பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 25, 2011

தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் -The Day of the Chokers


இதற்கு முன் நடந்த சில "யானை vs பூனை" உலகக்கோப்பை ஆட்டங்களில் கென்யாவும், கனடாவும், ஜிம்பாப்வேயும் (எதிர்பார்த்தது போல) யானைகளால் மிதித்து நசுக்கப்பட்டன. ஹாலந்து மட்டுமே "ஹாஹா"லந்து என்று சொல்லும்படியாக, (புதிதாக கிட்டிய நம்பிக்கையுடன் காணப்படும்) இங்கிலாந்துக்கு எதிராக 292 ரன்கள் எடுத்து போராடி 'தோற்றாலும் மேன்மக்கள் மேன்மக்களே' என்பதை நிலைநாட்டியது!

சரி, இந்த ஆட்டத்துக்கு வருவோம். டாஸில் வென்ற தெ.ஆ வெ.இ யை பேட்டிங் செய்ய அழைத்ததற்கு 2 காரணங்கள்: ஸ்மித்துக்கு தன் பந்து வீச்சாளர்கள் மேல் இருந்த நம்பிக்கையும், பகலிரவு ஆட்டம் என்பதால் 2வதாக பந்து வீசும் அணிக்கு பனி காரணமாக பந்தை grip செய்வதில் பிரச்சினை ஏற்படலாம் என்ற சந்தேகமும்! தில்லியின் கோட்லா மைதானம், ஆடுகளம் தவிர்த்து, பச்சை பசேலென்று கண்ணுக்கு அத்தனை குளிர்ச்சி :-)துவக்க ஆட்டக்காரர்கள் (டேரன் பிரேவோ, கெய்ல்) இருவரும் இடதுகை ஆட்டக்காரர்கள் என்பதால், க்ரீம் ஸ்மித் சுழற்பந்து வீச்சாளர் போத்தாவை முதல் ஓவர் பந்து வீச அழைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை. (எதிர்பார்த்தது நம்பர் 1). இந்த உலகக்கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் 10 ஓவர்களில் அதிகம் பயன்படுத்துவதை காண முடியும். போத்தாவின் 3வது பந்தில் கெய்ல் "முதல் நழுவலுக்கு" கேட்ச் பயிற்சி அளிக்க முற்பட்டு விக்கெட் இழந்தார். (எதிர்பார்த்தது நம்பர் 2)

இருந்தும், பிரேவோவும், தேவன் ஸ்மித்தும் கூட்டு சேர்ந்து நம்பிக்கையோடு நன்றாக விளையாடினர். ஸ்கோர் 23 ஓவர்களில் 113-ஐ எட்டியபோது, டென்ஷன் ஏதுமின்றி ஒரு அனுபவமிக்க ஆட்டக்காரர் போல பரிமளித்த டேரன் பிரேவோ போத்தா பந்தில் அனாவசிய LBW. பிரேவோ எடுத்தது 73 ரன்கள். இது வரை போத்தாவின் பந்து வீச்சு நல்ல "கோடும், நீளமும்" உடையதாக இருந்தது குறிப்பிடவேண்டியது :-) ரொம்பவும் அலட்டாமல் பந்து வீசும் இவரை efficient பந்து வீச்சாளர் என்று கூறுவேன்.

வெ.இ 113-1 என்ற நிலையிலிருந்து 120-4 என்று நழுவினர் (எபா நம்பர் 3). மீண்டும் ஒரு ரிப்பேர்! டிவெயின் பிரேவோவும் சந்திரபாலும் கவனமாக ஆடினர். நடுநடுவே "தம்பி உடையான் படைக்கு அஞ்சான்" என்பதை நிரூபிக்கும் வகையில் பிரேவோ 3 சிக்ஸர்கள் அடித்ததில், ஸ்கோர் 42 ஓவர்களில் 205-4. கிங்கரன் போலார்ட் இன்னும் ஆட வராததால், மொத்த ஸ்கோர் 270-ஐ எட்டும் என்று எதிர்பார்ப்பது சகஜம் தான். ஆனால், சந்திரபாலுக்கு கிறுக்கு பிடித்ததில், பிரேவோ(40 ரன்கள், 37 பந்துகளில்) அபத்தமாக ரன்அவுட் ஆக்கப்பட்டார்.

முட்டிக்கு மேல் பந்து எழும்பாத ஆடுகளத்திலும் டேல் ஸ்டெயினின் வேகமான, நேரான பந்துவீச்சுக்கு 'தலை'யே ஆட்டம் காணும்! "வால்" பையன்கள் என்ன செய்வார்கள்! (குதி ஆடுகளத்தில் ஸ்டெயினால் ஏற்படும் பிரச்சினைகள் வேறு வகை!) 205-4 என்பதிலிருந்து ஸ்கோர் 213-9 என்ற சரிவில் (எபா நம்பர் 4) விழுந்த 5 விக்கெட்டுகளில் 3 ஸ்டெயினுக்கு. 42வது ஓவரில் தொடங்கி 46வதில் முடிந்த இவ்வீழ்ச்சி தந்த "மன அழுத்தத்தில்" வெ.இ கேப்டன் பேட்டிங் பவர் பிளே என்ற ஒரு சங்கதியையே மறந்து விட்டாரோ என்று தோன்றியது! ஸ்டெயினின் சாமியாட்டத்தில் டேரன் சாமிக்கு ஜுரம் வந்து விட்டது போலும் :) நடுவரே 46வது ஓவரிலிருந்து (கட்டாய) பேட்டிங் பவர் பிளே தொடங்கியதை சைகையில் தெரிவித்தார்! வெ.இ 48வது ஓவரில் 222 ரன்களுக்கு (டேவில் ஷெப்பர்ட் நடுவராக இருந்திருந்தால், இன்னிங்க்ஸ் பிரேக்கான 45 நிமிடங்களிலும் கால் மாறி குதித்துக் கொண்டே இருந்திருப்பாரோ என்று ஓர் எண்ணம் எழுந்தது!) சுருண்டது.

223-இ இலக்காக கொண்டு களமிறங்கிய தெ.ஆ முதல் 5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை (20/2) இழந்தபோது ஒரு சுவாரசியம் ஏற்பட்டாலும், இந்த வெ.இ அணி ஒன்றும் ராபர்ட்ஸ், கார்னர், மார்ஷல் என்று ஒரு வேகப்படையை வைத்துக் கொண்டு எதிரணியை கலகலக்க வைக்கும் ரகமில்லை என்று வருத்தமே மிஞ்சியது. இந்த வெ.இ அணியில் நிஜமான வேகப்பந்து வீச்சாளர் ரோச் மட்டுமே. என்ன ஒரு வீழ்ச்சி பாருங்கள்!

தென்னாபிரிக்கா (43வது ஓவரிலேயே) வெற்றி பெற்றது (எபா நம்பர் 5). டிவிலியர்ஸ் டெவில் போல ஆடி சதமடித்தார். அப்படி இப்படி என்று இருந்த அவர், சரியான சமயத்தில் ·பார்முக்கு வந்திருக்கிறார். இந்த இன்னிங்க்ஸ் வாயிலாக Form is temporary class is permanent என்பதையும் நிரூபித்தார். தெ,ஆ ஒரு balanced side ஆக விளங்குகிறது. If South Africans play to their strength with confidence (lack of that crucial factor has been their bane!) கோப்பையை வெல்ல அந்த அணிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.

அன்புடன்
பாலா
http://balaji_ammu.blogspot.com/

GLOSSARY:

புதிதாக கிட்டிய நம்பிக்கை - Newfound Confidence
கோடும், நீளமும் - Line & Length
முதல் நழுவல் - First Slip
தலை - Top order batsmen
வால் பையன்கள் - Tailenders
குதி - Bouncy

Balaji - பாலா

4 Comments:

மஞ்சள் ஜட்டி said...

//புதிதாக கிட்டிய நம்பிக்கை - Newfound Confidence
கோடும், நீளமும் - Line & Length
முதல் நழுவல் - First Slip
தலை - Top order batsmen
வால் பையன்கள் - Tailenders
குதி - Bouncy//

என்ன இது...மு.க ரேஞ்சுக்கு டிரான்ஸ் லேஷன் இருக்கு? ரொம்ப ஓவரா தெரியலை?? அப்படியே சவுத் அப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆட்டக்காரர்கள் பெயர்களையும் தமிழாக்கம் செய்யலாமே?? (வீரமா முனிவர் செஞ்ச மாதிரி)

enRenRum-anbudan.BALA said...

In my hurry, I forgot to write about the wonderful bowling of debutant Imran Tahir of South Africa. He spun a web in the middle overs with an amazing display of controlled leg spin bowling (10-1-41-4) and the other bowlers complemented well.

Sorry for the lapse :-)

anbudan
BALA

Bharath said...

W.I openers are Devon Smith and Chris Gayle.. not Darren Bravo!! I thought you would also mention about the similarity(look and game) of Darren Bravo and Brian Lara!!

Madhavan Srinivasagopalan said...

please visit for more cricket terms & their tamil translation
http://madhavan73.blogspot.com/2011/02/blog-post_22.html

கிரிக்கெட் சம்பந்தப்பட்ட மேலும் பல 'சொற்றொடர்' தமிழாக்கங்களுக்கு, மேலே இருக்கும் வலைப்பூவை பார்க்கவும். --- நன்றி..