பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 12, 2010

எல்லோரும் எழுத்தாளரே - கடுகு

சற்று முன் எழுத்தாளர் கடுகுவுடன் ஒரு சாட்டிங்...

"அது எப்படி சார் நீங்க மட்டும் நல்லா எழுதறீங்க? எங்களுக்கு அந்த டெக்னிக்கை கொஞ்சம் சொல்லிக் கொடுக்கிறது" என்ற பிட்டை போட அவர் உடனே சீரியஸாக
"ரொம்ப சுலபம் எல்லாவற்றுக்கும் ஒரு ஃபார்முலா இருக்கு" என்றார்.
"அப்படியா ? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று மடக்க
"அதுக்கு என்ன 40 வருஷம் முன்னாடி எழுதின ஒரு கட்டுரை இருக்கு உங்களுக்கு அனுப்பறேன். அதை படித்தால் நீங்களும் எழுத்தாளர் தான்" என்று உடனே அனுப்பினார்.

நான் மட்டும் எழுத்தாளர் ஆனால் போறுமா ? செம்மொழி மாநாடு நடந்த இந்த வருஷம் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும் எழுத்தாளர் ஆக வேண்டாமா ? அதனால் எல்லோருக்கும் இந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்வதில் மகிழ்ச்சி.

அந்த கட்டுரை... படித்தவுடன் நான் மட்டும் இல்லை... நீங்களும்... ஏன் எல்லோரும் எழுத்தாளர் தான்!.....எல்லோரும் எழுத்தாளரே - கடுகு

ஹலோ.. எழுத்தாளர் சார்...உங்களைத்தான் கூப்பிடுகிறேன். ஆமாம் உங்களைத் தான் எழுத்தாளர் என்று கூப்பிடுகிறேன். உங்களில் பலர் எத்தனை கதை, கட்டுரைகளை மனதிலேயே எழுதிக் கிழித்துப் போட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு மட்டும் நேரம் இருந்திருந்தால், எத்தனையோ நாவல்களையும் கவிதைகளையும் எழுதி இலக்கிய உலகத்தை நிரப்பி இருப்பீர்கள்! (ஏன், நான்கூடத்தான்!)

பாவம், உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அதாவது அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டு அல்லது சமாதானப்படுத்திக் கொண்டு அல்லது.. ஏமாற்றிக் கொண்டு எழுத்தாளராக முடியாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள்.

உங்களுக்கு சில உபயோகமான குறிப்புகள் தர எனக்கு ஆசை. கதை அமைப்பு, நடை முதலிய துறைகளில் சிறிது கோடி காட்ட எண்ணம். மலர்ந்தும் மலராத எழுத்தாளராகிய நீங்கள் இவைகளை வைத்துக் கொண்டு இந்திரஜாலம் செய்துவிட மாட்டீர்களா? சாமர்த்தியசாலிகள் ஆயிற்றே நீங்கள்!

சிரிப்பு சிறுகதை
முன்பெல்லாம் நம் பத்திரிகைகளில் ஹாஸ்யக் கதைகள், ஹாஸ்ய வெடிகள் வெளியாகும். இப்போது வெளியாவதில்லை. ஆகவே ஹாஸ்ய கதை எழுதாதீர்கள். இப்போது சிரிப்புக் கதைகள், நகைச்சுவை கட்டுரைகள் தான் வெளியாகின்றன. அதனால் சிரிப்புச் சிறுகதை எழுத முனையுங்கள்!

சிரிப்புச் சிறுகதைகளின் கதாநாயகனுக்கு சேகர் என்றோ ரமேஷ் என்றோ பெயர் வைக்கக் கூடாது. கதாநாயகிக்கு சுந்தரி என்றோ மஞ்சுளா என்றோ இருக்கக் கூடாது. இந்த மாதிரிப் பெயர்களே கதைகளில் வரக்கூடாது.

திப்பிராஜபுரம் வஜ்ஜிரவேலு, சுங்குவார்பேட்டை அங்குசாமி, ஜிலுஜிலு கம்பெனி மானேஜர் ஜம்புகேசவலு, `சண்டமாருதம்' ஆசிரியர் மங்கள சபாபதி, பர்வதவர்த்தினி அம்மாள், மீனலோசநாயகி, ஆடியபாதம், பரிமள குஜாம்பாள் என்ற மாதிரிப் பெயர்கள்தான் சிரிப்பு வருமாம்.

இரண்டாவது: கதையில் பல இடங்களில் பகபகவென்று சிரித்தாள்- வயிற்று வலிக்க சிரித்தாள், ஹாஹ்ஹா, ஹாஹ்ஹா, ஐயோ, அம்மாடி, சிரிப்பு தாங்க முடியலையே' என்று எப்படியாவது சேர்க்க வேண்டும். அப்போதுதான் கதையில் சிரிப்புச் சூழ்நிலை உண்டாகும்.

மிகைப்படுத்தல் தான் சிரிப்பின் ரகசியம். ஆகவே கதாநாயகன் இட்லி சாப்பிட்டான் என்று எழுதுவதற்கு பதில் `பதினேழு இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு, கால் லிட்டர் காபியை மடக் மடக்கென்று குடித்தான்' என்று எழுதினால் வாசகர்கள் இளிப்பார்கள்!

உபமானத்திலும் புதுமை வேண்டும். வீணையும் இசையும் என்பது போன்ற பழங்காலத்தை உதறிவிடுங்கள். ஜிகினாவும் கவர்ச்சியும் போல, சென்னையும் தண்ணீர் பஞ்சமும் போல, பத்திரிகையும் துணுக்கும் போல என்று எழுத வேண்டும்.

கதையில் வரும் தெருப் பெயர்கள், வீட்டுப் பெயர்கள் போன்றவையிலும் சிரிப்பு குமிழ்விட்டுக் கொப்பளிக்க வேண்டும். `ஜின்னான்னக்கடி உருண்டை கிருஷ்ணன் தெரு, `ஆப்பக்கார சிங்கணசாமி வீதி' என்பது போன்றவைகளைப் போட்டு நிரப்ப வேண்டும்.

சிரிப்புக் கதைகளுக்கு நடைதான் முக்கியம். கடிதங்களாகவே கதை எழுதும் பாணி, `பானி' (தண்ணீர்) பட்ட பாடு ஆகிவிட்டது. இருந்தாலும் யாரும் விடமாட்டேன் என்கிறார்கள். இந்தக் கடிதக் கதைகள் கலியாணத்தில்தான் முடியும். மற்றொரு விதம், மெட்ராஸ் தமிழில் `பிச்சு' வாங்குவது, `ஐயோ, என்னை விட்டு விடுங்கள்' என்றாலும் அதை விடாமல் நையப் புடைக்கிறார்கள். நமது தொல்காப்பியமும் திருக்குறளும் சிலப்பதிகாரமும் அழிந்து போனாலும் போகலாம். ஆனால் இந்த `இன்னா வாத்யரே' தமிழ் சாகாது என்பது நிச்சயம்.

மூன்றாவது விதம்: ஆங்கிலத்தை இடையிடையே போட்டுச் சிலேடை செய்வது, ஆங்கிலத்தைத் தமிழ் கதைகளில் அதாவது சீரியஸ் சிறுகதை, நாவல்களில் கூட உபயோகிப்பது ஃபாஷனாகிவிட்டது. சிரிப்பு கதைகளில் ஜோக்கடிக்க ஆங்கில வார்த்தைகளைப் போடலாம்.

இவைகளை எல்லாம் விடச் சிரிப்புச் சிறுகதை எழுதத் தேவை நல்ல கதை. நல்ல சிரிப்பு சம்பவங்கள். (இவைகள் இருந்தால் மேலே கூறிய வேறு எவையும் தேவையில்லை.)

உருக்கமான சிறுகதை
இப்படிப்பட்ட கதைகள் எழுதுவதுதான் மிகச் மிகச் சுலபம். வாழ்க்கையில் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் எத்தனை தொல்லைகள், பிரச்னைகள், இடர்ப்பாடுகள் வருகின்றன என்பதை நாம் அறிவோம்.

அவைகளிலிருந்து, சுமார் அரை டஜன் `ஐட்டம்'களைப் பொறுக்கி எடுத்துப் போட்டு ஜால வித்தை செய்ய வேண்டும்.

இம்மாதிரிக் கதைகளில் நிறையக் கண்ணீர் வரவேண்டும். ஓட்டைக் குடிசை, காலிக் கஞ்சிக் கலயம், குழந்தைகளுக்கு டைபாய்டு (அல்லது உங்களுக்குப் பிடித்தமான வேறு ஏதாவது வியாதி!) மனைவிக்கு பிரசவ சமயம் - இப்படி எத்தனையோ உபகரணங்கள் உண்டு.

"விடிந்தால் தீபாவளி, பரட்டைத் தலையும் சூம்பிய வயிறுமாகக் குழந்தை சின்னாயி தூங்குவதைப் பார்த்த சின்னப்பனுக்கு வருத்தம் அழுத்தியது. பையைத் துழாவினால் ஒரு பத்து பைசா நாணயம் அவனைப் பார்த்துக் கேலியாக சிரித்தது.." இப்படி ஆரம்பித்தால், அடுத்த கணம் வாசகர்கள் கைக்குட்டையை நாடிப் போவார்கள். (அல்லது சிலர் பத்திரிகையைப் சுருட்டி வீசிப் போட்டு விடுவார்கள்).

சுண்ணாம்பில் இருக்கிறது சூட்சுமம் என்பார்கள். அதுமாதிரி, கதை முடிவில்தான் சோகம் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும்.

"ஜன்னலின் ஓரமாக உட்கார்ந்து வெறுமையாய்க் காட்சியளித்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களிலிருந்து வழிந்த நீர் உலர்ந்திருந்தது- அவள் வாழ்க்கையைப் போல், அவளுக்கு விடிவு காலம் உண்டா?" இப்படி ஒரு கேள்வியை வாசகரின் மேல் தூக்கிப் போட்டுவிட்டுக் கதையை நிம்மதியாக முடிக்கலாம்.

பெருமூச்செறிந்தாள். நெஞ்சம் அடைத்தது. இதயம் கனத்தது. வாழ்க்கை இருண்டது. கால்களின் கீழ் தரை சரசரவென்று சரிந்தது. கண்ணீரும் கம்பலையும் (கம்பலை பதத்திற்கு அர்த்தம் தெரிந்த எழுத்தாளர்கள் மிகக் குறைவு.) சோகம் பிழிந்து எடுத்தது. இம்மாதிரி சொற்களை முதலில் முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொண்டு கதையின் இடையிடையிலே தூவிவிட்டால், சோகம் பிரமாதமாக அமையும்.

காதல் கதை
காதல் கதை எழுதுவது ஒருவிதத்தில் சுலபம். மற்றொரு விதத்தில் கஷ்டம். காதல் கதைகளில் காதலனும் காதலியும் (சேகர், ஸ்ரீதர், கீதா, மாலா, மல்லிகா, உஷா, சங்கர், நளினி -இப்படித்தான் அவர்களின் பெயர்கள் இருக்க வேண்டும்) கடைசியில் கலியாணம் செய்து கொள்வார்கள். வாழ்க்கையில் காதல் ரொம்ப ரொம்பக் குறைவு; அதுவும் சந்தோஷமான திருமணத்தில் முடியும் காதல் விவகாரம்; நூற்றில் ஒரு கேஸ்தான்.

ஆகவே, இக்கதைகள் எழுதுவதில் தனி திறமை வேண்டும். காதல் மலர, வளர, செழிக்க பல வாய்ப்புகள், தரப்படவேண்டும். வாழ்க்கையில் கிடைக்காத அல்லது மிகவும் துர்லபமாக இருக்கும் இவைகளை சிருஷ்டி செய்வது கடினம்.

பஸ் ஸ்டாப், சினிமாக் கொட்டகை, நாடக நிகழ்ச்சி, கல்லூரி விழா, பாங்க் கவுண்டர், டெலிபோன் விசாரணை குமாஸ்தா, லேடி டைப்பிஸ்ட், சமூகசேவகி, மியூசிக் டீச்சர், யாவும் தீர்ந்து போன விஷயங்கள். புதிதாக எழுதப்படும் கதைகளுக்கு யார் யாரை, எப்படிப் பிடித்துப் போட்டுக் காதல் செய்யச் சொல்வது என்பது மிகவும் தொல்லையான சமாசாரம்.

என் நண்பரான சினிமாக் கதாசிரியர் ஒரு சமயம் சொன்னார். "லவ் சீன் எழுதுவதுதான் என்னைப் பொறுத்த வரை மிகவும் மண்டையை உடைக்கும் காரியம். ஒன்று பாக்கி விடாமல், பல விதங்களில் லவ் சீன்களைத் தயாரித்து விட்டார்கள். காதல் காட்சி இல்லாமல் படம் எடுக்க விரும்புகிறேன்."

ஆகவே காதல் கதை எழுதாதீர்கள் என்று சொல்லவில்லை. ஓசியில் கிடைக்கிறது என்று ஆப்பிள் பழத்தை ஏவாள் என்றைக்கு சாப்பிட்டாளோ, அன்றே காதல் உலகில் மலர்ந்துவிட்டது. காதல் இல்லாமல் மனிதர்கள் வாழலாம்; பத்திரிகைகளால் வாழ முடியாது. காதல் கதைகள் வாழ்க!

காதல் கதைகள் வர்ணனையில்தான் மிளிர வேண்டும்.

கதாநாயகி கட்டழகுக்காரி என்றால் போதாது. வெளிர் நீலத்தில் சின்னச் சின்ன வெள்ளைப் பூ போட்ட நைலக்ஸ் புடவையை அவள் கட்டியிருப்பதை வர்ணிக்க வேண்டும். எள்ளுப் பூவைப் பார்த்திராத `அரிசிக் காய்ச்சி மர' எழுத்தாளராக இருந்தாலும், நாயகியின் நாசி எள்ளுப்பூ போன்று இருந்தது என்பதை ரசிப்புடன் கூற வேண்டும். முன்பெல்லாம் முக அழகை மட்டும் விவரிப்பார்கள். இப்போது காலம் முன்னேறிவிட்டது; அல்லது கீழிறங்கி விட்டது என்று கூறலாம். முக அழகிலிருந்து கழுத்து, தோள் என்று இடுப்புக்கு கீழ் கட்டப்பட்டுள்ள `சாரி' வரை வர்ணனைகள் எழுதப்படுகின்றன.

வாளிப்பு, பூரிப்பு, செழுமை,, வழவழப்பு, இளமைத்துடிப்பு, கவர்ச்சி போன்ற வார்த்தைகள் உங்களுக்குத் தெரியுமல்லவா? போதும், இவைகளை வைத்துக் கொண்டு விந்தைகள் புரிய முடியும்.

காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். காதல் கதைகளுக்குக் கருத்தோ, கதையோ கிடையாது. ஆகவே, வெறும் பேனாவை எடுத்து மாறன் கணைகளைச் சரசரவென்று வீசலாம்.

சரித்திரக் கதை
இன்று தமிழில் சரித்திரக் கதைகள் எழுதுவது மிக எளிதான காரியம். ஏதாவது ஒரு காதல் கதையை எழுதுங்கள். தமிழ்நாட்டின் பழைய சரித்திரத்தைப் படித்தறியாதவர்கள் கூட எழுதலாம். கதை எழுதி முடித்த பிறகு சில சில மாற்றங்கள் செய்தால் சரித்திரக் கதை பிரமாதமாக அமையும்.

செய்முறை கீழே தரப்படுகிறது.

முதலில் எழுதப்படும் கதை:
"தலப்பாகட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஸ்கூட்டரில் ஏறிச் சென்று கொண்டிருந்த மணியின் பார்வை சட்டென்று எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்த மாலினியின் மேல் விழுந்தது. அவள் ஒரு பெரிய கட்டடத்தில் நுழைந்தாள். அவள் அணிந்திருந்த `சைனா' புடவை மாலை வெயிலில் பளபளத்தது.


இதை சரித்திரக் கதையாக மாற்றுவது எப்படி?

"பால் சோறும் பலாக்கனியும் உண்டுவிட்டு புரவியில் ஏறிப் பாதை வழியே மெல்ல வந்து கொண்டிருந்த இளவரசன் மார்த்தாண்ட மணிவர்மனின் பார்வை ஒரு கணம் எதிர்ச்சாரியில் மலர்ப் பூங்காவின் பின்புறம் சென்று கொண்டிருந்த ராஜ பாதையின் மேல் சென்றது. அங்கே அழகு மயில் என ஒயிலாகச் சென்றுக் கொண்டிருந்தாள் எழில் மங்கை மாளவிகா. அவள் பூப் போன்ற பாதங்களால் நடக்காமல் அன்னமென மென்காற்றில் மிதந்து செல்வது போல் சென்றாள். அருகே இருந்த மாட மாளிகையின் வேலைப்பாடுகள் அமைந்த மணிக் கதவுகளைத் திறந்து சென்றாள். அவள் அணிந்திருந்த முத்து மாலையும், காதில் நடனமாகிக் கொண்டிருந்த குண்டலமும், சங்குக் கழுத்தை தழுவிய நவரத்னாபரணமும், -இவைகளும் சாவகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மென்பட்டாலான மேலங்கியும் அந்தி வெயிலில் தகதகவென்று பளபளத்து ஒரே தேஜோமயமாகக் காட்சி அளித்தது...

போதுமா? சரித்திரக் கதைகளில் வீடுகள் கிடையாது. கோட்டை, அரண்கள் உண்டு. ஜன்னல்கள் , சாளரம் ஆகும் அல்லது பலகணி ஆகும். சூரியன் ஆதவன் ஆவான், இத்யாதி.

ஒரு சின்னக் குறிப்பு: கதையின் நடுவே ஏதாவது ஓர் இடத்தில் ஒரு நட்சத்திரக்குறி போடுவது மிக மிக அவசியம். அதற்கு ஓர் அடிக்குறிப்பு: ஆங்கிலத்தில் ஏதாவது சரித்திரப் புத்தகத்தின் பெயர், பக்க விவரம் போன்றவைகளைப் போட வேண்டும். இம்மாதிரி ஒரு சரித்திரப் புத்தகம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை!

புதுமைக் கதை
இன்று புதுமைக் கதைகளுக்குத்தான் மவுசு. கதை அம்சம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நடைதான் முக்கியம். நடையில் பல சர்க்கஸ் வேலைகள் செய்ய வேண்டும். ஆங்கில வார்த்தைகளை உரையாடலில் உபயோகிக்கலாம். ஆனால் ஆங்கிலத்திலேயே எழுதினால் சிறப்பாக இருக்கும். (பள்ளிக்கூட `மாகஸீன்களில்' தமிழ்க் கட்டுரைகள் ஒரு பகுதியும் ஆங்கிலக் கட்டுரைகள் ஒரு பகுதியுமாகப் பிரசுரிப்பார்களே, அதுபோல்தான் புதுமைக் கதைகளும். ஆனால் இவைகளில் இரண்டும் கலந்து வரவேண்டும்)

'ங' மாதிரி கையை உயர்த்தினான். 'க்' மாதிரி வளைந்து கிடந்தது, '. ஒ, ஒ என்று கூட்டம் நெறித்தது. குழந்தை ஞொய் ஞொய் என்று அழுதது. 'அ' சினிமாப் படங்களில் வருவது போல உடை உடுத்தியிருந்தாள் அல்லது கழற்றி இருந்தாள். இந்த வழியில் கற்பனையைப் பறக்கவிடுங்கள்.

கதை என்று இருக்க வேண்டியதில்லை. திடீர் முடிவுகள், எதிர்பாராத திருப்பங்கள், சட்டென்று ஒரு கேள்விக்குறியைப் போட்டுவிட்டுக் கதையை அந்தரத்தில் முடிப்பது ஆகியவைகளைத் தாராளமாகப் பயன்படுத்தலாம், இத்தகைய கதைகளில்.

தமிழில் உள்ள ஒரு சில எழுத்துக்களை சாதாரணமாக நடைமுறையில் உபயோகிப்பதில்லை. அப்படிப்பட்ட எழுத்துக்களைக் கதையில் நுழைக்க வேண்டும். சில `சாம்பிள்'கள்; நாய் ஙெங்ஙெ என்று அழுதது. ஒய்ங்ஞ்ங் என்று அழுதது, ஒய்ங்ஞ்ங் என்று எண்ணெய் போடாத கதவு ஙீரீச்சிட்டது, மூக்கால் ஞேசினாள்.

புதுமைக் கதைகளில் சாதாரணமாக ஆங்கில இசைப் பின்னணி இருந்தால் மேலும் நன்றாக அமையும். கதாநாயகன் ரேடியோவைத் திருப்பினான் என்பதற்குப் பதில், `ரேடியோகிராமில் பீட்டில் இசை முழங்கிக் கொண்டிருந்தது' என்று எழுதலாம். ஜாஸ், பாப், ரோலிங் ஸ்டோன்ஸ்,, ட்ரம்பெட், ஷேக், , நைட் கிளப், காபரே, ஜாம் செஷன், எலக்ட்ரிக் கிடார், இன்-பீட் இப்படித் திரட்டி வைத்துக் கொள்ளுங்கள். கதைக்கு நடுவே அள்ளிப் போட உபயோகமாக இருக்கும்!

`கவர்ச்சி'யையும் சேர்க்க வேண்டும். ஹீரோவின் கையில் வெறும் புத்தகத்தைக் கொடுக்காதீர்கள். `ஃப்ரம் ரஷியா வித் லவ்'. `நாட்டி ஜோக்ஸ் ஃப்ரம் பிளேபாய்' - இப்படி ஒரு புத்தகம் இருப்பது நலம்.

புதுமைக் கதைகளில் சில சில இடங்களில் லேசான `பச்சை' அடிப்பதும் முக்கியமானதாகும்.

முடிவுரை:

ஆகவே, என் அருமை எழுத்தாளரே! எழுத்தின் ரகசியத்தைக் கூறிவிட்டேன். இனி நீங்கள் எழுதிக் குவிக்கலாம். அதாவது உங்களுக்கு நேரம் இருந்தால்!

இவ்வளவு வக்கணை பேசுகிறீர்களே, நீர் ஏன் ஒரு நல்ல கதை எழுதக்கூடாது என்று என்னைக் கேட்கிறீர்களா?
அதற்கு ஒரே பதில். (அல்லது கேள்வி)
"பணம் சம்பாதிப்பது எப்படி?" என்ற புத்தகத்தை பணம் சம்பாதிக்கத் தெரிந்தவன் எழுதுவானா?

- கடுகு
( சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுதியது )

கதையில் வரும் டெக்னிக், பெயர்கள் அனைத்தும் கற்பனையே.. கடந்த கால, சமகால, வருங்கால எழுத்தாளர்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல.

பிகு: அறிவியல் கதை, இலக்கிய கதை, தொடர்கதைகள் ... என்று நீங்கள் கமெண்டில் டிரை பண்ணலாம் :-)

13 Comments:

Anonymous said...

அப்படி போடுங்க...நல்ல சமயத்துல நல்ல பதிவு...இவ்வளவு எளிதா கதை எழுதலாமா...

Anonymous said...

I dont have your email address. so am putting my question here.

did you see the banner across the city of CM and Velukkudi sharing the dias?

I wish you could so some coverage on the same.

Anonymous said...

ஒரு பஸ் நிறுத்தத்தில் ஒரு பிச்சைக்காரன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அவன் பிச்சை கேட்ட ஆள் 'வருமானமே இல்லாமல் நான் அல்லாடிக்கொண்டிருக்கிறேன் என்னிடம் பிச்சை கேட்கிறாயே' என்றான். அதற்க்கு பிச்சைக்காரன் 'பணம் சம்பாதிப்பதற்கு பத்து வழிகள்' என்று நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அதைப் படியுங்கள் என்று சொன்னான்! அந்த ஆள் 'அப்படியென்றால் நீ ஏன் பிச்சை எடுக்கிறாய்?' என்று கேட்டான். அதற்க்கு பிச்சைக்காரன் சொன்னான்: "அந்தப் பத்தில் இதுவும் ஒரு வழி!"
உங்கள் கடைசிப் பாராவைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது!

வெடிகுண்டு வெங்கட் said...

அருமை. எழுத்தாளர் கடுகு வாழ்க.

பதிவில் இருக்கும் ஷ்யாம் படங்கள் சூப்பர்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

Kannan said...

கண்ணீரும் கம்பலையும் - கண்ணீர் கண்ணிலிருந்து வருவது, கம்பலை மூக்கிலிருந்து வருவதாக இருக்குமோ?

Anonymous said...

ஹாஸ்ய - what is the meaning of that.

You joined with kadugu and karunanidhi and showing us the way to KARKALAM,,....

We are modern...hmmmm ultra modern.

MURALI

Gaana Kabali said...

//கண்ணீரும் கம்பலையும் - கண்ணீர் கண்ணிலிருந்து வருவது, கம்பலை மூக்கிலிருந்து வருவதாக இருக்குமோ?//

கம்பலை என்றால் 'இரைச்சல் அல்லது சத்தம் போட்டு புலம்புதல்' என்று பொருள் .

kggouthaman said...

சிரிப்பு கதைகள் எழுதுவது எப்படி என்று தெரிந்துகொண்டேன். முயற்சி செய்கிறேன். விரைவில் எங்கள் பதிவில் பதிவிட முயற்சி செய்கிறேன்.

சுபமூகா said...

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா என்ன?!

நாற்பது நிமிடங்களுக்கு முன் எழுதின மாதிரி அருமையான நடை!!

அன்புடன்,
சுபமூகா

சுபமூகா said...

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா என்ன?!

நாற்பது நிமிடங்களுக்கு முன் எழுதின மாதிரி அருமையான நடை!!

அன்புடன்,
சுபமூகா

kanavu said...

superoooooooooooo super....

R.Gopi said...

அசத்தல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

இந்த ‘கம்பலை’ மேட்டர் பற்றி அடியேன் கொஞ்சம் சீரியசாக ஆராய்ச்சி செய்தது இங்கே!: http://www.writerlaram.com/tamil/?p=62