பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 09, 2010

மண்டேனா ஒன்று 9/8/2010

சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான ஜோயல் ஸ்டீன் என்பவரால் புனையப்பட்ட இந்நகைச்சுவைக் கட்டுரை இந்தியர்களை அவமதிப்பதாக, அமெரிக்கவாழ் இந்தியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். டைம்ஸ் பத்திரிக்கை மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறினர். அவ்வாறே டைம்ஸ் பத்திரிக்கையும், இக்கட்டுரையாசிரியரும் மன்னிப்பு கோரினர். கட்டுரை வந்த சில நாட்களில் யதிராஜிடம் மொழிபெயர்க்க சொன்னேன். இந்த வாரம் அந்த கட்டுரையின் மொழியாக்கம் உங்களது பார்வைக்காக.அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியிலுள்ள எடிசன் என்ற நகரில் தவிர, ஏனைய அமெரிக்கா அனைத்திலுமே நான் குடியேற்றத்தை ஆதரிக்கிறேன். 1989 ஆம் ஆண்டில் நான் மேநிலைப்பள்ளியிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் பொழுது எடிசன் நகரம் முழுக்க வெள்ளையர்கள் நிரம்பிய ஒரு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகராகவே இருந்தது. அப்பொழுது அந்நகரம் மென்லோ பார்க் என்ற பெயரால் வழங்கப்பட்டு வந்தது. பிறகு தாமஸ் ஆல்வா எடிசன் அந்நகரில் ஒரு கடை துவங்கியதும், அவரை கெளரவிக்கும் விதமாக அந்நகர் எடிசன் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பிறகு இந்நகர் ஒரு குறிப்பிட்ட இந்திய சமூகத்தினருக்கு தாயகமாக விளங்கியது. இந்தியாவைப் பொருத்தவரை இங்கிருக்கும் இந்திய சமூகத்தினர், முட்டாள் அமெரிக்கர்களுக்கு இணைய ரெளட்டரை எப்படி மறுபடியும் உயிர்பிப்பது என்று கற்றுத் தருபவர்கள்.

இப்போது என்னுடைய நகரம் எனக்கு முற்றிலும் பழக்கமில்லாததாய்த் தோன்றுகிறது. என்னுடைய பால்ய நண்பர்கள் மதுபான விருந்திற்காக சிலவற்றைத் திருடிய பிட்ஸா ஹட் இப்பொழுது சற்றும் பொருத்தமற்ற மேற்கூரையுடன் கூடிய இந்திய இனிப்புப் பலகாரக் கடையாக விளங்குகிறது. நான் முன்பு சிலவற்றைத் திருடிய A&P, இப்பொழுது இந்திய பலசரக்குக் கடையாகக் காட்சி தருகிறது. நாங்கள் பலான திரைப்படங்களைக் கண்டுகளித்த மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் இன்று பாலிவுட் திரைப்படங்களைத் திரையிட்டுக் கொண்டும், சமோஸாக்களைப் பரிமாறிக் கொண்டும் இருக்கின்றன. நாங்கள் பணம் திருடிய ஒரு இத்தாலிய ரெஸ்டாரெண்ட், இன்றைக்கு மொகல் என்ற பெயரில் அமெரிக்காவிலேயே புகழ்பெற்ற ஒரு இந்திய ரெஸ்டாரெண்டாக விளங்குகிறது. இவ்வாறாக எடிசனில் உள்ள ஒட்டுமொத்த வெள்ளையின இளைய சந்ததியினர் அனைவரும் குற்றங்களைக் கற்க இடமில்லாமல் போய்விட்டது.

உலக வரைபடத்தில் எங்களிடமிருந்து பாதி தொலைவு தள்ளியுள்ள ஒரு கூட்டத்தினரால் எவ்வாறு தற்செயலாக நியூ ஜெர்ஸியிலுள்ள ஒரு நகரைத் தேர்ந்தெடுத்து தம்மவரைக் குடியேற்ற முடிந்திருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் ஏனைய இந்திய மாகாணங்களால் கேலிக்குள்ளாக்கப்பட்ட ஒரு மாகாணத்திலிருந்து குடியேறியவர்களா? இந்தியாவிலுள்ள நடைபாதைகளும், ஷாப்பிங் மால்களும் அவ்வளவு மோசமானவையாகவா இருக்கும்? அல்லது நாங்கள் தவறுதலாக எங்களது அனைத்து சாலைகளும் மும்பைக்குச் செல்லுமாறு அமைத்து விட்டோமா?

இதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு ரட்ஜர்ஸ் பல்கலையில் பாலிஸி ஸ்கூல் அதிகாரியாக இருக்கும் ஜேம்ஸ் ஹ்யூஸைத் தொடர்பு கொண்டபோது அவர் விவரித்தார். அதாவது, லிண்டன் ஜான்சனுடைய 1965 ஆம் ஆண்டு குடியேற்றச் சட்டம், ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளுக்கு, அமெரிக்காவில் தங்களது குடிகளை நிறுவிக் கொள்வதற்கான விதிகளை தளர்த்தியது. லிண்டன் ஜான்ஸனுக்கு ஆசியர்களுடன் உள்ள தெளிவில்லாத உறவினால், அவர் ஆசியர்களை இங்கு வரவேற்பதிலும், ஆசியாவிற்கு சென்று அவர்களை நசுக்குவது ஆகிய இரண்டிலுமே விருப்பு கொண்டிருந்தார்.

அச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, நான் சிறுவனாக இருந்த சமயத்தில், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து மருத்துவர்களும், பொறியாளர்களுமாக எடிசனில் குடியேறினர். இதற்கு முக்கியக் காரணம், எடிசனில் உள்ள நல்ல பள்ளிகள், குறைந்த விலைவாசி மற்றும் எடிசனுக்கு மிக அருகாமையிலுள்ள AT&T நிறுவனம். சிறிது காலம் வரை நாங்கள் இந்தியர்களை மிக்க அறிவு ஜீவிகளாகவே கருதி வந்தோம். பிறகு 1980- களில் மருத்துவர்களும், பொறியாளர்களும் வியாபாரத் தொடர்புடைய தங்களுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களை இங்கு வந்து குடியேற்றினர். இம்முயற்சி இந்தியர்கள் அறிவு ஜீவிகள் என்ற கருத்தில் எங்களுக்கு சிறிதே சந்தேகத்தை ஏற்படுத்தியது. 1990 – களில் இந்திய வர்த்தகர்கள் அவர்களுடைய சகோதரர்களை இங்கு குடியமர்த்தினர். இந்தியா ஏன் இன்னும் மிகுந்த ஏழ்மையான தேசமாக இருக்கிறது என்று நாங்கள் புரிந்து கொள்ளத் துவங்கினோம்.

இறுதியாக, எடிசனுடைய கலாச்சாரத்தை முழுமையாக மாற்றுவதற்குப் போதுமான இந்தியர்கள் அங்கு இருந்தனர். அச்சமயத்தில் என்னுடைய நண்பர் ஒருவர், எடிசன் வாழ் இந்தியர்களை "Dot Heads" (நெற்றித் திலகமிட்டிருப்பதால்) என குறிப்பிடத் துவங்கினார். ஒரு பள்ளிச் சிறுவன் இந்தியர்கள் மிகுந்த தெருவின் வழியே செல்லும் போது " Go home to India" என்று கூச்சலிட்டான். இரண்டிற்கும் மேற்பட்ட கைகளையும், யானை முகத்தையும் உள்ள கடவுளை ஆதர்சமாகக் கொண்ட ஒரு பிரிவினரை "Dot Heads" என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமான இன அவமதிப்பு என்றால், நமது பள்ளிகளின் தரம் எத்தகையது என்ற கேள்வி எழுந்தது.

1980 களிலிருந்த எனது சில நண்பர்களைப் போலல்லாமல், என் நகரில் ஏற்பட்டிருந்த பல மாற்றங்கள் என்னைக் கவர்ந்தன. குறிப்பாக, நல்ல ரெஸ்டாரண்ட்கள், என்னுடன் டங்கன்ஸ் & ட்ராகன்ஸ் விளையாடுவதற்கு ஏற்புடைய நிறத்துடனான மக்கள் மற்றும் வயதான வெள்ளையர்களிடம் அதிகம் வசூலிக்காத ரெஸ்டாரண்ட் முதலாளிகள் போன்றவை. ஆனால் நான் வெளியேறிய சிறிது காலத்திற்குப் பிறகு, அந்நகர் இந்தியத்தனமான ஸ்ட்ரிப்பிங் மால்களும், வீடுகளுமாக களையிழந்து போய்விட்டது. அங்கு எப்பொழுது சென்றாலும், அரிஸோனாவைச் சேர்ந்தவர்கள் பேசுவதை உணர்வேன். தனிமைப்படுத்தப்பட்டு, எதையோ இழந்துவிட்டு, நம்பிக்கையிழந்து போய் யாரும் எவ்வளவு காரமான பதார்த்ததையும் சாப்பிட முடியும் என்பது போல.

இவ்விஷயம் என்னை ஏன் இந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை அறிவதற்காக, என்னுடைய மேநிலைப்பள்ளி நண்பரான ஜுன் சோய் என்பவரிடம் பேசினேன். இப்பொழுதுதான் எடிசனுடைய மேயராக இருந்து ஓய்வு பெற்றிருப்பவர். அவர் கூறினார், எடிசனின் புதிய பரிமாணத்தில் அதனுடைய செல்வச் செழிப்பு குறைந்திருப்பதே என்னுடைய இக்கருத்திற்குக் காரணமாக இருக்கக் கூடுமென்றும், இந்தியர்களின் வருகை மட்டும் ஏற்பட்டிருக்காவிடில், எடிசனுடைய பொருளாதார நிலை இன்னும் மோசமான நிலைக்குச் சென்றிருக்குமென்றும் அவர் கூறினார். எந்தவொரு இடமுமே மாற்றத்திற்குட்பட்டதுதான். நான் மன்ஹாட்டன் செல்சியாவில் வாழ்ந்த பதினோரு வருட காலத்தில், அப்பகுதி, பெரும் கொள்ளையர்களும், வேசிகளுமாக இருந்ததிலிருந்து, ஓரினச்சேர்க்கையாளர்களும், எதிர்பாலர்களின் ஆடைகளை அணிவிப்பவர்களைக் கவரும் வேசிகளின் பகுதியாக மாறி, பிறகு அதிலிருந்து, பெரும் பணக்காரர்களும், மற்றும் திருமணத்திற்குப் பிறகு வேறு ஆண்களைப் புணரும் பெண்களுடைய நகராக மாறியிருக்கிறது. சோய் சொன்னது போல், அந்நகரினுடைய மாற்றங்களின் ஒரு பகுதியாக நானும் இருந்திருக்கிறேன். அத்துடன் அவ்விஷயத்தை அங்கேயே நிறுத்திவிட்டோம்.

தாயகத்திற்கு மறுபடியும் செல்ல இயலாத, மற்றும் அங்கிருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவியலாத, எடிசனின் முதல் குடியேற்ற சந்ததியினர் தங்களுடைய புதிய சூழலுடன் அவ்வளவு எளிதாக ஒன்றமுடியவில்லை. ஆனால் என்னுடைய பழைய ஸ்டீவன்ஸ் மேநிலைப்பள்ளியில் படிக்கும் தற்போதைய மாணவர்களின் ஃபேஸ்புக் புகைப்படங்கள் எரிச்சலூட்டுபவையாக உள்ளன. அவர்கள் பெரும்பாலும் என்னுடன் 80’களில் பழகிய இத்தாலிய இளைஞர்கள் போலிருந்தார்கள். தங்கச் சங்கிலிகள், பட்டனில்லாத சட்டைகள், ஜெல் போடப்பட்ட தலைமயிர் என. அவர்கள் அணிந்து கொள்ளும் வாசனை திரவியத்தால் அமெரிக்க சுதந்திர தேவி சிலையே கண்ணீர் வடிப்பாள்.

டைம்ஸ் பத்திரிக்கையின் மன்னிப்பு : ஜோயல் ஸ்டீன் அவர்களுடைய இந்த ஹாஸ்யக் கட்டுரையினால் எங்களுடைய வாசகர்கள் யாராவது புண்பட்டிருப்பின், அதற்காக எங்களது மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இக்கட்டுரை நிச்சயமாக யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் புனைப்பட்டது அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Source: My Own Private India, Times


இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் மீது அமெரிக்க எம்.பி. ஒருவர் கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார். திருட்டுப் பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபடும் நிறுவனங்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் மலிவான சொல்லை அவர் இன்போசிஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களை குறிப்பிடவும் பயன்படுத்தி உள்ளார். அடுத்த மண்டேக்கு, அடுத்த மன்னிப்பு ரெடி :-)14 Comments:

கானகம் said...

நல்ல கட்டுரை.. டாட் ஹெட்ஸ் என்ற கிண்டல் தவிர.. அதையும் லகுவாக் அஎடுத்துக்கொள்ளலாம். எதுக்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட அமெரிக்க இந்தியர்கள் என்ன பாரதிராஜாவா?

ஜாலியா சிரிச்சுட்டுப் போறது உட்டுட்டு..

கானகம் said...

மண்டேனா ஒன்று.. டியுஸ்டேகிட்ட வந்தப்பிறகுதான் வெளிய வருது.. சரக்கு மாஸ்டர் கிட்ட ஏதாச்சும் வம்பா?

IdlyVadai said...

//மண்டேனா ஒன்று.. டியுஸ்டேகிட்ட வந்தப்பிறகுதான் வெளிய வருது.. சரக்கு மாஸ்டர் கிட்ட ஏதாச்சும் வம்பா?//

நான் இப்ப வெளிநாட்டில் இருக்கேன். அந்த ஸோன்ல தானே போட முடியும் :-)

சரக்கு மாஸ்டர் பற்றி இப்ப பேசாதீங்க ஏதாவது கவிதை எழுதிட போறார். அப்பறம்...

Anonymous said...

கட்டுரையைப் படிக்கும் எவரும் இது அவமதிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டதல்ல என்று புரிந்து கொள்ளலாம். தன இளமைப் பருவத்தில் பார்த்த நியூ ஜெர்சிக்கும் இன்று உள்ள நியூ ஜெர்சிக்கும் உள்ள பெரும் வித்தியாசத்தை சற்று நக்கல் கலந்த நகைச்சுவையுடன் சொல்ல முற்படும் ஒரு அமெரிக்கரின் கருது, அவ்வளவே.
நியூ ஜெர்செயின் எடிசன் பகுதியைப் பார்த்த எவருக்கும் இக்கட்டுரையின் எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள இயலும்...
எடிசன் முற்றிலும் இந்தியர்களும், இந்தியக் கடைகளும், இந்திய உணவகங்களும் உள்ள பகுதி... இங்குள்ள இந்தியக் கடைகளில் கங்கை நீர் முதல் (நிஜமாக!) அம்பிகா அப்பளம் வரை சகலமும் கிடைக்கும்... சரவண பவன், காரைக்குடி செட்டிநாடு உணவகம் முதலியவையும் இங்கு உள்ளன... சனி ஞாயிறுகளில் இங்கு சென்றால் அமெரிக்காவில் இருக்கும் உணர்வே இருக்காது... :)
ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்கள், இட்லித் தட்டு, முதல் புடவை, நகை, என்று எது வேண்டுமானாலும் எடிசன் கடைகளில் கிடைக்கும்... இப்படிப்பட்ட ஒரு கலாசார மாற்றம், அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவருக்கு, தான் பிறந்து வளர்ந்த ஊர் அவரின் இளமைக்கால அடையாளங்களை இழந்து விட்டதாக ஒரு உணர்வை ஏற்ப்படுத்துவது அதிசயம் அல்ல...
பொதுவாக அமெரிக்கர்கள் நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள், தங்களையே கிண்டல் செய்து கொள்வதையும் இயல்பாக எடுத்துக் கொள்பவர்கள்.... அது மட்டுமின்றி சராசரி அமெரிக்கர்கள் இந்தியா பற்றி தெரிந்து கொள்ள இயல்பாக ஆர்வம் காட்டுபவர்கள், இந்திய உணவுகளை விரும்பி உண்பவர்கள், பொதுவாக ஒருவரைப் புண்படுத்தும் விதமாக நடந்து கொள்பவர்கள் அல்ல... அதனால் இக்கட்டுரையை ஒரு பெரிய அவமதிப்பாக எடுத்துக்கொண்டு உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியமே இல்லை...
எடிசன் பகுதி public schools எனப்படும் அரசுப் பள்ளிகளில் ஹிந்தியும் ஒரு மொழியாக போதிக்கப்படுகிறது :) எடிசன் பொது நூலகத்தில் மங்கையர் மலர் படிக்கக் கிடைக்கும் :) ஹிந்தி திரைப்பட dvd'க்கள் கூட சில கிடைக்கும்...
இத்தனையும் தெரிந்த அங்கு வாழும் இந்தியர்கள் கூச்சல் போடக் காரணம் என்ன என்று புரியவில்லை :)
p.s : dot-heads என்பது கட்டுரை ஆசிரியரின் சொந்த வார்த்தை அல்ல - எண்பதுகளின் இறுதியில் நியூ ஜெர்சி இந்தியர்கள் மீது ஒரு சாரார் தாக்குதல் நடத்தினர், dot-busters என்று தங்களைக் கூறிக்கொண்டு - அவர்கள் பயன் படுத்திய பதம் அது. இன்றைய அமெரிக்கர்கள் பெரும்பாலும் இந்தியர்களுடன் நட்புறவுடன் பழகுபவர்கள், எடிசன் மற்றும் பல இடங்களில் இந்திய வம்சாவளியினர் அரசுப் பணிகளில் முதற்கொண்டு இருக்கின்றனர்.

essen

Nokia Fan said...

Worst translation.

லெமூரியன்... said...

ம்ம்ம்.....கட்டுரையில் அவமதிப்பு எதுவும் புலப்படவில்லையே???
எதற்கு இந்த உணர்சிகர போராட்டம்???
கட்டுரை ஆசிரியர் அழகான நையாண்டியுடன் இட்டு செல்கிறார் கடைசி வரை..
அவ்வளவே..!

ரிஷபன்Meena said...

சிறிது காலம் வரை நாங்கள் இந்தியர்களை மிக்க அறிவு ஜீவிகளாகவே கருதி வந்தோம். பிறகு 1980- களில் மருத்துவர்களும், பொறியாளர்களும் வியாபாரத் தொடர்புடைய தங்களுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களை இங்கு வந்து குடியேற்றினர். இம்முயற்சி இந்தியர்கள் அறிவு ஜீவிகள் என்ற கருத்தில் எங்களுக்கு சிறிதே சந்தேகத்தை ஏற்படுத்தியது. 1990 – களில் இந்திய வர்த்தகர்கள் அவர்களுடைய சகோதரர்களை இங்கு குடியமர்த்தினர். இந்தியா ஏன் இன்னும் மிகுந்த ஏழ்மையான தேசமாக இருக்கிறது என்று நாங்கள் புரிந்து கொள்ளத் துவங்கினோம்.//


இது ஒரளவிற்கு உண்மை. உண்மை எப்போதும் சுடும்.

படித்த வர்க்கத்துக்கும் படிப்பறிவில்லாதவற்கும் மேலை நாடுகளில் இடைவெளி ரொம்ப கம்மி.
ஆனால் இந்தியர்களிடம் அதள பாதாள இடைவெளி உண்டு. படித்த இந்தியர்களுக்குள்ளும் நிறைய மக்குகள் உள.

சுயநலமிகளாக இருக்கும் பலர் கொஞ்சம் கூட தன்மானம் இல்லாது திரிவதால், ஒட்டு மொத்த இந்தியர்களின் இமேஜ் சரியத்தான் செய்கிறது.

மற்றபடி இந்தக் கட்டுரை நகைச்சுவையாக தான் தெரிகிறது.

ராஜசுப்ரமணியன் said...

சரியாக எழுதினீர்கள், ESSEN அவர்களே. எதைப் படித்தாலும் உடனே தாவிக் குதித்து உணர்ச்சி வசப்படுவதில் அமெரிக்க எடிஸன் நகர இந்தியர்கள் புகழ் பெற்றவர்கள் போலும். நாம் சர்தார்ஜிகளை பண்ணாத கேலி, கிண்டல்களா?

muthukumar said...

பின்னோட்டத்தில் நம் அடிமை புத்தியும் அமெரிக்க ஆதரவும் மட்டுமே தெரிகிறது

நான் இந்தியர்கள் எதிர்ப்பை முழுமையாக ஆதரிக்கிறேன்

யதிராஜ சம்பத் குமார் said...

நல்லவேளை!! பம்பாய் பிராமணர் ஒருவர் தாராவி, முல்லண்ட், கரோடியா நகர், செம்பூர் போன்ற பகுதிகள் தமிழர்களின் ஆக்ரமிப்பால் அதன் பழந்தன்மையை இழந்துவிட்டது என சாம்னாவில் எழுதியிருந்தால், இந்நேரம் அவர் லெமூரியன் போன்றவர்களின் இனமானக் கண்ணிற்கு தீக்கிரையாகியிருப்பார். அக்கட்டுரையை வெளியிட்ட பாவத்திற்காக இட்லிவடையையும் ஒரு பிடி பிடித்திருப்பர் இனமானவர்கள்.

Anonymous said...

முத்து நீ ரொம்ப்ப்ப்பபப..... நல்ல்லவம்ப்பா..

இப்படிக்கு
அமெரிக்க அடிமை

R. Jagannathan said...

'Essen' அவர்களின் பின்னூட்டம் டைம்ஸ் கட்டுரையை சரியாக விமர்சிக்கிறது. கட்டுரையில் உள்ள மேயரின் கருத்துக்களைப் படித்தும் ( இந்தியர்களின் வருகை மட்டும் ஏற்பட்டிருக்காவிடில், எடிசனுடைய பொருளாதார நிலை இன்னும் மோசமான நிலைக்குச் சென்றிருக்குமென்றும்..) இந்தியர் வருகைக்குமுன் ‘ முட்டாள் அமெரிக்கர்களும், கட்டுரை ஆசிரியரே ஒத்துக்கொண்டபடி திருடும்/ பலான படங்கள் பார்ப்போரும்’ தான் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இப்படி பாஸிடிவாகவே பார்த்தால் கட்டுரை இவ்வளவு முக்கியம் அடைந்திருக்காதோ? - ஜெகன்னாதன்

Baski said...

//அமெரிக்கர்கள் நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள்//

I pity your ignorance.

Such articles and comments like 'Chop Shop' are NOT something to ignore.

Americans never make dirty fun out of themselves..

லெமூரியன்... said...

வணக்கம் தோழர் யதிராஜு,
மும்பை மற்றும் அமெரிக்காவை ஒப்பிட்டு இருப்பதே மிக தவறு...கலாசார ரீதியில் பெரிய வித்தியாசங்கள் கொண்டதில்லை மும்பையும் தமிழகமும் ...மாறாக அமெரிக்கா எல்லா விதத்திலயும் மாறுதல்களை கொண்டது... ரோம் நகருக்கு செல்லும்போது ரோமனாக இருக்க வேண்டும் என்பதில் தவறில்லை நண்பரே..நமக்கான அடையாளங்களை இழக்க வேண்டாம்..ஆனால் வந்தேறிகள் உங்கள் வாழ்விடத்தின் தன்மைகளை மாற்றினால் ஒத்து கொள்வீர்கள தோழரே???
பாபர் மசூதியின் இடிப்பில் கூட உங்கள் மக்களால் இதே தன்மையுடைய வித்தாயசம் புரிந்துகொள்ள படவில்லையா?? வந்தேறி ஒருவனால் கட்டபட்ட ஒரு கட்டடம் என்பதற்க்காகத்தானே அத்தனை உயிர்ப் பலிகளுக்கு நடுவிலும் தரைமட்டமாக்கிநீர்கள்...!