பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 12, 2010

இரண்டாம் ஆண்டில் சொல்வனம்

இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாழ்த்துகள்.

சொல்வனத்தில் எழுதும் ஒருவரிடம் இன்று காலை சாட் செய்துக்கொண்டு இருந்த போது (அவரும் சொல்வன குழுவில் இருக்கலாம், யார் கண்டது) ஒரு வருட சொல்வனம் பற்றி விமர்சனம் எழுதி தங்களேன் என்றேன்.
”நான் மொழிபெயர்ப்பு பகுதிகளை ஸ்கிப் செய்துவிடுவேன்” அதனால் நான் எழுதினால் சரியா இருக்காது என்றார்.
“அட பரவாயில்லை”
”மொழிபெயர்ப்பு பகுதிகளை ஸ்கிப் செய்தால் சொல்வனத்தில் வேறு எதுவும் இல்லை” என்றார் அந்த குசும்புபிடித்தவர்.அந்த குசும்பர் சொல்வனத்தில் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற காரணத்தால் அவர் பெயரை இங்கே தவிர்க்கிறேன்.

சொல்வனத்தில் எழுதும் இவரே இப்படி விமர்சனம் செய்தால் அதை படிக்கும் வாசகர்கள் எப்படி விமர்சனம் எப்படி இருக்கும் ?

விருப்பம் உள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லலாம். அதாவது திட்டலாம்.

1. சொல்வனம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? ( ஆம்/இல்லை )
2. நீங்கள் சொல்வனத்தை தொடர்ந்து படிக்கீறீர்களா ? ( தொடர்ந்து/எப்பவாவது )
3. இணைய இதழ்களின் வெறுமையை சொல்வனம் போக்கியிருக்கிறதா? ( ஆம்/பத்தோடு 11)
4. சொல்வனம் ஏதேனும் உள்-நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது என நினைக்கிறீர்களா? ( ஆம்/இல்லை )
5. சொல்வனத்தின் கட்டுரைகள் புரிகின்றனவா ( ஆம்/இல்லை/சிலசமயம் )
6. சொல்வனத்தில் நீங்கள் விரும்பிப் படிக்கும் பகுதிகள் எது ( கட்டுரை, கதைகள், கவிதைகள்,மொழிபெயர்ப்பு, அறிவியல், கார்ட்டூன், மற்றவை )
7. சொல்வனம் ஓராண்டு இதழ்த் தொகுப்பு வெளியிட்டால் வாங்குவீர்களா? ( வாங்குவேன்/எதுக்கு வீண் செலவு )
8. நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லலாம் :-)

செல்வனத்தில் எழுத என்ன செய்ய வேண்டும் ? என்று சொல்வன ஆசிரியர் குழு சொன்னால் நன்றாக இருக்கும். பலர் எழுத முன்வருவார்கள். சொல்வனம் ஓர் ஆண்டு இதழ்களை பார்க்கும் போது, எனக்கு தெரிந்து வயதானவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிறுவர்கள் ஸ்கூல் சேருவதற்கு பிறந்த தேதியை மற்றி கொடுப்பது போன்ற டெக்னிக்கை இங்கே உபயோகப்படுத்தலாம். இட்லிவடை மாதிரி புதிய எழுத்தாளர்களை சொல்வனம் ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் இதழ் வளர்ச்சி அடையும்.

சொல்வனம் எடிட்டர்கள் யார் என்று வாசகர்கள் யூகிக்கலாம். தப்பில்லை.
இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சொல்வனம் பல்லாண்டு தழைக்க வாழ்த்துகள்.

பிகு: இரண்டாம் ஆண்டில் சொல்வனம் என்ற அறிவிப்பில் இட்லிவடையின் பெயரும் வந்த காரணத்தால் அவர்களுக்கு நன்றிக் கடனாக ஒரு சின்ன சர்வே விளம்பரம் இந்த பதிவு.

பிகு1: பின்னூட்டத்தில் பதில் சொல்ல முடியாதவர்களுக்கு ஓட்டு பெட்டி சைடு பாரில் :-)

சரக்கு இருந்தால் தான் நீங்க மாஸ்டர் ஆக முடியும் - இது சரக்கு மாஸ்டர் சொன்னது


25 Comments:

R. Jagannathan said...

சொல்வனம் என்னை மாதிரி சாமானிய வாசகர்களுக்கானதில்லை. அது மேதாவி எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கும் இடம். எனக்கு நான் படிப்பது புரிய வேண்டும். ரஸிக்கும்படி இருக்க வேண்டும். இட்லிவடை, கடுகு, விகடன், குமுதம், தினமலர் போன்றவை போதும். (கல்கியில் இப்போது வரும் பிறமொழிக் கதைகளின் தமிழாக்கமும் படிக்கும்படி இல்லை என்பது உண்மை.) - ஜகன்னாதன்

Bharati Mani said...

’சொல்வனம்’ வந்ததிலிருந்து தவறாமல் படித்துவருகிறேன். இதழ்களில் வெளியான் எல்லாவற்றையும் படித்தேன் என்று சொல்லமுடியாது. வ.ஸ்ரீநிவாஸன், சுகா, சேதுபதி அருணாசலம், லலிதா ராம், சுஜாதா தேசிகன், வெ.சா. போன்றவர்கள் எழுதுவதை தவறாமல் படித்துவிடுவேன். ஹரன் பிரசன்னா கூட அதில் எழுதியிருக்கிறார்.

சேதுபதி அருணாசலம், அமெரிக்காவில் இருக்கும் ரவிசங்கர் இருவரும் ஆசிரியர்குழுவில் இருப்பது எனக்குத்தெரியும்.(இது ரகசியமா என்ன?)

தொடர்ந்து படிப்பேன். முதலாண்டு இதழ் வந்தால், தவறாமல் வாங்கி, விட்டுப்போன கட்டுரையைகளையும் படிக்க ஆசை!

பாரதி மணி

பாரதி மணி said...

என்னிடம் ஒரு க்ட்டுரை எழுதச்சொல்லி கேட்டுக்கேட்டு அலுத்துப்போய், இப்போது கேட்பதில்லை!

வழிப்போக்கன் said...

சொல்வனம் இன்னும் ஒருபடி கீழே இறங்கிவந்து சாதாரண நிலைக்கு மேம்பட்ட வாசகர்களுக்கும் புரியும்படிச் செயல்படவேண்டும். மொழிபெயர்ப்புகளை முழுவதும் தராமல், முக்கியமான பகுதிகளை விசாலமாகவும், மற்றவற்றைச் சுருக்கியும் தந்தால் வாசகர்களின் படிப்புச் சுவை கூடும்.
வழிப்போக்கன்

snkm said...

சொல்வனம் இதழ் படித்து வருகிறேன்! பல பயனுள்ள கட்டுரைகளும் கதைகளும் வருகிறது! கதைகள் படிக்க சாமானியன், மேதாவி என்ற வித்தியாசம் தேவை இல்லை! படிக்க பயனுள்ள விஷயங்களைக் கொண்டது சொல்வனம், இட்லிவடையும் தான்!

உண்மையான இஸ்லாமியன் said...

//படிக்க பயனுள்ள விஷயங்களைக் கொண்டது சொல்வனம், இட்லிவடையும் தான்!//

அடடே...

Arun Kumar said...

first question-ae out....never heard of it

kggouthaman said...

சொல்வனம் ஒரு தடவை எப்பவோ படிச்சுப் பார்த்தேன். ரொம்ப ஹை கிளாஸ் என்று தோன்றிற்று. அதனால ஜாக்கிரதையாக ஓரம் ஒதுங்கிவிட்டேன். எனக்கு இட்லி வடை போதும். (இதைப் படிச்சதும் ரெண்டு பேரும் எனக்கு ஆட்டோ அனுப்புவார்களோ என்ற பயம் வந்துவிட்டது)

venkatramanan said...

சொல்வனம் புதிய விஷ்யங்களை அறிமுகப்படுத்துவதில் சாட்சாத் ஒரு சுஜாதாவேதான். சுகாவின் அந்த நக்கல், மண்வாசனை மிளிரும் திருநெவேலி படைப்புகளாகட்டும் (கட்டுரை வடிவில் கதை), வ.ஸ்ரீநிவாசனின் கதைகளாகட்டும், ராரா கார்டூன்களாகட்டும், சுஜாதா தேசிகனின் Nostalgia கட்டுரைகளாகட்டும், ரவி நடராஜனின் அறிவியல் தொழில்நுட்ப கட்டுரைகளாகட்டும் அனைத்துமே எந்தவொரு சிற்றிதழ், ஜனரஞ்சக இதழ் (என்று சொல்லிக்கொள்வது)களிலாகட்டும், எதிலும் வருவதாய் எனக்குத் தெரியவில்லை. கடவுள் புண்ணியத்தில் இன்னும் கொஞ்ச வருடங்களேனும் சொல்வனம் வருதல் நலம். சொல்வனம் குழுவினருக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்!

அன்புடன்
வெங்கட்ரமணன்

சட்னி சாம்பார் said...

செம்மொழி மாநாடு போன்ற தெண்ட செலவுகள் செய்யாமலே, ஆனால் அதைவிட அதிகமாக தமிழை வளர்த்த வளர்க்கும் ஒரு சில வலைதளங்களில் சொல்வனமும் ஒன்று. பெயரே மிகவும் அழகாக இருக்கிறது!

நான் விரும்பி படித்து இளையராஜாவின் படைப்புகளை மிகவும் அழகாக, ஆழமாக அதே சமயம் எளிமையாகவும் விமர்சனம் செய்த சில கட்டுரைகள். அறிவியல் கட்டுரைகள் சுஜாதா போலவே எளிமையாகவும் நகைச்சுவையும் கொஞ்சம் கலந்து தருவார்கள்.

அவர்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Anonymous said...

சொல்வனத்தை முதல் இதழில் இருந்து படித்து வருகிறேன். அது தமிழில் இணைய தளத்தில் வரும் ரீடர்ஸ் டைஜெஸ்ட்! நான் விரும்பிப் படிப்பது விஞ்ஞானம் மற்றும் இசை சம்பந்தப் பட்ட பதிவுகள்.தவிர சில இதழ்களில் 'Light reading' என்ற வகையிலும் கட்டுரைகள் வருகின்றன. சொல்வனம் ஆசிரியர் குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
கிரி

Anonymous said...

சொல்வனம் அருமையான இணைய இதழ். நான் தொடர்ந்து ஆர்வத்துடன் படித்து வருவது அறிவியல் பகுதிகளை. மிக நேர்த்தியாக உள்ளது அதன் கட்டுமாணம். இரண்டாம் ஆண்டு நிறைவு வாழ்த்துகள்.

Anonymous said...

சொல்வனம் போன்ற ஒரு இதழ் தமிழில் அச்சிலும் ஆன்லைனிலும் கிடையாது என்பதே உண்மை. அரசியல், பொருளாதாரம், உலக அரசியல், சூழல், கலைகள், சினிமா, இசை என்று பல் துறைகளிலும் அறிவுசார்ந்த, ரசனைக்குரிய படைப்புக்களையும் படைப்பாளிகளையும் தொடர்ந்து அளித்து வருவது சொல்வனம்,

இங்கு பலரும் சொல்வனம் கடினமாக இருக்கிறது என்று சொல்வது அவர்கள் சொல்வனத்தைப் படிப்பதில்லை என்பதையே காட்டுகிறது.

குறிப்பாக ராமன் ராஜா, சுஜாதா தேசிகன் ஆகியோரின் அறிவியல் கட்டுரைகளை எளிதாக எழுத இனி சுஜாதாதான் உயிர்த்தெழுந்து வர வேண்டும்.

சுகாவின் நெல்லை மண் கட்டுரைகளைப் படித்தவர் எவரும் சொல்வனம் படிக்க கடினமாக இருக்கிறது என்பதைச் சொல்ல முடியாது. இந்த இதழில் வந்த அ.முத்துலிங்கத்தின் சிறுகதையைப் படித்து சிரித்து வயிறு வலிக்காமல் போனவர்கள் இருக்க முடியாது.

அருணகிரி, அரவிந்தன், சேதுபதி, மைத்ரேயன், ஹரி வெங்கட் போன்றோரின் கட்டுரைகள் தமிழின் எந்த இதழ்களிம் படிக்கக் கிடைக்காத அபூர்வமான அறிவுசார் கட்டுரைகள். ஆழமான விஷயஞானம் உள்ள கட்டுரைகள் அவைகள். அவற்றைப் படிக்க சற்று முனைப்பும், ஆர்வமும் தேவை.

இன்று தமிழில் வரும் இதழ்களில் ஆகச் சிறந்த இதழ் சொல்வனம் என்பதைத் தயங்காமல் சொல்வேன். சொல்வனம் தொகுப்பு வந்தால் பதிவு செய்து வாங்குவேன். சொல்வனம் மேலும் சிறக்க வாழ்த்துக்களும் அதன் ஆசிரியர் குழுவினர்களுக்கு எனது நன்றியும் உரித்தாகுக

அன்புடன்
ச.திருமலை

பாரதி மணி said...

திருமலை அவர்கள் சொன்னதை அப்படியே ஆமோதிக்கிறேன்.

தொடரட்டும் சொல்வனத்தின் பணி.

பாரதி மணி

Anonymous said...

திரு. திருமலை சொன்னதை ஆமோதிக்கும் திரு.பாரதி மணியுடன் உடன் படுகிறேன்!
கிரி

R. Jagannathan said...

/சொல்வனம் ஒரு தடவை எப்பவோ படிச்சுப் பார்த்தேன். ரொம்ப ஹை கிளாஸ் என்று தோன்றிற்று./ திரு கௌதமன் அவர்களே, இப்படி ஐஸ் வைத்த பின் பயம் ஏன்? ஆட்டோ இல்லை, மெர்செடிஸ் வரும்!
மற்ற பின்னூட்டங்களைப் படித்ததும், எனக்குத் தான் பயமாயிருக்கிறது. - ஜகன்னாதன்

ஜெயக்குமார் said...

ஓராண்டை நிறைவு செய்யும் - சொல்வனம் (http://jeyakumar-srinivasan.blogspot.com/2010/06/blog-post_12.html )

அப்படியே இதையும் படிச்சிருங்க..

:-)

Anonymous said...

கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். நள்ளிரவு நேரத்தில் ஒரு நாள் அந்தோணி கோவை அஞ்சுமுக்குப்பகுதி அருகே சுற்றிக்கொண்டிருந்த போது போலீஸ் அவனை லத்தியால் அடித்திருக்கிறது. அன்றே முடிவு செய்துவிட்டான், இனி மேல் போலீஸ் கை வைக்க முடியாத பணிக்குச் செல்ல வேண்டுமென்று. அதன் காரணமாகவே பிரபலமான மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தும்கூட அதை மறுத்துவிட்டான்.

இப்போது விமானப் படையின் தொழில்நுட்பப் பிரிவில் வேலை செய்து வருகிறான். சம்பளம் குறைவுதான். அவன் சம்பாதித்ததும் குறைவுதான். எனினும் கோயம்புத்தூரில் எந்த போலீஸ்காரரும் அந்தோணி மேல் இனி கை வைக்க முடியாது.

இந்தக் கதையை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால், வேலைக்காகப் படிப்பதற்கும், விருப்பப்பட்டுப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடு நம்மில் பல பேருக்குப் புரியவில்லை என்பதால்தான். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ வேலைக்காக மட்டுமே படித்தாக வேண்டிய சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் நாம் வசிக்க வேண்டியிருக்கிறது.

முதலிடம் வாங்கும் மாணவர்களில் எதிர்காலம் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. அவர்களில் எத்தனை பேர் சுயமாகத் தொழில் தொடங்கி வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள் என்று தெரியவில்லை.

நாட்டின் முதன்மையான வழக்கறிஞர், கணித வல்லுனர், விஞ்ஞானி, சிந்தனையாளர், பொருளாதார மேதை, மருத்துவ நிபுணர், தொழிலதிபர், பத்திரிகையாளர், எழுத்தாளர், தத்துவ மேதை முதலிய கிரீடங்களை எத்தனை முதல் மாணவர்கள் அணிவார்கள் என்று தெரியவில்லை. அதிகபட்சமாக அவர்கள் அமெரிக்கா செல்லக் கூடும்.

ஏட்டுக் கல்வியையும், தேர்வு மதிப்பெண்ணையும் கடந்து ஒரு மனிதனை அளவிட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதுவே அவனது வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும். உதாரணத்துக்கு ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஒன்று.

கல்லூரி ஆசிரியர்கள் அதில் பங்கெடுத்தனர். நீங்கள் என்ன மாதிரியான புத்தகம் வாசிக்கிறீர்கள், கடைசியாக என்ன தலையங்கம் வாசித்தீர்கள் என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு அதிர்ச்சியளிக்கும் பதிலே கிட்டியது. அவர்கள் வாசித்ததாகச் சொன்னதெல்லாம் எம்.எஸ்.உதயமூர்த்தி ரீதியிலான சுய முன்னேற்ற நூல்கள். அவற்றையெல்லாம் தான் எட்டாம் வகுப்பிலேயே வாசித்துவிட்டதாக கோபிநாத் கூறினார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு மாவட்ட முதலிடம் பெற்ற மாணவி இன்று பத்தோடு பதினொன்றாக சிறுசேரியில் வேலை செய்கிறார். இது ஒரு வகை. பொறியியலும் கிடைக்காமல், மருத்துவமும் கிடைக்காமல் கோவை வேளாண்மைக் கல்லூரியில் இணைந்த என் பள்ளிப் பருவத் தோழர் இன்னொரு வகை. இளங்கலை வேளாண்மை அறிவியலுக்குப் பிறகு MSC, Phd .. இப்போது வட மாநிலம் ஒன்றில் மாவட்ட ஆட்சியர்.

நல்ல மதிப்பெண், நல்ல கல்லூரி, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுப் பட்டம்.... இது முடிந்தால் வாழ்வில் செட்டில் ஆகிவிட்டதாகச் சிலர் (குறிப்பாக பெற்றோர்) கருதுகிறார்கள். ஆனால் உள்ளபடியே சொன்னால் நல்ல மதிப்பெண் என்பது ஒரு திறவுகோல் மட்டுமே. பொருளாதார ரீதியான தோல்வியையும், வேலையின்மையையும் அது தவிர்க்கும். ஆனால் மறுபடியும் செய்தித்தாளில் போட்டோ வருமளவு வெற்றியை நிச்சயப்படுத்தும் என்று சொல்வதற்கில்லை.

Anonymous said...

இதை நான் சொல்லியே தீர வேண்டும். வெறும் முப்பது வீடுகளைக் கொண்ட சின்னஞ்சிறு கிராமம் எங்களுடையது. தேர்தல் பிரச்சாரத்துக்குக் கூட வேட்பாளர்கள் யாரும் வர வேண்டிய அவசியம் இல்லாமல் ஒதுக்கப்பட்ட ஒரு சிற்றூர்.

அப்படிப்பட்ட கிராமம்தான் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1175 மதிப்பெண்களை எடுத்து திருப்பூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவியை (மாநில முதல் மதிப்பெண் 1183) உற்பத்தி செய்திருக்கிறது. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன் இதே மாதிரி மாவட்ட முதலிடம் பெற்ற மாணவியை எங்களூர் கொண்டிருந்தது. இருவரும் சகோதரிகள்.

இந்த நேரத்தில் இன்னொரு விஷயமும் என் நினைவுக்கு வருகிறது. கோவை மாநகரம் அடக்க முடியாத வியப்பை எனக்களித்த சமயம் அது. பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மேல் நிலைப் பள்ளிப் படிப்புக்குக் கோவையில் சேர்ந்திருந்தேன். என்னை விடக் கூடுதல் மதிப்பெண் வாங்கிய நிறைய பேர் 11 ஆம் வகுப்பில் நுழைந்தனர்.

அதில் ஒருவன், பத்தாவதில் ஐநூறுக்கு 465 மதிப்பெண் பெற்றிருந்தான். வெகு விரைவில் பதினொன்றாவது காலாண்டுத் தேர்வு நடந்தது. அதில் 1,200 க்கு 464 மதிப்பெண் மட்டுமே அவனால் எடுக்க முடிந்தது. தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே ஒருவனின் அறிவை அளவிடும் துல்லியமான கருவியல்ல எனப் புரிந்துகொள்ள அது எனக்குப் போதுமானதாக இருந்தது.

மாநில முதலிடம், இரண்டாம் இடம் வாங்கும் மாணவர்கள் பேப்பருக்கு போஸ் கொடுத்து, தொலைக் காட்சிக்குப் பேட்டி கொடுத்து பிரபலம் ஆகிறார்கள். அதன் பிறகு என்ன ஆகிறார்கள்? சமுதாயத்தில் இவர்களால் ஏற்படும் மாற்றங்கள் யாவை? யாருக்குமே விடை தெரியாத கேள்விகள் இவை.

அவர்களது கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், உழைப்பும் நிச்சயம் பாராட்டுக்கு உரியது. அதற்கு இணையான அளவு பரிதாபமும் அவர்கள் மீது எனக்கு எழுவதுண்டு. அன்னம், தண்ணீர் பாராமல் வருடம் முழுவதும் கண் விழித்துப் படித்து எண்ணற்ற மதிப்பெண் வாங்கும் நபர்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை குறித்து கரிசனமும் உண்டு.

தவளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப் படம் வரைந்து பாகங்களை விளக்கு - என்ற கேள்வியிலிருந்தே எனக்கு பயாலஜி மீது பயம். பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல் தேர்வுக்கு முந்தைய நாள் தூர்தர்ஷனில் ‘தூறல் நின்னு போச்சு’ படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு வேடிக்கை என்னவென்றால் நான் சேர்ந்த அதே கல்லூரியில், அதே துறையில்தான் என்னை விட 100 மதிப்பெண் கூடுதலாக எடுத்த எங்கள் பள்ளியின் முதல் மாணவன் அந்தோணி சேர்ந்தான்.

எங்களுக்கு முந்தைய வருடம் பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனும்கூட அப்படித்தான். நினைத்த கல்லூரி கிடைக்காமல் ஒரு வருடம் கடத்தி எங்களோடு சேர்ந்தார் (ர் - ஒரு வருடம் சீனியர் அல்லவா).

ரிஷபன்Meena said...

//ஏட்டுக் கல்வியையும், தேர்வு மதிப்பெண்ணையும் கடந்து ஒரு மனிதனை அளவிட வேண்டிய அவசியம் இருக்கிறது.//

அணானி அண்ணன் நல்லா எழுதியிருக்கீங்க.

பதிவு அரசியல் பற்றி எதுவும் எழுதலை. அடாவடியா எதும் எழுதலை அப்படியும் பேர் கூட போடாமல் விட்டுட்டிங்களே

Sitrodai said...

. சொல்வனம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? ( ஆம்/)
2. நீங்கள் சொல்வனத்தை தொடர்ந்து படிக்கீறீர்களா ? ( தொடர்ந்து)
3. இணைய இதழ்களின் வெறுமையை சொல்வனம் போக்கியிருக்கிறதா? ( ஆம்/)
4. சொல்வனம் ஏதேனும் உள்-நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது என நினைக்கிறீர்களா? ( இல்லை )
5. சொல்வனத்தின் கட்டுரைகள் புரிகின்றனவா ( ஆம் )
6. சொல்வனத்தில் நீங்கள் விரும்பிப் படிக்கும் பகுதிகள் எது ( கட்டுரை, மொழிபெயர்ப்பு, அறிவியல், கார்ட்டூன், மற்றவை )
7. சொல்வனம் ஓராண்டு இதழ்த் தொகுப்பு வெளியிட்டால் வாங்குவீர்களா? ( எதுக்கு வீண் செலவு )

பாரதி மணி said...

சொல்வனம் இதழுக்கு சம்பந்தமில்லாமல் இருந்தாலும், அனானியின் பின்னூட்டம் படிக்கும்படி இருந்தது. பல நடப்பு விஷயங்களைக்குறிப்பிட்டிருந்தார். பல கசப்பான உண்மைகள் இருந்தன.

பெயரைக்குறிப்பிட்டிருந்தால், ஒரு நன்றியாவது தெரிவித்திருக்கலாம்.

Anonymous said...

சாட்டில் வந்தவர் சொல்வன ஆசிரியர் குழுவில் இருக்கலாம் என இவ எழுதியிருந்தார். அவர் இருந்திருந்தால் சொவ இவ்வளவு நன்றாக இருந்திருக்காது.

சொல்வனத்தின் ஆசிரியர் குழுவில் இருப்பவர்கள் மூன்றே மூன்று பேர்தான்:

1) ரவிஷங்கர் - இவர் எழுபதுகளில் ‘பிரக்ஞை’என்ற பிரபலமான சிற்றிதழை நடத்தியவர். இப்போது ஆமெரிக்காவில் இருக்கிறார்.

2) சேதுபதி அருணாசலம் - பெங்களூரில் இருக்கும் இளைஞர். இலக்கியம், புகைப்படம், இசை, திரைப்படம், அறிவியல் எனப் பல துறைகளில் ஆர்வம் கொண்டவர். சொல்வனத்தின் தூண் இவர்தான்.

3) ஹரிவெங்கட் - ஹைதராபாத்தில் இருக்கும் இளைஞர். இவரும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்.

ஹரி, சேது இருவரும் சமீபத்தில் திருமணமான புதுமாப்பிள்ளைகள்.

உள் விவகாரங்களைச் சொன்னதால் ஆ.குழுவினர் என்னைத் திட்டமாட்டார்கள் என நினைக்கிறேன் :-)

சொல்வனத்தின் பலம்:

சாக்கடையான தமிழ் இண்டர்நெட் அரசியல், உள்ளூர் அரசியல், ஜாதி, மத அரசியலில் சிக்கிக் கொள்ளாமல் பல துறைகளிலும் (இசை, அறிவியல், திரைப்படம்) பல சீரிய படைப்புகளைக் கொண்டுவந்தது. மொழிபெயர்ப்புகளும் மிகவும் பாராட்டத் தக்கவை. கொஞ்சம் ஆழமான விஷயங்களில் ஆர்வம் இல்லாத மேலோட்டமான ஆட்களுக்கு இவை உவப்பளிக்காதது ஆச்சரியமில்லை. இன்னொரு புறம் நல்ல சிறுகதைகளும், சுகா போன்றவர்களின் சுவாரசியமான கட்டுரைகளும் வெளிவந்தது எனப் பலதரப்பட்டவர்களையும் கவர்ந்தது.

அசத்தலான, கண்ணுக்கினிய வடிவமைப்பு, இந்த விதத்தில் சொல்வனத்தை அடித்துக் கொள்ள ஆட்களே இல்லை.

வேண்டுமானால் இந்தக் கவிதை வடிவமைப்பைப் பாருங்கள்:
http://solvanam.com/?p=3325

பலவீனம்:

பெரிய எழுத்தாளர்கள் எழுதாதது (இந்த இதழில் ஜெயமோகன், அ.மு, அ.மி போன்றோர் இருந்தாலும்...)
வாசகர்களின் பங்கேற்பு இல்லாதது. முன்பாவது மறுமொழிகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது அதுவும் இல்லை.

இன்னொரு துணுக்கு:

சொல்வனத்தின் வாசகர் எண்ணிக்கை கீழ்த்தரமான கிசுகிசு அரசியல் செய்யும் உயிரோசையை விட அதிகம்.

சொல்வனத்தின் அலெக்ஸா ரேட்டிங்: 161,978
உயிரோசை அலெக்ஸா ரேட்டிங்: 215,597
இட்லிவடை :-) : 126,771

ஆனந்த கணேஷ், வை. said...

இப்போது நான் சொல்லுவதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்...அட..சட்.. புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.


மணிக்கொடி எழுத்துக்கள் போல, சொல்வனம் எழுத்துக்கள் பேசப்படும் நாள் விரைவில் வரப்போகிறது.

Anonymous said...

சொல்வனம் என்ற இந்தத் தளத்தின் சில படைப்புகளை படித்திருக்கிறேன். வெப்சைட் வடிவமைப்பு அட்டகாசமாக உள்ளது. இசை, அறிவியல் பற்றிய கட்டுரைகள் நன்றாக இருக்கிறது. மற்றவை எல்லாம் சுமார் ரகம்.

சுகாவின் மண்மணம் பேசும் கட்டுரைகள் போன்றவை வருகின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக சொல்வனத்தின் பார்வை மேற்கத்திய, குறிப்பாக அமெரிக்க சார்புப் பார்வை & மேல்தட்டுப் பார்வை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

விடாமல் தொடர்ந்து படிக்கும் அளவுக்கு எல்லாம் இது ரசமான இதழ் அல்ல.