பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 22, 2011

திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) தொகுதி ரவுண்டப்

அன்பு இட்லிவடை நண்பருக்கு/நண்பர்களுக்கு,

நான் தங்கள் blog -இன் வாசகன். போன வாரத்தில் நீங்கள் வெளியிட்ட ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் ரவுண்டப் பகுதியில் வாசகர்கள் தங்கள் தொதியின் தேர்தல் நிலவரங்களையும் அனுப்பலாம் என்று கூறியிருந்தீர்கள். எனது தொகுதியான திருசெந்தூர் தொகுதி தேர்தல் கள நிலவரங்களை இத்துடன் இணைத்துள்ளேன். இட்லிவடையில் வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன்,
முத்து செந்தில் குமார்


திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்) தொகுதி ரவுண்டப் :
2009 டிசம்பரில் நடந்த இடைதேர்தலால் தமிழகம் முழுவதும் பிரபலமான தொகுதி திருச்செந்தூர். முற்றிலும் கிராம புறங்களை உள்ளடக்கிய கடலோர செம்மண் பிரதேசம். கடந்த 2006 ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் திரு.அனிதா ராதாக்ருஷ்ணன் வெற்றிபெற்றார். 2009 ம் ஆண்டு MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுக சார்பாக நின்று சுமார் 43000 வாக்குகள் வித்யாசத்தில் அமோக வெற்றி பெற்றார். மீண்டும் அவரே திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2001 இல் இருந்து 10 வருட காலமாக அசைக்க முடியாத சக்தியாக இந்த தொகுதியில் அனிதா இருக்கிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் உடன்குடியை சேர்ந்த மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக வின் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறையின் மாநில துணை செயலாளராக உள்ளார். இருவரும் இப்பகுதியில் அதிகமாக உள்ள நாடார் இனத்தை சேர்ந்தவர்கள். கோடீஸ்வரர்கள்.

தொகுதியின் வாக்களர்கள் நிலவரம்:


மொத்த வாக்காளர்கள் : 1,86,629
ஆண் வாக்காளர்கள் : 90,740
பெண் வாக்காளர்கள் : 95,889
கடந்த 14 தேர்தகளில் (2009 இடைதேர்தலையும் சேர்த்து) காங்கிரஸ் 3 தடவையும், அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும் வெற்றி பெற்றிருகின்றன. நாடார் இன மக்களும், மீனவ சமுதாய மக்களுமே இத்தொகுதியின் பிரதான வாக்கு வங்கி. இதை மெய்பிப்பது போலவே கடந்த தேர்தல்களில் இந்த சமுதாய வேட்பாளர்களே வெற்றி பெற்று வந்துள்ளனர்.

1996 ம் ஆண்டு தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெனிபர் சந்திரன், மீன் வள துறை அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் 2001 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அனிதாவிடம் தோற்று போனார். பின்னர் 2004 ம் ஆண்டு வாக்கில் அம்மாவிடம் ஐக்கியமாகி இந்த தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இதேபோல் 2001 மற்றும் 2006 இல் அதிமுக சார்பாக போட்டியிற்று வென்ற அனிதா ராதாக்ருஷ்ணன் 2009 இல் திமுக வில் ஐக்கியமாகி இடைதேர்தலிலும் வென்று தற்போதைய MLA வாக இருக்கிறார்.

தற்போதைய MLA அனிதாவிற்கு தொகுதியில் தனிப்பட்ட முறையில் நல்ல செல்வாக்கு உள்ளது. தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். கோவில்கள், பள்ளிகூடங்கள் மற்றும் சமுதாய நல கட்டிடங்களுக்கு உதவிகள் செய்து பெரியவர்கள் மனதை கவர்ந்துள்ளார். தொகுதியில் சொந்த செலவில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தி இளைஞர்களின் ஆதரவையும் பெற்றுள்ளார். தொகுதியில் பெரிய திட்டம் என்று பார்த்தால் உடன்குடி அனல் மின்நிலையம் தான். அங்கும் மந்தகதியில் பணிகள் நடக்கின்றன. தவிர திருசெந்தூர் பஸ் நிலையம், சாலை வசதி, குடிநீர் தொட்டி என்று சம்பிரதாயங்களை நிறைவேற்றி இருக்கிறார். தொகுதியில் இருக்கும் கிறித்தவ முஸ்லிம் வாக்குகள் பெரும்பாலும் திமுக விற்கே கிடைக்கும். நாடார் இன பிரமுகரான தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனாரின் திமுக ஆதரவு நிலைப்பாடும் அனிதாவிற்கு சாதகமான அம்சங்கள்.

இவருக்கு இருக்கும் பெரிய மைனஸ் பலரும் இன்னும் இவரை அதிமுக ஆளாகவே பார்க்கிறார்கள். தவிர உடன்குடி அருகில் அமையவிருக்கும் அனல் மின் நிலையத்தால் மீன்வளம் மற்றும் சுற்றுசூழல் பாதிக்கபடும் என்று குலசேகரன்பட்டினம், மணப்பாடு மற்றும் ஆலந்தலை போன்ற மீனவ கிராம மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். தொகுதியில் கணிசமான அளவில் தாழ்த்தபட்டோரும் உள்ளனர். விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருந்தாலும் அவர்கள் எந்த அளவிற்கு அனிதாவிற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பது சந்தேகமாக உள்ளது. காரணம், சமீபத்தில் முத்துக்குமார் நினைவு நாள் நிகழ்ச்சிகளின் போது, நாடார் இன வியாபாரிகளுக்கும் சிறுத்தைகளுக்கும் நடந்த மோதல். தொகுதியில் சத்தமில்லாமல் நடக்கும் கந்து வட்டி, சிட்டை வட்டி சமாச்சரங்களும் ஆளுங்கட்சிக்கு எதிராக மாறலாம்.

அதிமுக வேட்பாளர் திரு மனோகரன் முதல் முறையாக தேர்தலில் களம் காண்கிறார். சமீப காலத்தில் அரசியலுக்கு வந்து அதிமுகவில் மாநில அளவில் பொறுப்பு வகிக்கும் இளைஞர். தேங்காய் வியாபாரம் மற்றும் கொப்பரை தேங்காய் ஏற்றுமதி தொழில் செய்கிறார். உடன்குடி பகுதி மக்களிடையே அவரின் தந்தையார் பூக்கன்ராஜ் நாடாரின் பெயரில் அடையாளபடுத்த படுகிறார். தொகுதியில் உள்ள பிராமணர், விஸ்வகர்மா, பிள்ளைமார், தேவர், யாதவர் ஓட்டுகள் அதிமுகவிற்கு விழலாம். முதல் முறையாக களம் காண்பதால் தொகுதியில் பல காலமாக இருக்கும் அதிமுக புள்ளிகள் (அம்மன் நாராயணன், தாமோதரன்) இவருக்காக முழு மனதோடு வேலை செய்வார்களா என்பது சந்தேகம். இவருடைய மைனஸ் தொகுதியில் உடன்குடி பகுதி தவிர மற்ற பகுதிகளில் இவருக்கு அறிமுகம் இல்லை.

தொகுதியில் உள்ள முக்கிய பகுதிகள்:

திருசெந்தூர்
உடன்குடி
நாசரேத்
ஆறுமுகநேரி
காயல்பட்டினம்
மெய்ஞானபுரம்
பரமன்குறிச்சி
குலசேகரன்பட்டினம்
மணப்பாடு

திருசெந்தூர் மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக சமபலம் கொண்டவையாக உள்ளன. உடன்குடி பகுதியில் மண்ணின் மைந்தர் மனோகரன் முன்னிலை பெறலாம் . உடன்குடி பகுதியில் கோலோச்சும் விஸ்வகர்ம மக்களின் ஆதரவும் அதிமுகவிற்கு கிடைக்கலாம். நாசரேத் கிறித்தவ மக்கள் நிறைந்த பகுதி. காயல்பட்டினம் முஸ்லிம் சமுதாயத்தினரின் கோட்டை. அதனால் இந்த இரண்டும் திமுகவின் பலம். பரமன் குறிச்சி மற்றும் மெய்ஞானபுரம் அனிதாவிற்கு சாதகமாக அமையலாம். குலசேகரன்பட்டினம் மற்றும் மணப்பாடு மீனவ பகுதிகள், அனல் மின் நிலைய எதிர்ப்பு மற்றும் மீனவ கிராமங்களுக்கு இடையே உள்ள சண்டை காரணமாக ஆளுங்கட்சிக்கு எதிராக மாறலாம்.

2006 தேர்தலில் அனிதாவிற்கு எதிராக தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் A D K ஜெயசீலனை நிறுத்தி திமுக வே அனிதாவின் வெற்றியை உறுதி செய்தது. 2009 இடை தேர்தலில் பஞ்சாய் பறந்த பணம் மற்றும் இடைதேர்தலில் ஆளுங்கட்சியின் செல்வாக்கு காரணமாக அனிதா வெற்றி சுலபமானது.

ஆனால் இம்முறை நிற்கும் இருவருமே கோடீஸ்வரர்கள். இருவருமே சுமார் 5 கோடிக்கும் மேல் செலவழிக்க தயாராக இருப்பதாக தெரிகிறது.

கூட்டணி ஆதரவு என்று பார்த்தால், தொகுதியில் கொஞ்சம் செல்வாக்காக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுகள் திமுகவிற்கு சாதகம். சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீகிற்கு பெயரளவில் ஆதரவு உள்ளது. தவிர பாமக என்றால் என்ன என்று கேட்பார்கள் இத்தொகுதி மக்கள். அதிமுக அணியில் உள்ள தேமுதிகவிற்கு சொல்லி கொள்ளும் படியான ஓட்டு வங்கி இருப்பதாக தெரியவில்லை. நடுத்தர வர்க்க இளசுகள் விஜயகாந்தை ஆதரிக்கலாம். தொழிற்சாலைகள் எதுவும் இல்லாத பகுதியாதலால் காம்ரேடுகளும் சொல்லிகொள்ளும் படியான செல்வாக்குடன் இல்லை.

பிஜேபி தனது வேட்பாளராக ராஜகோபால் என்பவரை நிறுத்தி இருக்கிறது. பகுஜன் சமாஜ், ஐஜேகே முன்னணி மற்றும் சில குட்டி கட்சிகளும் தத்தமது வேட்பாளர்களை நிறுத்தலாம். இவர்கள் எல்லாம் டெபாசிட் வாங்குவதே கஷ்டம் தான்.

இப்போது இருக்கும் சூழ்நிலைகளை பார்க்கும் போது திமுகவின் அனிதாவே வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் தேர்தல் அறிக்கைகள், கட்சி தலைவர்களின் பிரச்சாரங்கள் எதிர்பார்ப்புகளை மாற்றலாம்.
முத்து செந்தில் குமார் அவர்களுக்கு மிக்க நன்றி. அடுத்த நிலவரம் நாமக்கல்

வாசகர்கள் தங்கள் தொகுதி நிலவரத்தை எழுதி அனுப்பலாம். நன்றி.


9 Comments:

Anonymous said...

I heard this time quit tough for Anitha Radakrishnan...There will be chance for AIADMK to win this election in thiruchendur

mak said...

Absolutely i agree this review. i am from tiruchendur area. But only difference, this time voting percentage for dmk will be vary compare to last middle election.

Anonymous said...

தானைத்தலைவன் வைகோ வாழ்க .. இனமான வேங்கை , பச்சைத்தமிழன் வைகோ வாழ்க .. அரசியலில் நேர்மை .. பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி.

pachhamilaka said...

அனிதாவிற்கு தொகுதியில் தனிப்பட்ட முறையில் நல்ல செல்வாக்கு உள்ளது. தொகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். கோவில்கள், பள்ளிகூடங்கள் மற்றும் சமுதாய நல கட்டிடங்களுக்கு உதவிகள் செய்து பெரியவர்கள் மனதை கவர்ந்துள்ளார். முக்கியமாக வெங்கடேச பண்ணையார் ஜனங்க மறந்திருக்க மாட்டார்கள் எங்க ஊர் [ஆறுமுகநேரி] நண்பர்கள் இதை உறுதி படுத்தினார்கள்

Anonymous said...

Though I have not seen Tiruchendur, I fully agree with the views expressed in the article. One more negative point against AIADMK to be added is that of Pro vai. Ko votes not in favour of AIADMK.

Balaji, Chennai

Jagadeesan R said...

முத்து செந்தில் குமார் அவர்களுக்கு மிக்க நன்றி.

முத்து செந்தில் குமார் said...

இட்லி வடை மற்றும் அனைவருக்கும் நன்றி. ஒரு சிறு திருத்தம், தூத்துக்குடி மாவட்ட அதிமுக வேட்பாளராக அறிவிக்கபட்டிருந்த முன்னால் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் மாற்றப்பட்டு தற்போது திரு.பால் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

etown said...

Great information in this blog.Tiruchendur is one of the famous temple city in south tamilnadu.and we are collecting all over information in tiruchendur.Its the one stop website for all information in tiruchendur.best jewellers,schools,colleges,agencies...

etown said...

Great information in this blog. we are collecting all over information in tiruchendur.Its the one stop website for all information in tiruchendur.best jewellers,schools,colleges,agencies..