பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 09, 2010

மியூச்சுவல் பண்ட்

முன்குறிப்பு: FundsIndia.com எனும் இணையம்வழி இயங்கும் ஒரு நிதிவள சேவை நிறுவனத்தில் நான் இயக்குனராக இருக்கிறேன். எங்கள் முக்கிய வர்த்தகம் mutual funds எனப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டங்களில் உள்ளது. கீழ்க்காணும் கட்டுரை இவ்வகை முதலீட்டினைப் பற்றியது என்பதால், எனது தொழில்சார் ஈடுபாட்டினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற வாரம் யதிராஜ் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது பற்றி எழுதியிருந்தார். இந்த எனது கட்டுரையில் ம்யூச்சுவல் ஃபண்ட் (Mutual fund) திட்டங்கள் எனப்படும் கூட்டு முதலீட்டுத் திட்டங்கள் பற்றி எழுதியுள்ளேன். கூட்டு முதலீட்டுத் திட்டங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு சுலபமான, சற்று செலவு குறைவான வழி.


அதற்குள் போவதற்கு முன் பொதுவாக ஒரு வார்த்தை. பங்குச் சந்தை, கூட்டு முதலீட்டுத் திட்டங்கள் போன்றவை நிதி முதலீட்டு முறைகள். அவை பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பு நிதி நிர்வாகம் பற்றிய புரிதல் தேவை. நிதி முதலீடு என்பது நிதி நிர்வாகத்தில் ஒரு பகுதி. வரவு செலவு கணக்குகளைச் சீரமைத்தல் (பட்ஜெட்), சேமித்தல், காப்பீடுகளை முறைப்படுத்துதல், அவசரத்தேவைக்கான பணத்தை ஒதுக்கி வைத்தல் போன்றவை நிதி நிர்வாகத்தில் அடிப்படை விஷயங்கள். இவை பற்றி ஓரளவுக்குத் தெளிவு இருந்தால், நாம் எவ்வளவு பணத்தை எப்படி முதலீடு செய்யலாம் என்பதைத் தெளிவாக, நம்பிக்கையோடு முடிவு செய்யலாம்.

எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? சேமித்த பணத்தை வங்கிக் கணக்கில் அப்படியே வைத்திருந்தால் என்ன தவறு? வங்கியில் இருக்கும் பணம் என்ன ஊசியா போகப் போகிறது? முதலீடு செய்வதற்கு முக்கியக் காரணம், பணவீக்கத்தால் உயர்ந்து வரும் விலைவாசிகளோடு போட்டி போட்டுக் கொண்டு நமது சேமிப்பும் வளர வேண்டும் என்பதாகும். வங்கியில் இருக்கும் பணம் அதிகபட்சம் 3-4% வட்டி பெறுகிறது. வைப்பு நிதியில் இருக்கும் பணம் சுமார் 8% வட்டி பெறுகிறது. பணவீக்கம் கிட்டத்தட்ட 10% இருக்கிறது. ரூபாயின் மதிப்போடு போட்டி போட்டுக் கொண்டு நமது ரூபாய்களும் பெருகாவிட்டால், நமது பணம் ‘சுருங்கி’க் கொண்டேதான் இருக்கும. நமது வரவு-செலவு போக மீதும் சேமிப்புப் பணத்தை திட்டமிட்ட முறையில் முதலீடு செய்தால் அச்சேமிப்பு ரூபாயின் வீக்கத்திற்கு இணையாக அல்லது அதற்கு உயர்வாக வளர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. முதலீடு செய்யப்படாத பணம் அந்த அளவுக்கு வளர்வதற்கு வாய்ப்பே இல்லை.

சரி, எதில் முதலீடு செய்வது? உலகில் பிரதானமாக இரண்டு வகையான முதலீடுகள் உள்ளன. ஒன்று கடன் பத்திரங்கள், இரண்டு பங்குச்சந்தை. கூட்டு முதலீட்டுத் திட்டங்கள் இவ்விரண்டு வழிகளிலும் சுலபமாக முதலீடு செய்ய உதவுகின்றன. கடன் திட்டங்கள், பங்குச்சந்தைத் திட்டங்கள், கலந்த திட்டங்கள் என்று பல திட்டங்கள் மூலமாக உங்கள் முதலீடுகளை நிர்வகிக்க உதவுகின்றன.

அடிப்படையில் கூட்டு முதலீட்டுத் திட்டம் என்பது ஒரு எளிமையான விஷயம். நம்மில் பணம் முதலீடு செய்வது பற்றி நன்கறிந்த ஒருவர் உள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் ஒரு பத்து நண்பர்கள் தமது சேமிப்பினைக் கொடுத்து நிர்வகிக்கச் சொல்கிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனியே ஐயாயிரம் ரூபாயை முதலீடு செய்வதை விட மொத்தமாக ஐம்பதாயிரம் ரூபாயை ஒருவரே முதலீடு செய்தால் சில விதங்களில் செலவு குறையும். விஷயம் தெரிந்த ஒருவர் நிர்வகிப்பதால், லாபம் அதிகம் கிடைக்கவும் வழி உண்டு. இப்படி முதலீடு செய்த பணத்தில் கிடைக்கும் லாபத்தை நண்பர்கள் பங்கு போட்டுக் கொள்ளலாம். இல்லை, லாபத்தை மறுபடி முதலீடு செய்யலாம். இல்லை திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாம். வேண்டுமென்றால், மாதாமாதம் ஒரு தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்யலாம். பணத்தை நிர்வகிக்கும் நண்பர் திடீரென்று ஒரு ரிஸ்க் அதிகமுள்ள ஒரு முதலீட்டு முறையை அடையாளம் காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஒரு சில நண்பர்கள் அதில் ஆர்வத்துடன் பங்கு கொள்ளலாம், மற்றவர்கள் ஒதுங்கி நிற்கலாம். கூட்டாக முதலீடு செய்வதில் சில சௌகரியங்களும், செலவு குறைவும், முக்கியமாக சுலபமான ரிஸ்க் நிர்வாகமும் உள்ளன.

இவ்வாறெல்லாம் ஒரு நட்புக் குழாமிற்குள் செய்வதை மிகப்பரந்த அளவில் முகம் தெரியாத மனிதர்களுடன் செய்தோமென்றால் அது ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டம் ஆகிறது. செபி எனப்படும் அரசாங்க அமைப்பின் கண்டிப்பான மேற்பார்வையில் இயங்கும் இத்திட்டங்கள் மூலமாக ஏராளமான மக்கள் கடன் மற்றும் பங்குச் சந்தையில் தமது சேமிப்பினை முதலீடு செய்து பயன் பெற்று வருகிறார்கள்.

இன்றைய அளவில் இந்தியாவில் 38 நிதிவள சேவை நிறுவனங்கள் கூட்டு முதலீட்டுத் திட்டங்களை நிர்வகிக்கின்றன. ரிலையன்ஸ், எச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ, சுந்தரம் என பல புகழ் பெற்ற நிறுவனங்கள் இத்தகைய திட்டங்களை வழங்குகின்றன. 2000-க்கும் மேற்பட்ட முதலீட்டுத்திட்டங்கள் உள்ளன. சுமார் 90 லட்சம் முதலீட்டாளர்கள் இத்திட்டங்களில் முதலீடு செய்துள்ளார்கள். தனி நபர்களின் முதலீடுகள் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இத்திட்டங்களில் உள்ளது.

முன்பு குறிப்பிட்டது போல் கடன்திட்டங்கள், பங்குத்திட்டங்கள் என்று இருவகைத் திட்டங்களும் உள்ளன. கடன் திட்டங்களில் ரிஸ்க் குறைவு, லாப சாத்தியுமும் குறைவு. பங்குத்திட்டங்களில் ரிஸ்க் அதிகம், லாப சாத்தியமும் அதிகம். இவை இரண்டும் கலந்த திட்டங்களும் உள்ளன (balanced funds). ரிஸ்க், லாப சாத்தியம் இரண்டுமே நடுத்தரமாக இருக்கும்.

பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை விட பங்குத்திட்டத்தில் முதலீடு செய்வதில் சில நன்மைகள் உள்ளன. முன்பு சொன்னது போல் ஒரு விஷயம் தெரிந்த ஒருவர் நமது பணத்தை நிர்வகிக்கிறார் என்பது ஒன்று. அதை விட மிக முக்கியமானது பரவலாக்கம் (diversification). நமக்கு நாமே பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது, நம்மால் ஓரிரு கம்பெனியில் ஓரிரு பங்குகள் தாம் வாங்க முடியும் (Reliance பங்கு விலை ஆயிரம் ரூபாய், ICICI வங்கி சுமார் 900 ரூபாய் என்ற ரீதியில்). ஆனால் பங்குத்திட்டத்தில் முதலீடு செய்யும் போது அப்படியில்லை. உதாரணமாக, HDFC Top 200 என்றொரு திட்டம் இருக்கிறது. சந்தையில் சிறப்பாக இயங்கும் 200 நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டம். உங்களிடம் ஐயாயிரம் ரூபாய் இருந்தால் போதும், இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். நீங்களே பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் ஐயாயிரம் ரூபாய்க்கு, 200 இல்லை, 20 நிறுவனங்களின் பங்குகள் கூட வாங்க முடியாது. மேலும், பரவலாக்கத்தினால் பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டின் ரிஸ்க் குறைகிறது (ஒரு நிறுவனத்தின் பங்கு விழுந்தாலும், மற்ற நிறுவனங்களின் பங்குகள் மேலே செல்லலாம்). மற்றபடி, பங்குச்சந்தையில் பங்குக்கணக்கில் தான் முதலீடு செய்ய முடியும் - ஐந்து பங்கு, பத்து பங்கு என்று. ரூபாய் கணக்கில் செய்ய முடியாது. பங்குத்திட்டத்தில் உங்கள் சேமிப்பு எத்தனையோ அதை அப்படியே ரூபாய்க் கணக்கில் முதலீடு செய்யலாம். மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை தொடர்ந்தும் செய்யலாம். பெரும்பாலான திட்டங்களில் (சில விதிகளுக்குட்பட்டு) எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு முதலீடு செய்வதற்கு என்ன செலவாகும்? நீங்கள் செய்யும் முதலீட்டிலிருந்து வருடத்திற்கு சுமார் 1.5-2% வரை நிர்வாகக் கட்டணமாக எடுத்துக்கொள்ளப்படும். போட்ட பணத்தை ஒரு வருடத்திற்குள் திருப்பி எடுக்க நினைத்தால், 1% கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். எங்கள் நிறுவனம் போன்ற இணைய சேவைகளைப் பயன்படுத்தினால், இது தவிர வேறு எந்த கட்டாயச் செலவுகளும் இல்லை.

கூட்டு முதலீட்டுத்திட்டங்களில் முதலீடு செய்வதில் என்ன குறைகள் உள்ளன? முக்கியமான குறை, உங்கள் பணம் வளர்வதற்கான உத்தரவாதம் எதுவும் கிடையாது என்பதுதான். நீங்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கில் வைத்திருந்தாலோ, வைப்புநிதிக் கணக்கில் வைத்திருந்தாலோ, முதலுக்கு மோசமில்லாமல் (வங்கி திவாலாகாத வரை) ஒரு குறிப்பிட்ட குறைவான வட்டித் தொகை உத்தரவாதமாக உங்கள் கணக்கில் சேர்ந்து வரும். கூட்டு முதலீட்டுத்திட்டங்களில் அத்தகைய உத்தரவாதம் எதுவும் கிடையாது. கடன் திட்டங்களில் குறைவான ரிஸ்கில், நம்பிக்கையோடு ஓரளவுக்கு லாபம் எதிர்பார்க்கலாம் என்றாலும், அதிலும் இத்தனை வட்டி தரப்படும் என்ற உத்தரவாதம் எதுவும் கிடையாது. பங்கு திட்டங்களில், ரிஸ்க் அதிகம் - முதலுக்கே மோசம் உண்டாகும் சாத்தியமும் உண்டு.

மேலும், நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் போது இந்த நிறுவனத்தில் பணம் போட வேண்டும், இப்போது எடுக்க வேண்டும், இத்தகைய நிறுவனத்தில் போடக் கூடாது என்றெல்லாம் நமக்கு நாமே திட்டம் வகுத்துக் கொண்டு செயல்படலாம். கூட்டு முதலீட்டுத் திட்டங்களில் அத்தகைய உரிமைகள் கிடையாது. திட்ட முதலீட்டு நிர்வாகி எல்லாருக்கும் சேர்த்துதான் முடிவுகள் செய்ய முடியும். அவர் நினைக்கும் பங்குகளை நினைக்கும் போது வாங்கி விற்பார். உவமையாகச் சொல்ல வேண்டும் என்றால், நேரடி பங்கு வர்த்தகம் என்பது நம் வீட்டில் நமக்கு நாமே சமைத்து சாப்பிடுவது போல. சுவையோ இல்லையோ, நமது கைபக்குவம். கூட்டு முதலீட்டுத் திட்டம் என்பது, உணவகத்தில் போய் சாப்பிடுவது போல. உணவகத்தில் உட்கார்ந்தால் எல்லாருக்குமாக செய்யப்படும் சாம்பார் தானே நமக்கும் வருகிறது. சமையல்காரர் உப்பு அதிகமாக போட்டு விட்டால் எல்லோர் நாக்கும் கரிக்கும். அவர் ருசியாக சமைத்தால், எல்லோருக்கும் சந்தோஷம்.

உத்தரவாதம் இல்லை, நமக்கு கன்ட்ரோலும் இல்லை எனும் போது கூட்டு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது சரியா? புத்திசாலித்தனமா? கண்டிப்பாக! ஏனெனில், முன்னமே கண்டது போல் பணவீக்க விகிதத்தோடு நமது முதலீடுகள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற வேண்டும். அப்படி நடக்க ஒரே வழி பங்குச் சந்தை முதலீடு தான். பங்குச்சந்தை முதலீடுகளைச் செய்ய சுலபமான, சிறப்பான வழி கூட்டு முதலீட்டுத் திட்டங்கள் மூலமாக செய்வது தான். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூற்று. வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரு கூறு (இந்தியாவிலும் சரி, மற்ற சந்தைப் பொருளாதார நாடுகளிலும் சரி).

நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

1. உங்கள் சேமிப்பில் அவசரத்தேவைக்கான பணம் என்று ஒரு தொகையினை முதலில் சேமித்து ஒதுக்கி வைத்து விடுங்கள்.
2. உங்கள் ஆயுள் காப்பீட்டை முடிவு செய்து அதற்கான கட்டணத்தை செலுத்தி விடுங்கள்.
3. இவை போக, மீதமுள்ள பணத்தை நம்பிக்கையோடு தொலை நோக்கு சிந்தனையோடு கூட்டு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.
4. பணம் போட்டவுடன் தினமும் அதன் மதிப்பு மாற்றத்தை கண்கொத்திப் பாம்பு போல பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். ஒரு நாள் மேலே போகும், மறுநாள் கீழே வரும். பரவாயில்லை. ஒரு குறிப்பிட்ட காலவரை வைத்துக்கொண்டு அதன்படி திட்டமிட்டு செயல்படுங்கள்.

ஆரம்ப முதலீட்டாளர்கள் முதலில் முழுவதும் பங்குகளுமல்லாமல், முழுவதும் கடன் பத்திரங்களுமல்லாமல், இரண்டும் கலந்திருக்கும் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. Balanced Funds எனப்படும் இவைகளில் லாபம் சற்று மட்டுப்பட்டாலும், நஷ்ட சாத்தியங்கள் குறைவு.

கூட்டு முதலீட்டுத் திட்டங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கும், திட்டங்கள் குறித்த தகவல்கள் தெரிந்து கொள்வதற்கும் valueresearchonline.com என்ற வலைத்தளம் ரொம்பவும் உபயோகப்படும். அதில் ஐந்து நட்சத்திரச் சான்று பெற்ற திட்டங்களில் நம்பிக்கையோடு முதலீடு செய்யலாம்.

சட்டபூர்வமான எச்சரிக்கை: கூட்டு முதலீட்டுத் திட்டங்கள் சந்தை சார்ந்த ரிஸ்குகளுக்கு உட்பட்டவை. திட்டம் குறித்த ஆவணங்களை நன்கு பரிசீலித்து விட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்கவும்.

நன்றி,

Srikanth Meenakshi9 Comments:

சொர்க்கம் said...

//இவ்வாறெல்லாம் ஒரு நட்புக் குழாமிற்குள் செய்வதை மிகப்பரந்த அளவில் முகம் தெரியாத மனிதர்களுடன் செய்தோமென்றால் அது ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டம் ஆகிறது. செபி எனப்படும் அரசாங்க அமைப்பின் கண்டிப்பான மேற்பார்வையில் இயங்கும் இத்திட்டங்கள் மூலமாக ....
//

Its not 100% true. SEBI is not that much efficient if you compare its American counterpart SEC . I filed a complaint with SEBI though its website about a brokerage firm. But instead of giving me a complaint number, they sent the complaint via ordinary post. That itself is a vulnerable system. unless the postal department delivers your complaint number you have no way to prove that your complaint is registered. Also the method SEBI used to investigate itself is very slow.

Just thought of sharing my experience.

Ram said...

பரஸ்பர நிதித் திட்டங்கள் பற்றிய தெளிவான அறிமுகம். வாழ்த்துகள்.

valueresearch நிறுவனம் மாதா மாதம் Mutual Fund Insight என்றொரு பத்திரிகையும் வெளியிடுகிறது. எளிமையாய், சாதாரண முதலீட்டாளர்களுக்கு உதவியாய் பல கட்டுரைகள் அடங்கிய இப் பத்திரிகை, முதலீட்டில் முதன் முறையாய் இறங்குபவர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.

முதலீட்டாளரை ஏமாற்ற பல யூலிப்கள் முண்டியடிக்கின்றன. கமிஷனுக்கு வாய்ப்பு அதிகம் என்பதால் வினியோகஸ்தர்களும் இவ்வகை திட்டங்களையே பெரிதும் சிபாரிசு செய்கின்றனர். போதாக் குறைக்கு செபி எண்ட்ரி லோடையும் நீக்கி விட்டதால், நிதி ஆலோசகர்களும், வினியோகஸ்தர்களும் பரஸ்பர நிதித் திட்டங்களை முதலீட்டாளரே கேட்டாலொழியக் கொடுப்பதில்லை.

யூலிப் என்ற பெயரால் நடக்கும் ஏமாற்றையும், யூலிப் திட்டங்களையும் மியூசுவல் ஃபண்ட் திட்டங்களுக்கும் உள்ள நுண்ணிய வேறுபாடுகளையும் சுட்டி அடுத்த கட்டுரையை ஸ்ரீகாந்த் எழுதலாம். நிச்சயம் இட்லிவடை வாசகர்களுக்குப் பயனுள்ளதாய் இருக்கும்.

லலிதா ராம்

யதிராஜ சம்பத் குமார் said...

தெளிவான விளக்கத்துடன், மிக நல்ல பதிவு.

kggouthaman said...

பயனுள்ள பல தகவல்கள் கொண்டுள்ள கட்டுரை. நன்றி.
மியூச்சுவல் ஃபண்ட் என்பதை பரஸ்பர நிதி என்று கூறினால் சரியாக இருக்குமோ?

Srikanth said...

சொர்க்கம்: Agree, SEBI is far from perfect, but for my money it is much better than IRDA in terms of caring for investor interests. The recent regulatory changes, some controversial, have all been made with investor interests in mind.

ராம்: உண்மை. நீங்கள் சொல்லும் சூழ்நிலையால் இந்த முதலீட்டுத் திட்டங்கள் பயனாளர்களைச் சென்றடைவது குறைந்து கொண்டு இருக்கிறது என்பது வேதனையான விஷயம்.

யதி, நன்றி.

கௌதமன்: பரஸ்பர நிதி என்பது ரொம்பவும் literal translation ஆகத் தோன்றியதால் கூட்டு முதலீட்டுத் திட்டம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினேன். Hope that's ok...

R. Jagannathan said...

தெளிவான கட்டுரை. நன்றி. சில நாட்கள் முன் நிறைய பேர் mutual fundகளிலிருந்து பணம் அதாவது முதலீட்டை திருப்பி எடுத்து விட்டதாகப் படித்தேன். அதே போல் யூலிப் ஃபண்டுகளைப் பற்றியும் எதிர் கருத்துகள் வருகின்றன. அதனால் எனக்கு கொஞ்ஜம் தலை சுற்றுகிறது.

Dear IV, your rating is heading North by such articles in your site. Keep it up! - ஜகன்னாதன்.

sury said...

Investing in mutual funds are as risky as investing in secondary markets. It is therefore necessary to go through in detail the portfolio in which a particular fund is to invest. Most of the mutual funds have sweet, colourful and attractive names to seduce gullible and vulnerable .
SBI One India Fund and Tata indo Global Infrastructure Fund are examples of how the funds managed by established Corporates do fail. Tata Indo Global Infrastructure fund has stagnated at an NAV of Rs.7 ( Face value Rs.10 per nut) even after 3 years.
This is not to decry investing in the mutual fund, but to be as careful as you choose to invest in secondary share market.
I would, as a retired Senior Executive of an insurance corporate body, appeal to all to invest their hard earned money in ULIPs so that their money is exposed to minimum risk.
sury

Srikanth said...

Jagannathan, Thanks...Looks like I need to do a post comparing ULIPs and MFs :-)

Mr. Sury, thanks for your comment. It is easy to choose good mutual funds to invest in as there are several. As I had indicated, doing a little bit of research in sites like valueresearchonline.com and following their star ratings will ensure the risk is minimized.

Also, as an active, non-retired member of the financial advisory community, I would recommend that investors stay as far away as possible from commission-laden, opaque products like ULIPs which do neither insurance nor investments efficiently.

suryajeeva said...

capitalism combined with communism is not possible... surely u r a capitalist and i have no doubt about this... as u know very well whether share market or mutual fund.. all are a part of gambling... and the way u r criticizing others, u should definitely revalue ur ideology....