பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 07, 2011

தலைவன் - சிறுகதை

யார் கண் பட்டதோ, இட்லிவடை இலக்கிய அந்தஸ்து பெற்றுவிட்டது. இப்ப எல்லாம் சிறுகதை, நாடகம் என்று மக்கள் அனுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
"எதை அனுப்பினாலும் பிரசுரிக்கிறான் இவன் ரொம்ப நல்லவண்டா" என்று எனக்கு ஒரு நல்ல பேர் இருப்பதால் இந்த சிறுகதையும்...


தலைவன்

"சேர்ந்து கொள்கிறீர்களா?"
"ஓ! தாராளமாக.ஆனால் இந்த மாதிரி நான் கேள்விப்பட்டதே இல்லையே? புதுமையாக இருக்கிறதே?"
"ஆம்! இது கொஞ்சம் புது மாதிரிதான்"
"இந்த மாதிரி வேறு எங்கேனும் உண்டா?"
"உண்டு"
"அவர்களுடன் நாம் இணைந்து செயல்படப்போகிறோமா?"
"இல்லை! நாம் தனித்து செயல்படப் போகிறோம்"
"தனித்தா?நன்று.யாருடனும் கூட்டணி இன்றி செயல்படுவது எனக்கு பிடித்தமான ஒன்று.
பின்னால் காலை வார மாட்டீர்களே?"


"இல்லை."
"சரி! நான் என்ன செய்ய வேண்டும்?"
"நீ நாலு பேரை சேர்த்து விடு.நானும் சேர்க்கிறேன்"
"ஆட்களை சேர்ப்பதா? இதில் எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்?"
"உன்னையும் என்னையும் சேர்த்து..?"
"சேர்த்து..?"
"இரண்டே பேர்"
"இரண்டே பேரா? இது ஆரம்பித்து எத்தனை நாட்களாகிறது?"
"இப்போதுதான்!"
"இப்போதுதான் என்றால்?"
"இரண்டு மணி நேரமாகிறது"
"இரண்டு மணி நேரம்தானா? வயிற்றைக் கலக்குகிறதே!"
"உனக்கு இதன் தலைவர் பதவி தரலாம் என்றிருக்கிறேன்.வயிற்றைக் கலக்குகிறது,
வாந்தி வருகிறது என்று பிதற்றுகிறாயே?"
"தலைவர் பதவியா? இப்போது நெஞ்சை அடைக்கிறது"
"ஏன்?"
"தலைவர் பதவி என்கிறீர்களே. அதுதான். தலைவன் என்பது பதவியல்லவே"
"பதவி அல்லவா? அதுதான் பிரதம பதவி.அதுகூட தெரியாத மூடனா நீ?"
"தெரிந்த மூடன்.போதுமா?"
"சரி. தலைவன் பதவியில் நீ இரு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்"
"அதைத்தானே நான் சொன்னேன்"

இப்படியாக சில ஆண்டுகளுக்கு முன் பனிக்கரடி சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டேன்.
அதன் ஆகக்கூடிய செயல்பாடு வருடத்திற்கொரு முறை எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும்
க்ரீவ் கோர் ஏரியில் குதிக்க வேண்டும்.

அதனால் என்ன பிரயோசனம் என்ற கேள்வி என்னுள் எழுந்தபோது, "அது உனக்கு
தேவையில்லாதது" என்ற விடை கிடைத்தது. மகிழ்ச்சியாக ஆட்களை சேர்க்க ஆரம்பித்தேன்.

ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. என்னைக் கண்டாலே காத தூரம் ஓடினார்கள்.
இது பற்றி நான் முறைப்பாடு செய்தபோது " குதிப்பவர்களுக்கு அன்று அவர்கள் குடிக்கும்
பீர் மொத்தமும் இலவசம்" என்று அறிவிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டேன்.என்னை தலைவர்
பதவிக்கு தேர்வு செய்த என் ஆலோசகர் ஒரு பெரிய மதுபானக் கூடத்தின் உரிமையாளர்.

அப்படியும் என்னால் ஒரு எட்டு பேரை மட்டுமே சேர்க்க முடிந்தது.அத்தனை பேரும்
பீர் மட்டுமே குடிப்பவர்கள். அவர்களை மட்டுமே என்னால் சேர்க்க முடிந்தது என்பது
எனக்கு மட்டுமே தெரியும்.

ஒரு சனிக்கிழமை அமாவாசை மதியம் 12 மணிக்கு பனிக்கரடி படை மதுக்கூடத்திலிருந்து
புறப்படும் என்று அடுத்த அரை மணி நேரத்தில் அத்தனை நிகழ்ச்சிகளும் முடிவடையும் என்றும்
நிரல் தயாரிக்கப்பட்டது.

அந்த நாளும் வந்தது.அதற்கு முந்தைய இரவு நான் வானத்தை பார்த்தபடி சுருட்டு
புகைத்தபடி உட்கார்ந்திருந்த போது இனம் புரியாத பீதி மனதை ஆட்கொண்டது.
அது என்னவென்று எனக்கு புரிய ஐந்து நிமிடம் ஆனது. புரிந்தபின் அது ஜீரணம் ஆக
அடுத்த ஐந்து நிமிடம் ஆனது.

அது கடுமையான குளிர்காலம்.அந்த ஏரி உறைந்தல்லவா கிடக்கிறது. அதில் எப்படி
குதிப்பது. வேண்டுமானால் சித்தர்கள் மாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடக்கலாம்.
"ஆஹா! என்னைக் கண்டதும் அத்தனை பேரும் சிதறி ஓடினார்களே.இதுதான்
காரணமா?இது எனக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது?" என்று எனக்குள்
நானே புலம்பிக் கொண்டு இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன்.

அடுத்த நாள் மாற்று உடுப்புகள் எடுத்துக் கொண்டு நான் மதுக்கூடத்துக்கு போன போது
அதற்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. சுமார் இரு நூறு பேர் அமர்ந்திருந்தார்கள்.
எப்போதும் காற்று வாங்கும் சனிக்கிழமை மதியம் எப்படி இத்தனை பேர்? அத்தனை பேரும்
குதிப்பதற்கு வந்திருக்கிறார்களா? நன்று.

ஆனால் அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.அத்தனை பேரும் நாங்கள் குதிப்பதை
வேடிக்கை பார்க்க வந்தவர்களாம்.அன்று மதிய வியாபாரம் அபாரமாக இருந்தது.

என் ஆலோசகர் என்னையும், மற்ற உறுப்பினர்களையும் கூப்பிட்டு ஒரு பத்திரத்தில்
கையெழுத்து போடச் சொன்னார். அது என்ன என்று கேட்ட போது " குதிக்கும் போது
காயமோ அல்லது உயிருக்கு ஆபத்தோ நேர்ந்தால் அதற்கு மதுபானக் கூட நிர்வாகம்
பொறுப்பல்ல" என்று எழுதியிருப்பதாக பதில் வந்தது.

இன்னும் எத்தனை அதிர்ச்சிகள் காத்திருக்கிறதோ? என்ற நினைப்புடன் நாங்கள்
ஏரிக்கு பயணமானோம். ஏரியில் இரண்டு மாட்டு வண்டி சக்கர அளவிற்கு பனிக்கட்டிகள்
உடைத்து குளம் போல் அமைக்கப்பட்டிருந்தது.

சரி! யாரவது முதலில் குதிக்கட்டும். அவர்கள் நிலைமையைப் பார்த்துவிட்டு அடுத்து எடுக்க
வெண்டிய நடவடிக்கை குறித்து யோசிக்கலாம் என்று நான் குளத்தை வெறித்தபடி
நின்றிருந்தபோது, என் ஆலோசகர் உரக்க அறிவித்தார்.

"தற்போது நம் தலைவர் முதலில் குதித்து இந்த சிறப்பு நிகழ்வை தொடங்கி வைப்பார்"

திரும்பி கூட்டத்தைப் பார்த்தேன். ஒரே ஆராவாரம்.கிழக்கு நோக்கி சேவித்துவிட்டு
குதித்தேன்.எனக்கு பின்னால் மாட்டிக்கொண்ட மந்தைகள்.அந்த அனுபவம் எப்படி
இருந்தது என்று எனக்கு வர்ணிக்கத் தெரியவில்லை.அது குதித்தால் தான் தெரியும்.

குதித்த அத்தனை பேர் வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.கரண்ட் கம்பியைத்
தொட்ட கரடி மாதிரி விதவிதமான சப்தங்கள்தான் வந்தது. இப்படியாக அந்த நிகழ்வு
சில பல ரத்த காயங்களோடு இனிதே நிறைவடைந்தது.

இது நடந்த சில நாட்களுக்கு பின்னர் என் ஆலோசகர் என்னை அழைத்தார்.

" தலைவரே! ஒரு பெரும் பொறுப்பு உங்கள் முன் நிற்கிறது"
" முன்னால் நிற்கிறதா?எவ்வளவு தூரத்தில் நிற்கிறது?"
"எச்சில் துப்பினால் எவ்வளவு தூரம் போய் விழுமோ அவ்வளவு தூரத்தில்
நிற்கிறது. வேடிக்கை வேண்டாம்".
"சரி! சொல்லுங்கள்"
"நம் போட்டி மதுபானக் கூடம் இருக்கிறதல்லவா? அவர்களும் பனிக்கரடி
சங்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்"
" ஆரம்பித்துவிட்டு போகட்டுமே! அதனால் என்ன?"
"அதனால் என்னவா? ஒரு தலைவன் பேசும் பேச்சா இது? அதில் நம்மை விட
அதிகம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்திருக்கிறார்களாம்"
" இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?"
"நம் சங்கத்தை பிரபலப்படுத்த நாம் முயற்சி செய்ய வேண்டாமா?"
" எப்படி செய்வது?"
"நான் ஒரு உபாயம் வைத்திருக்கிறேன்."
" என்ன உபாயம்?"
" இங்கிருந்து பத்து மைல் தொலைவில் ஒரு சிறிய விமான தளம் இருக்கிறதல்லவா?"
"ஆமாம் இருக்கிறது. ரொம்ப வருடங்களாக அங்கேயேதான் இருக்கிறது."
" அங்கே போய் ஒரு சிறிய கிளைடர் விமானத்தை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறோம்"
"எடுத்துக் கொண்டு..?"
" அப்படியே 12,000 அடி உயரத்துக்கு போய்.."
"போய்..?"
" மிஸொரி நதி இருக்கிறதல்லவா..?"
" இருக்கிறது. அதற்கு என்ன இப்போது..?"
" அதன் மேல் பாராசூட் கட்டிக் கொண்டு நீ மட்டும் குதிக்கிறாய்"
" நான் மட்டுமா?"
" ஆம்"
" நான் மட்டும் ஏன்?"
" ஏனென்றால் நீ...?"
" நான்?"
"தலைவன்"

- Parthasarathi Jayabalan
( parthasarathij89@gmail.com )16 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இந்த கதை புரிஞ்சுதுன்னு சொன்னா என்னைத் தலைவன் ஆக்கிடுவீங்கலோன்னு ஒரு பயம்.........ஹிஹி!

Anonymous said...

//"எதை அனுப்பினாலும் பிரசுரிக்கிறான் இவன் ரொம்ப நல்லவண்டா" என்று எனக்கு ஒரு நல்ல பேர் இருப்பதால் இந்த சிறுகதையும்...//

அதென்னவோ உண்மை தான். விருந்தினர்-னு எதேதோ எழுதுறாங்க

அஞ்சா நஞ்சன் said...

என் இந்த கதைக்கு என்ன கொறச்சல்?

Anonymous said...

இந்த கதை புரிஞ்சுதுன்னு சொன்னா என்னைத் தலைவன் ஆக்கிடுவீங்கலோன்னு ஒரு பயம்.........ஹிஹி!

Repeat..

Idly vadai -puthu item sariya vegavillai

பா. ரெங்கதுரை said...

கவிதை(களை)யும் அனுப்பி வைக்கப் போகிறார்கள். எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.

வீரராகவன் said...

இந்த கதைக்கு தலைவன் இருக்கிறான் என்று பெயர் பொருத்தமாயிருக்கும்.
தலைவன் பற்றி கதை என்றதும் படிக்க ஆரம்பித்தேன். சும்மா கரடி விடுறீங்களோன்னு தோணிச்சு. சும்மா சொல்லக் கூடாது. ராசாவையும் ராசாவா ஆக்கினவரையும் (அடடே கதை எங்கோ திரும்புதே) குதிக்கச் சொல்றதை படிக்கும்போது எனக்கே குதிச்சு பார்க்கனும்னு தோன்றியது.

Anonymous said...

thamizh padangal paarthu paarthu, nethi pottil adikiraapula sonna than engalukku puriyum. subtle satire ellam engalukku othu varaadhu............hehe

Anonymous said...

//இட்லிவடை இலக்கிய அந்தஸ்து பெற்றுவிட்டது. இப்ப எல்லாம் சிறுகதை, நாடகம் என்று மக்கள் அனுப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.//

நாடகமா? இருக்கறத் தொல்லை போறாதுன்னு இப்போ அது வேறயா? அட ராகவா! இட்லி வடை கிட்டேர்ந்து எங்கள காப்பாத்துப்பா ப்ளீஸ்.

சட்னி சாம்பார் said...

யாருக்கும் புரியாத கதைகளை எழுதும் அறிவுஜீவி இட்லிவடையே, கமலின் மன்மதன் அம்பு போன்ற தெளிவான கதைகள் எழுத கற்றுக்கொள். முடியலைன்னா விட்டுவிடும். அடுத்த ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்துவிட்டது. ஒழுங்காக அதைப்பற்றி எழுதப்பாரும் ஓய்.

Anonymous said...

இளைஞன் படம் பார்த்துவிட்டு வந்த எழுதின கதையா?...-கபாலி

Osi Idly said...

thalaivar aasaipadi thaan raasave seyalpadum kaalathil idhu pondra kadhai pidhatral thaan.

MANJAL THUNDU said...

andru oru anja nenjanukku kovam vandhadhu - dinakaran erindhadhu

indru oru anja nanjanukku kovam vandhullathu - idly vadai kaaliya?

R.Subramanian@R.S.Mani said...

What is wrong with you; The summer is yet to come
Suppamani

R. Jagannathan said...

இது அதைப் பற்றியா, அவர்களைப் பற்றியா இல்லை ஒன்றுமே இல்லையா என்று அவனவன் தலையைப் பிய்த்துக்கொண்டால், அந்தக் கதை இலக்கியத்தில் சேரும். சரிதானே? - ஜெ.

Anonymous said...

very witty story with lots of oneliners.. i laughed out loud

பார்த்தசாரதி ஜெயபாலன் said...

அன்புள்ள இட்லிவடையாரே,

சிறுகதையை பதிவு செய்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

வாலிப வயோதிக அன்பர்களுக்கு,

எதோ என்னால் முடிந்தது.இது யாரைப் பற்றி என்று எனக்கு தெரியாது.

ஆனால் இது எல்லா காலத்துக்கும் பொருந்தும்.

Jp