ஒவ்வொரு விண்ணப்பத்தின் மீதும் தயாநிதியின் அமைச்சகம் கேள்விகளை எழுப்பியது. ஏர்செல் பதில் தந்து கொண்டே இருந்தது. ஆனால் லைசன்ஸ் வழங்கப்படவே இல்லை.

இரண்டாண்டுகள் இப்படியே நீடித்த நிலைமை திடீரென மாறியது. சிவசங்கரன் தன் கம்பெனியில் 74 சதவிகிதப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்பெனிக்கு, சுமார் 7800 கோடி ரூபாய்களுக்கு விற்றார். மேக்சிஸ் கம்பெனியின் அதிபர் இலங்கைத் தமிழரான ஆனந்தகிருஷ்ணன். இன்னொரு 26 சதவிகிதப் பங்குகளை மாறன் குடும்பத்துக்கு நெருக்கமான சென்னை அப்போலோ மருத்துவமனை டாக்டர் பிரதாப் ரெட்டியின் குடும்பத்தினர் வெறும் 34 கோடிக்கு வாங்கினர்.

அக்டோபர் 2005ல் ஏர்செல்லை வாங்க விரும்புவதாக ஆனந்தகிருஷ்ணன், சிவசங்கரனிடம் தெரிவித்தார். அடுத்த இரண்டே மாதங்களில் டிசம்பர் 14 அன்று தயாநிதியின் அமைச்சகம் லைசன்சுகளுக்கான புதிய விதி முறைகளை அறிவித்தது. டிசம்பர் 30ந் தேதி ஏர்செல்லை மேக்சிஸுக்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. அடுத்த மூன்றே நாட்களில் தயாநிதி மாறனின் அமைச்சகம் புதிய விதிமுறைகளின் கீழ் தகவல்களை அனுப்பும்படி ஏர்செல்லைக் கேட்டுக் கொண்டது. அடுத்த பதினேழே நாட்களில் ஏர்செல் தகவல்களைக் கொடுத்தது. ஜனவரி 12 அன்று மேலும் புது வட்டாரங்களுக்கு லைசன்ஸ் கேட்டு விண்ணப்பித்தது.

பிப்ரவரி மாதத்திலிருந்து ஏர்செல்லுக்கு தயாநிதியின் அமைச்சகம் லைசன்சுகளை வழங்கத் தொடங்கியது. நவம்பர் மாதத்தில் மொத்தமாக ஏர்செல்லுக்கு 14 வட்டாரங்களுக்கான லைசன்சுகள் கிடைத்துவிட்டன. மொத்தமாக லைசன்ஸ் கட்டணமாக ஏர்செல் செலுத்திய தொகை 1399 கோடி 47 லட்சம் ரூபாய்கள். ஆனால் தணிக்கைக் கணக்கீடுப்படி இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 22 ஆயிரம் கோடி ரூபாய்கள்.

ஆனந்தகிருஷ்ணன் கைக்கு ஏர்செல் மாறி லைசன்சுகள் கிடைத்த நான்காவது மாதத்தில், அவரது மேக்சிஸ் குழுமம், தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் குழுமத்தைச் சேர்ந்த சன் டைரக்ட் டி.வி. கம்பெனியில் 20 சதவிகிதப் பங்குகளுக்காக 150 மில்லியன் டாலர்கள் ( சுமார் 600 கோடி ரூபாய்கள்) கொடுத்தது. அடுத்தபடியாக 2008-2009ல் மேக்சிஸ் குழுமம் சன் குழுமத்தின் எஃப்.எம். வானொலி கம்பெனியில் சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்தது.

தெஹல்கா மேலும் சொல்லும் மூன்று தகவல்களும் முக்கியமானவை. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விலை நிர்ணயிப்பது பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அமைச்சரவையின் குழுவிடம் இருந்ததை தயாநிதி மாறன் மாற்றி முழு அதிகாரமும் தமது அமைச்சகத்திடமே வைத்துக் கொண்டார். இதை நிதி அமைச்சகம் கடுமையாக ஆட்சேபித்தது. ஆனால் பிரதமர் மன்மோகன்சிங் ஒப்புதல் அளித்தார். (இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் அடுத்து வந்த ராசாவும் முடிவுகள் எடுக்க முடிந்தது.)

சிவசங்கரன் ஏர்செல்லை நடத்தி வந்தபோது டாடா குழுமத்துடன் தொழில் ரீதியான கூட்டு வைத்திருந்தார். டாடாக்களுக்கும் தயாநிதி மாறனுக்கும் இடையே நல்லுறவு இருக்கவில்லை. அதற்குக் காரணம் டிஷ் டி.வி. தொழிலில் டாடாவுக்கும் சன் குழுமத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு நீதிமன்ற வழக்கு வரை சென்றதுதான். எனவே சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தவரை தயாநிதி மாறனின் அமைச்சகம் லைசன்சுகளைத் தரவில்லை. தமக்கு எதிராக அமைச்சகத்தில் யாரோ தொடர்ந்து வேலை செய்வதாக சிவசங்கரன் 2005ல் புகார் கடிதமே எழுதியிருக்கிறார்.

மூன்றாவது தகவல்தான் அரசியல்ரீதியாக முக்கியமானது. உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ராசா அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டி வந்ததும், புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல், 1998 முதல் 2009 வரை ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் வழங்குவதில் பின்பற்றிய அனைத்து நடை முறைகள் , நடவடிக்கைகள் பற்றியும் விசாரித்து அறிக்கை தரும்படி நீதிபதி சிவராஜ் பாட்டில் கமிஷனை நியமித்தார்.

அந்த கமிஷனும் அறிக்கையைத் தந்து விட்டது. அந்த அறிக்கையில், ஏர்செல்லுக்கு லைசன்ஸ் தராமல் விதவிதமான கேள்விகள் கேட்டு வருடக்கணக்காக தயாநிதிமாறனின் அமைச்சகம் இழுத்தடித்தது சரியல்ல என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகம் ஏர்செல்லிடம் கேட்ட விவரங்கள், தேவையற்றவை, பொருத்தமற்றவை, லைசன்ஸ் விதிமுறைகளுக்குப் புறம்பானவை என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல; பணம் தொடர்பான எந்தக் கொள்கை முடிவானாலும் அதுபற்றி நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த அமைச்சகமும் உத்தரவுகள் போடக் கூடாது என்ற மத்திய அரசின் நடத்தை விதியை தயாநிதி மாறனின் அமைச்சகம் பின்பற்றவே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

ராசா அமைச்சராக இருந்தபோது பால்வாவின் ஸ்வான் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரம் லைசன்ஸைக் குறைந்த விலைக்குக் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும் பால்வா, தன்னுடைய வேறு கம்பெனிகள் மூலம் கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் கடன் கொடுத்தார். அது லஞ்சப் பணம்தான் என்பது சி.பி.ஐ.யின் வாதம். அந்த அடிப்படையில்தான் ராசா, கனிமொழி, சரத் ரெட்டி, பால்வா எல்லாருமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தயாநிதி மாறன் ஆனந்தகிருஷ்ணனின் ஏர்செல்லுக்கு குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் கொடுத்தார். லைசன்ஸ் கிடைத்ததும், ஆனந்தகிருஷ்ணனின் கம்பெனி தயாநிதி மாறனின் சகோதரர் நடத்தும் சன் குழுமத்தில் 700 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது. இதுவும் லஞ்சப் பணம்தானே. இது லஞ்சப்பணம் இல்லை, தற்செயலாக நடந்தது என்றால் அதே விதி ராசாவுக்கும் பொருந்தும் அல்லவா? தமக்கு சன் குழுமத்தில் எந்த முதலீடும் இல்லை என்று தயாநிதி மாறன் அறிவித்திருக்கிறார். இதே வாதப்படி ராசாவுக்கும் கலைஞர் டி.வி.யில் எந்த முதலீடும் இல்லை.

தெஹல்கா இந்தச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆங்கில டி.வி. சேனல்கள் எல்லாம் தொடர்ந்து இதை எழுப்பி வருகின்றன. பி.ஜே.பியும் இடதுசாரிக் கட்சிகளும் தயாநிதி மாறனும் பிரதமரும் விளக்கம் தரவேண்டுமென்று கோரியுள்ளன. ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரித்துவரும் பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை வரம்புக்குள் இது வரும்; மேற்கொண்டு கருத்து சொல்ல முடியாது என்று காங்கிரஸ் சொல்லிவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஸ்பெக்ட்ரம் தொடர்பாக வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தொடுத்த பொதுநல வழக்கின் அடிப்படையில்தான் இதுவரை விசாரணை கைதுகள் எல்லாம் நடந்துள்ளன. புதிதாக தெஹல்கா வெளியிட்டுள்ள தகவல்கள் அடிப்படையிலும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்று பூஷண் இன்னொரு மனு இந்த வாரம் தாக்கல் செய்யவிருக்கிறார். எனவே ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்து தயாநிதி மாறனும் உட்படுவாரா மாட்டாரா என்பது இனி உச்ச நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்துத்தான் இருக்கிறது.
- நன்றி கல்கி, ஓ-பக்கங்கள்

முன்னோடி காட்டிய வழி... துக்ளக் தலையங்கம்

‘தயாநிதி மாறன் டெலிகாம் மந்திரியாக இருந்தபோது, ‘ஏர்செல்’ என்ற நிறுவனத்திற்கு, அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது வேண்டுமென்றே தள்ளிப் போடப்பட்டது (சுமார் இரண்டு வருடங்கள்); அந்த நிறுவனம் கைமாறி, ஒரு மலேசியக் கம்பெனி அதை வாங்கியதும், உடனடியாக (சில மாதங்களில்) அலைக்கற்றைகள் தரப்பட்டன; ஒன்றன்பின் ஒன்றாக பதினான்கு மாநிலங்களில் ஸெல்ஃபோன் பணி செய்ய அந்த நிறுவனம் உரிமம் பெற்றது; அதைத் தொடர்ந்து, அந்த மலேசிய நிறுவனம், சன் டி.வி.யில், பெரும் முதலீடு (பங்குகளைப் பெற்று) செய்தது’ என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பா.ஜ.க.வும் மற்ற எதிர்க் கட்சிகளும் இந்தக் குற்றச்சாட்டின் மீது விசாரணை கோருகின்றன. அந்த விசாரணை ஒழுங்காக நடப்பதற்காக, தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று, அ.தி.மு.க. உட்பட பல எதிர்க் கட்சிகளும் கோரியுள்ளன.

இந்த விவகாரத்தில், ராசாவின் ஸ்பெக்ட்ரம் சாயல் நன்றாகத் தெரிகிறது. சில நிறுவனங்களுக்கு அலைக்கற்றை; அந்த நிறுவனங்களுக்குப் பெரும் லாபம்; அந்த நிறுவனங்களில் ஒன்று கலைஞர் டி.வி.க்குப் பெரும் பணம் தருகிறது (இது ‘கடன்’ என்று கூறப்படுகிறது) - இது ராசா ஸ்டைல். ஆனால், இதற்கு முன்னோடி தயாநிதி மாறன். ‘முன்னோடிகள் சென்ற வழியில்தான் தானும் சென்றதாக’ ராசா கூறியது, உண்மைதான்! தயாநிதி, சன் டி.வி.க்கு முதலீடு கொண்டு வந்தார்; ராசா கலைஞர் டி.வி.க்கு அதே பணியைச் செய்தார்!
‘ஒன்றின் மீது நடவடிக்கை வந்து விட்டது; அதற்கு முன்னால் நடந்த விவகாரத்தில் நடவடிக்கை ஏன் இல்லை?’ என்ற கேள்வி எழுகிறது. அதை எதிர்க் கட்சிகள் எழுப்பியதை விட, அதிக முனைப்புடன் மத்திய மந்திரிசபையில் இன்னமும் இருக்கிற தி.மு.க.வே எழுப்பும். ராசாவிற்கு எதிராக தயாநிதி மாறன் செய்ததை, தயாநிதி மாறனுக்கு எதிராக ராசா சார்பில், குடும்பத்தினர் செய்வார்கள்.

இது தவிர, பழைய விவகாரம் ஒன்று இப்போது மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. 2009-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா, தயாநிதி மாறன் மீது ஒரு குற்றச்சாட்டைக் கூறினார்.

தனது வீட்டில் ஒரு டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சையே நிறுவி, வீட்டிலிருந்து சன் டி.வி.க்கு பூமியில் கேபிள்களை பதித்து, தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சன் டி.வி.க்குப் பேருதவி செய்து; அரசுக்குப் பெரும் நஷ்டத்தை அவர் ஏற்படுத்தினார் – என்பது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக, ‘ஸி.பி.ஐ. நடத்திய விசாரணை அறிக்கை’ யின் நகலையும் அவர் வெளியிட்டார்.

ஜெயலலிதா கூறியதை, அப்போது பத்திரிகைகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது தி.மு.க. அவ்வளவு மகிமையுடன் விளங்கியது! ஆகையால், ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு அப்படியே மறக்கப்பட்டது. இப்போது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் குருமூர்த்தி எழுதியுள்ள ஒரு விவரமான கட்டுரையின் மூலம் அந்தக் குற்றச்சாட்டு, மீண்டும் வந்திருக்கிறது.

ஜெயலலிதா இக்குற்றச்சாட்டுகளைக் கூறியபோது, அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த தயாநிதி மாறன், இப்போது குருமூர்த்தி மற்றும் அவரது கட்டுரையைப் பிரசுரித்த பத்திரிகைகளான இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகியவற்றிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

நோட்டீஸ் அனுப்புவதால், ஒருவர் தன்னுடைய குற்றமற்ற தன்மையை நிரூபித்துவிட முடியாது. தன் தரப்பில், தயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல்., மேனேஜர் எழுதியுள்ள கடிதத்தை அப்போது வெளியிட்டார். இப்போதும் அதையேதான் அவர் நம்புகிறார். அந்தக் கடிதம் எதையும் நிரூபித்து விடுகிற மாதிரி இல்லை. இன்னும் ஏதாவது, ஏற்கக் கூடிய ஆதாரம் அவரிடமிருந்து வந்தால்தான் உண்டு.

ஆக, மத்திய அரசில் பதவி வகிக்கிற தி.மு.க.வினர் செய்த முறைகேடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. திடீர் திருப்பங்கள், சவால்கள், திகில் காட்சிகள், கண்ணீர் நாடகங்கள்... என்று ஒரு பெரிய சீரியலே நடந்து கொண்டிருக்கிறது. சன் டி.வி.யில் வருகிற மெகா சீரியல்கள் தோற்றன!

- நன்றி துக்ளக்

இவர்கள் ஈஸியாக ஊழல் செய்கிறார்கள், நாம் தான் கஷ்டப்பட்டு எழுதி அதை படிக்க வேண்டியிருக்கிறது. ஆண்டவா !

21 Comments:

King Viswa said...

மொத்தத்தையும் மூச்சு பிடித்து படித்து முடித்தால், அந்த மஞ்ச கமென்ட் நச் என்று நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி இருந்தது.

கிங் விஸ்வா
தியேட்டர் டைம்ஸ் 01 : 10th June 2011 அன்று வெளியாகும் படங்களின் முன்னோட்டம்

moe said...

wonderful yellow comment

Anonymous said...

மஞ்சள் கமெண்ட் சூப்பர். இந்த ஊழல் பற்றி விசாரித்து தண்டனை வாங்கிக் கொடுப்பவர்களுக்கு திருடிய கோடிகளில் இருந்து ஓரிரண்டு பர்செண்டு என்று ஒரு சட்டம் கொண்டுவந்தால் இன்னும் ஜோராக இருக்கும். கூடவே கஷ்டப்பட்டு எழுதி படிப்பவர்களுக்கு ஒரு சில லட்சங்களும் வீசினால்.... :-)

Anonymous said...

//கல்கி, துக்ளக், தினமணியில் வந்த கட்டுரைகள் மிக முக்கியமானவை//

இந்த வரிசையில் நான் ஆவலோடு எதிபார்த்தது ஜூனியர் விகடன். ராசாவுக்கு எட்டு அடி பாய்ந்தவர்கள், தயாவுக்கு பதினாறு அடி தாவாமல் பம்மியே வாசிக்கிறார்கள்.
சன்னுக்கும் விகடனுக்கும் ஏதாவது வியாபாரத் தொடர்பு உண்டா?

பிரபாகர் said...

பரதேசி நாய்கள்... எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள்... இன்னும் நிறைய வார்த்தைகள் கோபத்தில் வருகிறது... வேண்டாம்!...

பிரபாகர்...

vsankar said...

Even after all this developments the PM has no guts to remove Maran for obvious reasons.

mohan said...

idly vadai kalai kattuthu doi!!

Mohan Baroda

Anonymous said...

மாறன் குழுமத்திற்கு விகடனில் பங்கு இருக்கிறது.

willi said...

Manjal super.....

பாலா said...

//இவர்கள் ஈஸியாக ஊழல் செய்கிறார்கள், நாம் தான் கஷ்டப்பட்டு எழுதி அதை படிக்க வேண்டியிருக்கிறது. ஆண்டவா !//ரொம்ப சரிங்க ...

Anonymous said...

//இந்த வரிசையில் நான் ஆவலோடு எதிபார்த்தது ஜூனியர் விகடன். ராசாவுக்கு எட்டு அடி பாய்ந்தவர்கள், தயாவுக்கு பதினாறு அடி தாவாமல் பம்மியே வாசிக்கிறார்கள்.
சன்னுக்கும் விகடனுக்கும் ஏதாவது வியாபாரத் தொடர்பு உண்டா?//

அப்படி இருக்குனு என் நண்பன் அடிச்சு சொல்றான். யாரவது கொஞ்சம் அதை கன்போர்ம் பண்ணுங்கய்யா.

நல்லூரான் said...

//இந்த வரிசையில் நான் ஆவலோடு எதிபார்த்தது ஜூனியர் விகடன். ராசாவுக்கு எட்டு அடி பாய்ந்தவர்கள், தயாவுக்கு பதினாறு அடி தாவாமல் பம்மியே வாசிக்கிறார்கள்.
சன்னுக்கும் விகடனுக்கும் ஏதாவது வியாபாரத் தொடர்பு உண்டா?//

may be true..

Read this articles and Savukku website regularly.


http://savukku.net/home1/921--j.html

http://savukku.net/home1/932-2011-06-09-18-06-43.html

Anonymous said...

VIKAAN vS.MARAN

KOLANGAL - THIRUMATHI SELVEI - THENTRAL - ETC ETC

SUPPAMANI

Ganpat said...

மஞ்சள் தீற்றிய வாக்கியம் அருமை என்றால் அதை இத்தனை பேர் ரசித்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது..(அத்தனை துக்கத்தின் நடுவிலும்)

SAN said...

Business interests,thats why vikatan is not publishing about daya.

kothandapani said...

மாறன் கோடு போட்டார் ராஜா ரோடே போட்டுட்டார் . 2G spectrum பற்றி வாய் கிழிய பேசியவரும் ஜூனியர் விகடன் மாறனை பற்றி பேசாதது
அதன் உள்நோக்கத்தை காட்டுகிறது. எப்படி லஞ்ச பணத்தை பெற்ற கனிமொழி கைது செய்யபட்டரோ அப்படியே தயாநிதிக்கு பின் கலாநிதியும்
திஹருக்கு அனுப்பப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

Ashwin-WIN said...

மஞ்சள் கமெண்டு சூப்பர். இவங்கள பத்தி எழுதி எழுதியே நம்ம பொழைப்பு நாரப்போளைப்பா போச்சு..

நேரம் இருந்தா இங்கயும் வாங்க..
சிறையிலிருந்து ராசா எழுதிய கடிதம்

கிருபாநந்தினி said...

நான் ஸ்கூல்ல படிக்கும்போது ஒருத்தரைப் பார்த்து இன்னொருத்தர் தப்பு செஞ்சா ‘உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டே’ என்று சொல்லியபடி, ஒருவர் காதை மற்றொருவர் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள். இங்கே இவங்க அப்படித் தோப்புக்கரணம் போட்டா எத்தனை பேர், எத்தனை பேருடைய காதுகளை மாத்தி மாத்திப் பிடிச்சுத் தோப்புக்கரணம் போடவேண்டியிருக்குமோ?

RVK said...

CBI is widening its net on 2G scam and when it reaches the chair person of UPA, the entire case will collapse like a pack of card. Let us wait and watch that fun.

malathi said...

CBI is widening the net in 2G scam. Ultimately it will reach the top person in ruling party and then it will collapse like a pack of card. Let us all wait and watch that fun. Poor CBI officers !

malathi said...

CBI is widening the net in 2G scam. Ultimately it will reach the top person in ruling party and then it will collapse like a pack of card. Let us all wait and watch that fun. Poor CBI officers !