பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 29, 2010

நாக் அவுட் ரவுண்ட் - Day 1 & 2

முதல் சுற்றைக் கடந்து நாக் அவுட் ரவுண்டுக்கு 16 அணிகள் தேர்வு பெற்றன.

அவற்றிடையே, முதல் நாளின் முதல் போட்டியாக உருகுவேயை எதிர்த்து தென் கொரியா விளையாடியது.

இரு அணிகளும் நல்ல அணிகள் என்ற போதும், முதல் சுற்றில் உருகுவேயின் ஆட்டம் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பே அதிகம் என்று உணர்த்தியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியில் இறங்கின. லீ சுங் யங்கின் ஃப்ரீ கிக்கின் திக்கை உணராது கோல் கீப்பர் கல்லாய் சமைந்திருக்க, பந்து போஸ்டில் பட்டு கொரிய ரசிகர்களின் இதயத்தை உடைத்தது.
அதிர்ஷ்டத்தால் கிடைத்த சந்தோஷத்தை ஒரு கோல் மூலம் இரட்டிப்பாக்கிக் கொண்டனர் உருகுவேயினர். உருகுவேயில் முக்கிய வீரர் ஃபோர்லான் இட முனையிலிருந்து பெனல்டி பிரதேசத்துக்குள் கிராஸ் செய்தார். கொரிய கோல்கீப்பர் முனைந்திருந்தால் பந்தைத் தடுத்திருக்கக் கூடும். அப்படிச் செய்யாததால், டிஃபெண்டர்களின் கட்டுக்குள் இல்லாத சௌரெஸ் (Saurez) இடம் பந்து சென்றது. ஃபார் போஸ்டில் சுலபமாக பந்தை கோலுக்குள் செலுத்தி 1-0 ஆக்கினார்.

மான்சஸ்டர் யுனைடடில் விளையாடும் பார்க் ஜி சுங் உருகுவேயின் கோட்டையைத் தகர்க்க பல நல்ல முயற்சிகளைச் செய்தார். அவை அவருக்கு நிறைய ரசிகர்களைக் கொடுத்திருக்குமெனினும் கோல் எதுவும் கொடுக்கவில்லை. இவரை மார்க் செய்த உருகுவேயின் லுகானோவின் (Lugano) ஆட்டம் வெகு சிறப்பாக அமைந்து, பல்வேறு முயற்சிகளை மழுங்கடித்தது.

இரண்டாம் பாதியில் லீடை தக்க வைத்தால் போடும் என்ற மனநிலையில் உருகுவே விளையாடத் தொடங்கியது. தென் கொரியாவும் தொடர்ந்து கோலருகில் நெருக்கடிகளை உருவாக்கிய வண்ணமிருந்தது. அதன் பலனாய் 68-வது நிம்டத்தில் ஸ்கோரை சமன் செய்தது.

அதுவரை சிறப்பாக ஆடி வந்த லுகானோ, கோல்கீப்பருக்கு உதவியாய் பந்தை கிளியர் செய்வதாக எண்ணி லீ சுங் யங்கிடம் தாரை வார்த்தார். கிடைத்த வாய்ப்பை முழுதும் பயன்படுத்தி 1-1 ஆக்கினார் சுங் யங்.


அதன் பின் அழுத்தமெல்லாம் உருகுவேக்குத்தான். பார்க் ஜீ சங்கின் துல்லியமான பாஸ் லீ சுங் யங்கின் இரண்டாவது கோலுக்கு வழி வகுக்கும் விதமாய் அமைந்தது. கோலுக்கும் அவருக்கும் இடையில் கோல்கீப்பர் மட்டுமே இருந்த நிலையில் பந்தை நேராக கீப்பர் முஸ்லேராவிடம் அடித்து பொன்னான வாய்ப்பை நழுவவிட்டார். It proved costly.

சற்றைக்கெல்லாம் சௌரெஸ் இன்னொரு கோலை அடித்து உருகுவேயின் வெற்றியை உறுதி செய்தார். ஃபோர்லானின் கார்னரை பராக்கு பார்த்தபடி கொரியா இருக்க, பெனால்டி பெட்டியின் முனையில் பந்தைப் பெற்று அதைத் தன் வலது காலுக்கு மாற்றி, edge of the box-ல் இருந்து சௌரெஸ் அடித்த பந்து காற்றிலே வளைந்த படி கோலுக்குள் நுழைந்தது. One of the best goals of the tournament.

கடைசி நிமிடங்களில் கொரியாவின் வாய்ப்பை லுகானோ மறுத்ததும் கொரியா வீட்டுக்குச் செல்வது உறுதியானது. ஆசியாவில் இருந்து முன்னேறிய இரு அணிகளுள் ஒரு அணி வெளியேற்றப்பட்டுவிட்டது.

ஆனால், ஆஃப்ரிக்காவில் இருந்து இரண்டாம் சுற்றை அடைந்த ஒரே அணி பிழைத்துக் கொண்டது.

இரண்டாவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் கானா மோதியது.

டிடியர் ட்ரோபா, சாமுவெல் ஈடோ போன்ற நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத ஆஃப்ரிக்க அணி என்ற போதும் செர்பியாவுடனும் ஆஸ்திரேலியாவுடனுமான ஆட்டங்களில் கானாவின் கை ஓங்கியிருந்தது. பல முறை உலக சாம்பியன் ஆன ஜெர்மனியின் கண்ணில் கூட விரலை விட்டு ஆட்டியது கானா. (விவரங்களை இங்கு காணலாம்.)

அமெரிக்காவும் முதல் ரவுண்டில் நன்றாகவே விளையாடியது. டோனொவன் என்ற சிறந்த ஆட்டக்காரரை ஃபுட்பால் உலகுக்கு இந்த போட்டி மூலம் ஈந்திருக்கிறது அமெரிக்கா. அவர் அடித்த இஞ்சரி டைம் கோல் அமெரிக்காவை அடுத்த சுற்றுக்குள் அழைத்து வந்திருந்தது.

கானாவின் முதல் சுற்று கோல்கள் இரண்டும் பெனல்டியில் கிடைத்தவையே. ஆயூ, கியான் போன்ற கானா வீரர்கள் நன்றாக விளையாடிய போதும் ஃபினிஷிங் அவர்களின் குறையாகவே இருந்தது. இந்த ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போடெங் (Boateng) கோலடித்து கானாவின் முதல் ஃபீல்ட் கோலைப் பெற்றுத் தந்தார். அரைக்கோட்டுக்கு பக்கத்திலிருந்த அமெரிக்க வீரரிடமிருந்து பந்தைக் கவர்ந்து, மின்னல் வேகத்தில் ஒற்றை ஆளாய் கோல் நோக்கி விரைந்தார் போடெங். தற்காப்பாளரின் தடுப்புகளுக்கு அசராமல், deft left-footer மூலம் கோல் அடித்து 1-0 ஆக்கினார். இவர் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்தான் தனது nationality-ஐ தன் தந்தை பிறந்த நாடான கானாவுக்கு மாற்றிக் கொண்டவர். இவரது சகோதரர் ஜெர்மன் அணியில் இடம் பெற்றுள்ளார். கானாவின் முந்தைய ஆட்டத்தில் இரு சகோதரர்களும் வெவ்வேறு அணிகளுக்காய் களமிறங்கினர்.

அமெரிக்காவும் தொடர்ந்து பல தாக்குதல்களைத் தொடுத்தது. கானா கோல்கீப்பர் கிங்சனின் அபாரமான காப்புகள் ஸ்கோர் 1-0-வென்றே தொடர காரணமாய் இருந்தன. குறிக்காக Dempsey-ம், Findley-ம் இணைந்து தொடுத்த தாக்குதலை கிங்ஸன் காலால் தடுத்தது just brilliant.

இரண்டாவது பாதியில் களமிறங்கிய Benny Feilhaber உடனேயே கோல் அடிப்பதற்கு வெகு அருகில் சென்றார். கிங்ஸனின் aggressive save-தான் மீண்டும் கானாவை காப்பாற்றியது.

62-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸுக்குள் Dempsey-ன் பிரவேசம் கானாவுக்கு ஆபத்தைக் கட்டியம் கூற, தடுக்க முயன்ற கானா வீர மென்ஸா, டெம்ப்ஸெயை வீழ்த்தியதால் அமெரிக்காவுக்கு பெனால்டி. டோனொவன் தன் திறமையையும் அனுபவத்தையும் முழுமையாய் உபயோகித்து, மீண்டுமொருமுறை அமெரிக்காவுக்கு கோல் அடித்து 1-1 ஆக்கினார்.

அதன் பின், அமெரிக்காவுக்கு சில வாய்ப்புகள் கிடைத்த போதும், கானாவின் துல்லியமான டிஃபென்ஸ் ஆட்டத்தை extra time-க்குள் கொண்டு போனது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோல் அடித்தது போலவே எக்ஸ்டிரா டைமின் முதல் சில நிமிடங்களிலேயே கோல் அடித்து 2-1 ஆக்கியது கானா. அயூவின் லாங் பால், கானாவுக்கு நிறைய கோல்கள் அடித்துள்ள கியானை அடைய, இரு டிஃபெண்டர்களை மீறி கச்சிதமாய் கோல் கீப்பரைக் கடந்து பந்தைச் செலுத்தி 2-1 ஆக்கினார்.

மரண அடி. அமெரிக்காவால் மீள முடியவில்லை.

ஆட்டம் நடக்கும் நாடு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை எனினும், ஆட்டம் நடக்கும் கண்டத்திலிருந்து ஒரு நாடு கால்-இறுதிக்கு தகுதி பெற்ற போது அரங்கம் ஆர்ப்பரித்தது.

நாக் அவுட் ரவுண்டின் இரண்டாவது நாளின் முதல் போட்டியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

ஞாயிற்றுக் கிழமை அன்று சௌகரியமான வேளையில் இரு பெரும் அணிகள் மோதுவதைப் பார்ப்பது என்பது சாமானியமாய் நடப்பதா என்ன?

ஜெர்மனியும் இங்கிலாந்தும் நேற்று மோதின.

இங்கிலாந்தின் வீரர்கள் மிகப் பிரபலமானவர்கள். இந்தியாவுக்கு கிரிக்கெட்டைப் போல இங்கிலாந்துக்கு கால்பந்து. இங்கிலாந்து ஆடும் நாட்களில் நாடே ஸ்தம்பித்து விடும் அளவுக்கு கால்பந்து பிரியர்கள். ஒவ்வொரு முறையும், பிரிட்டிஷ் மீடியா இவர்களை ஏற்று விட்டு, தோற்கும் போதெல்லாம் பின்னிப் பெடலெடுக்கும்.

இம்முறை இரண்டாவது ரவுண்டுக்கே தகுதி பெறுமா பெறாதா என்று கேள்வியை எழுப்பி, ஒரு வழியாய் முதல் சுற்றைக் கடந்து இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து. ரூனி, லாம்பார்ட், ஜோ கோல், போன்றோர் எல்லாம் அவரவர் கிளப்புக்கு ஆடுவதில் 10-ல் ஒரு பங்கைக் கூட நாட்டுக்காக விளையாடும் போது ஆடுவதில்லை என்பது திண்ணம்.

ஜெர்மனியும் செர்பியாவுடன் தோற்று ஜெர்மன் ரசிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தாலும், கானாவுடன் சிறப்பாக விளையாடியது. Ozil, Muller, Podolski போன்ற பல இளைஞர்களைக் கொண்ட அணி ஜெர்மனி. ஃபிலிப் லாம், ஷ்வைன்ஸ்டைகர், க்ளோசா போன்ற அனுபவசாலிகளும் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.

ஆட்டத்தில் ஜெர்மனி ஜெயிக்க வாய்ப்பு கூட எனினும், ஆட்டம் சுவாரஸ்யமான ஒன்றாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஸ்லோவீனியாவுடனான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆட்டம் சிறப்பாக அமைந்ததும் எதிர்பார்ப்பைக் கூட்டியது.

ஆட்டத்தின் முதல் இருபது நிமிடங்களில் பந்து இங்கிலாந்திடமே இருந்த போதும் கோல் அடிப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. இத்தனைக்கும் இங்கிலாந்தின் மிட் ஃபீல் முழுவதும் அதிரடியில் இறங்கியிருந்தது. தற்காக்க வேண்டிய டெர்ரி போன்றோர் கூட கோல் அடிப்பதில் முனைப்பாக இருந்தனர். 20-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கோல் கிக் கிட்டத்டஹ்ட்ட ஜெர்மன் ‘டி’ வரை வந்துவிட, இங்கிலாந்தின் காப்பாளர்களான டெர்ரியும், அப்ஸனும் உருவாகும் அபாயத்தை உணராமலிருந்ததைப் பயன்படுத்தி க்ளோஸா பந்தை எப்படியொ கவர்ந்து, அப்சனின் கடைசி நிமிட ஊடுருவலை சமாளித்த படியே பந்தை கோல்கீப்பர் ஜேம்ஸைத் தாண்டி அடிக்க ஸ்கோர் 1-0 ஆனது.

அதன் பின்னும், இங்கிலாந்து தற்காப்பை அலட்சியமாகவே செய்தது. விரைவிலேயே இன்னொரு முயற்சியில் தாமஸ் முல்லர் கோல் வரை வந்து, தனியாக இருந்த பொடோல்ஸ்கியிடம் பந்தைக் கொடுக்க ஸ்கோர் 2-0. இத்தனைக்கும் பொடோல்ஸ்கியின் first touch கச்சிதமாய் அமையவில்லை. அதைச் சமாளித்து கோல் அடிக்கும் வரை கூட அவரை எந்த இங்கிலாந்து வீரரும் நெருங்கவில்லை. முதல் கோலுக்கும் இரண்டாவது கோலுக்கும் இடையே இன்னொரு வாய்ப்பு கிளோசாவுக்கு வாய்த்தது. நல்ல காலம் ஜேம்ஸிடம் பந்து நேராக சென்றதால் ஸ்கோர் 3-0 ஆகாமல் தப்பித்தது.

இங்கிலாந்தைப் பார்த்து ஆட்டத்தை ஜெர்மனி மாற்றிக் கொண்டதோ என்று எண்ணும் வகையில் இங்கிலாந்தின் முதல் கோல் அமைந்தது. லாம்பார்டின் ஷார்ட் கார்னர், ஜுராட்டுக்கு வர, அவர் அதை கிராஸ் செய்ய, ஜெர்மன் வீரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் அப்டன் தலையால் கோலாக்கி ஸ்கோரை 2-1 ஆக்கினார்.

இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையில் நடக்கும் ஆட்டங்கள் எல்லாம் எதேனும் சர்ச்சையைக் கிளப்பும். இந்த ஆட்டத்தின் சர்ச்சை முதல் கோல் அடித்த 60 வினாடிகளுக்குள் எழுந்தது.

லாம்பார்டின் ஃப்ரீ கிக், ஜெர்மன் சுவற்றைக் கடந்து, கோல்கீப்பரையும் கடந்து, கோலுக்குள் செல்வதற்கு பதிலாய், போஸ்டில் பட்டு கீழ் நோக்கி விழுந்தது. விழுந்த பந்து கோல் கோட்டுக்குள் விழுந்த போதும் கோல் மறுக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் பல சொதப்பல்களை ரெஃப்ரீகளும் லைன்ஸ்மென்களும் செய்துள்ளனர். ஒவ்வொரு ஆட்டம் முடிந்த பின்னும், ஏதெனும்ம் காரணத்துக்காக தொழில்நுட்பத்தை ஆட்டத்தில் புகுத்தி தவறுகளைக் குறைக்க வெண்டும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர். இங்கிலாந்து 2-2 என்று ஸ்கோரை ஆக்கியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கக் கூடும்.

முதல் பாதியின் முடிவில் ஸ்கோர் 2-1 என்று இருந்தது. இங்கிலாந்து சொதப்பினாலும், அரையின் முடிவில் முன்னேற்றத்துக்கான் அறிகுறிகள் தெரிகின்றன என்று ரசிகர்கள் நினைத்திருக்கக் கூடும். இரண்டாம் பாதியின் இன்னும் சிறப்பாக ஆடுவார்கள் என்ற நினைப்பு வீணாய் போனது.

தொடக்கத்தில் ஜெராட்டும் லாம்பார்டும் நன்றாக விளையாடினாலும் கொல் அடிக்க முடியவில்லை.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய், இருந்த சொற்ப டிஃபென்ஸும் இல்லாமல் போனது.

கோல் அடிக்கிறேன் பெர்வழி என்று தங்கள் அரையில் ஒருவருமே இல்லாமல் எக்ஸ்போஸ் செய்தரனர் இங்கிலிஷ் வீரர்கள். இதனைப் பயன்படுத்தி இரு counter attack (இதை அப்படியே முதலில் டைப் அடித்தேன். ஜாதி கலவரம் வந்துவிடுமோ என்று பயந்து ஆங்கிலத்துக்கு மாற்றினேன்) மூலம் ஸ்கோரை 4-1 ஆக்கியது ஜெர்மனி. இரு கோகளையும் தாமஸ் முல்லர் துல்லியமாய் அடித்தார்.

ஜெர்மனியின் நான்காவது கோலின் போது பந்தைக் கவர்ந்து ஓடிய Ozil-ஐ சிறிது துரத்துவது போலத் துரத்திவிட்டு நின்று விட்ட டிஃபெண்டர்களைப் பார்க்க அதிர்ச்சியாய் இருந்தது.

அதன் பின் ஆட்டம் சடங்குக்குத்தான் நடை பெற்றது. இங்கிலாந்து தோல்விக்கு காரணம் கூற ரெஃப்ரீயின் பிழை கிடைத்துவிட்டது. நேற்றிரவே naukri.com-ல் இங்கிலாந்து கோச் கபெல்லோவின் ரெஸ்யுமே காணக் கிடைத்தாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் வந்து செய்திகள் தெரிவிக்கின்றன.

நான்காவது ஆட்டத்தில் tournament favorite அர்ஜெண்டினாவை மெக்ஸிகோ எதிர்கொண்டது.

எதிர்பார்த்தது போலவே அர்ஜெண்டினாவுக்கு சுலபமான வெற்றி.

மெஸ்ஸி இந்த ஆட்டத்திலும் மிகச் சிறப்பாக விளையாடியும் கோல் அடிக்கவில்லை. இவரையே எதிரணிகள் சூழ்ந்து கொள்வதால் Tevez, Higuen போன்றோர் சுலபமாக விளையாட முடிகிறது. யாரடித்தாலும் கோல்தானே? அதனால் அர்ஜெண்டினாவும் சுலபமாக வென்று வருகிறது.

இந்த ஆட்டத்தின் முதல் கோலை டெவேஸ் அடித்தார். சர்வ நிச்சயமாய் off-side position-ல் இருந்து கோலை அடித்தார் என்ற போதும் லைன்ஸ்மென் அதைக் கண்டு கொள்ளாததால் 1-0 ஆனது.

மெக்சிகோ டிஃபெண்டர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. கோலருகில் இருந்து கொண்டு பந்தை அர்ஜெண்டினா striker Higuen இடம் அளித்து அனுப்பி வைத்தார். ஏற்கெனவே 3 கோல் அடித்து கோல்டன் பூட்டுக்கு போட்டியிடும் ஹிகிவேனா விடுவார் வாய்ப்பை? ஸ்கோர் 2-0.

ஹிகுவேனின் ஹெட்டர் நிதானமாக ஆடப்பட்டிருப்பின் முதல் அரையிலேயே ஸ்கோர் 3-0 ஆகியிக்கும்.

இரண்டாவது பாதியின் ஆறாவது நிமிடத்தில் வெற்றியை நிச்சயமாக்கினார் டெவேஸ். கோலின் top right corner டெவேஸ் அடித்த கோல் will definitely be one of the goals of the tournament.

அர்ஜெண்டினா சுலபமாக வென்றாலும் அவர்களுடைய தற்காப்பும் கொஞ்சம் shaky-ஆகவே தென் படுகிறது. Favorite tag வேறு அவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கக் கூடும். ஜெர்மனிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் டிஃபென்ஸ் இன்னும் இறுக்கமாக இருக்க வேண்டும். அசிரத்தை ஆபத்தாய் முடியும் என்பதற்கு உதாரணமாய் மெக்சிகோவின் consolation goal அமைந்தது. சில வாய்ப்புகளை தவற விட்ட ஹெர்னாண்டெஸ் கச்சிதமாய் கோலடித்து 3-1 ஆக்கினார்.

இப்படியாக வார இறுதியின் இரு நாட்களும் இனிதே டிவியின் முன் கழிந்தன.

- லலிதா ராம்
http://carnaticmusicreview.wordpress.com/
http://cricketthavira.wordpress.com/


4 Comments:

Karthik said...

Great to have you back Lalita Ram.
Expecting more.

Karthik

ரிஷபன்Meena said...

பாதி படித்துக் கொண்டிருக்கும் போதே யாரு இதை எழுதியிருப்பது என்று பார்க்க வைத்தது லலிதா ராம்-ன் எழுத்து நடை.

pachhamilaka said...

WooooooooW..........Thank.......U

Anonymous said...

very nice review....