பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 02, 2010

இரண்டாம் சுற்று: கடைசி நாள் ஆட்டங்கள்

இரண்டாம் சுற்றின் கடைசி நாளன்று போட்டியில் எஞ்சியிருந்த ஒரே ஆசிய நாடான ஜப்பான் பாரகுவேயுடன் மோதியது.

இரு அணிகளுமே உலகக் கோப்பையின் காலிறுதிக்கு இதற்கு முன் தேர்வானதில்லை..

பாரகுவே தேர்வுச் சுற்றுகளில் தென் அமெரிக்க அணிகளுள் சிறந்தவையான அர்ஜெண்டினாவையும் பிரேசிலையும் வென்று உலகக் கோப்பைக்கு வந்துள்ளது. முதல் சுற்றில் ஸ்லோவாகியாவை வென்றும் இத்தாலியுடனும், நியூசிலாந்துடனும் டிரா செய்தும் இர்ண்டாம் சுற்றுக்குள் நுழைந்த பாரகுவே ஆட்டத்தை ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஜப்பானும் சளைத்த அணியில்லை.


குறிப்பாக சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜபுலானி பந்துகளைக் கொண்டும் சிறப்பான ஃப்ரீ கிக்குகள் அடித்த ஒரே நாடு ஜப்பான்தான்.

ஆட்டம் முதலில் மந்தமாகத்தான் இருந்தது. முதல் 20 நிமிடங்களுக்கு இரு அணியின் கோல்கீப்பர்களும் ஈயோட்டிக் கொண்டிருந்தனர். பாரகுவே பந்தை வசப்படுத்துவதில் வெற்றி பெற்றாலும் கோல் அடிப்பதற்கான களன்களை அமைக்க முடியாமல் தவித்தது.

20-வது நிமிடத்தில் லுகாஸ் பாரியோஸ் ஜப்பானிய தடுப்பாளர்களை ஏய்த்தும் பந்தை நேராக கோல்கீப்பரிடம் அடித்ததால் முயற்சி வீணானது. உடனேயே ஜப்பானின் counter attack-ல் Matsui-ன் லாங் ரேஞ்ச் முயற்சி கோல் போஸ்டில் பட்டு கோலாகாமல் போனது.

அதன் பின்னும் ஓரிரு வாய்ப்புகள் இரு அணிகளுக்கும் வாய்த்த போது கோல் ஏதும் விழவில்லை. ஜப்பானின் முக்கிய வீரர் ஹொண்டா தீவிரமாய் கட்டம் கட்டப்பட்டுருந்தார். ஆட்டம் சுரத்தேயில்லாமல் இரண்டாம் பாதி, extra time-ன் இரு பாதிகள் என்று நகர்ந்து goalless-ஆக முடிந்ததால் வெற்றியை நிர்ணயிக்க பெனல்டி ஷூட் அவுட் தேவை பட்டது. இரண்டாம் சுற்றின் எட்டு ஆட்டங்களில் பெனல்டிக்குப் போன ஒரே ஆட்டம் இதுதான்.

முதலில் பாரகுவே கோலடித்துத் துவங்கி வைக்க ஜப்பானும் தொடர்ந்தது. 3-2 என்று பாரகுவே முன்னிலையில் இருந்த நிலையில் ஜப்பானின் கமானோ பெனல்டியை அடிக்க வந்தார். கோல் கீப்பரின் கைக்கு எட்டா தூரத்தில் பந்தை செலுத்திய போதும் பந்து கோலுக்குள் செல்லாமல் போஸ்டில் பட்டு வெளியேறியது. பெனல்டியிலும் ஃப்ரீ கிக்கிலும் சிறந்து விளங்கிய ஜப்பானுக்கு அதிர்ஷ்டமில்லை. அடுத்து அடித்த இரு பாரகுவே வீரர்கள் கோல் அடித்ததால் 5-3 என்ற நிலையில் கடைசி கிக் அடிப்பதற்கு முன்னதாகவே ஆட்டம் நிறைவு பெற்றது. ஜப்பான் கோல்கீப்பர் கண்ணில் கண்ணீருடன் உண்மையை உள் வாங்கப் போராடிக் கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம் பாரகுவேயின் கோச் மார்டினோவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். பொதுவாக ஆட்டக்காரர்களை விட emotionally stable ஆட்களாகத்தான் பயிற்சியாளர்கள் இருப்பர். மார்டினோ அதற்கு விதிவிலக்கு. இது வரை எந்த பாரகுவே அணியும் செய்யாத சாதனையை இந்த அணி செய்துள்ளது.

கால் இறுதியில் உள்ள எட்டு அணிகளில் 4 தென்னமெரிக்க அணிகள். என்னதான் ஐரோப்பாவில் காசை தண்ணியாய் செலவழித்து கால்பந்தை வளர்த்தாலும் தென்னமெரிக்க வீரர்களின் ரேஞ்சே தனிதான்.

இரண்டாம் சுற்றின் கடைசி ஆட்டத்தின் இரு பெரும் அணிகள் மோதின.

2008 ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயினும் பல நல்ல ஆட்டக்காரர்களைக் கொண்ட போர்ச்சுகலும் கால் இறுதியில் நுழைய மோதின.

முந்தைய ஆட்டத்துக்கு நேர்மாறாக ஆட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே சரவெடிகள் சிதறத் தொடங்கின.

2-வது நிமிடத்தில் ஃபெர்னாண்டோ டொர்ரெஸின் முயற்சியை போர்ச்சுகல் கீப்பர் எடுவர்டோவின் அபாரமான காத்தார். அதன் பின் எண்ணற்ற காப்புகளை செய்யப் போகிறோம் என்று அவர் அக் கணத்தில் உணர்ந்திருக்க மாட்டார்.

முதல் பாதியில் இரு அணிகளும் சிறப்பாக ஆடின. பிரேசிலுடனான ஆட்டத்தில் மாற்றாக வந்து கலக்கிய சிமாவ், இந்த ஆட்டத்தில் துவக்கத்திலிருந்தே களத்தில் கலக்கினார். ஸ்பெயின் சிலீயை வென்ற அணியை மாற்றாமல் களமிறங்கியிருந்தது.

டொர்ரெஸைத் தொடர்ந்து டேவிட் வியாவும் (ஆங்கில ஸ்பெல்லிங்கைப் பார்த்து வில்லா பங்களா என்றெல்லாம் சொல்லக் கூடாதாம். Villa என்று எழுதினாலும் அவர் பேர் வியாவாம்.) கோல் கீப்பரை சோதித்தார்.

ஸ்பெயினின் ஒவ்வொரு அசைவுக்கும் பதிலடி கொடுத்தபடி போர்ச்சுகலும் விளையாடியது.

30 மீட்டர் தொலைவில் இருந்து டியாகோ முழு வீச்சுடன் அடித்த பந்து ஸ்பெயின் கீப்பர் கஸியஸ் கையிலிருந்து நழுவியது. அவர் செய்த புண்ணியம் கோலாகவில்லை. ஆகியிருந்தால் மீண்டும் அவரும் அவர் கேர்ள் ஃபிரண்டும் போர்ச்சுகலுக்கு குடி பெயர வேண்டியிருந்திருக்கும்:-)

கிளப்பில் அதிகளவு பணம் வாங்கும் போர்ச்சுகல் வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோவும், ஸ்பெயினின் ஃபெர்னாண்டோ டொரெஸும் பெரும்பாலும் அடக்கமாகவே ஆடி ரசிகர்களை ஏமாற்றினர்.

ரொனால்டோவின் ஒரு லாங் ரேஞ்ச் ஃப்ரீ கிக் மட்டுமே அவரது திறனுக்கு நியாயம் செய்யும் விதமாய் விளங்கியது. ஸ்பெயினுக்காக 51-வது முறையாய் காப்டனாய் களமிறங்கி சாதனை புரிந்த கோல்கீப்பர் காஸியஸ் சில பதட்டமான கணங்களை ஸ்பெயின் ரசிகர்களுக்குக் கொடுத்தாலும், ஒருவாறு சமாளித்துவிட்டார்.

இரண்டாம் பாதியிலும் சம நிலை தொடர்ந்த போது, டொர்ரெஸுக்கு பதிலாக லொரெண்ட் (Llorente) களமிறங்கினார். பார்சிலோனா கிளப்பின் ஆட்டங்களில் காணக்கிடைக்கும் துல்லியமான ஷர்ட் பாஸிங் மூலம் பந்தை அதிக நேரம் வசப்படுத்தி வந்தது ஸ்பெயின்.

60-வது நிமிடத்தில் லொரெண்டின் ஹெட்டர் கீப்பரிடம் நேராக சென்றது. அடுத்த நிமிடமே வியாவின் curling shot போஸ்டில் பட்டது. ஆட்டத்தின் momentum ஸ்பெய்ன் பக்கம் திரும்பியது. 63-வது நிமிடத்தில் இனியெஸ்டாவிடமிருந்து வந்த பந்தை பெனல்டி பெட்டிக்குள் இருந்து பேக் ஹீல் மூலம் வியாவிடம் திருப்பினார் Xavi. வியாவின் ஷாட்டை எடுவர்டோ தடுத்தாலும் பந்து திரும்ப வியாவிடமே வந்தது. முதல் முறை இடக்காலால் உதைத்தவர், இம்முறை கால் மாற்றி வலக்காலால் பந்தை கோல்கீப்பருக்கு மேலடித்து 1-0 ஆக்கினார்.

வியாவின் 4-வது கோல் மூலம் அர்ஜெண்டினாவின் ஹிகுயென், ஸ்லோவாகியாவின் விட்டக்குடன் அதிக கோலடித்தவராக இணைந்துகொண்டார். எடுவர்டோவின் சாகசங்கள் இல்லையெனில் இப் பட்டியலில் முதல் இடத்தில் தனி ஆளாய் கூட இடம் பெற்றிருப்பார் வியா.

இந்த ஆட்டத்தில் ஸ்பெயின்10 shots on target அடித்தது என்ற விவரத்தைப் பார்க்கும் போதே அவர்கள் போர்ச்சுகலுக்கு ஏற்படுத்திய நெருக்கடியை உணர்ந்திடலாம்.

கோலுக்கு பின் போர்ச்சுகலின் எதிர்ப்பு முற்றிலும் தகர்ந்தது. பந்து பெரும்பாலும் ஸ்பெயின் வசமே இருக்க போர்ச்சுகல் வீரர்கள் எரிச்சலுற்றவர்களாய் தெரிந்தார்கள். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல, ஆட்ட இறுதிக்கு சில நிமிடங்கள் முன் முழங்கையால் இடித்து ஸ்பெயின் வீரரை வீழ்த்தியதால் ரிகார்டோ கோஸ்டா வெளியனுப்பப்பட்டார்.

போட்டியை தோல்வியுடன் தொடங்கிய ஸ்பெயின் ஒரு வழியாய் யூரோ சாம்பியன்கள் எப்படி ஆடுவார்கள் என்று எதிர்பார்ப்போமோ அப்படி ஆட ஆரம்பித்துவிட்டனர். பிரேசில், அர்ஜெண்டினாவோடு ஸ்பெயினும் உலகக் கோப்பையை வெல்லக் கூடிய favorite அணியாக விளங்குகிறது.

கடைசி எட்டு அணிகளில் இனி எந்த அணி வேண்டுமானால் ஜெயிக்கலாம். ஆட்டத்தின் போது சிறு பிழையோ, கோச்சின் களனமைப்பில் ஏற்படும் கவனக் குறைவோ அணியின் வெளியேற்றத்துக்குக் காரணமாகிவிடலாம். சிலர் வெல்வர். சிலர் வீழ்வர். எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும். முகம் தெரியாதவர்கள் கதாநாயகர்கள் ஆகக் கூடும்.

இந்தியா மாதிரி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத நாட்டில் இருப்பவர்களுக்கு எந்த டென்ஷனும் இல்லை. எவன் ஜெயித்தாலும் சந்தோஷப்படலாம். நல்ல ஆட்டம் எவர் ஆடினாலும் ரசிக்கலாம். இதைவிட வேறு என்ன கொடுப்பினை வேண்டும்?;-)

லலிதா ராம்

http://cricketthavira.wordpress.com/

3 Comments:

Tamilvanan said...

//இந்தியா மாதிரி உலகக் கோப்பைக்கு தகுதி பெறாத நாட்டில் இருப்பவர்களுக்கு எந்த டென்ஷனும் இல்லை. எவன் ஜெயித்தாலும் சந்தோஷப்படலாம். நல்ல ஆட்டம் எவர் ஆடினாலும் ரசிக்கலாம். இதைவிட வேறு என்ன கொடுப்பினை வேண்டும்//
நாங்க‌ள் ம‌லேசிய‌ர்க‌ளும் சேர்ந்து கொள்கிறோம். 80க‌ளில் கொரியாவுட‌னும்,ஜ‌ப்பானுட‌னும் ச‌ம‌ நிக‌ரில் ஆடிய‌து ம‌லேசிய‌ அணி. அர‌சிய‌லும் இன‌க் கொள்கைக‌ளும் காற்ப‌ந்து துறையையும் கெடுத்து விட்ட‌ன‌.

மஞ்சள் ஜட்டி said...

//ஆங்கில ஸ்பெல்லிங்கைப் பார்த்து வில்லா பங்களா என்றெல்லாம் சொல்லக் கூடாதாம். Villa என்று எழுதினாலும் அவர் பேர் வியாவாம்.//

இந்த அப்ப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

Thomas Ruban said...

நல்ல அருமையான விமர்சனம் நன்றி சார் தொடருங்கள்...