பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 03, 2010

பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு நாள்

சமீபத்தில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கும் நிமித்தம், திருச்சிராப்பள்ளி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். உள்ளே நுழையும்போதே தேனடை போல புரோக்கர்கள், "என்ன சார் ஃப்ரெஷ்ஷா, ரினிவலா, ஈசிஎன்ஆரா என்று கேட்டு அபிமன்யுவை வதம் செய்ய சூழ்ந்து கொண்ட கெளரவர்களைப் போல சக்ர வியூகம் அமைத்தார்கள்.". அவர்களைத் தவிர்த்து விட்டு ஏற்கனவே ஆன்லைனில் நிரப்பி வைத்திருந்த படிவத்துடன் ஹனுமன் வாலுடன் இணைந்து நின்றேன். அப்பொழுது அங்கு ஒருவர் மைக்கில் ஏதோ அறிவிப்பு செய்வதற்கு ஆயத்தமானார். அவர் அந்த அலுவலகத்தில் காவலாளி உத்யோகத்திற்காக ஒரு தனியார் செக்யூரிட்டி பீரோவினால் அனுப்பி வைக்கப்பட்ட காவலாளி என்பதை அவருடைய சீருடை உணர்த்தியது.முதலில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, தெளிவான தமிழில் தேர்ந்த மேடைப் பேச்சாளர் போல் பேசத் துவங்கினார். வரிசையாக முதன்முறையாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய வந்திருப்பவர்கள், புதுப்பிப்பவர்கள், தொலைந்தவற்றிற்கு மாற்று பெற வந்திருப்பவர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக படிவம் நிரப்புவது எப்படி என்றும், அதில் செய்ய வேண்டியவை, கூடாதவை என்னென்ன என்பனவற்றைத் தெளிவாகவும், பொறுமையாகவும் விளக்கினார். இடையிடையே வித்யாசமாக பொன்மொழிகள், குழந்தைகளுக்கு நற்குணங்களை போதிக்க வேண்டியதன் அவசியம் என்பனவற்றையும் கூறி அசத்தினார்.

இத்தனைக்கும் இந்த நபர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட உத்யோகஸ்தர் அல்ல. ஒரு தனியார் செக்யூரிட்டி பீரோ அனுப்பி வைத்திருக்கும் ஒரு காவலாளி. நான் பல இடங்களில் பார்த்த வரையில் இது போன்ற காவலாளிகள் கடனே ஒன்று ஒரு நாற்காலியில் அமர்ந்து பீடியோ, சிகரெட்டோ புகைத்த வண்ணம், சுவற்றிற்கு செங்காவி அடித்துக் கொண்டிருப்பர். இவரோ தனது செயல்பாடுகளால் மற்றவர்களிடமிருந்து நிரம்பவே வித்யாசத்தைக் காட்டினார். இவரது பேச்சின் ஹைலைட்டாக ஒரு விஷயம் கூறினார். " மேலே காத்திருக்கையில் உங்களுடைய உடைமைகளை நீங்கள் தெரியாமல் தவற விடலாம்; அவற்றை பொறுப்புணர்ந்து உங்களிடம் சேர்ப்பிக்கும் நண்பர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்; ஆனால் என்னைப் போன்ற சில தீய எண்ணம் கொண்டவர்கள் உங்களது பொருட்களைக் களவாடிவிடும் அபாயம் இருக்கிறது. எனவே உங்களது உடைமைகளை கூடிய மட்டும் என்னைப் போன்ற திருடர்கள் வசம் ஏமாந்து விடாதீர்கள் என்று அதில் "என்னைப் போன்ற" என்ற வார்த்தையை அழுத்திக் கூறிவிட்டு, மற்றவர்களைக் குறை காண்பதைக் காட்டிலும், என்னையே சொல்லிக் கொள்வதால் எனக்கும் பிரச்சனை ஏற்படாது என அதற்கு விளக்கம் வேறு கொடுத்தார்.

சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மிகுந்த பொறுமையுடனும், சிரத்தையுடனும் பாஸ்போர்ட் பெறுவதற்குண்டான அடிப்படை வழிகளை எளிமையான தமிழில் விளக்கிவிட்டு, இடையிடையே, முகவர்களிடம் உங்களது பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம். யாருடைய சிபாரிசின் பேரிலும் இங்கு குறித்தகாலத்தை விடக் குறைவான காலத்தில் பாஸ்போர்ட் அளிக்கப்பட மாட்டாது, ஏமாறாதீர்கள்; ஏமாறாதீர்கள் என்று கூறிக் கொண்டே இருந்தார். அங்கேயே அவரைச் சுற்றி நின்ற முகவர்கள் கூட இதைப் பெரிது படுத்தாமல் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். தவிர போலி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்ற முனைவதால் விளையும் சங்கடங்களையும் எடுத்துக் கூறினார்.

கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தையுடன் கூடிய தாய்மார்கள் போன்றோர்களுக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகள் என்றுமே நல்லொழுக்கம் என்ற நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டால்தான், அவர்களுடைய எதிர்காலத்தை மிகச் சிறப்பானதாக அறுவடை செய்ய இயலும். எனவே அவர்களுக்கு நல்ல ஒழுக்கங்களையும், பழக்கவழக்கங்களையும் போதியுங்கள் என்று கூறிவிட்டு, அனைவரும் பொறுமையுடனும் இன்முகத்துடனும் எல்லோருடனும் பழகுங்கள்; இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்கள்; ஆனால் அக்கறையுடன் செயல்பட்டால் எக்கரையும் பச்சைதான் என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.

அரசாங்க சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி, இவை தவிர இதர படிகள், ஓய்வு பெற்ற பிறகு பென்ஷன், பணிக் காலத்தில் இடையிடையே ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் என அனைத்தையும் பெற்றுக் கொண்டும் கூட, கடமைக்காக லஞ்சம் கேட்கும் லஞ்சப் பேய்கள் மத்தியில், இவரைப் போன்ற கடமையுணர்வு மிகுந்த உன்னத ஆத்மாக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். வெகு சமீபத்தில் திரு கடுகு அவர்களுடைய வலைமனையில் கூட அவர் தான் அமெரிக்காவில் கண்ட பள்ளி வாகன ஓட்டுனர் பற்றி எழுதியிருந்தார். அதைப் படித்ததும் இவருடைய நினைவுதான் வந்தது. இவரைப் போன்ற ஒரு நபர் ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் இருந்துவிட்டால் என்ற பேராசைக் கனவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அவரைப் புகைப்படம் எடுக்க முயன்ற போது நாசூக்காக மறுத்து விட்டார். சென்ற வேலை இனிதே முடிந்த திருப்தியுடனும், அவரின் பெயரைக் கூட கேட்டுக் கொள்ளாத என்னுடைய மறதியையும் நொந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

- யதிராஜ்

19 Comments:

துளசி கோபால் said...

மனிதருள் இவர் ஒரு மாணிக்கம்!

நல்லவங்க இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்யுதாம்!!!!

சுபத்ரா said...

Great to know abt such great people.

ரிஷபன்Meena said...

மக்களுக்கு சேவை செய்கிறேன் என்பவர்கள் வாய்கிழிய பேசுவாரகள். முடிந்தவரை கல்லா கட்டுவார்கள்.

இது போல் சில அப்பாவிகள் சின்ன சிறு பொறுப்புகளில் இருந்தாலும் மன நிறைவோடு உழைப்பார்கள். வாழ்க !!

ராஜசுப்ரமணியன் said...

உன்னதமான மனிதர்; எல்லா அலுவலகங்களிலும் இவரைப் போன்றவர்கள் இருப்பார்களேயானால் எவ்வளவு நிறைவாக இருக்கும்?

ஆண்டவன் அவரை ஆசிர்வதிக்கட்டும்.

சொர்க்கம் said...

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது ....

வாழ்க அவர் தொண்டு

லெமூரியன்... said...

கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு....
நாம் வந்த வேலை முடியா விட்டால் கூட பரவாஇல்லை...
அதற்க்கான காரணத்தை இன்முகத்தோடு கூறி நம்மை அனுப்பினாலே போதும்...
ஆனால் அரசாங்க அலுவலகத்தில் எங்கு போய் நின்றாலும் எள்ளும் கொள்ளும் தான் வெடிக்கும்
அலுவலர்களின் முகத்தில்....

R.Gopi said...

மனிதர்கள் பல விதம்... ஒவ்வொருவர் ஒரு விதம்...

அதில் இவர் தனி ரகம்....

//சென்ற வேலை இனிதே முடிந்த திருப்தியுடனும், அவரின் பெயரைக் கூட கேட்டுக் கொள்ளாத என்னுடைய மறதியையும் நொந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்

- யதிராஜ் //

ரசித்தேன் யதிராஜ்....

செல்வா said...

இவரை போன்றவர்கள் இன்னும் தமிழ் நாட்டில் இருகின்றார்கள் என்பதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

வழிப்போக்கன் said...

தாங்கள் எழுதியது அனைத்தும் கற்பனை இல்லை! கற்பனை இல்லை! என்று கைமேல் அடித்துச் சத்தியம் செய்தாலும் நம்பத் தயாராக இல்லை.
வழிப்போக்கன்

R. Jagannathan said...

நீங்கள் எழுதியிருப்பதுபோல் புரோக்கர்கள் சூழ்ந்திருக்கும்போது இவர் மட்டும் பேசி என்ன பயன்? இவர் பேசியதால் ஒருவர்கூட புரோக்கரிடம் போகாமலிருந்தால் அது நல்லது. அதைவிட, பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் அங்கு இருந்த புரோக்கர்களை போலிசில் ஒப்படைத்திருந்தால் அது உபயோகமான செயல். இல்லவிட்டல் பாவம் கத்தினவருக்குத் தொண்டைத் தண்ணீர் வற்றியதுதான் மிச்சம்! - ஜெ.

snkm said...

முதலில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! கோபித்துக்கொள்ளாதீர்கள்! உண்மையிலேயே இது நடந்ததா, இல்லை இப்படி நடக்க வேண்டும் என்ற கனவா என்று தான் கேட்கத் தோன்றுகிறது! நடந்திருந்தால் இவரைப் பார்த்தாவது அந்த அலுவலகத்தில் உள்ளவர்களாவது கற்றுக் கொள்ளட்டும்! நன்றி!

Anonymous said...

ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா எழுதிக்கொள்வது வம்பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் பாத்துட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள் .இது இந்த தீபாவளிக்கு விஜய் படம் வரலயேனு பீல் பண்ற ரசிகர்களுக்கு இதை அனைவரும் கேட்டுகொண்டதற்கிணங்க சமைதுள்ளேன் சுவைத்து பாருங்கள் .
என்றும் வம்புடன் உங்கள் ஆகா முருகா .ஹாபி தீபாவளி வாழ்த்துக்கள் .
http://idly-vadai.blogspot.com/

Venkatraman said...

I was about to write a blog on this ...i went to Trichy to renew my passport and have seen the same scene...on top of it the overall process has been streamlined..

Trichy Passport officer is a very young man may be in his early thirties...

I got my passport renewed in 2 days.

I cant imagine this a few years abck

Anonymous said...

It is good to know these kind of happenings are going around us

Madhavan said...

நல்ல செய்தியை பகிந்தமைக்கு எதிராஜ், மற்றும் இ.வ க்கு நன்றிகள். சர்தார் வல்லபாய் படேல் பிறந்த அக்டோபர் 31 ம் தேதியை ஒட்டி, 'vigilence awareness week' என்று மத்திய அரசாங்கத்தால் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. சென்ற 25 அக்டோபர் முதல் 1 நவம்பர் வரை இந்த வருடம் 'vigilence awareness week' அனுசரிக்கப் பட்டது. உங்கள் பதிவை படித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

@ R. Jagannathan --
நீங்கள் சொவது புரிகிறது. இருந்தாலும் இவர் இவ்வாறு பேசப் பேசப் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு வந்து, என்றாவது ஒருநாள் நீதி, நேர்மையான, லஞ்சமற்ற எதிர்காலம் பின்வரும் சந்ததியினருக்காகவாது உருவாகட்டுமே.. இது ஒரு ஆரம்பமாக இருக்கலாம்.

Thomas Ruban said...

படிக்கவே மிகவும் சந்தோஷமா இருக்கு.... அவர்க்கு ஒரு ராயல் சல்யூட் இவரை போன்றவர்களை ஊக்குவித்தால் இதேபோல் நிறையப் பேர் உருவாவார்கள்.

Ranjit Sachin said...

Really Great man. Vaazha.. Valarga...

KICHA said...

Really a great person.

Anonymous said...

Sorry for my post in English.
I'm not a broker supporter, but Brokers has got the information. Like how Actor Senthil says in Boyz movie. Passport is a once in 10 years thing and we all go for it when it needs. Brokers know the process and ways to get passport, which the system or officials won't do it usually. Almost most of them use our lack of knowledge to their advantage and there are people like this all part of world(most of them set up authorized service centers).
I'm pleased to see just a great human being communicating the process for all people. Its a boon hope we have this kind of people on all centers. Passport should be issued as Birth Certificate. Hope the UID solves most of the Paper work.

Cheers!