பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 13, 2010

விஜயும் விவசாயமும்

சில வாரங்களுக்கு முன் ( தீபாவளியின் போது ) 108 குடும்பங்களுக்கு பசுமாடு தானம் கொடுத்து விஜய் இவ்வாறு பேசினார்.

"ஒரு பசுமாடு இருந்தா ஒரு குடும்பம் பிழைக்கும் என்று கூறுவார்கள் சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு என்ற பாடல் வரிகளையும் புரட்சித் தலைவர் பாடி இருக்கிறார். தானத்தில் சிறந்தது பசுதானம் என்று புரணாங்கள் சொல்லுகின்றன. அதனால் இந்த தீபாவளிக்கு இவர்கள் இன்றைக்கே வருமானத்துடன் பயன்பெறுகிறமாதிரி இந்த பசுதானத்தை வழங்குகிறோம்.

இந்தியா விவசாய நாடு இருந்தும் விவசாயிகளின் நிலைமை ரொம்ப மேசமாக இருக்கிறது. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழில் பார்க்க போகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் என் கண்ணோட்டம் முழுவதும் விவசாயிகளின் உயர்வு மீதுதான். அவர்களின் சிலரின் உயர்விற்கு என்னால் ஆன இந்த பணியை செய்திருக்கிறேன். இதன் மூலம் 108 குடும்பங்கள், அந்த குடும்பத்து உறுப்பினர்கள் சந்தோஷமடைந்து அவர்கள் கொண்டாடுகிற தீபாவளி, நான் கொண்டாடுகிற தீபாவளி மாதிரிதான்"

சுறா போன்ற படத்தில் நடித்தாலும், இந்த மாதிரி பேசும் விஜயை பாராட்ட வேண்டும். அதைவிட பிரதீபாவை மேலும் பாராட்டலாம். அவரை பற்றிய செய்தி கீழே....நிஜவேர்'களைத் தேடும் 'சாஃப்ட்வேர்'...

"இன்னிக்கு எல்லாருக்கும் நல்ல கல்வி கிடைக்குது. திறமை இருக்கறவங்களுக்கு கை நிறைய சம்பளத்துல வேலை கிடைக்குது. கணினிக்கு வாக்கப்படறதுக்கு பலனா... வீடு, கார்னு விரும்பின வாழ்க்கை கிடைக்குது. நல்ல விஷயம்தான். ஆனா, இப்படி எல்லோருமே 'வொயிட் காலர் ஜாப்'ங்கறத நோக்கியே போயிட்டா, உயிராதாரமா இருக்கற உணவுப் பொருள்கள யார்தான் உற்பத்தி செய்றது..?"

- முக்கியமான கேள்வியுடன் ஆரம்பிக்கும் பிரதீபா நக்வார், இன்று ஒரு இயற்கை விவசாயி; ஆறு ஆண்டுகளுக்கு முன்... சாஃப்ட்வேர் இன்ஜினீயர்!

கர்நாடகா மாநிலம், நக்வார் என்ற கிராமத்தைச் சேர்ந்த சௌபாக்கியதேவி- ரங்கய்யா தம்பதியின் மகள் பிரதீபா. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துவிட்டு, அமெரிக்காவில் பெரிய நிறுவனம் ஒன்றில் ஒன்பது ஆண்டுகள் பணி... அதே நிறுவனத்துக்காக லண்டனில் இரண்டு ஆண்டுகள் பணி என பதினோரு ஆண்டுகள் கை நிறைந்த சம்பளத்துடன் உயர்ந்த பொறுப்பை நோக்கி விரைந்து கொண்டிருந்தவர்.

எங்கு, எப்படி நிகழ்ந்தது இந்த கணினி டு கழனி மாற்றம்?

"சாஃப்ட்வேர் துறையில வேலை பார்த்தப்போ, நான் சந்திச்ச பலர், விவசாயக் குடும்பங்கள்ல பிறந்து, படிச்சு, பெரிய பணிகளுக்கு வந்தவங்களா இருந்தாங்க. 'ஊர்ல எப்படி இருக்கு உங்க விவசாயம்?'னு அவங்ககிட்ட ஆர்வமா கேட்பேன்.

'இனியும் அது எதுக்கு எங்களுக்கு? அப்பா, அம்மாவை சிட்டிக்கு கூட்டிட்டு வந்துட்டேன். தாத்தா, பாட்டி இருக்கறவரைக்கும் அவங்களால முடிஞ்சத பார்ப்பாங்க. அப்பறம், அவ்வளவுதான்! கிட்டத்தட்ட, எங்க ஊருல இருக்கற எல்லா விவசாய நெலத்தோட நிலைமையும் இதுதான்!'னு காலம் காலமா அவங்கள காப்பாத்தின, உலகத்து பசியையெல்லாம் ஆத்திட்டு வந்த, பாரம்பரிய தொழிலோட ஆயுள் முடியப்போறதைப் பத்தின எந்த வருத்தமும் இல்லாம சொல்லுவாங்க. ஆனா, அதை என்னால சுலபமா கடந்து போக முடியல.

'இந்தத் தலைமுறையும், இனி வரும் தலைமுறையும் இப்படி விவசாயத்தில் இருந்து விலகிட்டா, அப்பறம் உணவுங்கறது எங்கிருந்து கிடைக்கும்?'னு எனக்குள்ள எழுந்த கேள்வி, என்னை பல இரவுகள் தூங்க விடல. அதுக்காக இயக்கத்துல சேரவோ, கட்டுரைகள் எழுதவோ, பிரசாரத்துல கலந்துக்கவோ எனக்கு விருப்பமில்ல.

'நாம விரும்பற மாற்றத்துக்கான முதல் புள்ளியா, நாமளே இருப்போம்!'னு இறுதியா, உறுதியா முடிவெடுத்து, வேலையை விட்டுட்டு விவசாயத்துல இறங்கினேன். என்னை நோக்கி வந்த அதிர்ச்சிப் பார்வைகள், கேலிப்பேச்சுகள், அறிவுரைகள் எல்லாம் ஒரு கட்டத்துல அதுவா விலகிடுச்சு. இப்போ இந்த பிரதீபா 11 ஏக்கர் நிலத்துல... நெல், காய், கனி, பயறுனு விளைவிக்கற ஒரு விவசாயி!" என்று சொல்லும் பிரதீபாவின் தீர்க்கமான பார்வையும், அதை அவர் அடைந்த தெளிவும், அவர் மீது மரியாதையைக் கூட்டுகின்றன.

பெங்களூருவில் இருந்து கனக்புரா செல்லும் வழியில், முப்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தால்... கபாடி எனும் கிராமம். அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்... ஆள் அரவம் இல்லாத சூழலில்... சுற்றிலும் சூரிய மின்வேலியுடன் கிடக்கிறது பிரதீபாவின் பண்ணை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கரடு முரடாக இருந்த இந்த நிலத்தை தன் கடும் உழைப்பால் சொர்க்கபூமியாக மாற்றிக் கொண்டிருக்கிறார். ரசாயனங்களை தன் நிலத்துப் பக்கம் அனுமதிப்பதே கிடையாது பிரதீபா. தன் பண்ணையில் 13 மாடுகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார். "ராத்திரியாயிட்டா... அந்த 13 மாடுகளும், நாலு குழந்தைங்களும்தான் (நாய்களை இப்படித்தான் சொல்கிறார்) எனக்குத் துணை" என்று சொல்லும் பிரதிபா, தனியருவராகத்தான் வாழ்ந்து வருகிறார்!

"ஆரம்பத்துல, 'கீ போர்டு தட்டற வேலையில்லம்மா இது'னு சிரிச்சவங்க பலர். ஆனா, ஏர் கலப்பை, டிராக்டர், களையெடுக்கற கருவி, விதை விதைக்கற கருவி, மாட்டு வண்டினு எல்லாமே இப்போ என் கைக்கு பழகிடுச்சு. ஹைபிரீடு ரகங்களைத் தவிர்த்துட்டு, பாரம்பரிய நெல் ரகங்களை மட்டுமே விவசாயம் பண்றேன். மா, பப்பாளி, வாழை, பாக்கு, தேக்கு, சவுக்கு, மாதுளை, நெல்லி, கொய்யா, முருங்கைனு பலவகைப் பயிர்களும் என் தோட்டத்துல விளையுது" என்று சந்தோஷமாகச் சொல்லும் பிரதீபாவின் ஈடுபாடு, நமக்கு ஆச்சர்யம் தருகிறது.

"வேலைக்குப் போறவங்களோட மாசச் சம்பளம் போல ஒரே மாதிரியான நிரந்தர வருமானம் இருக்காது விவசாயத்துல. ஆனா, அந்த சூழலை பழகிகிட்ட எளிமைவாதிகள் விவசாயிகள். அந்த மனநிலையை நாமளும் ஏற்படுத்திக்கிட்டா, படிச்சவங்களும் மனநிறைவோடு விவசாயம் செய்யலாம்!" என்பவர்,

"என்னைப் பத்தி பத்திரிக்கையில செய்தி வந்தா... சில நாட்களுக்கு போன்ல விசாரிப்பாங்ல, பாராட்டுவாங்க. அதைத்தாண்டி பட்டதாரிகள் மத்தியில 'விவசாயத்தை நோக்கி' ஏதாவது மாற்றம் நிகழ்ந்தா, அதுதான் என் சந்தோஷம்!"

- நல்ல செய்திக்காக காத்திருக்கிறார் பிரதீபா!

நன்றி: (அவள் விகடன் 05-11-2010 )நம்ம மக்கள் விவசாயம் செய்ய வேண்டாம், அட்லீஸ்ட் பிளாக் எழுதாமல் இருக்கலாம் :-)

14 Comments:

Anonymous said...

மாலை போட்ட விஜய விட அந்தக் கன்னுக்குட்டி நல்லா இருக்கு. நன்றி இட்லி.

ரிஷபன்Meena said...

//ம்ம மக்கள் விவசாயம் செய்ய
வேண்டாம், அட்லீஸ்ட் பிளாக் எழுதாமல் இருக்கலாம் :-) //

பச்சக் கமெண்ட் தூள்.

ப்ளாக்-னால சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு இருக்கான்னும் எதாவது விசாரனைக் கமிஷன் வச்சாக் கூட நல்லது.

பெருவாரியான ப்ளாக்குகள் இனிமே படிப்பியா படிப்பியாங்கிற மாதிரி தான் இருக்கு.

ஜீ... said...

//நம்ம மக்கள் விவசாயம் செய்ய வேண்டாம், அட்லீஸ்ட் பிளாக் எழுதாமல் இருக்கலாம் :-) //

SUPPPER!! :))

கிரி said...

விஜய் செய்தது (எதற்காக இருந்தாலும்) பாராட்டப்பட வேண்டிய விஷயம்

பிரதீபா மாதிரி வருகிறது ரொம்ப கஷ்டம் நடைமுறையில். விவசாயம் அழிந்து வருகிறது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது இருப்பினும் இதைக்கூற நமக்கு தகுதி இல்லை என்பதே உண்மை.

//நம்ம மக்கள் விவசாயம் செய்ய வேண்டாம், அட்லீஸ்ட் பிளாக் எழுதாமல் இருக்கலாம் :-) //

ஹி ஹி ஹி

Guru said...

நம்ம மக்கள் விவசாயம் செய்ய வேண்டாம், அட்லீஸ்ட் பிளாக் எழுதாமல் இருக்கலாம் :-)

கமெண்ட் தூள்.

அட்லீஸ்ட் மீ த பர்ஸ்ட்! எனக்கு தான் முத தோசைனு பின்னூட்டம் போடுறதையாவது நிறுத்தலாம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

முதல் மேட்டர் காமெடி..இரண்டாவது மேட்டர் அக்கறை

வலைஞன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார் said

//முதல் மேட்டர் காமெடி.//
================================

நம்ம மக்கள் நல்லதை பாராட்ட வேண்டாம்,அட்லீஸ்ட் பின்னூட்டம் எழுதாமல் இருக்கலாம் :-)

பச்சை கலர் நீங்க அடிங்க IV

மார்கண்டேயன் said...

எங்க இப்பிடி, பதிவு இருக்குறதுனால தாங்க எல்லா விஷயத்துக்கும் ஒரு வடிகால் கெடைக்குது,

இட்லி வட இல்லேன்னா நெறைய விஷயம் தெரிஞ்சுர்க்காது

மொத தடவ விசய் நல்லது செஞ்சுர்க்காறு

பிரதீபா மாதிரி தமிழ் நாட்டுல கூட ஒருத்தர் இருக்குறதா கேள்விப்பட்ருக்கேன்

//அட்லீஸ்ட் பிளாக் எழுதாமல் இருக்கலாம்//

அப்பாடா, இனிமே நீங்க ப்ளாக் எழுதப்போறதில்லையா . . . ரொம்ப சந்தோஷம்

தமிழ்க் காதலன். said...

இட்லி வடைக்கு வணக்கம். இந்த பதிவில் வந்த விஜயை விட.... பிரதிபா.... பன்மடங்கு உயர்வானவர். உலகை உள்ளத்தில் உண்மையாய் நேசிக்கும் மனம் இருப்பவர்களுக்குத்தான் இது சாத்தியம். இது பிரபஞ்ச நேசம். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். விவசாயம் மனித வாழ்க்கையின் உயிர்நாடி. அது அழிகிறதென்றால் மனித இனம் அழிகிறது என்கிற மறைபொருள் புரியாத மரமண்டைகளுக்கு எடுத்து சொல்லுங்கள். வருகை தாருங்கள். ( ithayasaaral.blogspot.com )

Thomas Ruban said...

எனக்குக்கூட விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசைதான் ஆனால் நிலம்தான் இல்லை!!!

Kamesh said...

இவ,
பிரதீபா அவர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது ... சொல்வது சுலபம் ,செய்வது கடினம் .. பாராட்டுக்கள். பிரதீபா.
விஜய் .. தானம் அது ஸ்டண்டு..

காமேஷ்

Palani said...

எல்லோருக்குமே இந்த ஆசைகள் இருக்கும்.. ஆனால் நடைமுறைபடுதுற இதுபோல சிலரை கண்டிப்பா நாம பாராட்டி ஆகணும்.

தனி காட்டு ராஜா said...

//"என்னைப் பத்தி பத்திரிக்கையில செய்தி வந்தா... சில நாட்களுக்கு போன்ல விசாரிப்பாங்ல, பாராட்டுவாங்க. அதைத்தாண்டி பட்டதாரிகள் மத்தியில 'விவசாயத்தை நோக்கி' ஏதாவது மாற்றம் நிகழ்ந்தா, அதுதான் என் சந்தோஷம்!" //


பதிவுலகில் புரட்சி செய்கிறேன் ,விழிப்புணர்வு ஊட்டுகிறேன் என்று உளறிக்கொண்டு இருக்கும் அரை குறைகள் ..இது போல ஒரே ஒரு விழிப்புணர்வுடன் கூடிய செயல் செய்வது நல்லது .....

virutcham said...

பிரதீபா பற்றி முன்னே பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை.

தொடர் தோல்விகளில் இருந்து மீள பசு தானம் செய்து பார்க்க சொல்லி யாராவது ஜோசப் விஜய்க்கு சொல்லி இருப்பாங்க. இப்போ எல்லாம் மனிதர் விபூதி குங்குமம் சகிதம் காட்சி தருகிறார்.