பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 02, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 2-7-2010


திரும்பவும் முனி கடிதம் ...


வணக்கம் இட்லிவடை,

உன் மனநிலை எப்படி என்று எனக்கு தெரியலை ஆனால் செம்மொழி மாநாடு நடந்த பின் பின் பத்ரி சார் 'நோய்க்கூறு மனநிலை' என்று புலம்பித் தள்ளியுள்ளார். புத்தகக் கண்காட்சியில் புத்தகப் பட்டியலில் ஆரம்பித்து தமிழ் நாட்டில் இலவசம் என்றால் கவுண்டமணி சொல்லும் வசனம் தான் நினைவு வரும். போன இடத்தில் சுருட்டிக்கொண்டு போவது என்பது எல்லோரிடம் இருக்கும் மனநிலை. இப்ப வலைப்பதிவை எடுத்துக்கொள்ளேன். வலைமனை இலவசம் என்று சொல்லுவதால் எழுத வருதோ இல்லையோ எல்லோரும் ஆரம்பித்துவிடுகிறார்கள். படிக்கிறார்களோ இல்லையோ 'நல்ல பதிவு நன்றி..." என்று போடுகிறார்கள். இதே காசு கொடுத்தால் தான் வலைப்பதிவு, காசு கொடுத்தால் தான் கமெண்ட் என்று வைத்தால் ஒரு பய சீண்ட மாட்டான். இலவசம் என்ற பெயரில் கொஞ்சம் நல்லா குறுக்கெழுத்து எல்லாம் போட்டவர் இப்பல்லாம் முழு நேரமும் ட்விட்டரில் காலம் தள்ள ஆரம்பிச்சுட்டார். டிவிட்டர்ல கூட காசு குடுத்தாதான் அக்செஸ் என்று வைத்தால், நான் இங்க நிக்கறேன், அங்க நடக்கறேன், இப்போ உச்சாப் போறேன் என்றெல்லாம் செம்மொழியில் எழுதித்த்தள்ள மாட்டார்கள். சரி, முக்கியமா உனக்கு ஒரு அட்வைஸ். அடுத்த முறை இந்த மாதிரி மாநாட்டுக்குப் போகும் போது இரண்டு ஜட்டி அல்லது முடிந்தால் மூன்று போட்டுக்கொண்டு போக சிபாரிசு செய்கிறேன். ஒன்று பாதுகாப்புக்கு ஒன்று தானத்துக்கு.

இது கூடப் பரவாயில்லை, செம்மொழி மாநாட்டுக்கு 20லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் ஸ்டாக் வைக்க உத்தரவு போட்டிருக்கு தமிழக அரசு. அதைக் குடித்துவிட்டு நம்ம மக்கள் வேற என்ன செய்வார்கள்? இப்படி இடுப்பில் இருப்பதை தான் உருவுவார்கள். எப்படியோ, மாநாட்டுக்குச் செலவு செய்ததை அரசு இந்த மது விற்பனையில் எடுத்து இருக்கும்.

நான் இந்த மாநாடு நடக்கும் போது சுட்டி டிவியில் 'சூப்பர் Why' கார்ட்டூன் படம் பார்த்தேன். என்ன இருந்தாலும் நமக்கு ஆங்கிலம் தெரிந்தால் தான் பிழைக்க முடியும். அழகிரியோட நிலைமையை யோசித்து பாருங்க. செம்மொழி தமிழ் என்று சொல்லும் அரசியல் தலைவர்களே தங்கள் வீட்டில் கேக் வெட்டித்தான் கொண்டாடுகிறார்கள். இதற்கு மேலே ரொம்ப பேசினால் பழ.கருப்பையாவுக்கு நடந்தது தான் எனக்கு நடக்கும்.

பழ.கருப்பையா யார் என்று தெரியாதவர்களுக்கு, அங்காடி தெரு என்ற படத்தில் முதலாளியாக வருபவர். இவர் அதிமுக இலக்கிய குழுவிற்குத் தலைவர். சமீப காலமாக துக்ளகில் இரண்டு மூன்று பக்கம் எழுதித் தள்ளுகிறார். இவர் எழுதுவது எல்லாம் திமுகவிற்கு எதிராகத்தான் இருக்கும். தினமணியில் கருணாநிதி என்ன கடவுளா? என்று ஒரு கட்டுரை எழுதினார். அப்பவே வாங்குவார் என்று நினைத்தேன். கொஞ்சம் லேட். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சியை விமர்சித்து எழுதி அடிவாங்காமல் யாராவது இருந்திருக்கிறார்களா? அண்ணன் தம்பி, மாமன், மச்சான் என்று அடித்துக்கொள்ளுபவர்களுக்கு கருப்பையா எம்மாத்திரம்?

பல அடிதடி, கொலை என்று தமிழ்நாட்டு திராவிட வரலாற்றை புரட்டி பார்த்தாலே தெரியும். தா.கிருஷ்ணன் கொலை, ஆடிட்டருக்கு செருப்பு அடி, சேஷனை ஆள் வைத்து அடித்தது, சன் டிவியில் வேலை பார்த்த சரத் கலைஞர் டிவிக்கு தாவி பின் குடும்பம் ஒன்று சேர்ந்த பிறகு சில பகுதிகள் ஃபிராக்சர் ஆகியது. சந்திரலேகா திராவகம், கல்லூரி மாணவர்களுடன் பஸ் எரிப்பு, தினகரன் அலுவலகம் எரிப்பு என்று பெரிய லிஸ்ட்டே இருக்கு. இந்த அழகில் உலகநாகரிகத்துக்கு அடிப்படை திராவிட நாகரிகம் என்ற பேச்சு! எங்கே போய் முட்டிக்கொள்ளுவது?

எது நடந்தாலும் நம் வலைப்பதிவு அறிவுஜீவிகள் அதைக் கண்டிக்கிறேன் பேர்வழி என்று அந்த ஆட்சியில் இப்படி நடந்தது, இந்த ஆட்சியில் இப்படி நடந்தது என்று எழுதித் தள்ளுவார்கள். தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று பெரியார் சொன்னது எவ்வளவு பொருந்தும்? பெரியார் பெரிய ஞாநி என்று நினைக்கிறேன்.

ஞாநி சில மாதங்களுக்கு முன்பு திமுக ஆட்சியையும் கலைஞரையும் ஓ-பக்கங்களில் போட்டுத் தாக்கிக்கொண்டு இருந்தார். நடுவில் குமுதம் எம்.டி கைது என்று புகைந்து கலைஞர் தலைமையில் ஏதோ மத்தியஸ்தம் நடந்தது. அதற்கு பிறகு ஞாநி உருளைகிழங்கு, கோஸ், தக்காளி என்று எழுத ஆரம்பித்துவிட்டார். பேசாம இவரையும் Google Knolக்கு எழுத சொல்லிவிடலாம் என்று நினைக்கிறேன். அப்டி எழுதினா மாமிக்கும் போட்டிக்கு ஒரு ஆள் வந்த மாதிரி ஆச்சு. கடந்த சில வாரங்களாக ஞாநி அமெரிக்கா பயணத்தில் இருக்கிறார். இன்று வாசகர்களுடன் கேள்வி பதில், கலந்துரையாடல் என்று கலக்குகிறார். சில மாதங்களுக்கு முன்பு ஞாநிக்கு நித்தியானந்தா சம்பவம் நடந்த போது ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு பதில் சொல்லுவாரா என்று அமெரிக்க வாசகர்கள் யாராவது கேட்டுச் சொல்லுங்க. ஈமெயிலில் அனுப்பிய கடிததுக்கே பதில் இல்லை, நேரில் கேட்டா சொல்லவா போகிறார் ? எல்லோரும் மாறிவிட்டார்கள் என்ன செய்ய !

போக போக மாற வெண்டியவர்கள் இருவர் - ஒன்று சின்மயி, இன்னொருவர் கல்கியின் பொறுப்பாசிரியர் :-)

போட்டிக்குப் புள்ளப் பெறுவது மாதிரி, சங்கீத மஹாயுத்தம் என்று ஒரு போட்டி சன் டிவியில் புதுசா ஆரம்பிச்சு இருக்காங்க. நிகழ்ச்சியைக் கத்திக்கொண்டே வழங்குபவர் சின்மயி. அம்மணிக்கு டச் விட்டு போய்விட்டது என்று நினைக்கிறேன். இவருக்கு யாராவது டிரெயினிங் கொடுத்தால் நல்லா இருக்கும்.
ஆர்.வெங்கடேஷ் கல்கியின் பொறுப்பாசிரியராக சேர்ந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். இந்தக் கல்கி ஏனோ அவர் முன்பு தயாரித்த கல்கி மாதிரியே இருந்தது. போகப் போக மாறும் என்று நம்பலாம்.

போனவர்கள் திரும்ப வந்த கதைகள் அரசியலில் அடிப்படை உரிமை. அந்த அடிப்படையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் திரும்பவும் பாஜகவில் சேர்ந்துள்ளார். ஜின்னா பற்றி புத்தகம் எழுதி அதைப் பிரபலப்படுத்தி எல்லோரையும் வாங்க வைத்துவிட்டுத் திரும்புயுள்ளார்.

”ராம் ரத யாத்திரையை” நடத்த வேண்டாம் என்று சொல்லி அதற்கு எதிராக ஓட்டளித்தேன். அதற்குப் பின் நிகழ்ந்த விபரீதங்களுக்கு அத்வானியே முழுப் பொறுப்பு. கோத்ரா சம்பவங்களுக்குப் பிறகு அதனை வாஜ்பாயுடன் சேர்ந்து கண்டித்தவர்களில் நானும் ஒருவன். மோதியையும் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தினேன். காந்தஹார் விமான கடத்தலின் போது நிகழ்ந்த தோல்விக்கு அத்வானியே காரணம் என்ற இவர் சொன்னது எல்லாம் உண்மையா? அப்படி இருந்தால் ஏன் இவர் திரும்பவும் பிஜேபியில் சேர்ந்தார். இவரை எப்படி திரும்பவும் கட்டித்தழுவி பிஜேபி ஏற்றுக்கொண்டது போன்ற கேள்விகளுக்கு அரசியலில் விடை கிடைக்காது. கிடைக்கும் ஒரே விடை "இதெல்லாம் அரசியலில்... ". மொத்தத்தில் பாஜகவிற்கு வெட்கம் மானம் சூடு சுரணை எல்லாம் ரொம்ப நாளைக்கு முன்பே போய்விட்டது.

தீவிரவாதிகளை அழிக்க வேண்டும் என்று ஒரு புறம் ஓயாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் தங்களது அமைப்பை பலப்படுத்தும் நோக்கத்துடன், "Inspire" என்ற பெயரில் அல்-கய்தா இயக்கம் முதன் முறையாக ஒரு ஆங்கில இணைய செய்தித்தாளைத் துவங்கவிருக்கிறதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த இணைய செய்தித்தாளை நிர்வகிக்கும் பொறுப்பு யேமன் நாட்டைச் சேர்ந்த அல்-கய்தா இயக்கத்துடையதாம்.

அடிப்படை உரிமை என்று நாம் அடிக்கடி ஒரு பிரயோகம் கேள்விப்பட்டிருப்போம். இந்தியாவில் அவ்வாறு நிறைய இருக்கின்றன, ஆனால அவற்றைப் பயன்படுத்த முற்பட்டால் ஆட்டோ வருவது நிச்சயம். பின்லாந்து நாட்டில் வித்யாசமான அடிப்படை உரிமை நேற்றிலிருந்து அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது அகண்ட அலைவரிசை (Broadband) இணையப் பயன்பாடு அனைத்து பின்லாந்து குடிமக்களின் அடிப்படை உரிமை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இனி ஒவ்வொரு பின்லாந்து குடிமகனு(ளு)க்கும் குறைந்தபட்சம் 1 Mbps அகண்ட அலைவரிசை இணைப்புப் பெறுவது அடிப்படை உரிமையாம். இம்மாதிரியான ஒரு அடிப்படை உரிமையை முதன்முறையாக தனது மக்களுக்கு அளித்திருக்கும் பெருமையையும் பின்லாந்து இதன்மூலம் பெற்றிருக்கிறது.

இந்தியாவிலுள்ள நூற்றியிருபது கோடி மக்களுக்கும் உணவளிக்கும் பொறுப்பிலிருப்பவர், என்று ஷரத் பவார் பற்றி முன்னாள் ஐசிசி தலைவர் மால்கம் ஸ்பீட் குறிப்பிட்டுள்ளார். அதாவது அவர் விவசாயத்துறை அமைச்சராம். இதைக் கேட்டால் ஷரத் பவாருக்கே சிரிப்பு வரும். நேற்று அகில உலக கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் பொறுப்பை ஷரத் பவார் ஏற்றுக் கொண்டுள்ளார். இதில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹோவர்டின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும்போதுதான் மால்கம் ஸ்பீட் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். சர்க்கரை விலையேற்றம் பற்றிக் கேட்டால், இவ்விலையேற்றம் சர்க்கரை வியாதியைக் குறைக்கும் என்று முத்தை உதிர்த்தவர் ஷரத் பவார். இவர் நூற்றியிருபது கோடிப் பேருக்கு உணவளிக்கிறாராம். நமக்கு உடனடித் தேவை நல்ல கருங்கல் சுவர். இவருக்கு ஓட்டுப் போட்ட பாவத்துக்கு அங்கே போய்தான் தலையை முட்டிக்கொள்ள வேண்டும்.

இப்படிக்கு,
இரண்டு ஜட்டி போட்ட
முனி


எழுதாமல் மறந்துபோய்விட்ட பகுதி: பிரசன்னா எழுதிய இந்த கட்டுரையை பார்த்துவிட்டு சாரு அவர் பதிவில் தமிழ் ஹிந்துவிற்கு லிங்க் தந்துள்ளார். நித்தியாவை போல தமிழ் ஹிந்துவிற்கு வருங்காலம் பிரகாசமாக இருக்கும் என்று நம்புவோம்!

13 Comments:

ஜோதிஜி said...

அண்ணே இட்லி வடையை சாம்பாரில கலந்துஅடித்த திருப்தி.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//மொத்தத்தில் பாஜகவிற்கு வெட்கம் மானம் சூடு சுரணை எல்லாம் ரொம்ப நாளைக்கு முன்பே போய்விட்டது.//

உண்மைதான். மாயாவதியை முதல்வராக்கி பட்ட சூடு தெரிந்தும் கர்நாடகாவில் தேவே கௌடா மகனை முதல்வராக்கி கெட்டார்கள்......போதாக்குறைக்கு சிபு சோரனை முதல்வராக்கி..............வாழ்க பா.ஜ.க.வின் கொள்கைகள்!

Thomas Ruban said...

இந்த பதிவில் நிறைய விசியங்களை
மிகவும் ரசித்தேன் சூப்பர்....

பகிர்வுக்கு நன்றி...

R. Jagannathan said...

சரத் பவார் விஷயத்தில் ஒரு சிரு தவறு. பவார் ஐஸிஸி யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் ஹோவார்ட் அஸிஸ்டன்ட் ப்ரெசிடென்ட் போஸ்ட்டுக்கு முயற்சிக்கிறார். யுத்தம் இன்னும் முடியவில்லை. ஆஸி, ந்யூஸீலாண்டு, யூகே சேர்ந்து மற்ற உறுப்பினர்கள் செய்வது ரேஸிஸ்ம் என்று அலறுகிறார்கள்! - ஜகன்னாதன்

Anonymous said...

ஐசிசி - சரத் பவார் - முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் குறித்து எழுதியிருப்பதில் சில தவறுகள். ஐசிசியின் துணைத் தலைவராக ஏற்கனவே பவார் இருந்தார். தலைவர் பதவிக்காலம் முடிந்ததும் துணைத் தலைவர் அந்த பதவியை ஏற்றுக் கொள்வது ஐசிசியின் மரபு.

அது போலவே பவார் இப்போது தலைவராகியுள்ளார். துணைத் தலைவருக்குத்தான் தேர்தல் நடக்கும். ஹோவர்ட் துணைத்தலைவர் பதவிக்குத்தான் போட்டியிட்டார். இந்தியா முதலான ஏழு நாடுகள் இவருக்கு எதிராக இருக்கின்றன. இந்த தேர்தலில் ஹோவர்ட் வெற்றி பெற்றிருந்தால், 2012-ம் ஆண்டு பவார் பதவிக் காலம் முடிந்ததும் ஹோவர்ட் அடுத்த தலைவராக ஆகியிருப்பார்.

ஐசிசியின் மால்கம் ஸ்பீட் சொன்ன கமெண்ட், பவார் துணைத் தலைவர் பதவிக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு போட்டியிட்டபோது சொன்னது.

நன்றி.

ஜோதிஜி said...

ஆஸ்திரேலியா பிரதமர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றதும் வெட்கம் மானம் சூடு சொரனை எல்லாம் போச்சுங்ற மாதிரி ஜான் ஹோவார்ட் பேசினதாக ஞாபகம். அதெல்லாம் சரி ஒரு விவசாய அமைச்சர் இந்த அளவிற்கு உள்ள கிடக்ற வேலையைவிட்டுட்டு இப்படி கோணவாய வச்சுகிட்டு சேவை செய்ய அலையுறரே எப்படிங்க இவரால மட்டும் அத்தனையும் தாண்டி மேல வரமுடியுது?
பயபுள்ள சில விசயங்கள்ல மட்டும் இத்தனை உசரா இருக்காரு? அது பத்தி கொஞ்சம் எழுதுங்களேன்.......

இலவசக்கொத்தனார் said...

அண்ணா,

இலவசமுன்னு என்னை வேற இழுத்து விட்டுட்டீங்க. பத்ரி, என்னைக் காய்ச்ச போறாரு! :))

யாரு கண்ணு பட்டுதோ நான் ட்விட்டரிலும் கூட அதிகம் இல்லைங்கண்ணா.

ஞாநி மேட்டர் என்னன்னு ஒரு மெயில் தட்டி விடுங்கண்ணா, நான் கேள்வியைக் கேட்கறேன்.

ஜகந்நாதன் அண்ணா அனானி அண்ணா எல்லாரும் சொல்லிட்டாங்க. ஜான் ஹோவார்ட் சரத் பவாரோட போட்டி இடலை. ஆனா அவங்க சொன்ன மாதிரி துணைத் தலைவருக்குக் கூட போட்டி கிடையாது.

இந்த தபா நீ அடுத்த தபா அவன் அப்படின்னு மொறவாசலுங்கண்ணா அது. ஒரு குடும்பத்துக்கு மொறவாசல் வந்தா யாரை வேணா அனுப்புவாங்க. மத்தவங்க ஒண்ணும் சொல்லாம ஓக்கே சொல்லுவாங்க.

இந்த முறை ஆஸி/ நியூசி மொற. அவங்க இவரை அனுப்ப, இவரைப் பிடிக்காதவங்க எல்லாம் கொடி பிடிச்சுக் கவுத்துட்டாங்கண்ணா.

மீண்டும் ஆஸி / நியூசி கலந்து பேசி வேற ஒருத்தரை அனுப்புவாங்கண்ணா.

வரேனுங்கண்ணா.

Anonymous said...

give me Opakkangal Ganani is email

பார்வையாளன் said...

"ஆனால் செம்மொழி மாநாடு நடந்த பின் பின் பத்ரி சார் 'நோய்க்கூறு மனநிலை' என்று புலம்பித் தள்ளியுள்ளார்"

செம்மொழி மாநாட்டு வருமானத்துக்கு நன்றி காட்டும் விதமாக, பத்திரிகைகள் அனைத்தும் பழ. கருப்பையா மீதான தாக்குதலை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டன.. இது ஆராக்கியமான மனநிலையா ? இதுதான் உண்மையான நோய் கூறு மனநிலை

ramanindia25@gmail.com said...

'நல்ல பதிவு நன்றி.. நன்றி..."(!!!)

ஆனந்த விகடன், பா ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்றதும் கண்டிருக்கும் மாற்றம் போல (தோற்றம் மற்றும் நல்ல வியாபார வெற்றிக்கான வழிகள் கண்டது போல) கல்கியும் பெறட்டும்!!

(Repeat-But Edited)
ஏனோ திடீரென்று இந்த விஷயம் நினைவுக்கு வந்தது!! சில ஆண்டுகளுக்கு முன்பு நமது முதல் PSLV ராக்கெட் ஏவப்படுவதற்கு ஆன செலவு இம் மாநாட்டுக்கு ஆனதை விட குறைவு!இந்த ராக்கெட்projectதோல்வி அடைந்தாலும் technically big success!...பயன்கள்:நமது தேசத்தின் மிக மிகப்பெரிய சாதனையானது.. ..மற்ற பெரிய நாடுகள் நம் நாட்டை பார்த்து மூக்கில் விரல் வைத்தன..உள் நாட்டு தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் மீது இளைஞர்களுக்கு மரியாதையும் நம்பிக்கையும் வந்தது ..etc etc.

செம்மொழி மாநாட்டின் பயன் பற்றி எல்லோரும் அறிந்ததே!!
(பழ கருப்பையா தாங்குவார்.. நான் ரொம்ப சிறு பையா!! )
ஆனாலும் ஒரு பயனாவது சொல்லுவோம் ----

தலைவா!!
எந்நாளும் உன் ஆசை முகஸ்துதி !! அதனால்
மாநாட்டின் பிரதி பொழுதும் மு.க.துதி!

ரிஷபன்Meena said...

முனியின் செம்மொழி கடிதம் அருமை.

சரத்பவார் பொதுவாழ்வில் இருந்து விலகி இருக்கலாம். உடல்நிலை ஒத்துழைக்காவிட்டால் ஓய்வு பெறமால் ஏன் தான் இப்படி அடம்பிடித்துக் கொண்டு பதவிகளில் தொங்குகிறார்களோ தெரியவில்லை.

கொத்தனார், பின்னூட்டத்தில் இத்தனை ”அண்ணா” வா
விஜய் படம் பார்த்த இப்படிதான் ஆகும்

rk guru said...

///திராவிடக் கட்சியை விமர்சித்து எழுதி அடிவாங்காமல் யாராவது இருந்திருக்கிறார்களா? அண்ணன் தம்பி, மாமன், மச்சான் என்று அடித்துக்கொள்ளுபவர்களுக்கு கருப்பையா எம்மாத்திரம்?///

பார்த்துங்க கருப்பையா அடுத்து நீங்களா இருக்கபோறிங்க...

Anonymous said...

‘‘செம்மொழி மாநாட்டு அழைப்பிதழ்களை கலைஞர் குடும்பத்து குலதெய்வமான திருக்குவளை பரமேஸ்வரி கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டிருக்கிறது. அந்த அழைப்பிதழ்களை கொண்டு வந்து கொடுத்த ஆறு பூசாரிகளுக்கும் தனது கையாலே, தலா மூன்றாயிரம் ரொக்கத்தையும் பட்டு வேஷ்டியையும் தந்திருக்கிறாராம் கலைஞர். இதை சொல்லிச் சொல்லி பூரித்துக் கொண்டிருக்கிறார்களாம் அந்த பூசாரிகள்’’

Source: http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1409&rid=73