பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 05, 2011

அது நல்ல நாடா ? - இளைய தளபதி விஜய்

தயாநிதி கூப்பிட்டார் என்று டெல்லிக்கு சென்று ஸ்டாம்ப் ஒன்றை சில வருடங்களுக்கு முன் வெளியிட்டார். அரசியலுக்கு வந்துவிட்டார் பலர் பேச தொடங்க, ராகுல் காந்தியை போய் பார்த்த பிறகு இவர் தான் தமிழக இளைஞர் காங்கிரஸின் 'யுவராஜா' என்று பலரும் தீர்மானமாக சொல்ல ஆரம்பிக்க இவருக்கு பிரச்சனை வர தொடங்கியது. பாவம் குஷ்பு மாதிரி உடனடியாக இவர் திமுகவில் சேர்ந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இருந்திருக்காது.

காவலன் காதல் படமாக இருந்தாலும், அது வருமா வராதா என்ற எதிர்பார்ப்பில் திரில்லர் படமாகியது. இருந்தாலும் சூரிய குடும்பம் நினைத்தால் தான் தமிழ்நாட்டில் படத்துக்கு தியேட்டர் கிடைக்கும் என்ற நிலையில், காவலன் படம் ஜனவரி 14 வரவில்லை. ஜனவரி 15 வருமா வராதா யாருக்கும் தெரியாத நிலையில் ஊர் எங்கும் போஸ்டர் ஒட்டப்படாமல், ரிலீஸ் செய்தார்கள். சில ஊர்களில் மாலை, இரவு காட்சிகளில் தான் காவலன் ரிலீஸ் செய்தார்கள். படம் வருவதற்கு முன் யார் யாரோ கேஸ் போட விஜய் தன் ஹீரோயிஸத்தை படத்தில் தான் காட்ட முடியும் என்ற நிலையில் பரிதாபமாக இருந்தார். கடைசியாக சுயமரியாதை இழக்க விரும்பாமல், தானே சொந்த பணம் எல்லாம் கொடுத்து சரி செய்து காவலனை ரிலீஸ் செய்தார்.

ஆளும் கட்சி குடும்பம் இந்த படத்தை வாங்கியிருந்தலும், தமிழ்நாட்டில் குடும்பத்தை எதிர்க்க வேறு யாரும் இல்லாத நிலையில் விஜய்யின் அப்பா காவலன் ரிலீஸ் செய்யும் முன் ஜெயலலிதாவை சந்தித்தது கொஞ்சம் பரபரப்பு ஏற்படுத்தியது. என்ன பேசினார்கள் என்று தெரியாது ஆனால் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசினார்கள் என்று செய்தி. பேசினார்கள் என்பதை காட்டிலும் அழுதார் என்று சொன்னால் சரியாக இருக்கும். ஏன் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு பார்க்கணும் என்று தோன்றியது பார்த்தேன் என்கிறார்.

காவலன் ரிலீஸ் ஆன பிறகு ஜெயா டிவியில், என்.டி.டி.வி ஹிண்டு போன்ற டிவிக்களில் விஜய்யை கூப்பிட்டு வைத்து காவலன் படத்தை சும்மா இரண்டு கேள்விகள் கேட்டுவிட்டு, அதில் ஏன் இவ்வளவு பிரச்சனை, நீங்க எப்ப அரசியலுக்கு வருவீர்கள் என்ற கேள்விகள் கேட்டார்கள். மனுஷன் ரொம்ப நொந்து போய் இருந்தார் என்பது அவர் பதில்களிலிருந்து தெரிந்தது. கடைசியாக ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் "நாங்க இருக்கோம் விஜய் நீங்க கவலைப்படாதீங்க" என்றார். விஜய்யும் சிரித்து வைத்தார்.

ஆனந்தவிகடனுக்கு விஜய் அளித்த பேட்டி கொஞ்சம் முக்கியத்துவம் பெறுகிறது.

அதிலிருந்து சில பகுதிகள்

''சரித்திரத்துல ஒரு சம்பவம் வரும். நம்முடைய மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அனுபவம் அது. தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் பயணம் போன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, வெள்ளைக்காரன் ஒருவன் 'ப்ளாக் டாக்’னு கூச்சலிட்டு எட்டி உதைப்பான். சாதாரண மோகன்தாஸாக விழுந்த அவர், மகாத்மா காந்தியாக அந்த பிளாட்ஃபார்ம்லதான் பிறந்தார்!

தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளி னாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடைசூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது.

அதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.

முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?'' என்று தமிழ்நாட்டு அரசியல் சரித்திரத்தை மென்மையான வார்த்தைகளால் உச்சரிக்கும் விஜய் முகத்தில் தெரிவது புன்னகை அல்ல... பூகம்பம்!


''இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, 'காவலன்’ படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போறதுன்னு புரியாமல் எனக்குப் பயங்கர ஷாக். தனிப் பட்ட மனிதரிடம் போய் என்னுடைய சூழ் நிலையைச் சொல்ல முடியாது.

'காவலன்’ படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டுத் தெளிவாகத் திட்டம் போடுறதைப் புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து 'காவலன்’ படத் துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க. அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது!

வேறு சிலர், தியேட்டர் அதிபர்களையும் ஓப்பனா மிரட்டி இருக்காங்க. 'காவலன்’ படத்தைச் சுற்றி அவ்வளவு பிரச்னைகள். அது எல்லாத்தையும் தீர்க்க, கஷ்டப்பட்டுப் போராடி பொங்கல் ரிலீஸ் ஏற்பாடு செய்தோம். எல்லாத் தடைகளையும் மீறி மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க!''

''முன்பெல்லாம், பொங்கல், தீபாவளி வந்தா... ஏழெட்டு ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாகும்.ஒவ்வொரு தியேட்டரும் திருவிழா மாதிரி இருக்கும். ஆனா, சமீப காலமா அப்படி ரிலீஸ் ஆகலையே... ஏன்?''

''அதுக்கான காரணம், எல்லா ஹீரோக்களோட ரசிகர்களுக்கும் தெரியும். குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி? எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. 'நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்’னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா?

முக்கியமான நேரத்தில் என் படம் வெளிவரக் கூடாதுன்னு பயப்படுறாங்க. ஒரு படத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா? அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் 'காவலன்’ வந்தான். மீண்டும் என்னுடைய ரசிகர்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்''


''சில மாதங்களுக்கு முன்னால் ஈரோட்டில் இருக்கும் என்னுடைய மக்கள் இயக்க ரசிகர்கள் முறைப்படி போலீஸிடம் அனுமதி வாங்கி, நல உதவிகள் கொடுக்கும் விழாவை ஏற்பாடு செஞ்சாங்க. கூட்டம்னா... கூட்டம். ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் என்னைப் பார்க்க ஆவலா இருக்காங்க. மேடைக்குப் போகக் கிளம்பிய என்னை போலீஸார் தடுத்தாங்க. 'கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கு. மீறிப் போனா, உங்களோட உயிருக்கு நாங்க பாதுகாப்பு இல்லை’ன்னு கை விரிச்சாங்க. 'முறையா போலீஸ் பெர்மிஷன் வாங்கித்தானே ஃபங்ஷன் நடத்துறாங்க... திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’னு கேட்டேன். உடனே, செல்போனில் யார் யாரிடமோ மாறி மாறிப் பேசினாங்க. திரும்பி வந்து 'முடியவே முடியாது’ன்னு என்னைத் திருப்பி அனுப்பு வதிலேயே குறியா இருந்தாங்க. அதாவது, நான் மக்களைச் சந்திப்பது, ரசிகர்கள் என்னைப் பார்க்கக் கூட்டம் கூட்டமாகத் திரள்வதை எல்லாம் யாரோ விரும்பலைன்னு தெளிவாத் தெரிஞ்சது. என்னால எந்தப் பிரச்னையும் வரக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் திரும்பி வந்துட்டேன்'' என்று விஜய் பேசுவது ஒவ்வொன்றுமே, அவர் எவ்வளவு காயங்களோடு இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.


''சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்’ ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், 'பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்திவெச்சேன். அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? 'காவலன்’ படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே?

இது எல்லாம் என் ரசிகர்களுக்குத் தெரியும். ரசிகர்களுடன் என்னை வாழவைக்கும் பொதுமக்களும் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்க. குரோம்பேட்டை முதல் குக்கிராமம் வரை இந்தப் படம் ரிலீஸ் ஆகிறதுக்காக அனுபவிச்ச வேதனையும் சேர்த்து, என்னை நிறைய நிறைய யோசிக்க வைக்குது.

அதனால, அடுத்தடுத்து நான் போக வேண்டிய பாதையை 'காவலன்’ ரிலீஸ் தீர்மானிச்சு இருக்கு. இனி மேல்தான் மனம் திறந்து பேசப்போற உண்மையான சினிமா ரிலீஸ் ஆகப் போகுது!"

''நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதே மக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை.

யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுக்கிட்டே வர்றேன்.

யாருக்கு எப்போ, எப்படி வெற்றி தோல்வியைக் கொடுக்கிறதுன்னு தீர்மானிக்கிறவன் கடவுள். சாதாரண மாமிச உடம்பு உள்ள எந்த மனித ஜென்மத்தாலும் இதைத் தடுக்க முடியாது. நான் உங்களிடம் சொன்னது என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம் இல்லை. இது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தின் ஆதங்கம். நான் சொல்லிட்டேன். நிறையப் பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க.

சம்பந்தப்பட்டவங்க இந்தப் பேட்டியைப் படிச்சுட்டு... என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம். எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம். ஆனா, அதுக்குஎல்லாம் நான் கவலைப்படவே இல்லை!''டி.ராஜேந்தர், பாக்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் எல்லாம் அரசிலுக்கு வரும் போது விஜய் ஏன் வரகூடாதா ? வந்துவிட்டு போகட்டுமே. ராஜினி மாதிரி இல்லாமல், அஜித்துக்கு பிறகு விஜய் தான் கொஞ்சம் தைரியமாக பேசியுள்ளார். இந்த தேர்தலுக்கு ரஜினி என்ன செய்வார் என்று தெரியாது, எந்திரன் போல சும்மா இருந்துவிடுவார் என்று நினைக்கிறேன்.
இதற்காகவே விஜய்யின் காவலனை சப்போர்ட் செய்யலாம். உசுப்பி விடுவது நம்ம வேலை, எத்தனை பேர் வந்தாலும் சி.எம் நாற்காலி என்னவோ ஒருத்தருக்குத்தான்.


கடைசி செய்தி: இன்று விஜய்யின் அப்பா திரும்பவும் ஜெயலலிதாவை சந்தித்து பேசியுள்ளார். ( சும்மா பார்க்கணும் என்று தோன்றியிருக்கும் பார்த்திருப்பார் )அதிமுக தேர்தல் பிரசாரத்தில் விஜய் ஈடுபடுவார் என்ற பேச்சு அடிபடுகிறது. ஏற்கனவே விஜய்யின் ரசிகர்கள் அதிமுகவிற்கு பேனர்கள் கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

14 Comments:

snkm said...

இப்படியே உசுப்பி விட்டுட்டே இருங்க! ரணகளம் ஆகப் போறது வேற யாரோ தானே! நன்றி!

பாட்டு ரசிகன் said...

எது எப்படியோ..
தேர்தல் வறறதுக்குள்ளே ஏதாவது ஒரு கட்சியிலே சேலசொல்லுங்க..

பூ said...

இது ஒரு நியூஸ்? இவன் என்ன மக்களுக்கு தொண்டு செய்றவனா? நாளைக்கே சம்பந்த பட்டவங்களுக்கு படம் நடிச்சு கொடுப்பான்.
குருவி ஒரு உருப்படாத படம் ரிலீஸ் ஆனப்போ மற்ற படங்க எப்டி கஷ்ட பட்டிருக்கும்.

நல்ல படங்கள் நடிச்ச மக்கள் பாப்பாங்க. அவ்ளோதான்.

Anonymous said...

ஏற்கனவே உங்க அரசியல் ஒரு சாக்கடை... அதுக்குள்ளே விஜய போன்ற புல்லருவிகளும் தேவையா? அவன்கப்பனும் அவனும் மக்களிற்காக நிர்வாகம் செய்யத்தான் அரசியல்க்கு வர துடிக்காணுக எண்டு உங்க நெஞ்ச தொட்டு சொல்ல முடியுமா..

ஆதி மனிதன் said...

//அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே?//

இதே விஜய் தன்னுடைய படங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிநடை போட்டு ஓடிக்கொண்டிருந்த போது மக்கள் பிரச்சனையை பற்றி எப்பவாவது வாயை திறந்தாரா?

Aloy said...

//குருவி ஒரு உருப்படாத படம் ரிலீஸ் ஆனப்போ மற்ற படங்க எப்டி கஷ்ட பட்டிருக்கும். //
//இதே விஜய் தன்னுடைய படங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிநடை போட்டு ஓடிக்கொண்டிருந்த போது மக்கள் பிரச்சனையை பற்றி எப்பவாவது வாயை திறந்தாரா?//

இவை இரண்டுமே மிக சரியான கருத்து. மறுக்க முடியாது.
ஆனால் இவைகள் தான் செய்த தவறுகள் என விஜய் உணரும் நேரம் இது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ஸ்ரீராம். said...

அரசியலுக்கு வந்து முதல்வரானால்தான் சேவை. நூடுல்ஸ் எல்லாம் செய்ய முடியுமா?

ஹரன்பிரசன்னா said...

சுத்த பைத்தியக்காரத்தனம் விஜய் அரசியலுக்கு வருவது. சன் பிக்சர்ஸில் நடித்துக்கொண்டிருக்கும்போது, ஊர் ஊராகச் சென்று கை காண்பித்துக்கொண்டிருந்ததை டிவியில் காண்பித்தபோது, இதெல்லாம் தெரியாது! எதிர்ப்பு வரும்போதுதான் தெரியும். அதை எதிர்க்க மட்டும் செய்தால் போதும். அதற்கு இப்போது அரசியல், எங்கே அமரவேண்டும் என்றெல்லாம் பேசுவது, ஒன்றும் இல்லாமல் போவதற்குத்தான். இன்னும் 20 வருடங்கள் ஒழுங்காக நடிக்கும் வேலையை மட்டும் பார்த்தால் விஜய்க்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது!

R.Gopi said...

//விஜய் தன் ஹீரோயிஸத்தை பாடத்தில் தான் காட்ட முடியும் என்ற நிலையில்//

பாடத்தில் - படத்தில்

//பரிதாமகாக இருந்தார்.//

பரிதாபமாக

//ராஜினி மாதிரி இல்லாமல்//

இது யாரு புது நடிகரா?

//இன்னும் 20 வருடங்கள் ஒழுங்காக நடிக்கும் வேலையை மட்டும் பார்த்தால் விஜய்க்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது//

ஹரன் பிரசன்னா - உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மேல இவ்ளோ கோவமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்...

நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கிய காட்சி, இதோ இங்கே பதிவாக :

தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்”
http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html

Suresh Kumar said...

விஜய் அரசியல்லே வந்தாலும் ஏமாத்த மாட்டாருன்னு என்ன உத்தரவாதம்...அரசியல் எல்லோரையும் மாத்திடும்...நான் நம்பி ஏமாந்தவன் தான்...
என்னை எமாத்திட்டாங்க

Don said...

I don't see anything wrong in Vijay entering politics. And people here suggest it is stupidness- I don't think so. It's "EVEN MORE STUPID" to let someone be CM, 5 times and still call it a democracy.
Vijay was going in his way, and they created hurdles for him and he wants to retaliate by becoming hurdle for them. This is normal. And the beneficiaries are going to be TN people. If you think,Vijay won't be a better replacement for MK, then you must be (not a fool but)a son of a corrupt govt official. If there is anything intelligent, the people of TN can do, then it'll be supporting new comers giving no room for their shitty personal opinions.

நாகராஜ் said...

//அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே?//

இதே விஜய் தன்னுடைய படங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிநடை போட்டு ஓடிக்கொண்டிருந்த போது மக்கள் பிரச்சனையை பற்றி எப்பவாவது வாயை திறந்தாரா?

ரிப்பீட்டு!

Anonymous said...

இது ஒரு நியூஸ்? இவன் என்ன மக்களுக்கு தொண்டு செய்றவனா? நாளைக்கே சம்பந்த பட்டவங்களுக்கு படம் நடிச்சு கொடுப்பான்.
குருவி ஒரு உருப்படாத படம் ரிலீஸ் ஆனப்போ மற்ற படங்க எப்டி கஷ்ட பட்டிருக்கும்

Anonymous said...

//குருவி ஒரு உருப்படாத படம் ரிலீஸ் ஆனப்போ மற்ற படங்க எப்டி கஷ்ட பட்டிருக்கும்//

ம்ஹூக்கும் , மற்ற படங்கள் பட்ட கஷ்டம் பெரிசா அதனால மக்கள் பட்ட கஷ்டம் பெரிசா! அத நினைச்சுப்ப்பார்க்க சொல்லுங்க முதல்ல