பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 02, 2010

மண்டேனா ஒன்று - 2/8/2010


திருவாலித் திருநகரி - பயண குறிப்பு

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே
தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி
ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.

என்று திருமங்கையாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற திவ்யதேசம் திருவாலி-திருநகரி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, சென்ற வாரம் இத்திவ்யதேசத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நாகை மாவட்டத்தில், வைத்தீஸ்வரன் கோவிலுக்கும், சீர்காழிக்கும் இடையே அமையப்பெற்ற இவ்விரண்டு ஊர்களும் அருகருகே அமையப்பெற்ற சிறு கிராமங்கள். கூடுதல் சிறப்பாக, இதன் மிக அருகே அமைந்துள்ள திருக்குறையலூர்தான் திருமங்கையாழ்வாரின் அவதாரஸ்தலம்.
இத்தலம் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்களுள் ஒன்றாகும். மூலவர் அழகிய சிங்கர் (லக்ஷ்மி நரசிம்மர்), தாயார் பூர்ணவல்லி. இக்கோவிலிலேயே யோக நரசிம்மருக்குத் தனி சன்னிதியும் உள்ளது. உத்ஸவ மூர்த்தி சிந்தனைக்கினியான். இக்கோவிலின் மூலவர் அழகிய சிங்கரானாலும், திருமங்கையாழ்வாருக்காகவே ஏற்றம் பெற்றது இக்கோவில். சுற்றுப்புற கிராமங்களிலும் ஆழ்வார் கோவில் என்றுதான் வழங்குகின்றனர். திருமங்கையாழ்வாருக்கும் முந்தைய காலத்தில் வாழ்ந்த குலசேகராழ்வாரும் இத்தலத்தை மங்களாசாஸனம் செய்துள்ளார். இவ்வூரைச் சுற்றியுள்ள திருக்குறையலூரில் உக்ர நரசிம்மராகவும், திருமங்கைமடத்தில் வீர நரசிம்மராகவும், திருவாலியில் லக்ஷ்மி நரசிம்மராகவும் வீற்றிருக்கிறார்.

இத்தலத்தில் அவதரித்த திருமங்கையாழ்வாரை, எம்பெருமான் இங்கேயே எழுந்தருளி ஆட்கொண்டது இன்னுமொரு சிறப்பு. பத்ரிகாசிரமத்தை அடுத்து பெருமான் திருமந்திரார்த்தத்தை உபதேஸிப்பதற்காக எழுந்தருளிய இரண்டாவது இடம் திருவாலி-திருநகரி. திருமங்கை என்னும் பெயர் கொண்ட குறுநிலத்தை ஆட்சி செய்யும் மன்னராக நீலன் என்ற இயற்பெயருடைய திருமங்கையாழ்வார் திகழ்ந்தார். திருவாலி இந்நாட்டிற்குத் தலைநகராகத் திகழ்ந்தது. நானாவித போர் முறைகளிலும் தேர்ச்சியுற்று எதிரிகளுக்கு காலன் போன்று விளங்கியதால், இவருக்குப் பரகாலன் என்ற பெயரும் உண்டு.

இத்தலத்திலேயே பிறந்த குமுதவல்லியின் மீது மையல் கொண்ட திருமங்கையாழ்வார், அவரை மணமுடிக்க அவரிடம் விருப்பம் தெரிவித்தபோது, ஓர் ஆண்டு முழுவதும் தினமும் 1008 வைணவர்களுக்கு ததியாராதனம் ( அன்னதானம்) படைத்தால் அவரை ஏற்பதாகத் தெரிவித்தார். இதனை ஏற்று திருமங்கையாழ்வாரும் குமுதவல்லியை மணம் புரிந்தார். தினமும் ஆயிரத்தெட்டு வைணவ அடியார்களுக்கு அமுது படைத்ததனால் கருவூலம் கரையத் துவங்கியது. வழிப்பறி செய்தேனும் ததீயாராதனத்தை நிறுத்தக் கூடாதென்றெண்ணி திருமங்கையாழ்வார் வாள், வேல் முதலியவற்றோடு மற்றும் நால்வரைச் சேர்த்துக் கொண்டு வழிப்பறி செய்யத் துவங்கினார்.

இவரை சோதிக்க எண்ணிய பெருமான், பிராட்டியோடு மணக்கோலத்தில் ஸ்ர்வாலங்கார பூஷிதனாக திருநகரிக்கு அருகேயுள்ள திருமணங்கொல்லை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அங்கு மறைந்திருந்த திருமங்கையாழ்வார், மணக்கோலத்திலிருந்த பெருமாள் மற்றும் பிராட்டியிடமிருந்த நகைகள் அனைத்தையும் வேடுபறி செய்து (வழிப்பறி) மூட்டையாக்கினார். கட்டிய மூட்டையைத் தூக்க முடியாததால், ஆழ்வார் பெருமானிடம், நீர் ஏதோ மந்திரம் செய்திருக்கிறீர், அம்மந்திரத்தை எனக்கு சொல்லாவிடில் கொலை செய்து விடுவதாக மிரட்டவும், பெருமான் திருமங்கை மன்னனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்து அவரை ஆட்கொண்டார். அவர் கொள்ளையிட்ட திருமணங்கொல்லையில் அந்த மண்டபம் இன்றும் காணக் கிடைக்கிறது. வருடா வருடம் அங்கு இச்சம்பவத்தை நினைவுகூறும் விதம் வேடுபறி உத்ஸவம் நடைபெறுகிறது. அதற்கு ஆலிநாடனாகிய திருமங்கையாழ்வார் தன்னுடைய ஆடல்மா எனும் ப்ரசித்தி பெற்ற புரவியில் எழுந்தருள்கிறார்.

இவ்வூருக்கு அருகிலுள்ள திருநாங்கூரில் ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுதினம் கருடசேவை உத்ஸவம் நடைபெறுகிறது. இதன் விசேஷம் என்னவென்றால், இவ்வுத்ஸவத்தின்போது, இவ்வூரைச் சுற்றியுள்ள பதினோரு திவ்ய தேசங்களிலிருந்தும், அனைத்து உத்ஸவ மூர்த்திகளும் கருடன் மீது எழுந்தருளி, இங்குவந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர். கருடனின் வேண்டுகோளுக்காக இவ்வுத்ஸவம் என்று கூறப்படுகிறது.

(எங்கள் பூர்வீக கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில், திருநகரியில் உள்ள திருமங்கையாழ்வார் விக்ரஹம் போலவே செய்வித்து பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று, சுவாமிமலையிலுள்ள புகழ்பெற்ற தேவசேனாதிபதி ஸ்தபதியை அணுகி (பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு), அவரைத் திருநகரி க்ஷேத்திரத்திற்கு அழைத்துச் சென்று, இவரைப் போன்றே விக்ரஹமும், குமுதவல்லித் தாயார் விக்ரஹம் செய்யவேணுமென்று விண்ணப்பம் செய்த போது, அவர் அவ்விக்ரஹத்தைக் கண்ணுற்று உணர்ச்சிவயப்பட்டு, இது மனித சிருஷ்டியே அன்று; இதே சாயலில் யாராலும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். அப்பேற்பட்ட லக்ஷணங்களுடன் பொருந்தியவர் இங்குள்ள திருமங்கை மன்னனும், குமுதவல்லியும். வாசகர்கள் நிச்சயம் ஒருமுறையேனும் இவ்விடத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள பெருமானின் அனுக்ரஹம் பெற வேண்டும்.)

http://www.youtube.com/watch?v=ZPUHH5MeAT8

8 Comments:

snkm said...

திருத்தலத்தை தரிசிக்க ஆசை அளவில்லாமல் ஏற்பட வைத்து விட்டீர்கள், நன்றி!

கௌதமன் said...

அடுத்த தடவை குலதெய்வம் (வைத்தீஸ்வரன்கோவில்) தரிசனம் செய்யச் செல்லும் பொழுது சென்று தரிசிக்கின்றேன்.

Anonymous said...

<<< திருமங்கையாழ்வார் விக்ரஹம் போலவே >>> பார்த்துக் கோண்டே இருக்கலாம். அத்தனை அழகு; அத்தனை கம்பீரம்..ஒரு விக்கிரத்தை இத்தனை அழகாகவும் கம்பீரமாகவும் உருவாக்க சிற்பக் கலை தெரிந்தால் மட்டும் போதாது ஆழ்ந்த பக்தியும் இருக்கவேண்டும்...- டில்லி பல்லி

ரோமிங் ராமன் said...

ரொம்ப பிரமாதம்!! ரொம்ப நாட்களுக்கு பிறகு ஏ பி நாகராஜன்(சரித்திரக் குறிப்புகளுடன்) படம் ஒன்று பார்த்த திருப்தி.அந்த ராஜா திருடினது கூட அடுத்தவர் வயிறு நிரப்ப.. இப்போதைய ராஜாக்கள் ..வேண்டாம் எதற்கு வீண் வம்பு?

R.Gopi said...

//இத்தலத்தில் அவதரித்த திருமங்கையாழ்வாரை, எம்பெருமான் இங்கேயே எழுந்தருளி ஆட்கொண்டது இன்னுமொரு சிறப்பு. பத்ரிகாசிரமத்தை அடுத்து பெருமான் திருமந்திரார்த்தத்தை உபதேஸிப்பதற்காக எழுந்தருளிய இரண்டாவது இடம் திருவாலி-திருநகரி//

*********

இந்த பதிவின் மூலமே அந்த திருவாலி - திருநகரிக்கு சென்று எம்பெருமானை தரிசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி யதிராஜ்....

R.Gopi said...
This comment has been removed by the author.
R.Gopi said...
This comment has been removed by the author.
Roaming Raman said...

http://ta.wikipedia.org/wiki/108_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

என்கிற விக்கிப்பீடியா பக்கத்தில் இந்தப் பக்கத்தை இணைத்துள்ளேன்.எல்லாம் எம்பெருமான் கருணை.

(இந்தப் பின்னூட்டத்தினை பிரசுரிக்க அவசியமில்லை- உங்களுக்கும் யதிராஜன் அவர்களுக்கும் சொல்லவே எழுதினேன், மேலும் இன்றுதான் ஸ்ரீபெரும்புதூர் எதிராஜனை தரிசித்து வந்தேன்)