பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 10, 2011

சென்னை புத்தகக் கண்காட்சி - ஆறு மனமே ஆறு

புரட்சியின் பிரகடனம் பத்தே ரூபாய்!

சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த முறை புரட்சி அதிகம் தழைத்திருந்தது. புரட்சி அரங்குகளில் புன்னகையும் அன்பும் ததும்ப நின்று வரவேற்கிறார்கள். உள்ளே நுழைந்து ஐந்து நிமிடம் உலாவினால், அருகே நெருங்கி காதருகே கிசுகிசுக்கிறார்கள். அன்பரே, புரட்சி சேலத்துககு இத்தனாம் தேதி வருகிறது, சென்னைக்கு இத்தனாம் தேதி வருகிறது, டெல்லிக்கு இத்தனாம் மாசம் போகிறது. சென்று புரட்சித்து பயன் பெறுங்கள். இன்னமும் பச்சைரத்தம் குறித்தும், படுகொலைகள் குறித்தும் லெக்சர் கொடுக்கிறார்கள். பட்டியல் கொடுத்தார்கள். ரத்தத்துக்குப் பேதமில்லை பத்து ரூபாய். பொருள்நிலை கடந்த புரட்சி. புரட்டிலிருந்து புரட்சித்தவனுக்கு. செய்யாதே, செய்யவும் விடாதே. ஆடியோ, வீடியோ அனைத்தும உள்ளது தோழரே. காற்று வாங்கும் அரங்கில், வெள்ளி முளைக்கும் அரங்கில், மாஓ பின்னால் ஓடு, ஒரு சலாம், அனைத்தும் கிடைக்கிறது. கால் மணி நேரம் பர்சேஸ் செய்தால், புரட்சி செய்துவிடலாம்.




சே, என்ன எழவு இது. ஏதோ துர்கனவு என நினைக்கிறேன். அப்படியே விட்டுவிட்டு மெயின் படத்துக்கு வாருங்கள்.


இன்றைய புத்தகக் கண்காட்சி மந்தமாகத் தொடங்கி, கொஞ்சம் சூடிபிடித்து, மீண்டும் மந்தமாக முடிந்துவிட்டது. நேற்றைவிட இன்று கூட்டம் அதிகம் வரும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நேற்றைவிடக் குறைவான கூட்டமே வந்தது போலத் தோன்றியது. டி20 கிரிக்கெட்தான் இதற்குக் காரணம் என்று சிலர் பேசிக்கொண்டார்கள். எனக்கு என்னவோ ரஜினி-பாலசந்தரின் சன் டிவி நிகழ்ச்சியால் கூட்டம் குறைந்திருக்கலாம் என்று தோன்றியது. இரவு 7 மணிக்குப் பிறகு கூட்டமே வராததைப் பார்த்தால், இந்தக் காரணத்தைத்தான் அதிகம் நம்பத்தான் தோன்றுகிறது எனக்கு.

கூட்டம் வந்த நேரத்தில், முதல் வரிசையில் நடக்கவே முடியவில்லை. உயிர்மை ஸ்டாலில் கடும் கூட்டம். ஹிக்கின் பாதம்ஸ் ஸ்டாலில் வாசகர்களை வரிசையில் நிறுத்தி பில் போட்டார்கள்.

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி, உலகத்திலேயே முதன்முதலாக ரகசியமாக நடத்தப்பட்ட புத்தக வெளியீடுதான். சொல்வனம் வெளியிட்டிருக்கும் தாயார் சன்னதி புத்தகமும் சிலிக்கான் கடவுள் புத்தகமும் இன்று வெளியிடப்பட்டன. ரகசியமாக வெளியிடப்படும் புத்தகம் என்று சும்மா சொல்லவில்லை. பொதுவாக இலக்கியப் புத்தக வெளியீடுகளே இப்படி ரகசியமாக நடத்தப்படுவைதான். ஆனால் இதில் இன்னும் விஷேஷம் என்னவென்றால், யார் வெளியிடப் போகிறார்கள், யார் பெறப் போகிறார்கள் என்பது அந்த நேரம் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாது என்பதுதான்.

சுகா வந்திருந்தார். நாம் பேசுவது புகைப்படத்தில் பதிவாகாவது என்பதுதான் எவ்வளவு பெரிய கொடுப்பினை என்பதை அமைதியாகச் சிரித்துக்கொண்டே நிரூபித்தார். சேது பெங்களூரிலிருந்து வந்திருந்தார். ஒன்றிரண்டு புத்தகங்களை ஒன்றிரண்டு நிமிடங்கள் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன்.

உடுமலை.காம் சித்தார்த்துடன் நேற்று பேசிக்கொண்டிருந்தேன். அதை நேற்று குறிப்பிட மறந்துவிட்டதால் இன்று குறிப்பிடுகிறேன். நான் சொன்ன முக்கியமான விஷயம், ஆன்லைனில் புத்தகத்தை ஆர்டர் செய்யும் வசதி உள்ளது என்பதை மக்கள் அறியுமாறு உடுமலை.காமின் அரங்கு அமைக்கப்படவேண்டும் என்பதே. சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும் பெரும் மக்கள் கூட்டத்தில் கொஞ்ச பேர்கூட புத்தகக் கடைக்குச் சென்று புத்தகம் வாங்குவதில்லை. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் புத்தகம் வாங்குவது என்பது நல்ல மாற்று. ஆனால் இதை எப்படி மக்களிடம் கொண்டு செல்லப் போகிறோம் என்பது கேள்விக்குறி. நியூ ஹொரைஸன் மீடியாவும் பிற பதிப்பகங்களின் புத்தகங்களை ஆன்லைன் மூலம் விற்பதில் இறங்கியுள்ளது. இன்னும் பெரிய அளவில் தயாராகவில்லை, எனவே பெரிய அளவில் சந்தைப்படுத்தவில்லை. சரியான விளம்பரம், சரியான பரவல் மூலம் ஓர் அன்லைன் தளத்தை ஜெயிக்க வைக்கமுடியும். தேவை சரியான முதலீடு, பொறுமை. தமிழில் இதனை யார் நிகழ்த்தப்போகிறார்கள் என்பதுதான் கேள்வி. நிச்சயம் யாரோ ஒருவர் நிகழ்த்தத்தான் போகிறார்கள்.

இன்று வெளியரங்கில் என்ன கூட்டம் நடந்தது எனத் தெரியவில்லை.

இன்று மட்டும் ஒரு பத்து பேராவது என்னிடம் வந்து, என் புத்தகக் கண்காட்சி பற்றிய தொடர் இடுகைகளைப் படிப்பதாகச் சொன்னார்கள். ஆச்சரியம்தான்.

புத்தகக் கண்காட்சி முடிந்து வெளியேறும் தறுவாயில் எஸ்ராவைச் சந்தித்தேன். கைக்குலுக்கிவிட்டு இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு வந்தேன்.

கிழக்கு கார்னர்:

எல்லாப் புத்தகங்களும் விற்பனைக்கு வந்துவிட்ட நிலையில், இன்று நல்ல விற்பனை இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 7 மணிக்குப் பிறகு கூட்டம் சட்டென வடிந்துவிட்டதால், விற்பனை நான் எதிர்பார்த்த அளவு இல்லை. இனி அடுத்த வெள்ளி வரை தேவுடு காக்கவேண்டியதுதான்.

இன்று டாப் 10 என்னவென்று சொல்ல இயலவில்லை. எதிர்பாராத சாஃப்ட்வேர் பிரச்சினை காரணமாக, சரியான டேட்டாவைப் பெற முடியவில்லை. நாளை வரை காத்திருக்கவேண்டும். தெரிந்ததும் சொல்கிறேன்.

கேண்டீன் கார்னர்:

காலையில் நானும் பாராவும் மணிகண்டனும் ச.ந. கண்ணனும் கேண்டீன் சென்றோம். இன்றைக்குத்தான் கேண்டீனைப் பார்க்கிறேன். சென்றமுறை பிராமண ஆதிக்கம் கோலோச்சிக்கொண்டிருந்த இடத்தில் இப்போது செட்டியார் ஆதிக்கம். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏன் இந்த முறை சமையல் காண்டிராக்ட் எடுக்கவில்லை எனத் தெரியவில்லை. சோடா சாப்பிடுவோம் என்றார் பாரா. குளிராக உள்ள நீர் என்று சொன்னாலே மணிகண்டனுக்குத் தும்மல் வந்துவிடும். நானும் அவரும் தெளிவாக பாராவிடம் ‘ரொம்ப கூலா இருக்குமா?’ என்று கேட்டோம். ‘கூலே இருக்காது’ என்று உத்தரவாதமளித்தார் பாரா. ஆனால் வாழ்நாளில் இத்தனை கூலாக குடித்ததில்லை என்று கதறும் அளவுக்கு செம கூல் சோடா! மணிகண்டனுக்கு உடனே தும்மல் ஆரம்பித்தது. 4 மணி நேரம் கழித்து எனக்கு இருமல் ஆரம்பித்தது. பால்கோவாவிலிருந்து பன்னீர் சோடா வரை என்று பாரா எழுதப் போகும் தொடர் கட்டுரைக்கு இரண்டு கரப்பான் பூச்சிகள்! அடுத்த முறை நாங்கள் கேண்டீன் சென்றபோது, சேது, சாமிநாதன், சுகா, ராமன்ராஜா உள்ளிட்ட நண்பர்கள் குழாம் அங்கே இருந்தது. போளியும், மணிகண்டன் வாங்கிவிட்டதால் வேறு வழியில்லாமல் தோசையும் சாப்பிட்டேன். இரண்டுமே சுமார் ரகம்.

இனி நாளை முதல் மற்ற பதிப்பகங்கள் விசிட் மற்றும் புத்தகங்களின் சிறிய சிறிய பட்டியல்கள் தொடரும்.

இட்லிவடை கார்னர்: நக்கலா மஞ்சள் கலரில் மிளகாய் பொடி மாதிரி கமெண்ட் அடிக்கிறீங்க என்று ஓர் அன்பர் சொன்னார் அதனால் இன்று நோ நக்கல். பாரதி மணி சுகா புத்தகத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதி அனுப்ப இசைந்துள்ளார். இன்று ஆவலாக இரத்தப் படலம் காமிக்ஸை எல்லா ஸ்டாலிலும் தேடினேன். கிடைக்கவில்லை. கடைசியாக 250/= பிரகாஷ் பப்ளிஷர்ஸுக்கு மணியாடர் செய்துவிட்டேன். பிரசன்னாவிடன் 'இரண்டு' வார்த்தை பேசினேன், உடனே உதவி செய்யும் மனிதர்.


6 Comments:

King Viswa said...

இட்லி வடைக்கு இல்லாத இரத்தப்படலமா? உடனடியாக வேண்டுமெனில், அணுகவும்.

புத்தக கண்காட்சி ஒரு காமிக்ஸ் ரசிகனின் பார்வையில்

ருத்ரன் said...
This comment has been removed by the author.
ருத்ரன் said...

திரைகடல் தாண்டி இன்னும் அந்த திரவியத்தை தேடிக்கொண்டே இருக்கும் என்னைப்போன்ற புத்தகப்பிரியர்களுக்கு இந்த தொடர்பதிவு ஒரு ஆறுதல்.

sakthistudycentre.blogspot.com said...

கூட்டம் எவ்வளவு வருதுன்னு கரெக்ட்டா உண்மை சொல்ரீங்க பாருங்க உங்ககிட்ட அந்த உண்மை பிடிச்சிருக்கு..

rawanan said...

"புரட்சியின் பிரகடனம் பத்தே ரூபாய்!

சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த முறை புரட்சி அதிகம் தழைத்திருந்தது. புரட்சி அரங்குகளில் புன்னகையும் அன்பும் ததும்ப நின்று வரவேற்கிறார்கள். உள்ளே நுழைந்து ஐந்து நிமிடம் உலாவினால், அருகே நெருங்கி காதருகே கிசுகிசுக்கிறார்கள். அன்பரே, புரட்சி சேலத்துககு இத்தனாம் தேதி வருகிறது, சென்னைக்கு இத்தனாம் தேதி வருகிறது, டெல்லிக்கு இத்தனாம் மாசம் போகிறது. சென்று புரட்சித்து பயன் பெறுங்கள். இன்னமும் பச்சைரத்தம் குறித்தும், படுகொலைகள் குறித்தும் லெக்சர் கொடுக்கிறார்கள். பட்டியல் கொடுத்தார்கள். ரத்தத்துக்குப் பேதமில்லை பத்து ரூபாய். பொருள்நிலை கடந்த புரட்சி. புரட்டிலிருந்து புரட்சித்தவனுக்கு. செய்யாதே, செய்யவும் விடாதே. ஆடியோ, வீடியோ அனைத்தும உள்ளது தோழரே. காற்று வாங்கும் அரங்கில், வெள்ளி முளைக்கும் அரங்கில், மாஓ பின்னால் ஓடு, ஒரு சலாம், அனைத்தும் கிடைக்கிறது. கால் மணி நேரம் பர்சேஸ் செய்தால், புரட்சி செய்துவிடலாம்."

எங்கயோ எரியுற வாசனை வருதே ?

Udayakumar Sree said...

என்ன எழவு இது என்ற புலம்பலுக்கு, முன்னால் எழுதிய "சே" என்று படிக்கும்போது முன்னாள் படித்த "புரட்சி" என்கிற வார்த்தை சற்றே எத்தனித்து "சே குவேரா" வை நினைவுபடுத்தியது.