பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 12, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி - நவகிரகம்


ஒட்டுமொத்த மக்கள் மனத்திலும் இன்றுதான் செவ்வாய்க்கிழமை என்னும் எண்ணத்தை யாரோ விதைத்திருக்கிறார்கள். சுத்தமாகக் கூட்டம் இல்லை. 6 மணிக்கு புத்தகக் கண்காட்சிக்கு வெளியே நின்று பார்க்கும்போது, திறந்து கிடந்த மைதானத்தில் அங்கங்கே நான்கைந்து பேர் நின்றுகொண்டிருந்தது போலத்தான் இருந்தது.

இன்று கிட்டத்தட்ட 4 வரிசைகளைப் பார்வையிட்டேன். ஏகப்பட்ட புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் ஒவ்வொருவரையும் கவர்வது ஒரு பதிப்பகத்தில் ஒன்றிரண்டு புத்தகங்கள்தான். சில பதிப்பகங்கள் மட்டுமே விதிவிலக்கு. அப்படி பிடித்துப்போகும் புத்தகங்களை வைத்துத்துதான் விளையாட்டு. பெரும்பாலும் மக்கள் ஒரு புத்தகத்தை எடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வது 30 நொடிக்குள்தான். நீண்ட கால வாசகர்கள்தான் பின்னட்டை வாசித்துப் பார்த்து, ஆசிரியர் யார் என்று பார்த்து, இதற்கு முன்பு அவர் எழுதிய புத்தகங்கள் எவை என்று கேட்டுவிட்டு, பிறகு அவரது அந்தப் புத்தகத்தை எடுப்பதா வேண்டாமா என்று முடிவுசெய்கிறார்கள். இன்னும் சில வாசகர்கள் புத்தக மதிப்புரை மற்றும் அவர்களது நம்பிக்கைக்குரிய வாசக நண்பர்கள் சொல்வதை வைத்து முடிவு செய்கிறார்கள். 30 நொடிக்குள் புத்தகத்தை வாங்குவதா வேண்டாமா என்று முடிவு செய்பவர்கள்தான் அதிகம் என்பதால்தான், அட்டைப்பட வடிவமைப்பு, புத்தகத்துக்கு பெயர் வைப்பது என எல்லாமே முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.

அப்படி 30 நொடியில் என் கண்ணில் பட்ட புத்தகங்களைப் பார்க்கலாம்.

ஓர் அரங்கில் தொல் திருமாவளவன் கவிதைகள் என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். அவர் கவிதைகள் எழுதுவதுதான் பிரச்சினை. கவிதைகள் மட்டும் எழுதிக்கொண்டிருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. :-)

சந்தியா பதிப்பகத்தில் யுவான் சுவாங் இந்தியப் பயணம்’ புத்தகத்தின் பாகம் 1 மற்றும் பாகம் 2 கிடைக்கிறது. 3ம் பாகம் இனிமேல்தான் வெளிவரவேண்டும். நான் வாங்கவேண்டிய புத்தகத்தின் பட்டியலில் இது உள்ளது.

புதிய தலைமுறை அரங்கைப் பார்வையிட்டேன். ‘வாங்க சார், கடந்த 10 மாத இதழ் 30 ரூபாய்’ என்றார்கள் என்னிடம். கிழக்குக்கேவா என நினைத்துக்கொண்டேன். ஓயாமல் அங்கே ஒரு சக்கரம் ஓடிக்கொண்டிருக்கிறது. பின்னா இருந்து சுற்றிவிடுபவருக்கு கை வலிக்கும் என்று ஏன் இன்னும் ‘அவர்கள்’ (தோழர்கள்தான்!) போராடவில்லை?

காலச்சுவடு அரங்கில் பழ.அதியமான் பேசிக்கொண்டிருந்தார். உடன் எழுத்தாளர் பிரபஞ்சன் இருந்தார். அவர் என்ன பேசுகிறார் என்று நின்று கேட்க நேரமில்லாததால், அப்படியே நடையைக் கட்டினேன்.

அடையாளம் அரங்கில் தோப்பில் முகம்மது மீரானின் ‘வேர்களின் பேச்சு’ தொகுப்பைப் பார்த்தேன். ஜெ.ராம்கி வாங்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

ஒரு பதிப்பகத்தின் புத்தகத்தில் உள்ளே இப்படி ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது! ‘ஒற்றை மேற்கோளுக்குப் பதில் ஷ தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இதனை மாற்றி வாசிக்கவும்’ என. எதை மாற்றி வாசிப்பது என்பதில் ஒரு வரைமுறை இல்லையா?

ஒரே ஒரு புத்தகத்துக்காக ஓர் அரங்கு, ஒரு சில புத்தகங்களுக்காக சில அரங்குகள், புத்தக ஷெல்ஃபுக்காக ஒரு அரங்கு என்றெல்லாம் கண்ணில் பட்டது.

இன்னோர் அரங்கில் ’தமிழ்நாடு சுற்றுலா பாதை’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் மேப் - மாவட்டம் மாவட்டமாக, தமிழில், அழகிய வண்ணத்தில், ரூ 50தான். நான் ஒன்று வாங்கினேன்.

விகடன் அரங்குக்குச் சென்றேன். நல்ல கூட்டம் இருந்தது. என்ன புத்தகம் நன்றாக விற்பனை ஆகிறது என்று பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் அதற்குச் சரியான நாள் இன்றல்ல என்பதால் அங்கிருந்தும் உடனே நகன்று விட்டேன்.

ஓர் அரங்கில் கண்ணில் பட்ட புத்தகங்கள் - வைத்தியசிந்தாமணி, பதார்த்த குண விளக்கம், யோகப்பியாசம் போன்ற தூய தமிழ் நூல்கள். எப்படி தமிழ்ப்பிரிவில் இந்த அரங்கை அமைத்தார்கள் எனத் தெரியவில்லை.

இன்னும் ஒரு சில கடைகள் மட்டுமே பாக்கி உள்ளன. நாளை பார்க்க வேண்டும்.

சொக்கன் வந்திருந்தார். முக்கியத் தகவல் ஒன்றைச் சொன்னார். தமிழினி அரங்கில் ‘சூடிய பூ சூடற்க’ புத்தகத்துக்கு பில்லை ஒட்டுமொத்தமாக ரெடியாகப் போட்டு வைத்துக்கொண்டு, யார் புத்தகம் வாங்கினாலும் உடனே கொடுத்துவிடுகிறார்களாம். இந்த வருடப் புத்தகக் கண்காட்சியில் அதிக பிரதிகள் விற்பனை ஆன புத்தகம் இதுவாக இருக்கவே அதிக வாய்ப்பு.

கிழக்கு கார்னர்:

கூட்டம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பாரா வராதது காரணமாக இருக்கலாம். 1200 பக்கங்கள் புத்தகம் பற்றிப் பேச ஆளிருக்காது என நினைத்தால், அதைவிட அதிக பக்கம் என்று சொல்லி, டிக்‌ஷனரி பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம்தான் கிழக்கு அரங்கில் இருந்தேன். என் மனைவியும் மகனும் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்ததால், 8 மணிக்கே அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நான் கிளம்பும்போதே புத்தகக் கண்காட்சியில் காற்றோடியது.

நாளை மறுநாள் விடுமுறை என்பதால், நாளை மாலை கூட்டம் வரும் என எதிர்பார்க்கிறேன்.

கிழக்கின் நேற்றைய டாப் 2 புத்தகங்கள்: ராஜ ராஜ சோழன், ராஜிவ் காந்தி கொலை வழக்கு.

இன்றைய டாப் 5 புத்தகங்கள்: ராஜ ராஜ சோழன், ஆர். எஸ். எஸ், ஸ்பெக்ட்ரம், கிமுகிபி, ராஜிவ் கொலை வழக்கு.

காண்டீன் கார்னர்:

பால்கோவாகாரர் ‘ஏன் அவர் வல்லை இன்னைக்கு’ என்று ஓவென்று ஓலமிட்டு அழுதார்.

கார போளியும் மிளகாய் வத்தல் சட்னியும் சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. நல்ல காரம் சாப்பிடுவர்களுக்கு மட்டுமே உகந்தது. மிளகாய் வத்தல் சட்னியில் அத்தனைக்குக் காரம்.

மாட்ச் ஃபிக்ஸிங் கார்னர்:

ஏன் பிரபல எழுத்தாளர்கள் சிலர் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தும் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் போகிறார்கள் என்றொரு நண்பர் கேட்டார். தலைப்புதான் பதில்.


சந்தித்து பேசாமல் இருந்தால் அவர்கள் இரண்டு பேரும் ஆண் எழுத்தாளராக இருப்பார்கள். இதற்கு மேல் நான் ஒன்று சொல்லவில்லை.

படம் கார்னர்:













2 Comments:

ரிஷபன்Meena said...

நம்ம அரசியல்வாதிகள் ஒன்று டாக்டர் ஆவார்கள் இல்லாவிட்டால் கவிஞர் ஆகி விடுகிறார்கள்.

ரோமிங் ராமன் said...

"அட்டைப்பட வடிவமைப்பு, புத்தகத்துக்கு பெயர் வைப்பது என எல்லாமே முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது"- உண்மைதான், ஆனாலும் நண்பர்கள் பரிந்துரை மற்றும் வெளியில் கிடைக்கும் மதிப்புரை plays a big role!!

நேற்று ஒரு (மிகச்)சின்ன சுற்று சுற்றியதில் கவனித்தது: விகடனை விட வானதியில் நல்ல கூட்டம். இரண்டிலுமே நான் கவனித்த வரை ஆன்மீகப் புத்தகங்களே நிறைய ஓடிக்கொண்டிருந்ததன!! வழக்கமாக சாப்பிட்டுவிட்டு மத்தியானம் தூக்கம் போடும் ரிடையர் ஆன வயதினர் நிறைய பேர், தூக்கத்தை தியாகம் செய்து விட்டு வந்திருந்ததாகத் தோன்றியது (நான் போனது மதியம் 3மணி )