பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 18, 2010

ஆனித்திருமஞ்சனம்


செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கி
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லை சிற்றம் பலமேய
செல்வன் சுழல் ஏத்தும் செல்வம் செல்வமே

என்கிறார் தில்லை என்கிற சிதம்பர தலத்தை பற்றி திருஞானசம்பந்தர்.

சித் என்றால் அறிவு, அம்பலம் என்றால் வெட்டவெளி. முன்பு தில்லை என்று வழங்கப்பட்ட இத்தலம் இப்போது சிதம்பரம் என்று அழைக்கபடுகிறது. அப்பர்,சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் என அனைவராலும் பாடல் பெற்ற, சைவர்களின் தலைமை கோவிலாக விளங்குகிறது.

'ஓம்' என்னும் பிரணவ நாதத்தின் வடிவாக நடராஜர் ஆனந்த கூத்தாடும் மூலவரின் பெயர் சபா நாயகர்.தில்லை திருகோவிலுக்கு மேரு என்ற பெயரும் உண்டு. இந்த கோவிலின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

சில சிறப்பு அம்சங்களை மட்டும் நான் இங்கே எழுதுகிறேன்.

கோவிலின் அமைப்பு : கிழக்கு,மேற்கு,வடக்கு,தெற்கு என நான்கு ராஜகோபுரங்கள். இவை நான்கும் ஒரே உயரத்தில் இருப்பது ஒரு சிறப்பு அம்சம் ஆகும். ஒவ்வொன்றும் 135 அடி உயரம்.இந்த கோபுரங்களுக்கு, ஏழு தளங்கள், பதிமூன்று செப்பு கலசங்கள், 40 அடி அகலம் கொண்ட கோபுர வாயில்கள் என்று பொதுவாக அமைந்து இருக்கின்றன. ராஜ கோபுர வாசல்களில், நடராஜ முத்திரை எனப்படும் பரத கலை சிற்ப்பங்கள் காணப்படுகின்றன. நடராஜர் தெற்கு முகமாக திருநடம் புரிவதால், தெற்கு கோபுர வாசலில், கொடி ஏற்றப்பட்டு உள்ளது.புனித மரம் தில்லை மரம்.

சித்சபை : நடராஜர் சந்நிதியை பொன்னம்பலம் என்றும் அழைக்கிறார்கள். இக்கூரையின் மீது, ஒன்பது சக்திகளை குறிக்கும் ஒன்பது தங்க கலசங்கள் அமைந்து உள்ளன.மேலும், இதில், 64 கலைகளை குறிக்கும் வகையில் 64 கைம்மரங்கள், ஒரு நாளில் வெளிவரும் மனிதனின் சுவாசங்களை குறிக்கும் வகையில் 21600 ஓடுகள், மனிதனின் நாடிகளின் எண்ணிக்கையை உணர்த்தும் வகையில் 72000 ஆணிகள் ஆகியவை பொருத்த பட்டு உள்ளன.
மனிதனின் இருதயத்தில் இருக்கும் இறைவனே, இந்த பொன்னம்பலத்தில் இருக்கிறான் என்று உணர்த்தும் விதமாக மனித உடல் போல இந்த பொன்னம்பலம் அமைக்க பட்டுஉள்ளது.

விஷ்ணு சந்நிதி : தெற்கு முகமாக நடராஜர் சந்நிதி, கிழக்கு முகமாக கோவிந்தராஜ பெருமாளின் சந்நிதி என ஒரே இடத்தில தரிசிப்பது இக்கோவிலுக்கு மட்டுமே உள்ள சிறப்புஅம்சம்.

சிதம்பர ரகசியம் : ஆலயத்தின் சித்சபையில், நடன கோலத்தில் இறைவன் காட்சி தர, அவர்க்கு இடப்பக்கம் சிவகாம சுந்தரி அம்பாள் வீற்று இருக்கிறார். வலது பக்கம் திரை போட்ட வாயில் உள்ளது. அங்கு தங்கதினால் ஆன வில்வ தள மாலை ஒன்று தொங்க விட பட்டு உள்ளது. நடராஜருக்கு, ஆரத்தி எடுக்கப்படும் போது, அந்த வாயிலின் திரை விளக்கப்படும். இதன் அர்த்தம், இறைவன் ஆகாய உருவில் அங்கு இருக்கிறார் என்பது. இதையே சிதம்பர ரகசியம்என்கிறார்கள்.

மூலவரே வீதி உலா வரும் இரு பெரும் திருவிழாக்கள் மார்கழி திருவதிரையிலும், ஆணி உத்தரதிலும் நடை பெறுகிறது.

ஆனித்திருமஞ்சனம் :

முதலாவது ஆனி மாதம், உத்திர நட்சதிரதிர்க்கு பத்து நாள் முன் கொடி ஏற்றி, முதல் நாள் முதல் எட்டாம் நாள் வரை உற்சவ மூர்த்திகள் ஒவ்வொரு நாளும், தங்க வெள்ளி வாகனங்களில் வீதி உலா வருவார்கள். ஒன்பதாம் நாள் தேர் திருவிழா. இதில் மூலவரான நடராஜர், சிவகாமி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் தேர்களில் உலா வர, பத்தாம் நாள் ஆயிரங்கால் மண்டபத்தில் அர்ச்சனைகள், பூஜைகளுடன் ஸ்ரீ நடராஜ பெருமான் மற்றும் சிவகாமி அம்மனின் ஆனந்த நடனம் இடம் பெறும். இதை தரிசனம் என்றுஅழைக்கிறார்கள்.

இம்மாதம், ஜூன் 10 ஆம் தேதி இத்திரு கோவிலில் கொடி ஏற்றப்பட்டு உள்ளது. 18 ஆம் தேதி தேர்த்திருவிழாவும், 19 ஆம் தேதி தரிசனமும் நடை பெற உள்ளது.

"மன்னுக தில்லை ! வளர்க நம் பக்தர்கள்" என்ற சேந்தனாரின் வாக்கை நினைவு கூர்ந்து, ஆனி திருமஞ்சன உற்சவத்தில் கலந்து கொண்டு, வாசக நண்பர்கள் அனைவரும் இறைஅருள் பெறுமாறு வேண்டுகிறேன்.

-இன்பா

3 Comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அந்த வாயிலின் திரை விளக்கப்படும்//

It should be அந்த வாயிலின் திரை விலக்கப்படும்

kggouthaman said...

சிதம்பரம் கோவில் உட்பட, பல கோவில்களை, தினமலர் 360 degrees view வில் பார்க்கலாம். நன்றாக உள்ளன.

Vinoth said...

சித்சபை பற்றிய குறிப்பு மிக சரி. நடராஜா கோயில் ஒரு நூதனமான சுட்ஷமம்.
நடராஜா.......