பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 28, 2010

இரண்ய நாடகம் - சிறுகதை - JP

நன்கு செழித்து வளர்ந்த, பல வண்ண றெக்கைகள் மற்றும் பற்சக்கரம் போன்ற கொண்டை கொண்ட கிழட்டு சேவலின்,கழுத்தை 'கடக்' என்று அறுத்து ரத்தத்தை மூலைக்கொரு சொட்டு விட்டு தலையை கிழக்கு நோக்கி தூர வீசிவிட்டு, உடலை குழம்பு வைக்க அனுப்பி விட்டு, பூசாரியாகப்பட்டவர் கற்பூர ஆராதனை காட்டியவுடன் , கட்டியக்காரர்கள் " த்ரிலோகச் சக்ரவர்த்தி, கோப்பரகேசரி, அதல,ஸிதல,பாதாள மாதண்ட நாயகர், மாமன்னர் இரண்ய கசிபு வருகிறார்.பராக்!பராக்!.." என்று உரத்த குரலில் கத்திவிட்டு ஒதுங்கி நிற்க , இரண்யனாகிய கம்பளத்தான் முருகைய்யன், "ஆஹா!" என்று அந்தரத்தில் இருந்து குதித்து 'தாதிங்கே..தாதிங்கே" என்று காற்சலங்கைகள் 'ஜல்..ஜல்" என்று தெறிக்க , வெறியோடு ஆட்டமெடுத்தான்.

உருமியும்,கொட்டும் ஒங்கி முழங்கியது.ஜனங்கள் அந்த தை மாதக் குளிரில் பாறைகள் மீதும், கள்ளிச் செடிகளுக்கு கீழேயும் முட்டாக்கு போட்டுக் கொண்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போகும் வரக் காப்பியை எதிர்பார்த்துக் கொண்டு,குத்துக்கால் போட்டு உட்கார்ந்திருந்தார்கள்.

கம்பளத்தானின் ஆட்டம் அசகாயமாக இருந்தது.இந்த வருடம் தான் முதன்முறையாக கூத்து கட்டுகிறான். அவனுடைய அப்பா படுத்த படுக்கையாகி ரொம்ப நாளானது.அவர் வருஷா வருஷம் கட்டும் இரண்ய வேஷம் முருகைய்யனுக்கு வந்தது.பரம நாஸ்திகனான அவனுக்கு பேரானந்தமாக இருந்தது.

பின்னே யாருக்கு வரும் வாய்ப்பு இந்த மாதிரி. ஜனங்கள் கும்பிடும் கடவுளை அவர்களுக்கு முன்னாலேயே இப்படி நாவாரத் திட்டும் வாய்ப்பு. மிக்க சந்தோஷமாக இடமும் வலமுமாக ராஜ நடை நடந்தான்.

உருமியும்,கொட்டும் ஓய்ந்து, நான்கு வயதுப் பிள்ளையின் நீளமுடைய முகமூடியை அணிந்து கொண்டு, தோள்களைத் தளுக்கிக் கொண்டு போய் அரியணையில் உட்கார்ந்து கட்டியக்காரர்களை பார்த்துக் கையசைத்தான்.

' செந்தூரூபார் இசை பாடாதே, இரண்ய ராஜா, இரண்ய ரூபா,
கொலுவுதன்னிலே வந்து தோன்றினாரே,
சூரார் கைகள் கட்டி நடுங்கிடவே..' என்று டோலக்கும், ஹார்மோனியமும் ஈனஸ்வரத்தில் ஒலிக்க பாட ஆரம்பித்தார்கள்.

பொவாக்கு தம்பி, டோலக்கை மாட்டுச் சாணத்தை சுவற்றில் தட்டியது போல் 'பொத்..பொத்'தென்று சாத்தினான்.கம்பளத்தான் இடது கையை அரியணைக்கு பின்னால் நீட்டி ஒரு கிளாஸ் சாரயத்தை வாங்கி பட்டென்று சாத்திவிட்டு, மந்தகாசப் புன்னகையுடன் உட்கார்ந்திருந்தான். இரண்ய அறிமுகப் படலம் நீண்டு கொண்டே போனது.

அவன் நாடகத்தில் இல்லாத சில பாடல்களை, எழுதி உருப் போட்டு வைத்திருந்தான். அத்தனையும் நாராயணனைநார் நாராகக் கிழிக்கும் பாடல்கள்.இன்றைக்கு வைத்து வாங்கிவிட வேண்டியதுதான்.பிரஹலாதான் வந்தால் தான் அது முடியும். வரட்டும் என்று கறுவிக் கொண்டிருந்தான். என்ன இருந்தாலும் தான் இறுதியில் தோற்கப் போகிறவன் என்று அவனுக்கு தெரியாமல் இல்லை. அதனால் என்ன. நரசிம்மர் , இரண்யனை வதம் செய்வது கடைசி பத்து நிமிடம்தான்.

ஆனால் அதுவரைக்கும் என் ராஜ்ஜியம்தான்.

இரண்ய அறிமுகம் முடிந்து வரக்காப்பி வினியோகம் ஆரம்பித்தவுடன், அவன் எழுந்து பின்னால் போனான். பிரகலாதனும், சுக்ராச்சாரியரும், இன்ன பிற முனிவர்களும், நான்கு எம கிங்கரர்களும் அவர்களுக்குரிய ஆடை, அலங்காரத்துடனும் , கையில் ஆளுக்கொரு கிளாஸ் சாரயத்துடனும் உட்கார்ந்திருந்தார்கள்.
மாலையில் ஆரம்பித்து, அதிகாலை வரை ஓயாமல் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பது சாராயத்தின் உதவியில்லாமல் சாத்தியமேயில்லை.

அவனைப் பார்த்தவுடன் எம கிங்கரர்கள் திடுமென கூட்டத்தில் புகுந்து , தூக்கக் கலக்கத்துடன் இருந்த நான்கைந்து பொடிசுகளை , அவர்கள் கதறக் கதறத் தூக்கிக் கொண்டு பின்னால் ஓடினார்கள். இது ஹேஸ்யத்துக்காக.அவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாயும், அரிசி முறுக்கும் கொடுத்து சமாதானப் படுத்தினார்கள்.

' டம், டம்' என்று டோலக் ஒலிக்க பிரகலாதன் வந்து அவன் பங்கிற்கு குதிக்க ஆரம்பித்தான். இரண்ய படலம் கொஞ்சம் நீண்டதில் அதிகமாகக் குடித்து விட்டான் போல. சில இடங்களில் தடுக்கி விழப் போனான். குழலூதும் கண்ணன் போல அபிநயம் பிடிக்க வேண்டிய ஒரு பாடலில், துடுப்பு வலிப்பவன் போல கைகளை வைத்திருந்தான்.

சுக்ராச்சாரியாரும், இன்ன பிற முனிவர்களும் அறிமுகப் படலத்தின் போது தாடியை நீவிக் கொண்டே தாளத்துக்கு ஏற்ற மாதிரி ஆடியும், அப்புறம், இப்புறம் நடந்தும் சுருதி கூட்டினார்கள். சிலர் தாடியைக் கொஞ்சம் அழுத்தி நீவியதில் அது கையோடு வந்தது.சிலர் பஞ்சகச்சம் சரியாகக் கட்டாமல் , அவிழ்ந்து, தடுக்கி, டோலக் தட்டிக் கொண்டிருந்த பொவாக்கு தம்பியின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்கள். சாரயத்துக்கு பதில் கள்தான் சரியானது என்ற அபிப்ராயம் மக்கள் மத்தியில் எழுந்ததாகக் காணப்பட்டது. அறிமுகப் படலம் மொத்தமாக முடிந்தபோது வரக்காப்பியோடு, வெங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை கலந்த சுண்டலும் விநியோகிக்கப்பட்டது.

அடுத்து வரும் இரண்ய தர்பாருக்கு முன் டோலக்கை சரி செய்து விடும்படி சிட்டேபாளையம் சுப்பைய நாய்க்கர் வந்து பொவாக்கு தம்பியை அன்பாக எச்சரித்து விட்டுப் போனார். இரண்யனின் இடுப்பில் கயிற்றைச் சுற்றி இரண்டு பக்கமும் இறுக்கிப் பிடித்திருந்தார்கள். அவ்வப்போது ஆவேசம் வந்து அவன் அரியணையில் இருந்து குதித்து பாட்டு பாட வேண்டும்.
ஆவேசம் அதிகமாகி கீழே விழுந்து தொலைத்தால் என்ன செய்வது. தர்பார் ஆரம்பித்தது.

முதல் நான்கு விருத்தங்கள் பிரகலாதன் ' அரி நாமத்தை' பற்றி பாடிய பின், இரண்யன் நான்கு விருத்தம் பாட வேண்டும் என்ற நாற்பது வருட பாரம்பரியத்தை முருகைய்யன் அன்று உடைத்தான்.முதல் விருத்தம் முடிந்தவுடனேயே எழுந்து குதித்து விட்டான். கயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் காட்டெருமை, காட்டாறைத் தாண்டியது போல் கை,கால்களை பரப்பிக் கொண்டு விழுந்தார்கள். பயப்படாமல் எதிர்த்து நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையுமாக நிற்க வேண்டிய பிரகலாதன் அவனுடைய ஆவேசத்தைப் பார்த்து அங்குமிங்குமாக ஓடினான்.

அவனை இழுத்துக் கொண்டுவந்து சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. முருகைய்யனின் ஆட்டம் பிரமாதமாக இருப்பதாக ஊர்த்தலைவர் சொல்லிவிட்டு மூக்கு பொடி ஒரு சிமிட்டா எடுத்துப் போட்டுக்கொண்டார். அடக்கி வைத்திருந்த அத்தனை நாஸ்திகக் கொதிப்பையும், கொந்தளிப்பையும் காட்டி விடும் வேகத்தில் இருந்தான்.

"சொல்லுவாயா அந்தப் பேரை" என்று சொல்லுமிடத்திலெல்லாம் குரல் யானை பிளிறியது போல் இருந்தது. பிரகலாதன் நிஜமாகவே, எங்கே முருகய்யன் கையில் வைத்திருக்கும் மரக்கத்தியினால் அடித்தே விடுவானோ என்று மிக்க பீதியில் இருந்தான்.சம்பந்தமே இல்லாத இடத்தில் சம்பந்தமே இல்லாமல் அவன் பாடிய வசவுப் பாடல்களில், ஏக களேபரமாக இருந்தது. பவக்காளி வந்து அவன் காதில் எதையோ சொல்லிவிட்டு போனான். சுருதி மொத்தமாகத் தளர்ந்து விட்டது. அரியணையில் போய் கம்மென்று உட்கார்ந்து விட்டான். மற்றவர்கள் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் தொடர்ந்தார்கள்.

முன்னைப் போல ஆவேசம் அவனிடம் இல்லை. அசதியாக இருக்கலாம். அமைதியாகவே பாடினான். ஆனால் வசவில் குறை இல்லை.

இரவெல்லாம் தொடர்ந்த நாடகம் ,பகலும்,இரவும் இல்லாத அதிகாலை நேரம், நரசிம்மர் படுதாவின் மறைவிலிருந்து வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்தவுடன் முடிவுக்கு வந்தது. முகமூடியைக் கழற்றி தூர எறிந்துவிட்டு, ஓடினான் ஆஸ்பத்திரிக்கு.

பிரசவ வார்டுக்கு வெளியே பவக்காளி, துண்டை வாயால் பொத்திக் கொண்டு பூத் பூத்தென்று அழுது கொண்டிருந்தான்.

நிறைமாத கர்ப்பிணியான முருகைய்யனின் மனைவி அன்னம்மா, நடு ஜாமத்தில் கொல்லைப்புறம் போனபோது மாடு விலாவில் முட்டித் தள்ளிவிட்டது. நனைந்து பிழிந்த சேலை போல படுக்கையில் கிடந்தாள்.

' அன்னம்மாவுக்கு ஆபத்தில்லே..கொழந்தே செத்துப் பொறந்துச்சுடா முருகா" என்று கதறினான் பவக்காளி.

ஓரமாகப் போய் கைகளால், முகத்தைப் பொத்திக்கொண்டு விசும்பினான். வியர்வையிலும்,கண்ணீரிலும் அவன் பூசியிருந்த அரிதாரம் அவன் கைகளில் ஒட்டிக் கொண்டு வந்தபோது, அவளுக்கு மீண்டும் பிரசவ வலி எடுத்தது.

அரை மணி நேரம் கழித்து , ஆண் மகவு பிறந்திருப்பதாக குண்டு டாக்டர் சொல்லி விட்டு போனார்.

பவக்காளி இரு கைகளையும் உயர்த்தி கண்ணீர் வழிய கும்பிட்டுவிட்டு " அந்த நாரயணனே உனக்கு மகனா வந்து பொறந்திருக்காண்டா முருகா..!" என்றான்.

கம்பளத்தான் முருகைய்யன் எதையோ ஆக்ரோஷமாக சொல்ல வாயெடுத்தான்.

வார்த்தை வரவில்லை.

- Parthasarathi Jayabalan
( parthasarathij89@gmail.com )

10 Comments:

Anonymous said...

சத்தியமாக "உலக நாயகனின்" சமீபத்திய கவிதை அந்த்தர் பல்ட்டிக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்று தானே சொல்கிறீர்கள்?

Anonymous said...

Kathi aamippu nandarga ullathu.

Karuthu thaan Karunanithi peasina mari irruku....

Mudalvar kondadum... Xmas, Ramjan,,

Deepavali mattum illa.

புரட்சித்தலைவன் said...

must watch

http://www.youtube.com/watch?v=eSs00hNXiYw&feature=player_embedded

ரிஷபன்Meena said...

இந்த மாதிரி ஒரு கேரக்டர் முதல்வர் என்ற capacity -ல் வாழ்த்தினாலும் அதில் என்ன சிறப்பு.

அந்த மனிதர் தீபாவளி பொங்கல் என்று எந்தப் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்லாதிருப்பதே நல்லது.

Parthasarathi said...

அன்புள்ள இட்லிவடை,

என்னுடைய சிறுகதையை வெளியிட்டதற்காக என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அன்புடன்,

பார்த்தசாரதி ஜெயபாலன்

parthasarathijayabalan.blogspot.com

சுபத்ரா said...

மனதில் நிற்கும் சிறுகதை.. நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் பார்த்தசாரதி ஜெயபாலன்...!

Parthasarathi said...

நன்றி சுபத்ரா!

JP

Parthasarathi said...

நன்றி சுபத்ரா!

JP

Parthasarathi said...

நன்றி சுபத்ரா!

JP

Raj said...

For all of you... Still in my native(Vakkanakombu,Sirumugai,CBE) this drama is happening. If you wish to watch this please contact me I have video clippings. We are putting this one for every pongal festival. Even this time we celebrated in a grand manner with lots of Chief guests for this functions 50th Anniversary.