பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 23, 2010

மூளைக்கு வேலை டாப் 6.5

அமெரிக்க விஞ்ஞானிகள் நம்மூர் விஞ்ஞானிகள் போல் சும்மாவே இருப்பதில்லை. கலிபோர்னியா பல்கலையின் நரம்பியல் துறை விஞ்ஞானிகளின் சமீபத்திய கண்டுபிடிப்பை “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர். அதாவது ஒருவரது மூளையை ஸ்கேன் செய்து அவர்களது எதிர்காலத் திட்டங்களைக் கண்டுபிடிக்க இயலுமாம். இதை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால், குறிப்பாக தமிழ் நாட்டில் ? சில மூளைகளை பார்சல் செய்து அனுப்பினோம். அனுப்பிய இரண்டு மணி நேரத்தில் கிடைத்த ரிசல்ட் கீழே. மூளைக்கு வேலை என்று தலைப்பு இருந்தாலும் அது இருந்தாலும் தேவைப்படாது என்பது இந்த பதிவின் சிறப்பு.

1. முதல் மூளையை ஸ்கேனிங் செய்த போது மிஷினில் ஒரே கை தட்டல் சத்தமாக கேட்டுக்கொண்டே இருந்தது. அவ்வப்போது சுருதி சேராமல் ஜால்ரா சத்தமும் கேட்டது. நல்ல வேளை டாக்டர்கள் குழுவில் தமிழ் நாட்டு டாக்டர் இருந்தால் அதற்கான காரணம் உடனே தெரிந்தது. அடிக்கடி பாராட்டு விழாவுக்கு போனதால் கைதட்டல் ஓசை பலமாக பதிவு செய்ததால் இது மாதிரி என்று விளக்கம் கொடுத்தார். ஆட்சி அமைத்தபின் அவ்வப்போது "பலரும்" கலைஞரை மீட் பண்ணி பேசியதால் வந்த ஃஎ பெக்ட்தான் இரண்டாவது சத்தம் என்றும் எடுத்தியம்பினார். திடீர் என்று அ-அமைச்சர், ஆ-ஆட்சி, இ-இலவசம் உ-உண்டி, என்ற முதல் வார்த்தைகளுடன் செம்மொழிக் கவிதைகள் வர ஆரம்பித்த போது டாக்டர்கள் குழம்பி போய் முதல் வார்த்தைகளை மட்டும் புரிந்துகொண்டு அதிலிருந்து கொஞ்சம் செம்மொழி கற்றுக்கொண்டார்கள். இன்னும் கொஞ்சம் ஸ்கேன் செய்த போது "நான் மாநாடு முடிந்த பின் ஓய்வு பெற போகிறேன்" என்றும் "நான் எப்ப அப்படி சொன்னேன்?" என்ற பதிலும் மாறி மாறி வந்துக்கொண்டே இருந்ததைப் பார்த்துக் கணக்கு தெரிந்த விஞ்ஞானி ஒருவர் கலைஞரின் infinity theory ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனார். திடீர் என்று வாலி, வைரமுத்து என்று வர தொடங்கி "“Scanning operation aborted. invalid command!!" என்று திரையில் தோன்றி, ஸ்கேனிங் மிஷினிலிருந்து புகை வரத் தொடங்கியதால், இம்முயற்சி பாதியில் என்று கைவிடப் பட்டது. ஸ்கேன் மிஷினில் ஏதோ ஒளி கதிர்கள் அனுப்பும் ஸ்பெக்டரம் கருவியில் ஏதோ பிரச்சனை என்று தெரிந்துக்கொண்டார்கள்.

2. அடுத்ததாக வேறு ஒரு மிஷின் வாங்கி ஒருவரை ஸ்கேன் செய்த போது மாம்பலம், மயிலை, மந்தவெளி போன்ற இடங்களில் ஆர்பாட்டம் செய்யப் போவதாகத் தகவல்கள் கிடைத்தன. எல்லா ஆர்பாட்டத்துக்கும் நடுவில் கொடநாடு செல்வதற்குண்டான தேதிகளும், ரெடிமேட் அறிக்கைகளும் வந்த வண்ணம் இருந்தது. வாரத்துக்கு ஒரு முறை கட்சியிலிருந்து நீக்கப்படவிருப்போர் பட்டியலுமாக அதில் அடங்கும். கூட்டணி தொடர்பாக ஏதாவது தகவல் கிடைக்குமா என்று முயன்றபோது ஒன்றும் கிடைக்காமல் எங்கோ மூலையில் வை ஒரு இடத்திலும் கோ ஒரு இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டது. ராமதாஸ் முன்பு சொல்லிய அன்புத் தங்கை வசனங்கள் பாதி அழிந்த நிலையில் இருந்தது. டாக்டர்கள் எவ்வளவு முயன்றும் காங்கிரஸ், தேமுதிக என்ற வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் கடைசியில் “நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கடைசியில் ஏதோ வர டாக்டர்கள் அதுக்கு மேலே ரொம்ப தேடினால் மிஷினில் புகை வரப் போகிறது என்று நிறுத்திக்கொண்டார்கள்.

3. அடுத்து வந்த மூளையை ஸ்கேன் செய்த போது "அன்பு(டன்)மணியும் இருக்கணுமே அமைச்சரா என்றும்/வம்புடன் பணமே குறி" என்று வெண்பாம் வந்தது. யார் யாரிடம் எப்ப காலில் விழ வேண்டும், எப்ப திட்டி அறிக்கை விட வேண்டும் என்ற தகவல்கள் இருந்தது. சினிமா நடிகர்கள் புகை பிடித்தால் என்ன அறிக்கை விட வேண்டும், ரஜினி படம் வந்தால் என்ன அறிக்கை விட வேண்டும் என்று சகல சினிமா விஷயங்களும் கூடவே வந்து மருத்துவரின் சினிமாப்பாசத்தைப் பறை சாற்றியது. இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்றைக் கடைசியில் கண்டுபிடித்தார்கள் விஞ்ஞானிகள். மூளையின் ஒரு பகுதியில் திமுக என்றும் மற்றொரு பகுதியில் அதிமுக என்றும் இருந்தது. ரொம்ப ஆராய்ந்ததில் இவரின் மூளையும் ஆக்டோபஸ் மூளையும் கிட்டதட்ட ஒன்றாக இருப்பது தெரிந்தது. பேசாமல் பாலுக்கு பதில் அடுத்த உலககோப்பைக்கு இவரை உபயோகிக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்கள். எந்தெந்த வருடம் யார் முதலமைச்சராக வருவார்கள் என்ற கணக்கும் இருந்தது. எல்லாவற்றையும் விட, அன்புமணியை ராஜ்யசபா மூலமாக அனுப்பி, பிரதமராக்க முடியுமா என்ற திட்டம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் ஸ்கேனிங் மிஷினே திணறியது.

4. இன்னொருவர் மூளையை ஸ்கேன் செய்த போது சினிமாவா, அரசியலா என்ற குழப்பமே இருந்தது. அட என்னங்கண்ணா இன்னுமா தெரியலை? ஸ்கேன் செய்த போது எதற்கு ராகுல் காந்தியை பார்த்தார் என்ன பேசினார் என்ற தகவல் எதுவும் இல்லை. ஆனால் அந்தத் தகவலுக்குப் பக்கத்தில் கல்யாண மண்டபம் பிரச்சனை ஒன்று இருந்தது. குருவி, வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா என்ற சில சொற்களைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் 35 சதவீத தொகையை திருப்பி தர வேண்டும் என்பதை தொடந்து 3 இடியட்ஸ் ‌‌ரீமேக் என்று வருவது யாரைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரியாமல் தவிக்கிறார்கள் விஞ்ஞானிகள். நடு நடுவில் என்னங்கண்ணா என்னங்கண்ணா என்று வருவது எதற்கு என்றும் அவர்களுக்குப் புரியவில்லை.

5. அடுத்த மூளையை ஸ்கேன் செய்த போது இது மனித மூளையா எந்திரனுடைய மூளையா என்று இயந்திரம் குழம்பியது. வெளியே சங்கரிடம் கன்சல்ட் செய்துவிட்டு விஞ்ஞானிகள் மேக்கப் போடாத மூளையைக் கண்டு பிடித்தார்கள். அதில் வழக்கம் போல இமய மலை, நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி, ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது போன்ற தெரிந்த தகவல்களை ஒதுக்கிவிட்டு பார்த்தால் இவருக்கு ஒரே ஒரு ஆசை தான் இருந்திருக்கிறது. உலக அழகியுடன் நடிப்பது என்ற ஆசை தான் அது. விஞ்ஞானிகள் இவர் அரசியலுக்கு வருவாரா என்று தேடித்தேடிப் பார்க்க கடைசியில் அந்த மெஷின் மொத்தமாகப் படுத்து பிறகு அதுவாகவே ரீபூட் ஆகியது.

6. நம்மைப் போல ஒருவன் என்று நினைத்து அடுத்த மூளையை ஸ்கேன் செய்த போது கடவுள் உபதேசம் ஒரு பக்கமும் கறுப்பாக மிருகத்தின் உபதேசம் ஒரு பக்கம் இருப்பதும் தெரிந்து விஞ்ஞானிகள் உஷார் ஆனார்கள். பல வசனங்கள் இருப்பது தெரிந்தாலும் எல்லாம் இரண்டு மூன்று முறை வந்தது. பக்கத்தில் இருந்த நம் தமிழ் விஞ்ஞானி இது எல்லாம் அவர் ஒத்திகை செய்தது என்று விளக்கம் கொடுத்தார். எல்லாவற்றையும் ஒத்திகை செய்துவிடுவார் போல என்று மற்றவர்கள் பேசிக்கொண்டார்கள். திடீர் திடீர் என்று சுத்தத் தமிழில் வார்த்தைகள் வந்து எரிச்சல் அடைய செய்தது. பெரியார் பெருமாள் என்று வந்ததாலும் குழம்பி போனார்கள். இவரே ஒரு பெரிய தசாவதார விஞ்ஞானி, அவரை எதற்கு ஸ்கேன் செய்ய வேண்டும் என்று நிறுத்திக்கொண்டார்கள்.

6.5 கடைசியாக ஒரு முளை பாக்கி இருக்க அதை நீயா நானா என்று போட்டிப் போட்டுக்கொண்டு விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்த போது சாரு நித்திய என்று வர அது யாருடைய மூளை என்று கண்டுபிடிக்க முடியமல் மனம் கொத்திப் பறவையை படித்தவர்களை போல திண்டாடினார்கள்.


இவர்களுக்கு எல்லாம் ஓகே. என்னை மாதிரி ஆளுங்களுக்கு என்ன பண்ணுவாங்க? ஸ்கேன் பண்ணா என்ன வரும்? யாராவது சொல்லுங்க. :-)10 Comments:

மானஸ்தன் said...

//இவர்களுக்கு எல்லாம் ஓகே. என்னை மாதிரி ஆளுங்களுக்கு என்ன பண்ணுவாங்க? ஸ்கேன் பண்ணா என்ன வரும்? யாராவது சொல்லுங்க. :-)//

ஊரறிஞ்ச விஷயத்தைக் கேட்டு வேற தெரிஞ்சுக்கணுமா? :>

bandhu said...

ஸ்கேன் பண்ணுவதற்கு மூளை வேண்டுமே, அதற்க்கு என்ன பண்ணுவீர்கள்?

Shiva Satish said...

உண்மையை உண்மையாக சொல்லி இருக்கிறது இட்லி வடை ..

சிவ சதீஸ்

கலாநேசன் said...

//மூளையின் ஒரு பகுதியில் திமுக என்றும் மற்றொரு பகுதியில் அதிமுக என்றும் இருந்தது. ரொம்ப ஆராய்ந்ததில் இவரின் மூளையும் ஆக்டோபஸ் மூளையும் கிட்டதட்ட ஒன்றாக இருப்பது தெரிந்தது. பேசாமல் பாலுக்கு பதில் அடுத்த உலககோப்பைக்கு இவரை உபயோகிக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்கள்.//

சூப்பர்.

நீச்சல்காரன் said...

ஸ்கேன் பண்ணிப் பார்த்தா ஒரே உளுந்தா இருக்குனு. ஆராய்ச்சியை மூடிவிட்டு வடை சாப்பிட வந்துருவாங்க

தர்ஷன் said...

ராமதாசைப் பற்றியது அருமை

kggouthaman said...

// ஒருவரது மூளையை ஸ்கேன் செய்து அவர்களது எதிர்காலத் திட்டங்களைக் கண்டுபிடிக்க இயலுமாம். ..//

ஓஹோ? இதுதான் பிரம்ம லிபி ரீடர் போலிருக்கு.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//இவர்களுக்கு எல்லாம் ஓகே. என்னை மாதிரி ஆளுங்களுக்கு என்ன பண்ணுவாங்க? ஸ்கேன் பண்ணா என்ன வரும்? யாராவது சொல்லுங்க.
//

முதல்ல இது யாரோட மூளைன்னு கண்டுபிடிக்கணுமே, அதைத் தான் ஆராய்ச்சி செய்து பாத்தாங்க. யதிராஜ்,லலிதா ராம்,ஜெய் ஹனுமான், ஹரன் பிரசன்னா என்று வெவ்வேறு பெயர்கள் தான் ஒலித்தன, ஒரு ஓரத்தில பெயர் சொல்ல விருப்பமில்லைனு (ஹிஹி.....நாமளும் ஒரு பதிவு எழுதியிருக்கொமில்ல! ) கேட்டதும் அந்த ஆராய்ச்சியை விட்டுட்டாங்க.

தனுசுராசி said...

செய்தி எல்லாம் நல்லா தான் இருக்குது. ஆனா வர வர மஞ்சள் கமெண்ட் மொக்கை ஆகிட்டே போகுது, சிங்கமுத்து இல்லாத வடிவேலு மாதிரி.

கொஞ்சம் டேமேஜை சரி பண்ணுங்க....

R.Gopi said...

//மானஸ்தன் said...
//இவர்களுக்கு எல்லாம் ஓகே. என்னை மாதிரி ஆளுங்களுக்கு என்ன பண்ணுவாங்க? ஸ்கேன் பண்ணா என்ன வரும்? யாராவது சொல்லுங்க. :-)//

ஊரறிஞ்ச விஷயத்தைக் கேட்டு வேற தெரிஞ்சுக்கணுமா? :>//

*******

அதானே........

அடடடடடாடாடாடா.......

என்னே உங்களின் மூளை ஆராய்ச்சி.