பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 24, 2011

உதவுவோம் வாருங்கள்

அந்த முற்பகல் வேளையில் போரடித்தது. ஹிந்து பஜில்ஸ், சுடோகு, ஒரு தின இதழின் குறுக்கெழுத்துப் போட்டி என்று எல்லாவற்றையும் நிரப்பித் தள்ளியும் நேரம் மீதம் இருந்தது. தொலைக்காட்சியில் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் வசை பாடிக் கொண்டிருப்பதை பார்க்க, கேட்கச் சகிக்காமல் வாசலில் ஈஸிசேரைப் போட்டு அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அவர் வந்து சேர்ந்தார். எழுத்தாளர், கவிஞர், நடிகர் இன்னபிற என்று பலதரப்பட்ட தகுதிகளை தன்னுள் வைத்திருப்பவர் அவர். மகா சாது. மகா புத்திசாலி.

“வாங்க, வாங்க பார்த்து ரொம்ப நாளாச்சே, வாட் ய சர்ப்ரைஸ் விசிட்” என்றேன்.

”ஒரு இடத்துக்குப் போலாம் வர்றீங்களா?” என்றார் வாயில் எதையோ போட்டுக் குதப்பிக் கொண்டிருந்தபடி.

“ஓ, எஸ், வரேனே” என்று சொல்லிவிட்டு, சட்டை, பேண்ட் மாற்றிக் கொண்டு உடன் புறப்பட்டேன்.

அவர் ஸ்கூட்டரை ஓட்ட, நான் பின்னால் அமர்ந்து கொண்டு சென்றேன். வழியில் தென்படுபவர்கள் எல்லோரும் என்னையே உற்றுப் உற்றுப் பார்ப்பது மாதிரி இருந்தது. பின்னே, பிள்ளையார் வண்டி ஓட்ட, மூஞ்சூறு பின்னால் உட்கார்ந்து சென்றால் எல்லோருக்கும் அதிசயமாகத் தானே இருக்கும்!.


கோடம்பாக்கம் ஸ்டேஷனில் வண்டியைப் போட்டு விட்டு நண்பர் டிக்கெட் வாங்கினார்.

”நாம எங்க போறோம்?” என்று இழுத்தேன் நான்.

“பொழுங்க. சொல்ழேன்” என்றார்.

வண்டி வந்தது. ஏறிக் கொண்டோம். நண்பர் எங்கு போகிறோம் என்பதைச் சொல்லவே இல்லை. தலையை இலேசாக ஆட்டியபடி தனக்குள் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்த மாதிரி இருந்தது. அவர் எப்போதுமே அப்படித்தான். அதிகம் பேச மாட்டார். அதற்கு பதில் எழுத்தில் எல்லாவற்றையும் கொட்டி விடுவார். ஒருவேளை என்றைக்காவது தப்பித் தவறி பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான் விடமாட்டார்.

பரங்கி மலை ஸ்டேஷன் வந்தது.

“இறங்கலாம்” என்றார்.

இறங்கினோம். நான் இந்தப் பக்கம் வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. முன்பு தூரத்து உறவினர் ஒருவரைப் பார்க்க மடிப்பாக்கம் செல்வதற்கு இங்கு வந்துதான் பஸ் அல்லது குதிரை வண்டி ஏற வேண்டும். அது அந்தக் காலம். இப்போது அகலமான பெரிய மாடிப்படி எல்லாம் கட்டி ஸ்டேஷன் கொஞ்சம் பெரிதாக மாறி இருந்தது.

படி இறங்கி, ஆட்டோக்களைப் புறக்கணித்து வெளியே வரும்போது எதிரே ஒரு சிறிய கோயில் தென்பட்டது. இதை முன்பு பார்த்திருக்கிறேனா என்பது நினைவிலில்லை ”ஆவுடை நாயகி உடனுறை நந்தீஸ்வரர் ஆலயம்” என்றது அறிவிப்புப் பலகை. கூடவே “பிருங்கி மா முனிவருக்கு இறைவன் நந்தி ரூபத்தில் காட்சி அருளிய தலம்” என்றது ஒரு உதிர்ந்த நீலக் கலர் போர்டு. ”ஓ, அதனால்தான் இந்த ஊருக்கு பரங்கி மலைனு பேரா? அப்போ பிருங்கி மலைங்குறதுதான் பரங்கி மலைன்னு பின்னாடி மாறிருச்சு இல்லையா?” என்றேன், நண்பரிடம்.

“அதெல்லாம் எனக்குத் தெழியாது. இந்த கோயில், சாமி விஷயங்கள்னா நமக்கு அலழ்ஜி” என்று சொல்லி விட்டு, வாயில் குதப்பியதைத் துப்பி விட்டு வந்தார்.

பேச்சை வளர்ப்பானேன் என்று பேசாமல் நான் அவர் கூடவே சென்றேன். மடிப்பாக்கம்-மேடவாக்கம் சாலையிலேயே கொஞ்ச தூரம் சென்றவர் வலது புறம் திரும்பினார். கொஞ்ச தூரம் போய் இடது புறம் திரும்பினார். தூரத்தே ஏதோ ஒரு போர்டு தெரிந்தது. “இது ஒரு சிறுவர் ஆதரவு இல்லம். கவனிச்சு ஆதரிப்பார் இல்லாத சின்னச் சின்னக் குழந்தைங்க எல்லாம் இங்க தங்கியிருக்காங்க. உண்மையான உதவும் இல்லம்” என்றார் நண்பர்.

“ஓ” என்றேன் சற்று அலட்சியமாக.

உள்ளே படி ஏறிச் சென்றார். நானும் தொடர்ந்தேன்.

அவரைப் பார்த்ததும் ரிஷப்ஷனில் இருந்தவர் எழுந்து கொண்டார். கை குலுக்கினார். ”சார் சௌக்யமா? பொண்ணு நல்லா இருக்குதா?” என்றார். “ம். நல்லா இருக்கா...” என்றவர் பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாய்த் தாள்களை எடுத்துக் கொடுத்தார். ”அதே டேட் தான் உங்களுக்குத் தெரியுமே!....” என்று இழுத்தார். ”ஆமாம். தெரியும். லெட்ஜரில் எண்ட்ரி இருக்குதே. இருங்க பார்த்து, ரிசிப்ட் போடச் சொல்றேன்” என்றார்.


”இவர் என் நெருங்கின நண்பர். பொது நல சேவைல ஆர்வம் உள்ளவர். இவ்ளோ நாள் வெளி மாநிலத்துல இருந்தார். இப்போ ரிடயர் ஆகி இங்கே வந்திருக்கார். உங்க இல்லத்தைப் பத்தி நீங்களே இவர் கிட்ட விலாவாரியாச் சொல்லுங்களேன்” என்றார் நண்பர்.

அவர் சொல்லச் சொல்ல நான் ஆர்வமானேன். முழுமையாகக் கேட்டு முடித்ததும், ரிடயர் ஆகிப் பொழுது போகாமல் வேஸ்டாக வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும் என் மீதே எனக்கு வெறுப்பு வந்தது.


பத்தாண்டுகளுக்கு முன்னால் ”உதவும் உள்ளங்கள்” என்ற இந்த இல்லத்தை ஆரம்பித்தவர்கள் பெரிய பணக்காரர்களோ, வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் சேவைக்காரர்களோ அல்ல. என்னைப் போல சாதாரணமாக ரிடயர்டு ஆன பென்ஷன் வாங்கும் ஆசாமிகள்தான். அவர்களுக்கு இந்தச் சமூகத்துக்கு ஏதாவது சேவை செய்ய வேண்டும் என்று ஆர்வம். பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் அது இன்னமும் தீவிரமானது. தங்களுக்கு வந்த பணத்தைக் கொண்டும், சேமிப்பில் இருந்த தொகையைக் கொண்டும் 2000-த்தில் ஒரு சிறுவர் ஆதரவு இல்லத்தை ஆரம்பித்தனர். அதுதான் இன்று உதவும் உள்ளங்களாய் மலர்ந்திருக்கிறது

ஆரம்பத்தில் வெறும் நான்கே குழந்தைகளைக் கொண்டு ஆரம்பித்திருக்கின்றனர். இன்று கிட்டத்தட்ட இங்கே 100 குழந்தைகளுக்கு மேல் இருக்கிறார்கள். காப்டன் ராஜூ சின்ஹா என்பவர் ஆதம்பாக்கத்தில் இருந்த தனக்குச் சொந்தமான ஒரு இடத்தை குழந்தைகளுக்காக வழங்க, அதில் கட்டம் எழுப்பப்பட்டு அங்குதான் இந்த இல்லம் தற்போது செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் உறவுகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்காகவும் ஒரு இல்லத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். அது 2005 முதல் மறைமலை நகரில் செயல்பட்டு வருகிறது. அங்கு முதியவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் இருக்கிறதாம்.

ஆதம்பாக்கத்தில் இருக்கும் சிறுவர்கள் அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதி, கல்வி வசதி என அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அனைத்தும் கருணை உள்ளம் கொண்டவர்களின் நிதிக் கொடையால்தான் சாத்தியமாகியிருக்கிறதாம். முன்பு ஆதம்பாக்கம் இல்லத்தில் இடப் பற்றாக்குறை காரணமாக கட்டிடம் கட்ட ஆரம்பித்து பாதியிலே அப்படியே நின்று விட்டதாம். பின்னர் அகட விகடம், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலமாக நிதி திரட்டி தற்போது முழுமை செய்துள்ளனர்.

கோவா படக் குழுவினரான வெங்கட் பிரபு மற்றும் நண்பர்கள், பாப் ஷாலினி, கிரேசி மோகன், நடிகை ராதிகா என பலர் இந்த இல்லத்து வருகை புரிந்து உதவியிருக்கின்றன. பல கல்லூரி மாணவ, மாணவிகள், எமென்சிக்களில் பணியாற்றும் இளைஞர்கள் என பலர் இந்த இல்லத்திற்கு உதவி வருகின்றனராம். பிறந்த நாள், திருமணநாள், நினைவு நாள் என பலரும் இங்கு வந்து உதவுகின்றனர். ஒரு நாள் அல்லது ஒரு வேளை உணவிற்கோ, அல்லது வருடம் முழுவதுக்குமான ஒருவேளை உணவிற்கோ நிதி உதவி செய்கின்றனர். நிதி உதவிகளுக்கு வருமான வரி உண்டு. வெளிநாட்டில் வசிப்பவர்களும் நிதி உதவி செலுத்தலாமாம். அதற்கும் FCRA எனப்படும் சிறப்பு அனுமதி பெற்றுள்ளனராம்.

மேற்கொண்டு விவரங்களுக்கு www.helpingheartshome.org

இல்ல முகவரி :

Udhavum Ullangal Illam
No.9, West Karikalan II Street
Adambakkam, Chennai - 600 088
(Near St.Thomas Mount Rly.Stn)
Ph. 9144 2232 1236, 9144 2234 8338

அனுமதி பெற்று மேலே குழந்தைகள் தங்கியிருக்குமிடத்தைப் போய்ப் பார்த்தேன். ஆண், பெண் என தனித்தனியாக அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் முகத்தையும், அதில் இருந்த ஆர்வத்தையும், சொல்ல முடியாத ஏதோ ஒரு ஏக்கத்தையும் பார்க்கப் பார்க்க என் கண்கள் கலங்கியது. என் பால்ய கால ஞாபகம் வந்து, மனதை என்னவோ செய்தது. யாரிடமும் எதுவும் பேச முடியாமல் வெளியே வந்து விட்டேன்.

வரும் வழியில் நண்பர் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தார். என்னால்தான் எதுவுமே பேசவே முடியவில்லை.

வரும் ”கர” வருடத் தமிழ்ப் புத்தாண்டில் இந்தக் குழந்தைகளுக்கு ”உதவிக் கரம்” கொடுத்துக் கொண்டாடுபவர்கள் பாக்கியவான்கள்.

ஜெய் ஸ்ரீராம்!

- அநங்கன்

என்ன என்னவோ செலவு செய்கிறோம், ஊர் சுற்றுகிறோம், சினிமா, ஹோட்டல் என்று போய் விரயமாக்குகிறோம். ஒரு நாள், குறைந்த பட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது ஒருவேளை உணவு கொடுக்க நம்மால் முடியாதா என்ன?


13 Comments:

Shankar said...

This is surely a very emotional matter. As soon as I return to India I will definitely contribute my mite.

cho visiri said...

Thanks for the information. I will do what ever I can, in this noble cause.

Sathish Kumar said...

Kanneer varavazhaikkum thondu...! En makkal...yaedhaavadhu seiyyanunga...! Kattaayam seivaen...! Mugavarikku nandri..!

R.Gopi said...

மிக மிக அருமையான பதிவு...

என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்வேன்...

Chandramouli said...

With a heavy heart, I write this. God willing, I shall contribute my mite to this cause during my next visit to India.

Anand said...

இந்த செய்தி 100% உண்மை. நான் இந்த இல்லத்திற்க்கு பல முறை சென்றதுண்டு.

அனைவரும் உதவி செய்ய வேண்டுகிறேன்.

-நன்றி.

எங்கள் ப்ளாக் said...

நாங்களும் உதவத் தயார். எங்கள் உறவினர் ஒருவர் இந்த இடத்திற்கு அருகாமையில் உள்ளார். அவர் மூலமாக உதவி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

adhi said...

''நிதி உதவிகளுக்கு வருமான வரி உண்டு ''.
வருமான வரி விலக்கு என்றால் யோசிக்கலாம் .

adhi said...

''நிதி உதவிகளுக்கு வருமான வரி உண்டு ''.
வருமான வரி விலக்கு என்றால் யோசிக்கலாம் .

adhi said...

''நிதி உதவிகளுக்கு வருமான வரி உண்டு ''.
வருமான வரி விலக்கு என்றால் யோசிக்கலாம் .

adhi said...

''நிதி உதவிகளுக்கு வருமான வரி உண்டு ''.
வருமான வரி விலக்கு என்றால் யோசிக்கலாம் .

Karthiga RajaRathinam said...

Tax exempted under 80G Income tax act..So now without thinking you could donate them Mr.Adhi

Vidhoosh said...

The phone numbers have changed.
Phone: 91-44-22672236 / 22673338.