பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 14, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி - பத்துக்குள்ளே ஒரு நம்பர்


இன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. நேற்றைவிடவும் குறைவு எனப்துதான் ஆச்சரியம். நாளையாவது கூட்டம் வரும் என்ற நம்பிக்கையில் பதிப்பாளர்கள்.

கிழக்கு அரங்குக்கு ஞாநி வந்திருந்தார். பல்வேறு விஷயங்கள் குறித்த ஆழமான விவாதங்கள் நடைபெற்றன! என்ன என்ன பேசினோம் என்று சொல்வதற்கில்லை. எதையாவது சாதாரணமாகப் பேசினால் கூட அதனை பொதுவில் எழுதிவிடுகிறார்கள் என்ற கருத்து எனக்கும் வலுப்பட்டுள்ளது. எனவே இனி நான் யாருடன் என்ன பேசினாலும் அதனை எழுதப்போவதில்லை. ஆனாலும் வெகுசில முக்கியமான பொது விஷயங்களை மட்டும் சொல்லலாம் என்றிருக்கிறேன். (இப்படித்தான் ஆரம்பிக்கும்.)

இப்புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்கு முக்கியக் காரணம் என்று ஓர் எழுத்தாளரின் பெயரை ஒரு பதிப்பாளர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், முக்கியமான காரணமாக மேத்யூ என்வரைச் சொன்னார் ஞாநி. அவர்தான் இப்படி புத்தகக் கண்காட்சி என்ற எண்ணம் உருவாவதற்கும், பபாஸி என்ற அமைப்பு குறித்த அடிப்படை எண்ணம் உருவாவதற்கும் காரணம் என்றார். அவரே பின்னர் தனியாக மாணவர்களுக்கென புத்தகக் கண்காட்சிகள் நடத்தினாராம். அதனைத் தொடர்ந்து எடுத்து நடத்த ஆளில்லாததால் அது பெரிய வெற்றி பெறவில்லை என்றும் கேள்விப்பட்டேன். எப்படியோ, மேத்யூக்கு வந்தனங்கள்.

பெங்களூர், டெல்லி புத்தகக் கண்காட்சிகளை ஒப்புநோக்குகையில் சென்னை புத்தகக் கண்காட்சியின் பலம், அதில் பங்கேற்கும் வாசகர்களின் எண்ணிக்கை. வாசகர்கள் இப்படி சாரை சாரையாக வந்து புத்தகம் வாங்குவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

இன்று இன்னும் இரண்டு வரிசைகளைச் சுற்றிப் பார்த்து முடித்தேன்.

(நேற்றே உயிர்மை அரங்கில் எஸ்ராவின் ‘துயில்’ நாவல் வாங்கினேன். அதனை எழுத மறந்துவிட்டேன்.)

தினத்தந்தியில் வரலாற்றுச் சுவடுகள் புத்தகம் வாங்கினேன்.

ஓர் அரங்கில் ஜெயபாரதியின் சிறுகதைகள் என்ற புத்தகம் பார்த்தேன். குடிசை ஜெயபாரதிதான். அவரது படங்கள் நமக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, தொடர்ந்து இப்படியான சமரசமற்ற படங்கள் எடுத்து வருவதற்காகவே அவரைப் பாராட்டவேண்டும். நண்பா நண்பா, இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள், சத்யராஜ் நடித்த ஒரு படம் (ஹிட்லர்?) இப்படிப் பல படங்கள்.

வெளியரங்கில் பிரபஞ்சன் பேசிக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததாகத் தோன்றியது. சிறிய சிறிய நகைச்சுவைக் கதைகள் போல ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். சோம வள்ளியப்பன் பேசுவதைக் கேட்க முடியாமல் போனது.


ஐந்திணை அரங்கில் ‘நல்ல தமிழ் எழுதவேண்டுமா’ புத்தகத்தைப் பார்த்தேன். அம்பலம் சாட்டில் சுஜாதா பரிந்துரைத்த புத்தகம். திருச்சியில் பழனியப்பா புத்தகக் கடையில் கிடைக்கும் என்று சொன்னார். அந்தக் கடையில் பல தடவை கேட்டும் கிடைக்கவில்லை. பின்பு ஒரு தடவை அப்புத்தகம் கிடைத்தது. வாங்கி வைத்துக்கொண்டேன். இப்போது அந்தப் புத்தகம் இருக்கிறதா, தொலைந்துவிட்டதா எனத் தெரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று இன்னொரு புத்தகம் வாங்கிக்கொண்டேன். பாரி நிலையம் வெளியிட்ட புத்தகம். அதே அரங்கில் கண்ணில் பட்ட இன்னொரு புத்தகம் - குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் உரையுடன். வாங்க ஆசை இருந்தது. ஆனால் பட்ஜெட் இடம் தரவில்லை.

தேசிகன் வந்திருந்தார். சீட்டு போல ஒரு விளையாட்டில் ராமாயணம் கற்றுக்கொள்ளும் ஒரு விளையாட்டை திரிசக்தி பதிப்பகத்தில் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். சங்கர மடம் வெளியிட்டது என நினைக்கிறேன். அதை தேசிகன் வாங்கியிருந்தார். நானும் வாங்கலாம் என்று போனேன். திரிசக்தி பதிப்பகத்தில் இருப்பவருக்கு எனக்குப் புரியுமாறு சொல்லத் தெரியவில்லை. அல்லது எனக்கு இந்த விளையாட்டு குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே வாங்காமல் வந்துவிட்டேன்.

இன்னொரு அரங்கில் ‘தவறின்றித் தமிழ் எழுத’ என்னும் புத்தகம் கண்ணில் பட்டது. முக்கியம் என்னவென்றால், எடுத்துக்காட்டுகளை எல்லாம் தமிழ்ப்பட பாடல்களில் இருந்து கொடுத்திருந்தார்கள். தமிழ்பேப்பர் ஸ்டைல். நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது எங்கள் தமிழய்யா இப்படித் தமிழ்ப்படங்களில் இருந்துதான் எடுத்துக்காட்டுகள் தருவார். சில மாணவர்கள் உதாரணங்களாக அதே பாடல்களைத் தேர்வுகளில் எழுதி வைத்து வாங்கிக் கட்டிக்கொண்டதும் உண்டு.

அதே அரங்கில் கண்ணில் பட்ட இன்னொரு புத்தகம் - சுப்புடு தர்பார். நிறைய அடுக்கி வைத்திருந்தார்கள்.

நக்கீரன் ஸ்டாலில் சிறிது நேரம் செலவிட்டேன். இரண்டு டிவி மானிட்டர்களில் முக்கியமான புத்தகங்களைப் பற்றிய விளம்பரங்களை ஒளிபரப்பினார்கள். பார்க்க மிக நன்றாக இருந்தது. அந்த அரங்கில் சில சுவாரஸ்யமான புத்தகங்கள் கண்ணில் பட்டன. ‘என்ன இல்லை ஹிந்துமதத்தில்?’ அச்சரியம்தான். ‘ஹிந்துமதம் எங்கே போகிறது’ பக்கத்திலேயே இந்தப் புத்தகத்தையும் வைத்து விற்கிறார்கள். பரபரப்பூட்டிய பாலியல் படங்கள் என்றொரு புத்தகம். ஆர்வமாகப் பார்த்தால், அத்தனையும் தமிழ்ப்படங்கள்! டிண்டோ பிராஸ் பார்த்துக்கொண்டிருக்கும்போது இதெல்லாம் எடுபடுமா? மிக தீவிரமான பாலியல் உலகத் திரைப்படங்கள் பத்து பற்றி தமிழ்பேப்பரில் எழுதவேண்டும் என்றொரு எண்ணம் எனக்கு வந்தது. நமக்கு முன்னே யாரோ முந்திக்கொண்டு விட்டார்களோ என்று பார்த்து ஏமாந்துவிட்டேன். அதனருகே இருந்த இன்னொரு புத்தகம் ‘சுட்ட படங்கள்.’ யார் யார் என்ன படங்களை சுட்டார்கள் என்பது பற்றிய புத்தகம் என நினைக்கிறேன். நியாயப்படி பார்த்தால் கமலுக்குத்தான் ராயல்டி தரவேண்டியிருக்கும்.

கிழக்கு கார்னர்:

இன்று கூட்டம் மிகக் குறைவு.

இன்றைய டாப் 5: ஒரே ஒருநாள் மட்டும் விற்பனையில் முத்லிடம் பிடித்து, பின்பு பத்துக்குள்ளே ஒரு நம்பராக இருந்த உலோகம், மீண்டும் இன்று முதலிடம் பிடித்தது. அடுத்ததாக ராஜ ராஜ சோழன், ஆர்.எஸ்.எஸ், முதல் உலகப் போர், காந்தி கொலை வழக்கு.

காண்டீன் கார்னர்:

இன்றும் கார போளி சாப்பிட்டேன். இனிப்பு போளியும்! கார போளி நன்றாக இருந்தது. இனிப்பு போளி சுமார். கடந்த ஆண்டு காண்டீனைவிட, இந்த ஆண்டு காண்டீன் மிகவும் துப்புரவாகவும், காண்டீன் உணவுகளின் சுவை நன்றாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் சேருவது இனம் என்று அன்றே ‘ஔவையார்’ சொல்லியிருக்கிறார். இப்படி சொல்வதைப் பார்த்துக் கோபப் படாதீர்கள். ‘ஆறுவது சினம்’ என்றும் ஔவைதார் சொல்லியிருக்கிறார்.

- ஹரன்பிரசன்னா

ஞாநியிடம் இவ்வளவு பேசினீர்கள் ஓ-பக்கங்கள் 2009-2010 ஏன் கிழக்கில் போடவில்லை என்று கேட்டீர்களா ?

படம் கார்னர்










8 Comments:

அரவிந்தன் said...

நீங்கள் படைத்த கவிதை தொகுப்பு புத்தகத்தின் மாபெரும் வரவேற்பு குறித்து எழுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

அன்புடன்
அரவிந்தன்

முகமூடி said...

// ஐந்திணை அரங்கில் ‘நல்ல தமிழ் எழுதவேண்டுமா’ புத்தகத்தைப் பார்த்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று இன்னொரு புத்தகம் வாங்கிக்கொண்டேன். இன்னொரு அரங்கில் ‘தவறின்றித் தமிழ் எழுத’ என்னும் புத்தகம் கண்ணில் பட்டது. //

இதயெல்லாம் ரெண்டுக்கு நாலு தடவையா படிங்க.. அப்படியாவது நல்ல தமிழ் எழுத வருதான்னு பார்ப்போம்..

// பல்வேறு விஷயங்கள் குறித்த ஆழமான விவாதங்கள் நடைபெற்றன! என்ன என்ன பேசினோம் என்று சொல்வதற்கில்லை. //

போட்ட மொக்கை பதிவு போடுறதுகுள்ள மறந்துச்சின்னா இப்படித்தான் பில்டப் கொடுக்கணும்.

ஹரன்பிரசன்னா said...

முகமூடி,

நான் எழுதுவது நல்ல தமிழ்தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்! :-)

ஞாநி சொன்னதெல்லாம் மறக்கவில்லை. வேண்டுமானால் வரி பிசகாமல் எழுதமுடியும். எழுதாமல் விட்டது, அது பொது வாசகர்களுக்குத் தேவையற்றது என்பதற்காக.

ரோமிங் ராமன் said...

"இன்னொரு அரங்கில் ‘தவறின்றித் தமிழ் எழுத’ என்னும் புத்தகம் கண்ணில் பட்டது"
இதே போல dr.ஸ்ரீதரன் அவர்களின் "பிழையின்றித் தமிழ் எழுதுவோம்" என்றொரு புத்தகம்.. பிரமாதமாக இருக்கும்!
சோம.வள்ளியப்பன் தங்கு தடையில்லாத அருமையான் சொற்பொழிவு!:)- அதைவிட முக்கியம் "சாராம்சத்துடன்-துளி கூட குறையாத சுவாரஸ்யம்"
ஹ பி.,ஒருவேளை உங்கள் பழைய புத்தகம் கிடைத்து விட்டால் எனக்குக் கொடுத்து விடுங்கள்..

விருபா - Viruba said...

ஞானியிடம் கேட்கப்படவேண்டிய கேள்வி, ஆனால் நீங்கள் இதைக் கேட்கமாட்டீர்கள் என்பதால் அதனை இங்கு பதிகிறேன்.

பெருவணிக புத்தகத் தயாரிப்பாளர்களிடம் பணம் ( ஸ்பான்சர் ) வாங்கிக்கொண்டு பிரைம் ஸ்டால்களை குலுக்கல் இன்றி வழங்கும் பப்பாசி அமைப்பு, தரமான புத்தகங்களைப பதிப்பிக்கும் சிறு பதிப்பாளர்களுக்கு ஸ்டால் கொடுக்காமல் விடுவது சரியானதா ?

நாட்டில் நடக்கும் பல மீறல்களைப் பற்றிக் குறிப்பிடும், குட்டுவைக்கும் ஞானிக்கு இது ஏன் தெரியாமல் போனது ?

விடை கிடைத்தால் நல்லது ஹரன் பிரசன்னா

விருபா - Viruba said...

?

ஒரு வாசகன் said...

பாரா தனது பதிவில்

//நான் திரும்பவும் கிழக்குக்கு வந்தபோது ஞாநி அங்கே இருந்தார். என்னைப் பார்த்ததும் ‘இப்போதுதான் பிரசன்னாவிடம் பேசி முடித்தேன். இன்றைக்கு அவர் இட்லிவடையில் எழுத ஒரு மேட்டர் கொடுத்துவிட்டேன். உங்களுக்குக் கிடையாது’ என்றார்//
என்று எழுதிய்ள்ளார் நீங்களோ
//கிழக்கு அரங்குக்கு ஞாநி வந்திருந்தார். பல்வேறு விஷயங்கள் குறித்த ஆழமான விவாதங்கள் நடைபெற்றன! என்ன என்ன பேசினோம் என்று சொல்வதற்கில்லை// என்கிறீர்கள்.
ஞாநி சொன்ன விடயங்களை நாங்கள் எப்படி அறிவது?

Black said...

அரவிந்தன் nalamma,

andha kavithai thogupu patri satru virivaga kuravum.